LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1244 - கற்பியல்

Next Kural >

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும். ('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன. கொள - பார்க்க.
தேவநேயப் பாவாணர் உரை:
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி - என் உள்ளமே நீ என் காதலர் பாற் செல்லலுற்றாயாயின் , இக்கண்களையும் உடன் கொண்டுசெல் ; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - ஏனெனின் ; நீ தனியாய்ச் செல்வாயாயின் , இவை அவரைக் காணவேண்டுமென்னும் பேராவலினால் , அவரைக் காட்டச் சொல்வி , என்னைப் பிய்த்துத் தின்றுவிடும். தின்னுதல் என்பது தின்பதுபோலத் தொந்தரவு செய்தல் ; ஆகுவினை . கொண்டு என்பது ' கொள் ' எனத் திரிந்து நின்றது, காதலரிருக்குமிடஞ் சென்று அவரை ஆசை தீரக் காணவேண்டு மென்பதாம் .
கலைஞர் உரை:
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.
Translation
O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away.
Explanation
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
Transliteration
Kannum Kolachcheri Nenje Ivaiyennaith Thinnum Avarkkaanal Utru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >