LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

காதல் எனப்படுவது யாதெனில்.?

என்னுரை – ரத்னா:


என் பெயர் ரத்னா.. அப்பா ஒரு அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல புரிதல். மொத்த அன்பையும் கொட்டி வளர்க்க ஒரே ஒரு குழந்தையுடன் நிறுத்திவிட்டார்கள்.. பிறந்த ஒன்றும் பெண்.. அப்பாவோட அம்மாவுக்கு, அதாவது என் பாட்டிக்கு நான் பிறந்ததில் அவ்வளவாக விருப்பமில்லை … அவங்களுக்கு ஆண்பிள்ளை தான் உசத்தி. பெண்ணென்றால் வீண் செலவாம், பிறந்த வீட்டில் தங்கமாட்டாளாம். நான்-சென்ஸ்.. ஆனா அப்பா அப்படி இல்லை.. அப்பாவுக்கு நான் பிறந்ததில் அவ்வளவு சந்தோஷம்….! அப்பாவுக்கு பெண்ணென்றால் அவ்வளவு இஷ்டம்….! உலகத்துல இருக்குற ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கொட்டி என்னை வளர்த்தார். 


முதன்முதலாக ஆண்கள் மேல் வெறுப்பு வர காரணம் பாட்டி. அப்புறம் சில சம்பவங்கள்.. ஆண்களை இப்பொழுது நான் முழுவதுமாய் வெறுக்கின்றேன். எப்பப் பார்த்தாலும் என்னவோ அவங்களுக்கு மட்டும் தான் பார்க்குற சுதந்திரம் இருப்பதைப்போல் பெண்களை விழுங்குற மாதிரி பார்க்கும் அந்த அநாகரீகமான செயலையும், பெண்களை வெறும் மோகப்பொருளாய் பார்க்கும் அவர்களின் உலக அறிவையும்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதீங்க, சுயநலவாதீங்க அப்படின்றது என்னோட கருத்து, அனுபவத்துல நான் பயின்ற பாடம்..!

காதல் - இந்த வார்த்தைக்குத் தான் எந்தனை மயக்கம்..? இந்த ஒரு வார்த்தை தான் இந்த உலகையே இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பது அநேகமா ஒட்டுமொத்த இளைஞர்களோட கருத்து. நானும் ஒப்புக்கொள்கின்றேன்.. ஆனால், 'அந்த' உணர்வில் எனக்கு எந்த விதமான மயக்கமோ, உடன்பாடோ, இல்லை பற்றுதலோ சுத்தமாகவே இல்லை எனலாம்..… காதலுக்கே இல்லையென்றால், கல்யாணத்துக்கு கேட்கவா வேண்டும்...?


ஒருநாள், வடபழனி பேருந்து நிலையத்தில் தான் அவனை நான் பார்த்தேன். அவன் பெயர் கூட எனக்கு தெரியாது. ஆனால், அடிக்கடி அவனை நான் அங்கு காண்பேன்.... அவனுடைய சில செயல்கள், அவன் பக்கம் என் கவனத்தை திசை திருப்பியது.... கவனிக்கவும் … கவனம் மட்டும் தான், காதல் அல்ல...!


ஒருநாள், பேருந்து நிரம்பி வழிந்தது. அவன் இருக்கையில் ஜம்மென்று அமர்ந்து கொண்டிருந்தான்... தள்ளாத வயதில், வயதான பெரியவர் ஒருவர் நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தார். மனசாட்சியில்லா மனிதர்கள் அனைவரும் அங்கே கண்டும் காணமல் அமர்ந்து கொண்டிருன்தனர்... யாரும் எழுந்து அவருக்கு இடம் தர முன்வரவில்லை. ஆனால், அவன் தந்தான். அவன் எழுந்து பெரியவர் உட்காருவதற்குள், இன்னொருவன் அங்கே வம்படியாக அமர்ந்துவிட்டான். அவனை எழுப்ப இவன் பட்ட பாடும், அவன் சலித்துக்கொண்டு எழும்பொழுது, பெரியவரின் நிறுத்தம் வந்து அவர் இறங்கிட, அங்கே ஓரமாய் இவன் அசடுவழிந்ததும் தான் - அவனிடம் என் கவனம் செல்ல காரணாமாய் இருந்த முதல் சம்பவம்.


இன்னொருநாள் கண்பார்வையற்ற ஒரு பெண்மணி பேருந்தில் ஏற போராடுவதையும் பொருட்படுத்தாமல் மற்ற பயணிகள் முந்திக்கொண்டு ஏறுவதையும், சகித்துக்கொள்ள விரும்பாமல் அந்த பெண்ணை பேருந்தில் ஏற்றி அவளை ஒரு இருக்கையில் அமரச்செய்து, அவளுடன் அவளின் நிறுத்தம் வரை வழித்துணையாய் சென்றான். இந்த மனிதாபிமானமுள்ள செயல் அவனை ஒரு மனிதனாய் மட்டுமின்றி, அவனின் முகத்தை என் மனதில் அழுத்தமாய் பதியச் செய்தது..!


மற்றுமொருநாள், வாட்டசாட்டமான ஒரு பெண்மணி, சாலையை பார்க்காமல் கடையின் உள்ளே  பொம்மைக்கு சாற்றிய புடவையை வெறித்தவாரே வந்து ஒருவர் மேல் மோதிவிட்டாள். மோதியதுடன் நில்லாமால், "என்ன யா கண்ண எங்க வெச்சிகிட்டு வர...? ஒரு பொம்பளைய பார்த்துடக்கூடாது, இடிக்குறதுக்குனே வருவீங்களே....?" என்று சத்தம் வேறு... உண்மையைச் சொல்லவேண்டும்மெனில் எதிரே வந்த அந்த ஆள் மேல் ஒரு தவறுமில்லை. அந்த இடத்தில் இருந்த அவனோ நிலைமையை சுமூகமாக்க, "விடுங்க மா , ஏதோ தெரியாம நடந்துடுச்சு... யாரவது தெரிஞ்சி மோதுவாங்களா..?" என்று சொல்ல, அந்த பெண்மணியோ, "அதானேப் பார்த்தேன், பொம்பளைக்கு ஒண்ணுன்னா வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வந்துடுவீங்களே... போயா.. இது எனக்கும் இந்த ஆளுக்கும் நடக்குற பிரச்சன.. நீ யாரு ஊடால...?" என்று கேட்டாலே பார்க்கலாம். அவன் மீண்டும் அசடு வழிந்தான். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் 'களுக்' என்று சிரிக்க, அவனோ அசடுவழிய சிரித்துக்கொண்டே "நல்லதுக்கே காலம் இல்லைங்க...." என்று உரைத்துவிட்டு நகர்ந்தான்.


என்னுரை – கெளதம்:


என்ன பத்தி நானே புகழ்ந்துக்கக் கூடாது. அது முற்றிலும் அநாகரீகமான செயல். சின்னதா சொல்லனும்னா நான் ஒரு ‘சோஷியல் ஆக்டிவிஸ்ட்‘ மற்றும் எழுத்தாளன். எனக்கு பெண்களை ரசிப்பது மிகவும் பிடிக்கும். பிரம்மனின் படைப்பில் உன்னதமான படைப்பே பெண்கள் தான். மழலையாய், பூப்படைந்த குமரியாய், பருவமங்கையாய், மாற்றான் தோட்டத்து மல்லிகையாய், நடுவயது அன்னையாய், முதிர்பிள்ளையாய் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. காதலிப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஒன்று. ஒவ்வொரு ஜீவராசிகளையும் காதலித்தால், மனதிற்கு தோன்றும் இனிமையும், அதனால் உண்டாகும் சுகத்தையும் விவரிக்க வார்த்தைகள் போதாது.


அன்று தான் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அவளை முதன்முதலாய் விழித் தொழுந்தேன்.  அவளின் பெயர் கூட எனக்கு தெரியாது.. ஆனால், பார்த்த முதல் நாளே அவளின் முகம் என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அவளை எங்கோ பார்த்திருக்கின்றேன், இந்த முகம் எனக்கு மிகவும் பிரசித்தி பெற்ற முகம்.. எங்கு கண்டேன்..? யோசித்தேன், நீண்ட நேரம். விடை தான் கிட்டவில்லை. மீன்களைப் போல் கூர்மையான விழிகள், இருள் சூழ்ந்த மேகங்களைப் போல் கருமையான முடிக்கற்றைகள், மென்மையான கூர்மையான நாசி, ரவிவர்மன் ஓவியம் போல், பரந்த நெற்றியில் மெல்லிய திருநீர் கீற்றல், அணில் கொறித்த கனிகளை போல் சுவை ததும்பும் இதழ்கள், தங்கமென மின்னும் கன்னம், கழுத்திலிருந்து வழிந்த சிறு சிறு பொற்காசுகளாலான அங்கம், மெல்லிய இடை, முடிவில் சில்லிய பாதம், மொத்தத்தில் அவள் ஒரு ‘மாடர்ன் ஆர்ட்‘.


பேருந்தில் அந்த பெரியவருக்கு உதவி செய்ய முன்வந்து நான் அசடுவழியும் பொழுது தான் அவள் என்னை முதன்முதலாக பார்த்தாள். அடுத்ததாக, அந்த பார்வையற்ற பெண்ணுடன் பயணிக்கும் பொழுதும், பிறகு அந்த வாட்டசாட்டமான பெண்மணியிடம் வசை வாங்கும் பொழுதும். குறிப்பாக அந்த மூன்றாம் சம்பவத்தில் தான் என் நிலையைக் கண்டு அவள் மெலிதாக நகைத்தாள்.

அவள் பார்வையில் அப்படி ஒரு குரூரம் ? இருக்கும், அதுவும் ஆண்களை பார்க்கும் பொழுதுமட்டும். ஏன்? என்ன காரணம்? என்பது அவள் மட்டுமே அறிந்த விஷயம். அந்த கொடூரமான பார்வையிலும் ஒரு வகையான காதலைக் கண்டேன். இவள் என்னவள். எனக்காகவே கடவுளால் அனுப்பப்பட்டவள். இவளோடு தான் இனி என் வாழ்வு என்று மனம் தேனுள்ள மலரை சுற்றிவரும் வண்டுக்களைப் போல் ரீங்காரமிட்டது. மெல்ல மெல்ல அவளின் வசம் நான் விழுந்தேன். எப்படியேனும் அவளிடம் பேசிவிட வேண்டும் என துடித்தேன். ஆனால், அவளைப் பார்க்கும்பொழுது பயம் தொற்றிக்கொள்ளும்.

அலுவலக பணிகளை விரைவில் முடித்து பேருந்திற்கு விரைவேன், அவளின் வரவை தரிசிக்க. அவளின் வருகைக்குப் பின் என்னைச் சுற்றி நடக்கும் அணைத்து விஷயங்களும் அற்பமாய்த் தோன்றும். ஒன்றே ஒன்று மட்டும் தெளிவானது, நான் அவளின் பால் பித்தனாகின்றேன் என்பதே அது.! அவளை முதன்முதலில் ஸ்பரிசிக்க ஒரு சந்தர்பமும் கிடைத்தது.


விழிகளின் மொழி – ரத்னா:


 அன்று அவனும் அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்தான். இப்பொழுதெல்லாம் அவனை நான் தினமும் காண்கின்றேன். அது தற்செயலா, அல்லது அவனின் செயலா என்பது தான் எனக்கு விளங்கவில்லை. பற்பல நிமிடங்கள் சென்றும், அங்கு பேருந்து வரவில்லை… “பஸ் டிரைவருக்கும் கண்டக்டருக்கும் நடுவுல பிரச்சன போல… இன்னிக்கு, பஸ் வராது.. அப்படியே வந்தாலும் கொஞ்சம் நேரமாகும்” என்று எவனோ ஒருவன் நிறுத்தத்தில் நின்றிருந்த அனைவரையும் பார்த்து பொதுவாக சொல்லிவிட்டு நகர்ந்தான். ஷேர்-ஆட்டோக்கள் குவிந்த வண்ணமாய் இருந்தன. மக்களும் சாரை சாரையாய் ஷேர்-ஆட்டோக்களை நோக்கி படையெடுத்தனர். வந்து நின்ற இரண்டு மூன்று வினாடிகளில் கூட்டம் நிரம்பிவழிய ஆட்டோக்கள் பயணம் சென்றது. கோயம்பேடு மார்க்கெட்டில் மினிவேனில் மூட்டைமூட்டையாய் அடைப்பட்டு செல்லும் காய்கறி மூட்டைகளைப் போல் மக்கள் கூட்டம் பிதுங்கி வழிந்து, மூச்சு கூட விடமுடியாத நிலையில், ஆண்பெண் பேதமின்றி ஒருவர்மேலொருவர் பட்டுக்கொண்டு, அமர்ந்து சென்றனர். அதைக்காணும் பொழுது, கோபம் பொத்துக்கொண்டு வந்தது. கன்னங்களும் சிவப்பாகின. நானும் இப்படி தான் செல்லவேண்டுமா? என்று என்னும் பொழுது அங்கே ஒரு ஷேர்-ஆட்டோ வந்துநின்றது. கூட்டம் இப்பொழுது கொஞ்சம் குறைந்து காணப்பட்டது.


அவன் டிரைவருடன் முன்னால் அமர்ந்து கொண்டான். அப்பாடா என்று பின்னால் ஏறியமர்ந்தேன். எனக்கு இடதுபுறத்தில் ஒரு பெண். டிரைவருடன் அவனும், மற்றொருவரும். இன்னொருவன் அங்கே குடிபோதையில் வந்தான். டிரைவரோ “யோவ்.. இருப்பா… ஏறாத..” என்று அந்த குடிமகனை தடுத்து, “சார்.. நீங்க கொஞ்சம் பின்னாடி உட்கார்ந்துக்க முடியுமா?” என்று அவனை வினவினார். திரும்பிப் பார்த்தான், பின்பு “சரிண்ணே…” என்று பின்னுக்கு வந்தான். நான் மெல்ல அவன் மேலே பட்டுவிடாத வண்ணம் அமர்ந்து கொண்டேன். மேலும் ஒரு பாட்டி சேர்ந்து கொள்ள, அந்த வயதான பாட்டியோ எனக்கும் அவனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள். “தேங்க் காட்” என்று பெரு மூச்சிரைத்தேன். மெல்ல அவனை திரும்பிப்பார்த்தேன், அவன் என்னை காணாது வெளியில் தன்னுடைய பார்வையை படரவிட்டான். “இவனிடம் நான் பேசினால் என்ன?” என்று என் மனம் சலனப்பட்டது. ஒரு விநாடி தான் அதற்கு மேல் அந்த சலனத்தை நான் வளரவிடவில்லை. ஆனால், விதி என்று ஒன்று உள்ளதே.! அது நம் எண்ணப்படி நமக்கு பூப்பாதையை அமைத்துத் தந்துவிடுமா என்ன?


விழிகளின் மொழி – கெளதம்:


தூரத்திலிருந்து அவளை ரசிக்கும் என் மனதிற்கு, ஆட்டோவில் என் அருகிலேயே அமர்ந்திருக்கும் அவளை ரசிக்க தைரியம் வரவில்லை. ஆகவே, என்னுடைய பார்வையை செயற்கையாய் வெளியில் செல்லுத்தினேன். அவள் இறங்கும் இடமும் வந்தது. “அண்ணா… இங்க கொஞ்சம் ஸ்டாப் பண்ணிக்கோங்க…” என்ற அவளின் குரல் என் செவிகளின் ஊடே புகுந்து என்னை இம்சித்தது. என்ன ஒரு இனிமையான குரல்..? ஏனோ குரலில் ஒருவிதமான சோகம் பரவியிருந்தது. ஆட்டோ நிறுத்தப்பட்டது. நிறுத்திய இடம் தான் சரியில்லை. அங்கே, சாலை உடைந்திருந்தது. சாதாரண சாலையில் இறங்குவதற்கும் அந்த சாலையில் இறங்குவதற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அவளிற்கு வழி தரும் பொருட்டு நான் இறங்கி நின்றேன். அவள் எப்பொழுதும் இறங்குவதைப்போல் இறங்கினாள், உடைந்தசாலையில், அவளின் பாதங்கள் சுளிக்கிக் கொள்ள, செய்வதறியாமல் ஹண்ட்-பேக்கும் லஞ்ச்-பேக்கும் சிதறிய வண்ணம் சாலையில் விழுந்தாள். சில வினாடிகள் என்ன செய்வது என்றே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அந்த பாட்டி, “என்னபா பார்த்துக்கிட்டு இருக்க… தூக்கிவிடு பா…” என்றார். நானும், அவள் அருகில் சென்று அவளின் வலது கரத்தை முட்டிக்குமேல் பற்றித் தூக்கி நிறுத்தினேன். அவளை ஸ்பரிசித்த என் விரல்கள் ஜில்லிட்டது. மனதில் சொல்லிலடங்கா சந்தோஷம் குடிகொண்டது. நான் மீண்டும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.ஆட்டோவும் நகரத் துவங்கியது. அவளோ என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்...!


ஸ்பரிசங்களின் ஆரம்பம் – ரத்னா:


அவன் என்னை ஸ்பரிசித்த அந்த சமயம் , என்னுள் ஒருவிதமான கிளர்ச்சி ஏற்பட்டது என்னவோ நிஜம் தான். அதை எப்படி அவனிடம் காட்டமுடியும்? மாறாக, அவனை முறைத்துப்பார்த்தேன். பாவம்.., உதவி செய்தவனுக்கு நன்றி சொல்லாமல், அவன் என்னவோ தவறு செய்ததைப் போல் முறைத்த பொழுது, அவனை பார்க்கவேண்டுமே…? அழுதே விடுவான் போல் தோன்றிற்று..!

மறுநாள், எப்பொழுதும் போல் அவன் நின்று கொண்டிருந்தான். என்னை காணும் அந்த விழிகளில் ஒரு விதமான ஏக்கம் குடியிருந்தது. எந்த ஒரு ஆண்மகனையும் மதிக்காத நான் அவனிடம் வலிய சென்று நன்றி உரைத்தேன். 


“எதுக்குங்க…?” என்றான் இனிய குரலில்

“நேத்து…..” என்று இழுத்தேன்….

“ஓ .. சரி சரி .. புரிஞ்சிடுச்சு.. எதுக்கு தேங்க்ஸ்-லாம்..? பட் எனிவேஸ் நோ மென்ஷன்…”

எவ்வளவு ஒரு மென்மையான ஜீவாத்மா அவன்..!


ஸ்பரிசங்களின் ஆரம்பம் – கெளதம்:


அவளே என்னிடம் வந்து பேசுவாள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.. எல்லாம் கடவுளின் செயல்..! இன்று இந்த விஷயம் நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும்.. அப்படி தான் அவளும் என்னிடம் பேசினாள். மெல்ல மெல்ல இருவரும் உரையாட ஆரம்பித்தோம். “ஹாய்” என்றும், “இன்னைக்கு வேல எப்படி?” என்றும் எல்லாம் மிக மிக நாகரீகமானப் பேச்சு. ஆனால் இன்றுவரை அவளின் பெயர் கூட எனக்குத் தெரியாது. அவளும் என்னுடைய பெயரை அறிய ஆவல் காட்டவில்லை. இருவரும் நண்பர்கள் என்னும் அந்த வட்டத்துக்குள் நுழைய நெருங்கிக்கொண்டிருந்தோம். அந்த நெருக்கமே, என்னுள் இருக்கும் காதல் உணர்வை தூண்டிவிட ஒரு ‘கேட்டலிஸ்டாய் (catalyst)’ இருந்தது.


நட்பின் துவக்கம் – ரத்னா:


இருவருக்குள்ளும் ஒருவிதமான நட்பு உருவாகிக் கொண்டிருந்தது என்பதை என்னால் மறுக்க இயலாது. அவனின் பேச்சும் அதன் ஆழத்தில் வெளிப்படும் கருத்தும் என்னை பெரிதும் கவர்ந்தது. அவனிடம் பழகும் பொழுது ஒரு விதமான ‘செக்யூர்‘ பீலிங்கை நான் அனுபவித்தேன். அது எனக்கு பிடித்தும் இருந்தது. எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை, நான் பார்த்த ஆண்கள் மட்டுமே தவறாய் இருந்திருக்கின்றனர் என்னும் உண்மை என்னுள் ஆணித்தரமாய் பதிந்தது. அவனிடம் உள்ள ஒரு கண்ணியம், அவன் பெண்களைப் பற்றி சொல்லும் கருத்துக்களில் வெளிப்படும் “பெண்ணினத்தை போற்றும் மற்றும் மதிக்கும்” பண்பு என்று பல விஷயங்களின் மூலம் என்னை அவன் முழுதும் ஆக்ரமிக்கத் துவங்கினான். அன்று தான் நான் என்னுடைய பெயரை அவனிடம் கூறினேன். பதிலுக்கு அவனின் பெயரை எதிர்பார்த்தேன். சொன்னான்.. கெளதம் என்றால் அழகன் என்று தானே அர்த்தம். 'அவ்வளவு ஒன்றும் நீ அழகன் இல்லை' என்று அவனை மனதால் சீண்டினேன்.

அவனும் என்னைப்போலவே ஒரு மென்பொருள் வல்லுனன். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவன் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்துள்ளான், நான் வட-இந்தியாவிலிருந்து. நாட்கள் செல்ல செல்ல அவனின் பேச்சில் சில அர்த்தங்கள் ஒளிந்திருப்பதாய் நான் உணர்ந்தேன். ஒருவேளை இவன் என்னை விரும்புகின்றானோ? அய்யோ அப்படி விரும்பினால் நான் என்ன செய்வது? எனக்கும் இவனை பிடித்திருக்கின்றதே? அதற்காக இவனை நான் காதலிக்க முடியுமா என்ன? அதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா? அப்படியே காதலித்தாலும் அந்தக் காதல் திருமணத்தில் முடியுமா? இன்னும் பற்பல கேள்விகள் என்னை சூழ்ந்தது. எது எப்படி இருப்பினும் “அவன் என்னிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தக்கூடாது” என்று மனதார கடவுளை வேண்டினேன். வேண்டும் என்றால் இருவரும் மனதில் காதலை பூஜிக்கலாம்..! வார்த்தைகளில் வெளிப்பட்டு, உள்ளத்தால் களிப்புற்று, உடலால் சங்கமிக்க வேண்டாமே என்று உள்ளம் பதறியது. நாம் என்ன நினைத்து என்ன? நாம் பிறக்கும் பொழுதே கடவுள் நம்முடைய வாழ்க்கைக்கு ‘ஸ்க்ரீன் ப்ளே‘ வடிவத்தை கொடுத்துவிடுகின்றானே…? என்ன தான் முட்டி மோதினாலும் அவற்றை மாற்ற எவரால் முடியும்..! என் தோழி அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்லுவாள், அது தான் இப்பொழுது என் நினைவுக்கு வந்தது. அந்த ஆங்கில வாக்கியம் என்னவென்றால்,

“Everything is Pre-written. Nothing can be Re-Written”.


நட்பின் துவக்கம் – கெளதம்:


இருவரும் கொஞ்சம் மனதளவிலும் நெருங்கினோம். அவளுக்கு என்னை பிடித்திருக்கின்றது என்று என் மனம் உள்ளூர முழங்கியது. ஆண் புத்தி.. என்ன செய்யும்..? சலனப்பட்டுவிட்டது. அவளின் அங்கங்களைத் தேடி என் விழிகள் அலையத்துவங்கியது. கொஞ்சநேரம் தான்.., உடனே எச்சரிக்கை மணி போல் என் மனம் நான் செய்யும் செயலைக்கண்டு என்னைக் காரி உமிழ்ந்தது. வெட்கித்தேன். இவளை திருமணம் செய்தால் வாழ்க்கை நிம்மதியாய் கழியுமே என்று உள்ளம் துடித்தது. இருவரின் கைபேசி எண்களும் இடம் மாறின. அதிலிருந்து எங்கள் இருவரின் உள்ளங்களும் தடம் மாறின. சரமாரியான ‘சாட்டிங்‘, உறக்கமின்மை என்று நாட்கள் கழிந்தது. இவளிடம் நம்முடைய காதலை வெளிப்படுத்தினால் என்ன? என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டால்? சே..அப்படி ஒன்றும் நேராது..! நேர்ந்துவிட்டால்? அவள் என்னைவிட்டு விலகிவிட்டால்? என்று நானும் குழம்பி.. குழப்பத்தில், ஒரு தயக்கத்தில், அவளிடம் நான் கொண்ட மயக்கத்தில் சொல்லித்தான் பார்ப்போமே என்று அந்த இரவு நான் அவளிடம் ‘எஸ்.எம்.எஸ் சாட்டிங்கை‘ துவங்கினேன்.


நட்பின் எல்லைமீறல் – ரத்னா:


என்றும் போல் அன்றும் சாட்டிங் துவங்கியது. சாப்டாச்சா, என்ன சாப்பாடு, என்ன பண்ணுற இப்ப, என்னும் சராசரியான குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து,

பீப்…

“எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு தோனுது..” என்று கைபேசி அவனின் சார்பாக சிணுங்கியது.

“சொல்லுங்க…” – இது என் சார்பான சிணுங்கல்.

“பட்.. நான் சொல்லுறத கேட்டு நீ என்ன தப்பா நினைச்சிக்க கூடாது…”

“கண்டிப்பா மாட்டேன்..” – மெல்ல புரியத்துவங்கியது.

“நான் இப்ப ஒன்ன டைப் பண்ணேன்.. பட் அனுப்ப யோசனையா இருக்கு…”

“என் கிட்ட என்னப்பா யோசன..? அனுப்பலாம் இல்ல??”

“இல்ல வேண்டாம்… சில மெஸ்சேஜஸ் டிராப்ட்ஸ்-ல இருக்கறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது..”

“ஹே.. என்ன இது..? கம் ஆன்.. என்கிட்டே என்ன தயக்கம் ? தயவுசெஞ்சு அனுப்புங்களேன்..”

“ஓகே.. பட் ப்ராமிஸ் பண்ணு. நீ என்ன தப்பா எடுத்துக்க மாட்டேன்னு..”

“கண்டிப்பா மாட்டேன்..”

“என்னைவிட்டு விலகமாட்டேன்னு…”

“சரி.. மாட்டேன்..”

“எப்பவும் என்கூட பழகுவேன்னு…”

“கண்டிப்பா.. பழகுவேன்…”

“நான் சொல்லுறது உனக்கு பிடிக்கலைனா.. ஐ வோன்ட் டாக் அபௌட் திஸ் ஹியர் ஆப்டர். பட் நீ எப்பவும் என் பிரண்டா இருக்கணும்…”

“இருப்பேன்…”

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்… வேண்டாம் பா.. விட்டுடலாம்…”

“சரி.. விட்டுங்க.. சொல்ல வேண்டாம்…” என்று டைப் செய்தேன் கடுப்பில்.

நட்பின் எல்லைமீறல் – கெளதம்:

என்ன இவ இப்படி சொல்லிட்டா? அப்ப நான் எப்ப தான் எக்ஸ்பிரஸ் பண்ணுறது?

“ஹ்ம்ம்… சொல்லலாம்னு தோனுதே…” என்று மீண்டும் ஆரம்பித்தேன்.

பீப்…

“சொல்லுங்க.. கெளதம்.. என்கிட்டே என்ன தயக்கம்..?”

“ஓகே… லெட் மீ பீ பிரான்க் ரத்னா… உன்னோட பழகும் பொழுது எனக்குள்ள ஏதோ ஒரு மாற்றம், மின்னலடிச்சாப்பல.. உன்ன கல்யாணம் பண்ணா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது. என் வாழ்க்கையோட அர்த்தம் விளங்கும்ன்னு தோணுது. மறைக்காம, மறுக்காம மனசுல இருந்தத எக்ஸ்பிரஸ் பண்ணிட்டேன்... டோன்ட் டேக் இட் இன் அதர் வே. ஐ வான்ட் டு பி  யுவர் பிரண்ட் பார் எவர்..”

வினாடிகள் வருடங்களாய் கழிந்தது. அவளின் பதிலை எதிர்பார்த்தவாறு. தாமதம்.. வினாடிகள் நிமிடங்களாய் கழிந்தது.. நீண்ட நேரம் பொறுத்து ஒரு பீப்… ஆவலாய் பொத்தானை அழுத்தினேன்..

“ஓகே…..”

ஏமாற்றப்பட்டேன்….

“ஓகே… அப்படினா என்ன அர்த்தம்..? எனக்கு புரியல…”

அதற்கு பதிலே வரவில்லை. அவள் என்னை தவறாக எண்ணிவிட்டாள். இனி எங்களின் நட்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்று மனம் எண்ணி வருந்தியது. 

உணர்ச்சி பரிமாறல் – ரத்னா:

அவனிடமிருந்து அத்தகைய பதிலையே எதிர்பார்த்தாலும், அந்த பதில் வரும்வரை நான் பட்ட பாடு.. அப்பப்பா.. சொல்ல இயலாது…! வந்த பின்பு என்னிடம் ஏற்ப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

பீப்…

“ஓகே… அப்படினா என்ன அர்த்தம்..? எனக்கு புரியல…”

கொஞ்சம் தவிக்க விடலாமே என்னும் சராசரி பெண்ணின் குனம் என்னை ஆட்கொண்டதால், 'ரிப்ளை' செய்யவில்லை.. பாவம்.. அவனின் முகம் இப்பொழுது எப்படி இருக்கும், என்று கற்பனை செய்தேன்.. சிரிப்பு கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டது. சந்தோஷத்தில் தூக்கம் எப்படி வரும்..?

பீப்..

“என்ன தூங்கிட்டியா..? சரி… குட் நைட்.. பட். டோன்ட் மிஸ்டேக் மீ.. சாரி இப் ஐ ஹர்ட் யு…” என்ற அந்த குறுஞ்செய்தி, பாவம் அவன் என்று என்னை எண்ணவைத்தது.

சிறுவினாடிகளே அந்த மகிழ்ச்சி நிலைகொண்டது. பின்பு என்னைப்பற்றி நானே எண்ணி வெட்கினேன். மனதில் ஏதோ ஒரு பந்துபோன்ற உணர்வு என்னை வெம்பவைத்தது.. கதறினேன்… கடவுளே…எனக்கு மட்டும் ஏன் இப்படி..? எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்… அவன் என்னை ஏற்றுக்கொள்வானா? நான் அதற்கு தகுதியானவளா? அவன் என்னை ஒதுக்கிவிட்டான் என்றால் நான் என்ன செய்வேன்…? ப்ளீஸ்.. எனக்கு கெளதம் வேண்டும்…! ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் ஹிம்.. ஐ லவ் ஹிம் டு தி கோர்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்… ப்ளீஸ்… என்று மனம் கெஞ்சியது. என் வாழ்க்கை நல்ல பாதையில் செல்வதையோ, என் புலம்பலையும் கெஞ்சலையும் கடவுள் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை என்று எனக்கு சில தினங்களிலேயே புரியத்துவங்கியது.


உணர்ச்சி பரிமாறல் – கெளதம்:


நாட்கள் மூன்றாகியது. இன்னும் அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அவள் என்னை தவறாகத் தான் புரிந்துக்கொண்டாள் போல. போன் செய்தாலும் பதிலில்லை. போன் 'சுவிட்ச் ஆப்'. நான் என்ன செய்வேன் கடவுளே? எப்படியாவது அவள் என்னிடம் பேசிவிட வேண்டும், தோழியாக அல்ல காதலியாக.. அதற்கு நான் என்ன தான் செய்யவேண்டும்? கடவுளே, உனக்கு என் மேல் கருணையே இல்லையா…? வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாதையை காட்டிவிட்டு, இப்படி செய்துவிட்டாயே? மறுபடியும் போன் செய்து பார்க்கலாமா? செய்வோமே..! கடவுளே தயவுசெய்து கருணையை அருளுங்கள்..! கைபேசியை அழுத்தினேன்.. கடவுளே நன்றி.. ரிங் சென்றது..! மனம் குதூகலம் அடைந்தது. உடனே சோர்வடைந்தது. அவள் எடுக்கவில்லை. விடாமல் முயன்றேன். மூன்று முறை கழித்து, கைபேசி உயிர்பெற்றது.

“ஹலோ….” – பதிலில்லை. சிறிதுநேரம் கழித்து,

“ஹல் …இல் …லோ …” என்ற அவளின் குரல், உடைந்திருந்தது. சோகரசம் பரவியிருந்தது.

“என்ன ரத்னா.. என்ன நீ தப்பா நினைச்சிகிட்டியா ..?” மனதில் ஒருவிதமான பயம் ஏற்பட்டது.

“அப்படிலாம் இல்ல… நீங்க உங்களுக்கு பட்டத எக்ஸ்பிரஸ் பண்ணீங்க.. அதுல என்ன தப்பு…?”

“அப்பறம் ஏன் இத்தன நாளா ஆளையும் பாக்கமுடில, போனும் சுவிட்ச் ஆப்?”

“என் பதில சொல்லுறதுக்கு முன்னால நான் உங்ககிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசணும்.. தென் வி வில் டிசைட்..”

“சொல்லுப்பா… ஐ ஹவ் டிசைடட் ஆல்ரெடி…”

“ப்ளீஸ்.. அவசரப்படாம நான் சொல்லுறத கேளுங்க…!”


உண்மையின் கசப்புத்தன்மை – ரத்னா:


நான் அவனிடம் எப்படி சொல்லுவது? சொன்னபிறகு என்னை ஏற்பானா? இல்லை 'ச்சீ' இவள் அசிங்கம் என்று அவனின் காதலியை நினைத்து குமுறுவானா? நான் எப்படி தான் அவனிடம் அந்த விஷயத்தை சொல்லுவேன்..? உலகத்திலுள்ள முழு பலத்தையும் வரவழைத்துக்கொண்டு பேசத்துவங்கினேன்…


“கெளதம்.. எனக்கு ஆண்கள்னா சுத்தமா பிடிக்காம இருந்துச்சு.. அதுக்கு அடிப்படையான காரணம் ஒன்னு இருக்கு.. அத நான் உங்ககிட்ட சொல்லியே ஆகணும்.. சொன்ன பிறகு உங்களுக்கு உண்மையா என்ன பிடிச்சிருந்தா.. சொல்லுங்க….. நான் முன்ன நார்த்-இந்தியாவுல இருந்தேன்னு உங்களுக்கே தெரியும் தானே? அங்க ஒரு நாள் நடந்த சம்பவம், என்ன, என்ன பெத்தவங்க எல்லாரையும் உலுக்கிடுச்சு.. பெண்ணா பொறந்ததுக்காக நான் வெட்கப்பட்ட முதல் நாள் அது.. ஒரு நாள் நான் கம்பெனி பஸ்-ல வந்துகிட்டு இருக்கும் பொது, நாலு பேர் சேர்ந்து என்ன…” அழத்துவங்கினேன் … கூனிக்குருகிப்போனேன்.


“உயிரையே என்கிட்டே இருந்து உருவுறா மாதிரி ஒரு வலி..என்னோட பிறப்புறுப்புல… இதுக்கு மேலையும் சொல்லனுமா கெளதம்?” சில விநாடி மௌனங்களுக்கு பிறகு.,

“அப்பாவும் அவங்க பிரண்ட்சும் சேர்ந்து எப்படியோ என்னோட போட்டோவ நியூஸ் பேப்பர்ல வரவிடாம பார்த்துக்கிட்டாங்க… அப்பவும் ஒன்னு ரெண்டு பத்திரிக்கையில வந்துடுச்சு.. அந்த விஷயங்கள அடியோட மறக்கணும்னு தான் நான் இந்த ஊருக்கே ட்ரான்ஸ்வர்ல வந்தேன்.. அப்பா அம்மா எனக்கு கல்யாணம் பண்ண அப்படி அலையுறாங்க.. எப்படி கெளதம் எனக்கு கல்யாணம் நடக்கும்.. யார் ஏத்துப்பா என்ன? இப்படி இருந்தும் என் வாழ்க்கையில நான் சந்தோஷமா இருந்ததே நீங்க வந்ததுக்கு அப்பறம் தான்.. இப்ப சொல்லுங்க கெளதம் உங்களால இந்த அசிங்கத்த மனைவியா ஏத்துக்க முடியுமா…? மனசுவிட்டு சொல்லுறேன் கெளதம், உடலால தான் களங்கப்பட்டேனே தவிர, மனசால இல்ல… நீங்க நம்பலாம் கெளதம். எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் கெளதம்.. ஐ அம் பிரான்க். ஐ லவ் யு சோ மச் கெளதம். வில் யூ அக்செப்ட் மீ?”

சில நிமிடங்கள் பதிலே இல்லை. பிறகு,

“நான் அப்பறமா பேசுறேன்” என்று போனை துண்டித்துவிட்டான்.. இதயம் வெடிக்கும் அளவுக்கு அழுதேன்.


உண்மையின் கசப்புத்தன்மை – கெளதம்:

—————————————————————————————————————————

—————————————————————————————————————————

———————————————————————————————————


உணர்வுகளின் கொந்தளிப்பு – ரத்னா:


நான் என்னை கௌதமிடம் வெளிப்படுத்தி சரியாக இன்றுடன் ஏழு நாட்கள் முடிவடைந்துவிட்டது. கௌதமும் மற்ற ஆண்களைப் போல் தான்.. கௌதமை குறை சொல்லி என்ன நடக்கப்போகிறது? அப்படி அவனை குறைசொல்ல என்ன இருக்கின்றது? அவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது? அனைத்து ஆடவர்களும் தங்களின் மனைவி ‘ப்ரெஷ்‘ஷாக இருக்கவேண்டும் என்று தானே நினைப்பர்.. என்னைப்போல் ஒரு எச்சில் இலையை யார் தான் கண்கொண்டு பார்ப்பார்கள்? இதில் தவறு ஒன்றுமில்லை. இது அவர்களின் சுதந்திரம் மற்றும் உரிமை. ஆனால் , என் கௌதமுமா இப்படி? அப்படியெனில் அவன் என் உடலைத் தான் நேசித்தானா? மனதை இல்லையா? மனிதத்தனம் அவனிடம் செத்துப்போயிற்றா? கருத்தில் அப்படி பெண்ணினத்தை மதிக்கும் அவனின் உள்ளம் இவ்வளவு சிறியதா? நடந்ததை சொல்லும்பொழுது கொஞ்சமும் வருந்தாமல், கத்தரித்துவிட்டானே? இவனையா நான் ஆணினத்தினிலே உயர்ந்தவன் என்று எண்ணினேன்? என்னதான் சொன்னாலும் மனம் அவனை நாடுகின்றதே? அதனிடம் நான் எப்படி புரியவைப்பேன், அவன் உன்னவன் இல்லை என்று? இந்த ஏழு நாட்களில் எத்தனை தடவை அவனுக்கு நான் போனில் முயற்சித்துவிட்டேன். ஒருதடவையும் அவன் தன்னுடைய கைபேசியை உயிர்பிக்க செய்யவில்லையே. ஒரேயொரு தரம் “நான் கொஞ்சம் பிஸி.. அப்புறமா பேசுறேன்” என்ற குறுந்தகவல் மட்டும் வந்தது. பரவாயில்லை இந்த அளவுக்காவது நெஞ்சில் சிறு துளி ஈரம் இருக்கின்றதே என்று நினைக்கலானேன். அவன் மீது பித்து பிடித்துப்போனேன். அவனோ என்னை பிடிக்காமல் சென்றான். இனி எந்த ஒரு ஆணையும் நினைக்ககூடாது, மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளானேன். அம்மா வேறு கல்யாணப்பேச்சை ஆரம்பிக்கலாமா என்று விடாமல் நச்சரித்தாள். ஏதோ ரெண்டாம் தரமாய் செல்லும் பாக்யமாம், நல்ல வரனாம். சினம் முழுவதும் அவள் வசம் விழுந்தது. என்னை நேசித்தவனே, என்னை ஒரு அசிங்கத்தை பார்ப்பதை போல் பார்க்கும் பொழுது, வேற எந்த ஆணால் என்னை புரிந்து கொள்ள முடியும்? ஆண்கள் அனைவரும் சுயநலவாதிகள், மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாதவர்கள். அப்படியே எங்காவது சென்று இறந்துவிடலாம் போல் தோன்றிற்று. வாழவே பிடிக்கவில்லை. இனி எனக்கு ஆணின் துணை வேண்டாம், காதல் வேண்டாம், கல்யாணம் வேண்டாம் என்று எண்ணிய பொழுது, வீட்டின் ‘அழைப்பு மணி‘ ஒலித்தது.


மனிதமனங்களின் அப்பட்டமான உச்சக்கட்டம் – ரத்னா – கெளதம்:


வானளாவிய அன்பை கௌதமிடத்தில் ரத்னா வைத்திருந்தாலும், அவன் அவளை உதாசீனப்படுத்தியதை அவளால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இனி அவனை ஒரு தரமும் நினைக்க கூடாது என்று மனதிற்கு தைரியம் சொல்லியவாரே அவனை நொடிக்கொருமுறை நினைத்துக்கொண்டிருந்தாள். எனினும் அவன் மேல் அவளுக்கு கட்டுக்கடங்காத கோபமிருந்தது. அந்தத் தருவாயில் தான் நுழைவாயிலின் மணி ஒலித்தது. அழுது அழுது சிவந்த கண்களை அழுத்தி துடைத்துக்கொண்டு சென்று கதவின் தாழ்ப்பாளை விடுவித்தாள். அவளின் எதிரில் எதிர்ப்பார்க்காதவாறு கெளதம் நின்று கொண்டிருந்தான் சிறு புன்முறுவலுடன்.


“உள்ள வரலாமா…?” என்று மென்மையாய் வினவினான்.

எவ்வளவு தான் அவன் மேல் கோபமிருந்தாலும், ஒருநொடியில் அனைத்து கோபமும் கதிரவனின் பார்வை பட்டு மறையும் பனித்துளிபோல் மறைந்தது. எனினும் அதை காட்டிக்கொள்ளாமல், அழுகை பீறிட்டது.

” வாங்க…” என்றாள் உடையும் குரலில். “உட்காருங்க… நான் போய் உங்களுக்கு எதாவது சாப்பிட…”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று மீண்டும் மென்மையாய் பதிலளித்தான்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ரத்னா…”

“பேசுறதுக்கு எதாவது இருக்கா என்ன?”

“நீ கோபத்துல இருக்கேன்னு நினைக்குறேன்.. நியாயம் தான்….”

“அப்படிலாம் ஒன்னும் இல்ல. நான் எதுக்காக கோபப்படணும்?”

“என்மேல…?”

“உங்கமேல கோபப்பட நான் யார்?”

“அப்பட்டமா தெரியுது உன் கோபம்…”

“அப்படிலாம் ஒன்னும் இல்ல..”

“சரி நான் சொல்ல வந்தத சொல்லிடுறேன்….”

“……………………………………..”


“முதல்ல சாரி…. அன்னிக்கு நான் அப்படி நடந்திருக்கக் கூடாது.. தெரியாம நடந்துகிட்டேன்… அதுக்காக நான் எத்தன முற வேதனைப்பட்டேன் தெரியுமா…? என்ன தான் முற்போக்கா சிந்திச்சாலும் நானும் மத்த ஆண்கள போல தானே நடந்துகிட்டேன்… உன்ன காதலிக்க எனக்கு என்ன தகுதி இருக்கு? உண்மையா நான் உன்ன காதலிச்சு இருந்தேனா உன் மனச புரிஞ்சு தானே நடந்திருக்கணும்…? நிஜமாகவே நான் இந்த ஏழு நாட்களும் ரொம்ப பிஸியா தான் இருந்தேன்.. அதுனால தான் என்னால உன் போனக்கூட எடுக்கமுடியல. அதுக்காக பிஸியா மட்டும் தான் இருந்தேன்னு சொல்ல வரல.. அப்படி சொன்னா அது பொய்யாகிடும்.. உண்மைய சொல்லனும்னா உன்னப் பத்தி நீ சொன்னது என்ன அதிர்ச்சியடைய வெச்சது என்னவோ நிஜம் தான். நான் ஏதாவது தப்பா பேசிடுவேனோ அப்படின்ற பயத்துல தான் அன்னிக்கு உன்கிட்ட அப்பறம் பேசுறேன்னு சொன்னேன்…


அப்புறமா பொறுமையா யோசிச்சு பார்க்கும் போது தான் தெரிஞ்சது அது எவ்வளவு பெரிய தப்புன்னு… ஏற்கனவே காயத்துல இருக்குற உன்னோட மனச இன்னும் நான் ரணமாகிட்டேன்… எப்படிப்பட்ட அற்ப மனுஷ ஜென்மமா நான் இருந்திருக்கேன்..? இப்ப நாம பஸ்ல போறோம் எத்தனபேர் இடிப்பாங்க, அதெல்லாம் பெருசாவா எடுத்துக்குறோம்? ச்சே இவங்கள்லாம் மனுஷங்களே இல்லன்னு அவாய்ட் பண்ணிக்கிட்டு போகல..? அப்படிதானே இதுவும்…? பெண்கள மோகப்பொருளா நினைக்குற மனுஷ மிருகங்கள கேவலமா நினைச்சு ஒதிங்கியும் வந்துட்ட. இத என்கிட்டே சொல்லனும்னு கூட உனக்கு கட்டாயமில்ல, ஆனா நீ அத மறைக்காம சொல்லி எனக்கும் என் காதலுக்கும் உண்மையா இருக்கேன்னு தானே அர்த்தம்? அது எனக்கு புரிய ஒரு வாரம் ஆச்சு பாரு. இந்த உலகத்துல எத்தன பேர் கட்டுன கணவனுக்கு உண்மையா இருக்காங்க..? நூத்துல பத்து பர்சென்ட் கூட இல்ல… ஒருத்தன காதலிச்சு, அவனோட மனசார சேர்ந்தும் வாழ்ந்து, சந்தர்ப்ப வசத்தால வேற ஒருத்தன கைபிடிக்குற பெண்களும் இந்த உலகத்துல இருக்கத் தானே செய்யுறாங்க… அவங்கெல்லாம் அவங்கவங்க புருஷன்கிட்டே உண்மைய மறைக்கலைனா, இங்க யாருக்கும் வாழ்கையே இருக்காது.. இது ஆம்பளைங்களுக்கும் தெரியும், ஆனா தெரியாதமாதிரி தான் வாழுறாங்க.. அப்படி வாழலைனா அவங்களுக்கும் வாழ்க்கை இல்ல….


அந்தமாதிரி நீ ஒன்னும் செய்யலையே.. உனக்கு நடந்தது ஒரு விபத்து, விரும்பி நீ எதுவும் செய்யல.. இந்த விபத்துக்கு வெறும் கட்டுப்போட்டா செரியாயிடும்… நம்ம பாஷையில சொன்னா, ‘கால்கட்டு‘. இப்ப சொல்லுறேன் மனசார, இனி இந்த விஷயத்தப்பத்தி நான் ஒரு வார்த்த கூட பேசமாட்டேன். எனக்கு உன்னோட இறந்தகாலம் முக்கியமில்ல, அது இறந்துடுச்சு.. வெறும் எதிர்காலம் தான் முக்கியம்… அந்த எதிர்காலத்த நல்ல ஒரு கம்பானியனா நான் உன் கூட ஷேர் பண்ணிக்க விரும்புறேன். மனசத்தொட்டு சொல்லுறேன், ஐ ஸ்டில் லவ் யூ அண்ட் ஐ வான்ட் டு மேரி யூ… அண்ட் ஐ பிராமிஸ் ஐ வில் பி எ குட் பார்ட்னர் டு யூ.. யோசிச்சு, உனக்கும் அதே மாதிரி தோணிச்சுனா கால் பண்ணு… நான் உன் காலுக்காக வெயிட் பண்ணிக்கிட்டே இருப்பேன்.. பை…” என்று வெளியேறினான்.

சிரிப்பும் அழுகையும் மாறிமாறி தோன்றியது ரத்னாவுக்கு… எத்தகைய உயர்ந்த மனம் கௌதமிற்கு என்று வியந்தாள்.. அவன் நினைத்ததில் தவறென்ன? என்று அவளின் மனம் அவனுக்காக வக்காலத்து வாங்கியது.. இனியும் சொல்லவா வேண்டும், அவளின் உள்ளிருக்கும் காதலை..? எப்படி அவனிடம் காதலை வெளிப்படுத்தலாம் என்று யோசிக்கும் தருவாயில், அவளின் கைபேசி சிணுங்கியது,

கைபேசியின் வெளித்திரை ‘அப்பா’ என்றுரைத்தது. சந்தோஷமாய் காதைக் கொடுத்தாள்,


“என்னமா அம்மாகிட்ட அப்படி எடுத்தரிஞ்சு பேசிட்டியே மா.. ரொம்ப வருதப்படுறா.. பாவம் மா அவ, உனக்கு கல்யாணம் பண்ணிப்பார்க்கனும்னு எங்களுக்கு மட்டும் ஆச இருக்காதா என்ன…? இன்னும் எத்தன காலத்துக்கு தான் நடந்ததையே நினைச்சிக்கிட்டு இருப்ப…?”


“அப்பா… அப்பா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…. நான் வர வாரம் ஊருக்கு உங்க மாப்பிள்ளையோட வரேன்.” – என்று அவள் சொல்லும் முன்னே அவளின் கன்னங்கள் காஷ்மீர் ஆப்பிளை போல் வெட்கித்து சிவந்தது.


- முற்றும் –

 

ஆசிரியர் பெயர் :வசந்தகிருஷ்ணன்.ஆ.

by Swathi   on 12 May 2014  7 Comments
Tags: காதல் கதைகள்   காதல் எனப்படுவது   Kaathal   Love Story   Tamil Love Story   Kathal Kathaigal     
 தொடர்புடையவை-Related Articles
நீயே எந்தன் புவனம் - குரு அரவிந்தன் நீயே எந்தன் புவனம் - குரு அரவிந்தன்
காதல் எனப்படுவது யாதெனில்.? காதல் எனப்படுவது யாதெனில்.?
மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா? மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா?
கருத்துகள்
08-Oct-2015 02:58:24 ANANDHALAKSHMI said : Report Abuse
இ லைக் வெரி மச் திஸ் ஸ்டோரி.இட் இச் ரியலி கிரேட் கான்செப்ட் அண்ட் இ லைக் திஸ் சோ மச்.காங்க்ரத்ஸ் போர் வறிதே திஸ் ஸ்டோரி போர் உங்களுக்கு
 
16-Jun-2015 04:32:49 நிலா said : Report Abuse
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது . i like this story .
 
06-Apr-2015 08:24:08 Kokilaraj said : Report Abuse
Sirappu enkira varthaiyi minjum oru varthai thamilil irunthal athai ippothu solli irupen
 
08-Sep-2014 04:20:06 தாணு சரண்யா Se said : Report Abuse
சூப்பர் லவ் ஸ்டோரி ஆண்கள் பற்றிய ரத்னாவின் கருத்து சரி தான் . கெளதம் மாதிரி நல்லவங்களும் இருபாங்க .......
 
11-Jul-2014 12:01:01 முருகன் said : Report Abuse
முதலிழ் நன்றி. அருமை நன்றி நன்றி.
 
30-Jun-2014 12:30:59 Subash said : Report Abuse
மதிப்பிற்குரிய எழுத்தாளர் வசந்தக்ரிஷ்ணன் அய்யா , நான் படித்த சிறந்த சிறு கதைகளின் பட்டியலில் தங்கள் இந்த சிறுகதையும் செர்துகொல்கிறேன் . நெஞ்சை நெகிழ வைத்தது உங்கள் இந்த அற்புத படைப்பு எனும் சிறு கதை . பெண்களின் கற்பின் முக்கியதுவத்தையுஇம் , அதனால் ஏற்படும் வாழ்கை பிரச்சனையையும் அருமையாக பதிவு செய்து இருகிறீர்கள் . ஒரு ஆடவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மிக அழகாக விளக்கி இருகிறீர்கள் . மதிற்பிற்குரிய நமது நண்பர் திரு ரஞ்சித் அயயா மேலே கூறியது போல் இந்த நிகழ்வு நிஜ சம்பவம் தான் என்று கருதுகிறேன் . தாய் மொழியாம் தமிழ் மொழி வாழ்க வளர்க !!!
 
18-Jun-2014 11:36:06 Ranjith N said : Report Abuse
Vasandhakrishnan ayya..... Miha azhagahana kathai,unmai sangathiya endru theriyavillai,irundhalum neengal solluhindra vitham tamizh uvamai korppu,miha arputham... Intha kathai padithathilirundhu enmanam etho oruvitha kalhippu...... Mikka nandri....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.