LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மாலை ஐந்து

கயற்கண்ணி மாலை

தடையேனைத் தீயவர்ச் சார்ந்துதுன்
    மார்க்கஞ் சரிக்கவிழை
    நடையேனை வஞ்சமுஞ் சூதும்பொல்
    லாங்கு நறுமொறுப்பும்
    உடையேனை நின்னை யொருகாலத்
    தேனு முரைத்தறியாக்
    கடையேனைக் காத்தரு டென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [1]

    மாத்தரு நீழ லிடத்தா
    னிடத்து வளர்ந்தகிலம்
    பூத்தருள் வாயருள் பூண்டருள்
    வாயன்பர் புந்திவிழை
    வீத்தருள் வாயன்பு சற்றுமில்
    லேனையு மெண்ணலின்றிக்
    காத்தருள் வாய்வையைத் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [2]

    நாவார நின்னை நவிலாது
    சைவநல் லாரியர்சொல்
    தேவார பாரணஞ் செய்யாது
    வீணரைச் சேர்ந்தொழுகித்
    தீவாய் நரகுக் கிரையாகு
    வேனைத் தியங்கவிடேல்
    காவாய் புனல்வையைத் தென்கூடல்
    வாழும் கயற்கண்ணியே. [3]

    வேஞ்சின மாதி மிகுத்தே
    சிதடரை மேவிநிதம்
    தாஞ்சிவ பூசை செயாதே
    திரியெனைச் சார்ந்தருள்வாய்
    வாஞ்சிய மாதித் தலந்தோறு
    மேவிய வள்ளறனைக்
    காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [4]

    படித்தேன் படித்தவை சொல்லும்
    திறமை படைத்தலின்றித்
    துடித்தேனி னன்பர்கள் போலே
    யெவரும் சொலும்பொருட்டு
    நடித்தே னினிச்சகி யேனென்னைக்
    காத்தரு ணாரணிபூங்
    கடித்தே னுகுபொழிற் றென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [5]

    வஞ்சன் பிறரை யிகழ்ந்தேசுந்
    தீமை மலிந்தியலும்
    நெஞ்சன் கொடியரைக் கொண்டாடி
    வாடுபு நின்னைவிட்ட
    தஞ்சனென் றாலுநின் மஞ்சனன்
    றோவெற் றளரவிடேல்
    கஞ்சன் புகழ்வுறு தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [6]

    வாரணி கொங்கை மடவார்
    கலவி மயலிற்பட்டே
    தாரணி யேசத் தளர்வேனைத்
    துன்பிடைத் தள்ளிவிடேல்
    நாரணி யாருயிர் நாயக
    மேமுன் நரலைதந்த
    காரணி கண்ட ரிடத்தாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [7]

    நிந்தனைக் கொள்கல மானேனை
    நீசனை நேயமிலாப்
    பந்தனைப் பாவியை மக்கட்
    பதடியைப் பார்த்தருள்வாய்
    சிந்தனை வாக்கினுக் கெட்டாத
    சிற்பரன் றேவிசெவ்வேற்
    கந்தனை யீன்றரு ளன்னேதென்
    கூடற் கயற்கண்ணியே. [8]

    பண்ணே னெனினும் நினைத்துதி
    பூசனை பண்ணிப்பின்னர்
    உண்ணே னெனினு முனதடி
    யார்தமக் குற்றசெய்ய
    நண்ணே னெனினும் நினைவலஞ்
    செய்து நலமடையக்
    கண்ணே னெனினு மருள்வாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [9]

    சையந் தனக்கு நிகராகும்
    யான்செ யதன்மமிந்த
    வையந் தனக்குப் பெரும்பார
    மாமென் வடிவமந்தோ
    உய்யந்த மார்க்க மறியா
    துழிதரு கிற்குமிந்தக்
    கையன் றனைவிட் டிடாதேதென்
    கூடற் கயற்கண்ணியே. [10]

    பெரியா னெவனம்மி னென்றே
    தருக்குபு பேரறத்தில்
    தரியா துழலும் தமியனை
    யாளத் தகுமுனக்கே
    கிரியா ளரசன் றவத்தா
    லுதித்தருள் கேகயமே
    கரியா னனத்தனைத் தந்தாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [11]

    மெய்யா வுரைக்கின் றனனா
    லவையிடை மேவுதற்கும்
    நையாத செம்பொருட் பாவோது
    தற்கு நவிலுதற்கும்
    எய்யா துழலுவ னின்னன்றி
    யோர்துணை யானறியேன்
    கையா வமுதக் கடலேதென்
    கூடற் கயற்கண்ணியே. [12]

    மாணாத புல்லர்கள் கூட்டங்
    கெழுமி மகிழ்ந்துநின்னைப்
    பேணாத நாயிற் கொடியே
    னெனினும் பெரிதுமஞ்சி
    நாணாது நின்னைச் சரண்புக்
    கமையினிந் நாயினுக்குக்
    காணாத காட்சி யருள்வாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [13]

    இன்னம்ப ராதி யிடந்தோறு
    நாளு மெழுந்தருளும்
    நின்னன் பருக்குப்பிச் சாடன
    நாமமென் நீக்கிலைநீ
    முன்னம் படிதனை யீந்து
    மிதனை மொழிந்திடுவாய்
    கன்னன் மொழியுடைக் கிள்ளாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [14]

    மருவழி யாத்தளிர் மாநிழ
    லூடென்றும் வாழ்பவன்சொல்
    இருபடி முன்ன மளித்தா
    னெனின்மற் றியைபறச்சொல்
    ஒருபடி நீயளித் திட்டதென்
    னேயிஃ துரைத்தருள்வாய்
    கருவழித் தாளு மமுதேதென்
    கூடற் கயற்கண்ணியே. [15]

    எல்லா வுலகு மளித்தர
    சாளு மியல்புடைநீ
    மல்லார் திணிபுயப் பாண்டிய
    னாட்டினை மட்டுமணி
    வில்லார் முடியணிந் தேயர
    சாளும் விதமென்கொலோ
    கல்லார்க் கணுகருந் தேனேதென்
    கூடற் கயற்கண்ணியே. [16]

    மலையத் துவச வழுதிக்குப்
    பின்னலை வாரிதிசூழ்
    வலையத்தை நீபரித் தாண்டருள்
    செய்த வகையறிந்தும்
    அலையத்தை மேவு மறிவோ
    ரபலையென் பாரதென்னே
    கலையத்தை நானவி லேன்வையைக்
    கூடற் கயற்கண்ணியே. [17]

    புவிபாலர் முன்னம் பொருந்தியஞ்
    சாது புகன்றிடவும்
    குவியாதென் புந்தி குசைநுனி
    போன்மிகக் கூர்ந்திடவும்
    தவியாது கேட்பவர்க் கெல்லா
    மினிதுறச் சாற்றவுநாற்
    கவிபா டவுமருள் செய்வாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [18]

    தனிவா யமல னிடம்பிரி
    யாதென்றுந் தங்கியநீ
    பனிவா யிமயப் பருப்பத
    ராசன்றன் பாவையென
    நனிவாய் விறற்பஞ்ச வன்பாவை
    யென்ன நணுகியதென்
    கனிவாய் மலர்ந்தருள் செய்வாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [19]

    நாவலன் றோழமை வாய்ந்தே
    கவிஞர்க ணாயகனாம்
    பாவல னென்றும் வருவா
    னளகைப் பதியரசற்
    காவல னாயர சர்க்கர
    சாயு மணைகுவனின்
    காவலன் யாவுநின் சீரேதென்
    கூடற் கயற்கண்ணியே. [20]

    புனல்வாய் பவர்சடைச் செம்மேனிப்
    பன்னகப் பூண்டிசைத்தூ
    சனல்வாய் விழிமுத் தலைவா
    யயிற்படை யண்ணலென
    இனல்வாய் மலையத் துவசன்
    பெருமகிழ் வெய்துறவெங்
    கனல்வாய் உதித்தனை யன்றோதென்
    கூடற் கயற்கண்ணியே. [21]

    முனைவாய்க் கவைச்சிகை யங்கியி
    னூடு முளைத்ததுதான்
    தினைவாய் புனத்துச் சிலம்பன்
    மகிழச் சிமயமலைச்
    சுனைவாய்ச்செந் தாமரை யூடுறு
    தோற்றந் துலக்கியதால்
    கனைவாய் அளிமுரல் பூங்காத்தென்
    கூடற் கயற்கண்ணியே. [22]

    சென்னி யிடைவிண் ணதிசூடு
    மண்ண றிருக்கரத்து
    வன்னிவைத் தானென்ன வோநீயுஞ்
    செங்கையில் வன்னிகொண்டாய்
    உன்னி வழிபடு வார்க்கொரு
    வாதரு ளுத்தமியே
    கன்னி யிளங்குயி லேபுனற்
    கூடற் கயற்கண்ணியே. [23]

    வரைவேந்தன் புத்திரி யாய்மரை
    யூடுமுன் வந்ததற்கும்
    தரைவேந்தன் புத்திரி யாய்த்தழ
    லூடு சனித்ததற்கும்
    நிரைவேந் துரிமைபெற் றேயர
    சாள னினக்குறுமால்
    கரைவேந்தர் போற்றும் பதத்தாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [24]

    அறையணி சார லிமவான்
    புரிந்த வருந்த வம்போல்
    நிறையணி செல்வச் செழியற்
    கிலைகொ னிகழ்த்திடுவாய்
    மறையணி நின்மணங் காணாமை
    யாற்பய வாரிவரு
    கறையணி கண்ட ரிடத்தாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [25]

    அனகப் பரமனுன் சாயற்கு
    நெஞ்சக மஞ்சுமென்றோ
    பனகப் பணியையஞ் சாதணிந்
    தானிதைப் பன்னியருள்
    எனகத் துயர்ப்பிணிக் கோர்மருந்
    தேயன்ப ரெய்ப்பில்வைப்பே
    கனகச் சிலம்படித் தேனேதென்
    கூடற் கயற்கண்ணியே. [26]

    எண்ணி னயனத் தினுக்குப்
    மானங்க ளெண்ணிலவால்
    மண்ணி னவற்றுட் கயலென்ன
    தன்மம் வகுத்ததுவோ
    பெண்ணின் மணிநின் றிருவிழி
    யோடுறப் பெற்றமையால்
    கண்ணின் மணியுறை பாவாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [27]

    முற்றா தரவு படைத்தேநின்
    பாத முளரிதனைப்
    பற்றா வனுதின மெண்ணுபு
    போற்றுமிப் பாதகன்பாற்
    சற்றா தரவும் படைத்தா
    யிலையித் தரணியுளோர்
    கற்றாவென் பார்நினை யென்னேதென்
    கூடற் கயற்கண்ணியே. [28]

    சீதங் கமழும் பிறையணி
    செஞ்சடைச் செல்வரொடும்
    ஏதங் கமழு மிருளாரென்
    னுள்ளத் தெழுந்தருள்வாய்
    வேதங் கமழும்செவ் வாயர்க்குப்
    பாலருள் வித்தகியே
    காதங் கமழும் பொழில்சூழ்தென்
    கூடற் கயற்கண்ணியே. [29]

    அண்டார் புரஞ்செற்ற வெம்மானோ
    டுன்னை யபேதமென
    விண்டார் சமழ்ப்புற நீகன்னி
    யாகி விரிதிரைசூழ்
    ஒண்டா ரணியை நெடுங்கால
    மாண்ட வுதுவென் கொலோ
    கண்டார் மொழியுடைக் கிள்ளாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [30]

    முன்ன மதனின் மணக்கோலங்
    கண்டிட முப்புவனம்
    மன்னு மனைவரும் வந்து
    மகத்திய மாதவன்றான்
    என்னந்த வுத்தரத் தேகா
    திருந்தன னென்றெய்வமே
    கன்னங் கறுத்த குழலாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [31]

    செய்தவ மேது மறியே
    னினைத்துதி செய்தறியேன்
    வெய்தவ மாற்ற விழைவே
    னினதருள் மேவுவனோ
    மைதவழ கோதண்ட வெற்பண்ணல்
    வாமம் வளர்கரும்பே
    கைதவன் செய்தவப் பேறேதென்
    கூடற் கயற்கண்ணியே. [32]

    மாட்சி பெறுகவி வல்லோர்கள்
    யாரும் வணங்கியுனை
    ஆட்சி யடைந்தனர் நாயடி
    யேனு மதுநினைந்தே
    நீட்சி பெறுமின் புறுகவி
    பாட நிகழ்த்துதற்குக்
    காட்சி யளித்தரு டென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [33]

    முளைமதி வேணிய னீயர
    சாளு முறைமையுன்னா
    தளைமணி மாட மறுகூடு
    பாத வலர்வெதும்ப
    வளைவிற்று மிந்தனம் விற்று
    முழன்ற வகையென்கொலோ
    களைதவிர்த் தாளு மமுதேதென்
    கூடற் கயற்கண்ணியே. [34]

    எல்லாஞ்செய் சித்த ரெனவேயக்
    காலத் தெழுந்தருளும்
    அல்லார் களத்தர்க்கிப் பொல்லானை
    யாளுமென் றன்னவரோ
    டுல்லாச மாக விருக்கும்
    பொழுதி லுரைத்தருள்வாய்
    கல்லார் தமையும் புரப்பாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [35]

    அற்பக னின்ற னடித்தா
    மரையிணைக் கன்புசெய
    நிற்பதன் றால்நெஞ்ச மென்செய்கு
    வேனிதை நிற்கவருள்
    வெற்பக மேய கிளியே
    வருண்மழை மின்னிடையே
    கற்பக மேதெள் ளமுதேதென்
    கூடற் கயற்கண்ணியே. [36]

    வெள்ளிப் பிறங்கலை யில்லாவில்
    லாக்கொண்டு மேருவினைத்
    துள்ளித் திரிவிடைச் சொக்கேசர்
    வீதிக டோறுமிரந்
    தள்ளிக் கொடுமென வேற்றிடு
    வாரைய மாங்கதென்னே
    கள்ளக் கயவர்க் கரியாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [37]

    ஒண்ணுதன் மங்கையர் போர்க்கோலந்
    தாங்கி யுடன்வரப்போய்
    விண்ணுதல் வெள்ளி விலங்கற்
    கணங்களை வென்றுபின்னும்
    அண்ணுதல் செய்து சினங்காட்டி
    நின்றிடு மாற்றல்கண்ட
    கண்ணுத லுண்மகிழ் வென்னோதென்
    கூடற் கயற்கண்ணியே. [38]

    மனையொடு மக்களு நிச்சய
    மென்று மனங்கொடுன்னைத்
    தினையள வேனு நினையாத
    பாவியைச் சிந்திப்பையோ
    வனைமறை யந்தமு மன்பர்க
    ணெஞ்சமும் வாழ்மணியே
    கனைகடல் சூழ்புவி யேத்துதென்
    கூடற் கயற்கண்ணியே. [39]

    உயல்விளை யாடு மனத்தாரை
    யென்று முறுதலின்றி
    அயல்விளை யாடு மனவண்டுன்
    பாத வலர்பற்றுமோ
    புயல்விளை யாடு மிமவான்
    பயந்திட்ட புத்தமுதே
    கயல்விளை யாடும் வயல்சூழ்தென்
    கூடற் கயற்கண்ணியே. [40]

    வண்டேன் முடியிம வானுக்கும்
    வீர வழுதிக்குநீ
    ஒண்டே னலர்வா யெரிவாய்
    மகளா யுதித்தமையால்
    பண்டே யுறுமடி யார்க்கௌி
    யாயெனப் பன்னுவதைக்
    கண்டேனுன் பாலடி யேன்புனற்
    கூடற் கயற்கண்ணியே. [41]

    திரையற்ற தோற்றக் கடல்வீழ்ந்து
    வான்கரை சேர்தலின்றி
    வரையற்ற துன்ப மடைந்தேனுக்
    காரருள் வைப்பதென்றோ
    உரையற்ற மாற்றுயர் பொன்னேமின்
    னேரிடை யுத்தமியே
    கரையற்ற வின்பக் கடலேதென்
    கூடற் கயற்கண்ணியே. [42]

    ஏகுற்ற வென்மன வானர
    முன்ற னிருகமல
    வாகுற்ற பாத மலர்பற்று
    மோவிம வான்மகளாய்ப்
    போகுற்ற செல்வி புராதனன்
    வாமம் பொருந்தனமே
    காகுத்தன் சோதரி தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [43]

    குயவாய் மகளிர் நலவாய்
    நுடங்கு கொடியிடைவாய்
    நயவா யுறுசெய்ய வாய்நசை
    மேவுபு நான்மெலிந்தேன்
    பயவாய் விழுந்து வருந்தா
    வணமருள் பாலிப்பையே
    கயவாய்க்கு முத்தி தருங்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [44]

    கூற்றான தொன்றுண்டென் றெண்ணாது
    வீணசை கொண்டுநல்லோர்த்
    தூற்றா வுழலுமிந் நாயேனை
    யாளத் துணிவைகொல்லோ
    நீற்றா னிடமுறு நின்மலை
    யேபன் னியமமுந்தென்
    காற்றான் மணங்கமழ் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [45]

    சென்னித் தலத்து மதியணிந்
    தாடுஞ் சிவபெருமான்
    வன்னித் திருநய னத்தான்
    மதன்றனை மாய்த்ததுதான்
    என்னித் திலவெண் ணகையா
    யியம்புதி யென்றனக்குக்
    கன்னிப் பெடையனப் பூந்தடக்
    கூடற் கயற்கண்ணியே. [46]

    ஆரா வமுத மனையநின்
    சீரை யடிக்கடியான்
    பாரா யணஞ்செயச் செய்வாய்பின்
    னாற்கவி பாடச்செய்வாய்
    நாரா யணனுக் கருமைச்
    சகோதரி நாரணிநீர்க்
    காராருஞ் சோலை புடைசூழ்தென்
    கூடற் கயற்கண்ணியே. [47]

    ஆண மிலாத மடவோர்கள்
    கூட்டத் தகப்பட்டுளக்
    கோணன் மரீஇக்குலை வுற்றன
    னாலைய கோவென்செய்வேன்
    பேண வருமருந் தேயிம்
    மயக்கப் பிசாசொழியக்
    காண விழைந்தனன் றென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [48]

    திருவளிப் பாய்மிடித் தீர்வளிப்
    பாயெனைச் சேர்ந்தவருக்
    குருவளிப் பாய்நல் லுணர்வளிப்
    பாய்கவி யோதத்திறம்
    மருவளிப் பாய்நன் மனமளிப்
    பாய்மிக வாதைசெயும்
    கருவழிப் பாய்புனற் றென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [49]

    எண்ணிற் கடங்குத லின்றாற்
    றுயர மிருமிடியும்
    புண்ணிற் றழற்சுடு கோல்நுழைந்
    தாங்குப் புகுந்தலைக்கும்
    மண்ணிற் றுணையுனை யல்லாம
    லாரிதை மாற்றியருள்
    கண்ணிற் பருகுசெந் தேனேதென்
    கூடற் கயற்கண்ணியே. [50]

    தீதுந் துயர்செயுங் காமாதி
    யாறுமென் சிந்தைநின்று
    போதும் படிக்குக் கருணைசெய்
    வாய்முப் புவனமுமீன்
    றேது முதுமை யுறாதுறை
    கன்னி யிளமயிலே
    காதும் பவப்பகை யேபுனற்
    கூடற் கயற்கண்ணியே. [51]

    ஓயாது பாழுக் குழைத்தே
    நலத்தை யொழித்துநன்னூல்
    ஆயாது வீயு மடியேனைச்
    சீறி யகற்றிவிடேல்
    தேயா மதிமுகச் செவ்வா
    யருள்விழிச் சிற்றிடையாய்
    காயா மலர்நிறத் தாயேதென்
    கூடற் கயற்கண்ணியே. [52]

    ஆவா மனத்திற் கடிமைப்பட்
    டேபுல னைந்தின்வழி
    ஓவா துழலு மடியேற்குன்
    சேவை யுறுதலுண்டோ
    நீவா வருள்புரி வாயெனப்
    போற்றி னிலத்தொருவர்
    காவாருண் டோமலர்க் காவார்தென்
    கூடற் கயற்கண்ணியே. [53]

    வெங்கைக் கடகளி றன்னாரோ
    ரைவர் மெலிவுறுத்தச்
    சங்கைக் கரிய துயரடைந்
    தேனெனைத் தாங்குதியால்
    செங்கைப் பசுங்கிளித் தாயே
    யடியர்கள் சிந்தையுறை
    கங்கைச் சடாதரன் வாழ்வேதென்
    கூடற் கயற்கண்ணியே. [54]

    வானேய் கரமுடை யாயென
    மூடரை வாழ்த்திநொந்து
    யானேய் துயரத்திற் கெல்லையுண்
    டோமுக்க ணெந்தையிடத்
    தேனே திசைதொறுஞ் சென்றே
    யமரர்ச் செயித்தவிறற்
    கானேய் குழற்குயி லேகூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [55]

    சமலனின் றாளிணை தன்னை
    யுளத்திற் றரித்துறையும்
    அமலரை யிம்மி யளவேனுங்
    கூடி யறிந்திலனால்
    விமல மடைகுவ தென்றுகொ
    லோவலை மெல்லியல்வாழ்
    கமல மனையகண் ணாய்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [56]

    தெம்முகஞ் சென்று சிறுநகை
    செய்து சினந்தெரித்த
    ஐம்முகன் றன்னோ டமரேற்ற
    மேன்மை யறிவன்கொலோ
    வெம்முக வேற்கை யறுமுகத்
    தானையும் வெய்யதுதிக்
    கைம்முகத் தானையு மீன்றாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [57]

    ஊனப் பிறவி பலகோடி
    மேவி யுறுகணடைந்
    தேனப்பிறவித் துயர்தனை
    மாற்றிடத் தெண்டனிட்டேன்
    வானப் பிறைநுத லன்னா
    யிராவணன் வாழ்த்துமறைக்
    கானப் பிரிய னிடத்தாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [58]

    மட்டுறு கூந்தல் மடவார்
    நயன மயல்வலையிற்
    பட்டுறு நெஞ்சம் பலவிடத்
    தோடுதல் பன்னவும்யான்
    எட்டுணை யேனு மிரங்கா
    திருந்தனை யீதழகோ
    கட்டுரைத் தேனினிக் கூறேன்றென்
    கூடற் கயற்கண்ணியே. [59]

    பேணா தவனின் றிருவடித்
    தாமரை பேணியன்பு
    பூணா தவனின் னடியார்க்கண்
    டேயச்சம் பூண்டுமிக
    நாணா தவனெனி னுந்துணை
    வேறிலை நாயன்றுயர்
    காணாத வாறென் கொலோகூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [60]

    அசடர்கள் கூட்டங் கெழுமி
    யவருள் ளவாவலுற
    நிசமணு வேனு மிலாம
    னவின்று நிதநிதமும்
    வசைமிகத் தேடி மெலிந்தேனந்
    தோநல் வழியறியாக்
    கசடனை ஆள்வைகொல் லோகூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [61]

    இரியாத தீப்பழி யெய்தின
    னானின்னன் பெள்ளளவும்
    தரியாத பாவி யெனினும்
    விடேல்விடிற் றாரணியில்
    உரியா ரெவர்நின்னை யல்லாது
    பின்னு முரைப்பதென்னே
    கரியா னனத்த னனையேதென்
    கூடற் கயற்கண்ணியே. [62]

    எண்ணிய வெண்ணிய வெல்லாந்
    தவிரவிவ் வேழைதனைப்
    பண்ணிய கூத்திவை போதுமன்
    னேயினிப் பார்த்தருள்வாய்
    புண்ணியர் முச்சுடர்க் கண்ணினர்
    வாமத்துப் புத்தமுதே
    கண்ணிய பல்வளத் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [63]

    ஆமனை நீரென் றுலுத்தரைப்
    பாடி யவர்வசிக்கும்
    மாமனை தோறும் புகுந்தே
    சலிக்கும் வறியவனை
    யோமனை நின்னை மணவாள
    ரைக்கவி யோதச்செய்வாய்
    காமனைக் காய்ந்தவர் வாழ்வேதென்
    கூடற் கயற்கண்ணியே. [64]

    ஓதிய துன்பங்கட் கெல்லையுண்
    டோவிவை யுற்றடியேன்
    நீதி யணுவு மிலாதே
    யொழிந்தன னீயருள்வாய்
    வேதியர்க் காதியன் வாமத்து
    வாழ்விளக் கேயவுணர்க்
    காதிய வேற்கர னன்னாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [65]

    வாய்ந்த மதுர கவிபா
    டவுமவ் வளக்கவியை
    ஏய்ந்த புலவ ரிடைப்பிர
    சங்கம் மியற்றவுஞ்சீர்
    வேய்ந்த வவர்கள்கொண் டாடவு
    நீயருள் வெய்யவரைக்
    காய்ந்த கருணைக் கடலேதென்
    கூடற் கயற்கண்ணியே. [66]

    பொருத்த முறுதமிழ்ப் பன்னூலு
    மாய்ந்தென்னோர் போதுநில்லா
    துருத்த மறவிக் கடற்படிந்
    தேயல்ல லுற்றுமிக
    வருத்த மடைந்தன னற்கவி
    பாடிட வாஞ்சையுற்றேன்
    கருத்தை முடித்திகண் டாய்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [67]

    திடனார் தமிழ்மொழிப் பன்னூல்க
    ளாய்ந்துந் தௌிவின்றியுள்
    மடனார்ந்த வென்னை விடாதே
    யுனையுமிம் மண்சுமக்கும்
    படநாகம் பூண்ட பரனையும்
    பாடும் படிக்கருளல்
    கடனா முனக்கனை யேகூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [68]

    மாவித் தகமுறு நின்றிருக்
    கோல மனம்பொருந்தல்
    ஓவிப் புவியி லுழல்வேனை
    யாள வுறுவைகொல்லோ
    வாவித் தனிப்பெரு வாளைதென்
    றாற்றின் வகையுதிர்க்கும்
    காவித் தடம்புடை சூழுந்தென்
    கூடற் கயற்கண்ணியே. [69]

    ஊனம் புரியும் பொறியைந்தின்
    சேட்டை யொழித்துநித்தம்
    மோனம் புரியும் படிக்குறு
    மோவிந்த மூடனுக்கு
    வானம் புரியு மலர்ப்பதத்
    தாய்மது வண்டருந்திக்
    கானம் புரியு மலர்ப்பொழிற்
    கூடற் கயற்கண்ணியே. [70]

    சீருந் தளையுஞ் சிறந்தே
    பொருட்சுவை சேரகத்தின்
    நாரு நவரச மும்பெறு
    பாடல் நவின்றிடுதற்
    கோரு முனம்வர நீயருள்
    வாய்மிசை யொண்பிறையும்
    காரும் படியு மதில்சூழ்தென்
    கூடற் கயற்கண்ணியே. [71]

    ஆவா பிறவிக் கடல்வீழ்ந்து
    மாழ்கி யவலமுறீஇக்
    காவா ரிலாது வருந்துமிந்
    நாயைக் கடைக்கணிப்பாய்
    தேவாதி தேவ ரிடத்தே
    வளருந் திகழொளியே
    காவார் மதுரைத் திருநகர்
    வாழுங் கயற்கண்ணியே. [72]

    விஞ்சத் தனங்களை யீட்டிட
    வாசையில் வீழ்ந்துழலும்
    நெஞ்சத்த னின்னை யடுத்தேன்
    புலவர்த நேரினின்று
    செஞ்சொற் றமிழ்க்கவி யோதிட
    வாரருள் செய்திடன்னே
    கஞ்சத் தடம்புடை சூழுந்தென்
    கூடற் கயற்கண்ணியே. [73]

    பொய்யன்புல் லோர்கள் குழுவதை
    நாளும் புகன்றுழலும்
    வெய்யன்பொல் லாத வினைபுரி
    வீணன் விழைந்தியற்றும்
    குய்யன் கரிய விழிமாத
    ராசையைக் கொண்டுழலும்
    கையனென் றாலு மருள்வாய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [74]

    விண்ணெதி ரின்பமுஞ் சும்மை
    மிகுத்த விரிகடல்சூழ்
    மண்ணெதி ரின்பமும் வேண்டேனின்
    பாத மரைமலரை
    எண்ணெதி ரெண்ணி யிருப்பே
    னருளொடு மேழையின்றென்
    கண்ணெதிர் தோன்றுவ தென்றோதென்
    கூடற் கயற்கண்ணியே. [75]

    வன்னெஞ்சர் தம்மை மதித்தேநின்
    பேரை மறந்துழலும்
    புன்னெஞ்சன் மாதர்கள் போகத்தை
    நித்தம் புகன்றவர்பாற்
    சென்னெஞ்சன் மூவகைத் துன்ப
    நினைத்தல்செய் யாதிருக்கும்
    கன்னெஞ் சனைக்கை விடாதேதென்
    கூடற் கயற்கண்ணியே. [76]

    தண்டேன் மொழிமனை யன்னை
    பிதாதமர் தம்முறவை
    விண்டேன்மற் றொன்றையும் வேண்டே
    னிவர்தமை மேவுதலால்
    உண்டே யெனிற்பெருந் துன்பமுண்
    டாலென் றுறுதியதாக்
    கண்டேனெஞ் சூடுநிற் கொண்டேன்றென்
    கூடற் கயற்கண்ணியே. [77]

    நாவார நின்னை நவிலா
    திருந்துபுன் னாரியர்பால்
    ஓவா திருப்பினு மிவ்வீ
    ணனையரு ளோடிங்ஙனே
    நீவா வெனவழைத் தானந்த
    வாரி நிறையச்செய்து
    காவா யெனிற்றுணை யாவர்தென்
    கூடற் கயற்கண்ணியே. [78]

    வானா தரித்திலன் மண்ணக
    மேவி மருவுமின்பம்
    தானா தரித்திலன் சாதுகை
    மாந்தர்கள் சங்கமுற
    நானா தரித்தனன் மெய்ம்மையி
    தேயிங்ங னல்கு கண்டாய்
    கானார் பொழில்புடை சூழுந்தென்
    கூடற் கயற்கண்ணியே. [79]

    சீரினை மேவிய செந்தமிழ்
    கற்றுந் தௌிதலின்றிப்
    போரினை மேவிய வீணனைக்
    காத்தருள் புத்தமுதே
    ஆரினை மேவிய வேணியன்
    வாமத் தமரனமே
    காரினை மேவிய கூந்தாறென்
    கூடற் கயற்கண்ணியே. [80]

    மெய்யாக நானவில் விண்ணப்ப
    மீதிந்த மேதினிமேல்
    வையா தினியென்னை நின்பாதப்
    போதிடை வைத்தருள்வாய்
    நெய்யார் கருங்குழன் மானே
    பசுந்தத்தை நித்தமுறை
    கையாயை யானனன் வாழ்வேதென்
    கூடற் கயற்கண்ணியே. [81]

    மெச்சிப் பதிதர் செயறனை
    வீண்வழி மேவலுறும்
    துச்சன் றனையு னருட்கிலக்
    காக்கித் துயர்களையாய்
    உச்சிப் பிறையுடை யானிட
    மேய வொருகுயிலே
    கச்சிப் பதியிற் கரும்பேதென்
    கூடற் கயற்கண்ணியே. [82]

    பேண வமைபுயற் கூந்தலும்
    பாதிப் பிறைநுதலும்
    மாண வமைகணை நோக்கமுஞ்
    சாந்த மதிமுகமும்
    ஏண மமைந்த வபய
    வரத விருகரமும்
    காண வருள்புரி தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [83]

    ஆவா மிகவு மவமதிப்
    பாரோ டலைந்தலைந்து
    நாவாய் புலர்ந்து திரிவே
    னொருவழி நண்ணச்செய்து
    நீவா வெனக்கவி மாரி
    பொழிந்திட நீயருளிக்
    காவா திருப்பதென் றென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [84]

    அத்தனைக் கொன்ற வழிதகை
    யாளனை யன்றருளும்
    நித்தனைக் கூறிடு நீயருள்
    சற்றிந்த நீசன்றன்பால்
    வைத்தனை யென்னி லெனைப்பொரு
    வாரெவர் மாமயிலூர்
    கத்தனை யீன்ற வனையேதென்
    கூடற் கயற்கண்ணியே. [85]

    போற்ற வறிந்தில னின்னைமுன்
    னோர்கள் புகன்றதுதி
    சாற்ற வறிந்திலன் றாழ
    வருந்திலன் றண்மலர்கள்
    தூற்ற வறிந்தில னென்னையு
    மாளத் துணிகுவையோ
    காற்ற லறுவளத் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [86]

    வஞ்ச மலரு முளத்தார்கள்
    கூட்ட மருவிப்பின்னும்
    நஞ்ச மலரும் விழியா
    ரெழிலை நயந்துதுயர்
    நெஞ்ச மலருங் கொடியேனைக்
    காத்திட னின்கடனே
    கஞ்ச மலரும் புனற்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [87]

    குன்றைக் குழைத்த பரனா
    ரகலங் குழைத்தருணீ
    இன்றைக் கடியன் மனங்குழை
    யாமைமற் றென்னையெனைப்
    பின்றைப் புரப்பவர் யாவர்கண்
    டாய்பசுப் பேசிடிற்றன்
    கன்றைப் புரத்தல் கடனேதென்
    கூடற் கயற்கண்ணியே. [88]

    மிடியாது மின்றி யிருப்பவுங்
    கல்வி விதமனைத்தும்
    வடியாது நித்தம் பெருகவுஞ்
    செந்தமிழ் வான்கவிதை
    ஒடியாது நித்தம் நவிலவுஞ்
    செய்தெனை யுத்தமிநீ
    கடியா தருள்புரி தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [89]

    மாப்பது மாசனி தவ்வையின்
    சார்பையென் மாட்டினிநீ
    சீப்பதென் றோவென்றன் வல்வினை
    யாய திரள்வனத்தைத்
    தீப்பதென் றோநின்றன் சீரடி
    யாரிடைச் சேர்த்தெனைநீ
    காப்பதென் றோவருட் டென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [90]

    எல்லாச் செயலு முனதரு
    ளாகவு மென்னையென்னே
    அல்லாப்ப விட்டனை யென்செய்கு
    வேனினி யையங்கொலோ
    பொல்லாக் கொடுமன நின்றில
    தாலருள் பூண்டமனம்
    கல்லாச் சமைந்ததென் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [91]

    சாணாம் வயிற்றுக்குப் பல்கோடி
    தீமைக டாம்புரிந்து
    மாணா வுலுத்தரை வள்ளன்மை
    யீரென்று வாழ்த்திச்சற்றும்
    நாணா துழல்கின்ற நாயேன்
    படுதுய ரங்கனைத்தும்
    காணா திருப்பதென் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [92]

    வன்னெஞ்சக் கள்வருக் குள்ளே
    யொளித்து வழிபட்டுறு
    நன்னெஞ்ச வன்பர்க்குத் தோன்றுமன்
    னேயிந் நலமிலியாம்
    புன்னெஞ்சத் தீய னினைந்தே
    பணிந்து புகழவுநீ
    கன்னெஞ்சை யாகிய தென்னோதென்
    கூடற் கயற்கண்ணியே. [93]

    செற்றார் புரஞ்செற்ற தேவேச
    னோடென்றன் சிந்தையிடை
    உற்றா தரவி னுறைந்தருள்
    வாய்விண் ணுலகுரிமை
    பெற்றானைத் தாக்கும் விருத்திரப்
    பேயைப் பெயர்த்ததென்று
    கற்றார் வழுததுறுந் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [94]

    விரிசா கரத்தி னிடைத்துரும்
    பென்ன மிகவலையும்
    பரிசார்ந்த நெஞ்சை நினையே
    நினைக்கப் பணித்தருள்வாய்
    தெரிசாது சங்க சிரோமணி
    சீறிடத் தேய்ந்துழலும்
    கரிசாபந் தீர்த்தருள் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [95]

    தாமம் வனைகுழன் மங்கையர்
    கொங்கைச் சயிலநினைந்
    தேம மிலேனைப் புரந்தாள
    நீசிறி தெண்ணுவையோ
    தேமலர்ச்சோலை மணவூ
    ருறைகுல சேகரன்செய்
    காமர் நகரெனுந் தென்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [96]

    சௌரியம் பேசி யுடல்பொரு
    ளாவி சதமென்றெங்கும்
    பௌரிகொ டீய கொடியேனை
    யாண்டருள் பண்ணுவையோ
    ஒளரச னாக வயில்வே
    லனைப்பெற்ற வன்னைநலக்
    கௌரிய னீன்ற மயிலேதென்
    கூடற் கயற்கண்ணியே. [97]

    எண்களிக் குந்நின தம்புயத்
    தாளினை யெண்ணியெண்ணி
    மண்களிக் குஞ்சுவை சேர்கவி
    பாட வரந்தருவாய்
    விண்களிக் குங்கயி லைக்கிரி
    நாதனை மேவிமணம்
    கண்களிக் கச்செயுங் கண்ணேதென்
    கூடற் கயற்கண்ணியே. [98]

    சாலாத தீயரைச் சார்ந்தே
    துதிபல சாற்றிநின்றன்
    பாலா தரவு சிறிதுமி
    லேனைப் பதைப்பவிடேல்
    மேலா மமல னிரசத
    மன்றில் வியாக்கிரத்தின்
    காலானுக் காடி யருள்கூடல்
    வாழுங் கயற்கண்ணியே. [99]

    கண்டோ மொழிமுலை செண்டோ
    வெனமங் கையரைநிதம்
    விண்டோய் விலாதுழல் வீணணை
    நீகை விடேலமலாய்
    குண்டோ தரன்பசி தீரவெண்
    சோறு கொடுத்துணலைக்
    கண்டோ விலாமகிழ் கொண்டோய்தென்
    கூடற் கயற்கண்ணியே. [100]

    அங்கயற்கண்ணி மாலை

    (தரவு கொச்சகக்கலிப்பா)

    சீறுதரு மூடர்கடஞ் சேவைகளே செய்தொழுகிப்
    பேறுதரு நின்னருளைப் பேணேனை யாள்குவையோ
    கூறுதரு குறட்கன்னக் குழியினொடு வையையெனும்
    ஆறுதரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [1]

    குன்றுவரு கொங்கையுடைக் கோதையர்கள் மேனிதொறும்
    சென்றுவரு தீமைமிகு சிந்தையனை யாள்குவையோ
    கன்றுவரு மானணிகைக் கண்ணுதலா லெழுகடலும்
    அன்றுவரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [2]

    உண்ண லுடுத்த லுறங்கன் முதலியவே
    நண்ணலுறு மிக்கொடிய நாயேனை யாள்குவையோ
    விண்ணடைந்தாங் கின்பநுகர் வீரன்மல யத்துவச
    அண்ணல்வரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [3]

    குன்றுவளை மலர்க்கரத்துக் கோவையுநின் னையுமதியா
    தின்றுவளைக் கரமடவார்க் கிரங்குமெனை யாள்குவையோ
    சென்றுவளை புகழ்மிகுமோர் செழியனிந் திரன்முடிமேல்
    அன்றுவளை யெறிகூடல் அங்கயற்க ணாயகியே. [4]

    கடித்தவெயி றுடைச்செங்கோற் காலன்றண் டனைகருதா
    தொடித்தவற வினைமிகவு முடையேனை யாள்குவையோ
    கடித்தபொழில் மேருவினைக் கைச்செண்டி னுக்கிரன்முன்
    அடித்தபெரும் பொழிற்கூடல் அங்கயற்க ணாயகியே. [5]

    வெங்கணர்கண் டீவினையே விழைந்துன்சந் நிதியணுகா
    திங்கணுக ரறக்கடைசெய் திருப்பேனை யாள்குவையோ
    எங்கணரு ளெனுமுனிவர்க் கீரிருவே தப்பொருளை
    அங்கணனா ரருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [6]

    குயிலோ கிளியோவிக் கோதையர்கள் மாற்றமென்று
    மயலே மிகுத்துழலிவ் வஞ்சகனை யாள்குவையோ
    வெயிலாரும் பூணணிகள் மேவுக் கிரவரசா
    அயிலோன் வருகூடல் அங்கயற்க ணாயகியே. [7]

    இன்பினொடு நின்பெருமை யெண்ணியொழு குதலின்றித்
    துன்பினொடு நாளகற்றுந் துன்மதியை யாள்குவையோ
    வன்பினொடு மெம்பெருமான் வளைசெண்டு வேலொருசேய்க்
    கன்பினொடு மருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [8]

    வெயில்விடுத்த செம்மேனி விமலனொடு நினைநினைப்போர்ப்
    பயில்விடுத்த முழுமூடப் பாதகனை யாள்குவையோ
    மயில்விடுத்த வுக்கிரனாம் வழுதியலை கடல்சுவற
    அயில்விடுத்த திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [9]

    முக்காலங் களுமுணரும் மூதறிஞர் தமைச்சார்தல்
    எக்கால மெனநினையா திருப்பேனை யாள்குவையோ
    நக்கால நுகர்ந்தபிரா னவமணியி னியலமைச்சர்க்
    கக்காலம் பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [10]

    வெம்புபசி பிணிதாகம் வெவ்வறுமை யடைந்துன்னை
    நம்புதலி லாதுழலு நாயேனை யாள்குவையோ
    பம்புதிரைக் கடலதனைப் பசுபதிவே ணியினுறுநான்
    கம்புதமார் தருகூடல் அங்கயற்க ணாயகியே. [11]

    பாகியலு மொழிமடவார்ப் பற்றிநினைப் பற்றாது
    போகியபுல் லருக்கரசாம் புன்மையனை யாள்குவையோ
    வாகியல்விண் மழைதடுக்க மழைமுகில்கள் நான்மாடம்
    ஆகியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [12]

    பாடியலுந் தமிழ்நூல்கள் பலபடித்து மறிவின்றி
    வாடியநெஞ் சகமுடைய மாண்பிலியை யாள்குவையோ
    தேடியமா றனக்கரியர் சித்தரென வந்தெல்லாம்
    ஆடியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [13]

    தேனையுறழ் சுவைமிகுத்த செய்யுளினின் றனைத்துதியா
    தேனையதி பாதகனை யீனனைநன் காள்குவையோ
    மானையணி மலர்க்கரத்து வள்ளலார் கழையினைக்கல்
    லானையுணப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [14]

    குன்றெய்து கொங்கையுடைக் கோதையர்கட் காளாகி
    இன்றெய்தும் பழியினனா யிருப்பேனை யாள்குவையோ
    மன்றெய்து நடமுடையார் வல்லமணர் விடுகளிற்றை
    அன்றெய்து செறுகூடல் அங்கயற்க ணாயகியே. [15]

    மருத்தகுழன் மடவார்கள் வாஞ்சைமரீஇ மனமலையும்
    ஒருத்தனைக்கா சினிச்சுமையா வுற்றேனை யாள்குவையோ
    விருத்தன்முதல் மூன்றுருவ மேவியருட் பரனாடும்
    அருத்தியுறு வளக்கூடல் அங்கயற்க ணாயகியே. [16]

    வாடிமன மயங்காதுன் மலர்ப்பதத்தை யின்கவியாற்
    பாடிநிதங் களித்திடுமா பயிற்றியெனை யாள்குவையோ
    தேடிவரு புகழரச சேகரற்குப் பரன்மாறி
    ஆடியருள் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [17]

    வெஞ்சினக்கூற் றுவன்புரியும் வெந்தண்டம் மருவாதுன்
    கஞ்சமலர்ச் சேவடியைக் கருதேனை யாள்குவையோ
    நஞ்சினழ குறுகளத்து நம்பனொரு பெண்பழிக்கா
    அஞ்சினவான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [18]

    நீண்டவிழி மங்கையரை நேசித்து நினைவணங்கா
    தீண்டவறக் கடைபுரிந்தே யிழிந்தேனை யாள்குவையோ
    மாண்டதிருத் தந்தைதனை மாய்த்தனையைப் புணர்ந்தோனை
    ஆண்டருளுந் திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [19]

    துங்கமுறு குருவடியைத் தொழலின்றி நாள்கழியாப்
    பங்கமுறு பழிமிகுத்த பதகனையு மாள்குவையோ
    புங்கமுறு குருமனையைப் போற்றாது விழைந்தோன்றன்
    அங்கமறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [20]

    இரவைநிகர் குழல்வாட்க ணேந்திழையார் தமைவிழைந்தே
    உரவையகன் றலக்கணுறீஇ யொழியேனை யாள்குவையோ
    பரவையமண் பதகர்விறற் பாண்டியன்மேல் விடுத்தவிட
    அரவையறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [21]

    பாவையுரைத் துனதுமலர்ப் பதம்பணித லொழிந்திந்த
    நாவைவறி தேசுமக்கும் நாயேனை யாள்குவையோ
    கோவைவெறுத் தேயமணக் கொடியர்விடுத் திடவந்த
    ஆவையொழித் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [22]

    குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்
    இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ
    தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா
    அழைத்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [23]

    இளித்த செயலு மிழிவுடையோர்ச் சேர்ந்து
    களித்த மனமுமுடைக் கள்வனையு மாள்குவையோ
    ஒளித்த நிதிய முலவாக் கிழியொருவற்
    களித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [24]

    இடைந்த செயலுநனி யேக்கறவும் புல்லருக்
    குடைந்த மனமு முடையேனை யாள்குவையோ
    மிடைந்த வளைகடமை மெய்ப்பர மன்வீதி
    அடைந்து பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [25]

    பொருளும் மனையும் புதல்வரும் மெய்யென்று
    மருளுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
    தெருளுமட வார்க்கட்ட சித்தி களைப்பெம்மான்
    அருளுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [26]

    படையாள் விழியவரைப் பார்த்துருகி நின்னை
    உடையா ளெனமதியா துற்றேனை யாள்குவையோ
    நடையாள் வளவனுக்கு நாத னருளிவிடை
    அடையாளஞ் செய்கூடல் அங்கயற்க ணாயகியே. [27]

    கருத்து மொழியுமிந்தக் காயமும் வேறாகி
    இருத்துந் துயர்க்கிடமா மீனனையு மாள்குவையோ
    செருத்துன் படைபடைக்குத் தேவன் புனல்வைத்
    தருத்தும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [28]

    பாற்றுங் கொடுமை படைத்தே யறவழியை
    மாற்றுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
    போற்றுந் தெரிவை பொருட்டமலன் செம்பொன்மிக
    ஆற்றுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [29]

    பாழ்த்த புறச்சமயப் பாழை யடைந்துபிறர்
    தாழ்த்த வருந்தும் தமியேனை யாள்குவையோ
    காழ்த்த பகையுடைய காவலனைப் பாம்புரியில்
    ஆழ்த்தும் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [30]

    பலவா தனைமருவிப் பற்றிகந்து நெஞ்சம்
    சுலவா வுழலுமிந்தத் துட்டனையு மாள்குவையோ
    உலவாநெற் கோட்டை யொருவற் கொருவனருள்
    அலையார் புனற்கூடல் அங்கயற்க ணாயகியே. [31]

    காமனென்ன வீனர்தமைக் கட்டுரைத்து மிக்குழலும்
    தீமனத்த னாய சிறியனையு மாள்குவையோ
    மாமனென வந்து வழக்குரைத்த வேணியிடை
    ஆமணிவோன் மணிக்கூடல் அங்கயற்க ணாயகியே. [32]

    மருளார் மனத்துன் மலரடியைப் பேணா
    திருளார் குழுவோ டிணங்குமெனை யாள்குவையோ
    தெருளார் வரகுணர்க்குச் சிவலோகங் காட்டியோர்
    அருளாளர் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [33]

    சித்திர மென்னத் திகழ்மடவார்க் காளாகிக்
    குத்திர மேய கொடியேனை யாள்குவையோ
    பத்திரற்கு வீணை பரிந்தே பகைவெலுமால்
    அத்திரர்வாழ் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [34]

    நேரலர்கட் கஞ்சியுனை நிமிடப் பொழுதேனும்
    ஓரலனாய்த் தீமைமிக வுற்றேனை யாள்குவையோ
    சேரலன்பாற் செல்லத் திருமுகம்பா ணர்க்கருளி
    ஆரணிகோ வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [35]

    நையமன நின்றனுரு நாடிப் பணிந்துதுதித்
    துய்ய வறியா துழல்வேனை யாள்குவையோ
    செய்யமனப் பாணர்க்குச் சேர்மழையிற் பொற்பலகை
    ஐயனிடு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [36]

    வசையாருந் தீய வழிமருவி நின்பால்
    நசையாது மின்றியுறை நாயேனை யாள்குவையோ
    இசைவாது வெல்லவோ ரேழைக் கருள்செய்
    தசையா னுறைகூடல் அங்கயற்க ணாயகியே. [37]

    உன்னை யுனதருளை யுன்னா தனுதினமும்
    தன்னை மதித்துத் தருக்குமெனை யாள்குவையோ
    மன்னை வுறச்செய்த வன்றிக் குருளைகளுக்
    கன்னையனை யான்கூடல் அங்கயற்க ணாயகியே. [38]

    தேக்கிய வின்பவழி தேராது துன்பவழி
    ஆக்கிய வொப்பரிய வற்பனையு மாள்குவையோ
    பாக்கிய வேனப் பறழ்களை மந்திரியா
    ஆக்கிய கூடனகர் அங்கயற்க ணாயகியே. [39]

    நின்னாம மென்று நியம முறச்செபியா
    துன்னா ரருளைவிழை வுற்றேனை யாள்குவையோ
    கொன்னாருங் காரிக் குருவிக் கருள்புரிந்த
    அன்னான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [40]

    காரை யுறழ்கரத்தா யென்று கசடர்கடம்
    பேரை யியம்பியலை பேதையனை யாள்குவையோ
    நாரை யுறமுத்தி நல்கி யருள்புரிந்த
    ஆரையணி வார்கூடல் அங்கயற்க ணாயகியே. [41]

    பாலவாய் மேவுதமிழ்ப் பாக்களினுன் றாள்பரவா
    தேலவா யோதியரை யேத்துமெனை யாள்குவையோ
    சாலவா யொருவழுதி தான்காணப் பாம்புசுலாய்
    ஆலவா யாங்கூடல் அங்கயற்க ணாயகியே. [42]

    வம்பெய்து கொங்கை மடவாரைப் போற்றியுனை
    நம்பெய்த லில்லாத நாயினையு மாள்குவையோ
    கும்பெய்து தானையுடைக் கோனஞ்சச் சுந்தரப்பேர்
    அம்பெய்த கோன்கூடல் அங்கயற்க ணாயகியே. [43]

    தேன்றோய் சுவைத்தமிழைத் தெள்ளித் தௌியாது
    மான்றோய் விழியால் மயங்குமெனை யாள்குவையோ
    ஏன்றோ ருயர்ந்தோ ரிழிந்தோ ரெனும்பலகை
    ஆன்றோர்க் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [44]

    களித்த வுளமுங் கசடர்தமைச் சொல்வாயும்
    ஒளித்த நடையு முடையேனை யாள்குவையோ
    தளித்ததொடைப் பெம்மான் றருமிக்குப் பொற்கிழியன்
    றளித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [45]

    சித்தநா வுடல்நின்பாற் செலுத்திவழி படலின்றி
    மத்தனாய்த் திரிந்திடுமிம் மாண்பிலியை யாள்குவையோ
    கத்தனார் கீரனைநீர்க் கரையேற்றி யாண்டருளும்
    அத்தனா ருறைகூடல் அங்கயற்க ணாயகியே. [46]

    இகத்தியலும் வழியிதுவென் றெண்ணாம லின்பனைத்தும்
    உகத்தியங்கி நாள்கழிக்க லுற்றேனை யாள்குவையோ
    மிகத்தியங்கு கீரனுக்கு விமலரரு ளாலியலைந்
    தகத்தியனார் நவில்கூடல் அங்கயற்க ணாயகியே. [47]

    துங்கத்தார் நின்கோயில் தொண்டுசெயா துட்டருக்கிப்
    பங்கத்தார்க் காளாமிப் பாவியினை யாள்குவையோ
    சங்கத்தார் மாறு தணித்தே யராவணிந்த
    அங்கத்தார் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [48]

    இணங்குமற வாற்றினிடை யேகாத மூடர்
    கணங்குழுமி நிற்பாடக் கல்லேனை யாள்குவையோ
    பிணங்குமிடைக் காடனுளப் பேதகற்றி ஆண்டவனோ
    டணங்கரசாய்க் கூடல்வளர் அங்கயற்க ணாயகியே. [49]

    மலைவீசு முத்தே மயிலே மரகதமே
    உலைவீசு பொன்னேயென் றோதேனை யாள்குவையோ
    வலைவீசி முன்ன மணந்தபெரு மானுயிரே
    அலைவீசு நீர்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [50]

    கந்தடருங் களியானைக் காவலனே யெனச்சிதடன்
    முந்தணவித் துதித்தலையும் முழுமகனை யாள்குவையோ
    மந்தணத்தைப் பெருந்துறையின் மாணிக்க வாசகப்பேர்
    அந்தணருக் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [51]

    நயமாக்குஞ் செஞ்சுவைப்பா நான்கினையு மூடர்கடம்
    வயமாக்கி மிகவருந்திம் மாண்பிலியை யாள்குவையோ
    சயமாக்கும் பரசணிந்த சம்புமுனஞ் சம்புவினை
    அயமாக்கும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [52]

    குன்றோடு வல்லிரும்பாங் குணமருவி யெவ்விடத்தும்
    சென்றோடுஞ் சிந்தையுடைச் சிறியனையு மாள்குவையோ
    மன்றோடு மன்பர்மனம் வாழ்பரமன் பரிநரியா
    அன்றோடப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [53]

    எண்சுமந்த செந்தமிழை எண்ணிஎண்ணித் துன்பமரீஇப்
    புண்சுமந்த நெஞ்சமுடைப் புல்லியனை யாள்குவையோ
    மண்சுமந்து பின்னர் வடுச்சுமந்த மாதேவன்
    அண்சுமந்த கூடனகர் அங்கயற்க ணாயகியே. [54]

    பரசிற் சுகமருணின் பாதம் பணிந்துன்பால்
    விரசற் குளந்துணியா வீணனைநீ யாள்குவையோ
    வரசண் பையர்தலைவர் வந்தே சுரந்தீர்த்
    தரசற் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [55]

    துளிக்குஞ் சுவைத்தமிழைச் சொல்லித் துதியாதே
    களிக்கும் பயனறியாக் கள்வனை நீ யாள்குவையோ
    தௌிக்கு மறைச்சிறுவர் தீச்சமணை மாற்றி
    அளிக்குந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [56]

    மறம்பயனாக் கொண்டசில மானிடரைப் போற்றித்
    திறம்புமதி பாதகனாந் தீயனைநீ யாள்குவையோ
    புறம்பயத்துச் சான்றாம் பொருளை யழைத்த
    அறம்பயனார் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [57]

    வம்போடு நெஞ்சு மழையோடு கண்களுமாய்த்
    துன்போடு பாவாற் றுதிக்குமெனை யாள்குவையோ
    .............................மெல்லோரும் பூசையுவந்
    ................................................ [58]

    கடம்பவன வல்லி பதிகம்
    (கட்டளைக் கலித்துறை)

    தூமேவு வீரந் திருஞான
    மூன்றையுந் தொண்டரெல்லாம்
    தாமேவு வண்ண மளிப்பாயென்
    றான்றவர் சாற்றுதல்கேட்
    டேமேவு நின்சரண் சார்ந்தே
    னிவற்றை யௌிதருள்வாய்
    மாமேவு வானவர் வாழ்த்துங்
    கடம்ப வனவல்லியே. [1]

    வலக்கண் டிருவிடக் கண்வாணி
    நெற்றியில் வாய்த்தொளிரும்
    புலக்க ணறிவு மகளென
    நூல்கள் புகல்வதுகேட்
    டலக்கண் விலக்குநின் றாளடைந்
    தேனரு ளன்பர்கள்மும்
    மலக்கண் ணடையுறு கண்டீர்
    கடம்ப வனவல்லியே. [2]

    விந்தா டவிக்கின்றி நின்பாத
    தாமரை மேவுறலென்
    சிந்தா டவிக்கியை யாதுகொ
    லோசெக மீன்றவன்னே
    சந்தா டவிசண்ப காடவி
    கற்ப தருவடவி
    வந்தா ரடவி பலசூழ்
    கடம்ப வனவல்லியே. [3]

    தாயா முனக்குத் தமியேன்
    குறைகளைச் சாற்றனன்றே
    ஈயார் தமிழ்ச்சுவை யாயா
    ரிறுமாந் திருப்பவர்பாற்
    போயா சகஞ்செய விட்டுவிடே
    லென்றன் புத்தமுதே
    வாயார வாழ்த்த வருள்வாய்
    கடம்ப வனவல்லியே. [4]

    புத்தியி லேன்விழ லுக்கிறைப்
    பேனின்றன் பொன்னடிசேர்
    பத்தியி லேனெனி னுஞ்சரண்
    சார்ந்தனன் பார்த்தருளெண்
    சித்தி தருமமிழ் தக்கட
    லின்மணித் தீவகத்தின்
    மத்தியில் வில்வ வனஞ்சார்
    கடம்ப வனவல்லியே. [5]

    ஊனார் மயறீர் வியாத
    னுதிட்டிர னோங்குவிறற்
    கூனார் சிலைவிச யன்னன்றி
    நின்புகழ் கூறுவதற்
    கியானா ரெனினுஞ் சரண்புகுந்
    தேனகற் றென்குறையை
    வானார் முகில்படி யுஞ்சீர்க்
    கடம்ப வனவல்லியே. [6]

    ஆவா நினதடி யெண்ணாமல்
    வீண்செய லாற்றிவெய்ய
    தீவாய் விழுபுழுப் போலநொந்
    தேனின்று தேர்ந்தடைந்தேன்
    தேவாதி தேவ னிடத்தாய்
    நினையன்பிற் சேவைசெய
    வாவா வினிதரு ளீவாய்
    கடம்ப வனவல்லியே. [7]

    பாரிற் றருவென மாந்தரைப்
    பாடிப் பயனின்றியே
    தாரித்த லின்றிநின் பாலே
    யடைக்கலஞ் சார்ந்தனனால்
    ஏரிப் புனலன்ன பொன்னே
    யருட்புய லேயமிழ்த
    வாரித் தடமணித் தீவக்
    கடம்ப வனவல்லியே. [8]

    அன்பே யிலாதவர் செய்யுங்
    கொடிய வவமதிப்பால்
    துன்பே யடையு மனத்தேனை
    யாளத் தொடங்குவையோ
    இன்பே செறிமது ராபுரி
    யன்ப ரிதயமுற்றோய்
    வன்பே சமைமணித் தீவக்
    கடம்ப வனவல்லியே. [9]

    காணிக்கை வைத்தம ரேசர்
    வணங்குநின் கான்மலரைப்
    பேணித் தொழுது நினைக்க
    வருள்செய் பெரியம்மையே
    ஆணிப்பொன் வில்லி தனக்கமிழ்
    தேயகி லாண்டம் பெற்ற
    மாணிக்க மேமணித் தீவக்
    கடம்ப வனவல்லியே. [10]

    நற்றவர் கற்றவர் நாவலர்
    காவலர் ஞானமிகப்
    பெற்றவர் தம்முண் மகிடனைப்
    போற்றவப் பேறுதனை
    உற்றவ ராரவன் சென்னிநின்
    றாள்பெற் றுரைக்குமல்லால்
    மற்றவ ரார்சொல வல்லார்
    கடம்ப வனவல்லியே. [11]

    ஸரீ சுந்தரேசுவரர் துதி

    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    பொற்றா மரைப்பூந் தடமுமரி
    பூசித் தரிய பேறுமிகப்
    பெற்றா னெனவான் றோரெடுத்துப்
    பேசு மமலன் சினகரமும்
    அற்றார்க் குதவு மங்கயற்க
    ணம்மை திருக்கோ யிலுங்கண்டோர்
    உற்றார் பாசப் பிணியறவே
    யுடையா ரகில வுலகமுமே. [1]

    வையை நதிசூழ் தென்மதுரை
    வாழு மமலன் றிருவருளால்
    மெய்யை யுறுவீட் டின்பமெலாம்
    மேவ லாகும் விழைநெஞ்சே
    பொய்யை விழையிற் பயனெவனீ
    புகலா யவனைப் பொருந்தாயேல்
    வெய்யை பின்னை யுய்யைமிக
    வீணே யுடையாய் விளம்பிடிலே. [2]

    தாயைப் புணர்ந்து தந்தைதனைத்
    தடிந்திட் டோனு மாரியன்றன்
    வேயை யுறுதோண் மனைவிழைந்த
    வெய்ய பாவி தானுமருள்
    மேய கதைநீ கேட்டறிந்தும்
    விளங்கு கூட னாயகன்சீர்
    தூயை யாக வுரைத்துரைத்துத்
    தொழாமை யென்னே சொன்னெஞ்சே. [3]

    என்ன வென்ன சொற்றிடினு
    மெனக்கு வசமா காதுதிரிந்
    தன்ன மென்னத் தனமென்ன
    ஆடை யென்ன வாவன்மரீஇத்
    துன்ன வென்ன துயருற்றாய்
    சோதி மதுரைச் சீர்கேட்கக்
    கன்ன மென்ன புண்ணியஞ்செய்
    தனவோ வுரைத்தி கடைநெஞ்சே. [4]

    மாயா மயமிவ் வுடலமென
    மதியா தரிவை மாரைவிழைஇ
    நோயா னுடங்கி வருந்தினையால்
    நுவலக் கேட்டி மடநெஞ்சே
    தாயா யுயிர்க்குத் தண்ணளிசெய்
    தாணு வேணு புரத்தலைவன்
    தேயா வளமார் தென்மதுரை
    சேறி நலங்கள் சேருதற்கே. [5]

    கூட னகரி னன்பருக்காக்
    குணங்கள் கடந்த வமலனெட்டெட்
    டாடல் புரிந்தா னியாவரையு
    மாடல் புரிந்தான் அடியவரை
    நாடல் புரிந்தான் மடநெஞ்சே
    நவிலக் கேட்டி சிறிதேனும்
    வாடல் புரியா திருத்தியவன்
    மலர்ப்பூந் தாளை வணங்குதியே. [6]

    வளமார் மதுரை யரன்சீரை
    வாயால் வழுத்தி யவன்பதத்துத்
    தளமார் மலரிட் டருச்சித்துத்
    தகைசால் துதியாற் றோத்தரித்தே
    உளமாங் கவன்பா லுறுத்தினருக்
    குறுகண் ணியாது மிலையாமால்
    களமார் தீயர்ச் சேர்பாவங்
    கலவார் கலப்பார் கவின்றிருவே. [7]

    திருவு முருவுந் திறமுமெங்குஞ்
    சேருங் கீர்த்தி யோடறிவும்
    மருவு மருவார் துயரமிலை
    வண்மை யாவு மருவுவரால்
    கருவுங் குறியுங் குணமுமுக்
    காலங் கடந்தே யருவுருவோ
    டருவு முருவுங் கடந்தொளிரு
    மமலன் மதுரை யணைந்தவரே. [8]

    ஆல வாயி லமர்ந்தருளு
    மமல னருளை யன்றிநெஞ்சே
    சால வாயின் வேறுதுணை
    சாற்றற் குண்டோ வவன்பெயரைக்
    கோல வாயி னுரைத்துரைத்துக்
    குறித்தே யவன்றாண் மலரிருப்பின்
    சீல வாயி னருள்புரிவன்
    றீர்ப்பன் றுயர மியாவையுமே. [9]

    செல்வக் கூட னகருறையுஞ்
    சிவனைப் பணிந்து செழுஞ்சோதி
    வில்வத் தளிரோ டிளமதியம்
    வேய்ந்த வேணி விகிர்தனே
    எல்வத் திரமைந் துடையாயெம்
    மீசா வாச விதழியுள்ளாய்
    மல்வக் கரையா வெனநிதமும்
    வாழ்த்தி வணங்கு மடநெஞ்சே. [10]

by Swathi   on 24 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.