LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 736 - அரணியல்

Next Kural >

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார். இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
கேடு அறியா - புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை முதலிய இயற்கையாலும், பகைவரும் கொள்ளைக்காரருமாகிய மாந்தராலும், கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றாநாடு - என்றேனும் ஒரு கால் அரிதிற் கெட்டதாயினும் வளங் குறையாத நாடே; நாட்டில் தலை என்ப - எல்லா நாடுகளுள்ளும் தலையாயதென்று கூறுவர் அறிஞர். நாடு கேடறியாமை கடவுள் வழிபாட்டாலும் அறவொழுக்கத்தாலும் அரசனாற்றலாலும் செங்கோலாட்சியாலும் ஆவதாம். வளம் நால்வகை நிலத்தும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளையும் உணவும் பிறவுமாகிய பொருள் மிகுதி. குன்றாமையாவது, நீர்வள நிலவள முண்மையால் முன்போன்றே விளைதல். நாட்டில் விளைவன நெல், வாழை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, வெற்றிலை, பாக்கு முதலியன; காட்டில் விளைவன எள், பயறு, தேன், அரக்கு, சந்தனம், புனுகு காசறை (கஸ்தூரி) மு த லி ய ன; மலையில் விளைவன ஏலம், மிளகு, அகில் , மருப்பு (தந்தம்), மரம் , பொன், மணி முதலியன. கடலில் விளைவன உப்பு, மீன் , இறா , சங்கு , முத்து , பவழம், ஓர்க்கோலை முதலியன. 'அறியா' 'குன்றா' என்பன ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சும்.
கலைஞர் உரை:
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்
Translation
Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase.
Explanation
The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
Transliteration
Ketariyaak Ketta Itaththum Valangundraa Naatenpa Naattin Thalai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >