LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமா?

சமீபத்தில் மத்திய அரசு தொடர்புகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை முதன்மையாக பயன்படுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களில் அமைச்சர்கள் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று எடுத்த முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகம் இதற்கு மிகுந்த எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த சர்ச்சையில் வெளியான பல்வேறு கருத்துக்களையும், மாற்றுக் கருத்துக்களையும் அவதானிக்கும்போது அதில் ஒரு சில கருத்துக்கள் உண்மையானதாகவும், ஒரு சில கருத்துக்கள் மக்களை குழப்புவதாகவும் இருக்கிறது.

இதில் குறிப்பாக இந்தி தெரியாவிட்டால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க இந்தி அவசியம் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 

 

நான் கடந்த 10 ஆண்டுகளுக்குமேல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டலில் ஈடுபட்டுள்ளதாலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் இன்றைய சவால்கள் குறித்த கட்டுரைகளையும், நூல்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருவதாலும், தமிழக அரசாங்க வேலைவாய்ப்பு (employment) மற்றும் தகுதி உயர்த்தும் (Skill Development) துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தமிழகத்தின் கல்வித்திறன் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தொடர்து ஆராய்ந்து வருவதில் கொண்டுள்ள புரிதலினாலும் “இந்தி Vs வேலைவாய்ப்பு” குறித்து ஒருசில கருத்துக்களை பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன்.

 

வளர்ந்த நாடான அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் குழந்தை பிறந்தது முதல், பெற்றோர்களை குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசவே குழந்தை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது குழந்தைக்கு எளிதாக சிந்திக்க, சிந்திப்பதை சரியான வார்த்தைகளைக் கொண்டு  வெளிப்படுத்த, திக்குவாய் இல்லாமல் பேச்சை முழுமையாகப் பெற,  ஒரு குறிப்பிட்ட வயது வரை (குழந்தை சரளமாக பேசும் திறன் பெரும் வரை) பெற்றோர்கள் இருவருக்கும் சரளமாக வரும் தாய்மொழியில் பேசி வளர்க்க அறிவுறுத்துகிறார்கள். இது   ஆராய்ச்சியால், அறிவியலால் கண்டுபிடிக்கப் பட்ட முடிவு. பெற்றோர் இருவரும் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலோ, இருவரும் முழுமையான ஆங்கிலத் திறமை இல்லாமல் (Native English Skills) அரைகுறை ஆங்கிலத்தில் பொதுமொழியாக பேசினாலோ குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. உதாரணமாக தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என்ற மும்மொழி பேசும் வீடுகளில் குழந்தைகள் எது எந்த மொழியின் வார்த்தை என்ற புரிதல் இல்லாமல் அனைத்தையும் கலந்து பேசுவதையோ அல்லது பேசுவதில் சிரமப்படுவதையோ பார்க்க முடியும். அதன் பிறகு மருத்துவரிடம் சென்று அதை பல ஆண்டுகள் முறையான சிகிச்சை எடுத்து (Speech Therapy) மூலமே அவதிப்பட்டு சரி செய்வதை காண்கிறோம்.   

அடுத்து, ஓரளவு தாய்மொழியில் திக்காமல், சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளை சேர்த்து பேசும் திறமை வந்துவிட்டால், பள்ளிக்கு போகத் தயாராகும் ஒரு ஆண்டிற்கு முன்பு தாய்மொழி புலமையை  வளப்படுத்திக் கொண்டே ஆங்கிலத்தில் பயிற்சி கொடுக்கலாம், இந்தக் காலக்கட்டத்தில் ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் ஒருவர் தாய்மொழியிலும், ஒருவர் ஆங்கிலத்திலும் பேசலாம்.  ஆங்கிலம் தெரியாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை, பள்ளி சென்றதும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். 

இன்றைய ஆரசுப் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் ஆங்கிலம் ஒருவரை ஆங்கிலம் புரிந்துகொள்ள, பேசவைக்க உதவுகிறதா என்றால் போதுமான அளவு இல்லை என்றே சொல்லலாம். ஆங்கிலம் மட்டுமன்றி தமிழை சரியாக படிக்க முடியாத நிலையில் குறிப்பிடத்தக்க சதவீதம் மாணவர்கள் இருப்பதை பல பொதுசேவை அமைப்புகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைய கல்விமுறை தெரிவு நோக்கிய மனப்பாட முறையில் இருந்து வாழ்வியல் சார்ந்ததாக மாரும்போதுமட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். இன்றைய அரசுப் பள்ளிகள் ஆங்கிலப் புலமையை வளர்க்க இன்னும் கவனம் மேற்கொள்வது ஒன்றே ஆங்கிலத்திற்காக  மக்கள் மெட்ரிக், சிபிஎஸ்சி, இண்டர்நேஷனல் பள்ளிகளை நோக்கி படையெடுப்பதை  தடுக்கவும், அரசுப் பள்ளியின் நம்பகத் தன்மையை தக்கவைக்கவும் ஒரே வழி.  

இதற்கு ஆங்கில மீடியத்தில் படிப்பது அவசியமா என்றால், உங்கள் அருகில் இருக்கும் தமிழ்வழிப் பள்ளி தரமில்லாத பள்ளியாக இருந்து,  உங்களுக்கு தனியார் பள்ளியில் பணம் கட்ட வசதி வாய்ப்பு இருந்தால் தனியார் பள்ளியில் படிக்க வைப்பது உங்கள் உரிமை. தரமான பள்ளியை உருவாக்குவதும், தரமான கல்வியைக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமை. அதை எதிர்ப்பார்ப்பது நம் கடமை. அதற்காகவே நாம் வரி கட்டுகிறோம். அடுத்தவர் வீட்டு பிள்ளையோ, உறவினர் வீட்டுப் பிள்ளையோ ஆங்கிலவழிப் படிப்பில் படிப்பதால் அதுதான் பெருமை என்று கருதி கடன் வாங்கி தனியார் பள்ளிகளில் படிக்கவைத்து சிரமப்பாடாதீர்கள்.  உங்கள் சக்திக்கு உகந்ததைச் செய்யுங்கள்.

 

வாழ்க்கையில் சாதித்த முன்னால் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம், இளையராஜா, பாரதிராஜா, அமெரிக்காவில் மேரிலாந்து மாநிலத்தில் அமைசாராக இருக்கும் டாக்டர் ராஜன் நடராஜன் போன்ற எண்ணற்ற தமிழர்கள் தமிழில் படித்தவர்கள்தான். எனவே ஆங்கில வழியில் படித்தவர்கள் சாதித்துவிடுவார்கள்  என்றோ, தமிழ் வழியில் படித்தவர்கள் சாதிக்கவில்லை/சாதிக்க முடியாது என்றோ எந்த  சான்றுகளும் இல்லை. 

 

சுருக்கமாக சொல்லப்போனால் +2 முடிக்கும் முன் உங்கள் மகனோ, மகளோ கீழ்கண்ட மொழித்திறமைகளை கொண்டிருந்தால் நல்லது. சமுகத்தை, வாழ்வியலை, வெற்றியை, இன்றைய உலகளாவிய வேலைவாய்ப்பு போட்டியை நன்கு புரிந்துகொண்ட ஒருவர் கீழ்காணும் வகையிலேதான் தன் குழந்தைகளை தயார்செய்கிறார்கள்.

 

 

  1. தாய்மொழியில் நல்ல புலமை. இலக்கணம், கதை, கவிதை, கட்டுரை வாசிப்பது, செய்திகளை வாசிப்பது, பாடல் வரிகளை புரிந்து ரசிப்பது, தாய்மொழிப் படங்களின் வசனங்களை புரிந்து ரசிப்பது, பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி  போன்றவற்றில் பங்கெடுப்பது போன்ற தாய்மொழி ஆளுமைத் திறமைகள்.
  2. ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும், நூல்களை வாசித்து புரிந்துகொள்ளும் திறமையையும் பெறுவது. இது தவிர நாவல் வாசிப்பது, ஆங்கில இலக்கியம் படிப்பது போன்ற ஆர்வம இருந்தால் சிறப்பு.
  3. வாய்ப்பிருந்தால் இந்தி கற்றுக்கொள்வது. உங்கள் வேலைவாய்ப்பையோ, வெற்றியையோ இந்தி தெரியாதது  எந்தவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை என்ற புரிதலுடன் அது தெரிந்தால் குழந்தைகளுக்கு இன்னொரு மொழி தெரிந்தால் நல்லது என்று விருப்பி கற்றுக்கொள்வது. 
  4. தமிழ், ஆங்கிலம், இந்தி தவிர உங்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

 


இன்று தமிழக மாணவர்கள் சந்திக்கும் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு முக்கியக் காரணம் அவர்கள் படித்துவரும் கல்விமுறை மனப்பாடம் சார்ந்ததாக உள்ளது என்பதும், படிக்கும் துறையை புரிந்து படிக்கவில்லை என்பதும், தனக்குத் தெரிந்ததை முழுமையாக எடுத்துக் கூற போதிய தமிழ் மற்றும் ஆங்கிலத் திறமை இல்லை என்பதுமே தவிர இந்தி தெரியாததோ தெலுங்கு தெரியாததோ அல்ல. 

 

இப்படி அறிவுரை சொல்வது எளிது, ஆனால் அதை சொல்வதற்கு அவர்களுக்கு தகுந்த பின்புலம், தகுதி, அனுபவம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நம் தலைவர்கள் மற்றும் பொது வாழ்வில் உள்ளோர் பெரும்பாலோர் இன்று பொதுமக்களுக்கு  மேடையில் ஒன்றை சொல்லிவிட்டு,  அவர்கள் சொந்த வாழ்வில் தன் குடும்பத்தை அதற்கு எதிர்மறையாக தயார் செய்கிறார்கள். எனவேதான் இன்று யார்மீதும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இல்லாத சூழலும், ஒருவர் சொல்வது எந்த அளவு உண்மை என்பதை ஆராய்ந்து தெளியும் தேவையும் இருக்கிறது. எந்த மொழியையும் இன்னொரு மொழி பேசுபவர்களிடன் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மொழி அவரவர் தேவைக்கு ஏற்ப, தேவையான காலக்கட்டத்தில் அறிந்துகொள்ளும் ஒரு கூடுதல் திறமை.

 

இதை எழுதுவதற்கு எனக்கு ஓரளவு தகுதி உள்ளதாகவேக் கருதுகிறேன். காரணம் தமிழகத்தில் குக்கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பிரதிநிதியாக என்னைப் பார்க்கலாம். காரணம், கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்து, ஆங்கிலம் மொழி அளவில் கூட பேசத்தெரியாமல், கல்லூரி இளநிலை படிக்கும்போது ஓரளவு ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொண்டு, முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகையில் படித்தவன் என்ற முறையிலும், இந்தி தெரியாமல் டெல்லி, ராஜஸ்தான் போன்ற வட இந்திய நகரங்களுக்கு பயணித்த அனுபவமும், பிட்ஸ் பிலானியில் என் மேல்படிப்பை முடித்த அனுபவமும்,  ஐந்து ஆண்டுகள் பெங்களூரிலும், இரண்டு ஆண்டுகள் சென்னை டைடல் பார்க்கிலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவிலும் வேலை செய்யும்போது பல வட இந்தியர்களிடம், பல்வேறு நாட்டுக்காரர்களிடம் வேலைசெய்த அனுபவத்திலும், இதுவரை பல நூறு பேரை வேலைக்காக நேர்காணல் கண்டு பெற்ற அனுபவத்திலும்,  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்தி தெரிந்தவர்களை வைத்து வேலை வாங்குவதில் பெற்ற அனுபவத்திலும்,  இன்று வரை எனக்கு இந்தி தெரியாது என்ற அனுபவத்திலும் நானே என்னை சுயபரிசோதனை செய்துகொள்கிறேன். இந்தி தெரியாமல் எதை இழந்தோம், எதை அடைந்தோம்  என்று பார்க்கையில் தமிழ்வழி அரசுப் பள்ளியில் படிப்பதால் உங்கள் வாழ்க்கை சிறக்காது என்பதில் துளியும் உண்மையில்லை என்பதை உணர்கிறேன். இந்தி தெரியாததால் சில இடங்களில் சில குழுக்களுடன் சேர்த்து தேனீர் அருந்தும்போது நண்பர்களுடன் பேச முடியவில்லை என்பதைத் தவிர, அமெரிக்காவில் பட்டேல் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது இந்தியில் பேச முடியவில்லை என்பதைத் தவிர, இந்தி இந்தியாவின் தேசிய மொழி அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தவறான புரிதலுடைய சில வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்களின் கேள்விகளை எதிர்கொண்ட அனுபவத்தைத் தவிர, நான் எதையும் இழந்துவிட்டதாகவோ, வேலைவாய்ப்பில் பின்தங்கி விட்டதாகவோ கருதவில்லை. இதை எந்த மேடையிலும், எந்த புத்திஜீவிகளுடனும் விவாதிக்க, அவர்களுக்கு தெளிவு ஏற்படுத்த தயாராக இருக்கிறேன்.

 

இப்படி எழுதுவதால் தமிழக அரசுப் பள்ளிகள் உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்வதாக அர்த்தம் கொள்ளவேண்டாம். தமிழகப் பள்ளிகள் குறிப்பாக தற்போதைய செயல்வழிக் கல்வி முறை ஓரளவு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது, இன்னும் மொழித்திறன், அடிப்படை வசதிகள் போன்றவை வளரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  


வேலை என்பது வாழ்வின் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் சார்ந்தது, அந்த  8 மணி நேரத்தில்  நாம் ஈட்டும் பொருளைக் கொண்டு மீதி உள்ள 16 மணி நேரம் வாழ்க்கையை ஆனந்தமாக உங்கள் குடும்பத்துடனும், சமூகத்துடனும், உங்களுக்குப் பிடித்த வகையில் வாழவேண்டும். எனவே வாழ்வின் மூன்றில் ஒரு பகுதி முக்கியத்துவமே வேலைக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் இன்று கல்வி, வாழ்வதன் நோக்கம் போன்றவை வேலைக்காகவே என்று ஒரு சமூகம் நினைக்க ஆரம்பித்துள்ளதன் விளைவே இந்த மொழியையும் வேலைவாய்ப்பையும் குழப்பிக்கொள்வதற்கு காரணம் என்று கருதுகிறேன்.

 

இந்தி தெரிந்திருந்தால் ஆங்கிலம் தெரியாத இந்திக்காரர்களிடம் குறிப்பாக பாணி பூரி கடைக்காரரிடம் பேசுவதற்கும், வட இந்தியா பயணிக்கும் வாய்ப்பு உள்ளவர்களுக்கும் பயன்படும். நீங்கள் படித்தவராக இருந்தால் படித்தவருடன்தான் பழகப் போகிறீர்கள், அவர் படித்தவராக இருந்தால் ஆங்கிலம் தெரிந்திருக்கும் எனவே உங்களுக்கு இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்தலாம்.

 

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் ஆங்கிலம் தெரியாமல் உங்கள் எதிர்காலம், வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் ஆனால் இந்தி தெரியாமல் எதிர்க்காலம் பாதிக்கப்படும் என்று கூறுவதில்  கொஞ்சமும் உண்மை இல்லை.  அரசுப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு தமிழும், ஆங்கிலமும் நன்கு பேசும் மொழித்திறனை வளர்த்துவிடாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெரும் நிலை மாறவேண்டும். இந்த கல்வி அரசியல்தான் இன்றைய அவல நிலைக்கு, வேலைவாப்பின்மைக்கு முதல் காரணம். இன்று M.E, M.Tech, M.Phil, Phd. படித்த பலரை சோதித்ததில் அவர்களால் ஆங்கிலத்தை எழுதவோ, பேசவோ முடியாத நிலையில் இருப்பதை காணமுடிகிறது. கல்வி என்பது படித்து பழைய கேள்வித்தாள்களை புரிந்து, எப்படி வெற்றிகரமாக தேர்வு எழதுவது, மதிப்பெண் பெறுவது என்று சுருங்கி உள்ளது. இதுவே வேலை கிடைக்காததற்கு முதல் காரணம். இன்று வேலைவாய்ப்பிற்கு தகுதியற்ற பட்டதாரிகளை நம் கல்விமுறை உருவாக்கி வருகிறது. தேசிய அளவில், 10% பொறியியல் படிப்பவர்களும்,8% கலைக்கல்வி பயின்றவர்களும்  மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் என்றும் ஆய்வு சொல்கிறது. 

 

நீங்கள் கர்நாடகா சென்றால் கன்னடமும், ஆந்திரா சென்றால் தெலுங்கும், வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு சென்றால் இந்தியும், குறிப்பாக அந்தந்த மாநில மொழி தெரிந்திருந்தால் வாழ்க்கை நடத்த எளிமையாக இருக்கும். அது அங்கே சென்று கூட கற்றுக்கொள்ளலாம். அது வேலைவாய்ப்பிற்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லை. இன்று இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானபேர் தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்களே இவர்களுக்கு இந்த மொழி ஏன் கைக்கொடுக்க வில்லை என்ற கேள்வி ஓர் சாராரால் கேட்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. மொழிதான் வாழ்க்கையை வளப்படுத்துகிறது என்றால் இந்தி தெரிந்தவர்கள் எத்தனைபேர் பட்டினி இல்லாத வாழ்க்கையை கொண்டுள்ளார்கள். கண்டிப்பாக தமிழகத்தைவிட குறைவு என்று கூறமுடியும்.  தமிழகம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது வளர்ச்சி அடைந்த மாநிலம்.

 

இன்று அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஐடி துறையில் பத்து பேரில் ஆறு பேர் தெலுங்கு பேசுபவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா முழுதும் தொழில்துறை முதல் அனைத்து இடங்களிலும் தெலுங்கு மக்களே நிரம்பி இருக்கிறார்கள். யாரையாவது வெளியில் இந்தியராய் நினைத்து  சந்தித்தால் ஏமுண்டி, நீவு தெளுகா? என்று கேட்டுவிட்டு இல்லை என்றால்தான் ஆங்கிலம் அல்லது வேறு மொழிக்கு மாறுவதை அமெரிக்கத் தமிழர்கள் அறிவார்கள். தெலுங்கு தெரிந்திருந்தால் அந்தக் குழுக்களிடம் பழக வசதியாக இருக்கும். ஆனால் தெலுங்கு தெரியாததால் அமெரிக்காவில் வேலைசெய்வது கடினம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதோ அதுபோல்தான் இந்தி தெரியாததால் வேலைவாய்ப்பு , வாழ்க்கையின் வளர்ச்சி தடைபடும் என்று கூறுவதும்.   

 

 

இந்தி தெரிந்திருந்தால் உங்கள் வேலை பிரகாசமாக இருக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்பதும், உங்கள் எதிர்கால வேலை, தொழில்,  போன்றவற்றைப் பொருத்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் கற்றுக்கொள்ளும் தேவை ஏற்படலாம் என்பதும், தாய்மொழியும் ஆங்கிலமும் நன்கு புலமை பெற்று இந்தி கற்றுக்கொள்வது, தட்டச்சு பயில்வது, சுருக்கெழுத்து தெரிந்து வைத்துக்கொள்வதைப் போல கூடுதல் தகுதி என்பதைத் தாண்டி வேறு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

 

சரி, இவ்வளவு சொல்கிறீர்களே உங்கள் குழந்தைகளுக்கு இந்தி சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா என்றால், என்னுடைய பதில்: என் குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழ் நல்ல புலமையுடன் வீட்டிலும், தமிழ் சமூகத்துடனும், ஆங்கில மொழி  பள்ளி மற்றும் தமிழல்லாத சமுகத்திலும் பேசும் திறமை வந்ததும், மொழியை வேறுபடுத்தி பேசும் திறன் பெற்றதும் இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன். எனவே தமிழ், ஆங்கிலம்,  இந்தி மற்றும் பிற மொழி என்ற வரிசையே சிறந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன். 

 

இந்தி தெரியாத தேவகவுடா பிரதமர் பதவி ஏற்றதும், வசதிக்காக ஒரு இந்தி ஆசிரியரை நியமித்து இந்தி கற்றுக்கொண்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவையைப் பொருத்து இந்தி, கன்னடம், தெலுங்கு போன்றவைகளை கற்றுக்கொள்ளளாம் ஆனால் அது தெரியாமல் போனால் வாழ்க்கை சூன்யமாகிவிடும் என்பதை நம்பவேண்டாம்.

 

இன்றுவரை ஒருவர் இந்தியக் குடியுரிமைப் பெற்ற இந்தியன், ஒரு சில ஆண்டுகளில் அமெரிக்க குடியுரிமையோ, ஆஸ்திரேலியக் குடியுரிமையோ, அல்லது வேறு நாட்டின் குடியுரிமையையோ பெற்றுவிட்டால் அவர் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு அமெரிக்கராகவோ, ஆசஸ்திரேளியராகவோ மாறிவிடலாம். ஆனால் தமிழர், கன்னடர், தெலுங்கர் என்ற மொழி அடையாளம் உங்களுடன் தொடர்ந்து உங்கள் வாழ்நாள் வரையும்  உங்கள் அடுத்தடுத்த தலைமுறையுடனும் பயணிக்கும். எனவே, இந்தியா, இந்தி, மொழி, நாடு, வேலைவாய்ப்பு, எதிர்காலம் போன்றவற்றை போட்டு   குழப்பிக் கொள்ளாமல் தமிழ் ஆங்கிலம் தெரிந்து,  வாய்ப்பிருந்தால் இந்தி என்று படிக்க வையுங்கள்.

 

சமீபத்தில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ஒரு தமிழ் நண்பரை வாசிங்டன் டிசியில் சந்தித்தபோது அவர் இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார். அவர் உலகின் பல நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்துவருபவர்,சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்றவர். அவர் வீட்டிற்கு சென்றபோது, முக்கியமான தமிழ் நாவல்களும், இலக்கிய நூல்களும் இருப்பதைக் கண்டேன். அவரிடம் பேசும்போது, எங்களுக்கு வீட்டில் வேலைசெய்பவர்கள், அலுவலகம் என்று இந்தி இருக்கும் இருப்பினும், வீட்டில் குழந்தைகளிடம் தமிழ்தான் பேசுவோம், தமிழ் பாடல்கள் கேட்பது, நூல்கள் வாசிப்பது, ஒவ்வொரு நாடு செல்லும்போதும் என்னுடைய தமிழ் நூல்கள் எங்களுடன் பயணிக்கும், புதிதாக தமிழகத்தில் வெளிவரும் நூல்களை வரவழைத்து படிப்போம் என்று கூறினார். ஒரு இந்தி ஆக்க்கிரமித்துள்ள தூதரகப் பொறுப்பில் இருக்கும் தமிழர் வேலை செய்ய ஆங்கிலம் இந்தி, வாழ்க்கையை ரசிக்க தமிழ் என்று சொன்னது எனக்கு வியப்பில்லை ஆனால் தமிழகத்தில் உள்ள பலருக்கு வியப்பாக இருக்கும் என்பது உண்மை.

 

எனவே தமிழர்களாகிய நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை, நம் மொழிக்கு இணையான இன்னொறு மொழியின் திணிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, நமக்கு தேவையானதை நாமே கற்போம். அவரவர் தாய்மொழியும், ஆங்கிலமும் மட்டுமே வேலைவாய்ப்போடு சம்பந்தப்பட்டது. வேறு எந்த மொழியும் தேரிந்துகொள்வது நல்லதே தவிர அது அவசியம் இல்லை என்பதை உணர்வோம்.

 

 

 -பரிவிளாகம் பார்த்தசாரதி, கல்வியாளர்

 

by Swathi   on 02 Jul 2014  1 Comments
Tags: இந்தி மொழி   இந்தி வேலைவாய்ப்பு   Hindi              
 தொடர்புடையவை-Related Articles
வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு... வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
இந்தியில் ரீமேக் ஆகிறது அஜீத்தின் மங்காத்தா !! இந்தியில் ரீமேக் ஆகிறது அஜீத்தின் மங்காத்தா !!
தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன ? தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன ?
பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !! பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !!
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..! கதாநாயகனாக தனுஷ் !! பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..! கதாநாயகனாக தனுஷ் !!
இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமா? இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமா?
ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !! ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!
கருத்துகள்
10-Feb-2016 07:54:25 ராமஸ்வாமி கே said : Report Abuse
பல அறிஞர்கள் பலநாள் பல்வேறு முறையில் சொல்லியதை மிக அற்புதமாக விளக்கிவிட்டார். காய்தல் உவத்தல் இன்றி எழுதப்பட்ட கவிதை போன்றதொரு கட்டுரை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.