LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

கோனார் தமிழ் உரை - திரு.ஐயம் பெருமாள் கோனார் !!

படித்த உங்களுக்கு யார் அந்த கோனார் என்று தெரிய ஆர்வம் இருக்கலாம் . . . இதோ உங்களுக்காக அவரது புகைப்படம் மற்றும் அவர் குறித்த தகவல் !

பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே கருவிலே திருவுடையவராகத் தோன்றியவர்.அவருக்கு முன் அமைந்து இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும். எனவே அவர் பிறந்த போதே, பிற்காலத்தில் திருவும், கல்வியும், செல்வமும் ஒரு சேரப் பெற்றுச் சிறந்து விளங்குவார் என்பதை இவருக்கு வாய்த்த ‘திரு’ என்னும் சொல் சுட்டி காட்டுகிறது.

திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் விசுவாவிசு ஆண்டு ஆவணித் திங்கள் இருபத்தி ஆறாம் நாள் (05.09.1905) செந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில், வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள தம் பாட்டனார் இல்லத்தில் அகிலாண்டத்தம்மையார் அவர்கட்கு அருமந்த புதல்வனாய்ப் பிறந்தார்.

இளமையிலேயே அன்னையே இழந்த இவர், தம்பெரிய அன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் உள்ள தம் இல்லத்தில் வளர்ந்து வரலானார். பெரிய அன்னையின் தூண்டுதலால் அவர் திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர்க்குத் தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து வரலாயிற்று. பிறகு தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார்.

கோனார் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்த் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகத் தனித் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி 1933-இல் வெற்றி பெற்றார். அவர் 15 ஆண்டுகள் தமிழ் உரையையும் ,வினா விடையையும் தம் சொந்த முயற்சிலேயும்,சில வெளியீட்டாளர் மூலமாகவும் வெளியிட்டு நல்ல போதக ஆசிரியராகவும் விளங்கிய அவர் சிறந்த உரையாசிரியராகவும் மதிக்கப்பட்டார்.

1942-ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் அவர்களுக்குப் பின் அவருக்கு அப்பதவி அளிக்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு வரை தமது அறுபதாவது ஆண்டு முடிய தமது தமிழ்ப் பேராசிரியர் பணியைச் சிறப்பாக செய்து மாணவர்களும், ஆசிரியர்களும் போற்றிப் புகழ்ந்து பாராட்டும் வகையில் ஒய்வு பெறலானார்.

கல்லூரிப் பேராசிரியரான பின், கல்லூரிப் தமிழ்ப்பாட நூல்களுக்கும் உரை எழுதலானார். இவ்வாறு கல்லூரியில் பாடம் கற்பிப்பதிலும், உரை எழுதுவதிலும் அவர் வல்லவர் என்னும் நற்பெயர் எங்கும் பரவப் பெற்றார்.

அவரது சிறப்பினை உணர்ந்த உயர்திரு. செ.மெ.பழனியப்பச் செட்டியார் அவர்கள் அவரது உரை நூல்களைப் பள்ளி இறுதி வகுப்பு ஆகியவற்றின் தமிழ்ப்பாட நூல்களுக்கான உரைநூல்களைத் தமது வெளியீடாக வெளியிட விரும்பி ஏற்றுக்கொண்டார். மற்றும் பி.ஏ.பி,எஸ்.சி, வகுப்புத் தமிழ் உரைநூல் அவர்தம் மைத்துனர் வாசன் பதிப்பகம், கோனார் பப்ளிகேசன்ஸ் மூலமாக வெளியிட்டு வந்தார்.

அவர்க்குப் பின் சென்னை, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பாடநூல்களின் உரைகளும் மதுரை கோனார் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் திரு.சடகோபன் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். கோனார் உரை நூல்க்கு முத்திரையும் பெற்றுச் சிறப்புச் சேர்த்து உள்ளார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, தமிழ் உரை நூலும் கோனார் பதிப்பகத்தில் வெளியிட்டு வந்தார்கள்

அவர் 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தமது அறுபதாவது ஆண்டு நிறைவு நாளில் மணி விழாக் கண்டு மகிழ்ந்தார் திரு.கோனார் அவர்களின் தமிழ்ப்பற்றையும் தொண்டினையும் ‘ஆனந்த விகடன்’, ‘ஆசிரியரத்தினங்கள்’ என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வரைந்து சிறப்பித்தது. அவரது இறையன்பையும்,அதனை வளர்க்கும் நெறியில் இடையராது ஆற்றிய சொற்பொழிவுத் தொண்டினையும் போற்றும் வகையில் உறையூர் ‘வாசுகி பக்த சன சபையார்’ அவர்க்குப் பொன்னாடை போர்த்தி, ‘செம்பொருட்காட்சியர்’ என்னும் பட்டத்தை வழங்கினார். மேலும் அவரது சமயத் தொண்டினைப் பாராட்ட விரும்பிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவருக்குப் தங்கப்பதக்கம் வழங்கி ‘திருப்பாவை ஆராய்ச்சி மணி’ என்ற பட்டத்தையும் சுட்டிச் சிறப்பித்தனர். மார்கழி முப்பது நாட்களிலும் திருச்சி வானொலி நிலையத்தினர் ஒலிபரப்பிய அவரது திருப்பாவை விளக்கவுரையைக் கேட்டுக் தமிழகமே பெரிதும் மகிழ்ந்தது.

தமிழ்ப்பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தம் சிறந்த தமிழ்ப் பணியினால் மாணவருலகம், ஆசிரியர் உலகம் , சமய உலகம், தமிழுலகம் பயனுறுமாறு சிறந்த போதக ஆசிரியராகவும் உரையாசிரியாகவும், நூலாசிரியராகவும், சொற்பொலிவாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.

திரு.கோனார் அவர்கள் இயற்றிய நூல்கள் : 

கோனார் தமிழ்க் கையகராதி,திருக் குறளுக்குக் கோனார் பொன்னுரை மற்றும் சங்ககாலப் பாண்டியர், வாசன் பைந்தமிழ்ச் சோலை முதலின.

எழுத்தாளர் சுஜாதாவுக்கு இவர்தான் காலேஜில் தமிழ் ப்ரொஃபசர். தனக்கு தமிழார்வம் அதிகரிக்க ஐயம்பெருமாள் கோனார் முக்கிய காரணம் என்று சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.


by Swathi   on 07 May 2015  4 Comments
Tags: Konar Tamil Urai   Tamil Urai   Aiyam Perumal Konar   Konar   தமிழ் உரை   கோனார் தமிழ் உரை     
 தொடர்புடையவை-Related Articles
கோனார் தமிழ் உரை - திரு.ஐயம் பெருமாள் கோனார் !! கோனார் தமிழ் உரை - திரு.ஐயம் பெருமாள் கோனார் !!
கருத்துகள்
12-Jun-2019 13:59:44 பாலகிருஷ்ணன் தி said : Report Abuse
கோனார்கள் பெருமை பட வேண்டிய விஷயம்.குலம் காத்த குலசாமி.
 
15-Feb-2017 03:47:52 priyanga said : Report Abuse
நன்றி
 
31-Mar-2016 17:20:15 சொ. நமசிவாயம் said : Report Abuse
கல்லூரியில் அவரைக் கோனார்அய்யா என்று தான் குறிப்பிடுவார்கள். அவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் பிரபந்தங்களுக்கு அருமையான உரை எழுதியுள்ளார். என்றும் முன்மாதிரியான தேசியவாதியாகத் திகழ்ந்தார். அவரின் திருப்பாவைச் சொற்பொழிவுகள் வைணவர்களால் இன்றும் கொண்டாடப் படுகின்றன. இனிமையான குரல் வளம், கவர்ச்சியான மிடுக்கு, சொல்வளம் எல்லாம் என்போன்ற மாணவர்களுக்கு மறக்கவே முடியாதவை.
 
22-Aug-2015 22:03:20 R .Mariappan said : Report Abuse
ஐயம் பெருமாள் கோனார் பற்றி அறிந்தேன். நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.