ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த முனி, முனி-2 (காஞ்சனா) திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து முனி படத்தின் அடுத்த பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் லாரன்ஸ்.
இப்படத்திற்கு முதலில் முனி-3 கங்கா என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், தற்போது காஞ்சனா 2 என்று தலைப்பு வைத்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
காஞ்சனா 2-ல் ராகவா லாரன்ஸ் நான்கு விதமான பேய் கெட்டப்பில் நடிக்கிறாராம். 15, 25, 40, 50 வயது பெண்களின் பேய் பிடித்தவர் போன்று வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம். ஏற்கெனவே காஞ்சனா படத்தில் திருநங்கை, முதியவர், மனவளர்ச்சி குன்றிய இளைஞன் ஆகிய மூன்றுவிதமான பேய்கள் பிடித்தவராக ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஹீரோயினாக டாப்சி நடித்துள்ளார். நித்யா மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அனேகமாக இந்த படம் வரும் கோடி விடுமுறையை ஒட்டி வெளியாகும் எனத் தெரிகிறது.
|