LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தலைமைப் பண்புகள்

இன்று உலகமெலாம் வசித்துவரும் தமிழர்கள் தமிழ் கலாச்சாரத்தோடு அவர்கள் வாழும் நாடுகளின் கலாசாரத்தையும் சேர்ந்து பின்பற்றக்கூடிய நிலை என்பது எதார்த்தம்.  ஒவ்வொரு நாடும் அவர்களது வரலாற்றை, அந்த நாட்டின் மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிறப்பை, தியாகிகளின் பண்புகளை, அவர்கள் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்றை பெற்றுத்தர போராடிய வரலாற்று நாயகர்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்.   

இந்நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் பின்பற்றும் தலைமைத் தத்துவங்களை பெற்ற, அகிம்சையை உலகிற்கு கற்றுத்தந்த நாடாக இந்தியா விளங்கியது.  குறிப்பாக தமிழத்தை சார்ந்த நம் முன்னோர்கள் தியாகத்தின் திருவுருவாக வாழ்ந்து நமக்கு தலைமைப் பண்பை உணரவைத்து சென்றுள்ளார்கள். இவைகளை தேடிப் படித்து நம் அடுத்த தலைமுறைகளுக்கு உண்மையான தலைவர்களை, தலைமைப் பண்புகளை அடையாளம் காட்டுவது தமிழ் பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும். 

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு காரணம், அடுத்த தலைமுறை தமிழ் தலைவர்கள், சான்றோர்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும்தான் உள்ளார்கள். அவர்கள் எங்கோ வானத்தில் இருந்தோ, வேறு நாடுகளில் இருந்தோ, நம் தமிழ் சமூகத்தை, நம் மொழியை, மக்களை வழிநடத்த வரப்போவதில்லை.  மேலும், இன்றைய நம் குழந்தைகள், நாம் காணும் தற்போதைய பல தற்குறித் தலைவர்களை பார்த்து குழம்பி விடாமலும், தவறான முன்னுதாரணங்களை பெற்றுவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

தமிழ் சமூகம், தமிழ் பேசும் அனைவரையும் உள்ளடக்கியது. அவர்கள் எந்த மதம், எந்த ஜாதி, எந்த ஊர், எந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்பதை எல்லாம் தாண்டி, தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் மொழி, தமிழ் மக்களின் நலன், இன்றைய நம் சமுகத்தின் பிரச்சினைகள், தன்னலமற்ற பண்பு,  நாளை நம் சமூகம் பயணிக்க வேண்டிய தொலைநோக்கு பாதை எது? என அனைத்தையும் அறிந்த சிலரே நம் சமூகத்திற்கு தலைவர்களாக தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் வீட்டில், வீதியில் அடையாளம் கண்டு, அவர்களை செதுக்கி, வளர்த்து உருவாக்க  வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

இன்றைய நம் தமிழ் சமூகம் சிந்தைகளால் சிதறுண்டு கிடக்கிறது. இன்று தமிழர்களுக்குள் ஒற்றுமை உருவாக வேண்டியதும், அவர்கள் நல்ல தலைமையை அடையாளம் காணவேண்டியதும் அவசியமாகும். நம் முன்னே, நம் காலாச்சாரத்தில் எவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளதோ அவ்வளவு புறம்தள்ள வேண்டியதும் உள்ளது. பெரியார், அண்ணா போன்ற தன்னலமற்ற தலைவர்கள் அடையாளம் கண்டு ஒதுக்கிய குப்பைகளைப் போல இன்னும் விடுபட்டுப் போன பல குப்பைகளும் நம் சமூகத்தில் தொடர்கிறது. இதை இன்றைய சுயநலம் கொண்ட தலைவர்கள் பலர் பயன்படுத்தி தன் பிழைப்பை ஓட்டிக்கொண்டுள்ளார்கள்.  எனவே எதிகால தலைவர்களை, சமூக சேவகர்களை, தியாகிகளை தன் வீட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் நல்ல விஷயங்களையும், சமுதாயத்திருக்கு ஒவ்வாத விஷயங்களையும் பகுத்தறிந்து நம் குழந்தைகளை வளர்த்தெடுக்கவேண்டும்.

 

ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கவேண்டும்?  

ஒரு நல்ல தலைவன் என்பவன் எதோ வானத்தில் இருந்து வந்தவன் இல்லை என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.  அது, நீங்களாகவோ, நானாகவோ, நம் குழந்தைகளாகவோ கூட இருக்காலாம்.  டாக்டர் உதயமூர்த்தி “நீதான் தம்பி முதலமைச்சர்” என்ற நூளில் மிக அழகாக இதை விளக்கியுள்ளார். ஒரு மனிதன் அவன் வாழ்ந்த காலத்திலும், அவன் இறந்த பிறகும் அவன் இந்த சமுதாயத்தால் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி,  சமூக வளர்ச்சிக்கு தன்னலமற்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனாக இருக்கவேண்டும்.

 

நம் தமிழ் சமூகத்தில், உதாரணங்களாக தந்தை பெரியார், காமராசர், கக்கன், அண்ணா, ஜீவா  என எத்துனையோ பேர் தான் வாழ்ந்த வாழ்க்கையே உதாரணங்களாக விட்டுவிட்டு சென்றுள்ளார்கள்.  ஆனால் இன்று அவர்களின் வாழ்வியல் நமக்கு வரலாறாக மட்டுமே இருக்கிறது. இந்த பண்புகளை உள்வாங்கி அவர்களிடம் கற்று வளர்ந்த இன்றைய தலைவர்கள் தன்னை அவர்களைவிட அல்லது அவர்கள் அளவிற்காவது பண்புடன், சுயனலமற்று விளங்குகிரார்களா? யோசிக்கவேண்டும். அங்கொன்று, இங்கொன்று என்று தோன்றும் நல்ல பண்புள்ள ஒரு சிலரைத்தவிர இன்று பெரும்பாலும் சுயநலம், தன் குடும்பம் தன் பிள்ளை, என்று வயிற்றுப்பிழைப்பிற்காக வாழும் பலரைத்தான் நாம் தலைவர்களாக கொண்டுள்ளோம்.

 

இதில் சூட்சுமம் என்னவென்றால், இன்று ஒரு தலைவர் வளர்ந்துவிட்டால், அதன் பிறகு அவர் மக்களால் கட்டுப்படுத்த முடியாத உயரத்திற்கு செல்லக் கூடிய ஆபத்து இந்த சமூகக் கட்டமைப்பில் இருக்கிறது.  

 

எனவே ஒரு தன்னலமற்ற தமிழ் தலைவரை எப்படி அடையாளம் காண்பது?

  1. தன்னை ஒரு மரியாதைக்குரிய முதன்மை வேலையாள்/பணியாளர் என்பதே தலைமையின் பொருள். மக்களின் எஜமானர் அல்ல என்பதை உணர்ந்தவராக இருக்கவேண்டும்.
  2. ஒரு சிறந்த சமுதாக தொண்டராக, பொது நல நோக்குள்ள அதற்காகவே வாழ்க்கையை அர்பணித்தவராக இருக்கவேண்டும்.
  3. எதிரில் இருப்பவரை எதிரியாகக் கருதாமல், யார் மாற்றுக்கருத்தை சொன்னாலும், நல்லவையாக இருந்தால் தட்டிக்கொடுத்து அவற்றை ஏற்றுக்கொள்வதும், அல்லவையாக இருந்தால் அதை உணர்த்துவதும் முக்கியமான பண்பாகும்.
  4. ஒருவர் சிந்தனை, சொல், செயல் இவற்றில்  வேறுபாடு கொண்டவராக இல்லாமல் இருப்பது.
  5. தற்பெருமை கொள்ளாமல், மற்றவர் புகழ்வதானால், புலகாங்கிதம் அடையாமலும், இகழ்வதனால் இடிந்து போகாமலும் இருக்க வேண்டும்.
  6. ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டு மக்கள் இடும் கட்டளையை தலைமேல் ஏற்று செய்யும் தலைமை ஒருங்கிணைப்பாளராக, தலைமைத் தொண்டனாக இருக்கவேண்டும்.
  7. தன் பதவியின் மேல் பற்று இல்லாமல், தன்னைவிட சிறந்த நிர்வாகியை, தலைமையை அடையாளம் காணும்போது அவர்களை முன்னிறுத்தி தான் பின்செல்லும் ஒரு தொடர் ஓட்டமாக தலைமையைக் கருதவேண்டும்.
  8. தன்னுண்டைய அறிவின்மை மற்றும் தன் ஒவ்வொரு அசைவும் பல சாதாரண மக்களின் வாழ்க்கையை, அவர்களின் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்ற விழிப்புணர்வுடன் செயலாற்றவேண்டும்.
  9. தன்னை புகழும் அடிவருடிகளை அருகில் விடாமல், தன்னை புகழ்பவர் எதோ ஆதாயம் எதிர்பார்க்கிறார். சட்டத்திற்கு புறம்பான செயலை செய்யப்போகிறார் என்று உணர்ந்து எச்சரிக்கையாக அவரை தள்ளிவைக்கவேண்டும்.
  10. தன்னை முல்லைப் படுத்தாமல், தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவரை, சமூகத்தை உயர்த்துபவராக இருக்க வேண்டும்.
  11. 1. சுய வளர்ச்சி (நன்கு படிப்பது, அறிவை, சிந்தனையை வளர்த்துக்கொள்வது) 2. சுய முன்னேற்றம் (அறிவைக் கொண்டு நேர்மையாக தனக்கு தேவையான் பொருளை தன் திறமையால் நேர்மையான வழியில் ஈட்டி தன்னிறைவு அடைவது) 3. சமுதாய ஈடுபாடு (தன் சுய தேவைகள் பூர்த்தியடைந்து, தன் குடும்பம் தன்னை நம்பி இல்லை என்ற நிலையில், சமுதாய சேவையில் ஈடுபடுவது.  பொது வாழ்வில் தலைவனாக வந்தபிறகு எப்படி பொருள் ஈட்டுவது என்பதை எண்ணாமல் இருப்பது.) என்ற நிலையில் சமுதாய சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது.  
  12. வெளிபாடையான வாழ்க்கை மற்றும் அணுகுமுறை. மனதில் பட்டதை பளிச்சென சொல்லுவதும், யார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எண்ணாமல், எது மக்களுக்கு, சமுகத்திற்கு நல்லதோ அதை தெரிவிப்பது. 
  13. குடும்பத்தவர்களோ, உறவினர்களோ தன் பொது வாழ்க்கை பெயரை,புகழைப்  பயன்படுத்தி எவ்வித பயனும் அடையாமல் பார்த்துக் கொள்வது.
  14. இரவோடு இரவாக தலைவராக உருவெடுக்காமல், பத்து, இருபது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தன் வாழ்வியலை, தன் அறிவை, தன் கொள்கையை, சிந்தனையை கூர்மையாக்கி, தன்னை தயார்படுத்திக்கொண்டு, தன் தலைமைப் பண்பை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைவது.
  15. தன் குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட தனக்குப் பின்னால் சமுதாயத்தில் தன் பெயரை பயன்படுத்தி அரசியலுக்கோ, பொது வாழ்க்கைக்கோ வந்துவிடாமல், வாரிசு அரசியலை உருவாக்காமல் நடுநிலைமையுடன் இருப்பது .
  16. நிறைய படிப்பது, படிப்பதன் வெளிப்பாடாக பல நூல்களை எழுதுவது.  ஒரு சிறந்த படிப்பாளிதான் ஒரு சிந்தனையாளனாக உருவாகமுடியும். ஒரு சிந்தனையாலன்தான் பல நூல்கலை எழுத முடியும். அப்படி பல நூல்கலை எழுதுபவந்தான் சிந்தனை தெளிவு, கொள்கைத் தெளிவு பெறமுடியும்.  என்வே நல்ல வாசிக்கும் பழக்கமும், சமூகக் கோபம குறித்த தன் சிந்தனைகளை பதிவு செய்யும் திறமையும் கொண்டவராக இருப்பது.
  17. பணம், பதவி, புகழ் என்று எதற்கும் நாட்டம் கொள்ளாமல் ஒரு பற்றற்ற துறவியைப்போல் உள்ள வாழ்க்கையின் சூட்சுமம் அறிந்த மனம் கொண்டவராக இருப்பது.
  18. மொழிவழி மாநிலங்கள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில், அந்தந்த மாநிலங்களை அந்த மாநில மொழி பேசும் மக்களின் தாய்மொழியை பேசுபவர்தான் தலைவராக வரமுடியும். எனவே, மொழியுணர்வு, மாநில உணர்வு அதற்குப் பிறகு தேசப்பற்று, உலகப்பற்று கொண்டவராக இருக்கவேண்டும்.
  19. தன் மொழி, இனத்திற்கு ஒரு சிக்கல் வரும்போது, தன்னையே அதற்கு அர்ப்பநிப்பவராக  இருக்க வேண்டும்.

 

இவ்வளவு கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு மனிதன் நல்லவனாக வாழமுடியுமா என்ற கேள்வி நம் குழந்தைளுக்குத் தோன்றும். இதைவிட ஒருபடி மேலே போய், தன் திருமணம்கூட, பொதுவாழ்விற்கு இடையுறாக இருக்கும் என்று அஞ்சி பிரமசாரியாகவே வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்த காமராசர் போன்றோரை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை நம் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.

 

ஒருமுறை  காமராசரை ஒரு கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். காமராசரும் வந்துவிட்டார். அந்த கட்டிடத்தின் உரிமையாளர் காமரசரிடம் வந்து, ஐயா, என் கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர், வேலை சரியாக முடியவில்லை என்று அனுமதி கொடுக்க மறுக்கிறார். முதலமைச்சர் திறப்புவிழாவிற்கு வருகிறார் என்று சொல்லியும் கேட்கவில்லை. அதுமட்டுமின்றி, நான் நினைத்தால் உங்கள் முதலமைச்சர் ஆகமுடியும், அவரால் ஒரு ஆட்சியர் ஆகமுடியுமா  என்று திமிராகச் சொல்கிறார் என்று பற்றவைத்தார். இதைக் கேட்ட காமராசர், சிரிப்பை அடக்கமுடியாமல் கூறினாராம், அவர் சரியாகத்தானே சொல்லிருக்கிறார், அவர் படித்தவர், அவர் நினைத்தால் தேர்தலில் நின்று முதலமைச்சராக முடியும், என்னால் அவர் நிலையை அடைய முடியுமா? என்னை அந்த கலெக்டரிடம் அசிங்கப்படுத்திவிட்டாயே என்று கூறிவிட்டு, நான் இப்போது உன் கட்டிடத்தை திறந்து வைத்து விடுகிறேன். அவர் அனுமதி அளித்ததும் தியேட்டரை நடத்திக்கொள் என்று திறந்துவைத்துவிட்டு, நேராக ஆட்சியர் வீட்டிற்கு முதலமைச்சர் வண்டியை ஓட்டச்சொன்னாராம்.  நேராக ஆட்சியர் வீட்டிற்குப் போய் அந்த ஆட்சியருக்கு வணக்கம் சொல்லி நன்றாக பணி செய்கிறீர்கள். உங்களைப்போல் நேர்மையானவர்கள் தான் இந்த நாட்டிற்கு வேண்டும். உங்களைப்போல் நேர்மையானவர்கள் நிர்வாகம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் எல்லாம் சிறை சென்று சுதந்திரத்திற்கு  போராடினோம். என்று சொல்லிவிட்டு ஆட்சியரின்  மனைவியை அழைத்து காபி கொடுக்கச்சொல்லி குடித்துவிட்டு, அவரிடம் சொன்னாராம், உங்கள் கணவரைப்போல் உங்கள் மகனையும் நேர்மையானவராக இந்த நாட்டிற்க்கு வளர்த்துக் கொடுங்கள் என்று.  இப்படிப்பட்ட தலைமைப் பண்புகளைக் கொண்ட நல்லோர்களை கொண்டது நம் வரலாறு. ஆனால் இன்று திரு.சகாயம், திரு.உமாசங்கர் போன்ற நேர்மையான ஆட்சியர்கள் அடையும் நேர்மைக்கான பரிசுகளைப் பாருங்கள். எனவே, குழந்தைகளுக்கு காமராசர் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கும்போதுதான் அவர்கள் மனதில் சரியான் விதைகள் விதிக்கப்படும். அந்த விதைகள் விருட்சம் அடையும்போது நல்ல தலைவர்கள் நம் சமூகத்திற்க்கு கிடைப்பார்கள். 

படித்த சில வாசகங்கள்: 

  • தன்னையே தண்ணீரில் கரைத்து சுவையை கூட்டும் உப்பு போன்று இருக்கவேண்டும்.
  • தன்னையே எரித்து, உருக்கிக்கொண்டு உலகிற்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்தியைப் போன்று இருக்கவேண்டும்.
  • அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.
  • தூக்கம் தொலைக்கவேண்டும், துன்பம் தாங்கவேண்டும், விமர்சனம் ஏற்கவேண்டும்.
  • தலைவன் என்பவன் தலையில் கிரீடம் சுமப்பவனல்ல , தழும்புகளை தாங்குபவன்தான்.
  • தலைவன் என்பவன் அடக்கி ஆள்பவன் அல்ல, அனைவரையும் அரவணைத்து ஆள்பவன்

ச.பார்த்தசாரதி

by Swathi   on 16 Jan 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.