LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!

வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !!

குறிப்பு;

 ”வெற்றிச் சிந்தனைகளைப்பற்றியும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிகளைப்பற்றியும்” எனது கருத்துக்களை பல நற்றமிழ் உள்ளங்களுடன் பல்லாண்டுகாலமாக பகிர்ந்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னிடம் சொன்னது - ”இவற்றையெல்லாம் எழுத்தில் நீங்கள் வடிக்கவேண்டும்” என்பதுதான்.

குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களும்; வலைத்தமிழ் குழுவும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திவந்தனர். அவர்களுக்கும், எனக்கு உற்சாகமும் ஊக்கமும் தந்துகொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒருவழியாக நான் இத்தொடரை துவங்கியிருக்கிறேன். இத்தொடரை படித்துவருபவர்கள், அரும் பெரும் சாதனைகள் புரிய, எனது எழுத்துக்கள் சிறிதளவாவது உதவவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்.

வாரம் 2 – என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள்:

இத்தொடரை துவக்கிய சென்ற வாரத்தில், என்னையும், எனக்கு தூண்டுகோலாக அமைந்த இரு புத்தகங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அப்புத்தக நாயகர்களான ஜி.டி. நாயிடு அவர்களும், வாஷிங்க்டன் கார்வார் அவர்களும் ”வெற்றிச்சிந்தனையாளர்கள்” என்ற வட்டத்துக்குள் வராதவர்கள். ஒருவர் தொழில் துறையிலும், மற்றவர் தாவர இயல் துறையிலும் மிகப்பெரும் சாதனையாளர்கள். இருவரின் பாதை மிகவும் கரடுமுரடானது. நமக்கு மிகப்பெரும் படிப்பினைகளை தரவல்லது.

இந்த இருவருக்கும், இவர்கள் போன்று பல்வேறு துறைகளில் மலைக்கவைக்கும் சாதனை படைத்த பலருக்கும் அமையப்பெற்ற பொதுப்படையான பண்புகள் எவை? அப்பண்புகளை முழுதும் புரிந்துகொண்டு நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தினால் நம்மாலும் சாதிக்கமுடியுமா? எந்த வகையில் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் இவர்கள்? இக்கேள்விகளுக்கு விடைகாணப்போகுமுன், என்னைக்கவர்ந்த வெற்றிச்சிந்தனையாளர்கள் சிலரைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலில் நான் பிறந்து வளர்ந்த சூழல் எனக்கு உதவியது என்று சொல்லவேண்டும்.

எனது தந்தை - செல்லைய்யா, தாய் - அழகம்மாள் இருவருமே பள்ளியில் பயின்றது சில ஆண்டுகளெனினும்; அனுபவப்படிப்பில் மேதைகள். கல்வியின் முக்கியத்துவத்தை எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனக்கு உணர்த்தியவர்கள்.. உழைப்பு, நேர்மை, ஏழை / பணக்காரர் வேறுபாடின்றி எல்லோரையும் சமமாக மதித்தல், தன்னம்பிக்கை, துணிவு, தயங்காமல் பிறருக்கு உதவுதல், நட்பினைப்பேணுதல் – போன்ற பல நற்பண்புகளை எனது பெற்றோர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்ததை அவதானித்து வந்தேன். அவர்கள் வாழ்வினில் செல்வச்செழிப்பு இல்லையெனிலும் மற்றெல்லாவகைகளிலும் வளமான வாழ்க்கையாக இருப்பதை உணர்ந்தேன். இப்பண்புகளில் தடுமாற்றம் உடைய குடும்பங்களில் வந்த சிக்கல்களையும் அறிய முடிந்தது.

தனது முப்பத்தைந்து வயதிலேயே இயற்கையெய்திய பேராற்றல் நிறைந்த எனது தம்பி சிற்றரசு, தமது 16 வயதினிலேயே திருமணம் நடந்து இல்லறம் துவங்கிய எனது தங்கை அருட்செல்வி, என் பெற்றோர்கள் – என இவர்கள் நால்வருமே ஒவ்வொருவகையில் எனக்கு வியப்பளிக்கும் வகையில் ஆற்றலும், அறிவும் பெற்றிருந்தது எனக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

எனது அம்மாச்சி (என் அன்னையின் தாயார்) செல்லம்மாள், தன் கணவரை இழந்து பல்லாண்டுகாலம் வாழ நேரிட்டபோதும்; நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவுடன் வாழ்ந்தார். அவருடன் பழகிய அனுபவமும் என்னை செதுக்கியதென்றால் மிகையல்ல. தன் ஒரே மகள் கணவருடன் மலேயா நாட்டில் பல்லாண்டுகாலம் வாழ்ந்தபோதும், என் அம்மாச்சி, ”தன்னந்தனியராய், ஆணாதிக்க சமுதாயம் தந்த அத்தனை இடர்பாடுகளையும் சர்வ சாதாரணமாக சமாளித்தார்” – எனப்பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.

எப்போதும் நம்பிக்கையூட்டும் நல்ல நண்பர்கள், நல்லுறவுகள் எனக்கு அமைந்ததும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

எப்போதும் உயர் எண்ணங்களுடன் எனக்கு நம்பிக்கையூட்டி “தொடர்ந்து படியுங்கள்” என ஊக்கப்படுத்திய எனது உறவினர் வழக்கறிஞர் துரை மகாதேவன், எனது கிராமத்திலிருந்து, முதல் கல்லூரி பேராசிரியரான அண்ணன் முத்துசாமி, எங்கள் குடும்பத்தின் நெருக்கமான உறவான மாமன் நாராயணசாமி, பெரும் கடைமை உணர்வுகொண்ட எனது நண்பர் தமிழரசன் – என என் நல்வாழ்வில் அக்கரை கொண்ட பலரின் உதவிகளும், ஊக்கங்களும் எனக்கு தொடர்ந்து கிடைத்துவந்தது. பட்ட மேற்படிப்பு திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலும், Mphil படிப்பு சென்னையிலும் முடித்து கல்லூரி ஆசிரியராக நான் பணியை துவக்கியதும், பணியில் சேர்ந்து இரு ஆண்டுகளிலேயே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்ததும் நான் சற்றும் எதிர்பாராதவை.

”இந்தப்படிப்பு படித்து இப்படி முன்னேறவேண்டும்” என்ற தெளிவாக பாதை நான் வகுத்துக்கொள்ளாவிட்டாலும்; தற்செயலாக எனக்கு வாய்த்த துறையில் என்னுடன் நெருங்கிப்பழகி வழிகாட்ட யாரும் எனக்கு இல்லாவிட்டாலும் – நம்பிக்கையுடன் நான் இயங்கிக்கொண்டிருந்ததற்குக்காரணம் எனது குடும்பத்தினரும், நட்பும், உறவும்தான்.

மதுரை பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் நான் ஆய்வு செய்துகொண்டிருந்த நேரம் எனக்கு ஒரு புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது. அதனை படிக்கத் துவங்கியதிலிருந்து முடிக்கும் வரை கீழே வைக்கவே முடியவில்லை. உயிரோட்டமான நடையும், கருத்துச்செறிவும், நடைமுறைவாழ்வின் அனுபவங்கள் நிரம்பியதுமான் அந்த புத்தகத்தின் தலைப்பு - “How to win friends and influence people?

Dale Carnegie எழுதிய அந்தப்புத்தகத்தில் - ””நீதி, நேர்மை, பிறரை மதித்தல், நட்போடு பழகுதல், அன்பாயிருத்தல், தயங்காது உதவுதல்” என என் பெற்றோரால் உணர்த்தப்பட்ட பண்புகள் விரவிக்கிடந்தன. அப்பண்புகள் தனி மனித, குடும்ப நிம்மதிக்கு மட்டுமின்றி; பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒரு நிறுவன மேம்பாட்டிற்கும் அவசியம் என்பதை அப்புத்தகம் தெளிவாகவிளக்கியது. குறிப்பாக, பிறருடன் சேர்ந்து பணியாற்றும்போது நாம் எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருக்கவேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் தெளிவாக விளக்கியது.

நான் அமெரிக்கா வந்தபின் என்னை ஈர்த்த ஒரு புத்தகம் “ Seven Habits of highly effective people”. இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள். இப்புத்தகத்தை நான் படிக்கும்போதே இதன் ஆசிரியர் Stephen R Covey எழுதிய மற்ற புத்தகங்களையும் வாங்கிவிட்டேன். வெற்றிச்சிந்தனையாளர்களின் கருத்துக்களை ஒலி வடிவில் வழங்கிக்கொண்டிருந்த Nightingale Conant corporation இல் இருந்து பலப்பல ஒலிநாடாக்களை வாங்கி கேட்கவும் துவங்கினேன்.

என்னுள் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்திய மற்ற புத்தகங்கள்:

“Science of getting Rich” by Wallace Wattle

“You were born Rich” by Bob Proctor

“Unlimited Power” by Anthony Robbins

“Psychocybernetics” by Maxwell Maltz

“Compound effect” by Darren Hardy

Several audio programs by Jim Rohn

இதுபோன்று இன்னும் பலப்பல ஒலி நாடாக்களையும், புத்தகங்களையும் வாங்கி எனது இல்லத்தில் ஒரு நூலகம் அமைத்திருக்கிறேன். வாங்கிய அனைத்து புத்தகங்களையும் வேகமாக படித்து முடிக்கவேண்டும் என்ற பேராவல் இருப்பினும், பணிகளுக்கிடையே நேரம் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.

அடுத்தடுத்த வாரங்களில் மேற்சொன்ன புத்தகங்களிலிருந்தும், நான்படித்த மற்ற புத்தகங்களிலிருந்தும் நான் கற்றவற்றைப்பற்றியும்; எனது வாழ்வின் அனுபவத்தின்மூலமாக பெற்றவற்றைப்பற்றியும் கருத்திடுகிறேன். பல்வேறு துறைகளில் பெரும் சாதனை புரிந்தவர்கள் பெற்ற பொதுமைப்பண்புகள் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம். கூர்ந்து கவனித்தாலொழிய, சாதாரணமாகக் கண்டறிய இயலா இப்பண்புகள்தான் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக்கின்றன.

சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6000 கோடி ரூபாய்) கடன் பட்டு, தன் சொத்து அனைத்தையும் இழக்கும் தருவாயில் இருந்த Donald Trump (அமெர்க்க செல்வந்தர்), எப்படி கடனிலிருந்து மீண்டு, மறுபடியும் செல்வச் செழிப்பினை அடைந்தார் என்பதை அடுத்தவாரம் காண்போம். எந்த துன்ப நிலையிலும் தம் நகைச்சுவை உணர்வை அவர் இழக்காமலிருந்ததற்கு ஒரு சுவையான நிகழ்வை தமது “Art of the deal” என்ற புத்தகத்தில் அவரே விளக்குகிறார்.

”இடுக்கண் வருங்கால் நகுக” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்குக்கு ஆழமான பொருளை, ஒரு நிகழ்கால உதாரணத்திலிருந்து நான் உணர்ந்ததும் இந்த நிகழ்விலிருந்ததுதான்.

ஜி டி நாயிடு அவர்கள், லட்சக்கணக்கான பணத்துடன் பம்பாய் சென்று, அங்கு அத்தனையையும் இழந்து ஒரு காசுமின்றி கோவை திரும்பியதை, ஒரு புத்தகத்தில் “முதலாளியாக பம்பாய் சென்று தொழிலாளியாகக் கோவை திரும்பினார்” எனப்படித்தேன். ,அவர் கோவை திரும்பி மீண்டும் செல்வந்தரானார் என்பது வேறு கதை.

செல்வம் தன்னிடம் சேர்ந்தாலும், முற்றிலும் நீங்கினாலும், ஜி.டி. நாயிடு அவர்கள் தம் மனத்தளவில் எப்போதும் பெரும் செல்வந்தராகவே இருந்திருக்கிறார்.. இதுபோன்று நிலைகுலையா மனநிலையை ஜி.டி நாயிடு, Donald Trump போன்றவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பதை அடுத்தவாரம் காண்போம். 

by Swathi   on 25 Jul 2015  0 Comments
Tags: Success Thinkers   Arasu Chellaiah   Vetri Pathai   வெற்றிச் சிந்தனையாளர்கள்   அரசு செல்லையா        
 தொடர்புடையவை-Related Articles
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்: வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !! வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !!
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!  - அறிமுகம் .. வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - அறிமுகம் ..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.