LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

காதல் சுவை

6.1 காதலின் இலக்கணம்

    ஊரடங்கும் வேளையிலே
    உள்ளம் கவரும் சோலையிலே-இவ
    யாருக்காகத் காத்திருந்தா
    ஏரிக்கரையிலே?-அதுதான்
    எனக்கும் புரியலே! (ஊரடங்கும்)

    ஆரணங்கின் மையலிலே
    அந்தியிளம் வெய்யிலிலே
    அங்கொருவர் வருவதுண்டு
    அதையும் சொல்லிவிட முடியலே,
    இங்கிருக்கும் இவமனசு
    எங்கே இருக்குதோ தெரியலே? (ஊரடங்கும்)

    உளறாதே பொன்னம்மா
    உள்ளதைச் சொன்னா என்னம்மா?
    கலங்காதே குப்பமா
    நலுங்கு வைப்பது எப்பம்மா?
    பழங்காலப் பைத்தியம் உங்கள்
    இளங்காதல் ஏற்குமா? (ஊரடங்கும்)

    காரணம் விளங்கியும் கதையேண்டி
    காதலின் இலக்கணம் இதுதாண்டி
    வீணர்கள் இட்ட சாதி வேலிதாண்டி
    விந்தைகள் புரிவதும் அதுதாண்டி!
    ஊரடங்கும் வேளையிலே
    உள்ளம் கவரும் சோலையிலே-அவர்
    வாரேனென்று வாக்களித்தார்;
    வந்து சேரவே-அதனால்
    மனமும் சரியில்லே (ஊரடங்கும்)

    [ரங்கோன் ராதா,1956]

6.2 காதல் பலன்

    பெண் : வாடாத சோலை
    மலர் பூத்த வேளை
    வளர் காதலாலே
    மனம் பொங்குதே! (வாடாத)

    ஆண் : தாமரைப் பூ மேலே
    தாவிடும் மீன் போலே
    காமினி நீயென்
    கருத்தினில் பாய்ந்தாயே

    பெண் : என் காதல் ராஜா,
    எழில் மேவும் நேசா
    மங்காத நிலவே இம்
    மாநிலம்...நாணிடும்...
    மாரனே...வாடாத

    ஆண் : குறும்பும் நியாயமே
    அரும்பே மாரனே!
    கரும்பே ஆசைக் காவியமே!...கரும்
    மாந்தளிர் மேனி
    வாய்த்த என் ராணி!

    பெண் : புகழ்ந்தினிக் கவிபாட
    போதாது நேரம்

    ஆண் : புது மடமயிலே வா
    போவோம் ஆற்றோரம்...

    பெண் : வாழ்வெனும் ஓடம்
    புதுப் பள்ளிக்கூடம்

    ஆண் : மாண்புயர் பாடம் கூறுது
    நேர்வழி சேருது...

    பெண் : ஆற்றோரம் மேவும்
    அடர்சோலை போல
    படர் காதலாலே
    பலன் காணுவோம்;
    சுடர் வீசி வாழ்வில்
    சுகம் காணுவோம் (ஆற்றோரம் மேவும்)

    [படித்த பெண்,1956]

6.3 கடல் கடப்பேன்

    உனக்காக எல்லாம் உனக்காக-இந்த
    உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
    எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
    எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

    கண்ணுக்குள்ளே வந்து
    கலகம் செய்வதும் எதுக்காக?-மெள்ளக்
    காதுக்குள்ளே உந்தன்
    கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்)

    பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே
    பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?
    துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா?-சொல்லு
    சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெ
    கெடக்கணுமா (உனக்)

    இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
    இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;
    மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி
    மின்னல் மழைபுயலானாலும் துணிஞ்சு
    இறங்கிடுவேன் (உனக்)


    [புதையல்,1957]

6.4 ஆசைக்குப் பேதமில்லை

    கண்ணுக்கு நேரிலே, கலை என்ற தேரிலே
    கைகொட்டி ஆடிவந்த காதலே.
    இன்னும் சந்தேகமோ?
    ஏனிந்த வேகமோ?

    மின்னலின் தோழி எந்தன் மீதிலே
    எண்ணங்கள் யாவும் அங்கே
    எழிலன்னம் நானும் இங்கே
    இனிவிட்டுப் போவதெங்கே?

    இனிவிட்டுப் போவதெங்கே
    முடிவைக் காணாமலே....
    சொல்லக் கூடாததெல்லாம்
    தோன்றும் இந்த நாழிகை

    பல்லக்கு போன்ற மங்கை
    பக்கம் வந்தால் வெட்கம் மீறாதோ?
    ஆசைக்குப் பேதமில்லை
    அதில் மட்டும் வேதமில்லை

    அறிவுக்கே வேலையில்லை
    குறிவைக்கும் போதிலே
    கொஞ்சம் பெண் மோகம் வெல்லும்
    நெஞ்சம் ஏது பாரிலே?

    கொம்புத் தேனான என்னைக்
    கொள்ளை கொண்டீர் வெள்ளையன்பாலே!

    [அல்லாவுதீனும் அற்புதவிளக்கும்,1957]

6.5 நாணம் எதற்கு

    ஏதுக்கோ?.......
    இருவிழி மருளும் நாணங்கள் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

    என்ன நினைவோ? இளமைத் துணிவோ?
    சின்ன வாயில் புன்னகை ஏதுக்கோ? ஏதுக்கோ?

    புன்னைக் கொம்பிலே புரளும் பூங்கொடி
    மண்ணில் சிந்திடும் வாச மலரும்,
    விண்ணோடு குலவும் கண்ணாடி நிலவும்
    வீணாகும் மௌனம் ஏதுக்கோ?
    வீசும் வேல்பார்வை ஏதுக்கோ?..... (ஏதுக்கோ)

    ஓடைத் தாமரை ஏடுபோல்-முக
    சாடை காட்டிடும் தங்கக் கலசமே!
    ஒய்யார நிலையே உண்டாக்கும் சிலையே
    ஓயாத குறும்பும் ஏதுக்கோ?
    உல்லாச மயக்கம் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

    [சௌபாக்கியவதி,1957]

6.6 ஆசை வளருது

    இல்லாத அதிசயமா
    இருக்குதடி ரகசியமா
    எதைநெனச்சி இவமனசு
    இப்படி யாச்சுதோ? (எதை)

    கண்ணுக்குள்ளே புகுந்திருந்த
    காதலனைப் பிரிஞ்சிருந்தா
    கவலைப்பட்டு மெலிவதுண்டு -அப்படியிருக்குமா?-இல்லை

    முன்னும் பின்னும் பழக்க மின்றி
    மொதன் மொதலாப் பாத்திருந்தா
    என்னென்னமோ பண்ணிடுமாம்-இப்படியிருக்குமா?

    சின்னஞ்சிறு பருவத்திலே
    ரொம்ப ரொம்ப ஆழத்திலே
    சிந்தனைகள்
    செல்வதுண்டு-அதாயிருக்குமோ?-இல்லை

    கன்னியரின் கனவினிலே
    காணுகின்ற கடலுக்குள்ளே
    எண்ணமீன்கள் மேய்வதுண்டு -இதாயிருக்குமோ?

    மன்னன் மேலே வெச்ச
    ஆசை வளருது-மனசு
    வண்டிச் சக்கரம் போலே
    சும்மா சுழலுது

    வேலையாய்ப் போனவரு
    வெற்றியுடன் வருவாரு
    மாலயிட்டு மணமுடித்து
    வாழ்விலின்பம் தருவாரு

    வாழைத் தோட்டம் போல தழைத்து
    மங்கலமாய் வாழ்வாரு
    மஞ்சுளா முகத்தினிலே
    மஞ்சளாகத் திகழ்வாரு

    வௌக்கி எடுத்த
    வெங்கலத் தவலை-உனக்கு
    என்னடி கவலை

    அந்த ராசாமகன் ராசாவுக்கு
    ராசாத்தியாய் ஆவதற்கு
    நல்ல நாளும் வந்து இருக்கு ஆனாலும்
    இந்த ராணிக்குத் தான்கொஞ்சம் கிறுக்கு (இல்லா)

    [கற்புக்கரசி,1957]

6.7 விருந்துக்கு அழைக்குது

    ஓ.......
    சின்ன மாமா!-ரொம்ப நேரமா-உன்னைத்
    தேடி மனசு வாடுறேன் குடிசையோரமா
    பொன்னுச்சரம் போட்டுகிட்டு-
    பூத்தமுகம் காட்டிக்கிட்டு
    வண்ணக்கிளி வந்திருக்கேன் வாசப்பக்கமா
    பொண்ணாளாம் என்னையே கண்ணாலம் பண்ணியே
    எந்நாளும் வாழவே ஏந்தான் தயக்கமோ? (சின்ன)

    ஆசை வீரா-மீசைக்காரா-பேசறீர் ஜோரா-மாறா
    நேசம் மறந்தீரா?
    வீசுங்காத்து விருந்துக் கழைக்குது
    வித்தாரக்குருவி முத்தாரங்கேக்குது (சின்ன)

    கண்ணாலே வெல்லும் மாது-நானே அது
    சொன்னாலே விளங்காது
    என்ன வேணும் ஏது வேணும்
    என்னைப் பார்த்துக் கேளுங்காணும்
    சொந்தக்காரி வேணுமா?
    சூழ்ச்சிக்காரி வேணுமா? (சின்ன)


    [சௌபாக்கியவதி,1957]

6.8 சக்திக்குமேல் ஆசை

    ஓ கோ கோ மச்சான் நீங்களா?-இங்கே
    உள்ளே நுழைய வந்தீங்களா?
    கேக்காத கதையைக் கேட்டிங்களா?-அதை
    கேட்டிருந்தும் கேள்விகளைப் போட்டீங்களா!

    வண்ணமுக வெட்டழகி
    வட்டவிழிக் கட்டழகி
    சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா?-அவ
    அன்னநடை மின்னலிடை
    அத்தனையும் சேர்ந்து ஒரு
    பொண்ணாவந்து பொறந்திருக்கா புரியுமா?
    முத்தத்திலே மோடிகளிருக்கு
    கட்டிப்போடும்-கையை
    கட்டிப்போடும்-நித்தம்
    ரத்தத்திலே நீஞ்சிற சாத்தான்
    சத்தம் போடும்-மச்சான்
    சத்தம் போடும்
    சக்திக்கு மேல் ஆசையிருக்கு
    தடவிப்பார்க்க மீசையிருக்கு
    முத்திப்போன காதல் கிறுக்கு
    முளிச்சுக்ிட்டே குருடாயிருக்கு
    அவலை நினைச்சு உரலை உருட்டும்
    அயித்தை மவனைப் பாருங்கடி

    கவலை புடிச்சிக் கலங்குறாரு
    காலைப் புடிச்சி வாருங்கடி
    தவளை தத்துற நடை நடக்குற
    சங்கதி என்ன கூறுங்கடி
    கொவளை நிறைய தண்ணி வச்சு அதில்
    இவரைப் புடிச்சி போடுங்கடி
    குதிச்சு ஆடுங்கடி-வந்து
    கூட்டமாப் பாடுங்கடி
    மதிச்சு நடங்கடி-வடை
    மாலையப் போடுங்கடி

    போட்டிக்கு வந்தவரு
    மாட்டிக் கிட்டாராம்
    பொண்ணுக்குக் கிண்ணி வச்சு
    கோட்டை விட்டாராம்
    பூட்டிய வீட்டில்
    புகுந்து கிட்டாராம்
    பொட்டியைத் தேடி
    ஆளை மிதிச்சாராம்

    கத்தியைக் கண்டொருத்தர்
    காதல் கொண்டாராம்
    கையில் கொடுத்தவுடன்
    கண்ணீர் விட்டாராம்
    எத்தனை பேரோ
    ஏமாந்துட்டாராம்
    சத்திரவீரர் வித்தை
    காட்டுராறாம் (போட்டி)

    சந்தர்ப்பம் பாத்து ஒரு
    சாமி வந்தாராம்
    சக்தி நிறைஞ்சுதுண்ணு
    சாம்பல் தந்தாராம்
    மந்திரம் பண்ணி
    மயக்கப் பார்த்தாராம்
    மயங்காத கன்னி
    விலங்கைப் பூட்டினாளாம் (போட்டிக்கு)

    வாடி வாடி கட்டப்பொண்ணெ வாடி
    வந்திருச்சு ஜோடி மந்திரத்தை மீறி
    வாசலுக்கு முன்னாடி-ஹேய்
    கருப்போ சிவப்போ மச்சான்
    விரும்புறது பெண்தானடி
    கசப்போ இனிப்போ மச்சான்
    ஒம்மேலே ஒரு கண்தானடி
    பாரு பாரு பக்கம் வந்து பாரு
    ஊரு பேரு ஒனக்குச் சொல்லுவாரு
    ஒண்ணுமில்லே தகராறு-ஹேய் (கருப்போ)

    ஏது ஏது இது தெரியாது
    இருக்குது - காது
    எதுவும் கேட்காது
    எடத்தை விட்டு நகராது - ஹேய் (கருப்போ)

    வீரா-வீராதி வீரரான சூரா!
    மாறாத மோகங் கொண்டீரா?
    மாணோடுறவாட வந்தீரா?

    ஏறாத மாமலையில் ஏறி வேங்கையோடு
    போர் புரிந்து பெரும் பேறடைந்தோமென
    ஊர் திரும்பி விடுவீரா......?
    பாரினில் அதிகாரமுடைய
    நாரியரிடம் உமது சக்தி
    நீரினில் விழும் தீ!

    வேருடன் எல்லா விதிகளும்
    மாறிடும் ஒரு மங்கை சொல்லில்
    அதை மறந்தீரோ?-இத்தனை கேட்டும்
    அறிவிழந்தீரோ?

    ஓரக் கடலில் ஈரமிருந்தும்
    ஊன்றும் விதையதில் உயிர் பெறாது;
    உணர்ந்து திரிந்து ஓடினாலே
    உங்கள் உயிர் இனி உடலில் வாழும்
    அதை மறந்தீரோ-இத்தனை கேட்டும்
    அறிவிழந்தீரோ?


    [சௌபாக்கியவதி,1957]

6.9 வண்டைத்தேடும் மலர்

    சிங்காரப் பூங்காவில்
    ஆடுவோமே
    தேனூறும் தென்பாங்கு
    பாடுவோமே!

    கன்னிப்பொண்ணு
    கலங்குது நின்னு
    என்னமோ எண்ணி
    சுழலுது கண்ணு

    அன்னந்தனைக் கண்டொருத்தன்
    ஆசைகொள்ளுறான்
    கன்னம் வச்சுக் கொண்டுபோக
    கனவு காணுறான்

    என்னைக் கொண்டு செல்லும்
    அந்தக் கள்ளன் யாரடி?
    எங்களுக்கென்ன தெரியும்
    சொன்னாத்தானடி

    வண்ண மலரடி முகம்
    வாடுவது ஏனடி?
    வண்டு வரவில்லை என்ற
    வருத்தந்தானடி (கன்னி)

    கையும் கையுந்தான் மேளம்-இந்தக்
    கணக்குக்குள் இருக்குது தாளம்;
    சதங்கைகட்டி -தாளத்தை ஒட்டிக்
    கும்மியுங்கொட்டிக்-கண்ணையும் வெட்டிப்
    பலபல கலைகளை அபிநயங்காட்டிப்
    பம்பரப் பெண்களின் நாட்டியப்போட்டி (கையும்)

    ஒன்னத்தானே,ஒன்னத்தானே,
    ஓ சின்ன மானே
    ஊமையானதேனடி?
    ஒண்ணுமில்லை போங்கடி
    கன்னத்திலே ரோஜா நிறம்
    காணுவதும் ஏனோ?
    காலம் செய்யும் வேடிக்கைக்கு
    காரணந்தான் நானோ?
    காணாத காட்சியை எல்லாம்
    கற்பனை பண்ணுதல் ஞாயமா?
    காணாம எப்படியம்மா
    கற்பனை வந்திடும் மாயமா?
    ஒன்னத்தானே- ஒன்னத்தானே (சிங்கார)


    [சௌபாக்கியவதி,1957]

6.10 இன்பம் காணலாம்

    பெண்:

    சின்னப்பெண்ணான போதிலே
    அன்னையிடம் நான்ஒரு நாளிலே
    எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா?-அம்மா
    நீசொல் என்றேன்! (சின்ன)

    வெண்ணிலா! நிலா!-என்
    கண்ணல்லவா கலா!-உன்
    எண்ணம்போல் வாழ்விலே!
    இன்பம்தான் என்றாள்! (வெண்)

    கன்னிஎன் ஆசைக்காதலே!
    கண்டேன் மணாளன் நேரிலே!
    என்னாசை காதல் இன்பம் உண்டோ?-தோழி
    நீ சொல் என்றேன் (வெண்)

    கண்ஜாடை பேசும் வெண்ணிலா!
    கண்ணாளன் எங்கே சொல்நிலா!-என்
    கண்கள்தேடும் உண்மைதனை
    சொல்நிலவே என்றேன்!

    ஆண்:

    வெண்ணிலா! நிலா!-என்
    கண்ணல்லவா கலா!-உன்
    எண்ணம்போல் வாழ்விலே
    இன்பம் காணலாம்!

    [ஆரவல்லி,1957]

6.11 மூடிவைத்த காதல்!

    ஆண் : மஞ்சப்பூசி, பூ முடிச்சி
    மங்கலக் குங்குமம் வச்சு
    கொஞ்சும் கிளி போலவந்த அஞ்சலே-ஒன்ன
    கோயிலுகட்டிக் கும்பிடப்போறேன்
    நெஞ்சிலே!

    பெண் : அக்கம்பக்கம் பார்க்காம,
    அனுமதியும் கேக்காம
    தெக்குச் சீமை ஆடுபோல கத்துறே-சும்மா
    சொக்குப்பொடி போட்டு என்னைச் சுத்துறே

    ஆண் : சங்கம் பழக் கொத்துபோல
    பொங்குகடல் முத்துபோல
    மங்கையே நீ சிரிச்ச-என்
    மனதைத் தட்டிப் பறிச்சு
    கண் கட்டி வித்தை காட்டிக்
    கையைக் கட்டிப் போடுறே
    கருப்பட்டிப் பேச்சுக்குள்ளே
    காதலைவச்சு மூடுறே (மஞ்ச)

    பெண் : சொல்லித்தான் தெரியணுமா?
    சும்மா கம்மா கிளறணுமா?
    கிறுக்குப்போல உளறணுமா?
    உள்ளத்திலே கள்ளத்தனம்
    கூடாதே மச்சான்;
    கோமாளி வேஷங்கள் போடாதே-வெறுங்
    கோணங்கி ஆட்டங்கள் ஆடாதே

    ஆண்: நீ பொல்லாத பொம்புளே,

    பெண் : என்னைப் புரிஞ்சிக்காத ஆண்பிள்ளே,

    ஆண் : அட
    எல்லாம் எனக்குத் தெரியும் பொண்ணே
    எதுக்கு இப்படி நீ தயங்குற-ஒன்னை
    ஏமாத்திட்டுப் போறாப்போல
    ஏக்கம்புடிச்சி மயங்குற

    பெண் : அடி ஆத்தே யாரும்
    பர்த்துகிட்டாக்கா பொல்லாப்பு!

    ஆண் : அட
    அதுக்கெல்லாம் நீ அஞ்சாதே-என்
    ஆத்தங்கரைத் தாழம்பூ! (மஞ்ச)

    [சௌபாக்கியவதி,1957]

6.12 தடைபோடும் நாணம்

    இன்ப முகம் ஒன்று
    கண்டேன்-கண்டு
    எதுவும் விளங்காமல்
    நின்றேன்-அதை
    இரவே உன்னிடம் சொல்ல
    வந்தேன் (இன்ப)

    தேடாமல் அலையாமல்
    நேரிலே-சுகம்
    ஓடோடி வந்தது
    வாழ்விலே
    மனம் ஆனந்தம்
    பாடுவதேனோ-இது
    ஆரம்ப ஜாடைகள்
    தானோ-இன்று (இன்ப)

    தோன்றாத நினைவெல்லாம்
    தோன்றுதே-கண்கள்
    தூங்காமல் ஆசையைத்
    தூண்டுதே-அது
    ஏனென்று கேட்கவும்
    ஓடுதே-புது
    நாணம் வந்தே தடை
    போடுதே-பொங்கும் (இன்ப)

    [நான் வளர்த்த தங்கை,1958]

6.13 பெண் தெய்வம்

    கற்பின் இலக்கணமே
    களங்கமில்லாத திலகமே!
    தீபமே பெண் தெய்வம்-உன்
    கண்ணிலே நீர்பெருகக்
    கவலையிலே மனம் உருகக்
    கடும் பயணம் போவதெங்கே?
    கடும் பயணம் போவதெங்கே?

    பெரும் பாசமே இழந்து-மனம்
    பாதியிலே ஒடிந்து
    உனதாசைக் கலசமே நொறுங்கியதா? (பெரும்)

    சொந்தமும் பந்தமும்
    சுகங்களும் அன்பும்
    சூழ்ந்து கொண்டே தினம் பாராட்டும்.... (சொந்த)

    இன்பமென் றுனை நம்பவைத்துமே
    இடையினில் ஏமாற்றும்-இதில்
    எத்தனை மாறாட்டம்? (பெரும்)

    காலத்தின் கைகளில்
    வண்டியும் மாடும்
    கண்ட திசையில்-அதன்
    மனம்போல் ஓடும்... (கால)

    எங்கு சேருமோ
    என்ன ஆகுமோ
    இங்கில்லையோ கவனம்-எதுவரை
    உன் பயணம்? (பெரும்)

    [நான் வளர்த்த தங்கை,1958]

6.14 பேசும் விழிகள்

    துடிக்கும் வாலிபமே
    நொடிக்குள் போய்விடுமே
    அதற்குள் காண்பதெல்லாம்
    ஆனந்தமே!ஆனந்தமே!

    வளையலின் நாதம்
    வாளோடு சிநேகம்
    வாழ்வின் உல்லாசம்
    மாமணம் வீசும்!

    எனதாசை போலே
    நடந்தால் மண்மேலே
    நாடாளும் ராஜா நீயே-அதனால்
    காண்பதெல்லாம் ஆனந்தமே!

    இனித்திடும் காலம்
    இளமையில் ஜாலம்
    மனத்தினில் புதுமையை
    வளர்க்குது மேலும்

    விழியாலே பேசும்
    அழியா நேசம்
    நிலம் மீதில் நீங்காததே!-அதனால்
    காண்பதெல்லாம் ஆனந்தமே! ஆனந்தமே!

    [மர்மவீரன்,1958]

6.15 சிலைக்குள் தெய்வம்

    பறித்த கண்ணைப் பதித்துவிட்டேன்
    பத்தினியே நீ எந்தன் கணவன் கண்ணே
    எடுத்த கையால் கொடுத்து விடு
    ஏழைக்கு வாழ்வு கொடு!

    இதயக் கோயில் அடுத்தவளே! அருள்மணியே!
    அறங்காத்த தமிழ் மகளே! அம்மா உன்மேல்
    ஆணையிட்டுக் கேட்கிறேன்
    அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா!

    ஏழைக்கு உன் அருள் எட்டாத சிகரமோ?
    இன்னமும் கண்கள் குருடோ?
    இரு செவியும் மந்தமோ-நான்
    அழுதகுரல் கொஞ்சமோ?
    இதயமும் கல்லானதோ?
    இரக்கம் பிறக்கவில்லையோ?

    வாய் திறந்து சொல்லம்மா?-உன்
    மகளின் கதையைக் கேளம்மா-துன்பம்
    வரை கடந்து போனபின்பும் மௌனமா?-நீதி
    முறை கடந்த நீயும் பெண்கள் தெய்வமா?

    பெற்றுதா வென்று வேண்டும்
    மதுரைத் திருநகரமதிர
    சிகரத்தோடு குரலும் உயர
    மறைகற்றவர் பதறப்
    பொறி சிதறிய நாவெங்கே?
    மகரக் கொடியும் கொற்றவன்
    மணி பொன் முடியும் கட்டொடு
    மண்ணில் வீழப்பொங்கிய மனமெங்கே? (வாய்திறந்து)

    கண்ணிலுதிரும் மலரெடுத்து
    கற்புநாரில் சரம்தொடுத்து
    அன்னையே உன் காலடியில் சாற்றினேன்-தினம்
    ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்;
    உன்னை நம்பிநம்பி என்றும் போற்றினேன்-இன்று
    ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்;

    செம்பும் கல்லும் தெய்வமென்று
    நம்புவோர்கள் பித்தரென்று
    சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
    சிற்பிகள் செதுக்கி வைத்த
    சித்திரச் சிலைகளுக்குள்
    தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ?

    தனிச் சிலம்பெடுத்து
    ஊர்தழற்படச் சினத்தெரிந்த
    சக்தியுண்டெனப் படைத்த கர்வமோ?
    மனைச்சுகம் கெடுத்துகண்
    மணிச் சுடர்தனைப் பறித்து
    வாட வைத்தல் நீ வளர்த்த தர்மமோ?
    அம்மா....அம்மா....அம்மா.....!

    [தங்கப் பதுமை,1958]

6.16 விருந்து!

    மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
    விருந்து வைக்கணும் வாருங்கடி
    பறந்து பறந்து ஆடுங்கடி-நம்ப
    பழைய பாட்டைப் பாடுங்கடி

    மிரண்டு மிரண்டு முளிக்கிறாரு
    விவரம் என்ன கேளுங்கடி
    விஷயம் புரிஞ்சு போகும்-அவர்
    பொட்டியைத் தொறந்து பாருங்கடி (மரு)

    சூரணமா மாத்திரையா
    வேரைப் புடுங்கி அரைச்சதா
    பூரணமா குணந்தருமா
    பொதிகை முனிவர் லேகியமா

    என்னங்காணும் வைத்தியரே
    இப்படிநின்னா நடக்கும்
    சின்னப்பிள்ளை நடிக்கிறீங்க
    சிரிப்பில்கூட சிக்கனமா? (மரு)

    பொல்லாத மயக்கமுங்க
    சொல்லாமல்தான் வருதுங்க
    எல்லாமே கசக்குதுங்க
    ஈரமலரும் சுடுதுங்க
    என்னடி காசியம்மா
    இவருக்கு அது புரியுமா?
    சொல்லடியம்மா வியாதிகளை
    வெல்ல இவரால் முடியுமா? (மரு)

    அந்தப் புரத்திலே வைத்தியம் பார்த்து
    அனுபவம் இருக்கா இல்லையா?-அவள்
    தங்கக் கரத்திலே நாடி பார்க்கவும்
    தைரிய மிருக்கா சொல்லையா?

    இன்பக் குளத்திலே ஏக மலராக
    இருப்பவள் எங்கள் எஜமானி-தினம்
    இளமை குலுங்க வரும் எழில்ராணி-அவள்
    அன்பு மனதிலே என்ன இருக்குதோ
    அறிந்து கொண்டால் நீர் பெரும் ஞானி

    யாருக்கும் விளங்காதவள் பாவி...ஓய்ஓய்ஓய்ஓய்
    கொஞ்சுவா கெஞ்சுவா அஞ்சினா மிஞ்சுவா
    மிஞ்சினா அஞ்சுவா கெஞ்சுவா கொஞ்சுவா
    தெரியுமா?

    ஆண் : சரியம்மா
    பெண் : மருந்து...பாடுங்கடி!

    [தங்கப் பதுமை,1958]

6.17 கண்ணும் கண்ணும் பேசுது

    கண்ணோட கண்ணு கலந்தாச்சு
    காணாத இன்பம் கண்டாச்சு
    ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
    உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)

    பொன்னான பொண்ணு தனியா நின்ன
    பொல்லாத காலம் கடந்தாச்சு
    கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
    பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)

    சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
    நெஞ்சிலே கொண்ட அன்பு-இளம்
    பிஞ்சிலே கொண்ட அன்பு-இப்போ
    என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
    பாராமலே வந்த வம்பு...எதிர்
    பாராமலே வந்த வம்பு (கண்ணோட)

    கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
    அன்னைக்கு வந்த அன்பு....அதில்
    என்னைக்கும் இல்லே வம்பு...அது
    என்னையும் உன்னையும் கேக்காமே
    இணைக்கப் போவுதே வம்பு...ஆஹா
    வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)
    எங்கே
    என் இன்பம் எங்கே? என் இதயம் எங்கே?
    பகைவர் நடுங்கும் நடை எங்கே?-என்
    பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)

    வீரமாமுகம் தெரியுதே-அது
    வெற்றிப் புன்னகை புரியுதே
    விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
    மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
    காதல் வளருதே! வாழ்வு மலருதே!

    [நாடோடி மன்னன்,1958]

6.18 பார்த்து ரசிப்பேன்!

    ஆண் : பக்கத்தில் இருப்பே-நான்
    பாத்துப் பாத்து ரசிப்பேன்
    வெக்கத்திலே முழிப்பே-நான்
    விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன் (பக்கத்திலே)

    செக்கச் சிவந்திருக்கும்
    சிங்காரக் கன்னத்திலே
    செல்லமாக் கிள்ளிடுவேன்-நான்
    உள்ளதெல்லாம் சொல்லிடுவேன்
    (பக்கத்திலே)

    பக்குவம் தவறாத
    பரவக் கொண்டை மீன் போல
    பளிச்சிண்ணு துள்ளிடுவே
    பாஞ்சி மனசை அள்ளிடுவே (பக்கத்திலே)

    காவேரி ஓரத்திலே
    கால் பதுங்கும் ஈரத்திலே
    காலையிலே நான் நடப்பேன்
    கலப்பை கொண்டுகிட்டு,
    கட்டழகி நீ வருவே
    விதையைக் கொண்டுகிட்டு-நெல்லு
    விதையைக் கொண்டுகிட்டு (பக்கத்திலே)

    வாய்க்கா வெட்டின களைப்பிலே-நான்
    வந்து குந்துவேன் வரப்பிலே-புது
    மஞ்சள் நிறத்திலே, கொஞ்சும் முகத்திலே
    நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக் கொடிநீ
    கஞ்சிக் கொண்டு வருவே-இன்பம்
    கலையத்திலே தருவே (பக்கத்திலே)

    பெண் : அப்புறம்?

    ஆண் : ஒரு வீர மகனைப் பெத்திடுவே...!

    பெண் : ஆளைப் பாருங்க!...

    ஆண் : நீ தாலாட்டத் தெரியாமே
    தவிச்சிடுவே-நான்
    தந்தானத்தாம் தாளம் போட்டுப் பாடுவேன்

    பெண் : எங்கே பாடுங்க...?

    ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
    அப்பா அம்மா சொன்னதைக் கேளு
    அறிவு வந்ததும் சிந்திச்சுப்பாரு
    அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
    அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி-நாட்டில்
    அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி

    பெண் : அப்புறம்...?

    ஆண் : நீ
    பக்கத்திலே இருப்பே-நான்
    பாத்துப் பாத்து ரசிப்பேன்

    [தேடி வந்த செல்வம்.1958]

6.19 கலையான நிலை

    பெண் : கழனி எங்கும் கதிராடும்
    அழகு மங்கை சதிராடும்
    கலையான நிலைகாண வா...நீ வா வா
    கலையான நிலைகாண வா
    ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு
    கரையிலே வரும் பெண்ணைக் கண்டு-அங்கே
    கலப்பை தனை மறந்து உழவன்
    கலங்குகின்றானே!- நின்று
    மயங்குகின்றானே!
    பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் - ஒரு
    நொடிக்குள் அவனை இழுக்குதே....(கழனி)
    ஆடிவரும் நதியோரம்,
    ஆணும் பெண்ணும் வெகுநேரம்
    அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
    வேகத்தினாலே - அவர்கள் நேசத்தினாலே
    ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்
    அணைகளையும் தாண்டிவிடும்
    அரிய பெரிய ரகசியத்தை
    அறிந்திடலாமே - நாம்
    அறிந்திடலாமே!
    பெண் : எந்தன் மயிலே...மழை முகிலே
    ஆண் : இளங்குயிலே...அதன் குரலே
    இருவரும் : எழில் குலுங்கும்
    உலகை உணர்ந்திடுவோம்

    [திருமணம்,1958]

6.20 மாறும் மனம்

    பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் - அது
    அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
    திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
    தெரியாதவர்போல் இருப்பாங்க
    திருமணமாகி மனைவியைக் கண்டால்,
    வெடுக்கின்னு முறைப்பாங்க

    ஆண் : ஹா! ஹா!

    பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் - அது
    அடிக்கடி மாறும் இப்படித்தான்

    ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
    பேச்சும் போக்கும் இப்படித்தான் - இந்த (பெண்)
    மணமாகு முன்னே வாயும் பேசாமல்
    மதிப்பு மரியாதை தருவாங்க - திரு
    மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
    குஸ்திக்கும் வருவாங்க

    பெண் : ஓஹோ ஹோ ஹோ!

    ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
    பேச்சும் போக்கும் இப்படித்தான்

    பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
    அருகினில் வாருங்க

    ஆண் : ஓஹோ!

    பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
    எட்டியும் போவாங்க (ஆண்)

    ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
    பொறாமை யடைவாங்க

    பெண் : ஆமா!

    ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
    பொறுமையைக் குடைவாங்க (பெண்)
    பெண் : மானே தேனே என்பதெல்லாம் - ஒரு
    மாதம் சென்றதும் மாறிடுதே

    ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் - ஒரு
    வாரம் சென்றதும் ஓடிடுதே

    பெண் : ஹா...ஹா...ஹா...
    ஆமைகளென்ற பெண்களை எண்ணி
    ஆட்டம் போடுவாங்க
    அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
    அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)

    ஆண் : இந்தப்
    பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
    பேச்சும் போக்கும் இப்படித்தான்

    [நான் வளர்த்த தங்கை,1958]

6.21 பூமாலை போட்டவன்

    ஆண் : எழுந்தென்னுடன் வாராய்...சொக்கம்மா
    எழுந்தென்னுடன் வாராய்!

    பெண் : எங்கு என்னை அழைக்கிறாய்
    என் மம்முத ராஜா?

    ஆண் : என்னோட நீ வர
    ஏனடி தாமதம்?

    பெண் : ஏனென்று கேக்காதே
    கால்ரெண்டும் நோகுது

    ஆண் : நோகாமல் சுகமெல்லாம்
    தானாகப் பிறக்குமா!

    பெண் : போகாத ஊரெல்லாம்
    போனாத்தான் பொறக்குமா?

    ஆண் : (வசனம்) பெண்ணே,என் பொறுமையை
    சோதிக்காதே; ஆத்திரம் வந்தால் உன்னை
    என்ன செய்வேன் தெரியுமா?

    பெண் : (வசனம்) என்ன செஞ்சிடுவே...ஹூக்கும்

    ஆண் : கத்தியை உருவிக் குத்திடுவேன் - உன்னை
    கண்டதுண்டாக வெட்டிடுவேன்

    பெண் : நிறுத்தய்யா... நிறுத்தய்யா
    நேரங்கெட்ட நேரத்திலே
    ஊரை விட்டு ஓடுவது எதுக்கய்யா?

    ஆண் : வாண்ணா வந்திடடி.....
    மரியாதை யில்லாதவளே
    ஏண்ணு கேக்காதே
    எதிர்த்துப் பேசாதே
    எட்டி விரட்டிடுவேன் - உன்னை
    விட்டுப் பிரிந்திடுவேன்

    பெண் : நீயே சகாயமென நினையாமல்...நாதா
    வாயால் மோசமே போனேன்-
    மதியாமல் பேதை
    மாயம் எதுவும் இல்லை
    வருத்தம் கொள்ளாதே என்னை
    மன்னித்தருள வேண்டும்
    வந்தனம் செய்தேன் ஸ்வாமி!

    ஆண் : பத்தினி ரத்தினமே
    பறந்துவந்த சீதனமே - என்
    உத்தரவு போல உத்தமி - நீயொரு
    உதவிதான் செய்யவேண்டும்

    பெண் : (வசனம்) என்ன உதவி செய்யணும்
    அப்படியே ஆகட்டும் ஸ்வாமி
    பூமாலை போட்டுப்போன
    மாமா வருவதற்குள்
    காமலை வந்ததய்யா வைத்தியரே
    மாமியார் வைத்துப்போன
    சாமானை வித்துத்தரேன்
    மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே

    ஆண் : கண்ணையிழந்தவளே
    கட்டழகுப் பெண்மயிலே - இந்தக்
    கைகண்ட மருந்தை - என்
    கை கொண்டு பூசினால்
    கண்கண்ட குணம் பெறலாம்

    பெண் : களிம்போ களிம்பு களிம்போ களிம்பு
    காயத்திலே பெருங்காய மிருந்தாலும்
    மாயமாய் மறைக்கும் களிம்பு
    வெள்ளைக் களிம்பு,கருங்களிம்பு,
    வீரக்களிம்பு
    சொல்ல முடியாத நோய்களுக்கும் - ஒரு
    சூரணமிருக்கு வாங்கிடுங்கோ - அதை
    பல்லில் படாமலே
    உள்ளுக்குப் போடணும்
    பாஷாணம் சேர்ந்தது பார்த்துக்குங்கோ
    (களிம்போ)

    [தங்கப்பதுமை,1958]

6.22 தாலி கட்டும் வீரன்

    தோழிகள் : மானைத்தேடி மச்சான்
    வரப்போறான் - ஓ
    வரப்போறான்
    தாளத்தோட தாலி
    கட்டப்போறான் - ஏ
    காட்டப்போறான் (மானை)

    தலைவி : தாலிகட்டும் வீரனவன்
    யாரு? - ஏ
    எந்த ஊரு?
    மாலை கட்டவேணும்
    கொஞ்சம் கூறு - ஏ
    என்னபேரு? (மானை)

    தோழி : போதும் போதும் கேலி சும்மா போடி-ஏ
    பொடிவச்சுப் பேசும் வம்புக்காரி
    சின்னஞ்சிறு அன்னம் - நீ
    எண்ணும் பல எண்ணம்!

    தலைவி : முன்னும் பின்னுமாக வந்த பின்னும்

    1.தோழி : பிறகு என்ன பண்ணும்....
    2.தோழி : உறவு வந்த பின்னும்..... (மானை)

    தலைவி : அழகிலே நடையிலே
    சுகமெல்லாம் நிறைந்து விடுமோ?

    தோழி : ஆசை பொங்கும் தோற்றம்
    அமுதூட்டும் பழத்தோட்டம்!

    தலைவி : என்னென்னமோ சொல்லி
    என் மனசைக் கிள்ளி
    இங்குமங்கும் ஓடவைக்கும் கள்ளி

    1.தோழி : பருவம் வந்து துள்ளி

    2.தோழி : உருகுறாளே வல்லி.... (மானை)


    [நாடோடி மன்னன்,1958]

6.23 சேவை

    வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
    நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
    தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
    சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

    அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
    அருமையான பருவம் கொண்டு
    அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
    ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
    தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
    நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
    பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே
    விட்டுப்போனபோது அழுதவள்ளி
    புதுமையான நிலையில் - அல்லி
    பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

    தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
    சேற்றை வாரி வீசினாலும் வீசலாம் (வீடு)

    [பதிபக்தி,1958]

6.24 பகைக்குரல் மாறுதே!

    வம்பு மொழி மாறி மாறி
    அன்பு மொழியானதே
    இன்பவழி நாடும் விழி
    என்னை மீறுதே (வம்புமொழி)

    மடை தாண்டும் மீனைப்போல
    மனம் தாண்டி ஓடுதே....ஆ....
    மழை கண்ட பயிர்போல
    மகிழ்ச்சி கொண்டாடுதே...
    இளந்தென்றல் வீசுதே
    என்னென்னமோ பேசுதே
    என்மேல் மணம் தன்னைப் பூசிடுதே...ஆ...ஆ
    அன்புக்கடல் ஓரத்திலே
    ஆசை அலை மோதுதே
    இன்பத்திலும் இன்பம்வந்து என்னைமீறுதே (வம்புமொழி)

    வீம்பு செய்த பேதமெல்லாம்
    கூன்விழுந்து போகுதே
    பாம்பிருந்த காட்டில் இன்று
    மான் புகுந்து ஆடுதே
    பகைக்குரல் மாறுதே!
    பண்புக்குரல் பாடுதே! - புதுப்
    பாடங்கள் கூறிடுதே!...ஆ...ஆ
    மூடிவைத்த உண்மையெல்லாம்
    நேரில் வௌியானதே!
    நீதியிடம் நேர்மைவந்து நேசமானதே!

    [பண்டித்தேவன்,1959]

6.25 நல்ல துணைவன்

    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகள் சொல்லும்
    இல்லாத ஆசையைக் கிள்ளும்
    இன்பத் தேனையும் வெல்லும் - இசை
    இன்பத் தேனையும் வெல்லும்

    துன்பக் கடலைத் தாண்டும்போது
    தோணியாவது கீதம்;
    அன்புக் குரலில் அமுதம் கலந்தே
    அருந்தத் தருவது கீதம்

    எங்கும் சிதறும் எண்ணங்களையும்
    இழுத்து வருவதும் கீதம்
    இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
    இருளை மறைப்பதும் கீதம் (துள்ளாத)

    சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
    தோகை விரித்தே வளர்ந்திடும்
    சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
    தாவியணைத்தே படர்ந்திடும்

    மங்கை இதயம் நல்ல துணைவன்
    வரவு கண்டே மகிழ்ந்திடும்,
    உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
    உண்மை இன்பம் விளைந்திடும் (துள்ளாத)

    [கல்யாணப் பரிசு,1959]

6.26 பெண் முகம் கண்ணாடி

    முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
    நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்! (முக)

    வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்
    மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என்முன்
    வளைந்து இளந்தென்றலில் மிதந்து வரும் - கைகளில்
    வளையல் இன்னிசை கேட்கலாம் - மானே உன் (முக)

    இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
    இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
    அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
    அகத்தினிலே அலைமோதும் ஆசையிலே இன்பம்
    ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
    இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில்
    தங்கம் மங்கும் நிலையில் நின்று
    தன்னை மறந்து எண்ணம் கலந்து
    வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
    பொழுதெல்லாம் மகிழலாம்;
    கலையெலாம் பழகலாம் - சதங்கையது
    குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும்
    குறும்பு படர்ந்திடும்

    [தங்கப்பதுமை , 1959]

6.27 எண்ணக் கனவுகள்!

    உன்னைக் நினைக்கையில் கண்ணே
    எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி! (உன்னை)

    பொன்னை உருக்கிய வார்ப்படமே - அன்பு
    பொங்கிடும் காதல் தேன்குடமே!
    தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
    சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே
    சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)

    வட்டக் கருவிழி மங்கையே- ஒளி
    கொட்டும் நிலவுக்குத் தங்கையே!
    கட்டுக் குலையாத பட்டுத் தளிர் - மேனி
    கண்ணில் அபிநயம் காட்டுதே - இன்பக்
    காவியத் தேனள்ளி ஊட்டுதே! (உன்னை)


    [கல்யாணிக்குக் கல்யாணம்,1959]

6.28 பருவம்

    சுகம் வருவது பாஸ்ட்டு - நம்ம
    சும்மாயிருந்திட்டா வேஸ்ட்டு
    மனம்தனில் நினைத்துபார்
    உணர்ந்து நடந்துபார் (சுகம்)

    பொலிவைத் தருவது பருவம் - முகப்
    பொலிவைத் தருவது பருவம் - அது
    போனால் மாறிடும் உருவம் - அது
    போனால் மாறிடும் உருவம்
    அழகைத் தருவது காலம் - உடல்
    அழகைத் தருவது காலம் - அதில்
    அடைந்த வரைக்கும் லாபம் (சுகம்)

    முகமும் முகமும் சந்திக்கும்போது
    முதலில் வருவது தயக்கம்,
    மோகம் வளர்ந்து சிந்திக்கும்போது
    மூளைக்குத் தருவது மயக்கம்
    முழுதும் தெரிந்து இதயம் கலந்து
    முடிவில் வருவது இணக்கம் - அதற்
    கிடையில் வருவது பிணக்கம் (சுகம்)

    [அவள் யார்?, 1959]

6.29 கதை சொல்லும் தீபாவளி!

    உன்னைக்கண்டு நான்வாட,
    என்னைக்கண்டு நீவாட
    கண்ணீரும் கதைசொல்லும் தீபாவளி
    ஊரெங்கும் மணக்கும்
    ஆனந்தம் நமக்கு
    காணாத தூரமடா....காணாத தூரமடா

    நெஞ்சமும் கனலாகி
    நீராகும் போது
    நிம்மதி என்வாழ்வில்
    இனி ஏது?
    கொஞ்சிடும் மொழிகேட்டு
    மகிழ்ந்தவளெங்கே?
    குலத்தின் விளக்காய்த்
    திகழ்ந்தவளெங்கே?
    கண்ணுக்குள் நடந்த
    காட்சிகளெல்லாம்
    கனவாகிப் போனதடா...கனவாகிப் போனதடா...

    ஆசைக்கு அணைபோட்ட
    அறிவான நங்கை
    அன்புக்குப் பொருள் சொன்ன
    அருள் மங்கை!
    பாசத்தின் சுமையோடு
    பறந்து சென்றாளே
    பழகும் உனையும்
    மறந்து சென்றாளே
    கண்டதும் நினைவில்
    கொண்டதும் முடிவில்
    கதையாகிப் போனதடா....கதையாகிப் போனதடா.....

    [கல்யாணப் பரிசு,1959]

6.30 பொல்லாத காதல்

    கன்னித் தீவின்
    அழகு ராணி நான்
    கண்ணைக் கவரும்
    வண்ணமேனி தான்
    என்னைக் கொண்டால்
    இன்பம் காணலாமே- (கன்னித்தீவு)

    உல்லாசமான
    நேரம் வந்து
    பொல்லாத காதல்
    போதை தந்து
    உன்னோடு பேசும்
    மோகம் கொண்டு
    உள்ளம் வாடுதே (உல்லாசமான)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

6.31 பெண்ணென்ற கோயில்

    நானாடும் நாடகம்
    ரகசியந்தான் - போடும்
    நடையெல்லாம் நடனந்தான்
    சிங்காரந்தான் - இதை
    ரசிக்காத ஆளிருந்தால்
    அதிசயந்தான்! (ஐயா)

    என்னைக் கண்டாலே ஆனந்த லோகம் - உங்கள்
    கண் முன்னே தான்வந்து மோதும் - ரெண்டு
    கண்ணாலே யோகந்தான் முன்னாலே மோகந்தான்
    பெண்ணாலே தானின்ப வாழ்வே! (ஐயா)

    ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
    அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில் - கண்டு
    ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை
    பாடாத ஏடில்லை பாரில்!

    [இரத்தினபுரி இளவரசி,1959]

6.32 மாறாத ஆசை

    மாந்தோப்பு வீட்டுக்காரி
    மானோடும் நாட்டுக்காரி
    ஏமச்சான் - வா மச்சான்
    ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் (மாந்தோப்பு)

    பொல்லாத அத்தை மவன்
    புலியோட சண்டை போட்டான்
    இல்லாத ஆசைகாட்டி
    எம்மேலே கண்ணே போட்டான்

    வில்லை எடுத்து மச்சான்
    வேட்டைக்கு பயணம் வச்சான்
    சொல்லாமே ஒடி வந்தேன் - என்
    ஷோக்கு மச்சான்
    ஏ மச்சான் - வா மச்சான்
    ஒன்னைத்தான் தேடி மனம் வாடி வந்தேன் (மாந்தோப்பு)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

6.33 காதலர் நிலை

    பார் முழுதுமே நமது பேர் புகழுமே - நம்
    பேரழகில் இதயம் மகிழுமே!
    காவினில் விளையாடும்
    காதலர் நிலையாவும்
    காணப் பெரு மோகந் தரும் ஆனந்தமே
    சேல் விழியாலே - இனி
    தேன்மொழியாலே - நமது
    யாழ் ஒலியாலே - விளையும் பேரின்பமே!
    (பார் முழுதுமே)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

6.34 கண் மலர்

    அன்பு அரும்பாகி
    ஆசை மலராகி
    இன்பம் கனியாகி
    எதிர்பார்க்கும் வேளையிலே
    பண்பே என்வாழ்வில்
    பங்குகொண்ட மாமணியே - உங்கள்
    செம்பவழ வாய்திறந்து தேவையென்றால்
    என்ன அது? அத்தான்?

    தேன் வேண்டுமா? - இல்லை
    நான் வேண்டுமா?
    தேடிவந்த யோகமே
    தென்றலே என் இன்பமே! (தேன்)

    நாணம் உண்டு வீரம் உண்டு
    நல்ல குறள் பாடம் உண்டு
    கானம் பாடும் ஞானம் உண்டு
    அது வேண்டுமா?-இல்லை
    காதல் முத்தம் உண்டு
    அது வேண்டுமா? (தேன்)

    காதில் வந்து பேசிடவா?
    கண் மலரை வீசிடவா?
    கைகலந்த சந்தனம் உண்டு
    மெய்மறந்து பூசிடவா...?
    காதல் ரோஜா தந்து
    ஆனந்தம் கொண்டு ஆடிடவா...?
    ஊம்....(தேன்)

    [தலை கொடுத்தான் தம்பி,1959]

6.35 நடக்கும் மின்னல்!

    கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
    கன்னம் ரோஜாச் செண்டு நிறம்!
    கலையே வடிவாய் வருவாள்
    அவளங்கம் தங்க நிறம்! (கண்)

    விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
    மண்ணில் நடந்து வந்ததுபோல்,
    வண்ண மலர் மாலை கொண்டு
    வாழ்வினிலே ஆசை கொண்டு,
    வந்திடுவாள் நாணம் கொண்டு
    மணமகளும் நானே யென்று
    வாலிபரை அழகில் வென்று
    வாட்டிடுவாள் சபையில் நின்று (கண்)

    மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
    மேகத்தோடு சிநேகம் - குறி
    யாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள்
    வீரன் கணையிலும் வேகம்

    நளினநடை அன்னம் போலே
    நௌியும் இடை மின்னல் போலே
    ஆடை கொடி பின்னல் போலே
    அன்பு மொழி கன்னல் போலே
    நெஞ்சினிலே நேசத்தாலே
    நீந்திடுவேன் மீனைப் போலே!
    அங்கம் யாவும் தங்க நிறம்
    ஆசை உள்ளம் சங்கு நிறம்
    அழகே...வடிவாய் வரும்
    மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்

    அழகு விருந்தெனை அடைய நினைத்திடும்
    ஆண்மகனும் எவரோ....?
    அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும்
    அளவு தெரிந்தவரோ?

    பகைவரிடம் பல்லைக்காட்டித்
    தளபதியாய் வந்தவர் வேண்டாம்
    பாவையரை அருகில் வைத்து
    பார்த்து ருசி கண்டவர் வேண்டாம்

    கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட
    கண்கள் விரைந்திடுதே;
    இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
    இதயம் விரும்பிடுதே (அங்கம்)

    [அமுதவல்லி,1959]

6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு

    ஒன்றுபட்ட கணவனுக்கு
    தொண்டு செய்து வாழ்வதற்கு
    உரிமை கிடைத்திடுமா சொல்? - வண்ணக்
    கிளியே - அன்பின்
    பெருமை நிலைத்திடுமா சொல்?

    கன்று நட்டு நீரிரைத்து
    கண் விழித்து காத்திருந்து
    பிஞ்சுவிட்டுக் கனியாகும் போதிலே - கிளையில்
    துண்டுபட்டால் என்ன பலன் வாழ்விலே? (ஒன்று)

    [தங்கப் பதுமை,1959]

6.37 காதல் தோல்வி

    காதலிலே தோல்வியுற்றான்
    காளையொருவன்
    கடந்தபின்னே அமைதி
    எங்கு பெறுவான்? - காலம்
    கடந்த பின்னே அமைதி
    எங்கு பெறுவான்?

    அன்புமயில் ஆடலுக்கு
    மேடையமைத்தான்
    துன்பமெனும் நாடகத்தைக்
    கண்டு ரசித்தான் (அன்பு)

    இன்பத்தினை விதிக்கு
    இரை கொடுத்தான்
    இருந்தும் இல்லாத
    உருவெடுத்தான்

    [கல்யாணப் பரிசு,1959]

6.38 அன்பு விதை

    காதலிலே தோல்வியுற்றாள்
    கன்னியொருத்தி
    கலங்குகின்றாள் அவனை
    நெஞ்சில் நிறுத்தி

    ஆசையிலே பாத்திகட்டி
    அன்பை விதைத்தாள்
    அல்லும்பகல் காத்திருந்து
    பயிர்வளர்த்தாள் (ஆசை)

    பாசத்திலே பலனைப்
    பறிகொடுத்தாள்
    கனிந்தும் கனியாத
    உருவெடுத்தாள் (காதலிலே)

    [கல்யாணப் பரிசு,1959]

6.39 இல்லறம்

    ஆனந்தம் இன்று ஆரம்பம் - மனம்
    அன்பில் பிணைந்தால் - பின்
    அதுவே பேரின்பம் (ஆனந்தம்)

    ஆடும் கடலும் பொன்னி
    ஆறும் கலந்தது போல்
    கூடும் இவர்களிரு
    பேரும் தேடும் உயர் (ஆனந்தம்)

    மீனுடன் மானும் மங்கை
    விழிகளிலே துள்ளுதே
    விந்தை மிகும் மௌனம்
    வீரத்தை வெல்லுதே
    தேனைச் சுமந்த மலர்
    மாலைச் சுமந்த அவள்
    நாணிக் குனிந்த முகம்
    நல்ல பண்பைச் சொல்லுதே! (ஆனந்தம்)

    நல்ல குடும்பம் ஒரு
    பல்கலைக் கழகம் என்று
    தெள்ளு தமிழ்க் கவிஞன்
    தௌிவுரை சொன்ன துண்டு;
    இல்லறம் ஏற்பவர்கள்
    இதனை மனதில் கொண்டு
    இன்பமுடன் நடந்தால்
    வாழ்வுக்கு மிக நன்று (ஆனந்தம்)

    [கல்யாணிக்கு கல்யாணம்,1959]

6.40 புது அழகு

    பெண் : புது அழகை ரசிக்கவரும்
    மனசுக் கெல்லாம் பெரும்
    ஆசை பொங்கும் நேரம் - இதில்
    ஆணும் பொண்ணும்
    கூட்டுச் சேர்ந்தா
    ஆட்டத்துக் கென்ன பஞ்சமா?
    (ஆணும் பெண்ணும்)

    காலையில் மலர்ந்த மலர்
    மாலையிலே உலர்ந்து விடும்
    மனிதர் வாலிபமும் அப்படியே
    வந்தது போல் சென்றுவிடும் - இதை
    இன்பமென்பார் சிலநாளிலே - கொடும்
    துன்பமென்பார் பலநாளில் - ஓ
    இன்பமில்லை துன்பமில்லை
    இயற்கையென்பார் ஒரு நாளில்
    ஆண் : வாழ்க்கையிலே பாதியை நாம்
    தூக்கதிலே கழிக்கலாமா! - ஆ!
    வந்தபோது கோட்டைவிட்டு
    போனபின் விழிக்கலாமா?
    பெண் : பல கவலை ஒழிந்திட இதயம் மகிழ்ந்திடக்
    கலையை விரும்பிட வேணுமே
    அமுத விருந்ததில் தோணுமே
    பெண்கள் உறவு கலந்திடுமே!
    ஆண் : கனிந்திடுமே
    பெண் : உறவு கலந்திடுமே
    வளர்ந்திடுமே கனிந்திடுமே!

    [அவள் யார்?,1959]

6.41 காதலை ஏற்கும் நிலவு!

    ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
    பருவ மென்ற காவியம்!
    பார்க்க பார்க்க வளருமே
    காதலின்ப ஓவியம்! (படிக்க)
    பெண் : ஆ...ஆ...காதல் இன்ப ஓவியம்
    ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
    கண்கள் மட்டும் பேசும்
    பெண் : ஆ..ஆ..பேசும்
    ஆண் : அன்பு மனம் பொங்கி விட்டால்
    அங்கமெல்லாம் பேசும்! (படிக்க)
    தடுத்தவர்கள் வென்றதில்லை
    சரித்திரமே சொல்லும் - காதல்
    அடுத்தவர்கள் அறியாமல்
    ரகசியமாய்ச் செல்லும்! (படிக்க)
    பெண் : கள்ளமில்லாக் காதலரை
    வெண்ணிலவும் ஏற்கும்!
    காட்டில் வாழும் பறவைகளும்
    கானம்பாடி வாழ்த்தும்!
    பெண் : ஆ...ஆ... கானம்பாடி வாழ்த்தும்!
    ஆண் : தொல்லை தரும் மனித குலம்
    சொல்லிச் சொல்லித் தூற்றும்;
    தூய்மையான உள்ளங்கைச்
    சூழ்ந்து நின்று வாட்டும்! (படிக்க)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

6.42 தடையில்லை!

    ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
    காதல் படகும் விளையாடுதம்மா,
    ஆடும் படகினில் மருவிய கண்கள்
    பேசுவதும் பெருங்கதையம்மா!
    கதையம்மா! கதையம்மா!
    காதல் என்றொரு கதையம்மா! (காலம்)
    பெண்: காலம் என்றொரு ஆழக் கடலினில்
    காதல் படகும் விளையாடி வர,
    ஆடும் படகினில் மருவிய கண்கள்
    பேசுவதும் ஒரு கதை தானோ?
    கதை தானோ? கதை தானோ?
    காதல் என்பது கதை தானோ? (காலம்)
    ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே - மானே
    காயான வாழ்வு கொண்டேன்
    என் செய்வேன் நானே
    பெண் : பொருந்தாத நேசம் இல்லை
    பொய் ஏதும் இல்லை
    இருந்தாலும் இன்பமில்லை!
    ஏன் இன்பம் இல்லை!
    ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
    உறவினில் ஒன்றும் குறைவில்லை
    உண்மையில் அடி பெண்மயிலே - உன்
    உரிமையில் என்றும் தடையில்லை (காலம்)

    [அமுதவல்லி,1959]

6.43 இல்லற ஓடம்

    பெண் : இன்று நமதுள்ளமே - பொங்கும்
    புது வெள்ளமே
    இல்லற ஓடமிதே - இனி இன்பம்
    ஏந்திச் செல்லுமே!

    ஆண் : மங்கையர் குலமணியே
    மஞ்சள் முகந்தனிலே
    மகிழ்ச்சிகள் துள்ளுமே
    வந்தென்னை அள்ளுமே!

    பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா
    நெஞ்சுருகிச் சென்ற நிலா
    வாழ்த்துகள் சொல்லுமே
    மனந்தனைக் கிள்ளுமே!

    ஆண் : வள்ளுவன் வழியினிலே - இனி
    வாழ்க்கை ரதம் செல்லுமே

    பெண் : கண்களில் ஊறும் நீரும் - இனி
    நம் நிலைகாண நாணும் - சுகம்
    கவிதை பாடிவரும்

    [தங்கப்பதுமை,1959]

6.44 கதை கட்டுவார்

    ஆண் : நீயாடினால் ஊராடிடும்
    நானாடினால் யாராடுவார்?
    நீயாடினால் ஊராடிடும்
    நானாடினால் யாராடுவார்?
    மேல்நாடும் கீழ்நாடும் பார்த்தேன்
    ஆண்பாடப் பெண்பாடக் கேட்டேன்
    ஆனாலுன் போலெங்கும் காணேன்
    (நீயாடினால்)

    பெண் : சீமான்கள் கொண்டாடும் மேடை
    செண்டாலே காற்றெல்லாம் வாடை
    சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை
    கண் காட்டினால் கை தட்டுவார்
    கை காட்டினால் கதை கட்டுவார்

    ஆண் : கண்ட தெல்லாம் உண்மை
    காத்திருக்கு நன்மை
    காரியத்தில் கொஞ்சம் - கவனம்
    வையம்மா - கருணை
    வையம்மா

    பெண் : காரணம் இல்லாமலே
    கானமயிலாடுமா?
    கருத்தொண்ணும் புரியாமல் - அன்ன
    நடை போடுமா? - அன்ன
    நடை போடுமா?

    ஆண் : நீ பாடினால் நானோடுவேன்
    நானாடினால் ஊராடிடும்
    நீயாடினால் ஊராடிடும்
    நானாடினால் யாராடுவார்?

    [பாண்டித் தேவன்,1959]

6.45 இன்ப வேகம்

    ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? - என்னை
    வாட்டிட ஆசை தானோ - பல
    கோடி மலரழகை மூடி வைத்து மனதை
    கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

    பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? - என்னை
    வாட்டிடும் கேள்விகள் ஏனோ? - புது
    மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
    மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

    ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
    அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
    அமுத விருந்தும் மறந்து போனால்
    உலகம் வாழ்வதும் ஏது? - பல
    உயிர்கள் மகிழ்வதும் ஏது? - நெஞ்சில்
    இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
    தனித்துப் பெறமுடியாது

    பெண் : அந்தி நேரம் போனதால்
    ஆசை மறந்தே போகுமா?
    அன்புக் கரங்கள் சேரும்போது
    வம்பு வார்த்தைகள் ஏனோ?
    இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

    ஆண் : காந்தமோ இது கண்ணொளிதானோ?
    காதல் நதியில் நீந்திடும் மீனோ?
    கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

    பெண் : பொறுமை இழந்திடலாமோ? - பெரும்
    புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
    கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
    வரம்பு மீறுதல் முறையோ..?

    ஆண் : சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
    சக்கரம் சுழல்வது போலே - அணை
    தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
    சேர்ந்ததே உறவாலே...

    [கல்யாணப் பரிசு,1959]

6.46 பெரும் சுகம்

    குழு : வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
    மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி
    மனைவியும் கணவரும்
    மக்களோடு யாவரும்
    மங்களமாய்க் கொண்டாடும் தீபாவளி (வருஷத்திலே)

    மனசுக்குள்ளிருக்கிற கவலைகளெல்லாம்
    மறைந்திட வரும் நாளு!
    வாடிக்கையாகப் பட்டினி கிடந்தோர்
    வயிறு நெறையும் நாளு!
    நெனைக்க முடியாத காட்சிகளெல்லாம்
    நேரில் தெரியும் நாளு!
    நீண்ட காலமாய் ஆண்டுகள் தோறும்
    நிகழ்ந்திடும் பெரு நாளு (வருஷத்திலே)

    ஆண் : கண்ணே கண்ணுக்குள் நாடகமாடிடும்
    பெண்ணே இன்னமும் நாணமா?

    பெண் : எண்ணம் கலந்த பின் என்னைப் பிரிந்ததும்
    இன்பம் மறந்ததும் ஞாயமா?

    ஆண் : உன்னைப் பிரிந்து நான்,உன்னால் மெலிந்திடும்
    உண்மை மறந்ததும் ஏனம்மா?

    பெண் : இன்னல் தொடர்ந்தகதை, எல்லாம் மறந்தினி
    என்றும் பெரும் சுகம் காணலாம்

    இருவரும் : பொன்னும் வைரமும்போலே இணைந்துள்ளோம்
    பொங்கும் மகிழ்ச்சியில் ஆடலாம்

    பையன் : அக்கா.....அக்கா.....
    பட்டாசு வெடிக்கிற வேளையிலே...நீ
    படுத்துத் தூங்குறே மூலையிலே
    கட்டோடு வெடிக்கும்,கண்ணையும் பறிக்கும்
    கம்முன்னு அடைக்கும் காதுக்குள்ளே;
    தொட்டாலே போதும், கர்ருன்னும் சீறும்
    சுட்டாலே நோகும் சொல்லாமலே வேகும்
    எட்டாத ஊருக்கும் இதாலே பேரு
    விட்டாலே ஜோரு வேடிக்கை பாரு! (வருஷத்திலே)

    [கல்யாணிக்குக் கல்யாணம்,1959]

6.47 ஆசை மனம்!

    பெண் : ஆசையினாலே மனம்

    ஆண் : ஓஹோ....

    பெண் : அஞ்சுது கெஞ்சுது தினம்

    ஆண் : ஊஹூம்

    பெண் : அன்பு மீறிப் போனதாலே
    அபிநயம் புரியுது முகம்

    ஆண் : ஐ...ஸீ....

    பெண் : ஆசையினாலே மனம்
    அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்புமீறிப் போனதாலே
    அபிநயம் புரியுது முகம்!

    பெண் : நாணம் கொண்டு ஓடும் கண்கள்
    தாளம் போடுதே - அதைக்
    காணும் தென்றல் காதில் வந்து
    கானம் பாடுதே....
    வேரில்லாத கொடிதனில்-

    ஆண் : ஓஹோ.....ஹோ....

    பெண் : வாலில்லாத ஒரு அணில்

    ஆண் : ஆஹஹா....

    பெண் : ஆளில்லாத நேரம் பார்த்து
    தாவிப் பிடிக்குது கையில்

    ஆண் : ஸாரி....

    பெண் : மாலை என்ற நேரம் வந்து
    ஆளை மீறுதே....இளம்
    காளையொன்று காதல் என்று
    கண்ணால் கூறுதே,
    தேடிவந்த ஒரு துணை

    ஆண் : ஓஹோ....ஹோ

    பெண் : சிரிக்குது மயக்குது எனை

    ஆண் : ஆஹஹா...

    பெண் : மூடிமூடி வைத்த எண்ணம்
    நாடுதே சுகம் தன்னை

    ஆண் : ரியலி.... (ஆசையினாலே)


    [கல்யாணப் பரிசு,1959]

6.48 இன்பம் தேடுது

    பெண் : துள்ளித் துள்ளி அலைகளெல்லாம்
    என்ன சொல்லுது? - பல
    துண்டு துண்டாய் எழுந்து - அது
    எங்கே செல்லுது....? (துள்ளி)

    ஆண் : கள்ள விழிப் பார்வைதனைக்
    கண்டு கொள்ளுது - கோபங்
    கன்னத்தில் கிள்ளிவிட்டுச்
    சிரிக்கச் சொல்லுது! (கள்ள)

    பெண் : தென் கடலின் ஓரத்திலே
    ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
    சின்ன சின்ன நண்டு வந்து
    என்ன பண்ணுது?

    ஆண் : அது நில்லாத வேகத்திலே
    அல்லும் பகல் மோகத்திலே
    நீண்ட வளை தோண்டிக்கிட்டு
    குடும்பம் பண்ணுது!

    இருவர் : இத்தனையும் நம்மைப்போல
    இன்பம் தேடுது - இதை
    எண்ணும்போது நமது மனம்
    எங்கோ போகுது!

    பெண் : கண்டதும் மலரில் வண்டு
    காதல் கொள்வதேன் - அது
    வந்து வந்து மெய்மறந்து
    மயங்கிப் போவதேன்?

    ஆண் : கண்டவுடன் காதல் கொள்ளும்
    காரணமும் ஏன்?
    சிங்கார மலர்த் தேன் - நான்
    கன்னிமலர் நாடியதும்
    வண்டு போலத்தான்....

    பெண் : பாக்குமரச் சோலையிலே
    பளபளக்கும் பாளையிலே
    பறந்து பறந்து குருவியெல்லாம்
    என்ன பின்னுது?

    ஆண் : அது வாழ்க்கைதனை உணர்ந்துகிட்டு
    மனசும் மனசும் கலந்துக்கிட்டு
    மூக்கினாலே கொத்திக் கொத்தி
    கூடு பின்னுது!

    பெண் : இத்தனையும் நம்மைப் போல
    இன்பம் தேடுது - இதை
    எண்ணும் போது நமது மனம்
    எங்கோ போகுது!

    [தலைகொடுத்தான் தம்பி,1959]

6.49 பேசும் சிட்டு

    பெண் : கன்னியூர் சாலையிலே - பொண்ணு
    களைபறிக்கப் போகையிலே - அந்த
    சின்னமச்சான் சிவத்தகண்ணு - அவ
    பின்னாலே எதுக்கு வந்தான்?

    ஆண் : எதுக்கு வந்தான்....?
    சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
    ஒரு ஜாடையிலே
    உள்ளம் ரெண்டும் ஒன்னாச்சி - புது
    உல்லாசந்தான் கண்டாச்சு (சொல்)

    பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி
    துள்ளி எதுக்கு வாடுது?

    ஆண் : அது
    சுத்திப்படரக் கொம்பைத் தேடித்
    துடிச்சி துடிச்சி வாடுது

    பெண் : தூங்காம சிட்டு ரெண்டும்
    தொடர்ந்து என்ன பேசுது?

    ஆண் : அது
    ஜோடியான மகிழ்ச்சியிலே
    சொந்தக் கதையைப் பேசுது
    சொதந்திரமான கூடுகட்டி
    ஒரு மனமா வாழுது

    பெண் : அந்த நிலையும், இந்த நிலையும்

    இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

    பெண் : பொல்லாத ஆடு ஒன்று
    உள்ளே என்ன பாக்குது?

    ஆண் : புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்
    பொருத்தமான்னு பாக்குது?

    பெண் : பூங்குயிலும் யாருக்காக
    ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

    ஆண் : ஆண் குயிலைக் காணாமல்தான்
    அவசரமாக் கூவுது
    அன்பு மீறி மயக்கத்திலே
    அங்குமிங்கும் பாயுது

    பெண் : அந்த நிலையும்......

    ஆண் : இந்த நிலையும்......

    இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

    [பொன் விளையும் பூமி,1959]

6.50 கண்ணால் அடக்குவேன்

    பெண் : அடக்கிடுவேன் - ஓய்
    அடக்கிடுவேன் - ஓய்
    அடங்காத காளையையும்
    அடக்கிடுவேன் கண்ணாலே
    ஆட்டம் போடாதே - ஓய்....
    சாட்டையிருக்கும் பின்னாலே

    ஆண் : மிரட்டிடுவேன் - ஏய்
    மிரட்டிடுவேன் - ஏய்
    மிரளாத உருவத்தையும்
    மிரட்டிடுவேன் கொம்பாலே
    வீணாத்துள்ளாதே - ஏய்
    வளைச்சிடுவேன் வாலாலே

    பெண் : துணிஞ்சி நின்னாப் புரிஞ்சிடுமே

    ஆண் : புரியல்லையே

    பெண் : துணிஞ்சி நினாப் புரிஞ்சிடுமே - உன்
    சுறுசுறுப்பும் துடிதுடிப்பும்
    குறைந்து போகுமே

    ஆண் : நெருங்கி வந்தா விளங்கிடுமே - உன்
    விறுவிறுப்பும் பரபரப்பும்
    விழுந்து போகுமே

    பெண் : பிடிச்சேன்னா விடமாட்டேன் - நான்
    புண்ணாக்கும் தவிடும் வச்சு
    தண்ணியும் காட்டிடுவேன்

    ஆண் : வெறிச்சேன்னா ஆபத்துத்தான் - நான்
    மேயாத பயிரையெல்லாம்
    மேஞ்சு காட்டிடுவேன்

    [அவள் யார்,1959]

6.51 மயிலோ குயிலோ!

    ஆண் : ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
    மேடைகட்டி ஆடும் எழிலோ - இவள்
    ஆடைகட்டி வந்த நிலவோ - குளிர்
    ஓடையிலே மிதக்கும் மலர்
    ஜாடையில் சிரிக்கும் இவள்
    காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
    கூடுகட்டி வாழும் குயிலோ? (ஆடை)

    பெண் : துள்ளித் துள்ளி ஆடுமின் பலோக மங்கை
    சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
    எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள்
    தள்ளிவிட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்
    கிளைதானிருந்தும் கனியே சுமந்து
    தனியே கிடந்த கொடிதானே...
    கண்ணாளனுடன் கலந்தானந்தமே - பெறக்
    காவினில் ஆடும் கிளிதானே

    ஆண் : ஓ....ஓ....
    அந்தி வெயில் பெற்ற மகளோ - குலுங்கும்
    அல்லிமலர் இனத்தவளோ - குன்றில்
    உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மனம்
    சிந்தி வரும் தென்றல் தானோ?-இன்பம்
    தந்து மகிழ்கின்ற மானோ?

    பெண் : அன்பு மனம் கூடுவதில்
    துன்பம் இல்லை

    ஆண் : அஞ்சி அஞ்சி ஓடுவதில்
    இன்பமில்லை

    பெண் : வீணைமட்டு மிருந்தால்
    நாதமில்லை

    ஆண் : மீட்டும் விரல்கள் பிரிந்தால்
    கானமில்லை

    இருவரும்: இதயம் கனிந்து
    எதையும் மறந்து
    இருவர் மகிழ்ந்து உறவாட
    நன்நேர மிதே
    மனம் மீறிடுதே
    வனமாளிகை யோரம் ஆடிடுவோம்
    (துள்ளி)

    [அமுதவல்லி,1959]

6.52 வௌிவேசம்!

    ஆம்பளைக் கூட்டம் - ஆடுற ஆட்டம்!
    அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் - அதை
    ஆரம்பிச்சாத் தெரியும் திண்டாட்டம் (ஆம்பளை)

    அடங்கிக் கிடக்கிறதும் பணிஞ்சு நடக்கிறதும்
    ஆக்கறதும் காக்கறதும் நாங்க - உண்
    டாக்கறதும் காக்கறதும் நாங்க - அதை
    அடிச்சுப் பறிக்கிறதும், அடுத்துக் கெடுக்கிறதும்
    அட்டகாசம் பண்ணுறதும் நீங்க (ஆம்பளை)

    ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
    யாரோ எழுதி வைச்சாங்க - அன்று
    யாரோ எழுதி வைச்சாங்க - அதை
    அமுக்கிப் பிடிச்சுகிட்டு விடமாட்டேன்னு
    ஆண்கள் ஒசந்து கிட்டாங்க - பெண்கள்
    ஆமை போல ஒடுங்கிப் போனாங்க (ஆம்பளை)

    மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
    மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு - இளம்
    மங்கையை முடிப்பதுண்டு, மண்டை
    வறண்டு - தன்
    கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
    கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டு - இதில்
    கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு
    (ஆம்பளை)

    கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
    கச்சிதமா திட்டுவாங்க - அதை
    அச்சடிச்சும் காட்டுவாங்க - சொன்ன
    கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்
    கன்னக் கோலைத் தீட்டுவாங்க - அவுங்கக்
    கணக்கைப் புரட்டிப் பாருங்க....என்னங்க
    (ஆம்பளை)

    [புதுமைப் பெண்,1959]

6.53 கேள்வியும் பதிலும்

    காசி : சவால் சவாலென்று
    சதிராடும் பொண்ணாளே - நெஞ்சில்
    தன்மானத் துணிவிருந்தால்
    தாண்டிவா, முன்னாலே!

    ஹரி : அடி சக்கேன்னானாம்!
    வாய்யா வா! பொண்ணு, ஆடட்டும்

    மாலா: பார்த்தாலே கண்ணடிமை - என்
    பக்கம் வந்தால் நெஞ்சடிமை - என்னைப்
    போட்டியில் வென்றவர்கள் - இந்தப்
    புவிதனிலே யாருமில்லை! - அய்யா!
    சரியாத் தெரிஞ்சா சவால் விடு!
    சரக்கு இல்லாட்டா சலாம் கொடு!

    ஹரி : இந்தாய்யா! முதல்லே நீ போடு
    கேள்வியை
    பதிலை பிச்சுபிச்சு வைக்கிறோம்

    காசி : காடும் வளமுடைய நாடும் - பல
    காத தூரமும் கடந்து ஓடும்,
    வளைந்து கலைந்து
    பிரிந்து பின்னும் கூடும்,
    நினைந்தபடி கண்ட பக்கம்
    சுற்றிவரும் - அது என்ன?

    ஹரி : இவ்வளவுதானா நாயி!

    சிவன்: சும்மா இருடா,முந்திரிக்கொட்டை!

    மாலா : மேட்டிலே நிற்காது
    வேற்றுமை பார்க்காது
    காட்டுப் பயிர்களைத்
    காணாவிட்டால் வாழாது,
    நாடெல்லாம் சுற்றி வரும்
    நன்மைதரும் அதன்பேரு
    நதியய்யா எந்தன் பதிலய்யா!

    ஒருவன் : காட்டம்மா உன் கைவரிசையை

    மாலா : ஆளைக்கண்டு மருண்டோடும்
    மானுமில்லை - ரொம்ப
    ஆழத்திலே நீந்திவரும்
    மீனுமில்லை
    அங்கெல்லாம் பாய்ந்துவிடும்
    அம்புமில்லை
    மலரில் அல்லும் பகலும் வட்டமிடும்
    வண்டுமில்லை.

    சிவன் : என்ன சாமி அது?

    ஹரி : முழிக்கறியே இப்போ ஒத்துக்கிறியா?

    காசி : தூர இருந்து கொண்டே
    தொடாமல் திருடுவதும்,
    சுற்றிவிட்ட பம்பரம் போல
    சுழன்றுவிட்ட பம்பரம் போல
    சுழன்று வட்டம் போடுவதும்,
    வீரர்களும் மயங்க...மோக
    வலை வீசுவதும்...காதல்
    விளையாடுவதும் கண்களம்மா!

    சிவன் : கண்கள்

    ஹரி : கண்கள்....சொல்லிப்பிட்டாரே

    காசி : ஏனம்மா!
    நான் கேட்கும் கேள்விகளுக்கும்
    பதில் சொல்?

    ஹரி : ஓ!

    காசி : பாம்புத் தலையில் தகதகதிமி
    பார்த்தன் தேரில் ஜகண ஜண ஜண
    பானை கடகட உரலும் தட தட
    பார்வை திருதிரு, மேனி கருகரு
    பொருளும் என்ன?...உன்
    பதிலும் என்ன?

    மாலா : பாம்புத்தலையில் நடனமாடி
    பார்த்தன் தேரில் சங்கு முழக்கி,
    பானை உடைய வெண்ணெய் திருடி
    உரலிலே கட்டுண்டு கிடந்தவன்
    கமலக் கண்ணன்!
    கார்மேக வண்ணன்!

    காசி : விபரமறியாத கன்னிப் பெண்ணுக்கு
    வெட்கம் வருவது எப்போது?

    குழு : அது எப்போது?

    மாலா : விளையாட்டாய் அவள் திருமணம் பற்றி
    உரிய தோழிகள் பேசும்போது

    காசி : ஓயாமல் பேசும் மங்கையர் கூட
    ஊமையாவது எப்போது?

    குழு : எப்போது?

    மாலா : காயாத வண்ணக் கமலக் கையை
    காதலன் வந்து தொடும்போது

    காசி : தகதகவெனக் கண்ணைப் பறிக்கும்
    தண்ணீர் பட்ட உடனே கருக்கும்
    சகல பேருக்கும் பொதுவாயிருக்கும்
    சாதி வேற்றுமை தன்னை ஒழிக்கும்
    சடசடவெனத் தாவி யணைக்கும்
    சருகைப் பிடித்து உணவாகப் புசிக்கும்
    அது என்ன?

    சொல்லட்டுமா? நானே சொல்லட்டுமா?
    தகதகவென கண்ணைப் பறிப்பதும்
    தண்ணீர் பட்ட உடனே கருப்பதும்
    சருகை விறகை உணவாகப் புசிப்பதும்
    அனலம்மா...நீ
    உணரம்மா!

    [கலைவாணன்,1959]

6.54 வளைகாப்பு

    பெண் : மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
    மஞ்சள் நிற வளையல் இதுவாழ்வுதரும் வளையல்!
    மங்கலப் பெண்குலம் போட்டு வைத்தே மகிழும்
    குங்கும நிறத்தோடு குலுங்கும் திருவளையல்!
    வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
    மங்காத பச்சைநிறம் விளங்கும் எழில்
    வளையல் - தும்பை
    மலர் போன்று இரு மனமும்
    மாசின்றி வாழ்கவென
    வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்!

    குழு : அக்காளுக்கு வளைகாப்பு - அத்தான்
    முகத்திலே புன்சிரிப்பு
    அக்கம் பக்கம் கலகலப்பு - ஆரைப்
    பார்த்தாலும் சுறுசுறுப்பு
    தந்தானே தனத்தானே தான
    தானானே தையத்தானே

    பெண் : முத்துப்போலே பவழக்
    கொத்து போலே - இன்னும்
    மூணுமாசம் போனா மகன் பொறப்பான்!

    1-பெண் : பட்டுப்போலே தங்கத்
    தட்டுப்போலே - கரும்பு
    கட்டுப்போலே கெடந்து கண்ணைப் பறிப்பான்!

    பெண் : ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளைப்போலே
    உக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான்! அவர்
    கண்ணை முளிக்கிறாரு சும்மா கனைக்கறாரு
    என்னான்னு கேளுங்கடி சங்கதியைத்தான்!

    2-பெண் : அடி எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது
    என்னென்னமோ பேசுறாங்க ரெண்டு பேரும்,
    அதை வௌக்க முடியாது வெவரம் புரியாது
    வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம்!

    குழு : ஆ அடி ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

    பெண் : தாலாட்டுப்பாடி இவ தாயாகி மகனுக்குப்
    பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
    காலாட்டி கையாட்டித்
    துள்ளுறதைப் பார்த்துப்புட்டா
    கீழே விடமாட்டாரு ஆளு - மகனைக்
    கீழே விடமாட்டாரு ஆளு! (அக்கா)

    [கல்யாணப் பரிசு,1959]

6.55 மங்கையின் மகிமை

    வேல் வெல்லுமா - என்
    விழி வெல்லுமா
    வேல் வந்து விழி போலக்
    கதை சொல்லுமா? (வேல்)

    கதை சொல்லுமா - வாழும்
    வகை சொல்லுமா
    கடல்போல எழுந்தின்பக்
    கரை துள்ளுமா? (வேல்)

    கோழைக்கும் வீரத்தைக்
    கொடுப்பவள் மங்கை
    கொய்யாக் கனியாய்
    இருப்பவள் மங்கை

    வாழ்வினில் மோகத்தை
    வளர்ப்பவள் மங்கை - ஆண்
    மனதில் வீடுகட்டி
    வசிப்பவள் மங்கை

    மங்கைஎன் பார்வையில்
    மலையரையும் - பகை
    வாளும் ஈட்டியும்
    என்ன செய்யும்? (வேல்)

    கண்ணகி போல் நாளைக்
    கழிக்கவும் தெரியும்
    காதலை மாதவி போல்
    ரசிக்கவும் தெரியும்

    மன்னனைச் சகுந்தலைபோல்
    மதிக்கவும் தெரியும்
    மணிமேகலை போல
    வெறுக்கவும் முடியும்! (வேல்)

    [மஹாலட்சுமி,1960]

6.56 இன்ப கீதம்

    ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே
    அச்சம் தேவையா?
    அன்னமே நீ இன்னும்
    அறியாத பாவையா? (அன்பு)

    பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால்
    அச்ச மாகுமா?
    அன்பு மனம் கனிந்தும்
    புரியாமல் போகுமா? (அஞ்சு)
    மாலை வெயில் மயக்கத்திலே
    மறந்திடலாமோ?
    மனைவி என்று ஆகுமுன்னே
    நெருங்கிடலாமோ?

    ஆண் : உறவானது மனதில்
    பணமானது நினைவில்
    இதை மாற்றுவதார் மானே
    வையக மீதில்? (உறவானது)
    காதலுக்கே உலகம் என்று
    கனவு கண்டேனே (காத)

    பெண் : நான்
    கனவில் கண்ட காட்சியெல்லாம்
    கண்ணில் கண்டேனே

    ஆண் : இது காவியக் கனவு

    பெண் : இல்லை காரியக் கனவு

    இருவரும் : புது வாழ்வினிலே தோன்றும்
    மங்கலக் கனவு
    அன்பு மனம் துணிந்து விட்டால்
    அச்சம் தோணுமா
    ஆவலை வௌியிட வெகு
    நேரம் வேணுமா?
    இருகுரல் கலந்து விட்டால்
    இன்ப கீதமே
    இன்னமுத வீணையும்
    அறியாத நாதமே! (இருகுரல்)

    [ ஆளுக்கொரு வீடு,1960]

6.57 ஒரு விழிப் பார்வை

    பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
    அன்பருக்கு நானிருக்கும்
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா? - என்

    ஆண் : கண்ணில் குடியிருக்கும்
    காதலிக்கு நானிருக்கும்
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? - என்
    கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா?

    பெண் : என்றும் பேசாத தென்றல்
    இன்றும் மட்டும் காதில் வந்து
    இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

    ஆண் : ஓரவிழிப் பார்வையிலே
    உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஒன்றும் தெரியாததுபோல் கேட்பதுமேனோ?

    பெண் : மலர்க்கொடி தலையாட்ட
    மரக்கிளையும் கைநீட்டக்
    கிளையில் கொடி இணையும்படி ஆனதுமேனோ?

    ஆண் : இயற்கையின் வளர்ச்சிமுறை
    இளமை செய்யும் கிளர்ச்சி முறை
    ஏனென்று நீ கேட்டால் யானறிவேனா?

    [ இரும்புத்திரை,1960]

6.58 முற்றிய காதல்

    ஆண் : பெண்ணில்லே நீ பெண்ணில்லே
    காதல்நடிப்புத் தெரியாவிட்டால்
    பெண்ணில்லே
    ஆணில்லே நான் ஆணில்லே - அதைத்
    கற்றுக்கொடுக்க முடியாவிட்டால்
    ஆணில்லே

    பெண் : காதல் - ஆஹாஹா! காதல்

    ஆண் : ஆமாம் காதல்

    பெண் : காதலோ காதல்
    அது எங்கே கிடைக்கும், எப்படிக்
    கிடைக்கும்?
    இனிப்பா,புளிப்பா,கசப்பா, காதல்
    கசப்பா? (அது)

    ஆண் : ஆஹா!
    ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
    உண்பதுதான் மெய்க் காதல் - இந்த
    உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
    உறவுக்குப் பேர்தான் காதல்!

    பெண் : கண்ணிரண்டும் மூடாமல்
    காத்திருந்தேன் -இரவில்
    காத்திருந்தேன்
    கதவைத் திறந்து வைத்துப்
    பார்த்திருந்தேன் - எதிர்
    பார்த்தேன்

    ஆண் : ஆஹா ஹோ காதல் வந்ததா?

    பெண் : இல்லை பூனை வந்தது

    ஆண் : என்னைப் பார் - கண்ணைப் பார்
    ஏக்கம் கலந்தது பார் (என்னைப்)
    இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
    இதயம் சுடுதா தொட்டுப்பார்
    பின்னே போ, முன்னே வா, பேசு, பாடு, ஆடு
    நேசம் வை, நீ நேசம் வை
    நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை

    பெண் : நேசந்தான் உன் நேசந்தான்
    நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்

    [ஆளுக்கொரு வீடு, 1960]

6.59 அன்பு ஆசை

    பெண் : போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
    சேர்ந்து போட்டுக்கணும் - ஒலகம்
    புதுசா மாறும்போது பழைய
    மொறையை மாத்திக்கணும்

    ஆண் : போட்டுக்கிட்டா - ஆமா
    போட்டுக்கிட்டா - தாலி (போட்டுக்)

    பெண் : போட்டுக்கிடும் முன்னே நல்லா
    பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்,
    புடிக்குதான்னு கேட்டுக்கணும்

    ஆண் : புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
    ஆபத்திலே மாட்டிக்கணும் (போட்டுக்)

    பெண் : கழுத்திலே தாலி கெடந்தா
    காலிகூட மதிப்பான் - கொஞ்சம்
    கண்ணியமா நடப்பான் - இந்த
    கயிறு மட்டும் இல்லையின்னா
    கழுைபோல இடிப்பான்

    ஆண் : ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
    அடுத்த பொண்ணு மதிப்பா - கொஞ்சம்
    அடங்கி ஒடுங்கி நடப்பா - இந்த
    அடையாளம் இல்லையின்னா
    அசட்டுத்தனமா மொறைப்பா (போட்டுக்)
    இதுலே மட்டும் போடுற முடிச்சே
    இறுக்கிப் போட்டுக்கணும் - நல்லா
    இழுத்துப் பாத்துக்கணும் - அது (இதுலே)

    பெண் : எடையிலே பிரிஞ்சுக்காமே
    முறுக்கிப் போட்டுக்கணும்

    ஆண் : அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
    அழுத்திப் போட்டிருக்கு - உண்மை
    அன்பு ஆசை ரெண்டும் சேத்து
    முறுக்கிப் போட்டிருக்கு - மூணு
    முடிச்சாப் போட்டிருக்கு (போட்டுக்)

    பெண் : பொறப்பு வளப்புச் சட்டம்

    ஆண் : நாம - சேந்து போட்டுக்கணும்

    பெண் : பொழப்பு இருப்பு நோட்டம்

    ஆண் : அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்

    பெண் : அட - வரவு செலவுத் திட்டம்

    ஆண் : ஒண்ணா சேந்து போட்டுக்கணும்

    பெண் : நம்ம வழக்கமான ஆட்டம்

    ஆண் : ஹா...ஹா...ஹா... (போட்டுக்)


    [வீரக்கனல்,1960]

6.60 பெண் உறவு!

    பெண் : மங்கையரின்றித் தனியாக
    வந்தவர் கிடையாது
    பெண்கள் : தந்ததும் பெண்ணையா
    கொண்டதும் பெண்ணையா
    சந்தேகம் என்னையா?
    சம்மதம் என்ற மொழி கேட்டாலே
    பெண் : சஞ்சலம் தீர்ந்துவிடும் கூட்டாலே
    பெண்கள் : சந்திப்பு ஓயாது
    பெண் : சிந்திக்கத் தோணாது
    பெண்கள் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
    பெண் : சிந்தனைக் காரரோ, யோகியோ
    செய்வதேதும் அறியாத ஞானியோ?
    காதல் உறவினில்
    பெண்கள் : பேதமில்லை
    பெண் : பாசம் இணைந்தபின்
    பெண்கள் : பாவமில்லை
    பெண் : சந்திப்பு ஓயாது
    பெண்கள் : சிந்திக்கத் தோணாது
    பெண் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
    (மங்கையரின்றி)

    [குமார ராஜா, 1961]

6.61 மணமகள்

    மணமகளாக வரும்
    மங்கை எவளோ - என்
    மருமகளாயிருக்கத்
    தகுந்தவளோ? (மணமகளாக)

    குணமகளாய் விளங்கும் குலமகளோ - இனிய
    குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ (மணமக)
    மஞ்சள் குங்குமம் அணியும்
    வழக்கமுண்டோ? - நல்ல
    மனைவிக்குத் தேவையுள்ள
    அடக்கமுண்டோ? - நெஞ்சில்
    இரக்கம் உண்டோ?
    நேர்மை யுண்டோ? - அவள்
    நேசனுக்கதிக யோசனைபுகலும் நிலைக்கு நடக்கும்
    இணக்கம் உடையவளோ? (மணமகளாக)

    பொறுக்கி எடுத்த
    முத்துக் கருத்தைக்
    தொகுத்து வைத்த
    திருக்குறள் முப்பாலும் படிப்பவளோ...ஆ...கனல்
    தெறிக்கக் கொதித்து மணிச்
    சிலம்பையுடைத்து நீதி
    தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ....ஆ
    அன்புக்கணை தொடுத்துத்
    துன்பத்தினை விரட்டும்
    ஆற்றல் மிகுந்தவளோ....இசை

    [குமார ராஜா,1961]

6.62 பொறுப்புள்ள பெண்

    நான் வந்து சேர்ந்த இடம்
    நல்லயிடந்தான் - இதை
    நம்பவைக்கும் பொறுப்பு
    அன்பிடந்தான் (நான்)

    ஏனென்று தோன்றவில்லை
    எதிர்பார்த்து வந்ததில்லை
    இல்லாத அதிசயந்தான்
    இது ஒரு ரகசியந்தான் (நான்)
    அருமையுடன் வளர்த்து
    அறிவுள்ள பெண்ணாக
    ஆக்கித்தரும் பொறுப்பு அன்னையிடந்தான் - குலப்
    பெருமைதனைக் காத்து
    பெற்றவர் மனம் நாடும்
    பேரைப் பெறும் பொறுப்பு பெண்ணினிடந்தான்
    (நான்)
    எனக்கும் புரியாமல்
    அவர்க்கும் புரியாமல்
    இடையில் துணிவுவந்த விந்தையாலே
    எப்படியாகுமென்றும்
    எங்குபோய் நிற்குமென்றும்
    எண்ணவும் முடியவில்லை சிந்தையாலே - இன்று
    (நான்)

    [குமார ராஜா,1961]

6.63 நன்றி கூறும் தென்றல்

    பெண் : உள்ளங்கள் ஒன்றாகித்
    துள்ளும் போதிலே
    கொள்ளும் இன்பமே
    சொர்க்கம் வாழ்விலே (உள்ளங்கள்)
    ஆண் : எல்லை மீறும் அன்பே
    செல்வம் ஆகுமே
    இளமை நேசமே
    மண்மேல் சுகமே! (எல்லை)
    பெண் : சிந்தும் செந்தேனும்
    சொல்லில் ஊறுமே
    தென்றல் வீசியே
    நன்றி கூறுமே
    இருவரும் : உள்ளங்கள்
    பெண் : கொஞ்சும் சோலைக்குருவி
    சொந்தம் பேசுமே
    குறைவில்லாமே
    எல்லாம் தருமே (கொஞ்சும்)
    ஆண் : பொங்கும் நீரோடை
    சந்தம் பாடவே
    கண்கள் ஆடுமே
    காதல் நாடகம்!
    இருவரும் : உள்ளங்கள்

    [புனர் ஜென்மம்,1961]

6.64 பிரிக்க முடியுமா

    பெண் : என்னைப் பார்த்த கண்ணு வேற
    பெண்ணைப் பார்க்குமா?
    எண்ணம் கலந்த பின்னே இனி
    சொன்னாலும் கேட்குமா? (என்னைப்)
    பின்னிக் கிடக்கும் முல்லைக் கொடியைப்
    பிரிக்க முடியுமா - அன்பை
    பிரிக்க முடியுமா?
    கண்ணும் கண்ணும் கட்டின கூட்டை
    கலைக்க முடியுமா?
    பனியை நம்பி வெதை வெதைச்சா
    பலன் விளையாது
    பருவமழை நானி ருந்தால்
    பழுது வராது - அத்தான்
    வழியில் பார்த்து சிரிச்ச தெல்லாம்
    மனைவி யாகுமா?
    மலையைப் போல் வளர்ந்த காதல்
    மறந்து போகுமா? - சொன்ன
    வார்த்தை மாறுமா? (என்னைப்)
    ஆண் : உன்னை நினைக்க நினைக்கக் கண்கள் மலருது
    காணும் நினைவுமீறி உள்ளம் மயங்குது;
    உன்னைப் பார்த்த கண்ணு வேற
    பெண்ணைப் பார்க்குமா?
    உள்ளம் கலந்த பின்னே - இனி
    கொஞ்சினாலும் கேட்குமா? (உன்னைப்)

    [குமார ராஜா,1961]

6.65 ஒற்றுமை கலைந்தால்...

    கனியிருக்கு விருந்து வைக்க
    காடிருக்குக் கூடுகட்ட
    கலந்துபேச நானிருக்கேன் வாங்க - சும்மா
    காத்திருக்க நேரமில்லே வந்திடுங்க
    ஓ...ஓ...ஓ... (கனியிருக்கு)

    சின்னஞ்சிறு சிட்டுகளே
    சிங்காரப் பறவைகளே!
    தெம்மாங்குக் குயில்களே
    சிவந்த மூக்குக் கிளிகளே!
    தேனெடுக்கும் வண்டுகளே ஓடிவாங்க - நான்
    சேதியொண்ணு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க
    ஓ...ஓ...ஓ... (கனியிருக்கு)

    ஓங்கிவரும் மூங்கில் மரம்
    ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,
    ஒழுங்காக் குருத்துவிட்டு
    கெளை கெளையா வெடிச்சிருக்கு,
    ஒட்டாமெ ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? - எதிலும்
    ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?
    ஓ...ஓ...ஓ... (கனியிருக்கு)

    [எதையும் தாங்கும் இதயம்,1962]

6.66 எண்ணத்தில் பொருத்தம்

    மொகத்தைப் பார்த்து
    முறைக்காதீங்க - சும்மா
    மொகத்தைப் பார்த்து
    முறைக்காதீங்க - பல்லை
    மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்)

    பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே
    புகுந்திருக்கும் மாப்பிளே,
    போட்டியிலே ஜெயிச்ச நீங்க
    புதுமையான ஆம்பளே!

    என்னத்தான் புடிச்சிருக்கா
    இல்லையான்னு மனசுலே
    இருக்கும் ரகசியத்தை
    இழுத்துப்போடுங்க வௌியிலே (மொகத்)

    முன்னும் பின்னும் பழக்கம் வேணுங்க
    இங்கே வர்ரதுன்னா
    முறையிலேதும் நெருக்கம் வேணுங்க - எண்ணத்தில்
    பொருத்தம் வேணுங்க

    அது இல்லேன்னா இரண்டு பக்கமும்
    இன்பம் ஏதுங்க?
    அன்னம்போல நடக்குமுங்க
    ஆளைக்கண்டா பறக்குமுங்க
    என்னமோன்னு நினைக்காதீங்க - நான்
    சொல்லிப்புட்டேன்... (மொகத்)

    [ விக்ரமாதித்தன், 1962 }

6.67 வழி தேடும் காதல்

    என்றும் இல்லாமல்
    ஒன்றும் சொல்லாமல்
    இன்பம் உண்டாவதேனோ?

    எண்ணங்கள் பண்பாடுது
    கண்களும் எங்கோ வழிதேடுது - எது
    வேண்டியோ வாடுது ஆடுது

    மனம் என்னோடும் நில்லாமல்
    முன்னால் ஓடுது - என்
    வீசும் தென்றல் காதோடு
    பேசிடும் பாஷை நானறியனே

    வெறும் போதையோ
    ஆசையோ மாயமோ - இது
    விளங்காமல் வரும்
    காதல் விந்தைதானோ - என்

    [கலை அரசி, 1963]

6.68 துணை தேடுதே!

    நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
    துடிப்பது ஏனோ?
    நிறைந்த உறவில் கனிந்த காதல்
    நிலையிதுதானோ?
    அணையை மீறும் ஆசை வெள்ளம்
    அறிவை மீறுதே
    அதையும் மீறி பருவகாலம்
    துணையைத் தேடுதே!....(நினை)

    சுவரில்லாத வீடுமில்லை
    உயிரில்லாத உடலுமில்லை
    அவரில்லாமல் நானுமில்லை
    அன்பு சாட்சியே!
    உனக்கு நானும் எனக்கு நீயும்
    உரிமைத்தேனேன்று
    கணக்கில்லாத கதைகள் பேசிக்
    கலந்ததை இன்று......(நினை)

    [கலை அரசி,1963]

6.69 அன்பு வளருமா?

    பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
    மறந்து விடாதே
    அதுக்குமேலே வார்த்தையில்லே
    வருத்தப்படாதே
    மாமோய்....மாமா....மாமா...
    வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
    அன்பு வளருமா? - அது
    வளர்ந்தாலும் நீ நினைக்கிற
    இன்பம் மலருமா? (ஆசை)
    ஆண் : நீ திரும்பிப் பார்க்கும்போது மனசு
    திருட்டுப் போகுது - கண்ணே
    திருட்டுப் போகுது
    சம்மதத்தைச் சொல்லப் போறியா? - இல்லே
    என்னைச்
    சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
    பெண் : ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
    காதல் எப்படி மொளைக்கும்? - ஒங்
    கனவு எப்படிப் பலிக்கும்?
    கையைத் தொடாதே
    கையைத் தொடாதே - மானம்
    காற்றிலே பறக்கும்
    மாமோய்....மாமா...மாமா....
    ஆண் : கணக்கு மீறி காடு இருக்குது
    அடுக்கு மாடி வீடு இருக்குது
    அதுக்கு மேலே பணம் இருக்குது
    மானே உனக்கு!
    அத்தனையும் பாதுகாக்கும்
    கவலை எனக்கு - நீ
    கல்யாண தேதி வைக்கிறியா? - இல்லே
    இப்போ
    காவிக்கடைக்கு ஆள் அனுப்பறியா?
    கண்ணே....கண்ணே....கண்ணே....
    பெண் : என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா?
    சும்மா இளிக்கிறியே
    சொன்னதெல்லாம் விளங்கலியா?
    உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா?
    வந்தாலும் ஒட்டாது
    கசந்துபோகும் வேப்பிலையா?
    மாமோய்...மாமா....மாமா....(ஆசை)

    [கலையரசி,1963]

6.70 வளையல் போடும் சண்டை

    ஆண் : கலைமங்கை உருவம் கண்டு
    காதல்கொண்டு
    தணியாத மனைத உள்ளம் எங்கே உண்டு
    கண்ணே (கலை)
    கமல மலரை வென்று
    திகழும் முகத்தில் ரெண்டு
    கருவண்டு விளையாடும்
    காட்சி வேறெதில் உண்டு (கலை)

    பெண் : எழில் சிந்தும் இளமைகொண்டு நேரில்
    நின்று
    அலைமோதும் இன்பம் வேறெதிலே உண்டு
    வளம் பொங்கும் உருவம் கண்டு போதை
    கொண்டு
    மயங்காத மங்கையுள்ளம்
    எங்கேயுண்டு - அன்பே
    வளம் பொங்கும் உருவம் கண்டு....

    ஆண் : கைவளையல் போடும் சண்டை- எங்கும்
    கன்னலிசை பாடும் தண்டை - சுழலும்
    மை விழியில் மேவும் கெண்டை - வந்து
    மெய்யுருகப் பாயும் ஒன்றை

    பெண் : உள்ளம் இரண்டும் கனிந்து
    ஒன்றையொன்று கலந்தால்
    கொள்ளை கொள்ளும் இந்த
    வெள்ளம் போறாதோ
    துள்ளிவந்து ஆண்களை
    துணைதேடும்போது
    தூரநின்றே ஆட என்றும் வெண்கொடியே நீ

    ஆண் : எண்ணச் சோலையில் நின்று
    இருகரமும் இணைந்து படர்ந்து மகிழ
    எழில்வளர சுகம்விளைய மனம் மலரும்
    படர்ந்து நிரைந்து குலுங்க
    துணையென்னும் உறவினில் துணிந்திடும்
    நினைவினில்
    சுவைதரும் சுபதின நிலைபெறவே
    ஒருபுறமாட சிறுமயிலாட குளிரும்
    முகமே அருகினில் நெருங்க
    புதுநிறமே பெரும் தளிர்விரல் தரும்குறி
    அபிநயங்கள் விளங்க

    பெண் : அலைகடல்மேல் நிலவெனவே அனுதினமே
    தழுவி இனிய மலர் குலுங்க

    ஆண் : பனிமலரிதழ் அமுதினை அருந்த

    பெண் : பல கதைகளும் கவிதையும் முழங்க

    ஆண் : சுகம் வழங்க

    பெண் : மதி மயங்க

    இருவரும் : விரைந்து தனைமறந்து அணைகடந்து
    வரும்
    கலைபொங்கும் உருவம் கண்டு
    காதல்கொண்டு தணியாத மனிதவுள்ளம்
    எங்கேவுண்டு
    கலைபொங்கும் உருவம் கண்டு காதல்
    கொண்டு..

    [மகனே கேள்,1965]

6.71 அழகு வந்தது

    பெண் : ஆட்டம் பொறந்தது உன்னாலே - அதில்
    அழகு வந்தது என்னாலே
    காட்சி நிறைஞ்சது பொன்னாலே - அந்தக்
    கலை வளர்ந்ததும் என்னாலே
    சத்தம் பொறந்தது தன்னாலே - அது
    சங்கீதமானது என்னாலே
    ஜாடை பொறந்தது கண்ணாலே - அது
    மேடைக்கு வந்தது என்னாலே
    ஆட்டம் ஐயா ஆட்டம்....(ஆட்டம்)
    நடை பொறந்தது தன்னாலே - அது
    நடனமானது என்னாலே
    நாடகம் சினிமா நளினம் கிளினம்
    எல்லாம் இதுக்குப் பின்னாலே
    ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்)
    புதுபுதுஸா கலரைக் காட்டி
    பூ மலர்ந்ததும் பந்தலிலே
    மதிப்பும் மகுகும் மணமும் அதுக்கு
    மலிஞ்சிருக்குது கூந்தலிலே
    பளபளக்கிற பட்டுப் புடவைகள்
    ஒளிஞ்சிருக்குது கடையிலே - இப்ப
    மினுமினுக்கிற ஜரிகையோட
    சலசலக்குது இடையிலே
    ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்)


    [மகனே கேள்,1965]

6.72 பருவம் வாடுது

    லால லால லால
    பருவம் வாடுது இங்கே - உன்
    பார்வை எங்கே
    பாசம் தேடுது அங்கே - உன்
    பார்வை எங்கே
    கண் சுழலும் காதல் தொடரும்போது
    ஜோடியில்லாத மாடு நீ ஓடுவதேனோ
    வீணோ (பரு)
    பாடங்கள் சேர்ந்து மூளையிலே
    நாடகமாடும் வேளையிலே
    காதலை நாடிட நேரமில்லை
    சுகம் காணும் வழியில்லை
    உன் யோசனையும் என் வேதனையும்
    பெரும் சோதனைதான் போடீ
    கல்வியும் வந்து காதலும் வந்தால்
    கருத்தில் இடமேது
    உருவம் வாடுது இங்கே - என்
    உள்ளம் அங்கே
    இளமை மீறுது இங்கே - என்
    இன்பம் அங்கே
    வாலிபம் வரும் போதினிலே
    வாழ்விலே வரும் மோகம் - அதை
    மறந்தால் பறந்தே போகும் - நீ
    உணர்ந்தால் ஆனந்த மாகும்
    அன்பு மிகுந்து ஆசை வளர்ந்து
    அழகு குலுங்கும் வயதிலே
    அமைதியுமில்லை மனதிலே - உன்
    போதனையும் - என் காதலும் - ஒரு
    தேதியில் வௌியாகும்
    நான் துணிந்திடும்போது
    தொல்லைகள் ஏது சுகந்தான் புவிமீது
    உருவம் வாடுது இங்கே - என்
    உள்ளம் அங்கே
    இளமை மீறுது இங்கே - என்
    இன்பம் அங்கே
    உருவம் வாடுது இங்கே

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.