LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 1

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!

(வரலாற்றுக் கவிதை நாடகம்)

 

காட்சி 1

 

 

 

 


காலம்       : காலை
இடம்        : அரசவை
வருவோர்   : பெரிய மருது, சின்ன மருது, தேவர்,

 கறுத்தான் மற்றும் பலர்.

[மருது பாண்டியர்கள் வாழ்க!
மாமன்னர்கள் வாழ்க! ]

( வாழ்த்து ஒலி கேட்டுக் கொண்டிருக்
    கிறது. வாழ்த்து ஒலியின்போது மரு  

    தரசர்கள் முதலானோர் அனைவரும்  

    நின்ற நிலையில் திரை விலகுகிறது.

    அவையோரை அமருவதற்கு சைகை

    காட்டி தானும் அமர்ந்து, பின் எழுந்து

    பெரிய மருது பேசுகிறார்.)

 

பெரிய மருது
அமைச்சர் பெருமக்கள் ஆன்றதமிழ்ச் சான்றீர் நமைச்சேரும்

வாழ்த்தினிலே நாட்கடத்த வேண்டாம் இமைப்போதும் சோராதிந்

நாட்டிற் குழைக்க உமையெல்லாம் ஊக்குவிப்போம் உய்ந்து.

தேவர்
மன்னர் பெருமானே மா மருது பூமானே
முன்னர் பகைமுடித்த மூலவனே-உன்னருமை
போற்றிப் புகழ்கின்றார் பொங்கும் சிவகங்கை
நாட்டின் திறத்தால் நயந்து.

சின்ன மருது

தேவர் பெருமானே தேர்வேண்டும் என்றேனே

ஆவன செய்தீரா ஆலயம் சென்றீரா

திருக்கானப் பேரின் தெருக்காணத் தேர்வேண்டும்
உருக்காண மேலாய் நறுக்காக நாமுடிப்போம்.


பெரிய மருது

“கண்ணுடை நெற்றியான் கானப்பேர் காளையான்”

விண்ணிடை வேட்கையார் வேண்டுங் குலக் கோமான்

பண்ணிடை மூழ்கும் படர்சடையான் என்குலத்தை

நண்ணிடும் நாயகற்கு நாட்டிலிலா தேர்வேண்டும்.


தேவர்
மண்ணிடை ஆள்கின்ற மாமருது சோதரர்க்கு
விண்ணிடை வேட்கை விளம்புதற்கோ நேரமிது!
கண்ணிடைக் காட்டும் கருணைக்கு நாடடிமை
மின்னிடும் தீச்சுடரில் மீளார் பகைவருண்மை !


சின்ன மருது
காட்டகத்தே ஆடக் கருதினான் கானப்பேர்
பாட்டகத்தே வைத்தடியார் பாடும் பெரும்பதியே
நாட்டகத்தே கொண்டநம் நற்கோட்டை யாயிருக்க
கோட்டகத்தைக் கொள்வார் குவலயத்தில் யாருமிலை.

 

கறுத்தான்

வேட்டதிரும் பீரங்கி வெந்தோட்டாத் துப்பாக்கிக்
காட்டிவரும் வெள்ளையனும் கைக்கூலி யாய்வந்தே

நாட்டில் இடம்பிடித்து நல்லவரை வஞ்சித்து
வாட்டுவதேன் எங்கும் வரிவேண்டிப் பாளையத்தே!

 

சின்ன மருது

திறல்மறவர் திசைநோக்கித் திறைகேட்க வருவதற்கு

பிறனொருவன் இதுவரையில் பிறந்ததிலை; யறிந்திடார்கள்

கரம்நீட்டி மறக்குலத்தான் வரவேற்றுத் துணிவளிக்க

'சிரங்காட்டி எவனெவனோ தரங்கூட்டி  மிரட்டுகிறான்.

ஆப்பத்தைப் பங்கிட் டதைக்கொண்ட தொன்றாக

ஆப்பசைத்து வாலைவிட் டகப்பட்ட தொன்றாகும்.

மோப்பம் பிடித்து முரண்பாடு கண்டறிந்து

ஏப்பம் விடுகின்றான் எங்கும் வளைக்கின்றான்.

 

கறுத்தான்

ஐதரலி போயினபின் ஆணவம் மிகுந்துளது
கைதனிலே கர் நாடத் தானாம் நவாபுமுளான்
பைதனிற்ப ணம்நிரப்பப் பலர்பார்த்து காத்திருக்க
வைதலி லென்னபயன் வாழ்கின்றான்
                              வெள்ளையனே !

பெரிய மருது

வெள்ளையரில் வெல்ஷ் துரை

நல்லவர் நம் நண்பரவர்

உள்ளபடி நம்முறவில்

உவகைதான் காணுகின்றார்.

 

சின்ன மருது

அக்நியூதுரை என்பான்

அவருக்கும் மேலுள்ளான்

பக்கென மாறிவிட்டால்

பகையாக லாமன்றோ !


பெரிய மருது
தம்பி உடையான் படைக்கஞ்சான்
      தமரில் சிறந்தான் தடைக்கஞ்சான்

வம்பில் முளைத்தான் வதையறிவான்
      வரவில் திளைத்தான் வகையறியான்

எம்பிக் குதிப்பார் எவருண்டு

      எதையும் தடுக்கும் துணையுண்டு
நம்பி இருப்போம் நமதுறவே

      நட்பும் சிறக்கும் நலமுறவே!

 

சின்ன மருது

சொன்ன மொழிகேட்க சோதரர்கள் நிறைந்திருக்க

சோர்வு அறியாதார் சூழ்ந்திங்கு மகிழ்ந்திருக்க

எண்ணமுரைத்துவிடில் எப்படியும் முடித்துவைக்க

எண்ணில் அடங்காத எத்தனையோ பேரிருக்க

அண்ணன் சுமைகுறைக்க அண்மையில் நானிருக்க

அன்ன வளமிருக்க அரண்வலியும் சிறந்திருக்க
என்ன பிழையிருக்கும் எங்காளைத் துணையிருக்கும்

ஏற்றம் புகழிருக்க எப்போதும் துதித்திருப்போம்.

 

கறுத்தான்

காவலன் கருணை கண்டிருக்க

காலமும் அவர்க்குத் தொண்டிழைக்க

ஆவலில் மிகுந்தே யகங்களிக்க

ஆடவர் மிகுந்தே யார்ப்பரிக்க

சேவலின் வழியில் சேர்ந்தாடும்

செம்மொழித் துணையாய்ப் பெண்டிருக்க

பாவலன் கவிதைப் புனைந்துவக்கும்

பண்பினாற் சிறந்திந் நாடிருக்கும்.
 
பெரிய மருது

      பெருமைப் படுவது இருக்கட்டும்

      பெரிதும் மக்கள் சிறக்கட்டும்

      அருமைத் தம்பி குணத்தாலே

      அனைத்து முங்கள் பணத்தாலே

      தருமச் செயல்கள் மலியட்டும்

      தகைமை யெங்கும் தழைக்கட்டும்

      வருமெப் பகையும் ஓய்ந்துவிடும்

      வன்மம் முன்ஓடியே சாய்ந்துவிடும் !

சின்னமருது

குன்றக் குடியினிலே கோலமயில் வேலனுக்கு
நன்றாய்த் திருக்கோயில் நாமெழுப்பித்

தொட்டகுளம்

அந்தக் குளக்கரையில் ஆயிரம் தென்னைமரம்

பந்தலிட்டு வைத்தாற்போல் பாங்காக நட்டு

வைத்தோம்.

கறுத்தான்

திருக்கூடல் மதுரைவாழ் தேவியரி ருப்பிடத்தில்
திருவாட்சி யொளித்தீபம் உருவாக்கிப் புரந்தீரே !
அருட்சுடரும் ஒளிர்வதற்கு ஆகும்நெய் வருவதற்கு

பொருட்பொதிய "ஆவியூர்” புரந்ததுவும் மறந் திடவோ

 

தேவர்

குமரருரு போர்த்தக் கொடுத்தீரேப் பொற்கவசம்
அமரராய் நீரிருவர் ஆவதற்கன் றோஉபயம்?
காளையார் கோயிலுக்குக் கல்லெடுத்து வந்தமுறை
ஆளையே நிற்கவைத்த டுத்தடுத்துக் கைவழியே.
மானா மதுரையே மைல்கள் பலவிருக்க
தானாகக் கற்கள் தடம்வந்து சேர்ந்தமுறை
கோனான உம்புகழைக் கூறும்.

பெரிய மருது

தம்பியவன் பெரியகுணம் தருமத்திற் குரியகுணம்
வெம்பசியால் களைத்துப்போய் விழுந்திட்ட தொருநேரம்

நம்பிக்குக் கூழிட்டாள் நடுக்காட்டில் தாயம்மாள்
கம்பூன்றும் அத்தாய்க்குக் காணிக்கைக் “கூழுராம்”

தேவர்

சிவகங்கைச் சீமையிலே சேறுமுண்டு சோறுமுண்டு
பகைவந்த வேளையிலே பாயப்பல் புலிகளுண்டு.

 

பெரிய மருது

எட்டாண்டு காலம் மக்கள்

பட்டதுன்பம் போதும் இங்கு

மட்டில்லா துயரினை நாமே

மறந்திருப்போம் பகை தவிர்ப்போம்.

 

தேவர்

முட்டவரும் காளை கண்டு எட்டிநிற்ப தேது வீரம்?

 

சின்ன மருது

கட்டவிழும் தேவரே நீர்

காட்டவரும் குறிதா னென்ன?

 

தேவர்

மருதீசர........ மகேசா!.........

மக்கள் ஒதுக்கிவிட்ட மன்னர் குலத்தவர்

எக்கதியும் இல்லாது ஏங்கும் உடையணர்

வெட்கங் களைந்தெறிந்து வீரந் தனைத்துறந்து

மிக்க சிரமத்தால் மேல்நாட்டா னைக்கண்டு

தக்க உதவிக்குத் தாள் பணிவதாய்ச் சொல்லி

பக்கபலந் தேடிப் பறங்கியரை வேண்டினராம்
ஒக்கும்மன் னர் போல் ஒளிந்து.

 

சின்ன மருது

படையறியா பண்பினற்குப் பாகமொரு கேடா
உடையணரைப் போன்றார் உரிமைகொள நாடா.

தேவர்

நம்பி இருமென்று

கும்பினியர் கூறினராம்.

 

சின்ன மருது
கும்பினியர் கூறினரா
வம்பினிதான் வந்துவிடும்.

பெரிய மருது
கும்பினியர் நமக்கு நண்பர்கள்
வம்பினியே னிங்கு வரவேண்டும்
தம்பியுன்  கோபம்  தணித்திடுவாய்
நம்பிநா மென்றும்  நட்புறுவோம்.

சின்ன மருது

இறைவா! இறைவா! இதென்ன சோதனையோ?
மறைவாய் எமக்குள்ளே மாசுதனை ஏன்  படைத்தாய்?

முத்து வடுகநாதத் தேவருக்கு வாரிசென
பித்தன் உடையணனும் இத்தருணம் ஏன்வந்தான்?
உச்சிகொள் தேவருக்கு உன்மத்த னாமிந்த
பிச்சைகொள் உடையணன் பேசுவதா வாரிசென
செச்சேசே வெட்கமிது வெட்கம்!


பெரிய மருது


அரிதாகப் பிறந்திட்டார்
அப்பாவி உடையணரும்
பெரிதாக்கிக் கொள்வானேன்
பெருஞ்சீற்றம் வருவானேன்.

 

சின்ன மருது


இருளுடை நெஞ்சமும் ஈரமில் உள்ளமும்
பொருளுடை பகையெனில் புகுந்திடும் கள்ளமும்

மிஞ்சினால் கெஞ்சியும் கெஞ்சினால் மிஞ்சியும்
வஞ்சனை சூதுகள் வாழ்ந்திடத் தோதுகள்
என்றுளப் பறங்கியர் என்றுமே உறங்கிடார்.
இன்றுள நட்பினைக் கொன்றிட அஞ்சிடார்
குடித்த மடியினை அறுத்திடும்
தடித்த குணத்தின் தன்மையரவரே

றுத்தான்
பிரியா நட்பு கொண்டான்
பேரெதிரி யாவ துண்டா?
பெரியவர் அன்று இட்ட
பிச்சை தானே வெல்ஷினுயிர்.

சின்ன மருது
அண்ணன் காத்திட்டார் அடுபுலியை வீழ்த்திட்டார்

சின்னவன் உயிர்பிழைத்தான் செய்நன்றி

அறிவானா?


றுத்தான்
அன்னவனா வெல்ஷ்துரை அறுசுவையும் படைத்தோமே
மன்னவரின் நட்பிற்கு என்னவரின் ஏற்பதென்றான்

சின்ன மருது
தேனும் கனியும் தேர்ந்தெடுத்த நல்லரிசி
நானும் அனுப்பிவந்தேன் நாக்கொட்டியுண்டுவந்தான்

ஊனும் உதிரமும் உண்மையில் வஞ்சனைதான்
நானும் அறியவில்லை நட்பிலேதும் புரியவில்லை.

 

தேவர்
பெரியவரும் சின்னவரும்
      புரியவரும் காலம்வரும்
மருதிருவர் பகைகொண்டார்
      மாநிலத்தில் பிழைப்பதில்லை.

பெரிய மருது
அவையோரே ! பெரியோரே !
            அன்னியரைக் கவனிப்போம்.
நமையாரும் வஞ்சித்தால்
      நாட்டினிலே விட்டுவையோம் !
                       
                                    (திரை)

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.