LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!


(வரலாற்றுக் கவிதை நாடகம்)


காட்சி
3

 

 

 

 

 

காலம் : அந்திப்பொழுது
இடம் : ஊருணிக்கரை
வருவோர் :   முதியவர் பொய்யுருவில் சிவஞானம் -

      மீனாட்சி.

            (மீனாட்சி தன்னை மறந்த நிலையில் காதலனை
          நினைந்து மெல்லிய குரலில் பாடிக் கொண்
          டிருக்கும்போது சிவஞானம் மறைந்திருந்து

          கேட்கிறான்.)

 

மீனாட்சி

அல்லிக் குளக்கரை யிலே - அடி

காத்திருந் தேன்வழி பார்த்திருந் தேன்
சொல்லி வரச்சொன் னதும் -  வெறும்

சோதனை தான்மிக வேதனை தான்
கல்லின்  மனத் தினரோ - எனைக்

காக்கவைத் தார்பலர் பார்க்கவைத் தார்
வல்லார் வரவில்லையே - மனம்

வாட்டமுறு தேமிக நாட்டமுறு தே.

வண்டும் மலர்முகந் தே - மது

      மொண்டுசெல் லுதேமிகக் கொண்டு செல்லுதே

பெண்டும் தவித் திருக்கிறேன் - இதைக்

      கண்டுசென் றுமேயவர்காதிற் சொல்லுமோ ?

செண்டு தொடுப்பதற்கே - நான்

      சேர்த்துவைத் தேன்மலர் கோர்த்துவைத் தேன்
கண்டு களிப் பதற்கே - அவர்

      வரவிலையே சுகந் தரவிலையே

      (மறைந்திருந்த சிவஞானம் மீனாட்சி முன்
      தோன்றிக் குறும்பாக
)

 

சிவஞானம்
வண்டு விடுதூது வாய்மலர்ந்த பூங்கோதாய்
கண்டு களிப்பதற்குக் காத்திருப்ப தாருக்காம் ?
நண்டு கொழுத்தால் வளைத்தங்கா தென்பாரே !
கண்டபடி ஊருணியில் காத்திருப்ப தேனாத்தா?

மீனாட்சி

(சினந்து)

காத்திருக்கும் காரணத்தைக் கண்டறிய வந்தவரே
மூத்திருக்கும் தோற்றத்தில் நாத்திமிருந்

                                    தானேனோ
நண்டு கொழுத்ததென நாக்கொழுத்துக் கூறியதில்
உண்டு மிகக்கொழுப்பு உந்தனுக்குண்டுண்டு.

சிவஞானம்
ஆத்தா சினங்கொண்டால் அத்தனையும் பேரழகு
தாத்தா உரைத்ததுவும் தாங்காப் பருவமடி.

மீனாட்சி

[ஏளனமாக]

மீசை நரைத்தவரே! மெத்தனங் கற்றவரே !

ஆசை மொழியுரைக்க ஆணழகன் மச்சான் நப்
பாசை மிகுந்திருக்கேன் பார்த்திங்குக் காத்திருக்கேன்
வேசை மனங்கொண்டே வேறெங்கும் சென்றாரோ?

சிவஞானம்
உந்தன் நினைவிருந்தால் ஒடிவர மாட்டானா?
பந்தம் மிகுந்திருந்தால் பாய்ந்துவர மாட்டானா?
எந்தனுக்குத் தோணுவது ஏந்திழையே நீயுந்தன்
சொந்தங் களைந்தெறிந்தச் சுந்தரனை விட்டொழிப்பாய்.

மீனாட்சி

கள்ளத் தனமாகக் காட்டுமுரு நானறிவேன்

            (சிவஞானத்தின் பொய்தாடியைப் பிய்த்து)
உள்ளத்து வேடம் உணரவில்லை ஆனாலும்
மக்கள் குறைதீர்க்க மாமன்னர் காத்திருப்பார்
பக்கத்தில் பாருமதோ வெள்ள மருது.

      (திடுக்கிட்டுப் பொய்த்தாடி மீசையைச் சரி செய்து

  கொண்டே)

சிவஞானம்
பெரியவரா...ஐய்யயோ. பேரிடியாய்ப் போச்சே
உரியவனைக் காப்பதுவும் உன்கடமை யாச்சே

கரியவிழிக் கண்ணே காப்பாத்து முன்னே!
அறியவிடக் கூடாதே.............

      (அச்சத்தால் அவள் பின் மறைந்து பொய்த்  
         
தாடியைச் சரி செய்ய)

மீனாட்சி
ஹ...ஹ...ஹ...ஹ...ஹா.

சிவஞானம்
என்ன சிரிக்கின்றாய்? எங்கே பெரியப்பா?


மீனாட்சி
என்னத்திற் கிங்குவந்தார் என்மாமன் என்றெண்ணி

சிவஞானம்
வெள்ளை மருதென்று வேடிக்கைச் செய்தாயா?
கள்ளி எனக்காகக் காத்ததற்குத் தண்டனையா?

மீனாட்சி
கள்ளர் குடிப்பிறந்தக் கள்ளச்சி எந்தனையே
கள்ளி எனச் சொன்னால் கொள்ளியினால்
                                    சுட்டிடுவேன்

சிவஞானம்

பொய்யுரைத்த உன்னைப் புகலுவ தெங்கணமாம்?

மீனாட்சி
பொய்த்தாடி மீசை புனைந்துவந்துத் தோற்றவரே?
சீரார் சிவகங்கைச் சேர்க்கின்ற நல்லாட்சி

ஊரார் மனமறிந்து ஊருணியில் நீர்பாய்ந்து
உள்ளம் உவக்கவரும் ஓடைநீர் பார்த்திருந்து
வெள்ளம் வருதென்றேன் வெள்ளை மருதில்லை.

சிவஞானம்
அத்தனை மொழியழகு அன்னமே எங்குகற்றாய்?
இத்தனை வாயாட என்னையும் நீராட
கத்ததும் எங்கடியோ? கன்னியும் ஏங்கலையோ?
பித்ததும் கொண்டேன் பெரும்பிணியைத்
                                தீர்க்கலையே?
 
மீனாட்சி
பாண்டியரின் நாட்டில் படைமறவர்த் தென்னாட்டில்
வேண்டும் தமிழிலையேல் வேறெங்குத் தானுண்டாம்
போகட்டும் என்னைப் பொழுதோடு வாயென்றீர்
ஆகட்டும் என்றுவந்தால் அத்தனை நாழிகையா?
அப்பத்தா இந்நேரம் ஆச்சுதடி என்றிட்டால்
இப்பத்தான் வந்தார் என்றுரைக்கக் கூடுமாமோ?

சிவஞானம்
செப்பத்தான் வேண்டும் சின்னாட்கள்
                              பொய்யுரைகள்
எப்பத்தான் நாமும் இனித்திருப் போமோ?
உளவறியும் நண்பன் மதுரைநகர் உள்ளே
சிலவறியும் நோக்கிலே சென்றுவர நாழியாச்சு.

மீனாட்சி
மாமதுரைப் பார்த்தேநான் மாதம் பலவாச்சுத்
தேமதுரக் காட்சிகளோ தேர்ந்த கனவிலாச்சு.

அங்கயற் கண்ணி அருட்பார்வைப் பெற்றபின்னே
பங்கயப் பொற்குளத்தில் பாதம் நனைத்துவிட்டு
உங்களின் தாள்வணங்கி ஊர்மக்கள் தாமொதுங்கி
எங்கணும் சுற்றிவர என்னின்பக் கனவில்
உமது துணையாலே ஓர்முறைநான் கண்டேன்
அமளியிலே கூடலும் ஆனந்தம்! ஆனந்தம்!!

சிவஞானம்
என்னை மடக்கியதை எண்ணித் தவித்தேனென்
முன்னே அகப்பட்டாய் மூக்குமறு பட்டாய்!
அமளியெனில் நற்படுக்கை ஆங்கே நீ கூடல்             

                           (நாணமுற்ற மீனாவின் கையைப் பிடித்து)

நமது கலவியன்றோ? நாயகியே நாணமுமேன்?

மீனாட்சி
அச்சச்சோ கைவிடுங்கள் ஆனாலும் வெட்கமில்லை
கொச்சை மொழிபேசல் கோமகனுக் கோஅழகு.

சிவஞானம்
இச்சை மிகுந்துவிட்டால் ஈங்கில்லை பேதமடி
பச்சைக் கிளியே பறந்தென்னை வாட்டாதே!

மீனாட்சி
ஆர்ப்பாட்ட மாமதுரை ஆனந்தக் காட்சியையெப்
பேர்ப்பட்ட தாயுரைத்து என்மானம் வாங்குகிறீர்? அம்மான் அறிந்துவிட்டால் ஆபத்தாய்ப்

       போய்விடுமே
சும்மா எதற்கிந்த வம்பு
மணமாகும் முன்னால் மனையாட்டி என்ன?

துணையான பின்னே தொடலாமே யென்னைநீர்
தாலிகட்டும் நாள்வரைக்கும் வேலியிட்டுத்  தானிருக்கும்
கோலிவிட்டு வந்திங்குக் கும்மாளம் தானெதற்கு?
 
சிவஞானம்
கூர்கொம்பு கொண்டிருக்கும் கொண்டைத் திமிருண்டப்
பேர்கொண்ட காளைப் பிடிப்பதெலாம் நீயறிவாய்!
சீறிச் சினந்துவரும் செங்கண் புலியதனைப்
பேரிரைச்சல் போடவதன் வாய்கிழித்துக் கொன்று விடும்
வல்ல பெரியப்பா வாரிசென வாழ்ந்திடுவேன்
தொல்லை இதிலேதும் தோன்றவிலைத்  தோள்வலியால்
தாலிக்குப் பல்லெடுக்கத் தக்கபுலி தேடிவந்தால்
கோலிவிட்டு வந்ததாய்க் கூறுவதும் ஏனடியோ?

மீனாட்சி
நாட்டில் பணிபுரிய நல்ல செயல்புரிய
வீட்டில் இருந்துகொண்டு வேணமட்டும்

மன்னவர்க்குக் காட்டும் உதவியுந்தான் காவலனே! ராசாவே!
காட்டில் கிடைத்திடுமா? கானகத்துள் வாய்த்திடுமா?

சிவஞானம்

சுட்டு உடற்காரிக் கைதேர்ந்தச் சிங்காரி
வெட்டொன்று துண்டிரண்டாய்ப் புட்டுவைக்கும் கைக்காரி

பட்டதடி எந்தன் பணியும் தடம்மாறி
விட்டதடி என்போக்கு வேல்விழியே! பார்த்துசிரி
பாளைச் சிரிப்புதிர்த்துப் பச்சரிசிப் பற்காட்டி…

மீனாட்சி      (குறும்பாக கையசைத்துத் துள்ளி ஓடிக்

                   கொண்டே).

நாளை வருவேனாம் நான்.

(திரை)

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.