LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

"சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம்

இந்தியப் பெருநாடு விடுதலை பெற்றதன் விளைவாகத் தமிழகத்திலே தமிழ் மொழிக்குப் புதுவாழ்வளிக்கத் தமிழர் திட்டமிட்டுப் பணியாற்றத் தொடங்கியதனால், உலக நாடுகளிலும் தமிழ் மொழிக்குப் பெருமை ஏற்படலானது. குறிப்பாக, தமிழர் குடியேறி வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளிலேயும் தமிழுக்குத் தனி அந்தஸ்து கிடைத்தது.


இலங்கை
இலங்கையின் பூர்வகுடித் தமிழர்கள் அத்தீவின் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலோராக வாழ்கின்றனர். அவை, தனியரசுப் பிரதேசமாக இயங்கக் கூடிய அளவுக்குத் தனித்தன்மை படைத்தவையாகும். இதனால்தான், இலங்கையைத் தமிழ் மாநிலமும் சிங்கள மாநிலமும் கொண்ட சமஷ்டி அரசு நாடாகச் செய்ய வேண்டுமென்று 30 ஆண்டுகளுக்கு முன்பே ஈழத் தமிழர்கள் கோரிக்கை எழுப்பினர். சிங்களத்தோடு சம அந்தஸ்துடன் தமிழையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் கிளர்ச்சி தொடங்கினர். அதனை இன்றளவும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழ் மாநிலக் கோரிக்கையானது ஈழத்திலே சுதந்திரத் தமிழகம் படைக்கும் புரட்சியாகவும் இன்று மாறியிருக்கக் காண்கிறோம். அந்த அரசியல் பிரச்சினை பற்றி இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை. அது ஈழத்தின் உள் நாட்டுப் பிரச்சினை. தமிழ்மொழி ஈழத்தின் சொந்த மொழிகளில் ஒன்று என்பதை மட்டும் இங்கு உறுதியாகச் சொல்ல விழைகின்றேன்.

பர்மா
பர்மாவிலும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் இரண்டாவது உலகப் பெரும் போருக்கு முன்னர் வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பர்மாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அங்கு குடியேறியவர்களாவர். மற்றவர்கள், பிற்காலச் சோழர் காலத்தில் குடியேற்றப்பட்டு, அந்த நாட்டின் சுதேசிகளாகிவிட்டனர். இவர்கள், மோல்மேன் போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் தமிழை மறக்கவில்லை.

சிங்கப்பூர் - மலேசியா
மலேசியாவின் மக்கள் தொகையில் தமிழர் எண்ணிக்கை 10 சதவிகிதமாகும். இந்த நாட்டிலும் தமிழானது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசிய சமஷ்டி ஆட்சியின் அமைச்சரவையிலே, அந்நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கித் தமிழரும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.÷மலேசியா நாட்டிலுள்ள வானொலி நிலையம் ஒவ்வொன்றிலும் தமிழுக்கெனத் தனித்துறை இருந்து வருகிறது. இந்தியா சுதந்திரமடைந்ததையடுத்து மலேசியா சுதந்திரம் பெற்றது. இதன் விளைவுதான் அந்த நாட்டில் தமிழுக்குக் கிடைத்துள்ள அரசியல் அந்தஸ்து.

சோவியத் யூனியன்
சோவியத் யூனியனின் தலைநகரான மாஸ்கோவிலுள்ள வானொலி நிலையத்திலே தமிழுக்கெனத் தனியாக ஒரு துறை இருந்து வருகிறது. இந்தியத் தமிழரோடு மட்டுமன்றி, உலக நாடுகளிலுள்ள தமிழரோடெல்லாம் தொடர்பு கொள்ளவும் மாஸ்கோ வானொலி நிலையத்திலுள்ள தமிழ்த்துறை பயன்பட்டு வருகிறது.

ருஷ்யப் பெருநாடு சோஷலிச நாடாக மாறி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றாலும், இந்தியப் பெருநாடு விடுதலை பெற்ற பின்னர்தான் சோவியத் வானொலி நிலையத்திலே தமிழுக்குத் தனித்துறை கிடைத்திருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர்தான் அமெரிக்க வானொலியான "வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா'விலும் தமிழுக்குத் தனி இடம் தரப்பட்டது.
இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் வானொலி (பி.பி.ஸி.) நிலையத்திலே மிகவும் சக்தி படைத்த அமைப்பாக தமிழ்த்துறை இயங்கி வருகிறது.
பத்திரிகைகள் நாடு விடுதலை பெற்ற பின்னர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகளின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்காகப் பெருகியிருக்கக் காண்கிறோம். வார, மாத இதழ்களின் எண்ணிக்கையும் கூடுதலாகியுள்ளன. தமிழர் குடியேறி வாழும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய நாடுகளிலும் தமிழ் நாளேடுகள் தமிழரால் நடத்தப்படுகின்றன. ஒன்றிரண்டு நாளேடுகள் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் குடியேற்றப் பகுதிகளல்லாத பிரிட்டன், சோவியத் ருஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் ஏடுகள் வெளியிடப்படுகின்றன.

இலண்டன்
இலண்டனில் குடியேறி வாழும் தமிழர் தங்கள் சொந்த முயற்சியால் கடந்த ஆறு ஆண்டுகளாக "லண்டன் முரசு' என்ற பெயரில் தமிழ் மாத வெளியீடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

சோவியத் ஏடுகள்
சோவியத் ருஷ்யா "சோவியத் நாடு' என்னும் பெயரில் மாதமிருமுறை வெளியீடு ஒன்று தொடர்ந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. "சோவியத் பலகணி' என்ற பெயரில் மற்றொரு மாத வெளியீடு ஒன்றும் கடந்த 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. உலகிலுள்ள தமிழ் மக்களோடு அவர்களின் தாய் மொழியான தமிழின் மூலமே உறவுகொள்ள வேண்டுமென்ற நன்னோக்கோடுதான் இந்த இதழ்களை அந்த நாடு நடத்தி வருகின்றன.

அமெரிக்கா
சோவியத் ருஷ்யாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் குடியரசின் சார்பில் செய்திப் பிரசுரங்களும், சித்தாந்தப் பிரசார நூல்களும் தமிழில் வெளியிடப்படுகின்றன. சோவியத், அமெரிக்க ஏடுகளும் நூல்களும் மிகவும் மலிவான விலையில் தமிழகத்தில் விற்கப்படுகின்றன.

யுனெஸ்கோ வெளியீடு
ருஷ்யாவின் தேசிய மொழியான ருஷ்ய மொழியில் தமிழ் இலக்கியங்களில் சிறந்தவை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் சிலப்பதிகாரம், பாரதியாரின் தேசிய கீதங்கள், தொல்காப்பியம் ஆகிய தமிழ் இலக்கிய - இலக்கண நூல்கள் மாஸ்கோவில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் ருஷ்யாவின் பிரதேச மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ்
பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள சர்வதேச ஸ்தாபனமான யுனெஸ்கோவின் சார்பில் "கூரியர்' என்னும் பெயரில் 15 மொழிகளில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தபோது "கூரியர்' தமிழ் மாத வெளியீட்டைக் கொண்டுவர ஏற்பாடு செய்தார் என்பது நன்றியுடன் நினைவிற் கொள்ளத்தக்கதாகும். இந்திய மொழிகளில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே "கூரியர்' வெளியிடப்பட்டு வருகிறது. இவற்றுள்ளும் முதன் முதலில் வெளிவந்தது "தமிழ் கூரியர்' தான். பத்தாண்டுகள் கழித்தே இந்தியில் வெளிவந்தது.

பிரிட்டிஷ் நூலகம்
உலகிலுள்ள நூலகங்களிலெல்லாம் மிகவும் பெரியது லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள நூலகம். அதிலே, தமிழ் நூல்கள் - குறிப்பாக, பழைய ஓலைச் சுவடிகள் நிறைய சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய நூலகங்களில் தேடிக் கிடைக்காமல் போனவற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் தாம் பெற்றதாக டாக்டர் உ.வே.சா. கூறியுள்ளார். பாரிசிலுள்ள நூலகத்திலும் தமிழ் ஓலைச் சுவடிகளைக்காண முடிகின்றது.

எங்கெங்கும் தமிழ்ச் சங்கம்
நியூயார்க், லண்டன், பாரிஸ் போன்ற பெருநகரங்களில் தொழில் காரணமாகக் குடியேறி வாழும் தமிழர்கள் தங்களுக்கெனத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துக்கொண்டு தங்களிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றனர். சர்வதேச ரீதியிலான தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்துவரக் காண்கிறோம்.

இந்திய மொழிகளிலேயே சர்வதேச ரீதியில் வளர்ச்சிபெறும் வாய்ப்பு தமிழுக்குத்தான் அதிகமாகக் கிடைத்து வருகிறது என்பதனை நினைத்து தமிழ் மக்கள் பெருமிதம் கொள்ளலாம்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.