LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

மதுரைக் கலம்பகம்

கட்டளைக்கலித்துறை

புந்தித் தடத்துப் புலக்களி றோடப் பிளிறுதொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்குத வென்பதென் றண்ணளிதூய்
வந்திப் பதுந்தனி வாழ்த்துவ தும்முடி தாழ்த்துநின்று
சிந்திப் பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே.

நூல்
தரவு

மணிகொண்ட திரையாழி சுரிநிமிர மருங்கசைஇப்
பணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும்
பூந்தொத்துக் கொத்தவிழ்ந்த புனத்துழாய் நீழல்வளர்
தேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையும்
மனைக்கிழவன் றிருமார்பு மணிக்குறங்கும் வறிதெய்தத்
தனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலைநிற்ப
அம்பொன்முடி முடிசூடு மபிடேக வல்லியொடுஞ்
செம்பொன்மதிற் றமிழ்க் கூடற் திருநகரம் பொலிந்தோய் கேள்.

தாழிசை

விண்ணரசும் பிறவரசுஞ் சிலரெய்த விடுத்தொருநீ
பெண்ணரசு தரக்கொண்ட பேரரசு செலுத்தினையே. 1

தேம்பழுத்த கற்பகத்தி னறுந்தெரியல் சிலர்க்கமைத்து
வேம்பழுத்து நறைக்கண்ணி முடிச்சென்னி மிலைச்சினையே. 2

வானேறுஞ் சிலபுள்ளும் பலரங்கு வலனுயர்த்த
மீனேறோ வானேறும் விடுத்தடிக ளெடுப்பதே. 3

மனவட்ட மிடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே
கனவட்டந் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே. 4

விண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பொருநைத்
தண்ணாறு குடைந்துவைகைத் தண்டுறையும் படிந்தனையே. 5

பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம்
வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே. 6

அராகம்

அவனவ ளதுவெனு மவைகளி லொருபொரு
ளிவனென வுணர்வுகொ டெழுதரு முருவினை. 1

இலதென வுளதென விலதுள தெனுமவை
யலதென வளவிட வரியதொ ரளவினை. 2

குறியில னலதொரு குணமில னெனநினை
யறிபவ ரறிவினு மறிவரு நெறியினை. 3

இருமையு முதவுவ னெவனவ னெனநின
தருமையை யுணர்வுறி நமிழ்தினு மினிமையை. 4

தாழிசை

வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை
செய்கைக்கென் றறியேமாற் றிருமுடிமண் சுமந்ததே. 1

அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட்செய்யு மன்னையவ
டரும்பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே. 2

முலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே
மலைகொண்ட புயத்தென்னீ வளை கொண்டுசுமந்ததே. 3

ஊண்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத்தோர்
மீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையிற் பட்டன்றே. 4

அம்போதரங்கம்
முச்சீர்

போகமாய் விளைந்தோய் நீ
புவனமாய்ப் பொலிந்தோய் நீ
ஏகமா யிருந்தோய் நீ
யெண்ணிறந்து நின்றோய் நீ

இருசீர்

வானு நீ
நிலனு நீ
மதியு நீ
கதிரு நீ
ஊனு நீ
யுயிரு நீ
யுளது நீ
யிலது நீ
எனவாங்கு,

தனிச்சொல்
சுரிதகம்

பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக் 1
கருஞ்சினை வேம்பு பொன்முடிச் சூடி
அண்ண லானேறு மண்ணுண்டு கிடப்பக்
கண்போற் பிறழுங் கெண்டைவல னுயர்த்து

வரியுடற் கட்செவி பெருமூச் செறியப் 5
பொன்புனைந் தியன்ற பைம்பூண் டாங்கி
முடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசிற்
பசும்பொனசும் பிருந்த பைம்பொன்முடி கவித்தாங்
கிருநிலங் குளிர்தூங் கொருகுடை நிழற்கீழ்

அரசுவீற் றிருந்த வாதியங் கடவுணின் 10
பொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும்
ஐம்புல வழக்கி னருஞ்சுவை யறியாச்
செம்பொருட் செல்வநின் சீரடித் தொழும்புக்
கொண்பொருள் கிடையா தொழியினு மொழிக

பிறிதொரு கடவுட்குப் பெரும்பயன் றரூஉம் 15
இறைமையுண் டாயினு மாக குறுகிநின்
சிற்றடி யவர்க்கே குற்றேவ றலைக்கொண்
டம்மா கிடைத்தவா வென்று
செம்மாப் புறூஉந் திறம்பெறற் பொருட்டே. (1)

நேரிசை வெண்பா

பொருணான் கொருங்கீன்ற பொன்மாடக் கூடல்
இருணான் றிருண்டகண்டத் தெம்மான் - சரணன்றே
மண்டுழா யுண்டாற்குக் கண்மலரோ டொண்மவுலித்
தண்டுழாய் பூத்த தடம். (2)

கட்டளைக் கலித்துறை

தடமுண் டகங்கண் டகத்தாள தென்றுநின் றண்மலர்த்தாள்
நடமுண் டகமகங் கொண்டுயந்த வாவினி நங்களுக்கோர்
திடமுண் டகந்தைக் கிடமுண் டிலையெனத் தேறவிண்ணோர்
விடமுண்ட சுந்தர சுந்தர சுந்தர மீனவனே. (3)

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

மீனேறுங் கொடிமுல்லை விடுகொல்லைக் கடிமுல்லை வெள்ளைப் பள்ளை
ஆனேறும் வலனுயர்த்த வழகியசொக் கர்க்கிதுவு மழகி தேயோ
கானேறுங் குழல்சரியக் கர்ப்பூர வல்லிதலை கவிழ்ந்து நிற்ப
ஊனேறு முடைத்தலையிற் கடைப்பலிகொண் டூரூர்புக் குழலுமாறே. (4)

கட்டளைக் கலித்துறை
இரங்கல்

மாற்றொன் றிலையென் மருந்துக்கந் தோசொக்கர் மாலைகொடார்
கூற்றொன் றலவொரு கோடிகெட் டேன்கொழுந் தொன்றுதென்றற்
காற்றொன் றிளம்பிறைக் கீற்றொன்று கார்க்கட லொன்றுகண்ணீர்
ஊற்றொன் றிவளுக் குயிரொன் றிலையுண் டுடம்பொன்றுமே. (5)

விருத்தக் கலித்துறை

ஒன்றே யுடம்பங் கிரண்டே யிடும்பங் குடம்பொன்றிலார்
என்றே யறிந்தும்பி னின்றே யிரங்கென் றிரக்கின்றவா
குன்றே யிரண்டன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றேசெயு
மன்றே யிருக்கப் புறங்கா டரங்காட வல்லாரையே. (6)

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

வலங்கொண்ட மழுவுடையீர் வளைகொண்டு விற்பீர்போன் மதுரை மூதூர்க்
குலங்கொண்ட பெய்வளையார் கைவளையெல் லாங்கொள்ளை கொள்கின் றீராற்
பலங்கொண்ட செட்டுமக்குப் பலித்ததுநன் றானீரிப்பாவை மார்க்குப்
பொலங்கொண்ட வரிவளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே. (7)

நேரிசை வெண்பா

பட்டிருக்கத் தோலசைஇப் பாண்டரங்கக் கூத்தாடு
மட்டிருக்கு நீப வனத்தானே - கட்ட
விரும்பரவத் தானேநின் மென்மலர்தா ளன்றே
தரும்பரவத் தானே தனை. (8)

கட்டளைக் கலிப்பா
இரங்கல்

தனியி ருப்பவ ரென்படு வார்கெட்டேன் சற்று நீதியொன் றற்றவிவ் வூரில்யாம்
இனியி ருப்பவொண் ணாதும டந்தைமீர் இடம ருங்குஞ் சடைம ருங்கும்மிரு
கனியி ருக்குங் கடம்பவ னேசனார் கண்பு குந்தென் கருத்து ளிருக்கவும்
பனியி ருக்கும் பிறைக் கூற்ற முற்றியென் பாவி யாவியை வாய்மடுத் துண்பதே. (9)

நேரிசை வெண்பா
இரங்கல்

உண்ணமுத நஞ்சாகி லொண்மதுரைச் சொக்கருக்கென்
பெண்ணமுது நஞ்சேயோ பேதைமீர்- தண்ணிதழி
இந்தா நிலமே வெனச்சொலா ரென்செய்வாண்
மந்தா நிலமே வரின். (10)

புயவகுப்பு

வரியளி பொதுளிய விதழியொ டமரர்
    மடந்தையர் நீல வனம்புக் கிருந்தன
    மதியக டுடைபட நெடுமுக டடைய
    நிமிர்ந்தபொன் மேரு வணங்கப் பொலிந்தன
    மழகதிர் வெயில்விட வொளிவிடு சுடர்வ
    லயங்கொடு லோக மடங்கச் சுமந்தன
    மதுகையொ டடுதிறன் முறைமுறை துதிசெய்
    தணங்கவ ராடு துணங்கைக் கிணங்கின.

    பொருசம ரிடையெதிர் பிளிறுமொர் களிறு
    பிளந்தொரு போர்வை புறஞ்சுற் றிநின்றன
    புகையெழ வழலுமிழ் சுழல்விழி யுழுவை
    வழங்குமொ ராடை மருங்குற் கணிந்தன
    புலவெயி றயிறரு குருதியொ டுலவு
    மடங்கலின் வீர மொடுங்கத் துரந்தன
    புகலியர் குரிசில்ப ணொடுதமி ழருமை
    யறிந்தொரு தாளம் வழங்கப் புகுந்தன.

    உருமிடி யெனவெடி படவெதிர் கறுவி
    நடந்தொரு பாண னொதுங்கத் திரிந்தன
    உருகிய மனமொடு தழுவியொர் கிழவி
    கருந்துணி மேலிடு வெண்பிட் டுகந்தன
    உறுதியொ டவண்மனை புகும்வகை கடிது
    சுமந்தொரு கூடை மணுந்திச் சொரிந்தன
    உருவிய சுரிகையொ டெதிர்வரு செழியர்
    பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன.

    தருசுவை யமுதெழ மதுரம தொழுகு
    பசுந்தமிழ் மாலை நிரம்பப் புனைந்தன
    தளிரியன் மலைமகள் வரிவளை முழுகு
    தழும்பழ காக வழுந்தக் குழைந்தன
    தளர்நடை யிடுமிள மதலையின் மழலை
    ததும்பிய வூற லசும்பக் கசிந்தன
    தமிழ்மது ரையிலொரு குமரியை மருவு
    சவுந்தர மாறர் தடம்பொற் புயங்களே. (11)

    கட்டளைக்கலித்துறை
    இயல் இடம் கூறல்

    புயல்வண்ண மொய்குழல் பொன்வண்ணந் தன்வண்ணம் போர்த்தடங்கண்
    கயல்வண்ண மென்வண்ண மின்வண்ண மேயிடை கன்னற்செந்நெல்
    வயல்வண்ணப் பண்ணை மதுரைப் பிரான்வெற்பில் வஞ்சியன்னாள்
    இயல்வண்ண மிவ்வண்ண மென்னெஞ்ச மற்றவ் விரும்பொழிலே. (12)

    அம்மானை
    கலித்தாழிசை

    இருவருக்குங் காண்பரிய வீசர்மது ரேசனார்
    விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனர்கா ணம்மானை
    விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
    அருமையுடம் பொன்றிருகூ றாவதே னம்மானை
    ஆனாலுங் காயமிலை யையரவர்க் கம்மானை. (13)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    இரங்கல்

    அம்ம கோவெனும் விழுமழு மெழுந்துநின் றருவிநீர் விழிசோர
    விம்மு மேங்குமெய் வெயர்த்துவெய் துயிர்க்குமென் மெல்லிய லிவட்கம்மா
    வம்மின் மாதரீர் மதுரையுங் குமரியு மணந்தவர் மலர்த்தாமந்
    தம்மி னோவெனுந் தவப்பயன் பெரிதெனுந் தந்தைதா ளெறிந்தார்க்கே. (14)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மதங்கியார்

    எறிவே லிரண்டுமென துயிர்சோர வுண்டுலவ விகல்வா ளிரண்டு விசிறா
    வெறிசேர் கடம்பவன மதுரேசர் முன்குலவி விளையாடு மின்கொ டியனீர்
    சிறுநூன் மருங்குலிறு மிறுமாகொ லென்றுசில சிலநூ புரஞ்சொன் முறையீ
    டறியீரென் னெஞ்சுமல மரவேசு ழன்றிடுநும் மதிவேக நன்ற றவுமே. (15)

    கட்டளைக் கலித்துறை
    புறங் காட்டல்

    அறந்தந்த பொன்பொலி கூடற்பிரான் வெற்பி லம்பொற் படாம்
    நிறந்தந்த கும்ப மதயா னையுநெடுந் தேர்ப்பரப்பும்
    மறந்தந்த விற்படை வாட்படை யுங்கொண்டு மற்றொருநீ
    புறந்தந்த வாவணங் கேநன்று காமவெம் போரினுக்கே. (16)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    போரானை முதுகுறைப்பப் பொறையாற்றுஞ் சினகரத்துப் புழைக்கை நால்வாய்க்
    காரானைப் போர்வைதழீஇ வெள்ளானைக் கருள்சுரந்த கடவு ளேயோ
    ஓரானை முனைப்போருக் கொருகணைதொட் டெய்திடுநீ ரொருத்தி கொங்கை
    ஈரானை முனைப்போர்க்கும் வல்லீரே லொருகணைதொட் டெய்தி டீரே. (17)

    மேற்படி விருத்தம்
    பாங்கி தலைவனுக்குக் கூறல்

    எய்யாது நின்றொருவ னெய்வதுவு மிளையாட னிளைப்பும் புந்தி
    வையாதார் வைதலுறின் மதியார்தா மதித்திடுதல் வழக்கே யன்றோ
    மெய்யாத மெய்கடிந்து வீடாத வீடெய்தி வீழார் வீழச்
    செய்யாள்செய் சரக்கறையாந் திருவால வாயிலுறை செல்வ னாரே. (18)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    ஆறுதலை வைத்தமுடி நீணிலவெ றிப்பவெமை யாளுடைய பச்சை மயிலோ
    டீறுமுத லற்றமது ராபுரிலு ற்றபர மேசரொரு சற்று முணரார்
    நீறுபடு துட்டமதன் வேறுருவெ டுத்தலரி னீள்சிலைகு னித்து வழிதே
    னூறுகணை தொட்டுவெளி யேசமர்வி ளைப்பதுமென் னூழ்வினைப லித்த துவுமே. (19)

    கட்டளைக் கலித்துறை
    தழை

    பல்லா ருயிர்க்குயி ராமது ரேசரப் பாண்டியன்முன்
    கல்லானைக் கிட்ட கரும்பன்று காணின் களபக் கொங்கை
    வல்லானைக் கேயிட வாய்த்தது போலுமென் வாட்கணினாய்
    வில்லார் புயத்தண்ண றண்ணளி யாற்றந்த மென்றழையே. (20)

    வஞ்சித்துறை

    தழைத்திடுங் கூடலார் குழைத்துடன் கூடலார்
    பிழைத்திடுங் கூடலே, இழைத்திடுங் கூடலே. (21)

    வஞ்சி விருத்தம்

    கூட லம்பதி கோயில் கொண்
    டாடல் கொண்டவ ராடலே
    ஊட லும்முடம் பொன்றிலே
    கூட லும்மொரு கொம்பரோ (22)

    கலித்தாழிசை
    ஊசல்

    கொம்மைக் குவடசையக் கூர்விழிவேல் போராடக்
    கம்மக் கலனுஞ் சிலம்புங் கலந்தார்ப்ப
    மும்மைத் தமிழ்மதுரை முக்கணப்பன் சீர்பாடி
    அம்மென் மருங்கொசிய வாடுகபொன் னூசல்
    அழகெறிக்கும் பூண்முலையீ ராடுகபொன் னூசல். (23)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    களி

    அழகுற்றதொர் மதுரேசனை யமரேச னெனக்கொண்
    டாடுங்களி யானின்றிசை பாடுங்களி யேம்யாம்
    பொழுதைக்கிரு கலமூறுபைந் தேறற்பனை யினைநாம்
    போற்றிக்குரு மூர்த்திக்கிணை சாற்றத்தகு மப்பா
    பழுதற்றதொர் சான்றாண்மை பயின்றார்தின முயன்றாற்
    பலமுண்டதி னலமுண்டவ ரறிவார்பல கலைநூல்
    எழுதப்படு மேடுண்டது வீடுந்தர வற்றால்
    எழுதாததொர் திருமந்திர மிளம்பாளையு ளுண்டே. (24)

    கலிவிருத்தம்

    உண்பது நஞ்சமா லுறக்க மில்லையால்
    வண்பதி கூடலே வாய்த்த தென்னுமாற்
    பெண்பத நின்னதே பெரும வேள்கணை
    எண்பது கோடிமே லெவன்றொ டுப்பதே. (25)

    கட்டளைக் கலிப்பா
    மடக்கு

    தொடுத்த ணிந்தது மம்புத ரங்கமே சுமந்தி ருந்தது மம்புத ரங்கமே
    எடுத்து நின்றது மாயவ ராகமே யெயிறி றுத்தது மாயவ ராகமே
    அடுப்ப தந்தணர் பன்னக ராசியே யணிவ துஞ்சில பன்னக ராசியே
    கொடுப்ப தையர் கடம்பவ னத்தையே கொள்வ தையர் கடம்பவ னத்தையே. (26)

    நேரிசை வெண்பா

    கடங்கரைக்கும் வெற்பிற் கரைகரைக்கும் வைகைத்
    தடங்கரைக்க ணின்றவர்நீர் தாமோ-நெடுந்தகைநுங்
    கூட்டம் புயமே கொடாவிடில்வேள் கூன்சிலையில்
    நாட்டம் புயமே நமன். (27)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    வண்டு

    நம்பாநி னக்கோல முறையோவெ னக்கால
    நஞ்சுண்டு பித்துண்டு நாந்தேவ ரென்பார்
    தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த
    தயவாளர் கூடற் றடங்காவில் வண்டீர்
    செம்பாதி மெய்யுங் கரும்பாதி யாகத்
    திருத்தோளு மார்பும் வடுப்பட்ட துங்கண்
    டெம்பாவை யைப்பின்னு மம்பாவை செய்வா
    ரெளியாரை நலிகிற்பி னேதா மிவர்க்கே. (28)

    கொச்சகக் கலிப்பா
    இரங்கல்

    ஆவமே நாணே யடுகணையே யம்மதவேள்
    சாவமே தூக்கிற் சமனுஞ் சமனன்றே
    ஓவமே யன்னா ளுயிர்விற்றுப் பெண்பழிகொள்
    பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே. (29)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    பறவைவிடு தூது

    கரைபொரு திரங்கு கழிதொறு மிருந்து கயல்வர வுறங்கு புள்ளீரே
    பருவமு மிழந்தென் மகடுய ருழந்து படுவிர கமொன்று முள்ளீரே
    அருமையொ டெங்கள் பெருமையை யறிந்து மருள்புரி யவிங்கு வல்லீரே
    மருவிய கடம்ப வனமது புகுந்து மதுரையரன் முன்பு சொல்லீரே. (30)

    கொச்சகக் கலிப்பா
    பாங்கி இரங்கல்

    ஈரித்த தென்ற லிளவாடை திங்களென்றோர்
    பேரிட்ட மும்மைப் பிணியோ தணியாவாற்
    பாருக்கு ணீரே பழியஞ்சி யாரெனின்மற்
    றாருக் குரைக்கே மடிகே ளடிகேளோ. (31)

    கட்டளைக் கலிப்பா
    பிச்சியார்

    அடுத்த தோர்தவ வேடமும் புண்டர மணிந்த முண்டமு மாய்வெள்ளி யம்பலத்
    தெடுத்த தாள்பதித் தாடிக் கடைப்பிச்சைக் கிச்சை பேசுமப் பிச்சனெ னச்செல்வீர்
    கடைக்க ணோக்கமும் புன்மூர லும்முயிர் கவர்ந்து கொள்ள விடுத்த கபாலிபோற்
    பிடித்த சூலமுங் கைவிட்டி லீரென்றோ பிச்சியாரெனும் பேருமக் கிட்டதே. (32)

    கட்டளைக் கலித்துறை
    மடல்

    இடங்கொண்ட மானும் வலங்கொண்ட வொண்மழு வும்மெழுதும்
    படங்கொண்டு வந்தனை யானெஞ்ச மேயினிப் பங்கயப் பூந்
    தடங்கொண்ட கூடற் சவுந்தர மாறர்பொற் றாள்பெயர்த்து
    தடங்கொண்ட தோர்வெள்ளி மன்றே றுதுமின்று நாளையிலே. (33)

    சந்த விருத்தம்
    இரங்கல்

    இருநில னகழ்ந்ததொரு களிறுவெளி றும்படியொ ரிருளியி னணைந்த ணையுமக்
    குருளையை மணந்தருளி னிளமுலை சுரந்துதவு குழகரி துணர்ந்திலர் கொலாங்
    கருகியது கங்குலற வெளிறியது கொங்கைசில கணைமதன் வழங்க வவைபோ
    யுருவிய பசும்புணில்வெண் ணிலவனல் கொளுந்தியதெம் முயிர்சிறி திருந்த தரிதே. (34)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    கொற்றியார்

    அருநாம மரசிவசங் கரநாம மெனக்கொண்
    டவற்றொருநா மம்பகர்ந்தோர்க் கரியயனிந் திரனாம்
    பெருநாமங் கொடுத்தவர்தங் கருநாமந் துடைக்கும்
    பெற்றியார் தமிழ்மதுரைக் கொற்றியார் கேளீர்
    ஒருநாமம் பயந்தவர்முன் றருநாமந் வியந்திங்
    திகுலகரிடு நாமமதொன் றுள்ளநீர் வெள்ளைத்
    திருநாம மிட்டவன்றே கெட்டதன்றோ விமையோர்
    தெரித்திடுநா மமுமுனிவோர் தரித்திடுநா மமுமே. (35)

    நேரிசை வெண்பா

    மும்மைத் தமிழ்க்கூடன் மூலலிங்கத் தங்கயற்க
    ணம்மைக் கமுதா மருமருந்தை - வெம்மைவினைக்
    கள்ளத் திருக்கோயிற் காணலாங் கண்டீர்நம்
    முள்ளத் திருக்கோயி லுள். (36)

    கட்டளைக் கலித்துறை

    உள்ளும் புறம்புங் கசிந்தூற் றெழநெக் குடைந்துகுதி
    கொள்ளுஞ்செந் தேறல் குனிக்கின்ற வாபத்திக் கொத்தரும்ப
    விள்ளுங் கமலத்தும் வேத சிரத்தும்விண் மீனைமுகந்
    தள்ளுங் கொடிமதிற் பொற்கூடல் வெள்ளி யரங்கத்துமே. (37)

    கட்டளைக் கலிப்பா
    மடக்கு

    அரங்கு மையற்கு வெள்ளிய ரங்கமே யால யம்பிற வெள்ளியரங்கமே
    உரங்கொள் பல்கல னென்பர வாமையே யுணர்வு றாமையு மென்பர வாமையே
    விரும்பு பாடலு மாகவி மானமே மேவு மானமூ மாகவி மானமே
    திருந்து தானந் தடமதிற் கூடலே செயற்கை வெள்ளித் தடமதிற் கூடலே. (38)

    விருத்தக் கலித்துறை

    கூடார் புரந்தீ மடுக்கின்ற துஞ்சென்று கும்பிட்டவோ
    ரேடார் குழற்கோதை யுயிருண்ப தும்மைய ரிளமூரலே
    வாடாத செங்கோல் வளர்ப்பீ ரெனக்கன்னி வளநாடெனு
    நாடாள வைத்தாளு நகையா தினிப்போடு நகையாடவே. (39)

    கொச்சக் கலிப்பா

    நகையே யமையுமிந்த நாகரிக நோக்கு
    மிகையே யனங்கன் வினைகொளல்வீ ணன்றே
    தகையே மதுரேசன் றண்டமிழ்நா டன்னீர்
    பகையே துமக்கு நமக்கும் பகர்வீரே. (40)

    கலிவிருத்தம்

    வீரம் வைத்தவில் வேள்கணை மெய்த்தன
    பாரம் வைத்த பசும்புண் பசும்புணே
    ஈரம் வைத்த விளமதி வெண்ணிலாக்
    காரம் வைத்த கடம்பவ னேசனே. (41)

    எழுசீர்ச் சந்த விருத்தம்

    கடங்கால் பொருப்பொன் றிடும்போர் வைசுற்றுங்
    கடம்பா டவிச்சுந் தரரேநுந்
    தடந்தோள் குறித்திங் கணைந்தே மெனிற்பின்
    றரும்பே றுன்மத்தின் பெருவாழ்வோ
    தொடர்ந்தே யுடற்றிந் திரன்சா பமுற்றுந்
    துரந்தா லுமிப்பெண் பழிபோமோ
    அடைந்தேம் விடக்கொன் றையந்தா ரெவர்க்கென்
    றமைந்தே கிடக்கின் றதுதானே. (42)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    ஊர்

    தான வெங்களி றோடு மிந்திரன் சாப முந்தொலையா
    மேனி தந்தகல் யாண சுந்தரர் மேவு வண்பதியாம்
    வானி மிர்ந்திட வாடு மொண்கொடி வால சந்திரனுங்
    கூனி மிர்ந்திட வேநி மிர்ந்திடு கூடலம்பதியே. (43)

    மருட்பா
    கைக்கிளை

    அஞ்சேன் மடநெஞ் சபிடேகச் சொக்கரருட்
    செஞ்சே வடிக்கடிமை செய்யார்போற் - றுஞ்சா
    தெறிதிரைக் கருங்கட லேய்க்கு
    மறலியற் கூந்தற் காடமர்க் கண்ணே. (44)

    கட்டளைக் கலித்துறை

    கண்முத் தரும்பின கொங்கைபொன் பூத்த கனிபவளத்
    தொண்முத் தரும்புமென் பெண்முத்துக் கேமுத்த முண்டிமயத்
    தண்முத் தமைந்த தமனிய மேதலைச் சங்கம்பொங்கும்
    பண்முத் தமிழ்க்கொர் பயனே சவுந்தர பாண்டியனே. (45)

    பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    பாணறா மழலைச் சீறியாழ் மதுரப் பாடற்குத் தோடுவார் காதும்
    பனிமதிக் கொழுந்துக் கவிர்சடைப் பொதும்பும் பாலித்தாய் பாட்டளி குழைக்குங்
    கோணறா வுளைப்பூங் கொத்தலர் குடுமிக் குறுங்கணெட் டிலைச்சிலை குனித்த
    கூற்றுயிர் குடித்தாய்க் காற்றலா மலதென் கொடியிடைக் காற்றுமா றுளதோ
    சேணறாப் பசும்பொற் றசும்பசும் பிருக்குஞ் சிகரியிற் றகரநா றைம்பாற்
    சேயரிக் கருங்கட் பசுங்கொடி நுடங்குஞ் செவ்வியிற் சிறைமயி லகவத்
    தூணறா முழவுத் தோண்மடித் தும்பர் சுவல்பிடித் தணந்துபார்த் துணங்குந்
    தோரண மாடக் கூடலிற் சோம சுந்தரா சந்த்ரசே கரனே. (46)

    நேரிசை ஆசிரியப்பா

    கரும்பொறிச் சுரும்பர் செவ்வழி பாடச்
    சேயிதழ் விரிக்கும் பொற்பொகுட் டம்புயம்
    பாண்மகற் கலர்பொற் பலகை நீட்டுங்
    கடவுள்செங் கைக்குப் படியெடுப் பேய்க்குந்

    தடமலர்ப் பொய்கைத் தண்டமிழ்க் கூட 5
    லொண்ணுத றழீய கண்ணுதற் கடவுள்
    எண்மர் புறந்தரூஉ மொண்பெருந் திகைக்குத்
    தூய்மைசெய் தாங்குப் பானிலா விரிந்த
    விரசதங் குயுன்ற திருமா மன்றகம்

    பொன்மலை கிடப்ப வெள்ளிவெற் புகந்தாய்க்குச் 10
    செம்பொன் மன்றினுஞ் சிறந்தன் றாயுனுங்
    கருந்தாது குயின்றவென் கனனெஞ் சகத்தும்
    வருந்தியிம் வழங்கல் வேண்டு
    மிருவே றமைந்தநின் னொருபெருங் கூத்தே. (47)

    நேரிசை வெண்பா

    தேத்தந்த கொன்றையான் றெய்வத் தமிழ்க்கூடல்
    மாத்தந்த வேழ மதமடங்க-மீத்தந்த
    மாகவி மானம் வணங்கினமாற் கூற்றெமைவிட்
    டேகவி மானமுனக் கேன். (48)

    கட்டளைக் கலித்துறை

    ஏனின் றிரங்குதி யேழைநெஞ் சேவண் டிமிர்கடப்பங்
    கானின் றதுவுமொர் கற்பக மேயந்தக் கற்பகத்தின்
    பானின்ற பச்சைப்பசுங்கொடி யேமுற்றும் பாலிக்குமாற்
    றேனின்ற வைந்தருச் சிந்தா மணியொடத் தேனுவுமே. (49)

    தாழிசை

    தேன றாதசி லைக்க ரும்புகொ லைக்க ரும்பொரு வேம்பெனுந்
    தேம்பு யத்தணி வேம்பி னைக்கனி தீங்க ரும்பெனு மிவ்வணம்
    மான றாதம ழைக்க ணங்கையு மாறி யாடத் தொடங்குமான்
    மாறி யாடுநின் வல்ல பந்தொழ வந்த பேர்க்கும்வ ருங்கொலோ
    கான றாதசு ருப்பு நாண்கொள கருப்பு வில்லியைக் காய்ந்தநாட்
    கைப்ப தாகைக வர்ந்து கொண்டதொர் காட்சி யென்னவெ டுப்பதோர்
    மீன றாதவ டற்ப தாகைவி டைப்ப தாகை யுடன்கொளும்
    வீரசுந்தர மாற மாறடும் வெள்ளி யம்பல வாணனே. (50)

    பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    வாணிலாப் பரப்பு மகுடகோ டீர மறிபுனற் கங்கைநங் கைக்கும்
    வையமீன் றளித்த மரகதக் கொடிக்குன் வாமபா கமும்வழங் கினையாற்
    பூணுலாங் களபப் புணர்முலை யிவட்குன் பொற்புயம் வழங்கலை யெமர்போற்
    பொதுவினின் றாய்க்கு நடுவின்மை யிடையே புகுந்தவா றென்கொலோ புகலாய்
    தூணுலாம் பசும்பொற் றோரண முகப்பிற் சூளிகை நெற்றிநின் றிறங்குஞ்
    சுரிமுகக் குடக்கூன் வலம்புரிச் சங்கம் தோன்றலு மூன்றுநா ணிரம்பா
    நீணிலா வெனக்கொண் டணங்கனார் வளைக்கை நெட்டிதழ்க் கமலங்கண் முகிழ்க்கு
    நீடுநான் மாடக் கூடலிற் பொலியு நிமலனே மதுரைநா யகனே. (51)

    கட்டளைக் கலிப்பா

    மது மலர்குழ லாய்பிச்சை யென்றுநம்
    மனைதொ றுந்திரி வார்பிச்சை யிட்டபோ
    ததிலொர் பிச்சையுங் கொள்ளார்கொள் கின்றதிங்
    கறிவு நாணுநம் மாவியு மேகொலாம்
    பதும நாறும் பலிக்கலத் தூற்றிய
    பச்சி ரத்தம் பழஞ்சோ றெனிற்பினைப்
    புதிய துந்நம் முயிர்ப்பலி யேயன்றோ
    பூவை பால்கொள் புழுகுநெய்ச் சொக்கர்க்கே. (52)

    கட்டளைக் கலித்துறை
    கிள்ளைவிடு தூது

    புழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரசொக்க
    ரழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்
    டழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்ததம்நீ
    பழகிய சொற்குப் பயன்றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே. (53)

    நேரிசை வெண்பா

    பைந்தமிழ்த்தேர் கூடற் பழியஞ்சி யார்க்கவமே
    வந்ததொரு பெண்பழியென வாழ்த்துகேன் - அந்தோ
    அடியிடுமுன் னையர்க் கடுத்தவா கெட்டேன்
    கொடியிடமாப் போந்த குறை. (54)

    தாழிசை
    காலம், மடக்கு

    குறுமுகைவெண் டளவளவின் மணந்துவக்குங் காலங்
    கொழுநரொடு மிளமகளிர் மணந்து வக்குங்கால
    மறுகுதொறு நின்றெமர்க ளுருத்திகழுங் காலம்
    வரிசிலைகொண் டுருவிலியு முருத்திகழுங் காலஞ்
    சிறும திநம் பெருமதியு னுகப்படருங் காலந்
    தென்றலிளங் கன்றுமுயி ருகப்படருங் காலம்
    நிறை யினொடு நாணினொடு மகன்றிரியுங் காலம்
    நேசர்மது ரேசர்வரை யகன்றிரியுங் காலம். (55)

    நேரிசை வெண்பா

    அம்மாநம் மேலன்று பட்ட தருட்கூடற்
    பெம்மான்மேற் பட்ட பிரம்படியே - யிம்முறையு
    மெம்மேனி காமநோய்க் கீடழிந்த வாவடிகள்
    செம்மேனிக் குண்டாங்கொ றீங்கு. (56)

    கட்டளைக் கலிப்பா
    சித்து

    குரும்பை வெம்முலை சேர்மது ரேசர்பொற் கோபு ரத்திற் கொடிகட்டு சித்தர்யாங்
    கரும்பை முன்புகல் லானைக் கிடுஞ்சித்தர் கையிற் செங்கல் பசும்பொன்ன தாக்கினே
    மிருந்த வீடும் வறும்பாழ தாமவர்க் கெடுத்துக் கொட்டிலும் பொன்வேய்ந்திடச்செய்தே
    மருந்த னந்தமக் கோதன மேயப்பா ஆட கத்துமற் றாசையவ் வையர்க்கே. (57)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மடக்கு

    ஐய மணிக்கல மென்பணியே யன்பணி யக்கொள்வ தென்பணியே
    மெய்யணி சாந்தமும் வெண்பலியே வேண்டுவ துங்கொள வெண்பலியே
    எய்ய வெடுப்பதோர் செம்மலையே யேந்தி யெடுப்பதோர் செம்மலையே
    வையகம் வாய்த்த வளம்பதியே வாழ்வது கூடல் வளம்பதியே. (58)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    ஏடார் புண்டரிகத் திளமான் முதுபாட லெழுதா மறையோடு மிசைமுத் தமிழ்பாடப்
    பீடார் கூடல்வளம் பாடா வாடல்செயும் பெருமான் முன்சென்றாள் சிறுமா னென்சொல்கே
    பாடா ளம்மனையு நாடா ளெம்மனையும் பயிலா டண்டலையு முயலாள் வண்டலையு
    மாடாண் மஞ்சனமுந் தேடாளஞ்சனமு மயிலா ளன்னமுமே துயிலா ளின்னமுமே. (59)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    இன்னியந் துவைப்பச் சங்க மேங்கிடச் செழிய ரீன்ற
    கன்னியை மணந்தே யன்றோ கன்னிநா டெய்தப் பெற்றார்
    மின்னிவண் முயக்கும் பெற்றால் வெறுக்கைமற் றிதன்மே லுண்டோ
    கொன்னியல் குமரி மாடக் கூடலம் பதியு ளார்க்கே. (60)

    விருத்தக் கலித்துறை
    கார்

    கேளார் புரஞ்செற்ற வின்னாரிதோயக் கிளர்ந்துற்றதோர்
    தோளாளர் கூடற் பதிக்கேகு முகில்காள் சொலக்கேண்மினோ
    வாளாவொர் மின்னுங்கண் மழைசிந்த வென்சொன் மறுத்தேகன்மின்
    றாளாண்மை யன்றே தளைப்பட்ட வூரிற் றனித்தேகலே. (61)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    இடைச்சியார்

    கண்டமுங் காமர் மெய்யுங் கறுத்தவர் வெளுத்த நீற்ற
    ரெண்டரு மதுரை யிற்சிற் றிடைச்சிபே ரிடைச்சி யென்பீர்
    தொண்டைவா யமுதிட் டென்றன் பாலிங்குத் தோயீர் வாளா
    மண்டுமென் னகத்தி லென்னீர் மத்திட்டு மதிக்கின் றீரே. (62)

    கட்டளைக் கலித்துறை

    ஈர மதிக்கும் மிளந்தென் றலுக்குமின் றெய்யுமதன்
    கோர மதிக்குங் கொடுங்கோலு மேகொடுங் கோன்மைமுற்றுந்
    தீரம திக்குஞ்செங் கோன்மையென் னாஞ்சில தேவர்மதி
    சோர மதிக்குங் கடற்றீ விடங்கொண்ட சொக்கருக்கே. (63)

    வஞ்சி விருத்தம்

    கரிய கண்டங் கரந்தவோர்
    நிருபர் கூடலி னெஞ்சிரே
    உருவ மும்பெண் ணுருக்கொலாம்
    அருவ மென்பதென் னாவியே. (64)

    விருத்தக் கலித்துறை

    ஆவா வென்னே தென்னவர் கோற்கன் றணிசாந்தம்
    நீவா நின்றாய் நின்றில காமா னலமென்னே
    கோவாம் வில்லி கொடுந்தனு வுங்கூ னிமிராதான்
    மூவா முதலார் மதுரையி தன்றோ மொழிவாயே. (65)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    வலைச்சியார்

    மொழிக்கய லாகி வேத முடிவினின் முடிந்து நின்ற
    வழிகய லாகார் கூடல் வலைவாணர் பெருவாழ் வன்னீர்
    கழிக்கயல் விற்பீர் மற்றிக் காசினி யேழு முங்கள்
    விழிக்கய லுக்கே முற்றும் விலையென்ப விளக்கிட் டீரே. (66)

    நேரிசை வெண்பா

    விற்கரும்பே யொன்றிதுகேண் மென்கரும்பே யன்னார்தஞ்
    சொற்கரும்பே முற்றுமலர் தூற்றுமால் - நற்கரும்பை
    ஆளார் கடம்பவனத் தையருமற் றென்னீயும்
    வாளா வலர்தூற்று வாய். (67)

    கட்டளைக் கலிப்பா

    வால விர்த்த குமார னெனச்சில வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே
    ஞால நின்னை வியக்கு நயக்குமென் னடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்
    பால லோசன பாநுவி லோசன பரம லோசன பக்த சகாயமா
    கால காலத்ரி சூல கபாலவே கம்ப சாம்ப கடம்ப வனேசனே. (68)

    கலிவிருத்தம்

    கட்டு வார்குழ லீர்கயற் கண்ணினாட்
    கிட்ட மாஞ்சொக்க ரைக்கரை யேற்றினீர்
    மட்டில் காம மடுப்படிந் தேற்கென்னே
    கொட்டு வீர்பின்னுங் குங்குமச் சேற்றையே. (69)

    நேரிசை வெண்பா

    குங்குமச்சே றாடுங் கொடிமாட வீதியில்வெண்
    சங்குமொய்க்குஞ் சங்கத் தமிழ்க்கூட - லங்கயற்க
    ணம்மையிடங் கொண்டாரை யஞ்சலித்தே மஞ்சலமற்
    றிம்மையிடங் கொண்டார்க் கினி. (70)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மடல்

    இன்னீ ரமுதுக் கிடமுங் கடுவுக் கெழிலார் களனுங் களனா வருளா
    நன்னீ ரமுதக் கடலா கியுளார் நரியைப் பரியாக் கிநடத் தினரா
    லந்நீர் மையின்மிக் கென்னீர் மையெனா வடன்மா வடன்மா வரமா றுசெயா
    மைந்நீ ரளகத் திளமா னையன்னீர் வருவேன் மதுரைத் திருவீ தியிலே. (71)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய சந்த விருத்தம்

    திருவைப் புணர்பொற் புயமைப் புயல்கைத் திகிரிப் படையுய்த் தவர்கூடற்
    றருமொய்த தருமைச் சிறைபெற் றனமுத் தமிழ்வெற் பமர்பொற் கொடிபோல்வீர்
    புருவச் சிலையிற் குழைபட் டுருவப் பொருகட் கணைதொட் டமராடுஞ்
    செருவிற் றொலைவுற் றவரைக் கொலுநற் சிலைசித் தசர்கைச் சிலைதானே. (72)

    கட்டளைக் கலித்துறை

    சிலைசிலை யாக்கொண்ட தென்மது ரேசர் சிலம்பில்வில்வேண்
    மலைசிலை யாக்கொண்ட வாணுத லாய்நின் மருங்குல் சுற்று
    மிலைசிலை யாக்கொண் டிளமானை யெய்திடு மிங்கிவர்பூங்
    குலைசிலை யாக்கொண் டவர்போலு மாற்செம்மல் கொள்கை நன்றே. (73)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    பாண்

    கொங்குரை யாற்றி லிட்டுக் குளத்தினிற் றேட நீடு
    மங்குறோய் முதுகுன் றையர் மதுரையோ மதியில் பாணா
    வெங்கையர் மனைக்கண் வைத்தாங் கெம்மிடைத் தேர்தி மற்றம்
    மங்கையர் மனம்போ லன்றே மகிழ்நர்தம் வாழ்க்கை தானே. (74)

    நேரிசை வெண்பா
    கிள்ளை விடு தூது

    வாழிமடக் கிள்ளாய் மதுரா புரிவாழு
    மூழி முதல்வர்க் குருவழிந்தேன் - ஆழியான்
    சேய்தொடுத்த வம்போ திரண்முலையுங் கண்மலருந்
    தாய்தொடுத்த வம்போ தலை. (75)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    மறம்

    தருமுகத்து நிமிர்குடுமி மாடக் கூடற்
    சவுந்தரபாண் டியர்குடியாஞ் சமரி லாற்றா
    தொருமுகத்தி லொருகோடி மன்னர்மடிந் தொழிந்தா
    ருனைவிடுத்த மன்னவன்யா ருரைத்திடுவாய் தூதா
    மருமுகத்த நெறிக்குழலெம் மடக்கொடியை வேட்பான்
    மணம்பேசி வரவிடுத்த வார்த்தை சொன்னாய்
    திருமுகத்தி லெழுத்திதுவேற் றிருமுடியி லெழுத்துந்
    தேர்ந்தறியக் கொண்டுவா சிகையினொடுஞ் சென்றே. (76)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    குறம்

    செல்லிட்ட பொழின்மதுரைத் தேவர்மணந் தடாதகா தேவிக் கன்று
    சொல்லிட்ட குறமகள்யான் றும்மலுநல் வரத்தேகாண் சுளகி லம்மை
    நெல்லிட்ட குறிக்குநீ நினைந்ததொரு பொருளதுநித் திலக்கச் சார்க்கும்
    வல்லிட்ட குறியினொடும் வளையிட்ட குறியுளதோர் வடிவு தானே. (77)

    விருத்தக் கலித்துறை

    வடகலை யலபல கலையொடு தமிழ்வள ருங்கூடல்
    விடவர வரையினர் திருமுனி தொருவர்வி ளம்பாரோ
    குடதிசை புகையெழ வழலுமிழ் நிலவுகொ ழுந்தோடப்
    படவர வெனவெரு வருமொரு தமியள்ப டும்பாடே. (78)

    கட்டளைக் கலித்துறை

    பாட்டுக் குருகுந் தமிழ்ச்சொக்க நாதர் பணைப்புயமே
    வேட்டுக் குருகுமெய்ந் நாணும்விட்டாள்வண்டு மென்கிளியும்
    பேட்டுக் குருகும்விட் டாளென்செய் வாளனல் பெய்யுமிரு
    கோட்டுக் குருகு மதிக்கொழுந் துக்கென் குலக்கொழுந்தே. (79)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்
    மேகவிடு தூது

    ஏமவெற் பென்றுகயி லாயவெற்பென் றுமல யாசலத் தென்று முறைவார்
    கோமகட் கன்பர்மது ரேசர்முச் சங்கம்வளர் கூடலிற் சென்றுபுகலீர்
    தாமரைக் கண்டுயிலு மாலெனச் சந்தமலி சாரலிற் றுஞ்சு முகில்காண்
    மாமதிப் பிஞ்சுமிரை தேர்குயிற் குஞ்சுமுயிர் வாய்மடுத் துண்டொழிவதே. (80)

    மேற்படி வேறு
    சம்பிரதம்

    மட்டறுக டற்புவிய னைத் துமொரி மைப்பினின்ம றைத்துடன்வி டுத்தி டுவன்மற்
    றெட்டுவரை யைக்கடலைமு ட்டியுள டக்கிடுவ னித்தனையும் வித்தையலவாற்
    றுட்டமத னைப்பொடிப டுத்திமது ரைக்குளுறை சொக்கர்குண மெட்டி னொடுமா
    சிட்டர்கடு தித்திடும கத்துவம னைத்துமொரு செப்பினு ளடக்கி டுவனே. (81)

    நேரிசை வெண்பா

    அடுத்த பதஞ்சலியா ரஞ்சலியா நிற்ப
    எடுத்த பதஞ்சலியா ரேனுந் - தடுத்தவற்கா
    மாறிக் குனித்தார் மலைகுனித்தென் மாமதனார்
    சீறிக் குனித்தார் சிலை. (82)

    எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

    சிலையோ கரும்புபொரு கணையோ வரும்புசிவ சிவவாவி யொன்று முளதோ
    விலையோ வறிந்திலமிம் மதனாண்மை யென்புகல்வ திதுவே தவம்பி றிதெனா
    முலையே யணிந்தமுகிழ் நகையீரோர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையான்
    மலையே குழைந்திடும் மிருதோள் குழைந்துறைநம் மதுரேசர் தந்த வரமே. (83)

    கட்டளைக் கலித்துறை
    உருவெளிப்பாடு

    வரும்புண்ட ரீக மிரண்டாலொர் கல்லுமென் வன்னெஞ்சமா
    மிரும்புங் குழைத்த மதுரைப் பிரான்வெற்பி லேழ்பரியோன்
    விரும்புந் தடமணித் தேர்வல வாவெஞ் சுரமிதன்றே
    கரும்புங் கனியு மிளநீரும் பாரெங்குங் கண்களினே. (84)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    கருவிட்ட காடெறிந்து கடம்பவனத் திருப்பீர்நுங் கடுக்கைக் காட்டின
    மருவிட்ட கொள்ளைவெள்ள மடுப்படிந்து மூண்டெழுமான் மதித்தீ கெட்டேன்
    செருவிட்ட விழிமடவார் வாய்யிட்டுச் சுடுவதல்லாற் செங்கை யிட்டு
    மெருவிட்டு மூட்டிடநீர் விறகிட்டு மூட்டியவா வென்சொல் கேனே. (85)

    விருத்தக் கலித்துறை

    என்போ டுள்ளமு நெக்குரு கப்புக் கென்போல்வார்க்
    கன்போ டின்பு மளித்தருள் கூடலெம் மடிகேளோ
    தன்போல் காமன் சாப முடித்தாற் றாழ்வுண்டே
    முன்போர் காமன் சாப மனைத்து முடித்தாய்க்கே. (86)

    நேரிசை ஆசிரியப்பா

    முட்டாட் பாசடை நெட்டிதழ்க் கமலத்
    திரைவர வுறங்குங் குருகு விரிசிறைச்
    செங்கா னாரைக்குச் சிவபதங் கிடைத்தெனப்
    பைம்புனன் மூழ்கிப் பதும பீடத்
    தூற்றமி றாமு முலப்பில் பஃறவம் 5
    வீற்றுவீற் றிருந்து நோற்பன கடுக்குங்
    குண்டுநீர்ப் பட்டத் தொண்டுறைச் சங்கமும்
    வண்டமிழ்க் கடலின் றண்டுறைச் சங்கமு
    முத்தகம் பயின்று காவியங் கற்றுச்
    சித்திரப் பாட்டிய றேர்ந்தன செல்லுந் 10
    தடம்பணை யுடுத்த தண்டமிழ்க் கூட
    லிடங்கொண் டிருந்த விமையா முக்கட்
    கருமிடற் றொருவநின் றிருவடி வழுத்துதுந்
    தாய்நலங் கவருபு தத்தையுயிர் செகுத்தாங்
    கிருபெருங் குரவரி னொருபழி சுமந்த 15
    புன்றொழி லொருவற்குப் புகலின்மை தெரீஇ
    அன்றருள் சுரந்த தொன்றோ சென்றதோர்
    வலியாற் கருள்வதூஉ நோக்கி
    எளியார்க் கெளியைமற் றென்பது குறித்தே. (87)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    குறுமுயலுஞ் சிலகலையு மிழந்தொருமா னுயிரைக்
    கொள்ளைகொள்ள வெழுந்தமதிக் கூற்றே யாற்றாச்
    சிறுதுயிலும் பெருமூச்சுங் கண்டுமிரங் கலையாற்
    றெறுமறலி நீயேயித் தெண்ணி லாவு
    மெறியுநெடும் பாசமே யுடலுமறக் கூனி
    யிருணிறமு முதிர்நரையா லிழந்தாய் போலு
    நறுநுதலா ரென்கொலுனை மதுரேசர் மிலைச்சும்
    நாகிளவெண் டிங்களென நவில்கின் றாரே. (88)

    தாழிசை

    நவ்வியங்கண் மானுமானு மினிதுகந்தி டங்கொள்வார்
    நஞ்சமார்ந்தென் னெஞ்சமார்ந்து நளிகளங் கறுத்துளார்
    கைவ்விளங்கு குன்றுமன்றுங் கோவிலாக்கு னித்துளார்
    கன்னிநாடார் மதுரைவாணர் கயிலைவெற்பர் வெற்பனீர்
    கொவ்வைவாய்வி ளர்ப்பமைக்க ருங்கணுஞ்சி வப்பவே
    குளிர்தரங்க வைகை நீர்கு டைந்துடன்றி ளைத்திராற்
    பைவ்விரிந்த வல்குலீர்நும் மன்னை மார்கள் சங்கையிற்
    படிலவர்க்கு வீணினீவிர் பரிகரித்தல் பாவமே. (89)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    பாமிக்குப் பயின்மதுரைப் பரஞ்சுடரே யொருத்திகயற் பார்வை மட்டோ
    காமிக்கு மடந்தையர்கட் கயலெலா முமையடைதல் கணக்கே யன்றோ
    மாமிக்குக் கடலேழும் வழங்கினீ ரொருவேலை மகனுக் கீந்து
    பூமிக்குட் கடலைவறி தாக்கினீர் பவக்கடலும் போக்கி னீரே. (90)

    மேற்படி விருத்தம்

    நீரோடு குறுவெயர்ப்பு நெருப்போடு நெட்டுயிர்ப்பு நெடுங்கண் ணீரிற்
    பீரோடு வனமுலையுங் குறையோடு நிறையுயிரும் பெற்றா ளன்றே
    காரோடு மணிகண்டர் கடம்பவனச் சொக்கர்நறை கமழ்பூங் கொன்றைத்
    தாரோடு மனஞ்செல்லத் தளையோடுந் தான்செல்லாத் தமிய டானே. (91)

    பதினான்குசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றா டடாதகா தேவியென் றொருபேர்
    தரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவுங்
    குமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர் கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
    கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக் கொழிதமிழ்ப் பெருவையா ரறிவார்
    பமரம்யாழ் மிழற்ற நறவுகொப் பளிக்கும் பனிமலர்க் குழலியர் பளிக்குப்
    பானிலா முன்றிற் றூநிலா முத்தின் பந்தரிற் கண்ணிமை யாடா
    தமரர்நா டியரோ டம்மனை யாட வையநுண் ணுசுப்பள வலவென்
    றமரரு மருளுந் தெளிதமிழ்க் கூட லடரா வலங்கல்வே ணியனே. (92)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    அடுத்தங் குலவாக் கோட்டைசுமந் தளித்தீ ரொருவற் கதுநிற்கத்
    தொடுக்குங் கணைவே டனக்குலவாத் தூணி கொடுத்தீர் போலுமா
    லெடுக்குங் கணையைந் தெய்தகணை யெண்ணத் தொலையா தென்செய்கேன்
    திடுக்கங் கொளமால் சிலைமதனைச் சினத்தீர் கடம்ப வனத்தீரே. (93)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    கடமுடையு நறுநெய்க்குண் முழுகியெழு வதையொத்த
    கரடமத கரிபெற்றொர் பிடியேயோன்
    மடவநடை பயில்பச்சை மயிலையொரு புறம்வைத்த
    மதுரையழ கியசொக்கர் வரைவேலோய்
    நடையுமெழு துவைநிற்கு நிலையுமெழு துவைசொற்கு
    ணலமுமெழு துவைசித்ர ரதிபோலவா
    ளிடையுமெழு துவைமுற்று மிலதொர்பொரு ளையுமொக்க
    வெழுதிலெவ ருனையொத்த பெயர்தாமே. (94)

    அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

    மேதகைய பலகலைபோர்த் தறம்வளருந் தமிழ்க்கூடல் விகிர்த கேண்மோ
    வேதமினின் றிருவுருவொன் றீருருவாய் நின்றதினு மிறும்பூ தந்தோ
    போதலர்பைந் துழாய்ப்படலைப் புயல்வண்ணத் தொருவனிரு பூவை மார்க்குக்
    காதலனாய் மற்றுனக்கோர் காதலியாய் நிற்பதொரு காட்சி தானே. (95)

    நேரிசை வெண்பா

    காண்டகைய செல்வக் கடம்பவனத் தானந்தத்
    தாண்டவஞ்செய் தாண்டவர்நீர் தாமன்றே - பூண்டடிய
    ருள்ளத் திருப்பீரெம் முள்ளத்தை யும்முமதா
    மெள்ளத் திருப்பீர் மிக. (96)

    கட்டளைக் கலித்துறை
    கார்காலம் கண்டு வருந்திய தலைவன் பாகனொடு கூறியது

    மிக்கார் முகத்தருள் கூடற்பி ரான்விட நாண்டுவக்காக்
    கைக்கார் முசத்தன்ன தேர்வல வாகை பரந்துசெலு
    மிக்கார் முகக்க வெழுந்தகொல் லாமெம தாவியென்னத்
    தக்கார் முகத்தடங் கண்ணீ ருகாந்த சலதியையே. (97)

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    இரங்கல்

    சலாராசி தங்கு கணையேவு மொய்ம்பர் சரணார விந்த மிசையே
    மலாரகி டந்த நயனார விந்தர் மதுரேசர் முன்பு புகலார்
    சிலராவி யின்றி யுடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே
    லராத கங்கு லிடையேயொ ரங்கி புகையாது நின்றெ ரிவதே. (98)

    தாழிசை
    இரங்கல்

    தேன்வழங்கு கடுக்கையார்கரு மான்வழங்கு முடுக்கையார்
    திருவிருந்த விடத்தினாரருள் கருவிருந்தந டத்தினார்
    மானடங்கிய வங்கையார்சடைக் கானடங்கிய கங்கையார்
    வைகையொன்றிய கூடலாரிவள் செய்கையொன்றையு நாடலார்
    கானவேயிசை கொல்லுமாலுற வானவாய்வசை சொல்லுமாற்
    கன்றியன்றி லிரங்குமாலுயிர் தின்றுதென் றனெருங்குமாற்
    றீநிலாவனல் சிந்துமாற்கொல வேனிலான்மெல முந்துமாற்
    றினமிடைந்திடை நொந்தபோன்மகண் மனமிடைந்த துணர்ந்துமே. (99)

    அறுசீர்ச் சந்த விருத்தம்
    ஊர்

    உடையதொர் பெண்கொடி திருமுக மண்டல மொழுகு பெருங்கருணைக்
    கடலுத வுஞ்சில கயல்பொரு மொய்ம்புள கடவுணெ டும்பதியாம்
    புடைகொள் கருங்கலை புனைபவள் வெண்கலை புனையுமொர் பெண்கொடியா
    வடகலை தென்கலை பலகலை யும்பொலி மதுரைவ ளம்பதியே. (100)

    பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    வள்ளைவாய் கிழித்துக் குமிழ்மறிந் தமர்த்த மதரரிக் கண்ணியு நீயு
    மழலைநா றமுதக் குமுதவாய்க் குழவி மடித்தலத் திருத்திமுத் தாடி
    உள்ளநெக் குருக வுவந்துமோந் தணைத்தாங் குகந்தனி ரிருத்திரா லுலக
    மொருங்குவாய்த் தீருக் கொருதலைக் காம முற்றவா வென்கொலோ வுரையாய்
    வெள்ளிவெண் ணிலவு விரிந்தகோ டீரம் வெஞ்சுடர்க் கடவுளுங் கிடைத்து
    வீற்றிருந் தனைய விடுசுடர் மகுட மீக்கொளூஉத் தாக்கணங் கனையார்
    கள்ளவாட் கருங்கண் ணேறுகாத் திட்ட காப்பென வேப்பலர் மிலைச்சுங்
    கைதவக் களிறே செய்தவக் கூடற் கண்ணுதற் கடவுண்மா மணியே. (101)

    நேரிசை ஆசிரியப்பா

    கட்புலங் கதுவாது செவிப்புலம் புக்கு
    மனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து
    செந்நா முற்றத்து நன்னடம் புரியும்
    பலவேறு வன்னத் தொருபரி யுகைத்தோய்
    புட்கொடி யெடுத்தொரு பூங்கொடி தன்னொடு 5
    மட்கொடி தாழ்ந்த வான்கொடி யுயர்த்தோ
    யோரே ழாழி சீர்பெறப் பூண்டு
    முடவுப் படத்த கடிகையுட் கிடந்து
    நெடுநிலை பெயரா நிலைத்தே ரூர்ந்தோய்
    மீனவர் பெருமான் மானவேல் பிழைத்தாங் 10
    கெழுபெருங் கடலு மொருவழிக் கிடந்தென
    விண்ணின் றிறங்குபு விரிதிரை மேய்ந்த
    கொண்மூக் குழுமலைக் கொலைமதக் களிற்றொடும்
    வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்தாங்
    காற்றல்கொ டுற்றபா கலைத்தனர் பற்றத் 15
    திரியுமற் றெம்மைத் தீச்சிறை படுக்கெனப்
    பரிதிவே லுழவன் பணித்தனன் கொல்லென
    மெய்விதிர்த் தலறுபு வெரீஇப்பெயர்ந் தம்ம
    பெய்முறை வாரி பெயும்பெய லல்ல
    நெய்பா றயிற்முதற் பல்பெய றலைஇப் 20
    பெருவளஞ் சுரந்த விரிதமிழ்க் கூட
    லிருநில மடந்தைக் கொருமுடி கவித்தாங்
    கிந்திர னமைத்த சுந்தர விமானத்
    தருள்சூற் கொண்ட வரியிளங் கயற்கண்
    மின்னுழை மருங்குற் பொன்னொடும் பொலிந்தோய் 25
    துரியங் கடந்த துவாத சாந்தப்
    பெருவளி வளாகத் தொருபெருங் கோயிலுண்
    முளையின்று முளைத்த மூல லிங்கத்
    தளவையி னளவா வானந்த மாக்கட
    னின்பெருந் தன்மையை நிகழ்த்துதும் யாமென 30
    மன்பெருஞ் சிறப்பின் மதிநலங் கொளினே
    பேதைமைப் பாலரே பெரிது மாதோ
    வேத புருடனும் விராட்புரு டனுமே
    இனையநின் றன்மைமற் றெம்ம னோரு
    நினையவுஞ் சிலசொற் புனையவும் புரிதலின் 35
    வாழியெம் பெருமநின் றகவே
    வாழியெம் மனனு மணிநா வும்மே. (102)

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.