LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

மணம் வீசா முல்லைப்பூ - மு.முனீஸ் மூர்த்தி

குறிஞ்சிப் பாடல்களை வாசிக்கையில் இன்ப உணர்வு மேலோங்குவதற்கும், பாலை, முல்லைப் பாடல்களை வாசிக்கையில் இரக்க உணர்வு முன்னிற்பதற்கும் "உரிப்பொருளே' காரணம்.

அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் "இருத்தல்' என்பதாகும். அதாவது, "பிரிந்தவர் வருந்துணையும் ஆற்றியிருத்தல்' என்பதாகும். முல்லைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள தலைவியின் "இருத்தல்' சார்ந்த காட்சிப்படுத்தல்களை அறிஞர் பலர் சுட்டிச் செல்கின்றனர். தலைவியின் இருத்தல் செயலானது உறுப்பு நலன் அழிவு, கண்ணீர் விடல், தெய்வக் கற்புடன் வாழ்தல் எனும் செயல் நிலைகளை உடையனவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அகப்புறவய அவலங்களைத் தாண்டி மேலும் ஓர் அவலம் தலைவியைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.


சங்க இலக்கியங்களுள் அமைந்த முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை 234. இவற்றுள் தலைவி கூற்றாய் அமைபவை 56 பாடல்கள். அதேபோல் தோழி கூற்றாய் அமைபவை 47 பாடல்கள். இருவரது கூற்றுப் பாடல்களிலும் தலைவியின் "வருத்த மனநிலை' நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தலைவி கூற்றுப் பாடல்களில் சற்று மிகுதி. அதுவே ஏற்புடைமையும் பெறும். அப்பாடல்களின் மையத்தைப் பின்வருமாறு சுட்டலாம்.

"பருவங்கண்டு தலைவி வருந்துதல், தலைவியைத் தோழி ஆற்றுவித்தல், தோழி பருவத்தைப் பழித்தல், தலைவன் விரைந்து திரும்புவான் என்று தோழி கூறல்'.

இவைதவிர, தலைவன் கூற்றாக அமையும் முல்லைப் பாடல்களுள் பெரும்பாலானவை தலைவனை எண்ணி வாடும் தலைவியின் அவலநிலையையே "நினைவுகூர்தலாக' சுட்டிச் செல்கின்றன. "உற்பத்தி நிலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பெண்ணானவள் இல்லறக் கடமைகளைக் கணவனுடன் இணைந்தே செய்தல் வேண்டும்; கணவன் பிரிந்த சூழலில் அவனை எண்ணி ஆற்றியிருக்க வேண்டும்' எனும் சமூகச் சூழலில்தான் சங்கச் சமுதாயம் உருப்பெற்றுள்ளது. இத்தகு சூழலில், தலைவன் பிரிந்ததால் நேர்ந்த வருத்தத்தைவிட, பிரிந்த காலத்தில் சமூகத்தாரின் (ஊராரின்) "பழிதூற்று படலமே' தலைவியை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

 "தலைவன் என்னைப் பிரிந்தபின் எழுந்த ஊராரின் பழிச்சொற்கள், ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெண்மையான கிளைகளையுடைய மரத்தில் பழுத்த ஒரு பழத்தை, ஏழு நண்டுகள் விரும்பிச் சிதைத்ததுபோல் என் நெஞ்சை வருத்தின என்கிறாள் ஒரு முல்லைத் தலைவி.

 ""ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
 எழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
 குழைய கொடியோர் நாவே
 காதலர் அகலக் கல்லென் றவ்வே''

 என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் (24:3-6) அதற்குச் சான்றாகும். இத்தகு சான்றைக் கவிஞனின் "சுவைசார்ந்த புனைவு' எனப் புறந்தள்ளிவிட முடியாது.

தலைவன் தலைவியரிடம் ஒருவரையொருவர் சார்ந்த புரிதல் நிலை காணப்படினும் இருவரும் பிரிந்துறையும் காலத்தே தலைவியின் கற்புத்திறம் ஊராரால் இழிவுசார் நிலையில்தான் நோக்கப்படுகிறது என்பதையே மேற்குறித்த பாடலடிகள் கூறுகின்றன. இத்தகு இழிநிலையானது வினைமுற்றி மீளும் தலைவனது உள்ளத்தைப் பாதிக்காத வகையில், (வினை முற்றி மீளும்) தலைவனைக் காணும் தோழியானவள் பிரிந்த காலத்துத் தலைவியின் ஒழுக்கலாற்றைப் பற்றிக் கூறுமிடத்து,

 ""கடவுட் கற்பின் மடவோள்'' (அகம்:314:15)
 என உயர்நிலைப்படுத்திக் கூறுவதைக் காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "எழுபத்தினியர் வரலாறு' தொடர்பான படிமக் கதையையும் இங்கு உடன்வைத்து எண்ணலாம்.

பிரிந்த காலத்து, தலைவி பற்றிய (தன் மனைவி பற்றிய) தலைவனின் எண்ணப்பதிவு மேலோங்கிய நிலையில் காணப்படுவதையும் "அருந்ததி அனைய கற்பின்...புதல்வன் தாயே' (ஐங்.442:4-5) எனும் சான்றின்வழி வருவிக்க முடிகிறது. ஆனால், அத்தகு பிரிவுச் சூழல் ஊராரின் வாய்க்குக் கிடைத்த அவலாகிறது.

ஆக, களவுக் காலத்தைப் பொறுத்தவரையில் தலைவிக்கு ஊராரால் ஏற்படும் அலரானது பயன் விளைவிக்கிறது. ஆனால், அவ்வலர் கற்புக் காலத்து நிகழும்போது ஏற்கவியலா எதிர்விளைவை உண்டுபண்ணும் காரணியாகிறது.

மணம் வீசா முல்லைப்பூ:

சங்ககால முல்லை மரபில் கற்பின் குறியீடாக அமைவது முல்லைப்பூ ஆகும். தலைவனுடன் உடனுறையும் காலத்தில் மனமகிழ்வுடன் முல்லை சூடும் தலைவி, தலைவன் வினைவயிற் பிரிந்த காலத்தும் (அலர் தூற்றும் சூழலில்) முல்லை சூடி ஒப்பனை செய்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவே! அவ்வாறு முல்லை சூட எண்ணினும், ஊராரின் (தனிமனித ஒழுக்கலாறு குறித்த) ஏளனப் பேச்சுக்கிடையே அப்பூவானது அவளுக்கு நறுமணம் தருவதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை. இன்றைய காலகட்டத்திலும் ஆடவன் ஒருவன் பொருள் நோக்கம் கொண்டு சில-பல ஆண்டுகள் தன் மனையாளைப் பிரியும் சூழலுக்கு உள்ளாவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அச்சூழலில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மனையாளுக்கு ஏற்பட்ட அவலமே இன்றைய இல்லாளுக்கும் ஏற்படுகிறது. எனவே, இவ் அவலம் நீங்க, மனையாளின் கூந்தலில் சூடும் பூ "மணம்' வீச, ஊரார்தம் "மனம்' மாற வேண்டும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.