LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நிர்மலா ராகவன்

மானசீகக் காதல் - நிர்மலா ராகவன்

பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழைத்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி?

நிச்சயம் ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக எழுதமாட்டாள்.

ஒரு வேளை, அவளுடைய கணவன் எழுதி, பிரச்னை எதிலும் மாட்டிக்கொள்ள விரும்பாத கோழையாக இருந்ததால், மனைவியின் பெயரில் தனது எழுத்துப் படிவங்களை அனுப்பிவிடுகிறானோ?

எழுத்துத் துறையில் ஒரு ஜாம்பவான் என்று தன்னைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு பெரியசாமிக்கு. தான் அறியாத ஓர் எழுத்தாளர் இவ்வளவு பிரபலமாக ஆவதா!

வழக்கம்போல, `நானும் ஒரு எழுத்தாளன்!’ என்று சொல்லிக்கொள்ளும் நாலுபேரைப் பார்த்துப் பேசும்போது, `டி.எஸ்.வியைத் தெரியாதா! நமக்கு ரொம்ப வேண்டியவங்களாச்சே!’ என்று பெருமை பேசிக் கொள்ளவாவது அவளுடைய அறிமுகம் வேண்டாமா?

சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினார் பெரியசாமி.

எப்பவும்போல, கோப்பிக்கடையில் அவர்களுடைய அரட்டை ஆரம்பித்தது. அங்கிருந்த நால்வரில் பெரியசாமி மட்டும்தான் இன்னும் உத்தியோகத்தில் இருந்தார்.

“இப்போ பத்திரிகையில அடிக்கடி எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு!  அவங்களைத் தெரியுமோ ஒங்களுக்கு?” தன்னை யாராவது கேட்டு அவமானப்படுவதற்குள் முந்திக்கொண்டார் அவர்.

“அவங்களா! ஆம்பளைங்க சொல்லக் கூசறதைக்கூட பச்சை பச்சையா எழுதுவாங்களே!” நமட்டுச் சிரிப்புடன் ஒரு குரல் எழுந்தது.

“நல்லாச் சொன்னீங்க! நாம்பளும்தான் இருபது, முப்பது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கோம். இப்படியா வித விதமா, ஆண்-பெண் உறவு, கவர்ச்சி, மனக்கிலேசம்னு பிட்டுப் பிட்டு வெச்சோம்?”

தொடர்ந்து அந்த எழுத்தாளினியின் அங்க லட்சணங்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின. அவளுடைய முகம் தோள்வரையே போட்டோவில் காணப்பட்டாலும், அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே மிகுந்ததை அவரவர் மூளைக்கு எட்டியபடி கற்பனை செய்து வர்ணிக்க ஆரம்பித்தார்கள்.

“போட்டோவைப் பாத்தா, முப்பது வயசுக்குள்ளேதான் இருக்கும்னு தோணுது!” என்றார் ஏகாம்பரம்.

“நீங்க ஒண்ணு! எந்தப் பொண்ணுதான் `எனக்கு வயசாகிடுச்சு’ன்னு ஒத்துக்கும்? அட, நம்ப வீட்டிலேயே பாக்கலியா? நான் சொல்றேன், இது பத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி எடுத்ததா இருக்கும். பாக்க சுமாரா இருக்கேன்னு அனுப்பி இருக்காங்க!” அடித்துப் பேசினார் சாமி.

டி.எஸ்.வி எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அது வேறு நம்ப முடியாததாக இருந்தது அந்த நண்பர் குழாத்துக்கு.

எண்ணி, இரண்டு கதைகள் எழுதிவிட்டு, அதன்பின் தமது கதைகளைத் தாங்கும் பேறு பெற்ற சிறுகதைத் தொகுப்பை எங்கு போனாலும் எடுத்துக்கொண்டு போய், எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் தமது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்ந்தவர்களுக்கு, இப்படி `எழுத்தாள லட்சண’த்திற்கு முரணாக ஒருவர் அமைந்து இருந்தது நம்ப முடியாததாக இருந்தது. தனது வித்தியாசமான போக்காலேயே அந்த ஒருவர் தம்மைத் தட்டிக்கேட்பதுபோல் பயம் உண்டாயிற்று.

`நம் பெயர் நாலுபேருக்குத் தெரியவேண்டும் என்றுதான் எழுதுகிறோம். இதில் அடக்கம் ஒரு கேடா!’ என்ற எரிச்சல் எழுந்தது.

“நான் நினைக்கிறேன், இவங்களுக்கு ஒடம்பிலே ஏதோ குறை இருக்கணும்னு. திக்குவாயாக்கூட இருக்கலாம். அதான் சுயமதிப்பைக் கெடுத்துக்க வேணாம்னு ஒதுங்கியே இருக்காங்க!” சின்னக்கண்ணு தன் அனுமானத்தைத் தெரிவித்தார்.

அதை ஏற்பதுபோல் பெரியசாமி தலையாட்டி ஆமோதித்தார். தன்கூடப் பள்ளியில் படித்த சாங்கின் நினைவு வந்தது அவருக்கு.

பிறவியிலேயே ஒரு கால் இன்னொன்றைவிட சற்றுக் குட்டையாக இருந்ததால், விந்திதான் நடக்க முடியும் என்ற பரிதாபகரமான நிலை அவனுக்கு. தன்னையே ஏற்றுக்கொள்ள  முடியாது, அதனால் கிளர்ந்த ஆத்திரத்தில், எந்த ஓட்டப் பந்தயமானாலும் கலந்துகொண்டு, அதில் முதலாவதாக ஜெயிப்பானே!

இப்படி டி.எஸ்.வியிடமும் நிவர்த்தி செய்ய முடியாத ஏதோ குறைபாடு இருக்கிறது. அதையே எண்ணி, ஓயாது மறுகாமல் இருக்கவே இப்படி எழுதுவதை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று உறுதியாகத் தோன்றிப்போயிற்று. சற்று பச்சாதாபம் ஏற்பட்டது.

அவர்களது விவாதம் தொடர்ந்தது.

இவள் ஏன் ஆண்-பெண் உறவைப்பற்றியே எழுதுகிறாள்? அட, ஏதோ உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கனவுகளை வெளிப்படுத்திக் கொள்கிறாளோ, என்னவோ! அப்படியே இருந்தாலும், எல்லார் கண்ணிலும் பட்டு, அவர்கள் வாயிலும் புகுந்து வரும்படி எப்படித்தான் பிரசுரத்திற்கு அனுப்புகிறாளோ!

“இன்னிவரைக்கும், `ஆம்பளைங்க தப்பு செய்யறாங்க, அவங்களாலேயும் தப்பு செய்ய முடியும்னு ஒருத்தராவது துணிஞ்சு எழுதி இருப்பாங்களா? இது தலையரட்டை!” அவர்களுள் மூத்தவரான ஏகாம்பரம் பொருமினார்.

“புருஷன்காரன் பாடுதான் பாவம்! எப்படித்தான் இதை சகிச்சுக்கிட்டுப் போறானோ!” என்று ஒருவர் தன் பங்குக்குச் சொல்ல, அந்த நண்பர்களின் கவனம் பூராவும் அந்த அப்பாவி ஆண்மேல் திரும்பியது.

ஒரு வேளை, குறை அவனிடம்தானோ?

தாம்பத்திய உறவில் தான் எதிர்பார்த்த சுகம் கிடைக்காதுதான் டி.எஸ்.வி அதை எழுத்தில் தேடுகிறாளோ?

குறை தன்னிடம் இருக்க, மனைவியைக் கோபிப்பது என்ன நியாயம் என்றுதான் கணவன் அவளை அவள் இஷ்டத்துக்கு விட்டு வைத்திருக்கிறான் என்று முடிவு செய்தார்கள்.

பெரியசாமி அந்த உரையாடலில் கலந்துகொள்ளாது மௌனமாக இருந்தார். அவளைப்பற்றி நண்பர்கள் தோற்றுவித்த இரக்கம் அவரை ஓயாமல் சிந்திக்க வைத்தது.

`வேலையிலிருந்து அடுத்த வருடம் கட்டாய ஓய்வு பெறவேண்டுமே!’ என்று அவ்வப்போது தோன்றிய பயமும், குழப்பமும், போதாத குறைக்கு, `உடம்பும் முன்போல இல்லை. கீழே உட்கார்ந்து எழுந்திருந்தால் தலை சுற்றிப்போகிறது!’ என்று வேறு பல கவலைகளும் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்த நிலையில், ஓயாது தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிராமல், வேறு ஒருவரின் நினைப்பில் மூழ்கி இருப்பது சுகமாக இருந்தது.

தன்னை இவ்வளவு தூரம் ஆட்டுவிக்கும் அந்த டி.எஸ்.வியின் துயரத்தில் தானும் பங்குகொண்டு, அதைக் குறைக்க முடியவில்லையே என்று துக்கம் பீறிட்டது.

அந்த வருத்தம், “ராத்திரிக்கு ஒங்களுக்கு என்ன டிபன் செய்யணும்?” என்று கேட்டுக்கொண்டு வந்த நின்ற பார்வதியின்மேல் ஆத்திரமாக மாறியது.

“நீயும்தான் முப்பது வருஷமா என்னோட குப்பை கொட்டறே! தினமும் என்ன கேள்வி இது! எதையோ பண்ணித்தொலையேன்!” என்று எரிந்து விழுந்தார்.

சற்று விழித்துவிட்டு, அவள் உள்ளே போனாள்.

பார்வதி தோசை வார்த்தால், `எப்பவும் தோசைதானா இந்த இழவு வீட்டில்? தாகத்தாலேயே ஆள் செத்துடணும்னு பாக்கறியா?’ என்பார்.

சரிதான் என்று உப்புமா பண்ணுவாள், மறுநாள்.

`இது என்ன உப்புமா, களிமண்ணிலே கையை விடறமாதிரி! இட்லி, தோசை எதையாவது செய்யறதுக்கென்ன? அரிசி, உளுந்தை ஊறப்போட்டு அரைக்க நேரம் இல்லியோ மகாராணிக்கு? ஒக்காந்து ஒக்காந்து என்னதான் கிழிக்கறே?’ என்று அதற்கும் வசவு விழும்.

அவர் என்ன சொன்னாலும் வாயே திறக்கமாட்டாள் தர்ம்பத்தினி. பதிபக்தி என்றில்லை. பொதுவாகவே ஆண்களின் மனவக்கிரம் புரிந்துபோனதால், `நமக்குக் கொடுத்துவைத்தது இவ்வளவுதான்!’ என்ற விவேகம்.

சமீப காலமாக கணவர் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது அவள் அறிந்ததுதான். ஒரு வேளை, தான் அவருக்கு அலுத்துவிட்டோமோ?

நான்கு பிள்ளைகள் பெற்று, உரிய காலத்தில் உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர எந்தவித முயற்சிகளும் செய்யாததில், பார்வதி ஒரு நிரந்தர கர்ப்பிணித் தோற்றம் அமைந்தவளாக இருந்தாள். ஓயாமல் வீட்டு வேலை செய்ததில், சற்று கூன்வேறு.

பெரியசாமியும் அப்படியொன்றும் இளமை குன்றாது இருந்துவிடவில்லை. `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறிக்கொள்வார். அவ்வார்த்தைகளில் விரக்தி கிடையாது. எல்லாரும் மரியாதையாக, தன் சொற்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் வெளிப்படும்.

மனைவியின் உயிரை வாங்கி, வித விதமாக அவளைச் சமைக்கவைத்துச் சாப்பிட்டதன் விளைவு பருத்த உடலில் தெரிந்தது. அதனால், வயதுக்கு மீறிய தள்ளாமைவேறு.

இதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்தாலும், பார்வதிக்கு இப்போது அச்சம் ஏற்பட்டது.

வயதானால் பால்யம் திரும்புமாமே ஆண்களுக்கு? தன் போதாத காலம், யாராவது இளம்பெண்ணைப் பார்த்து மயங்கிவிட்டாரோ?

பார்வதி அதிகம் குழம்ப வேண்டியிருக்கவில்லை.

பெரியசாமியே ஒருநாள், சாப்பாட்டுக்குப் பிறகு ஆரம்பித்தார்: “இந்தக் கதையெல்லாம் எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு..,” மேலே என்ன சொல்வது என்று புரியாமல் அவள் முகத்தையே பார்த்த்தார்.

என்றும் இல்லாத வழக்கமாக, தன்னையும் ஒரு பொருட்டாகக் கணவர் மதித்துப் பேசிய உற்சாகத்தில், “அவங்களா! என்னமா எழுதறாங்க! ஆபாசம் இல்லாம, ஆனா, உணர்ச்சிபூர்வமா.. ஆம்பளையோ, பொம்பளையோ, அவங்க மனசிலே இருக்கிறதை என்னமோ தானே பாத்துட்டு வந்தமாதிரி..,” என்று பேசிக்கொண்டே போனாள்.

ஆனால், `உன்னுடைய அபிப்ராயத்தை யார் கேட்டார்கள்?’ என்கிறமாதிரி பொறுமை குன்றிப்போய் அவர் மூக்கைச் சுளிக்கவும், உசிதம்போல் வாயை மூடிக்கொண்டு, அவர் பேசுவதைக் கேட்கத் தயாரானாள்.

“என்னமோ தெரியல. எனக்கு அவங்கமேல ஒரு.. ஒரு..,” என்றவர் சட்டென நிறுத்தினார்.

`காதல்’ என்று சொல்லப்போய், இந்த அறிவுகெட்டது எங்கேயாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, ஊரைக் கூட்டி நியாயம் கேட்கப் போய்விட்டால், தன் கௌரவம் என்ன ஆவது!

“எனக்கும் அவங்க எழுத்துமேல ஒரே இது!” என்று அசடு வழிந்தார்.

நிம்மதியையும் மீறி பார்வதிக்குச் சிரிப்பு வந்தது. என்னமோ, பதின்மூன்று வயதுப் பையன் தன்னைவிட மூன்று மடங்கு வயதான ஆசிரியையைப் பார்த்து அதீத மோகம் கொண்டு, கற்பனை உலகிலேயே சஞ்சரித்து இன்பம் காண்பதுபோல் அல்லவா இந்த `முக்கால்’ கிழவர் நடந்துகொள்கிறார்!

காதல் வயப்பட்ட ஒருவர் தன் மனதில் இருப்பவரைப்பற்றிய  எண்ணங்களை எவருடனாவது பகிர்ந்துகொண்டால்தான் அமைதி கிட்டும் என்ற மனித இயல்புக்கு ஏற்ப, டி.எஸ்.வியைப்பற்றி மனைவியிடமே ஓயாது பேசலானார் பெரியசாமி.

இந்தவரைக்கும் நம்மிடம் பிரியமாக நடந்துகொள்கிறாரே என்று அவளும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக பெரியசாமி வெளியூர் போகவேண்டி வந்தது.

“அங்கதான் ஒங்க டி.எஸ்.வி இருக்காங்க இல்ல?” நினைவுபடுத்தினாள் பார்வதி. “பாத்துட்டு வாங்களேன்!”

நீண்ட ரயில் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, ` ஒங்க டி.எஸ்.வி’ என்ற வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்த்தில், அவருக்கு அலுப்பே தெரியவில்லை.

“இவங்கதான் கல்யாணப் பொண்ணோட அக்கா!”

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார் பெரியசாமி. “நீ.. நீங்க.. டி.எஸ்.விஜயலட்சுமிதானே?”

ஒரு சிறு முறுவலுடன் அவள் அதை ஆமோதித்தாள்.

அவளைப் பார்த்தால் ஏதேதோ கேட்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்ததெல்லாம் மறந்தே போயிற்று. அவளையே பார்த்தபடி நின்றார்.

“நீ இங்கேயா இருக்கே, விஜி?” என்று கேட்டபடி வந்தான் ஓர் இளைஞன். பெரியசாமியின் கண்களில் இருந்த சொக்கிய பாவனையைக் கவனித்துவிட்டு, “ஓ! ஒனக்கு ஒரு புது விசிறி கிடைச்சிருக்காருன்னு சொல்லு!” என்றான் உற்சாகமாக.

“அங்கிள்! இவர்தான் என் ஹஸ்பண்ட்!” அவள் குரலில் ஒலித்த பெருமையும், உரிமையும் பெரியசாமிக்குள் பொறாமையைத் தூண்டிவிட்டது.

தன்னையும் அறியாமல், ஒரு கணம் அவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார்.

தொந்தியும், தொப்பையும், வழுக்கைத் தலையுமாக தான் எங்கே, பனியன் விளம்பரத்துக்குப் போஸ் கொடுப்பவன்மாதிரி அகன்ற மார்பும், புஜபலமும், அடர்ந்த முடியும் கொண்ட இவன் எங்கே!

அவனுடைய உயரத்துடன் ஈடுகொடுக்க, சற்று நிமிர்ந்து நிற்க முயற்சித்தார். இடுப்பில் ஏதோ ஓர் எலும்பு இடக்குப் பண்ண, வலியில் முகம் சுளித்த்து.

“நின்னுக்கிட்டே இருக்கீங்களே, அங்கிள்!” என்று பரிதாபப்பட்டவளாய், “டியர்! அங்கிளுக்கு ஒரு நாற்காலி கொண்டுவாங்களேன்!” என்று கணவனைப் பணித்தாள் டி.எஸ்.வி.

“ஒன்னால நிக்க முடியலேன்னு வெளிப்படையா சொல்றது!” கொஞ்சலாக அவளைப் பார்த்துச் சிரித்தபடி, அந்த நிறைமாதக் கர்ப்பிணியின் உத்தரவை நிறைவேற்ற அவன் விரைந்தபோது, பெரியசாமிக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது.

மனைவியை விரட்டி, விரட்டி, அதனால் பலம் அடைந்துவிட்டதாக தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் ஆண் இல்லை இவன். விட்டுக்கொடுக்க வேண்டிய சமயத்தில் விட்டுக்கொடுத்து, தன் கௌரவத்தையும் இழக்காமல் இருப்பவன். அதனாலேயே மனைவியின் அன்புடன் தோழமையையும் பெற்றிருக்கிறான். அந்த சுதந்திரம்தான் அவளுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

வீடு திரும்பிய கணவரிடம் எடுத்த எடுப்பிலேயே, “டி.எஸ்.வியைப் பாத்தீங்களா? என்று கரிசனத்துடன் விசாரித்தாள் பார்வதி.

அது காதில் விழாதமாதிரி, “நாலு நாளா கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு, வயிறே கெட்டுப்போச்சு. ஒன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு! பூண்டு, மிளகு, சீரகம் எல்லாத்தையும் தட்டிப்போட்டு நீ ரசம் வைக்கிறமாதிரி யாரால முடியும்!” என்றார்.

மனக்கண்முன் தோன்றிய `பனியன் அழக’னிடம், `ஒனக்குத்தான் பொண்டாட்டிகிட்டே அருமையா நடந்துக்கத் தெரியுமோ?’ என்று சவால் விட்டார்.

(இதயம், 1993)

 

- நிர்மலா ராகவன்

by Swathi   on 20 Feb 2015  1 Comments
Tags: Manaseega Kadhal   மானசீகக் காதல்   Nirmala Raghavan   நிர்மலா ராகவன்           
 தொடர்புடையவை-Related Articles
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா
நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை)
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
கருத்துகள்
26-Feb-2015 08:47:38 gopal said : Report Abuse
Very நிசே
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.