LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐம்பெருங் காப்பியங்கள்

மணிமேகலை பகுதி -2

 

12. அறவணர்த் தொழுத கதை
ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள் 
யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய் 
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் 
உரை மூதாளன் உறைவிடம் குறுகி 
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி 
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி 
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் 
உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும் 
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை 
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் 12-010
ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம் 
நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும் 
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை 
களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும் 
'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் 
வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி 
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் 
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் 
ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால் 
பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும் 12-020
உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம் 
தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும் 
தெய்வம் போய பின் தீவதிலகையும் 
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் 
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை 
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் 
'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் 
கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் 
'போக' என மடந்தை போந்த வண்ணமும் 
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் 12-030
மணிமேகலை உரை மாதவன் கேட்டு 
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர 
'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க 
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் 
நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த 
அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம் 
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய 
பாதபங்கய மலை பரவிச் செல்வேன் 
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் 
துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் 12-040
"மா பெருந் தானை மன்ன! நின்னொடும் 
தேவியர் தமக்கும் தீது இன்றோ?" என 
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி 
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் 
புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று 
மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் 
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி 
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் 
கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப 
"பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன் 12-050
ஆடும் கூத்தியர் அணியே போல 
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' என 
மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் 
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் 
'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த 
நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய் 
தரும தலைவன் தலைமையின் உரைத்த 
பெருமைசால் நல் அறம் பெருகாதாகி 
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி 
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு 12-060
செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று 
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது 
தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் 
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் 
கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது 
சலாகை நுழைந்த மணித் துளை அகவையின் 
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும் 
ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல 
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச் 
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் 12-070
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் 
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் 
தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து 
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப 
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து 
விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன 
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில் 
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு 
பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி 
இரும் பெரு நீத்தம் புகுவது போல 12-080
அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம் 
உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம் 
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் 
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று 
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப் 
புத்த ஞாயிறு தோன்றும்காலை 
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க 
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் 
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் 
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா 12-090
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் 
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் 
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் 
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா 
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் 
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் 
கூனும் குறளும் ஊமும் செவிடும் 
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ 
அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் 
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் 12-100
போதி மூலம் பொருந்திய சிறப்பின் 
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் 
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி! 
மாதர் நின்னால் வருவன இவ் ஊர் 
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள 
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது 
பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்! 
ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும் 
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் 
ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு 12-110
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி 
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப் 
பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய் 
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் 
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை 
மக்கள் தேவர் என இரு சார்க்கும் 
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் 
பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும் 
தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் 
மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட 
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என் 12-121
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய 
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய் 
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் 
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் 
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து 
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி 
தென் திசைக் குமரி ஆடி வருவோள் 
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை 
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி 
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க 13-010
தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர் 
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர 
நாவான் நக்கி நன் பால் ஊட்டி 
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப 
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் 
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் 
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக் 
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு 
"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே 
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து 13-020
"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என 
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி 
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர் 
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி 
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் 
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் 
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் 
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில் 
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி 
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக் 13-030
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி 
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு 
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு 
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து 
"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட 
நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும் 
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி 
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன் 
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி 
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம் 13-040
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி 
"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய 
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் 
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று 
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப 
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக் 
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக் 
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட 
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் 
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் 13-050
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து 
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் 
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால் 
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் 
இதனொடு வந்த செற்றம் என்னை 
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?" 
"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை 
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய 
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை 
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ் 13-060
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் 
நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும் 
"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி 
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் 
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் 
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று 
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் 
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ 
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என 
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் 13-070
"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என 
"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் 
வடமொழியாட்டி மறை முறை எய்தி 
குமரி பாதம் கொள்கையின் வணங்கி 
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை 
'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என 
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும் 
'வாரணாசி ஓர் மா மறை முதல்வன் 
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் 
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி 13-080
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் 
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு 
தெற்கண் குமரி ஆடிய வருவேன் 
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க் 
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் 
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித் 
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் 
செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று 
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் 
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் 13-090
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என 
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து 
"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ 
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய 
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் 
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் 
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ? 
சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து 
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப 
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே 13-100
தாதை பூதியும் தன் மனை கடிதர 
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும் 
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட 
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் 
தக்கண மதுரை தான் சென்று எய்தி 
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து 
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத் 
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர் 
ஐயக் கடிஞை கையின் ஏந்தி 
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி 13-110
'காணார் கேளார் கால் முடப்பட்டோர் 
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர் 
யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி 
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து 
கண்படைகொள்ளும் காவலன் தான் என் 13-115
14 பாத்திர மரபு கூறிய காதை
'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை 
பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் 
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து 
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ 
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி 
"வயிறு காய் பெரும் பசி மலைக்கும்" என்றலும் 
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் 
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த 
"கேள் இது மாதோ கெடுக நின் தீது" என 
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத் 14-010
தேவி சிந்தாவிளக்குத் தோன்றி 
"ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய் 
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது 
வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது 
தான் தொலைவு இல்லாத் தகைமையது" என்றே 
தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும் 
"சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து 
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! 
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி! 
ஏனோர் உற்ற இடர் களைவாய்!" எனத் 14-020
தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி 
ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு 
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் 
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் 
தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ 
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் 
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப 
ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் 
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் 
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 14-030
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி 
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் 
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி 
"இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து 
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க" என 
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு 
எள்ளினன் "போம்" என்று எடுத்து உரை செய்வோன் 
"ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் 
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது 
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 14-040
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் 
யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு 
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே 
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் 
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை 
உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ 
பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ 
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்?" என்றலும் 
"புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு 
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப 14-050
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் 
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க!" என 
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன் 
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் 
பன்னீராண்டு பாண்டி நல் நாடு 
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது 
வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப் 
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் 
ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை 
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 14-060
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் 
நடவை மாக்களும் நகையொடு வைகி 
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் 
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக 
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி 
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய் 
"யார் இவன்?" என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு 
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை 
"இருந்தாய் நீயோ!" என்பார் இன்மையின் 
திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 14-070
ஒரு தனி வரூஉம் பெருமகன் போல 
தானே தமியன் வருவோன் தன்முன் 
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் 
"சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் 
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!" என்றலும் 
"அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது 
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி 
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து" என 
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி 
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின் 14-080
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத் 
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் 
"இழிந்தோன் ஏறினன்" என்று இதை எடுத்து 
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் 
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி 
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் 
"மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம் 
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் 
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன் 
சுமந்து என் பாத்திரம்?" என்றனன் தொழுது 14-090
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் 
"ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று" என விடுவோன் 
"அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் 
உளர்எனில் அவர் கைப் புகுவாய்" என்று ஆங்கு 
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி 
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன் 
"என் உற்றனையோ?" என்று யான் கேட்பத் 
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் 
குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக் 
குட திசைச் சென்ற ஞாயிறு போல 14-100
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு 
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு 
சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன் 
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் 14-104
15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே! 
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத் 
தண்ணென் சாவகத் தவள மால் வரை 
மண்முகன் என்னும் மா முனி இடவயின் 
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது 
தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி 
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம் 
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் 
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த 
ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து 15-010
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் 
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் 
குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன் 
அடர்ப் பொன் முட்டை அகவையினான்" என 
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய 
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் 
தற்காத்து அளித்த தகை ஆ அதனை 
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் 
ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத் 
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு 15-020
ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன் 
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ 
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து 
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் 
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் 
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து 
மண்அகம் எல்லாம் மாரி இன்றியும் 
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது 
"போதி மாதவன் பூமியில் தோன்றும் 
காலம் அன்றியும் கண்டன சிறப்பு" என 15-030
சக்கரவாளக் கோட்டம் வாழும் 
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து 
"கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய 
அந்தில் பாவை அருளும் ஆயிடின் 
அறிகுவம்" என்றே செறி இருள் சேறலும் 
"மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் 
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் 
ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்" என்று 
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் 
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் 15-040
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி 
"மக்களை இல்லேன் மாதவன் அருளால் 
பெற்றேன் புதல்வனை" என்று அவன் வளர்ப்ப 
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் 
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான் 
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ? 
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ 
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் 
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் 
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை! 15-050
> வெண் திரை தந்த அமுதை வானோர் 
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு 
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் 
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது' என 
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான் 
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி 
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு 
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் 
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும் 
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் 15-060
கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய 
வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை 
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய 
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் 
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு 
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி 
'உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த 
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி 
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது 
திப்பியம்' என்றே சிந்தை நோய் கூர 15-070
மண மனை மறுகில் மாதவி ஈன்ற 
அணி மலர்ப் பூங் கொம்பு 'அகம் மலி உவகையின் 
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் 
பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து' எனக் 
'குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண் 
ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று 
வான் தருகற்பின் மனை உறை மகளிரின் 
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ 
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை 
நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள் 15-080
> வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித் 
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை 
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப 
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம் 
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் 
காயசண்டிகை எனும் காரிகை தான் என் 15-086
16. ஆதிரை பிச்சையிட்ட காதை
'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர் 
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள் 
'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய் 
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி 
அணி இழை தன்னை அகன்றனன் போகி 
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க 
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி 
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் 
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி 
"காணம் இலி" என கையுதிர்க்கோடலும் 16-010
வங்கம் போகும் வாணிகர் தம்முடன் 
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி 
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ 
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப 
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் 
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் 
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப் 
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் 
"இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல் 
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் 16-020
சாதுவன் தானும் சாவுற்றான்" என 
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு 
"ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம் 
தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி 
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து 
முடலை விறகின் முளி எரி பொத்தி 
"மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப் 
புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும் 
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் 
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது 16-030
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் 
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது 
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த 
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத் 
"தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் 
யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும் 
"ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை 
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி 
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் 
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் 16-040
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் 
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் 
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என 
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் 
ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி 
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று 
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என் 
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என 
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் 
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் 16-050
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் 
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை 
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் 
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து 
துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும் 
நக்க சாரணர் நயமிலர் தோன்றி 
பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன் 
தானே தமியன் வந்தனன் அளியன் 
ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும் 
மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின் 16-060
கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள் 
சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி 
ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய் 
ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் 
போந்தருள் நீ" என அவருடன் போகி 
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் 
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் 
எண்கு தன் பிணவோடு இருந்தது போல 
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி 
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக் 16-070
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் 
"ஈங்கு நீ வந்த காரணம் என்?" என 
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் 
"அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் 
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் 
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து 
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என 
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து 
"வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும் 
"பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு 16-080
உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின் 
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என 
தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும் 
"மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் 
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் 
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் 
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் 
'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் 
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் 
உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர் 16-090
கண்டனை ஆக!" என கடு நகை எய்தி 
"உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர் 
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் 
அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை 
செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள் 
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி 
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் 
தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின் 
உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ 
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 16-100
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் 
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் 
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை 
ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை 
பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ" 
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் 
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து 
"கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு 
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் 
தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும் 16-110
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும் 
"நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை 
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் 
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் 
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி 
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும் 
தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன் 
"ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம் 
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப் 
"பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை 16-120
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை 
விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு 
இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து 
சந்திரதத்தன் என்னும் வாணிகன் 
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி 
இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து 
தன் மனை நன் பல தானமும் செய்தனன் 
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் 
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என 
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான் 16-130
புனையா ஓவியம் போல நிற்றலும் 
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு 
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர 
'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என 
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என் 16-135
17. உலக அறவி புக்க காதை
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற 
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை 
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் 
திறத்து வழிப்படூஉம் செய்கை போல 
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் 
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி 
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய 
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி 
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி 
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று 17-010
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் 
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு 
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் 
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் 
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி 
துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும் 
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் 
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் 
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் 
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் 17-020
'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக் 
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன் 
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத் 
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன் 
கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த 
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் 
புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை 
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் 
பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர் 
இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி 17-030
தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின் 
பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன் 
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் 
காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன் 
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் 
கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன் 
"சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது 
ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது 
அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு 
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் 17-040
பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது 
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்! 
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து 
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து 
முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு 
உண்ணும் நாள் உன் உறு பசி களைக!" என 
அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் 
இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை! 
வாடு பசி உழந்து மா முனி போய பின் 
பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என் 17-050
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற 
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி 
"ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால் 
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை! 
வானூடு எழுக" என மந்திரம் மறந்தேன்! 
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி 
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு 
தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன 
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக 
நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி 17-060
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் 
"சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் 
கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர் 
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி 
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் 
பல நாள் ஆயினும் நிலனொடு போகி 
அப் பதிப் புகுக" என்று அவன் அருள்செய்ய 
இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் 
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் 
வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே 17-070
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி 
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் 
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் 
மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன் 
துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர் 
சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில் 
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில் 
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை 
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் 
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் 17-080
இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் 
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று 
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை 
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி 
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ் 
உலக அறவியின் ஒரு தனி ஏறி 
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் 
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் 
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய 
தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி 17-090
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக் 
கருவி மா மழை தோன்றியதென்ன 
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு 
அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி 
'ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது 
யாவரும் வருக ஏற்போர் தாம்!' என 
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே 
யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என் 17-098
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின் 
தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக் 
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி 
விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித் 
'தீர்ப்பல் இவ் அறம்!' என சித்திராபதி தான் 
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் 
'கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி 
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது 
நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர் 
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது! 18-010
காதலன் வீய கடுந் துயர் எய்திப் 
போதல்செய்யா உயிரொடு புலந்து 
நளி இரும் பொய்கை ஆடுநர் போல 
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த 
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம் 
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே 
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் 
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் 
நறுந் தாது உண்டு நயன் இல் காலை 
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம் 18-020
வினை ஒழிகாலைத் திருவின் செல்வி 
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் 
தாபதக் கோலம் தாங்கினம் என்பது 
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே? 
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி 
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய 
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் 
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக் 
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப் 
பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி 18-030
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப் 
பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின் 
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி 
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் 
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர் 
மனைஅகம் புகாஅ மரபினன்' என்றே 
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து 
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து 
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக் 
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் 18-040
கடுந் தேர் வீதி காலில் போகி 
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி 
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் 
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப் 
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த் 
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து 
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து 
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி 
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை 
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச 18-050
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித் 
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் 
'மாதவி மணிமேகலையுடன் எய்திய 
தாபதக் கோலம் தவறு இன்றோ?' என 
'அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப 
ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி 
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய 
நாடகம் விரும்ப நல் நலம் கவினிக் 
காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது 
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய 18-060
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப் 
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது 
வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து!' என 
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் 
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் 
"மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது 
ஓவியச் செய்தி" என்று ஒழிவேன் முன்னர் 
காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ 
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் 
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த 18-070
முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம் 
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப 
விருந்தின் மூரல் அரும்பியதூஉம் 
மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் 
காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண் 
"அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு" என 
செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும் 
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை "என் 
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு" என்று 
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப் 18-080
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் 
செங்கோல் காட்டிச் "செய் தவம் புரிந்த 
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றனள் 
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ? 
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச் 
சித்திராபதி தான் சிறு நகை எய்தி 
'அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்! 
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன 
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்? 
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி 18-090
ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும் 
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து 
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய 
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய 
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த் 
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் 
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்? 
கன்னிக் காவலும் கடியின் காவலும் 
தன் உறு கணவன் சாவுறின் காவலும் 
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது 18-100
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் 
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் 
நாடவர் காண நல் அரங்கு ஏறி 
ஆடலும் பாடலும் அழகும் காட்டி 
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச் 
செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக் 
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப் 
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி 
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப் 
பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல் 18-110
கோன்முறை அன்றோ குமரற்கு?' என்றலும் 
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து 
விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி 
ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி 
காடு அமர் செல்வி கடிப் பசி களைய 
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத் 
தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் 
பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும் 
இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி 
'உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் 18-120
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி 
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி 
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என 
தானே தமியள் நின்றோள் முன்னர் 
யானே கேட்டல் இயல்பு' எனச் சென்று 
'நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? 
சொல்லாய்' என்று துணிந்துடன் கேட்ப 
'என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் 
தன் அடி தொழுதலும் தகவு!' என வணங்கி 
'அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் 18-130
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் 
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல் 
நன்றி அன்று!' என நடுங்கினள் மயங்கி 
'கேட்டது மொழியேன் கேள்வியாளரின் 
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் 
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் 
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 
மக்கள் யாக்கை இது என உணர்ந்து 
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் 
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு 18-140
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ 
கேட்டனை ஆயின் வேட்டது செய்க!' என 
வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி 
முத்தை முதல்வி முதியாள் இருந்த 
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு 
'ஆடவர் செய்தி அறிகுநர் யார்?' எனத் 
தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி 
மாய விஞ்சை மந்திரம் ஓதிக் 
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் 
மணிமேகலை தான் வந்து தோன்ற 18-150
அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக் 
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் 
'பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த 
காயசண்டிகை தன் கையில் காட்டி 
மாயையின் ஒளித்த மணிமேகலை தனை 
ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்? 
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் 
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்! 
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்! 
பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும் 18-160
அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும் 
முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும் 
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக் 
கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள 
கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி 
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க 
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் 
புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென 
முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த 
மதி வாள் முகத்து மணிமேகலை தனை 
ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன் 
இது குறை' என்றனன் இறைமகன் தான் என் 18-172
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி 
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற 
'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன் 
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என 
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் 
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் 
உதயகுமரன் உள்ளம் கலங்கி 
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி 
"அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே 
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் 19-010
பை அரவு அல்குல் பலர் பசி களையக் 
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் 
"முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச் 
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் 
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் 
பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை 
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண 
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப 
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு 
நீல யானை மேலோர் இன்றிக் 19-020
காமர் செங் கை நீட்டி வண்டு படு 
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து 
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் 
நகர நம்பியர் வளையோர் தம்முடன் 
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த 
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப் 
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி 
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின் 
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட 
மறு இல் செய்கை மணிமேகலை தான் 19-030
'மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் 
காவலன் மகனோ கைவிடலீ யான்!' 
காய்பசியாட்டி காயசண்டிகை என 
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே 
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி 
"ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் 
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து" என்றே 
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம்' என 
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த 
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப் 19-040
பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை 
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை 
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் 
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி 
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை 
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும் 
'ஊட்டிய பாத்திரம் ஒன்று' என வியந்து 
கோட்டம் காவலர் 'கோமகன் தனக்கு இப் 
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் 
யாப்பு உடைத்தாக இசைத்தும்' என்று ஏகி 19-050
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் 
அடியில் படியை அடக்கிய அந் நாள் 
நீரின் பெய்த மூரி வார் சிலை 
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் 
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு 
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக் 
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக் 
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய 
வரிக் குயில் பாட மா மயில் ஆடும் 
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் 19-060
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு 
மட மயில் பேடையும் தோகையும் கூடி 
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன 
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி 
'மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் 
ஆடிய குரவை இஃது ஆம்' என நோக்கியும் 
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் 
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச் 
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப் 
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம்' என்றும் 19-070
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த 
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண் 
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் 
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் 
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு 
வால் வீ செறிந்த மராஅம் கண்டு 
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என 
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும் 
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் 
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர் 19-080
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் 
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் 
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர் 
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் 
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் 
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் 
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் 
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் 
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர் 
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் 19-090
ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து 
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து 
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் 
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் 
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து 
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும் 
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் 
'வம்' எனக் கூஉய் மகிழ் துணையொடு தன் 
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று 
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும் 19-100
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் 
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும் 
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும் 
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும் 
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் 
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி 
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் 
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் 
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக் 
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப் 19-110
பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத் 
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த 
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத் 
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் 
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து 
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் 
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் 
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி 
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப 
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120
முறம் செவி யானையும் தேரும் மாவும் 
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த 
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர் 
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை 
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் 
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை 
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி! 
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி! 
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை! 
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர் 19-130
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் 
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் 
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து 
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி 
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு 
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் 
ஊழிதோறு ஊழி உலகம் காத்து 
வாழி எம் கோ மன்னவ!' என்றலும் 
'வருக வருக மடக்கொடி தான்' என்று 
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் 19-140
வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று 
'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத் 
'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்? 
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று 
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும் 
'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி! 
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் 
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை! 
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக! 
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது 19-150
ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர் 
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது 
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது 
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது' என 
'யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு?' என்று 
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும் 
'சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து 
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்!' என 
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த 
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த 
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் 
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் 19-162
20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
அரசன் ஆணையின் ஆய் இழை அருளால் 
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம் 
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான் 
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப் 
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் 
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் 
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் 
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக 
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு 
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம் 20-010
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து 
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் 
கேட்டனன் ஆகி 'அத் தோட்டு ஆர் குழலியை 
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் 
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று 
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி 
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் 
முதுக்குறை முதுமொழி கேட்குவன்' என்றே 
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து 
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய 20-020
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் 
'மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக் 
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான் 
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் 
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள் 
காயசண்டிகை!' எனக் கையறவு எய்தி 
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன் 
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து 
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும் 
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் 20-030
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை 
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு 
'இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் 
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் 
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய 
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?' எனப் 
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும் 
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி 
உதயகுமரன் தன்பால் சென்று 
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி 20-040
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி 
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் 
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ 
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது 
விறல் வில் புருவம் இவையும் காணாய் 
இறவின் உணங்கல் போன்று வேறாயின 
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன 
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ 
நிரை முத்து அனைய நகையும் காணாய் 
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின 20-050
இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ 
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது 
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண் 
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன 
இறும்பூது சான்ற முலையும் காணாய் 
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின 
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி 
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய் 
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று 
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் 20-060
வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை 
தாழைத் தண்டின் உணங்கல் காணாய் 
ஆவக் கணைக்கால் காணாயோ நீ 
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ 
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ 
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் 
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து 
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த 
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்!' என 
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும் 20-070
'தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் 
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் 
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு 
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி 
பவளக் கடிகையில் தவள வாள் நகையும் 
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள் 
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை 
ஈங்கு ஒழிந்தனள்' என இகல் எரி பொத்தி 
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் 
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் 20-0810
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் 
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும் 
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் 
'வளை சேர் செங் கை மணிமேகலையே 
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி 
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் 
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ் 
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள் 
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து 
வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து 20-090
வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை 
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை 
உயாவுத் துணையாக வயாவொடும் போகி 
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து 
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல 
கோயில் கழிந்து வாயில் நீங்கி 
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து 
வேக வெந் தீ நாகம் கிடந்த 
போகு உயர் புற்று அளை புகுவான் போல 
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த 20-100
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் 
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் 
'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே 
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத் 
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென 
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் 
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி 
'காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் 
போகுவல்' என்றே அவள்பால் புகுதலும் 
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக் 20-110
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் 
'அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன! 
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் 
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி 
வானம் போவழி வந்தது கேளாய் 
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த 
விந்த மால் வரை மீமிசைப் போகார் 
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள் 
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம் 
விந்தம் காக்கும் விந்தா கடிகை 20-120
அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் 
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள் 
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை 
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய் 
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன! 
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்' 
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து 
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ 
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129
21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின் 
குடவயின் அமைத்த நெடு நிலை வாயில் 
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த 
மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து 
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் 
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில் 
கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை 
அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும் 
கேட்டனள் எழுந்து 'கெடுக இவ் உரு' என 
தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித் 21-010
'திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் 
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் 
உவவன மருங்கில் நின்பால் உள்ளம் 
தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி 
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து 
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி 
என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி 
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் 
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் 
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் 21-020
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் 
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல! 
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் 
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ!' என 
விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி 
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும் 
'செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்! 
அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்! 
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம் 
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் 21-030
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் 
கண்ட பிறவியே அல்ல காரிகை 
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் 
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்! 
என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும் 
பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் 
'பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய 
தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன் 
விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன் 
திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும் 21-040
நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான் 
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் 
அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின் 
பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு!' என 
'ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள்' எனத் 
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும் 
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை 
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து 
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் 
பிரமதருமனைப் பேணினிராகி 21-050
"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் 
விடியல் வேலை வேண்டினம்" என்றலும் 
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி 
காலை தோன்ற வேலையின் வரூஉ 
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து 
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை 
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு 
வேலை பிழைத்த வெகுளி தோன்றத் 
தோளும் தலையும் துணிந்து வேறாக 
வாளின் தப்பிய வல் வினை அன்றே 21-060
விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு 
இராகுலன் தன்னை இட்டு அகலாதது 
"தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய 
அவல வெவ் வினை" என்போர் அறியார் 
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் 
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது 
ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத் 
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் 
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும் 
ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை 21-070
ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது 
இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்! 
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி 
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக் 
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும் 
இடு சிறை நீக்கி இராசமாதேவி 
கூட வைக்கும் கொட்பினள் ஆகி 
மாதவி மாதவன் மலர் அடி வணங்கித் 
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து 
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு 21-080
காதலி நின்னையும் காவல் நீக்குவள் 
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால் 
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை 
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி 
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து 
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் 
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் 
தீவதிலகையின் தன் திறம் கேட்டு 
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் 
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் 21-090
பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை 
ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும் 
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் 
"இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும் 
முறைமையின் படைத்த முதல்வன்" என்போர்களும் 
"தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன் 
அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும் 
"துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு 
இன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும் 
"பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும் 21-100
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம் 
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள் 
"இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் 
அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப் 
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த 
நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி" 
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு 
ஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை 
"ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க 
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை" 21-110
என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்! 
"அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை 
"தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் 
வாயே" என்று மயக்கு ஒழி மடவாய் 
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் 
எழுதிய பாவையும் பேசா என்பது 
அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ? 
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்! 
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் 
கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும் 21-120
முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும் 
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி 
காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி 
யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து 
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் 
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க 
ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா 
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் 
என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்! 
மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்! 21-130
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் 
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் 
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் 
மாந்தர் அறிவது வானவர் அறியார் 
ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன் 
ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ? 
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் 
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி 
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து 
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் 21-140
மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம் 
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு' என 
"தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள் 
ஈறு கடைபோக எனக்கு அருள்?" என்றலும் 
துவதிகன் உரைக்கும்' சொல்லலும் சொல்லுவேன் 
வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்! 
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து 
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய 
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் 
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த 21-150
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் 
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி 
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின் 
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை 
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப் 
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி 
வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம் 
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை 
ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும் 
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள 21-160
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் 
அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள் 
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் 
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து 
"மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற 
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு 
புத்த ஞாயிறு தோன்றும்காறும் 
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா 
இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும் 
தாயரும் நீயும் தவறு இன்றுஆக 21-170
வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்!" என 
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் 
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் 
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள 
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் 
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் 
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து 
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத் 
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி 
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை! 21-180
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை 
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் 
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்! 
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே 
உவவன மருங்கில் நின்பால் தோன்றி 
மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என 
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி 
அவதி அறிந்த அணி இழை நல்லாள் 
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் 
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் 21-190
22. சிறை செய் காதை
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப 
நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு 
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் 
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப 
சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து 
மாதவர் எல்லாம் மணிமேகலை தனை 
'இளங்கொடி! அறிவதும் உண்டோ இது-' என 
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் 
ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய 
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து 22-010
மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து 
கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு 
'உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல 
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய! 
வேலும் கோலும் அருட்கண் விழிக்க! 
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி! 
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் 
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே! 
இன்றே அல்ல இப் பதி மருங்கில் 
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து 22-020
பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும் 
நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும் 
தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர் 
பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால் 
"மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக் 
கன்னி ஏவலின் காந்த மன்னவன் 
"இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ 
"நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக் 
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் 22-030
இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன் 
ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய் 
"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின் 
பரசுராமன் நின்பால் வந்து அணுகான் 
அமர முனிவன் அகத்தியன் தனாது 
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் 
ககந்தன் காத்தல்! காகந்தி" என்றே 
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு 
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள் 
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம் 22-040
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் 
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி 
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் 
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி 
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் 
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் 
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன் 
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என 
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் 
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் 22-050
"கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன் 
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் 
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன் 
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் 
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத் 
தெய்வம் நீ" எனச் சேயிழை அரற்றலும் 
மா பெரும் பூதம் தோன்றி "மடக்கொடி! 
நீ கேள்" என்றே நேர் இழைக்கு உரைக்கும் 
"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் 
பெய் எனப் பெய்யும் பெரு மழை" என்ற அப் 22-060
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்! 
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு 
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி 
கடவுள் பேணல் கடவியை ஆகலின் 
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது 
நிறை உடைப் பெண்டிர் தம்மே போல 
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை 
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை! 
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது 
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக் 22-070
கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம் 
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் 
பின்முறை அல்லது என் முறை இல்லை 
ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால் 
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் 
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு" என 
இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப் 
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் 
தாதை வாளால் தடியவும் பட்டனன் 
இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த 22-080
மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே! 
தருமதத்தனும் தன் மாமன் மகள் 
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித் 
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் 
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் 
"மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு 
ஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ 
புனையா ஓவியம் புறம் போந்தென்ன 
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை 
உலக அறவியினூடு சென்று ஏறி 22-090
"இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்! 
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ" என 
"மா நகருள்ளீர்! மழை தரும் இவள்" என 
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும் 
"தெய்வம் காட்டித் தௌித்திலேன் ஆயின் 
மையல் ஊரோ மன மாசு ஒழியாது 
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன் 
இப் பிறப்பு இவனொடும் கூடேன்" என்றே 
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி 
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் 22-100
தருமதத்தனும் தந்தையும் தாயரும் 
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி 
"தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய்" என 
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி 
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத் 
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் 
தருமதத்தனும் "தன் மாமன் மகள் 
விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது 
பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக!" எனக் 
கொண்ட விரதம் தன்னுள் கூறி 22-110
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி 
நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் 
எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு 
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் 
அந்தணாளன் ஒருவன் சென்று "ஈங்கு 
என் செய்தனையோ இரு நிதிச் செல்வ? 
'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் 
புத்தேள் உலகம் புகாஅர்' என்பது 
கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின் 
நீட்டித்திராது நின் நகர் அடைக!" எனத் 22-120
தக்கண மதுரை தான் வறிது ஆக 
இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே! 
மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு 
பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து 
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் 
அல்லவை கடிந்த அவன்பால் சென்று 
"நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் 
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன 
ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் 
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன 22-130
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ? 
உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய் 
இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் 
அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன் 
இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது 
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா 
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் 
மிக்க அறமே விழுத் துணை ஆவது 
தானம் செய்' என தருமதத்தனும் 
மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி 22-140
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் 
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் 
குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள் 
அமரன் அருளால் அகல் நகர் இடூஉம் 
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் 
கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல் 
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் 
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச் 
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த 
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி 22-150
"தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம்" என 
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி 
மாலை வாங்க ஏறிய செங் கை 
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின் 
"ஏறிய செங் கை இழிந்திலது இந்தக் 
காரிகை பொருட்டு" எனக் ககந்தன் கேட்டுக் 
கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான் 
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் 
ஊழிதோறு ஊழி உலகம் காத்து 
வாழி எம் கோ மன்னவ! என்று 22-160
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் 
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் 
"இன்றே அல்ல" என்று எடுத்து உரைத்து 
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர் 
இன்றும் உளதோ இவ் வினை? உரைம்' என 
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப 
'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என 
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் 
'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் 
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில் 22-170
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் 
தள்ளாது ஆகும் காமம் "தம்பால் 
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்" என 
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் 
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே! 
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் 
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள் 
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள் 
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் 
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் 22-180
முற்றா முலையினள் முதிராக் கிளவியள் 
"செய்குவன் தவம்" என சிற்றிலும் பேர் இலும் 
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் 
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும் 
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் 
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள 
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் 
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை 
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் 
காயசண்டிகை தன் கணவன் ஆகிய 22-190
> வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி 
"ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன்" என 
ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின் 
மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன் 
உதயகுமரன் ஒழியானாக 
ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி 
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து 
காயசண்டிகை தன் கணவன் ஆகிய 
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் 
"விஞ்சை மகள்பால் இவன் வந்தனன்" என 22-200
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி 
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து 
ஈங்கு இவன் தன்னை எறிந்தது" என்று ஏத்தி 
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் 
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி 
'யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத் 
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன் 
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் 
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் ` 
"மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் 22-210
துயர் வினையாளன் தோன்றினான்" என்பது 
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம் 
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி 
கணிகை மகளையும் காவல் செய்க' என்றனன் 
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் 22-215
23. சிறை விடு காதை
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் 
நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி 
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் 
திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் 
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் 
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் 
இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி 
கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி 
அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத் 
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி 23-010
'கொற்றம் கொண்டு குடி புறங்காத்து 
செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் 
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து 
"செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க" என 
மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு 
நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே 
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று 
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது? 
மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் 
துன்பம் கொள்ளேல்' என்று அவள் போய பின் 23-020
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி 
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து 
'வஞ்சம் செய்குவன் மணிமேகலையை' என்று 
அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள் 
'பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து 
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் 
கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற 
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும் 
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச் 
சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச் 23-030
'சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் 
மறப்பின் பாலார் மன்னர்க்கு' என்பது 
அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச் 
செறிந்த சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல 
'என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி 
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்' என்று 
அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு 
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு 
'அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம் 
எறிதரு கோலம் யான் செய்குவல்' என்றே 23-040
மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள் 
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக் 
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் 
'வல்லாங்குச் செய்து மணிமேகலை தன் 
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப் 
புணர் குறி செய்து "பொருந்தினள்" என்னும் 
பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை' என்றே 
காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப 
ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த 
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும் 23-050
'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து 
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி 
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப 
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி 
'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் 
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று 
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின் 
'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று 
'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என 
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப 23-060
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த 
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப 
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி 
செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன் 
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது 
பொன் நேர் அனையாய்! பொறுக்க" என்று அவள் தொழ 
'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய 
ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை 
அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண 
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் 23-070
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு? 
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை 
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? 
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை 
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே? 
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் 
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது 
அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி! 
எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் 
மற்று உன் மகனை மாபெருந்தேவி 23-080
செற்ற கள்வன் செய்தது கேளாய் 
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை 
உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை 
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி 
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே 
"யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின் 
பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என 
மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா 
தெய்வக் கட்டுரை தௌிந்ததை ஈறா 
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து 23-090
மற்றும் உரை செயும் மணிமேகலை தான் 
'மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் 
அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன் 
கல்லாக் கயவன் கார் இருள் தான் வர 
நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன் 
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ 
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது? 
அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும் 
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் 
காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து 23-100
தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால் 
தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து 
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் 
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக் 
காருக மடந்தை கணவனும் கைவிட 
ஈன்ற குழவியொடு தான் வேறாகி 
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி 
புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன் 
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க 
ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான் 23-110
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் 
நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும் 
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக் 
கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப 
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி 
பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி 
உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு 
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் 
கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி 
கடாஅ யானைமுன் கள் காமுற்றோர் 23-120
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது 
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது 
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் 
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் 
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? 
'களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர் 
இள வேய்த் தோளாய்க்கு இது' என வேண்டா 
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை 
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் 
கற்ற கல்வி அன்றால் காரிகை! 23-130
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் 
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் 
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் 
திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர் 
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் 
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் 
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என 
ஞான நல் நீர் நன்கனம் தௌித்து 
தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து 
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2 23-140
அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப 
தேறு படு சில் நீர் போலத் தௌிந்து 
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி 
ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள் 
தான் தொழுது ஏத்தி 'தகுதி செய்திலை' 
காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் 
மாபெருந்தேவி' என்று எதிர் வணங்கினள் என்

12. அறவணர்த் தொழுத கதை
ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள் யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய் நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும் மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் 12-010
ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும் அளித்த பிறப்பின் ஆகிய கணவனை களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும் 'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால் பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும் 12-020
உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம் தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும் தெய்வம் போய பின் தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் 'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் 'போக' என மடந்தை போந்த வண்ணமும் மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் 12-030
மணிமேகலை உரை மாதவன் கேட்டு தணியா இன்பம் தலைத்தலை மேல் வர 'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம் ஆதி முதல்வன் அடி இணை ஆகிய பாதபங்கய மலை பரவிச் செல்வேன் கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் 12-040
"மா பெருந் தானை மன்ன! நின்னொடும் தேவியர் தமக்கும் தீது இன்றோ?" என அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப "பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன் 12-050
ஆடும் கூத்தியர் அணியே போல வேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' என மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் 'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய் தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல் அறம் பெருகாதாகி இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு 12-060
செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டு என உணர்தல் அல்லது யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது சலாகை நுழைந்த மணித் துளை அகவையின் உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும் ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச் சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் 12-070
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில் பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி இரும் பெரு நீத்தம் புகுவது போல 12-080
அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம் உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம் கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப் புத்த ஞாயிறு தோன்றும்காலை திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா 12-090
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் 12-100
போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன் மடக்கொடி! மாதர் நின்னால் வருவன இவ் ஊர் ஏது நிகழ்ச்சி யாவும் பல உள ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்! ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும் பாதபங்கய மலை பரசினர் ஆதலின் ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு 12-110
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப் பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய் ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும் தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என் 12-121
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய் வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி தென் திசைக் குமரி ஆடி வருவோள் சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க 13-010
தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர நாவான் நக்கி நன் பால் ஊட்டி போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு "ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே காதலி தன்னொடு கைதொழுது எடுத்து 13-020
"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி மார்பிடை முந்நூல் வனையாமுன்னர் நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில் குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக் 13-030
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து "கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும் உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன் கல் அதர் அத்தம் கடவாநின்றுழி அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம் 13-040
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி "ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக் காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் "நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் 13-050
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால் அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?" "பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ் 13-060
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும் "ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் நரி மகன் அல்லனோ கேசகம்பளன் ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் ஆவொடு வந்த அழி குலம் உண்டோ நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் 13-070
"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என "நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழியாட்டி மறை முறை எய்தி குமரி பாதம் கொள்கையின் வணங்கி தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை 'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என மா மறையாட்டி வரு திறம் உரைக்கும் 'வாரணாசி ஓர் மா மறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி 13-080
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கண் குமரி ஆடிய வருவேன் பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் 13-090
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து "மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ? சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப "ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே 13-100
தாதை பூதியும் தன் மனை கடிதர "ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை தான் சென்று எய்தி சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர் ஐயக் கடிஞை கையின் ஏந்தி மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி 13-110
'காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து கண்படைகொள்ளும் காவலன் தான் என் 13-115
14 பாத்திர மரபு கூறிய காதை
'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி "வயிறு காய் பெரும் பசி மலைக்கும்" என்றலும் ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த "கேள் இது மாதோ கெடுக நின் தீது" என யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத் 14-010
தேவி சிந்தாவிளக்குத் தோன்றி "ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய் நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது" என்றே தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும் "சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி! ஏனோர் உற்ற இடர் களைவாய்!" எனத் 14-020
தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 14-030
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி "இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க" என வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் "போம்" என்று எடுத்து உரை செய்வோன் "ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 14-040
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்?" என்றலும் "புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப 14-050
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் பரப்பு நீரால் பல் வளம் சுரக்க!" என ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன் ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் பன்னீராண்டு பாண்டி நல் நாடு மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப் பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 14-060
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமையது ஆக ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி ஊரூர் தோறும் உண்போர் வினாஅய் "யார் இவன்?" என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை "இருந்தாய் நீயோ!" என்பார் இன்மையின் திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 14-070
ஒரு தனி வரூஉம் பெருமகன் போல தானே தமியன் வருவோன் தன்முன் மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் "சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் ஊன் உயிர் மடிந்தது உரவோய்!" என்றலும் "அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து" என வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின் 14-080
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத் தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் "இழிந்தோன் ஏறினன்" என்று இதை எடுத்து வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் "மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம் என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன் சுமந்து என் பாத்திரம்?" என்றனன் தொழுது 14-090
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் "ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று" என விடுவோன் "அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் உளர்எனில் அவர் கைப் புகுவாய்" என்று ஆங்கு உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன் "என் உற்றனையோ?" என்று யான் கேட்பத் தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக் குட திசைச் சென்ற ஞாயிறு போல 14-100
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன் ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் 14-104

15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே! அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத் தண்ணென் சாவகத் தவள மால் வரை மண்முகன் என்னும் மா முனி இடவயின் பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து 15-010
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன் அடர்ப் பொன் முட்டை அகவையினான்" என பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் தற்காத்து அளித்த தகை ஆ அதனை ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத் தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு 15-020
ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன் பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து மண்அகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது "போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும் கண்டன சிறப்பு" என 15-030
சக்கரவாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் விரும்பினர் வியந்து "கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய அந்தில் பாவை அருளும் ஆயிடின் அறிகுவம்" என்றே செறி இருள் சேறலும் "மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்" என்று ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் 15-040
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி "மக்களை இல்லேன் மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை" என்று அவன் வளர்ப்ப அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான் துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ? அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் அலத்தல்காலை ஆகியது ஆய் இழை! 15-050
> வெண் திரை தந்த அமுதை வானோர் உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது' என மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும் மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் 15-060
கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி 'உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது திப்பியம்' என்றே சிந்தை நோய் கூர 15-070
மண மனை மறுகில் மாதவி ஈன்ற அணி மலர்ப் பூங் கொம்பு 'அகம் மலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து' எனக் 'குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண் ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று வான் தருகற்பின் மனை உறை மகளிரின் தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள் 15-080
> வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித் தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை மாதவன் தன்னால் வல் வினை உருப்ப சாவம் பட்டு தனித் துயர் உறூஉம் வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை எனும் காரிகை தான் என் 15-086
16. ஆதிரை பிச்சையிட்ட காதை
'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள் 'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய் சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி அணி இழை தன்னை அகன்றனன் போகி கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி "காணம் இலி" என கையுதிர்க்கோடலும் 16-010
வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் நாவாய் கேடுற நல் மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் "இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல் உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் 16-020
சாதுவன் தானும் சாவுற்றான்" என ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு "ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம் தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி "மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும் படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது 16-030
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத் "தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும் "ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் 16-040
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என் கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் 16-050
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன் தானே தமியன் வந்தனன் அளியன் ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும் மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின் 16-060
கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள் சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய் ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் நீ" என அவருடன் போகி கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் எண்கு தன் பிணவோடு இருந்தது போல பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக் 16-070
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் "ஈங்கு நீ வந்த காரணம் என்?" என ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் "அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து "வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும் "பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு 16-080
உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும் "மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் 'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர் 16-090
கண்டனை ஆக!" என கடு நகை எய்தி "உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர் இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள் உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 16-100
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ" என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து "கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும் 16-110
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும் "நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும் தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன் "ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம் ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப் "பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை 16-120
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து தன் மனை நன் பல தானமும் செய்தனன் ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என மனைஅகம் புகுந்து மணிமேகலை தான் 16-130
புனையா ஓவியம் போல நிற்றலும் தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர 'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என் 16-135
17. உலக அறவி புக்க காதை
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி 'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று 17-010
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும் எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் 17-020
'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக் காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன் விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத் தென் திசைப் பொதியில் காணிய வந்தேன் கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர் இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி 17-030
தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின் பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன் தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன் உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன் "சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் 17-040
பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்! அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித் துயர் உழந்து முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு உண்ணும் நாள் உன் உறு பசி களைக!" என அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை! வாடு பசி உழந்து மா முனி போய பின் பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என் 17-050
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி "ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால் காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை! வானூடு எழுக" என மந்திரம் மறந்தேன்! ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி 17-060
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் "சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர் ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் பல நாள் ஆயினும் நிலனொடு போகி அப் பதிப் புகுக" என்று அவன் அருள்செய்ய இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் இந்திர கோடணை விழவு அணி வரு நாள் வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே 17-070
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன் துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர் சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில் பலர் புகத் திறந்த பகு வாய் வாயில் உலக அறவி ஒன்று உண்டு அதனிடை ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் 17-080
இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி வல முறை மும் முறை வந்தனை செய்து அவ் உலக அறவியின் ஒரு தனி ஏறி பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி 17-090
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக் கருவி மா மழை தோன்றியதென்ன பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி 'ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது யாவரும் வருக ஏற்போர் தாம்!' என ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என் 17-098
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின் தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக் கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித் 'தீர்ப்பல் இவ் அறம்!' என சித்திராபதி தான் கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் 'கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர் இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது! 18-010
காதலன் வீய கடுந் துயர் எய்திப் போதல்செய்யா உயிரொடு புலந்து நளி இரும் பொய்கை ஆடுநர் போல முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம் கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந் தாது உண்டு நயன் இல் காலை வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம் 18-020
வினை ஒழிகாலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் தாபதக் கோலம் தாங்கினம் என்பது யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே? மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக் கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப் பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி 18-030
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப் பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின் சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர் மனைஅகம் புகாஅ மரபினன்' என்றே வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக் குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் 18-040
கடுந் தேர் வீதி காலில் போகி இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப் பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த் திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச 18-050
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித் திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் 'மாதவி மணிமேகலையுடன் எய்திய தாபதக் கோலம் தவறு இன்றோ?' என 'அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய நாடகம் விரும்ப நல் நலம் கவினிக் காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய 18-060
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து!' என ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் "மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி" என்று ஒழிவேன் முன்னர் காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த 18-070
முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம் அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப விருந்தின் மூரல் அரும்பியதூஉம் மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண் "அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு" என செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும் பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை "என் உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு" என்று இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப் 18-080
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் "செய் தவம் புரிந்த அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றனள் தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ? எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச் சித்திராபதி தான் சிறு நகை எய்தி 'அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்! காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்? மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி 18-090
ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும் மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த் தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்? கன்னிக் காவலும் கடியின் காவலும் தன் உறு கணவன் சாவுறின் காவலும் நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது 18-100
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் நாடவர் காண நல் அரங்கு ஏறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச் செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப் பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப் பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல் 18-110
கோன்முறை அன்றோ குமரற்கு?' என்றலும் உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி காடு அமர் செல்வி கடிப் பசி களைய ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத் தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும் இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி 'உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் 18-120
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என தானே தமியள் நின்றோள் முன்னர் யானே கேட்டல் இயல்பு' எனச் சென்று 'நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? சொல்லாய்' என்று துணிந்துடன் கேட்ப 'என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் தன் அடி தொழுதலும் தகவு!' என வணங்கி 'அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் 18-130
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல் நன்றி அன்று!' என நடுங்கினள் மயங்கி 'கேட்டது மொழியேன் கேள்வியாளரின் தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு 18-140
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ கேட்டனை ஆயின் வேட்டது செய்க!' என வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி முத்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு 'ஆடவர் செய்தி அறிகுநர் யார்?' எனத் தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி மாய விஞ்சை மந்திரம் ஓதிக் காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் மணிமேகலை தான் வந்து தோன்ற 18-150
அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக் குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் 'பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த காயசண்டிகை தன் கையில் காட்டி மாயையின் ஒளித்த மணிமேகலை தனை ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்? ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்! இன்னும் கேளாய் இமையோர் பாவாய்! பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும் 18-160
அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும் முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும் குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக் கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த மதி வாள் முகத்து மணிமேகலை தனை ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன் இது குறை' என்றனன் இறைமகன் தான் என் 18-172
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற 'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன் நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் உதயகுமரன் உள்ளம் கலங்கி பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி "அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் 19-010
பை அரவு அல்குல் பலர் பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் "முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு நீல யானை மேலோர் இன்றிக் 19-020
காமர் செங் கை நீட்டி வண்டு படு பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப் பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின் உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட மறு இல் செய்கை மணிமேகலை தான் 19-030
'மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் காவலன் மகனோ கைவிடலீ யான்!' காய்பசியாட்டி காயசண்டிகை என ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி "ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து" என்றே நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம்' என முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த அமுதசுரபியை அங்கையின் வாங்கிப் 19-040
பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும் 'ஊட்டிய பாத்திரம் ஒன்று' என வியந்து கோட்டம் காவலர் 'கோமகன் தனக்கு இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் யாப்பு உடைத்தாக இசைத்தும்' என்று ஏகி 19-050
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் அடியில் படியை அடக்கிய அந் நாள் நீரின் பெய்த மூரி வார் சிலை மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக் கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக் பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய வரிக் குயில் பாட மா மயில் ஆடும் விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் 19-060
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மட மயில் பேடையும் தோகையும் கூடி இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி 'மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை இஃது ஆம்' என நோக்கியும் கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச் செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப் பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம்' என்றும் 19-070
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண் மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு வால் வீ செறிந்த மராஅம் கண்டு நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும் ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர் 19-080
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர் பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர் பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் 19-090
ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் பொருந்துபு நின்று திருந்து நகை செய்து குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும் பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் 'வம்' எனக் கூஉய் மகிழ் துணையொடு தன் செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும் 19-100
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும் வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும் பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும் ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக் கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப் 19-110
பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச் சந்தி மாண் வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120
முறம் செவி யானையும் தேரும் மாவும் மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர் சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி! ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி! வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை! கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர் 19-130
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழி எம் கோ மன்னவ!' என்றலும் 'வருக வருக மடக்கொடி தான்' என்று அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் 19-140
வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று 'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத் 'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்? யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும் 'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி! விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை! வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக! தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது 19-150
ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர் தெய்வம் தந்தது திப்பியம் ஆயது யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது' என 'யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு?' என்று வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும் 'சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர்க்கு ஆக்குமது வாழியர்!' என அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் 19-162
20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
அரசன் ஆணையின் ஆய் இழை அருளால் நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம் தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான் யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப் பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம் 20-010
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் கேட்டனன் ஆகி 'அத் தோட்டு ஆர் குழலியை மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் பொதியில் நீங்கிய பொழுதில் சென்று பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன்' என்றே மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய 20-020
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் 'மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக் கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான் மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள் காயசண்டிகை!' எனக் கையறவு எய்தி காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன் ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து பூத சதுக்கமும் பூ மரச் சோலையும் மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் 20-030
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு 'இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் ஆனைத்தீ நோய் அரும் பசி களைய வான வாழ்க்கையர் அருளினர்கொல்?' எனப் பழைமைக் கட்டுரை பல பாராட்டவும் விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி உதயகுமரன் தன்பால் சென்று நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி 20-040
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது விறல் வில் புருவம் இவையும் காணாய் இறவின் உணங்கல் போன்று வேறாயின கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ நிரை முத்து அனைய நகையும் காணாய் சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின 20-050
இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண் உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும் பை போல வீழ்ந்து வேறாயின தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய் நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய் 20-060
வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் ஆவக் கணைக்கால் காணாயோ நீ மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ தளிர் அடி வண்ணம் காணாயோ நீ முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்!' என விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும் 20-070
'தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள் ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை ஈங்கு ஒழிந்தனள்' என இகல் எரி பொத்தி மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் 20-0810
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும் களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் 'வளை சேர் செங் கை மணிமேகலையே காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ் வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள் இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து 20-090
வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை உயாவுத் துணையாக வயாவொடும் போகி ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து வேழம் வேட்டு எழும் வெம் புலி போல கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து வேக வெந் தீ நாகம் கிடந்த போகு உயர் புற்று அளை புகுவான் போல ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த 20-100
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் 'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத் தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி 'காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல்' என்றே அவள்பால் புகுதலும் நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக் 20-110
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் 'அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன! மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி வானம் போவழி வந்தது கேளாய் அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால் வரை மீமிசைப் போகார் போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள் சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம் விந்தம் காக்கும் விந்தா கடிகை 20-120
அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள் ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய் வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன! அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்' என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129
21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின் குடவயின் அமைத்த நெடு நிலை வாயில் முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில் கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும் கேட்டனள் எழுந்து 'கெடுக இவ் உரு' என தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித் 21-010
'திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் 21-020
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காயசண்டிகை வடிவு ஆனேன் காதல! வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் வெவ் வினை உருப்ப விளிந்தனையோ!' என விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும் 'செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்! அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்! நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம் மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் 21-030
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் கண்ட பிறவியே அல்ல காரிகை தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்! என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும் பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் 'பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன் விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன் திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும் 21-040
நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான் விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின் பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு!' என 'ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள்' எனத் தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும் 'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் பிரமதருமனைப் பேணினிராகி 21-050
"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல் வேலை வேண்டினம்" என்றலும் மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்றத் தோளும் தலையும் துணிந்து வேறாக வாளின் தப்பிய வல் வினை அன்றே 21-060
விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு இராகுலன் தன்னை இட்டு அகலாதது "தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய அவல வெவ் வினை" என்போர் அறியார் அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத் தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும் ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை 21-070
ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்! மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக் காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும் இடு சிறை நீக்கி இராசமாதேவி கூட வைக்கும் கொட்பினள் ஆகி மாதவி மாதவன் மலர் அடி வணங்கித் தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு 21-080
காதலி நின்னையும் காவல் நீக்குவள் அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் தீவதிலகையின் தன் திறம் கேட்டு சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் 21-090
பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் "இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும் முறைமையின் படைத்த முதல்வன்" என்போர்களும் "தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும் "துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு இன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும் "பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும் 21-100
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம் அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள் "இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப் பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி" எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு ஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை "ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை" 21-110
என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்! "அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை "தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் வாயே" என்று மயக்கு ஒழி மடவாய் வழு அறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ? அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்! முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும் 21-120
முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்! மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்! 21-130
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் மாந்தர் அறிவது வானவர் அறியார் ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன் ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ? அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் 21-140
மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு' என "தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள் ஈறு கடைபோக எனக்கு அருள்?" என்றலும் துவதிகன் உரைக்கும்' சொல்லலும் சொல்லுவேன் வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்! மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த 21-150
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின் செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப் பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம் அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும் ஏது நிகழ்ச்சி யாவும் பல உள 21-160
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள் தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து "மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றும்காறும் செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும் தாயரும் நீயும் தவறு இன்றுஆக 21-170
வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்!" என ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத் தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை! 21-180
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்! ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே உவவன மருங்கில் நின்பால் தோன்றி மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி அவதி அறிந்த அணி இழை நல்லாள் வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் 21-190
22. சிறை செய் காதை
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் உதயகுமரற்கு உற்றதை உரைப்ப சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து மாதவர் எல்லாம் மணிமேகலை தனை 'இளங்கொடி! அறிவதும் உண்டோ இது-' என துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து 22-010
மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு 'உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய! வேலும் கோலும் அருட்கண் விழிக்க! தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி! நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே! இன்றே அல்ல இப் பதி மருங்கில் கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து 22-020
பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும் நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும் தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர் பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால் "மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக் கன்னி ஏவலின் காந்த மன்னவன் "இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ "நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக் காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் 22-030
இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன் ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய் "அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின் பரசுராமன் நின்பால் வந்து அணுகான் அமர முனிவன் அகத்தியன் தனாது துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் ககந்தன் காத்தல்! காகந்தி" என்றே இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள் தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம் 22-040
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகி காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் "நீ வா" என்ன நேர் இழை கலங்கி "மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன் முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் 22-050
"கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன் கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் வான் தரு கற்பின் மனையறம் பட்டேன் யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீ" எனச் சேயிழை அரற்றலும் மா பெரும் பூதம் தோன்றி "மடக்கொடி! நீ கேள்" என்றே நேர் இழைக்கு உரைக்கும் "தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் பெரு மழை" என்ற அப் 22-060
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்! பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி கடவுள் பேணல் கடவியை ஆகலின் மடவரல்! ஏவ மழையும் பெய்யாது நிறை உடைப் பெண்டிர் தம்மே போல பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை! ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக் 22-070
கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம் மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் பின்முறை அல்லது என் முறை இல்லை ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு" என இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப் பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் தாதை வாளால் தடியவும் பட்டனன் இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த 22-080
மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே! தருமதத்தனும் தன் மாமன் மகள் பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித் தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் "மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ புனையா ஓவியம் புறம் போந்தென்ன மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை உலக அறவியினூடு சென்று ஏறி 22-090
"இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்! உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ" என "மா நகருள்ளீர்! மழை தரும் இவள்" என நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும் "தெய்வம் காட்டித் தௌித்திலேன் ஆயின் மையல் ஊரோ மன மாசு ஒழியாது மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன் இப் பிறப்பு இவனொடும் கூடேன்" என்றே நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் 22-100
தருமதத்தனும் தந்தையும் தாயரும் பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி "தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய்" என நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத் தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் தருமதத்தனும் "தன் மாமன் மகள் விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக!" எனக் கொண்ட விரதம் தன்னுள் கூறி 22-110
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் அந்தணாளன் ஒருவன் சென்று "ஈங்கு என் செய்தனையோ இரு நிதிச் செல்வ? 'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் புத்தேள் உலகம் புகாஅர்' என்பது கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின் நீட்டித்திராது நின் நகர் அடைக!" எனத் 22-120
தக்கண மதுரை தான் வறிது ஆக இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே! மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பால் சென்று "நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன 22-130
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ? உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய் இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன் இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத் துணை ஆவது தானம் செய்' என தருமதத்தனும் மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி 22-140
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள் அமரன் அருளால் அகல் நகர் இடூஉம் படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல் மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச் சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த விரி பூ மாலை விரும்பினன் வாங்கி 22-150
"தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம்" என எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய செங் கை நீலக் குஞ்சி நீங்காது ஆகலின் "ஏறிய செங் கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு" எனக் ககந்தன் கேட்டுக் கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழி எம் கோ மன்னவ! என்று 22-160
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் "இன்றே அல்ல" என்று எடுத்து உரைத்து நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர் இன்றும் உளதோ இவ் வினை? உரைம்' என வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப 'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் 'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் கடியப் பட்டன ஐந்து உள அவற்றில் 22-170
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளாது ஆகும் காமம் "தம்பால் ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்" என நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் நீங்கார் அன்றே நீள் நில வேந்தே! தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள் காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் 22-180
முற்றா முலையினள் முதிராக் கிளவியள் "செய்குவன் தவம்" என சிற்றிலும் பேர் இலும் ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும் நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமம் காழ்கொள ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் காயசண்டிகை தன் கணவன் ஆகிய 22-190
> வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி "ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன்" என ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின் மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன் உதயகுமரன் ஒழியானாக ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து காயசண்டிகை தன் கணவன் ஆகிய வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் "விஞ்சை மகள்பால் இவன் வந்தனன்" என 22-200
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து ஈங்கு இவன் தன்னை எறிந்தது" என்று ஏத்தி மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி 'யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத் தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் ` "மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் 22-210
துயர் வினையாளன் தோன்றினான்" என்பது வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம் ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி கணிகை மகளையும் காவல் செய்க' என்றனன் அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் 22-215
23. சிறை விடு காதை
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத் தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி 23-010
'கொற்றம் கொண்டு குடி புறங்காத்து செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து "செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க" என மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது? மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பம் கொள்ளேல்' என்று அவள் போய பின் 23-020
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து 'வஞ்சம் செய்குவன் மணிமேகலையை' என்று அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள் 'பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும் அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச் சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச் 23-030
'சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு' என்பது அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச் செறிந்த சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல 'என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்' என்று அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு 'அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல்' என்றே 23-040
மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக் கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் 'வல்லாங்குச் செய்து மணிமேகலை தன் இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து "பொருந்தினள்" என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை' என்றே காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும் 23-050
'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி 'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின் 'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று 'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப 23-060
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன் என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது பொன் நேர் அனையாய்! பொறுக்க" என்று அவள் தொழ 'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் 23-070
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு? பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே? உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி! எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் மற்று உன் மகனை மாபெருந்தேவி 23-080செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே "யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின் பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தௌிந்ததை ஈறா உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து 23-090
மற்றும் உரை செயும் மணிமேகலை தான் 'மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன் கல்லாக் கயவன் கார் இருள் தான் வர நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன் ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது? அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும் சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து 23-100
தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால் தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக் காருக மடந்தை கணவனும் கைவிட ஈன்ற குழவியொடு தான் வேறாகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான் 23-110
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும் சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக் கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி கடாஅ யானைமுன் கள் காமுற்றோர் 23-120
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? 'களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர் இள வேய்த் தோளாய்க்கு இது' என வேண்டா மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் கற்ற கல்வி அன்றால் காரிகை! 23-130
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என ஞான நல் நீர் நன்கனம் தௌித்து தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2 23-140
அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப தேறு படு சில் நீர் போலத் தௌிந்து மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி 'தகுதி செய்திலை' காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந்தேவி' என்று எதிர் வணங்கினள் என்

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.