LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

முதல் அங்கம்: மூன்றாம் களம்

     இடம்: கொலு மண்டபம்
    காலம்: காலை
    (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாக்ஷித்திருக்க)

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவகன்:    நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
தமக்குச் சரியா மிடத்திற் றங்குக.
எங்கே யாகினுந் தங்குக நமக்கென்?
ஆவலோ டமைத்த நம் புரிசைய யவர்மிகக்
கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்?
குறைவென்? குடில! கூறாய் குறித்தே.
குடிலன்:    குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ!
நறையார் வேப்பந் தாராய்! நமதிடங்
கூட லன்றெனுந் குறையொன் றுளது
நாடி லஃதலா னானொன் றறியேன்.
மேனுந் தவசிகள் வேடந் தாங்கினோர்
ஆலயம் ஒன்றையே அறிவர் முன்னொரு
கோவி லமைத்ததிற் குறைவிலா உற்சவம்
ஓவ லிலாதே உஞற்றுமி னென்றவர்
ஏவினர். அஃதொழித் தியற்றின மிப்புரி.
தலா லிங்ஙனம் ஓதினர். அதனை
அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
ஒழுக்க மன்றோ குருவன் றோவவர்?
ஜீவ:     ஐயரும் அழுக்க றடைந்தார் மெய்ம்மை
கோவில் தானா காவலர் கடமை?
கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ!
குடில:     அதிசய மன்றுபூ பதியே! இதுவும்
துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர்.
மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு
மனோகர மாகிய சினகர மொன்றில்
உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும்
நிலைபெறா நிரம்பா தவர்க்குள வாசை.
வசிட்டர் முன்னவர் வாளாப் புகைத்தனர்
முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்
கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன்
பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால்
புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன்
முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்
இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?
ஜீவ: :    ஒவ்வும்! ஒவ்வும்! நீ உரைத்தது முற்றும்.
நாராயணன்:     (தனதுள்)
ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப்
பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில்
எடுப்பார் கைப்பிள்ளை, தடுப்பார் யாரோ?
(நேரிசை வெண்பா)
நாரா:     (அரசனை நோக்கி)
கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா
வெறுமெலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல
உறுமுவதென் நீயே யுரை
[சேவகன் வர]
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
சேவகன்:    மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.
ஜீவ:     வரச்சொல் சேவக!
(நாராயணனை நோக்கி)
உரைத்தநின் உவமையிற்
சற்றே குற்ற முள்ளது நாரணா!
குடில: (தனதுள்)    அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன்.
(அரசனை நோக்கி)
வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்
குற்றங் காணக் குறுகுதல் முற்றும்
மணற்சோற் றில்கல் தேடுதல் மானும்
[சகடர் வர]
ஜீவ:     (சகடரை நோக்கி)
சுகமோ யாவரும் முதிய சகடரே!
மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
ஆயின தன்றோ?
சகடர்:     ஆம்! ஆம்! அடியேன்.
ஜீவ: :     மேயின விசேடமென்? விளம்புதிர். என் குறை
சகடர்:     அறத்தா றகலா தகலிடங் காத்துப்
பொருத்ததோட் புரவல! உன்குடை நீழற்
பொருந்து மெங்கட் கரந்தையு முளதோ?
சுகமிது காறும் அகமகிழ் வுற்றுன்
மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே
எந்தன் புதல்வி வாணியை வதுவையிற்
கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது
முடிக்கநின் கருணையே முற்றும் வேண்டுவனே.
ஜீவ:     சீலஞ் சிந்தை கோல் மனைத்துஞ்
சாலவும் பொருந்தும் சகடரே! அதனால்
களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில!
ஒளித்ததென் நீ உரையா தெமக்கே?
குடில:     ஆவ தாயின் அறிவியா தொழிவனோ?
ஜீவ:    இடையூ றென்கொல்? இடியே றன்ன
படையடு பலதே வன்றான் ஏதோ
விரும்பினன் போலும் வேறோர் கரும்பே!
குடில:     இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்!
சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக
ஜீவ:     என்னை? சகடரே இடையூ றென்னை?
சகட:     பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும்
அடியனேன் சொல்பழு தாயின தில்லை.
முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல்
ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள்.
ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள்.
விரிதலைப் பேய்போல் வேண்டிய விளம்பியும்.
ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்;
நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை;
என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும்
இன்னல் தருவதொன் றில்லை, தாதையர்
மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர்
எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ!
உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர்
தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்.
நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல்
தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை.
என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க
மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின்
இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச்
[கண்ணீர் துளிக்க]
செல்ல விடையளி செல்லதுங் காசி.
ஜீவ:     ஏனிது சகடரே! என்கா ரியமிது!
தேன்மொழி வாணி செவ்விய குணத்தான்
காணி லுரைப்பாம் வீணிவ் வழுகை.
நாராயணன்: (தனதுள்)    பாதகன் கிழவன் பணத்திற்காக
ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான்,
ஓதுவங் குறிப்பாய், உணரி னுணர்க.
(நேரிசை வெண்பா)
(அரசனை நோக்கி)
மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ
ஏற்றியநாண் விற்பூட்டுமேந்தலே- சோற்றதற்காய்த்
தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில்
என் மகிமை யுள்ளா னினி.
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
ஜீவ:     தனிமொழி யென்னை?
நாரா:     சற்றும் பிசகிலை.
நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும்.
ஜீவ:     காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய்
கிழவனின் அழுகை.
நாரா:     சிலவரு டந்தான்
நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை
ஜீவ:     விடு,விடு, நின்மொழி யெல்லாம் விகடம்.
[நாராயணன் போக]
(சகடரை நோக்கி)
அறிவிர்கொல் அவளுளம்?
சகட:     
    சிறிதியா னறிவன்
    திருநட ராசனென் றொருவனிங் குள்ளான்
    பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள்
    சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.
குடில:     (அரசனை நோக்கி)
நல்லதப் படியே நடக்கிலேன்? இவர்க்கும்
பொல்லா முரண்டேன்?
சகட:     (குடிலனை நோக்கி)
போம்! போம்! உமது
குழந்தையேல் இங்ஙனங் கூறீர்! முற்றும்,
இழந்திட வோவெனக் கித்தனை பாடு?
பூவையை வளர்த்துப் பூனைக்கீயவோ?
(அரசனை நோக்கி)
காவலா! அவனைப் போலயான் கண்டிலன்;
சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான்;
தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்;
எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்;
பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்;
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
ஜீவ:     ஆமாம்! யாமுங் கண்டுளேஞ் சிலகால்
நின்றால் நின்ற படியே; அன்றி
இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்;
சிரிக்கினும் விழிக்கினும் நலமலை தீயதே.
அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில்..
குடில:     அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்.
ஜீவ:     அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே;
எங்கவன் இப்போது?
குடில:     
    இங்குளன் என்றனர்.
    சிதம்பரத் தனுப்பினேன்; சென்ரிலன் நின்றான்;
    இதந்தரு நின்கட் டளையெப் படியோ?
ஜீவ:     மெத்தவும் நன்மை அப்படி யேசெய்
குடில:     சித்தம்; ஆயினும் செல்கிலன்; முனிவர்
பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்,
ஜீவ:     சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
(சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம் விடுமினித் துயரம்;
சகட:     இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி;
திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
[சகடர் போக, செவிலி வர]
ஜீவ:     (செவிலியின் முக நோக்கி)
என்னை இவள் முகம் இப்படி இருப்பது
தோற்றம்நன் றன்றே!
செவிலி:     நேற்றிரா முதலா-
ஜீவ:     பிணியோ என் கண்மணிக்கு?
செவிலி:     
    பிணியா
    யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம்
ஜீவ:     சுரம்! சுரம்! ஓ! ஓ! சொல்லுதி யாவும்
அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும்
வந்துவா றென்னை? நடந்தவா றென்னை?
செவிலி:    அறியேம் யாங்கள், ஐய! அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
நம்மனை புகுந்த செல்வி, எம்முடன்

மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
நிலவொளி நீந்திநம் நெடுமுற் றத்துப்

பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
துணைபுண ரன்னத் தூவி யணை மிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ -
"நண்ப! என்னுயிர் நாத' வென் றேங்கிப்
புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்

துண்ணென யாந் துயி லகற்றப் புக்குழி
குழலுஞ் சரியும்; கழலும் வளையும்;
மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெரியும்;

நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்;
இவ்வழி வவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நொந்தேம்; செய்கட நேர்ந்தேம்;
அயினிநீர் சுழற்றி அணிந்தேம்; பூதி;
மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்,
எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவா மம்மர் வளர்க்கக் கண்டு
நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
"கா கா இவளைக் கா' வெனக் கரைந்த;
சேவலுந்த் திகைத்துத் திசை திசை கூவின;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
அரச! நீ அறியிலெஞ் சிரசிரா வென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்;
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்;
எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியேம்;

பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்;
ஏது மறியாப் பேதை! நேற்றுத்
தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக்
காதனோய் காணவோ ரேதுவு மில்லை,
எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ

வந்தே காண்குதி மன்னவ ரெறே!
ஜீவ:     ஆ! ஆ! நோவிது காறுமொன் றறிகிலள்
இதுவென் புதுமை? என்செய் கோயான்?
குடில:     தவஞ்செய சை யென்றுதாய் நவின்ற
வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்

செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்
நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
அறியலாந் தகைத்தோ?
ஜீவ:     
    வறிதவ் ஐயம்
    மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி
    அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்;
    ஆசி பேசியங் ககலுங் காலை
    ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர்
    அறையுட நங்கணந் திறவுகோ லோடு
    தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே.
    நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
    என்னோ அறியேன் விளைவு?
    [ஜீவகனும் செவிலியும் போக]
குடில:     (தனதுள்)
யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்?
அவ்வள வறிவி லாரோ முனிவர்?
அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்
எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின்
இத்திறங் காமம் என்பதிங் கறியான்;
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.
[குடிலன் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.