LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

முதல் அங்கம் : முதற் களம்

        இடம்: பாண்டியன் கொலு மண்டபம்
    காலம்: காலை
    (சேவகர்கள் கொலு மண்டபம் அலங்கரித்து நிற்க)

(நேரிசை ஆசிரியப்பா)
1ம் சேவ:    புகழ்மிகு அருமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின். சீரிதே
2ம் சேவ:    அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்
எவ்விடம் வைத்தனை?
3ம் சேவ:     ஈதோ! நோக்குதி.
4ம் சேவ:    அவ்விடத் திருப்பதென்?
3ம் சேவ:     ஆரம் பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்,
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
"சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது, கேண்மின்!"
2ம் சேவ:     முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்!
4ம் சேவ:     எத்தனை பத்தி! எத்தனை கூட்டம்!
எள்விழற் கிடமில்லை. யான்போய்க் கண்டேன்!
3ம் சேவ:     உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்.
1ம் சேவ:    அரசனும் ஈதோ அணைந்தனன். காணீர்!
ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!
[ஜீவகன் வர]
யாவரும்: (தொழுது)     ஜய! ஜய! விஜயே! பவரா ஜேந்திரா!!
[சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,
நகரவாசிகள் முதலியோர் வர]
ஜய! ஜய! விஜய! தவராஜேந்திரா!!
ஜீவகன்     வருக! வருக! குருகிரு பாநிதே!!
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்? தீதற வாதனத்து
இருந்தருள் இறைவ! என்பவ பாசம்
இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
[ஜீவகன் பாதபூஜை செய்ய]
சுந்தர:     வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர்
சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க!
சுகமே போலும், மனோன்மணி?
ஜீவ:     சுகம். சுகம்.
சுந்தர:     இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
ஜீவ:     உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
கூடல் மாநகர் குடிவிட்டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன நின்வரண். இமைப்பரு தேவருங்
கடக்கரும் இதன் றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமெக்கெலாம்
அத்த! நின் அருள்போல் அரணெது! குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே.
குடிலன்     ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தி!
நீயறி யாததொன் றில்லை; ஆயினும்.
உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ;

தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர்; அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது

மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
ஒருதலை யாக, உருவஞ் சிறிய

குருமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்.

வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழ்வெண் மருப்பும் வீசிக் காழகிற்
சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்

குங்கும முறித்துச் சங்கின மலருந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,

எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பொலிவுறல் கண்டனை
தொடுகடலோவெனெத்துணுக்குறும் அடையலர்
கலக்கத் தொல்லையுங் கட்செவிச் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவகழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந்தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.
வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய
எந்திரப் படைகளுந்த் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங்கிறிகளு மெண்ணில.
சுந்தர: (எழுந்து)    சம்போ! சங்கர! அம்பிகா பதேஎ!
நன்று மன்னவ! உன்றன் றொல்குலங்
காக்கநீ யாக்கிய இவையெலாம் கண்டுளேம்.
அல்லா துறுதி யுளதோ? சொல்லுதி!
ஜீவ:     என்னை! என்னை! எமக்கருள் குரவ!
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகை
கொள்ளுவ ரென்பதும் உள்ளற்பா ற்றோ?
ஆயினும் அரணி லுளபுரை நோக்கி
நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே
சுந்தர:     காலம் என்பது கறங்குபோற் சுழன்று
மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முன்மனம்
ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்
உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி
தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே!
அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்
அத்திரு வுறையும் அப்புறம் போதல்
கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.
ஜீவ:     ஆம்! ஆம்!சேவக அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே.
[அரசனும் முனிவரும், சீடரும் அப்புறம் போக]
குடிலன்: (தனதுள்)    நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!
(சேவகனை நோக்கி)
சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும்
யாவுமவ் வாயிலிற் கொணர்தி
சேவ:     சுவாமி!
[குடிலன் முதலியோர் போக]
முதல் நகர்வாசி :     கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை ஆ!ஆ! வியப்பே மிகவும்
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?
2ம் நக:     கேட்டோம்; கேட்டோம் நாட்டிற் கென்குறை
விடு!விடு! புராணம் விளம்பினன் வீணாய்.
3ம் நக:     குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்
அறியா தவரோ சிறிதா யினுமவன்
உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே
1ம் நக:     ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.
2ம் நக:     முனிவரங் கோதிய தென்னை? முற்றுந்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்
3ம் நக:     யாதோ
மனோன்மணி எனப்பெயர் வழங்கினர், அறிவைகொல்?
4ம் நக:     வாழ்த்தினர் போலும், மற்றென்?
2ம் நக:     பாழ்த்த இத்
தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்.
3ம் நக:     ஐயமற் றதற்கேன்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா அழகே யாக்கையா
மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையு னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரோ?
2ம் நக:     அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந்
தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்கள் தலைமிசைக் கொள்வர், தரணியில்
எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே
4ம் நக:     ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு
மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே
ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர்
அவ்வழி யேகுநர் போலும்
இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.