LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம்

     இடம்: திருவனந்தையிற் சேரன் அரண்மனை
    காலம்: காலை
    [புருடோத்தமன் சிந்தித்திருக்க]

(நேரிசை ஆசிரியப்பா)
புருடோ:    (தனிமொழி)
யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்!
வார்குழல் துகிலோடு சோர மாசிலா
மதிமுகங் கவிழ்ந்து நுதிவேற் கண்கள்
விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப
பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு
விரல்நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து
விண்ணணங் கனைய கன்னியர் பலரென்
கண்முன் நின்றங் கிரக்கினுங் கலங்காச்
சித்தம் மத்துறு தயிரில் திரிந்து
பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ?
எவ்வுல கினளோ? அறியேம் இணையிலா
நவ்வியும் நண்பும் நலனு முடையவள்
யார்கொலோ? நாள்பல வானவே. ஆ!ஆ!
விழிப்போ டென்கண் காணில்! வீண்! வீண்!
பழிப்பாம் பிறருடன் பகர்தல் பகர்வதென்?
கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ?
நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும்
பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை,
நாடொறும் ஒருதலை கூடி வளரும்
மதியென எழில்தினம் வளர்வது போலும்
முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில்
ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது
நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம்
பருகின தையோ! கரிய கூந்தலின்
கிறுசுருள் பிறைநிகர் நறுதற் புரளப்
பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச்
செவ்வரி படர்ந்த மைவிழி நெடுவிழி
உழுவலோ டென்முகன் நோக்க எழுங்கால்
என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி
வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய
சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம்
நாணோடு சிவக்க ஊர்கோள் நாப்பண்
தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி
சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி,
அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து
மந்தா காசந் தந்தவள் நின்ற
நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே!
தேவ கன்னியர் முதலாந் தெரிவை யர்
யாவரே யாயினும் என்கண் தனக்கு
மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ?
அறியுமா றிலையே! அயர்க்குமா றிலையே!
உண்டெனிற் கண்டிடல் வேண்டும் இலையெனில்
இன்றே மறத்தல் நன்றே. ஆம்! இனி
மறத்தலே கருமம் மறப்பதும் எப்படி?
போரெவ ருடனே யாயினும் புரியிலவ்
ஆராவா ரத்தில் அயர்போ மன்றி...
[சேவகன் வர]
சேவகன்:    எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில்
வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான்
புரு:     யாரவன்?
சேவகன்:     
    பேர்பல தேவனென்றறைந்தான்
புரு:     (தனதுள்)
சோரன்!
(சேவகனை நோக்கி)
வரச்சொல்!
(தனதுள்)
தூதேன்? எதற்கிக்
கயவனை கைதவன் அனுப்பினான்?
நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே.
[பலதேவன் வர]
பலதேவன்:    மங்கலம்! மங்கலம்! மலய மன்னவ!
பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத்
தன்தோள் தாரணி தாங்க எங்கும்
ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக்
குடங்கை யணையுறி குறும்பர் தூங்க
இடம்பார்த் தொதுங்குந்தடமுற் றத்து
மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும்
வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த
தூதியான், என்பே ரோதில் அவ்வழுதியின்
மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன்
பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன்
குடிலேந் திரன் மகன்.
புரு:     (தனதுள்)
மடையன் வந்ததென்?
பலதே:    அப்பெரு வழுதி யொப்பறு மாநகர்
நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும்
அரவின தரசும் வெருவி ஞெரேலெனப்
பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம்
ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந்
தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க்
கட்டிய மதிற்கணங் காக்க விடியத்து
எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின்
யந்திரப் படைகள் எண்ணில இயற்றி...
புரு:     வந்த அலுவலென்?
பலதே:     மன்னவா! நீயாள்
வஞ்சி நாடதற்கு தென்கீழ் வாய்ந்த
நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே?
எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு
பரவு பாடையும் விரவுமா சாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா...
புரு:     நல்லது! சொல்லாய்,
பலதே:     தொல்லையாங் கிழமைபா
ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த
வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு
எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள்
சதியாய் நீயர சாண்டாய்.
புரு:     அதனால்?
பலதேவ:     அன்னதன் உரிமை மீட்க உன்னியே
முதுநக ராமெழில் மதுரை துறந்து
நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி
கண்டினன் ஆங்கே.
புரு:     வேண்டிய தென்னை?
உரையாய் விரைவில்.
பலதேள்     உதியனும் செழியனும்
போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்?
பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி
எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள்
மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும்
அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள்
தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ்
சமர்செயி லுலகம் தாங்கா தென்றே
எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை
நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன்செய்நாடு
உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே
கடனெனக் கழறிப் பின்னிக ழுன்கருத்து
அறிந்து மீளவே விடுத்தான்.
புரு:     ஆ! ஹா!
முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய்
பலதே:     மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே!
சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம்
ஆழ்துயர் மூழ்கலும் அன்றி உங்கட்கு
ஏது விளையுமோ அறியேம் ஆதலின்
அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன்
வெஞ்சமர் விளைத்தல் நன்றல.
புரு:     (பயந்தாற் போல்) ஆ! ஆ!
பலதே:    நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும்
எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில்
உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில்
திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல்
ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண
விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது.
அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில்
தென்னவன் மனமும் திருந்தும் நன்செய்நா
டுன்னதும் ஆகும்.
புரு:     உண்மை! ஓஹோ!
வண்டு மலரிடை யணையஉன் நாட்டில்
கொண்டு விடுவரே போலும். நன்று!
கோதறு மிருபுறக் காதல் அன்றியெம்
நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம்
அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி.
பலதே:     (தனதுள்)
சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!
புரு:     ஆதலின் முடிவில்நீ ஓதிய தொழிக.
நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற
வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே
அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து
நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து
முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப்
புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க,
அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல
நாணே இறந்து நாணம் துறந்து
கெஞ்சுமெஞ் சபையில் அஞ்சா தெமது
நன்செய்நா டதனை நாவுகூசாமற்
பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும்
ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன்
என்றபே ரொன்றால் என்றே அறிகுதி.
கருதா துனையிங் கேவிய கைதவன்
ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி
யார்பகை இன்மையால் இதுகா றணிந்து
பார்வகித் தாளெனப் பகரா தறிவன்
விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும்
அரிக்குதே ரென்னநீ யறைந்த அரசனும்
இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும்
[சேவகனை நோக்கி]
அருள்வர தனையிங் கழையாய்! சேவக!
[அருள்வரதன் வர]
பலதே:     (தனதுள்) சிந்தனை முடிந்தது.
அருள்வரதன்:    வந்தனம்! வந்தனம்!
புரு:     நல்லது! செழியன் நெல்லையை நோக்கி
நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ்
வேளையா யத்தமாய் வைப்பாய்.
அருள்:     ஆஞ்ஞை
புரு:     (பலதேவனை நோக்கி)
செல்வாய் விரைவில். தென்னன் போர்க்கு
வல்லா னென்னில் வாரமொன் றிற்குள்
துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன
கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல்
முடிநம் அடியில் வைத்து நாமிடும்
ஆணைக் கடங்கி யமர்க எமதிடம்
வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு
வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே
எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்!
[பலதேவன் போக]
(தனதுள்)
முட்டாள் இவனை விட்டவன் குட்டுப்
பட்டபோ தன்றிப் பாரான் உண்மை.
பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம்.
எண்ண மேகினும் ஏகும் இனியே.
[புருடோத்தமன் போக]
(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அருள்:     தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு;
நேர்ந்து வெம்போர்.
யாவரும்:     வாழ்கநம் வேந்தே!
1-ம் படை:     நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி.
யாவரும்:    உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழிக உன்சொல்!
2-ம் படை:     பெரும்போர் இலாநாள் பிறவா நாளே.
3-ம் படை:     தெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும்.
4-ம் படை:     யாவரோ, பகைவர்? அருளா பரணா!
தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?
அருள்:     பாண்டியன்.
யாவரும்:     (இகழ்ச்சியாய்)
பாண்டியன்! சீச்சீ! பகடி
அருள்:    ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்...
யாவரும்:    வியப்பு! வியப்பு!
3-ம் படை:     வேற்றா ளொருவனென்
அயற்புறம் போனான். அவன் முகம் நோக்குழி
வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன்.
முதற்படை:    அவன்றான்! அவன்றான்! அவன்றான் தூதன்.
4-ம் படை:    யாதோ காரணம்? ஓதாய் தலைவ!
2-ம் படை:     அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ
செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சி!
அருள்:    நல்லது வீரரே! நாளை வைகறை
நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச்
செல்லற் குரியன திட்டம் செய்வான்
வல்லையில் ஏகுதும், மங்கலம் உமக்கே.
[அருள்வரதன் முதலியோர் போக]

இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

    அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள
    இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க
    உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புத்
    தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.