LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

மூன்றாம் அங்கம்: நான்காம் களம்

     இடம்: சுந்தர முனிவர் ஆசிரமம்
    காலம்: வைகறை
    [நிஷ்டாபரர், கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க]

(நேரிசை ஆசிரியப்பா)
நிஷ்டாபரர்:    ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்!
வேதவே தாதந்தம் ஓதிநீர் தௌிந்தும்
இரவெலாம் இப்படி இமையிமை யாதே
பரிதபித் திருந்தீர்! கருணா கரரே!
பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது!
போரிலை ஆயினென்? யாருறார் மரணம்?
எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்?
இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்?
ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில்,
எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள்
உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்?
சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும்.
குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி!
பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து
அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண்
தீயெழுத் திரித்துப் பேழ்வாய் திறந்து
கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி
விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின்
முன்னிரு கையில் வெந்நுறக் கிடத்தி,
மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப்
பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவ்ஈ
நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி
எய்யா தையோ! என்றழு குரலிங்கு
யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?
கைகால் மிகில்நம் மெய்வே றாமோ?
நோவும் சாவும் ஒன்றே. அன்றியும்
உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ?
பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற
எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும்
இரவியின் மண்டலத் தொருசிறு திவலை
பரவிய வானிடை விரவிய மீனினம்
இரவியில் எத்தனை பெரியதுஒவ் வொன்றும்!
இரவியும் இம்மீன் இனங்களும் கூடில்
ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல்
ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர்
ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே.
இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால்
உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில்
வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில்
ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த
நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை
ஏன்மிக? நாமிங் கோதிய மாலும்
ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப
அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில்
எப்படிப் பார்க்கினும் மிசையப் பேய்த்தேர்!
இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்?
நீர் யார்? நான் யார்? ஊரெது? பேரெது?
போரெனப் பொறுக்கலீர்! ஓ! ஓ! பாரும்!
மருவறு மாயா மகோததி யதனிற்
புற்புதம் அனைய பற்பல அண்டம்
வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி அதனைத்
தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்?
விடுத்திடும், விடுத்திடும், வீணிவ் விசனம்
இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம்
தன் தொழில் சலிப்புற இயற்றும்மற் றதனுள்
படுபவர் திரிகையுட் படிசிறு பயறே.
விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர்
அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர்.
யாரென் செய்வார்! யாரென் செயலாம்!
அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை
பிடித்திடிற் பின்நும் படிப்புன் ஞானமும்
குருட்ட ரசனுக்குக் கொளுத்திய விளக்கும்
இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன
ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்?
பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம்
மிக்கொளும் அதனால் விடுமுல கெண்ணம்
சுட்டதோர் சட்டிகை விட்டிடல் என்னத்
துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ!
மறக்கிற் சுயமே மறையும் மறைய
இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே
பிறக்கும் பிரத்தியப் பிரபோ தோதயம்!
நீரும் உலகமும் நிகழ்த்திய போரும்
யாருமங் கில்லை அகண்டசித் கனமாய்
எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்!
உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான்
உரைதரல் பிறவிக் குருடற் கொருவன்
பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த
கதையாய் முடியும்! அதனாற் சற்றே
பதையா திருந்துநீர் பாரும்
சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே.
கருணாகரர்:    சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற்
றிகம்பரம் இரண்டும் இல்லையெனில் ஏகுக.
யானென ஒருபொருள் உளதாம் அளவும்
ஞானதயாநிதி நங்குரு நாதன்
ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த
வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால்
ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு
மோனநற் சித்தியிம் முத்தியும் யாவும்
ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்!
பொய்யோ பாரும்! புரையறு குரவன்
பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை!
இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது!
செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும்
எப்படி நீரிங் கெய்தினேர் எல்லாம்
ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்
அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே!
சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம்
பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு
நிட்டையா யினுமென்? நிமலவ்ிீ டாய்ினென்?
ஆவா! யாம்முன் அல்லும் பகலும்
ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும்
ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும்,
பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும்;
மகிழ்கினும் துயருந் தழுகினும் சினகரம்
தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும்
எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும்
'நாமே உலகின் நடுநா யகம்நம்
சேமமே சகசிருட் டியினோர் பெரும்பயன்'
என்னஅங் கெண்ணி எமக்கெமக் கென்னும்
தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி
முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்!
தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத்
தீயிடைத் துடைத்தும்; சயஞ்சிறி தடையில்
வாய்மண் நிறைய மதக்குழி அதனுள்
குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்;
பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்
பிறர்பழி காண பெரிதக மகிழ்ந்தும்;
சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக்
காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்;
எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம்
நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம்
கொடும்பேய் ஆயிரம் கூத்தாட்டியவழி,
விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள்
"ஏ! ஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி
வா! வா! இங்ஙனம்" என மனம் இரங்கிக்
கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த
காமமா திகளுடன் கடும்போர் விளைக்க
ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள்
மேவிய காலை மெலிந்துகை யறுநம்
ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்?
சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை?
உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவௌி;
கோட்டையும் இல்லை. பூட்டுதாழ் அதற்கிலை;
நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்,
அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்;
அரைநொடி அதனுள் நரகென நம்முளம்
மாற்றிடக் கணந்தோறும் வருந்தீ நினைவோ
சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை.
இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்?
அருளா தரவால் யாதோ இங்ஙனம்
இருள்தீர்ந் திருந்தீர்; இலையெனில் நிலையெது?
விட்டதும் தொட்டதும் வௌிப்படல் இன்றி
நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்!
கட்டம்! கட்டம் காதலா மலகமாய்க்
கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்!
"யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?"
என்றீர் நன்றாய் நண்பரே! நம்நிலை
கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து
தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை
நமக்கென உரித்தோ? நானா உயிர்கள்
எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர்.
எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம்
தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில்,
அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று
விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம்
அறியில் அருளலாற் பிற்ிதெதுஆ கருஷணம்?
ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில்
நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை
பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக்
குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ?
பாரும்! பாரும்! நீரே கூறிய
சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை!
பூரிய உயிரிஃ தாயினும், தனது
சீரிய வலையிற் சிக்குண் டிறந்த
ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள்
ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி
மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தௌிய
அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்!
இப்படி முதற்படி இதுமுத லாநம்
ஒப்பரும் யாக்கையாம் உயர்படி வரையும்
கற்பதிங் கிந்நூற் கருத்தே, அதனால்
இத்தனி உலகில் எத்துயர் காணினும்
அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச்
சுற்றநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க
வைத்த அக்கினியென மதித்தலே, உயிர்கட்கு
உத்தம பக்தியென் றுள்ளுவர் ஒருகால்
காரண காரியம் காண்குவம் அல்லேம்,
யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்?
பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின்
அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர
நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென
நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர்
நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன்
உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மனம் உண்மையும் இலவேல்
எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம்
ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?
இவ்விதம் நோக்கிடில் எவ்விதத் தோற்றமும்
செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்
அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும்
சிற்றறி வாதலான் முற்றுநாம் உணரோம்.
அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங்
கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம்
உளதென நம்பலே யூகம் அதனால்
உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது
நலமுற நமக்கிங் கிலகா ததினாற்
பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர்
இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்?
யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்?
பாருமிங் கீதோ! பரம தயாநிதி
நங்குரு நாத னென்பார் ஒவ்வார்?
நம்புவன் நீரும் நானுமிங் கொருப்போல்
ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி
ஏதோ ஊழ்வினை இசைவால் தனது
காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும்
இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள்,
அல்லல் இதுவே போதும் அஃதுடன்,
அப்புரு டன்றான் ஆரென ஆயில்
ஒப்பரு புருடோத் தமனே என்ன
எப்படி நோக்கினும் இசையும், அப்படியே
செப்பினர் யாவும் தெரிந்த நம் குருவும்
ஏதோ ஒருவன் சூதா ஏவிய
தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்!
போர்புரிந் திடவரு புருடோத் தமனும்
வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில்
நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்!
இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை
ஒருவரை ஒருவர் உணர்த்திடப் பண்ணில்
வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும்
இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும்.
இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க
அப்படி ஒன்றும் அடிக ளெண்ணாமல்
சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு
அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே.
சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும்
நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை?
ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே.
என்றுநான் எண்ணி எம்குரு நாதன்
திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே
பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய
இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும்
செவ்வி திதுவெனத் தௌிதலோ தகுதி?
இப்படியேயாம் இவ்வுல கின்நிலை
அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற்
றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக்
கைப்படு கனியெனக் கண்டபின், உலகில்
எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள்
தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை?
இல்லா மாயை என்செய வல்லதாம்?
எல்லாம் அவனருள் அல்லா தில்லை.
என்னனு பவமிது. மன்னிய இவ்வருள்
தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து
நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி
இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர்
ஒருபயன் கருதார், அருள்கரு துவதென்?
அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச்
சகலமும் செய்வர். அஃதவர் சமாதி.
எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம்
அங்கம் கரையநின் றரற்றி "ஐயோ!
எம்மையும் காத்த இன்னருள் இவரையும்
செம்மையிற் காக்க" எனமொழி குளறி
அழுதுவேண் டுவதே அன்றி
விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே.
[சுந்தர முனிவரும் நடராசரும் வர;
கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க]
சுந்தர:     எல்லாம் நடராசரே! உமது பேரருளே!
அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை
இத்தினம் எப்படி முடியும் நீர் இலரேல்?
எத்தனை கருணை? என்னைகைம் மாறு?
நட :     நல்லது! நல்லது! சொல்லிய முகமன்!
வேலை எனதோ? உமதோ? விநோதம்;
ஏவிய வழியான் போவதே அல்லால்
ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே!
சுந்தர:    கருணா கரரே! களைப்பற நீரிங்கு
ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ
இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும்
செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ!
எத்தனை நாளா யினநீர் தூங்கி!
இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்!
பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர்;
எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்?
கருணா:    அடியேற் கலுப்பேன்? அருளால் அனைத்தும்
முடிவது மேலும், யான்வரும் வேளை
இட்டமாம் நிட்டா பரரும் தனியாய்
நிட்டைவிட் டெழுந்தார்; இருவரும் அதனால்
ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம்;
ஈதோ உதயமும் ஆனதே; இனியென்?
சுந்தர:    விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம்
படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம்.
உங்கள் பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே!
இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும்
சமயிகட் காம்சச் சரவு?
அமையும் உங்கட் கவரவர் நிலையே.
[யாவரும் போக]

மூன்றாம் அங்கம் : நான்காம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

    சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின்பந் தரமுயன்று
    தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே
    வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன்
    மாற்ற மனுபவம் வந்தபின் னன்று மதிப்பரிதே.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.