LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம்

     இடம்: ஊர்புறம், ஒருசார்
    காலம்: ஏற்பாடு
    [நடன், நடராஜன்]

(நேரிசை ஆசிரியப்பா)
நடராஜன்:     (தனிமொழி)
காலையிற் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும் வேண்டின் விரைவா
இன்றிரா முடிக்கினும் முடியும் துன்றராக்
கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதம்
பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம்
என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி.
அதனால் அன்றோ இதுபோல விரைவில்
இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது?
எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை
இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு
வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம்
ஈண்டெப் பொருள்தான் இலக்கற் றிருப்பது
இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி
அதன்சிறு பூக்குலை யடியோன் றுயர்த்தி
இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என்
தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே.
"இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில்
தழைப்பதற் கிடமிலை. சிறார்நீ பிழைப்பதற்கு
ஏகுமின் புள் ஆ எருதுஅயத் தொருசார்
சிக்கிநீர் சென்மின்!" எனத்தன் சிறுவரைப்
புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும்
பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும்
சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு
தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப,
ஆர்த்தெழு மன்பினாம் அனைத்தையும் கலந்துதம்
என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர்.
தமக்கூண் நல்கும் வயற்குபயோகம்,
எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்
செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!
புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்!
பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச்
சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
தன்வலிக் கடங்கிய மண் கல் புல்புழு
இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
சாலத் தரும்இவை எனவோர்ந் துருட்டிக்
கொண்டு சென்று இட்டுமற் றையா!
அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்
சென்றபின் பெருமலைச் சிகர முதலாக்
குன்றுவீ ழருவியாத் தூங்கியும், குகைமுகம்
இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும்
கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும்
ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்,
ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்,
மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்
பற்பல படியான் பட்டங் கீட்டியது
அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்;
இன்னமு மீதோ ஏகுவன் எனவிடை
பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
வந்திவண் அடைந்துமற் றிராப்பகல் மறந்து
நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்?

(நீரைக் கையாற் றடுத்து)
நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்!
இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி
நீரே! நீரே! என்னையுன் நிலைமை?
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?
நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?

(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)
ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்!
உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை.

விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை,
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வௌிகொணர்ந் தும்புகழ் வேண்டார்போல
ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்

இப்புற் பயிர்நீ இங்ஙனமே உழாயேல்
எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள

(நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி)
விழுப்புகழ் வேண்டலை, அறிவோம் ஏனிது?
துதிக்கலம். உன் தொழில் நடத்துதி. ஆ!ஆ!
எங்கு மிங்ஙனே இணையிலா இன்பம்
பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக்
காணார் பேணும் வாணாள் என்னே!

அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற்
சிதறிய குணக்கதிர் செறிந்து திரள
வைத்தசிற் றாடியின் மையமே யொத்த
உள்ளமும் உடலும் பெற்றுங் கள்வர்..
நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே!

சினக்கனல் எழும்பும் நமக்கேன் இச்சினம்?
கிருபணன் தீனன். விடுவிடு அஃதென?
என்கொல் அத்தோற்றம்? புகையோ? - மங்குலுக்கு
இந்நிறமில்லை. செந்நிறப் படாமென,
பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற்

கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன்
உருக்கிவிடுதற் குயர்த்திய ஆடகப்
பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப்
பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே
இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ

பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்?
இடியுருண் டதுபோல் எழுமொழி தேரொலி?
அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்?
வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்...
பொருதற் கன்றவன் வருவது சரிசரி

வதுவைக் கமைந்து வந்தான் போலும்
இதுவென்? ஓகோ? மணப்பாட்டன்றிது.
[வஞ்சி நாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம்
போகப் படைப்பாணர் பாட]
(வஞ்சித் தாழிசை)
படைப்பா:    அஞ்சலி லரிகாள்! நும்
சஞ்சிதப் பெருவாழ்வெம்
வஞ்சியன் சினத்தாற் கண்
துஞ்சிய கனவேகாண்
படைகள்:     
    ஜே! ஜே! ஜே!
பாணர்:     எஞ்சலில் பகைகாள்! நும்
மஞ்சுள மணிமகுடன்,
வஞ்சியன் சினத்தானீர்
கஞ்சியுண் கடிஞையேகாண்
படை:     
    ஜே! ஜே! ஜே!
பாணர்:    மிஞ்சிய பகைகாள்! நும்
துஞ்சிய பிதிர்க்கூட்டம்
வஞ்சியன் சினத்தாலென்
நெஞ்சிலும் நினையார்க்காண்
படை:     ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே!
(நேசிரியை ஆசிரியப்பா
தொடர்ச்சி)
நட :     பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும்,
வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும்
பாடிய பாட்டின் பண்ணும் தலைமிசைச்
சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை

பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில்
உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும்
இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில்
மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை

காட்டிய முகக்குறி யாவும் நன்றல.
வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ!
நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த
கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத
மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப்

பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச்
செல்லும் அசலத் திரளும் செறிந்து,
நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம்.
அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை
வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ!
[இரண்டுழவர்கள் வர]
1வது உழ:     வியப்பென்? சுவாமி!
நட :     வயப்படை வந்தது
அறிவையே நீயும்?
1வது உழ:    அறிவேன், போருக்கு
அழைத்திடில் யாவர் அணுகார்?
நட :     வழுதி
மணமொழி வழங்க அன்றோ விடுத்தான்?
2வது உழவ:    மணமொழி பிணமொழி யானது; குடிலன்
கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே!
நட:     செய்ததென்?
1வது உழவ:     ஐயா! அதுநாம் அறியோம்!
குடிலன் படிறன்; கொற்றவன் நாடும்
முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி
தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான்;
மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச்
சூதாய்த் துணைவரக் கூவினான்.
நட :     சீச்சீ!
ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான்;
பொய்பொய்; புகன்றதார்?
1வது உழ:     
    பொய்யல, பொய்யல
    ஐய! நானறைவது கேட்டி; எனது
    மைத்துன னவன்தாய் மரித்த மாசம்
    உற்றதால் அந்தத் திதியினை யுணரச்
    சென்றனன் புரோகித சேக்ஷைய னிடத்தில்,
    அன்று நாள் ஆதித்த வாரம்; அன்றுதான்
    (இரண்டாவது உழவனை நோக்கி)
    சாத்தன் உன்னுடன் சண்டையிட்டது.
    (நடராசனை நோக்கி)
    மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில்..
    (நாற்புறமும் நோக்கி, செவியில்)
    இருந்து பலபல இரகசியம் இயம்புவர்..
நட:     திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்
2வது உழ:    இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு
உற்ற ஜோசியர்.
1வத் உழ:     பொறு! யான் உரைப்பன்.
மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி
அருகே நின்றனன். அப்போ தறைவர்;
'மருகா! நேற்று மந்திரி மனைவி
பலபல பேச்சுப் பகருங் காலை,

பலதே வன்றன் ஜாதக பலத்தில்
அரச யோகம் உண்டென் றறைந்தது
விரைவில் வருமோ என்று வினவினள்;
வரும்வரும் விரைவில் என்றேன் யானும்
மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி

வதுவைக் கரியம் பேசினள் மற்றுஅது
நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள்
நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு
வருத்தமுற் றவள்போல் தோற்றினும் கருத்திற்
சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்".

எனப்பல இரகசியம் இயம்பி வலியோர்
மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள்
இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?"
எனஉரைத் திருவரு வெழுந்துபின் நகைத்தான்,
பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே

எனக்கிங்கிவையெலாம் இயம்பினன் உனக்குச்
சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும்
உண்டுமற் றவனைக் கண்டுநீ வினவே.
2வது உழ:     வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு
மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த்
தூதுவர் போகும் காலைத் தாக
ஏதுவால் இரும்படி இராமன் என்றவன்
தங்கை மனைக்கு வந்தவத் தருணம்
அங்கியான் இருந்தேன். "அரண்மனைச் செய்தி
என்ன?" என்றேற்கவன் இயம்பும், "மன்னன்
தெத்தெடுத் திடும்படி யத்தன் முண்' டென
"எப்போது யாரை?" என்றதற்கு ஒன்றுஞ்
செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான்.
1வது உழ:    பலதே வற்கிவன் நலமிகு சேவகன்.
2வது உழ:    குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம்
1வது உழ:    ஆயினும், நமக்க திழிவே; மேலும்
தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக்
குறுதுயர் ஒருவரும் ஆற்றார்
2வது உழ:     
    அறிவிலாத்
    தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்;
    சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை
    விடுமோ? சொல்லாய்.
1வது உழ:     
    விதியெனப் பலவும்
    படியோர் பாவனை பண்ணித் தமது
    கடமையின் விலகுதன் மடமை; அதனால்
    நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி
    எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி.
2வது உழ:    அரசன், அரசனேற் சரியே; சுவாமி!
உரையீர் நீரே திருவார் வாணியை
அறியீர் போலும்,
நட :     அறிவோம், அறிவோம்
நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர்..
[உழவர் போக]
(தனதுள்)
ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில்
தோற்றுவ தனைத்தும் சாற்றுவர் அவர்தம்
தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல்,
சுகம்தரு மொழிபோல், சுகந்தரும் சூழ்ச்சியும்
அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும்
கூட்டிக் காரண காரியக் கொள்கைகள்
காட்டலும், காணக் களிப்பே! ஆயினும்
பழுதல பகர்ந்தவை முழுதும் முன்னோர்
ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர்.
அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம்
வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர்

புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல்,
அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள்
சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள்
விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி
ஒழுகிடும் அவைகளை உழையுளார் தமக்குத்

தோற்றிய பலவோடும் தொடுத்துக் காற்றில்
தூற்றுவர் எனினும் சொன்னவை முற்றும்
குடிலன் குணமுடன் கூடலாம் அவையும்,
படையிவண் வரநாம் பார்த்ததும்,
அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.
[நடராசன் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.