LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- வரலாறு

மார்கோ-போலோவின் பயணக்கட்டுரைகளில் தென்னிந்தியாவை பற்றிய பார்வை-1279 ம் ஆண்டு வாக்கில்

அந்தமான்- மிகப்பெரிய தீவு எந்தவொரு அரசனாலும் ஆளப்படவில்லை. சிலை வணக்கம் செய்பவர்கள், தலை, கண்கள், பற்கள் எல்லாம் நாயினத்தினுடையவை போன்றிருக்கின்றன. படு பயங்கரமான காட்டு மிராண்டி இனத்தவர். கொடூர தன்மை கொண்டவர்கள். தமது இனமல்லாது யாராவது பிடிபட்டால் கொன்று விடுவார்கள் அரிசி, பால், இவைகள் இவர்களது உணவு, வித்தியாசமான ஆப்பிள், தேங்காய் பழங்கள் கிடைக்கின்றன.

 

 

       அந்தமானிலிருந்து புறப்பட்டு தென் மேற்கு திசையாக ஓராயிரம் மைல் கப்பல் பிரயாணம் ஜெயிலான் தீவு (சிலோன்), எந்தவொரு தீவை காட்டிலும் பெரிதாக இருக்கின்றது.

 

செந்நெர்-நாஸ் மன்னரின் பெயர். அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்குகின்றனர். எந்தவொரு நாட்டையும் சாராத சுதந்திர நாடு. ஆடவரும், பெண்டிரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றியிருப்பார்கள் முக்கால் நிர்வாணம். அரிசி, சூரிய காந்தி இவைகள் விளைகின்றன. சூரிய காந்தியிலிருந்து எண்ணை எடுக்கிறார்கள். பால், அரிசி, இறைச்சி, இவர்கள் உணவு., மரங்களிலிருந்து எடுக்கப்படும் பானத்தை அருந்துகிறார்கள், சாயப்பொருட்கள் தயாரிக்கும் மரங்கள் நிறைய உள்ளன. அழகிய மாணிக்க கற்கள், நீல கற்கள், புஷ்பராக கற்கள், செவ்வந்தி கற்கள் போன்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கின்றன.. விலையுயார்ந்த மாணிக்க கல் ஒன்று அவர்களிடம் இருந்தது கண்டு சீன பேரரசர் குப்லாய்கான் எவ்வளவு சொல்லி கேட்டும் தர மறுத்து விட்டார்கள். வம்சாவழியாக வருவதால் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள் (மார்க்கோ போலோ-குப்லாய் கான் சார்பாகத்தான் பயணம் சென்றிருக்கிறார் )

 

(குப்லாய் கான் மங்கோலிய வம்சத்தை சார்ந்தவர், செங்கிஸ்கானின் பரம்பரை, தற்பொது சீனாவை ஆண்டு கொண்டிருக்கிறார்.)

 

 

 

       சிலை வணக்க மதத்தவர்கள் ஒரு ஞானியை போற்றி புகழ்கிறார்கள் (புத்தர்) ஆழ்ந்த தந்தத்தாலும், தங்கத்தாலும் சிலை செய்து வழிபடுகிறார்கள். உயர்ந்த மலை ஒன்று உள்ளது. வழுக்கு பாறைகளிலானது. அதன் உச்சியை அடைவது சிரமம், அதற்கென சங்கிலிகள் போடப்பட்டுள்ளன. அதை பிடித்து உச்சியை அடைவோர் நிறைய உண்டு. சிலை வணக்க மதத்தவர், தங்களது மதத்தை தோற்றுவித்த “சொகோமான் பர்ச்சன்” (புத்தர்) உடல் அங்கிருப்பதாக நம்புகிறார்கள். அதே நம்பிக்கையில்தான் கூட்டம் கூட்டமாக யாத்ரீகர்கள் புதைக்கப்பட்ட புத்தரின் இடத்தை பார்க்க சென்ற வண்னம் இருக்கிறார்கள்.

 

       ஜெயிலான் தீவை விட்டு வெளியேறி மேற்காக அறுபது மைல் தூரம் கலங்களை செலுத்தினால் “மாபர்” எனப்படும் பெரிய பிரதேசம். இது தீவு அல்ல, கண்டம். வளம் கொழிக்கும் நாடு. நான்கு அரசர்களால் ஆளப்படுகிறது. தலையானவர் சுந்தர பாண்டி. “மாபர்” நாட்டிற்கும் ஜெயிலான் தீவுக்கும் இடையில் முத்து குளிக்கும் தொழில் நடைபெறுகிறது. நீர் மட்டம் அறுபதிலிருந்து எழுபதுக்குள் இருக்கும், சில இடங்களில் பனிரெண்டு கூட இருக்கும்..

 

முத்து குளிக்கும் தொழில் நடைபெறும் விதத்தை பார்த்தால் பல வணிகர்கள் சேர்ந்து குழுக்களாக அமைத்து கொள்வர்.பல கலங்களையும், படகுகளையும் உபயோகப்படுத்தி கொள்வர். முத்து குளிக்கும் தேர்ச்சி பெற்ற ஆட்களை அமர்த்திக்கொள்வர்.. அவர்கள் கடலில் மூழ்கி தன் உடலில் பை போன்ற அமைப்பில் சிப்பிக்களை அள்ளி எடுத்துக்கொண்டு மேலே வருவர். கிடைக்கும் முத்துக்கள் ஒளி மிக்கவையாகவும், உருண்டையாகவும் இருக்கும். சிப்பிக்கள் நிறைய கிடைக்கும் இடம் “பெத்தலா” என்றழைப்பார்கள்.

 

       முத்து குளிக்கும் உரிமை மன்னருக்கு உரியது. கிடைப்பதில் பத்தில் ஒரு பங்கு மன்னருக்கு கொடுத்து விட வேண்டும். இருபதில் ஒரு பங்கு மந்திரவாதிகளுக்கு கொடுத்து விட வேண்டும். இந்த மந்திரவாதிகள் என்பவர்கள் பிராமணர்கள். அவர்கள் முத்து குளிக்கும் இடத்தில் அவர்களை தாக்கி கொல்லும் ஒரு வகை மீன்களை மந்திரத்தால் கட்டி போட்டு விடுவார்களாம். இரவில் அந்த மந்திர கட்டை எடுத்து விடுவார்களாம். மீண்டும் முத்து குளிக்கும் போது மந்திரம் போடுவார்களாம். மன்னர் தேவைப்படும் முத்துக்களை எடுத்து தகுந்த சன்மானம் வழங்கி விடுவதால் வணிகர்கள் பெரும்பாலும் மன்னருக்கு அளிப்பதற்கு விருப்படுவார்களாம்.

 

       உடைகள் மறைக்க வேண்டிய பாகங்கள் மட்டுமே மறைக்கப்பட்டிருக்கும். மற்றவைகள் திறந்த நிலையிலேயே இருக்கும். மன்னர் கூட கூடுதலான ஆடைகள் அணிவதில்லை. விலை மதிக்க முடியாத மாணிக்கம், நீலக்கற்கள், மரகதகற்கள் இவரது கழுத்தை அலங்கரிக்கும். பொன்னால் செய்யப்பட்ட முத்துக்கள் பதிக்கப்பட்ட மூன்று காப்புகளை ஒவ்வொரு புயத்திலும் அணிந்திருப்பார். மூன்று கழல்களை காலில் அணிந்திருப்பார்., மனைவிமார்களாகவும், ஆசை நாயகிகளாகவும் குறைந்த பட்சம் முன்னூறு பேருக்கு மேல் இருப்பார்கள். தன்னை சலனப்படுத்தும் பெண்ணொருத்தியை கண்டு விட்டால் உடனே அடையும் எண்ணம் கொண்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். பல போர் வீர்ர்களை தனக்கு காவலாய் வைத்து கொள்கிறார்கள். மன்னர் இறந்து விட்டால் இவர்களையும் மன்னரோடு தகனம் செய்து விடுகிறார்கள். மறுமையிலும் அரசருக்கு துணையிருப்பதாக ஐதீகம். இன்னொரு மரபு கூட உண்டு. மன்னர் இறந்த பின் வரும் வாரிசு தந்தையின் செல்வத்தை தொட மாட்டார். அது தனக்கு இழுக்கு என்று நினைத்துக்கொள்வார்.

 

குதிரைகள் அங்கு வளர்க்கப்படுவதில்லை. அதனால் குதிரைகள் இறக்குமதி அதிக அளவில் நடைபெரறுகிறது. இறக்குமதியாவதில் நிறைய குதிரைகள் இறந்து விடுவதால் மீண்டும், மீண்டும் இறக்குமதி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. காரணம் குதிரைகள் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை இங்கு இல்லாததால் குதிரை வியாபாரிகள் கொழுத்த பணம் சம்பாதித்து விடுகின்றனர்.

 

       சிலை வணக்க மதத்தவர்கள் எருதுகளின் பால் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் மாடுகளின் இறைச்சியை உண்பதற்கு முற்படுவதில்லை. ‘காயி’ என்ற ஒரு இனத்தவர் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஆனால் மாடுகளை கொல்ல முற்படமாட்டார்கள். இயற்கையாக இறந்த அல்லது வேறு வகையால் இறந்த மாடுகளை உண்பார்கள்.

 

       தரைகளை சாணமிட்டு மெழுகின்றனர். ஜமக்காளம் விரித்து அதில் உட்காருகின்றனர். காரணம் கேட்டால் மண் தரையில் அமர்வதுதான் மதிப்பு மிக்கது, மண்ணிலிருந்து தோன்றிய நாம் மண்ணுக்கே திரும்பியாக வேண்டும். அதற்காகத்தான் மண்ணுக்கு இந்த மரியாதை.

 

       நெல்லையும், எள்ளையும் தவிர வேறு வகையான தானியங்கள் அங்கு விளைவதில்லை..குத்தீட்டிகளையும், கேடயங்களையும் எடுத்து போருக்கு செல்கின்றனர். மிகவும் கொடூரமான போர் வீர்ர்கள்.

 

ஆடவரும், பெண்டிரும் தினந்தோறும் இரு முறை குளிக்கும் வழக்கமுடையவர்கள். சாப்பிடும்போது வலக்கரத்தை மட்டுமே பயன்படுத்துவர். இடது கையால் உணவு பாதார்த்தங்களை தொடக்கூட மாட்டார்கள்.. ஒரு குறிப்பிட்ட கலயத்திலிருந்து பானங்களை பருகுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான குவளைகள் உண்டு. ஒருத்தர் உபயோகம் செய்தவைகளை மற்றவர்கள் உபயோகிப்பதில்லை.. எதையுமே நேரடியாய் வாயில் வைத்து குடிப்பதில்லை. தலையை அண்ணாந்து பார்த்து வாயிலூற்றிக் கொள்கிறார்கள்.

 

       குற்றவாளிகளை நியாயத்துடன் தண்டிக்கப்படுகிறார்கள். கடனாளிகள் நீண்ட தவணை சொல்லி ஏமாற்றினால் தகுந்த தண்டனையாக அவர்களை சுற்றி ஒரு வட்டம் போட்டு விடுகிறார்கள். கடன் வாங்கியவன் கடனை திருப்பி கொடுத்த பின்னரே அந்த கோட்டை விட்டு வெளியே வரமுடியும். மீறினால் கடுமையான மரண தண்டனை வழங்கப்படும்.

 

       “மார்கோபோலோ” நேரடியாகவே ஒரு காட்சியை கண்டிருக்கிறார், ஒரு வணிகனிடம் கடன் வாங்கிய அந்த நாட்டு மன்ன்ன், பல முறை வணிகனிடம் தவணை சொல்ல, ஒரு நாள் மன்னன் குதிரையில் உலா வரும்போது அவரை சுற்றி வட்டம் போட்டு விட்டான். மன்னனும் சட்டத்திற்கு உட்பட்டு அவன் தவணையை தீர்த்த பின்னரே வெளியே வந்தான். இவாறு நீதி நியாங்கள் மன்னனாலும் தவறாது கடைபிடிக்கப்பட்டன.

 

       திராட்சையில் இருந்து வரும் மதுவை அருந்துவதில்லை. மது அருந்துவார்கள் என்று தெரிந்தால் அவர்கள் சாட்சி கூற தகுதியற்றவர், தரந்தாழ்ந்தவர் என்று கருதப்படுகிறார். கடற்பயணம் செய்பவர்களையும் அங்கனமே கருதுகிறார்கள்., ஆனாலும் அதை குற்றமாக கருதுவதில்லை..

 

       அளவு கடந்த வெப்பம், அனல் பறக்கும் பூமி, அதனால் மக்கள் முக்கால் நிர்வாணமாய் இருக்கிறார்கள். மூன்று மாத்த்தில் மட்டுமே மழை. சாமுத்ரிகா லட்சணத்தில் வள்ளவர்கள், மனிதர்களின் பண்புகளை, இயல்புகளை கண்டறிவதில் வல்லவர்கள். குழந்தை பிறந்தவுடன் காலங்களை குறித்து வைத்து கொள்கிறார்கள். அதன் பின் அந்த குழந்தையின் வாழ்க்கை சோதிடம் என்ன சொல்கிற்தோ அதன்  மூலமாகவே வளர்த்துகிறார்கள்..

 

       ஆண் மகன் பதிமூன்று வயதில் சுதந்திரமாக விடப்படுகிறான். தனது தந்தையின் குடும்பத்தவனாக கருதப்படமாட்டான். அவனுக்கு இவ்வளவு மதிப்பு என்று குரூட்டுகள் வழங்கப்பட்டு அவன் அதில் வியாபாரம் செய்து பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறான். இதனால் அவனது உழைப்பு பல மடங்காகிறது. பெரும்பாலும் முத்து வணிகத்திலேயே அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் இவ்வாரறு கறாராக வியாபாரம் செய்து ஈட்டும் பணத்திற்கு சமையல் பொருட்கள் வாங்கி தாயிடம் கொடுப்பர். தந்தையிடமிருந்து ஒரு சல்லி காசு கூட பெறுவதில்லை.

 

       அவர்களுடைய ஆலயங்களில் பல விதமான சிலைகள் உள்ளன. ஆண் பெண் வடிவங்களில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தைகைய பெண் தெய்வங்களுக்கு சில பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை தானமாக கொடுத்து விடுவர். அவர்கள் கோயில் திருப்பணிகளிலே ஈடுபட்டு தேவதாசிகளாக இறைவனடி சேவையில் ஈடுபடுவார்கள்.

 

 

 

உள்ளூர் மக்கள் மூங்கிலிருந்து எடுக்கப்பட்ட னுண்ணிய நார்களால் ஆன கட்டிலை உபயோகப்படுத்தினர். தூங்கும்போது தனது படுக்கையை சுற்றி கயிறு இழுப்பான் போல மூடப்பட்டு விஷ ஜந்துக்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்கின்றனர்.

 

 

 

       அடுத்ததாக “மாபர்” பிரதேசம் (சென்னை) அங்குதான் பாதிர்யார் புனித தாமஸ் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்கள் புனித யாத்திரையாக இங்கு வந்து செல்கிறார்கள். இஸ்லாமியார்களும் அவரை ஞானியாக ஏற்றுக்கொண்டு “அனானியாஸ்” என்று அழைக்கிறார்கள்.

 

       இங்கு வாழும் மக்கள் கறுப்பர்கள், ஆனாலும் கறுப்புத்தான் முழு நிறைவான அழகு என்ற மதிப்பீடு கொண்டவர்கள். இதனால் மேலும் தன்னை கறுப்பாக்கி கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார்கள். நாள் தோறும் குழந்தைகளுக்கு மூன்று முறை நல்லெண்ணைய் தடவி விடுகிறார்கள். தாம் வணங்கும் சிலைகளை கரு நிற சிலைகளாக வடிக்கிறார்கள். பூதங்களை வெண்மை நிறத்துடன் அணுகுகிறார்கள். எல்லா பூதங்களும் வெண்மை நிறத்தவை என்பது இவர்கள் உறுதிப்பாடு.. நந்தியை வணங்குகிறார்கள்.போருக்கு செல்லும்போது காட்டு எருதின் முடியை எடுத்து தன் குதிரையின் வாலில் செருகிக்கொள்கிறார்கள். குதிரைகள் இதனால் காக்கப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை. இதனால் எருதுகளின் முடிகள் நல்ல விலை போகிறது.

 

       மாபர் நாட்டை அடுத்து வடக்கே ஐநூறு  கல் தொலைவு பயணம் செய்தால் “மர்பிலி” எல்லைக்குள் நுழையலாம். இவர்களும் சிலை வணக்க மதத்தவர். அரிசி, இறைச்சி, மீன், பழ வகைகள் இவர்கள் உணவு. அந்நாட்டு மலை பிரதேசங்களில்  பெருமளவு வைரங்கள் காணப்படுகின்றன். அதை எடுப்பதற்கு மக்கள் பல்வேறு ஆபத்துக்களை கடந்து துணிந்து அங்கு செல்கின்றனர். அங்கு கழுகளும் பருந்துகளும் அதிகமாக காணப்படும். இவர்கள் மலை உச்சி முகடுகளுக்கு சென்று அங்கிருந்து இறைச்சியை எடுத்து வீசுவர். அங்கு பறந்து கொண்டிருக்கும் கழுகும், வல்லூறு, பருந்து, போன்றவை பறந்து அதனை கவ்விக்கொண்டு இறங்கும். இவர்கள் அதனை தொடர்ந்து சென்று பறவைகளை துரத்தி இட்டு இறைச்சி துண்டை சோதித்தால் வைர கற்கள் கிடைக்கின்றன. அப்படி இல்லை என்றாலும் பறவைகளின் கழிவுகளில் கூட கற்களை எடுத்து கொண்டு வருவர். அதன் பின் அவை மன்னருக்கும், மற்றவர்களுக்கும் பரிசாக கொண்டு செல்லப்படும்.

 

       மிக நேர்த்தியான பருத்தி துணிகள் தயாரிக்கப்படுகின்றன. கால்நடைகளும் போதிய அளவில் வளர்க்கப்படுகின்றன.. உலகிலேயே  மிக பெரிய செம்மறி ஆடுகளை அங்கு காணலாம்.

 

       புனிததாமஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை அடுத்து மேற்கு நோக்கி பயணம் செய்தால் “லார்” பிரதேச எல்லைக்குள் நுழையலாம். இந்தியா முழுவதும் பரவியுள்ள பிராமணர்களின் பூர்வீக இடம் இதுதான்.

 

       இங்கு மிக சிறந்த நேர்மையான வியாபாரிகள் உள்ளனர். அறவே பொய் பேசுதலை வெறுப்பவர்கள். அயல் நாட்டு வணிகர் ஒரு பொருளை உள்ளுர்வாசியிடம் ஒப்படைத்து வணிகம் செய்து பணத்தை கொடுக்க வேண்டும் என்றாலும், அதே போல் வணிகம் செய்து அவருக்கு உண்டான பணத்தை கொடுத்து விடுவர். தான் பட்ட கஷ்டங்களுக்கு பலன் எதிர்பார்ப்பதிலை. வெளியூர் வியாபாரிகள் விரும்பி அளிக்கும் தொகையை பெற்றுக்கொள்வார்கள்.

 

       அவர்கள் இறைச்சியை உண்டு, உள் நட்டு சாரயத்தை அருந்துபவர்கள். இருந்த போதிலும் தாமாக விலங்குகளை கொல்வதில்லை. முகம்மதியர்களை கொண்டு அதனை செய்விப்பர். ஒரு வகை பட்டைகளை கொண்டு பிராமணர்களை வேறுபடுத்தி கொள்ளலாம். பருமனானதொரு பருத்தி நூல் தோள் வழியாக மார்பின் முன்பாகவும், முதுகுக்கு பின்னும் சென்று புயத்திற்கு அடியில் முடியுமாறு அணிந்திருப்பார்கள்.

 

       அரசர் அபரிதமான வளமையும் வல்லமையும் படைத்தவர். முத்துக்களையும் விலையுயர்ந்த கற்களையும் வைத்துக்கொள்வதில் அவருக்கு அலாதியான பிரியம். விலை மதிப்பை பொருத்தவரை சொன்னதை அப்படியே நம்பி விடுவர்.

 

       இவர்களும் சிலை வணக்க மதத்தவர். அறிகுறிகளிலும் சகுனங்களிலும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.பொருட்கள் வாங்கும்பொழுது சூரிய ஒளியில் தம்முடைய நீளத்தை அளந்து அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் மட்டுமே  பொருட்களை வாங்குவார்கள்.

 

       உணவு பழக்கத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டவர்கள். பச்சிலை ஒன்றை அடிக்கடி மென்று கொண்டிருப்பவர்கள். இதனால் இவர்கள் பற்கள் ஆரோக்கியமாக இருந்தன.

 

சமய வாழ்க்கைக்கு தம்மை ஒரு சிலர் அர்ப்பணித்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ‘ஜோகி’ என்று அழைக்கப்படுகிறார்கள். புனித பண்புகளுக்கு பெருமை சேர்க்கும் வண்னம் வாழ்கிறார்கள். தம்முடைய உடலின் எப்பாகத்தையும் மறைக்காமல் வாழ்கிறார்கள். அவர்கள் சொல்வதென்றால் உடலைக்கொண்டு ஈடுபடும் பாவங்களை பற்றி பிரக்ஞையற்றவர்களுக்கு அதனால் வெட்கம் ஏற்பட காரணமில்லை எங்கின்றனர்.

 

       காளை மாடு அவர்களால் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. பித்தளையிலோ, அல்லது வேறு உலோகத்தாலோ, சிறிய உருவத்தை செய்து தனது புருவ மத்தியில் அணிந்து கொள்கின்றனர். இறந்து போன காளைகளின் எலும்புகளை எரித்து அதன் சாம்பலை உடலின் மீது பூசிக்கொள்கின்றனர். அதனை பயபக்தியுடன் செய்வர். யாரையேனும் ஆசிர்வதிக்க நேர்ந்தால் அவர்கள் புருவ மத்தியில் அந்த சாம்பலை பூசி விடுவர்.

 

கொசு, ஈ, போன்ற ஜீவர்ச்சிகளுக்கு கூட பாவம் செய்ய விரும்புவதில்லை. காய்கனிகளை கூட தானாக உதிர்ந்த பின்னரே உண்கின்றனர். அதை பறிப்பதை கூட விரும்புவதில்லை. நூற்றைம்பது வருடம் வாழ்க்கூடிய வகையில் தன்னுடைய உடலை பராமரித்து நல்ல நலத்துடனும் பலத்துடனும் வாழ்கின்றனர். இறந்த உடலை எரித்து விடுகிறார்கள். ஆன்மா, ஆவி இவைகளில் நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.

 

“காயெல்” என்பது குறிப்பிடத்தக்கதொரு நகரம். மாபர் நாட்டின் அரசர்களாக நான்கு சகோதரர்களின் ஒருவரான “ஆஸ்தியர்” ஆட்சி புரிகிறார். நகரத்தில் அமைதி நிலவுமாறு காத்து வருகுகிறார். இதனாலேயே அந்நிய வியாபரிகள் அங்கு வியாபாரம் செய்ய வருகின்றனர். ஓர்மஸ், கிஸ்டி, ஏடென், மற்றும், அரேபியாவின் பல பகுதிகளிலிருந்தும் சரக்குகளையும் குதிரைகளையும் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களை அந்த துறைமுகத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். இங்குள்ள மக்கள் அனைவரும் தாம்பூலம் என்னும் இலையை வாயில் இட்டுக் கொள்வதை மரபாக கொண்டுள்ளனர். மென்று கொண்டிருக்கும்போதே தேவை ஏற்படும்போது எச்சிலை துப்புவார்கள். செல்வந்தர்கள் அவற்றுடன் கற்பூரம், வாசனை திரவங்களை சிறிது சுண்னாம்பையும் சேர்த்து உண்பார்கள்.

 

கொமரி (குமரி) எனப்படும் பிரதேசத்தில் ஜாவாவில் தென்படாத வட துருவ நட்சத்திரத்தின் ஒரு பகுதியை காணலாம். தொடுவானத்துக்கு சற்று மேலே அவை தென்படுகின்றன. பண்படுத்தப்பட்ட நிலங்கள் குறைவு. வனாந்திரங்களே அதிகம்..புலிகள் சிறுத்தைகள் இங்கு அதிகம்.

 

 

 

கொமரி நாடை விட்டு விட்டு மேற்கு நோக்கி நகர்ந்தால் முந்நூறு மைல் அளவில் டெலி நாட்டை அடையலாம். தாயக மன்னர் ஆளுகிறார். விநோதமான மொழி பேசப்படுகிறது.மக்கள் சிலை வணக்க மதத்தவர். .கப்பல் துறைமுகம் இல்லை. ஆனால் பாதுகாப்பான நுழைவாயில் கொண்ட பெரிய ஆறுகள் உள்ளன.

 

இன்னும் பயண கட்டுரை வளர்ந்து கொன்டேயிருக்கிறது

 

 

 

 

 

இந்த கட்டுரை எடுக்கப்பட்ட புத்தகம் -“”மார்க்கோ-போலோ பயண குறிப்புகள்

 

                                   தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன்

 

 

 

பயண குறிப்புகள் எழுதப்பட்ட வரலாறு

 

 

 

மார்கோ போலோ வெனிஸ் நகரில் 1254 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை “நிக்கோலாவும்” தந்தையின் சகோதரர் “மபெயோவும்” வணிகர்கள். போலோக்களுடைய முதலாவது கிழக்கத்திய பயணம் 1260 ல் தொடங்கியது. அதன் பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தாய்நாடு வந்தவர்கள், வணிகத்தில் கிடைத்த செல்வங்களை கண்டு விட்டு மீண்டும் கிழக்கத்திய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.. இந்த முறை “மார்கோ போலாவையும்” உடன் அழைத்து வணிக பயணம் மேற்கொண்டனர்.

 

மார்கோ போலோ இளமையிலேயே புத்திசாலியாகவும், வணிகனாய் இருந்தாலும், தான் செல்லும் இடங்களில் குறிப்புகள் எடுப்பதிலும், நல்ல நினைவுகளுடனும் இருந்ததால் அவரால் தாம் பயணம் சென்ற இடங்களின் வாழ்க்கை முறைகளை பற்றி குறிப்புகள் எழுத முடிந்தது..

 

மேலும் அவர் தர்த்தாரியா பேரரசர் குப்லாய் கான் அரசவையில் அவருக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், சுமார் இருபத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தார். அவரின் ஆதரவினாலேயே பல நாடுகளுக்கு இவர் சார்பாகவும் சென்று வந்தார். இதனால் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை அவரால் குறிப்புகள் எடுக்க முடிந்தது.

 

வெனிஸ் திரும்பிய பின்னர் மார்கோபோலோ இறந்தமைக்கான ஆதாரங்கள் சில மட்டுமே கிட்டியுள்ளன. ஆனால் கிடைத்தவை எல்லாம் உறுதியானவையாகவும், அதிகாரபூர்வமாகவும் உள்ளன.

 

       “மார்கோ போலோ” தன் பயணத்தை பற்றி குறிப்பிட்டும், அதன் கஷ்டங்களை சொல்லும்போதும் யாரும்  ஆரம்ப காலத்தில் அவர் சொல்லியவைகளை நம்ப மறுத்தனர்.. உண்மையிலேயே அவர் சொன்னதை நம்புவதற்கான எந்தவித ஆதார குறிப்புகளும் கிடைக்கவில்லை. அவரை பற்றி அந்நாட்டில் கிண்டல் கேலிகள் கூட செய்வதுண்டு.

 

 

 

அதன் பிறகு கிட்ட்த்தட்ட அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்கோ போலோ பயணம் செய்த பல பகுதிகளில் ஐரோப்பிய ஆய்வு பயணியர் மீண்டும் பயணித்துள்ளனர். நமது காலத்திலேயே ஸென் ஹெடின், டாக்டர் பெல்லிட்,  கர்னல் கோஸ்லாவ், வில்லியம் ராக்ஹில், மேஜர் சைகஸ் போன்றோர் “மார்கோ போலா” பயணித்து பத்தித்து வைத்த வழித்தடங்களை பின் பற்றி நெடிய பயணங்களை மேற்கொண்டனர். “மார்கோ போலாவின்” பெருமையை நிலை நாட்ட இதுவே போதுமானது..

 

இன்னும் கூட சொல்லலாம், படு பயங்கரமாக பெர்சிய பாலைவனத்தை கடந்து சீனா, திபெத், பர்மா, சயாம், சிலோன், இந்தியா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறைகளை தானே நேரில் கண்டும் பிறர் வாயிலாக அறிந்தும் மிக துல்லியமாக முதல் பயணியும் “மார்கோ போலோதான்”..

 

சைபீரியா,  ஜாஞ்சிபூர், போன்ற இருண்ட பூமிகளையும், அங்கு வாழும் கருப்பு இன மக்களையும் கிறிஸ்டியன், அபிசினியா பற்றியும், நரமாமிசம் உண்ணுகிற சுமித்ரா பற்றியும் அவர்தான் முதன் முதலாக குறிப்புகள் தந்தார். ஆர்டிக் பெருங்கடலையும், வெண் கரடிகளையும், நாய் வண்டிகளையும், பெரிய வகை மான்களையும், பற்றி குறிப்பிட்டதோடு இந்தியாவின் கொடிய வெப்பத்தையும் வைர சுரங்கங்கங்களையும், முத்து படுக்கைகளையும், புதுமையான புராண இதிகாசங்களையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்..   

 

நான் செய்த்து ஒன்றே ஒன்றுதான் அவரின் தென்னிந்திய பயணத்தின் அப்போதைய மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்த்து என்பதை இந்த புத்தகத்திலிருந்து வாசகர்களுக்கு கொஞ்சம் எடுத்து கொடுத்திருக்கிறேன்.

 

இந்த புத்தகத்தில் “மார்கோ போலோ” சுற்றியுள்ள அனைத்து இடங்களையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி குறிப்புகள் கொடுத்துள்ளார். அதனை அந்த மொழியிலிருந்து தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன் நமக்கு கொடுத்து அற்புதமாக எழுதி உள்ளார்..அதில் ஒரு துளி மட்டும் எடுத்து இங்கு கொடுத்துள்ளேன். வாசகர்கள் வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்..

Marco-Bolo tour of world-south Indian place at 1729 period
by Dhamotharan.S   on 01 Aug 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
01-Aug-2020 19:55:13 கலைவாணன் said : Report Abuse
மார்கோ போலோ பயணக்கட்டுரை புத்தகம் எந்த பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது? எங்கே கிடைக்கும்?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.