LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயமோகன்

மத்துறு தயிர்

 

பேராசிரியரை அழைத்துவரக் குமார் கிளம்பியபோது என்னையும் அழைத்தார். ‘வாங்க, சும்மா ஒருநடை போய்ட்டு வந்திருவோம்… இங்க இருந்தென்ன செய்ய போறிய? ’. நான், ’அருணா வர்ரதா சொல்லியிருக்கா. வர்ரப்ப இங்க இருக்கலாமேன்னு…’ என இழுத்தேன். ‘ஆமா நீங்க இருந்து ஆரத்தி எடுக்கணும்லா…சும்மா வாங்க’ என்று அவரே காரின் கதவைத் திறந்து வைத்தார். நான் ஏறிக்கொண்டதும் ‘ பெண்டாட்டி மேலே பக்தி வேணும். அதுக்காக கூடிப்போயிரப்பிடாது…’ என்றார்
காரைக்கிளப்பியபடி ‘எதுக்கு சொல்றேன்னா இந்தமாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு வாறப்ப பேராசிரியர் ஒருமாதிரி நல்ல மூடிலே இருப்பாரு…அப்ப பேசுத பேச்சு ரொம்ப நல்லா இருக்கும். நீங்க அதைக் கேக்கணும்’ என்றார் குமார். ‘அந்தம்மா கூடவே வருமே அல்லேலூயான்னுட்டு…’ குமார், ‘இல்ல வரேல்ல. அவங்கள ஸ்டீபன் சார் வண்டியிலே வரச்சொல்லியாச்சு. இந்த வண்டி அவங்களுக்கு தலை சுத்துதுண்ணு அவங்களே சொன்னாங்க. செரி, அம்பாசிடர்லே வாங்க அது தலைசுத்தாதுல்லான்னு நானும் சொன்னேன்…நீங்க பதமாட்டுப் பேச்சைக் கம்பராமாயணம் பக்கம் கொண்டு வந்திருங்க. ஏசு,பைபிள்னு ஒரு வார்த்தை வாயிலே வந்திரப்பிடாது. ஓடை வழிமாறி ஒழுகிரும்..’ குமார் நிதானமாக வண்டியை ஒட்டினார்
‘இப்ப மூணு மணிதானே ஆவுது. நிகழ்ச்சி ஆறுக்குல்ல?’ என்றேன்.’இப்பமே லேட்டுன்னாக்கும் எனக்க கணக்கு. இப்ப பேராசிரியர் காலக்கணக்குகெல்லாம் அந்தால போயாச்சு. காலையா சாயங்காலமா ஒண்ணும் நெனைப்பில்ல. அதுக்கு ஏத்தாமாதிரி வல்லவனும் கேறி வந்து இருந்து பேச ஆரம்பிப்பான். எளவு, யாரு என்ன பேசினாலும் சின்னப்புள்ள மாதிரி உக்காந்து கேட்டுட்டு இருப்பாரு. நாம போயி குளிக்க வச்சு, ஜிப்பா வேட்டி போடவச்சு கூட்டிட்டு வரணும்…’ நான் சிரித்து ‘குளிப்பாட்டணுமா?’ என்றேன். ‘போறபோக்கப்பாத்தா அதும் தேவைப்படும்ணாக்கும் நினைக்கேன்’
வண்டி புன்னைவனம் முக்கு திரும்பும்போது ‘சஜின்கிட்ட ஒரு காரியம் சொல்லியிருந்தேன். ’லே, உனக்கு காரியங்கள் பாத்து நடத்துத துப்புண்டா இல்லியாண்ணு இதவச்சுத்தான் பாப்பேன்’னு சொன்னேன்… ‘ என்றார் குமார். நான் ‘அவருக்கு இண்ணைக்கு காலேஜ் உண்டுல்ல?’ என்றேன். ‘உண்டு. நேத்து ராத்திரி தான் இந்தக் காரியம் ஞாபகம் வந்தது. இது நாம சமாளிக்கக்கூடிய காரியமில்லை. லே கெளம்பிவாலேன்னு சொன்னேன். காலம்பற எட்டரைக்கே வந்து நிக்கான். செரின்னு அக்காவீடு வரை ஒரு சோலியா அனுப்பிட்டு இப்பம் ஹாலிலே பிடிச்சு நிறுத்தியிருக்கேன்… தமிழ்வாத்தியாராட்டு இருந்தாலும் நல்ல பயதான். பாப்பம்’
நினைத்ததுபோலவேதான், திண்னையில் பேராசிரியார் வேட்டி மட்டும் கட்டி, பல்லியின் அடிப்பக்கம் போன்ற வெளிறிச்சுருங்கிய சின்ன உடலுடன் உட்கார்ந்து ’கெக் கெக்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார். எதிரே ஒருவன் சட்டை போடாத மயிரடர்ந்த கரிய உடலுடன் மரத்தூணை தழுவிக்கொண்டு உட்கார்ந்து உரத்த குரலில் பேசினான். ‘இஞ்சேருங்க, இந்நா கெடக்கு. லே, இது நீக்கோலிலேண்ணு நான் சொல்லுதேன். பெய என்னண்ணாக்க தெங்கிலே கேறி இருக்கான்…அண்ணா அண்ணான்னு ஒரு நெலவிளி…லே பாம்பு தெங்குமேலே நல்லா கேறும் பாத்துக்கோண்ணேன். ஏசுவே ஏசுவேண்ணு கரையுதான்…’ எங்களை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான்
பேராசிரியர் ‘குமாரு, என்னடே விசேசங்க? பிள்ளையள்லாம் சொவமா இருக்கா?’ என்றார் ‘இவன் சொல்லுகத கேட்டியா? பாம்பு பனைகேறுமாம். அக்கானி எடுக்குமாண்ணு தெரியேல்ல ஹஹஹ’ என்றார். குமார் என்னிடம் மெல்ல ‘சுத்தமா ஞாபகம் இல்ல, பாத்துக்கிடுங்க’ என்றபின் ‘கெளம்பல்லியா?’ என்றார். பேராசிரியர் பதற்றம் அடைந்து ‘அய்யோ மறந்துபோட்டேன் கேட்டியாடே.. இண்ணைக்கு ஞாயித்துக்கெழமைண்ணே தெரியல்லை. கோயிலுக்கு போறத மறக்குத காலம் வந்தாச்சு பாத்துக்கோ’ குமார் கொஞ்சம் எரிச்சலுடன் ‘இண்ணைக்கு ஞாயித்துக்கெழம இல்ல‘ என்றார். ‘இல்லியா?’ என்றார் பேராசிரியர் சந்தேகமாக. ’ஆமா’ .அவர் யோசித்து பலவீனமாக, ‘ஞானராஜுக்க மெவளுக்கு கல்யாணமாக்கும் இல்லியா?’. ‘அது சித்திரையிலே. இப்ப மாசியாக்கும்…’ என்று குமார் அமர்ந்துகொண்டார்
நான் அருகே இருந்த திண்ணையில் அமர்ந்தேன். பேராசிரியர் என்னைப்பார்த்து பிரியமாக புன்னகை செய்ததும் அவர் என்னை வேறு யாரோவாக எண்ணுகிறார் என்று தோன்றியது. அவர் ‘பாஸ்டர் எப்ப வந்திய?’ என்று கேட்டதும் நான் புன்னகை புரிந்தேன். குமார் ‘இன்னைக்கு குமரிமன்றம் நிகழ்ச்சியாக்கும். நீங்க வாறிய…’ என்றார். பேராசிரியர் வியந்து முகம் மலரச்சிரித்து ’அதாக்கும் சங்கதி இல்லியா? டெய்சி போறப்ப சொல்லிட்டு போனா. அவன் என்ன சொல்லிட்டு போனான்னு மறந்துட்டேம்டே குமாரு.. ‘ என்று என்னை பார்த்தார். ‘இது ஜெயமோகன். கதைகள் எளுதுகாருல்லா?’ பேராசிரியர் சட்டென்று என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘அய்யோ…நேத்தாக்கும் நான் மாடன் மோட்சம் படிச்சது. அதாக்கும் கதை. கிளாஸிக்கு. குமாரு நீ படிச்சிருக்கியா? ’ குமார் ‘படிச்சிருக்கேன். நீங்க குளிக்கல்லேல்லா? குளிச்சுட்டு கெளம்பத்தான் நேரம் செரியா இருக்கும்…’ என்றார்
அவரது பேத்தி வந்து எட்டிப்பார்த்து புன்னகை செய்தார். ‘வெந்நி போடுதியா?’ எனக் குமார் கேட்டார். ‘சொல்லேல்லியே’ என்றாள் அவள். ‘போட்டிரு…இப்பம் கெளம்பணும்’ அவள் உள்ளே சென்றதும் அந்த ஆள் ‘..பின்னயாக்கும் ரெசம், அது பாம்பில்லே கேட்டியளா?’ என்று ஆரம்பித்தார். ‘பின்னே?’ என்றார் பேராசிரியர் பேராவலுடன். ‘லே போலே..போ போ ‘என்று குமார் அவனை அதட்டி கிளம்பச்செய்தார். அவன் முகத்தால் கிளம்புகிறேன் என்று சைகை காட்டி எழுந்து சென்றான். ‘எங்கயாக்கும்டே குமாரு நிகழ்ச்சி?’ என்றார் பேராசிரியர் ‘அசிசி பள்ளிக்கூடத்திலே. நம்மா ஜில்லாவிலே உள்ள எல்லா ரைட்டர்ஸும் உண்டு.எல்லாரையும் பச்சைமால் கௌரவிக்கிறாரு’
பேராசிரியர் சிரித்துக்கொண்டு ‘அதுக்கு நான் என்னத்துக்குடே? ’என்றார். நான் ‘நீங்க ஒரு ரைட்டருக்க ஓனருல்ல?’ என்றேன். பேராசிரியர் வெடித்துச்சிரித்து புரைக்கேறி தடுமாறினார். ‘கேட்டியாடே குமாரு, ரைட்டரை வளர்த்துதது கஷ்டமாக்கும் பாத்துக்கோ…’ என்று மீண்டும் சிரித்தார். நான் அவரை அப்போதே கம்பராமாயண மனநிலைக்குள் இட்டுச்செல்ல முடிவு செய்து, ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பாடலை எடுத்தேன். ’நேத்து கம்பராமாயணத்திலே ஒரு பாட்டு படிச்சப்ப உங்கள நினைச்சுகிட்டேன்’ என்றேன்.
பேராசிரியர் முகம் நெகிழ்ந்தது. ‘கம்பனை படிச்சேளா? நேத்தா? அது ஒரு சுப முகூர்த்தம் பாருங்க. அப்டி சட்டுன்னு நம்ம கை அங்க போயிடாது. போக வைக்கிறது அவனாக்கும். இப்ப நாம கம்பராமாயணம் பேச ஆரம்பிச்சாச்சுல்லா, இந்த இங்கிண அவன் வந்து நிக்கான். என்னால அவன் நிக்கதை ஃபீல் பண்ண முடியுது…. அவன் சாகாப்பெருங்கவியில்லா? மானுடம் கண்ட மகாகவியில்லா…’ என்று பரவசம் கொண்டு , புருவங்கள் மேலே வளைய ‘என்ன பாட்டு?’ என்றார்
நான் அந்தப்பாடலைச் சொன்னேன்.
மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?
’பாட்டை இப்டிச் சொல்லப்படாது, பாடணும். இதை ஆபேரியிலே மொள்ளமா பாடிப்பாருங்க…’ அவர் பாடலை உருக்கமாகப் பாடினார். முகத்தில் தளர்ந்த தசைகள் உணர்ச்சிகளால் கொடித்துணிகள் காற்றிலாடுவது போல நெளிந்தன. ‘என்னான்னு சொல்லிப்போட்டான் பாத்தேளா? நின் பிரிவினிற் பிறந்த வேதனை. பிரிவுக்கு இணையான வேதனை உண்டா? ஏன்னா மனுஷன் தனியாளு இல்ல கேட்டேளா? ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தர் கூட ஒட்டியிருக்கான். அவன் இன்னொருத்தர்கூட ஒட்டிக்கிட்டிருக்கான். கையும் காலும் வெரலும் உடம்பிலே ஒட்டிக்கிட்டிருக்கது மாதிரி மனுஷன் மானுடத்தோட ஒட்டிகிட்டிருக்கான். பிரிவுங்கிறது அந்த பெரிய கடலிலே இருந்து ஒரு துளி தனிச்சுப்போறதாக்கும். சாவும் பிரிவும் ஒண்ணு. எல்லா பிரிவும் சின்னச்சின்னச் சாவாக்குமே…’
பேராசிரியர் குரலில் முதுமையின் நடுக்கம் மறைந்து உணர்ச்சியின் வேறுவகை நடுக்கம் குடியேறுவதை கவனித்தேன். குரல் ஓங்கி ஒலித்தது. கொஞ்சம் கிரீச்சிடக்கூடிய மென்குரல். ‘வேதனை எத்தனை உள, அவை எண்ணும் ஈட்டவோங்கிறான் பாருங்க. மானுடனுக்கு வேதனைன்னா ஒண்ணு ரெண்டு இல்ல. முடிவே கெடையாது. விதவிதமாட்டு. நிமிசத்துக்கு நிமிசம் ஒண்ணுன்னு…அவை எண்ணும் ஈட்டவோ.. அவற்றையெல்லாம் எண்ணிப்பாக்க முடியுமா? வேண்டியவங்கள பிரிஞ்சுட்டான்னு சொன்னா அம்பிடு வேதனையும் ஒருத்தனுக்கே வந்திரும் …கர்த்தரே…மனுஷனை இத்தனை வேதனைய வச்சு நீர் சுத்தப்படுத்தி உம் காலடிக்குக் கொண்டு செல்றீரே.. எல்லா துக்கமும் உமது கருணை தானே ஏசுவே..’
நான் கவனமாகப் பேச்சை நகர்த்தினேன். ‘புலன்கள் தள்ளுறும் பித்து’ன்னு எதைச்சொல்றான்னு புரியுது. அந்த அளவுக்கு பிரிவோட துக்கம் இருந்தா ஐம்புலன்களும் சரிஞ்சிரும். ஆனா ’மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரோடு’ன்னு ஏன் சொல்றான்? மத்தாலே கடையற மாதிரி உயிர் அலைக்கழியுதுங்கிறான். சரி, அதை வந்துசென்றுன்னு ஏன் சொல்றான். இடை தத்துறும் உயிர்னா மத்திலே கடையறப்ப வந்தும்போயும் நடுவிலே கிடந்து தத்தளிக்கிற உயிர். அதான் புரியல்லை. மத்தால கடையறப்ப எது அப்டி வந்தும் போயும் இருக்கு?’
’கம்பன் மகாகவி. மகாகவிகள்லாம் சின்னப்பிள்ளைங்க மாதிரி. சும்மா ஸெரிபெரலாட்டெல்லாம் யோசிக்க மாட்டாங்க. கண்ணால கண்டதைத்தான் சொல்லுவாங்க. செரி, அவன் எங்க சொல்றான், அவன் ஒரு கிறுக்கன்லா? அவன் நாக்கில இருக்கற சரஸ்வதில்லா சொல்லுகா…’ பேராசிரியர் சொன்னார். எழுந்து நின்று தயிர்கடைவதுபோல கையால் நடித்தார். ‘மத்தால கலயத்திலே தயிர் கடையற காட்சிய நாம கற்பனையிலே பாக்கணும். கலயம்தான் உடல் .உயிர்ங்கிறது அதுக்குள்ள இருக்கிற தயிர். மத்து அந்தத் துன்பம். துன்பம் உயிரைப்போட்டு கடையுது. கடையற தயிர் எப்டி இருக்கும் பாத்திருக்கேளா? ஒருபக்கமாட்டு சுத்திச்சுழன்று நொரையோட மேலேறி இந்தா இப்ப தளும்பி வெளியே பாஞ்சிரும்னு வரும். உடனே மத்து அந்தப்பக்கமாட்டு சுத்தும். அந்தப் பக்கமாட்டும் அது வெளிய சாடீரும்னு போயி உடனே இந்தப்பக்கமாட்டு சுத்தும். ஒரு செக்கண்டு நிம்மதி கெடையாது. நுரைச்சு பதைஞ்சு …மனுஷனோட பெருந்துக்கமும் அதேமாதிரித்தான். அந்த அலைக்கழிப்பு இருக்கே அதாக்கும் கொடுமை. இதுவா அதுவா, இப்டியா அப்டியான்னு. வாழவும் விடாம சாகவும் விடாம… அதைச் சொல்லுதான் கம்பன்’
நான் அந்தக்காட்சியை கண்டுகொண்டிருந்தேன். பேராசிரியர் ‘அது மட்டுமில்லை. அவன் சொல்லு ரெண்டுபக்கமும் முனையுள்ள வாளாக்கும். முந்தின பாட்டப் பாத்தியளா?’ நான் அதை நினைவுகூரவில்லை. ‘நீ சொல்லுடே குமாரு’ . குமார் வெட்கி சிரித்து ‘ஓர்மையில்லை’ என்றார். ’நீ வெளங்கினே.. அண்னைக்குமுதல் இண்ணைக்கு வரை அந்த லெச்சணம்தான்.. என்னத்தை படிச்சியோ என்னமோ’ . பேராசிரியர் அவரே சொன்னார் ‘சோகம் வந்து உறுவது தெளிவு’ ன்னு அந்த பாட்டு ஆரம்பிக்குது கேட்டேளா? அந்த பாட்டுக்க அடுத்ததுதான் இது. மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணை வரும். துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. பால்கடலை கடைஞ்சுல்லா அமுதம் எடுத்தாங்க. அமுதம்னா சாகாமை. அதாக்கும் நான் சொன்னது துக்கம் ஏசுவுக்க காலடியிலே போய் சேருறதுக்குண்டான வழின்னு…டே, இப்பம் நீ சர்ச்சுக்கு போறதுண்டா?’
குமார் ‘போவணும்’ என்றார். ‘நீ வாழ்ந்தே…அண்ணைக்கும் இண்ணைக்கும் ஒரே முகரையாக்குமே..’ . பேத்தி வந்து ‘தண்ணி சுட்டாச்சு’ என்றார். பேராசிரியர் எழுந்து ‘குளிச்சுட்டு வாறண்டே குமாரு..’ என்றார். குமார் பேத்தியிடம் ‘வேட்டி ஜிப்பா எடுத்து வையி. ஒரு நிகள்ச்சிக்காக்கும் போறது’ என்றார். பேராசிரியர் ‘நிகள்ச்சியிலே எல்லா பயகளும் வருவானுகளாடே?’ என்றார். ‘எல்லாரும் உண்டு. கார்லோஸ், பெருமாள் எல்லாரும் வாறாங்க’ என்றார் குமார். ‘ராஜம் வாறானா?’ என்றார் பேராசிரியர். குமார் கொஞ்சம் தயங்கி ‘வருவாரு’ என்றார். ‘அவனப் பாக்கணும்டே…போனவாரம் ஒரு சொப்பனம். அந்த பயலுக்கு ஒரு பிரைஸ் கிட்டுது. கவிதைக்கோ நாவலுக்கோ. தெரியேல்ல. பிரைஸ் குடுக்கியது நேருவாக்கும்…’
நான் சிரித்து ‘நேருவா?’ என்றேன். பேராசிரியர் ’சொப்பனமாக்குமே…நேரு இப்பம் என்னை மாதிரிக் கதர் உடுக்கிறவங்களுக்க சொப்பனத்திலே இல்ல இருக்காரு? நேரு இவனுக்கு பிரைஸ் குடுக்காரு. இவன் நல்லா வெளுத்த ஜிப்பாவெல்லாம் போட்டு நல்ல ஸ்டைலாட்டு போயி வாங்கிட்டு மைக்கு முன்னால வந்து நின்னு நன்றி சொல்லுகான்…அவன் எனக்க பேரைச் சொல்லுகான். லே குமாரபிள்ள பேரச் சொல்லுலே…குமாரபிள்ளைய விட்டுட்டேலேன்னு நான் கெடந்து சத்தம் போடுதேன். அவன் கேக்கேல்ல. சபையிலே ஆரும் கேக்கேல்ல.. அப்பம் முழிப்பு வந்து போட்டு’ என்றார். பெருமூச்சுடன் ‘அவன பாக்கணும்டே குமாரு. என்னமோ இனிமே அவனை பாத்துக்கிட முடியாதுன்னு ஒரு நெனைப்பு மனசிலே , கேட்டியா?’
‘குளிச்சுட்டு வாங்க.நேரமாச்சு’ என்றார் குமார். பேராசிரியர் ‘இப்பம் வந்திருதேன்..’ என்று உள்ளே சென்றார். குமார் என்னிடம் ‘இப்பம் கொஞ்ச நாளா எப்ப பேசினாலும் ராஜத்தைப்பத்தியாக்கும் பேச்சு. அடிக்கடி கனவும் வருது’ என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘அதுபின்ன, வழிதவறின ஆடாக்குமே.. எடையன் அதைத்தானே நெனைப்பான்?’ நான் புன்னகை செய்தேன்.
’போனவருசம் ராமசாமி மக கல்யாணவிருந்துக்கு போனப்ப ராஜத்த பாத்தாரு… நானும் கூட உண்டு அப்பம். ரோட்டிலே இவரு எறங்கிற நேரம் அவர் எதுக்கால வந்திட்டாரு. நான் ராஜத்தை பாக்கலை. இவராக்கும் முதலிலே பாத்தது. ‘அது நம்ம ராஜமாக்குமே’ன்னு கேட்டாரு. ராஜம் இவர எதிர்பாக்கல்லை.சட்டை முளுக்க அழுக்கு. தலையில மண்ணு. கட்டயன்வெளை கோபாலனும் அவருமாச் சேந்து எங்கியோ போயி நல்லா குடிச்சு கீழ விளுந்து அப்டியே எந்திரிச்சு வாறாங்க… ‘ராஜம் நீயாலே மக்கா?’ன்னு இவரு கேட்டதும் ராஜம் அப்டியே தரையிலே உக்காந்து தலையிலே கைய ரெண்டையும் வச்சுகிட்டார். கோபாலன் ஆடிகிட்டே ‘ஸ்மால் டிரிங்கு. ஒன்லி விஸ்கி’ன்னு என்னமோ சொல்லுதாரு. ராஜம் தேம்பிதேம்பி அழுவுதார். நான் ‘வாங்கன்னு’ கூட்டிட்டு வண்டியிலே ஏத்திட்டேன். ‘அவன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போடே, அவனுக்கு உடம்பு செரியில்லே’ன்னு வண்டியிலே கிடந்து அனத்துதாரு. குடிக்கிற ஆளுகளைப் பேராசிரியர் அதிகம் பாத்ததில்லே…இந்த மாதிரி குடி நெனைச்சே பாத்திருக்க மாட்டாருல்லா…’ குமார் சொன்னார்.
‘ராஜம் இப்டீன்னு ஊருக்கே தெரியுமே’ என்றேன் ‘அது பேராசிரியருக்கு இருபத்தஞ்சு வருசமா தெரியுமே… ஆனா இது இந்த ஓவியமா இருக்கும்னு தெரியாது… அதைச் சொன்னேன். ராஜம் இப்பிடி ஆனது பேராசிரியர்ருக்க கண்ணுக்கு முன்னாலயில்லா? அவரு ராஜத்தை வெளியே கொண்டுவர என்னெனமோ செஞ்சிருக்காரு… அந்த குட்டிக்க காலிலே விழப்போனாருல்லா?’ . ‘எந்தக்குட்டி?’ என்றேன். குமார் ‘அது போட்டு , இப்பம் அதைப்பற்றி என்னவாக்கும் பேச்சு?’ என்றார். ‘இல்ல, சொல்லுங்க’ என்றேன்.குமார் ‘நான் சஜினை வரச்சொன்னதே ராஜத்தை கொண்டுவந்து ஒருமாதிரி நிதானமா பேராசிரியர் முன்னால நிறுத்துறதுக்காக்கும். ஒரு மூணுமணிக்கு கூட்டிட்டுபோயி நல்ல லார்ஜ் ஒண்ணு வாங்கி குடுக்கச்சொன்னேன்’
‘அய்யோ’ என்றேன். ‘காரியம் இருக்கு. காலையிலே இருந்தே குடிக்கல்லேண்ணா நிக்க மாட்டார். மூணுமணிக்கு குடிச்சா அஞ்சுக்குள்ள எறங்கிரும். நேரா கொண்டுபோயி ராமசாமி வீட்டுக்குள்ள கேற்றி முகம்கழுவி நல்ல சட்டை வேட்டி மாத்தி அப்டியே கூட்டிட்டு வந்து முன்னால நிப்பாட்டிட்டு விட்டுட்டோம்னா சோலி தீந்துது. ஒரு நல்ல வேட்டியும் சட்டையும் கொண்டு போயி வச்சிருக்கு…’ என்றார். ‘சஜின், உங்க சிஷ்யனாக்குமே… செய்வான்’ என்றேன். ’நல்ல பையன். ஆனா சொன்ன புக்கிலே பாதிதான் படிப்பான்…சொல்லிட்டே இருக்கணும்’ என்றார் குமார்.
‘ராஜம் உங்க பேச்மேட்டா??’ என்றேன். ‘எனக்கு ஒருவருசம் சீனியர். நான் சேர்ந்தப்ப அவருதான் பேராசிரியர்ருக்கு ஆல் இன் ஆல். அப்ப எப்டி இருப்பாரு தெரியுமா? இங்கல்லாம் சில கோயிலிலே பனந்தடியிலே தூணு போட்டிருப்பான். முத்தின பனந்தடிய நல்லா தேச்சு எடுத்தா கருங்கல்லு தேச்சது மாதிரி மின்னும்….அதுமாதிரி இருப்பாரு.. ஊரிலே அடிமுறை படிச்சிருக்காரு. மகாராஜா காலகட்டத்திலே கரமொழிவு நெலம் குடுக்கப்ப்பட்ட கரைநாடார் குடும்பமாக்கும். கையும்காலும் சும்மா இறுகிக் கனத்து இருக்கும். தலைமுடிய நீட்டி வளத்து பின்னாலே போட்டிருப்பாரு.. மீசைய நல்லா கூர்மையா முறுக்கி சுருட்டி வச்சிருப்பாரு… ஆளைப்பாத்தாச் சரித்திர நாவலிலே வாற கதாபாத்திரம் மாதிரி இருக்கும். நான் முதலிலே பாத்தப்ப கொஞ்சம் பயந்துட்டேன். அட்மிஷன் போட்டு டிபார்ட்மெண்டிலே போயி கிளாஸிலே ஜாயின் பண்ணினதும் பேராசிரியர் ‘ராஜம் இவனை என்னண்ணு கேளுடே’ன்னாரு. பேராசிரியரப் பாத்தா பாவமா இருந்தது. சின்ன உருவம் பாத்தியளா. இவரு ஒருமாதிரி இடும்பன் மாதிரி நிக்கிறாரு. இடைக்கிடைக்கு மீசைய முறுக்கிறதும் உண்டு’
‘பிறகு?’ என்றேன் ‘நான் பயந்துட்டு வெளியேவே நின்னேன். ராஜம் வெளியே வேந்து ‘வே வாருமே சாயா குடிப்போம்’னு விளிச்சாரு. சாய குடிக்கப்போறப்ப ‘எங்கயாக்கும் வீடு?’ன்னு கேட்டாரு. தெரியுமே. ராஜம் எப்பவுமே மெள்ள, நமக்கு மட்டும் கேக்கிறமாதிரித்தான் பேசுவாரு. அந்த குரலை கேட்டப்பம் தெரிஞ்சுபோச்சு இந்தாளு மனசிலே மனுஷங்களுக்க அழுக்குகள் ஒண்ணுக்குமே இடமில்லைன்னு. அப்டியே கெட்டிப்பிடிக்கணும்னுட்டு பொங்கிட்டு வந்தது…’
நான் புன்னகைசெய்து ‘ஆமா…எனக்கும் அண்ணாச்சியை பாக்கிறப்ப எல்லாம் தொட்டு பேசணும்னு தோணியிருக்கு’ என்றேன். ’ராஜம் அன்னைக்கும் இன்னைக்கும் கள்ளமில்லாத்த ஆளாக்கும். ஒருத்தர் மேலேயும் வெறுப்போ கோபமோ பொறாமையோ ஒண்ணும் கெடையாது. எப்பவும் பேராசிரியர் மனசிலே ராஜம்தான் நம்பர் ஒண். ஆரம்பத்திலே ஒரு இது எனக்கும் இருந்தது. என்ன இப்டி இருக்கேன்னு. பிறவு அது அப்டித்தான்னு தெரிஞ்சுகிட்டேன். ராஜம் பேராசிரியர் மனசிலே இருக்கிற எடத்திலே இனி ஒரு மனுஷனும் ஏறி இருக்க முடியாது. அங்க அவருக்கச் சொந்த பிள்ளைக கூட இல்ல. ஏசு இப்பம் பூமிக்கு வந்தாருன்னு வைங்க, சட்டுன்னு ’இந்தாலே ராஜம் இங்க வா’ன்னு அவரைத்தான் முதல்ல கூப்பிட்டு அறிமுகம் செஞ்சு வைப்பாரு..’
’அண்ணாச்சி பிஎச்டி முடிக்கல்ல இல்லியா?’ என்றேன். ‘எங்க? அதுக்குள்ள தீ பற்றி பிடிச்சுப்போட்டுதே..’என்றார் குமார். ‘என்ன தீ?’ குமார் கொஞ்சம் தயங்கியபின் ‘…ராஜம் எப்பவுமே ரொம்ப இளகின ஆளாக்கும். சிவாஜிகணேசனுக்க பிராப்தம்னு ஒரு படத்தை பாத்துட்டு தியேட்டரிலேயே கதறிகூப்பாடு போட்டு அழுது தியேட்டர்காரனுக லைட்டப்போட்டு என்னன்னு பாத்திருக்கதா கேள்விப்பட்டிருக்கேன். அப்டிப்பட்டவரு திடீர்னு லவ்வுலே விழுந்துட்டாரு..’ நான் அதை ஊகித்துவிட்டிருந்தேன். ‘அப்டியா? ஆளு யாரு?’ ‘அதெல்லாம் இப்ப எதுக்கு? அவ ஒரு நாயருபொண்ணு. பெரிய ஃபேமிலி. இங்க்லீஷ் படிச்சிட்டிருந்தா. ஆளைச்சொன்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அவ அண்ணன் இப்பம் மலையாளத்தில ஒரு ரைட்டராக்கும். எக்ஸ்பிரஸிலே வேல பாத்தான்…’
‘ஓ’ என்றேன். ‘அந்தால அத விடுங்க…’ என்றார் குமார். ‘அந்த வயசிலே லவ்வுன்னா என்ன, சின்னப்புள்ளைக பொம்மை எடுக்கிறது மாதிரித்தானே? பாக்கதுக்கு வித்தியாசமா இருந்தா அதுதான் வேணும்னு தோணிடும். வேற எங்கயும் இல்லாததுன்னா பின்ன அது இல்லாம இருக்கமுடியாதுன்னு தோணிடும்…’’
‘அண்ணாச்சியோட கண்ணு ரொம்ப அழகா இருக்கும். அவரு கனிஞ்ச மனுஷர்னு அந்த கண்ணிலேயே தெரியும். மனசிலே ஒரு நல்லதன்மை உள்ள எந்த பொண்ணும் அந்த கண்ணைப் பாத்தா ஆசைப்பட்டிருவா’ என்றேன். குமார் ‘சொல்லப்போனா, கன்னி வயசிலே எல்லா பொண்ணுகளுக்கும் மனசு முழுக்க நல்லதன்மைதான் இருக்கும்… இது பிஞ்சிலே இனிச்சு பழுக்கிறப்ப புளிக்க ஆரம்பிக்கிற கனின்னு பேராசிரியர் ஒருவாட்டி சொன்னாரு… அவ இவர அந்த ஈர்ப்பிலேதான் காதலிக்க ஆரம்பிச்சிருப்பா. ராஜம் பாக்க இரும்பா இருந்தாலும் உள்ள ஐஸ்கிரீமாக்கும். சட்டுன்னு விழுந்துட்டார். இவருக்கு ஒண்ணுக்கும் ஒரு கணக்கும் கெடையாது. பிரியத்துக்கா கணக்கு வச்சுகிட போறாரு? அப்பல்லாம் ராஜத்தைப் பாத்தா எப்டி இருப்பாரு தெரியுமா? சர்ச்சிலே ஆராதனை நடக்குறப்ப பின்வரிசையிலே சில பாவப்பட்ட முகங்கள் அப்டியே மெழுகுதிரி மாதிரி உருகி வழிஞ்சிட்டிருக்கும். அதே மாதிரி.. அந்தக்குட்டி அந்த பிரியத்திலே விழுந்துபோட்டா. காலுதவறி ஆத்துவெள்ளத்திலே விழுற மாதிரி. அவ்ளவுதூரம் போகணும்னு அவளும் நினைச்சிருக்க மாட்டா…ஒண்ணும் செய்ய முடியாம ஆயிட்டா’
‘பிறவு?’ என்றேன். ‘பிறவு என்ன? அது ஒரு சொப்பனம். அதிலே இருந்து வெளியே வந்துதானே ஆகணும்? அவ அம்மைக்கும் அப்பாவுக்கும் விஷயம் தெரிஞ்சப்ப கூப்பிட்டு நாலு சாத்து சாத்தினாங்க. அவ சட்டுன்னு கண்ணத் தெறந்து வெளியே சாடிட்டா. இவரால முடியல்லை. அவ கிட்ட பேசக்கூடாதுன்னு அவளே சொல்லிட்டா. ராஜம் பண்பானவரு. அவ அப்டி சொன்னதுக்குமேலே ஒருநாள் அவகிட்ட ஒரு சொல்லு பேசினதில்லை. அவ போற வாற பாதையிலே நின்னுட்டு பாத்துட்டே இருப்பார். ராத்திரி முழுக்க அவ ஹாஸ்டலுக்கு வாசலிலே அவ ஜன்னலைப்பாத்துட்டு நிப்பார். தூக்கமில்லை. சாப்பாடு இல்லை. கேட்டா பேசறதில்லை. அவருக்க துக்கத்தப் பாத்து தாங்கமுடியாம பேராசிரியர் அவரே போயி அந்த குட்டிகிட்டே பேசினாரு. என் பிள்ளைய கொன்னுடாதேன்னு கையெடுத்து கும்பிட்டிடுருக்காரு. அவ அழ ஆரம்பிச்சிட்டா. அவ அப்பா வந்து பேராசிரியர ரூமுலே போயி பாத்து இனி ஒரு வார்த்தை மிச்சமில்லாம பேசிட்டாரு. நீ வாத்தியாரா இல்ல கல்யாணபுரோக்கரான்னு கேட்டத நானே கேட்டேன்.’
‘பேராசிரியர் ரூமிலே தலை குனிஞ்சு உக்காந்திருந்தாரு… கண்ணுலே இருந்து கண்ணீரா சொட்டுது. அப்ப்டி அழுறமாதிரி என்ன பேசினான்னு எனக்கு ஒரே கொதிப்பு. தாயளிய போயி வெட்டிப்போட்டிரணும்னு நினைச்சேன். ‘எனக்க பிள்ளைக்கு இனி கெதி இல்லியா’ன்னு பேராசிரியர் சொன்னப்பதான் அவரு ராஜத்த நெனைச்சு அழுறாருன்னு தெரிஞ்சுது…எனக்கும் கண்கலங்கிபோட்டுது.’ குமார் சொன்னார். ’அந்தாலெ அந்த குட்டிய டிசி வேங்கி கொண்டுபோயி வேற எங்கயோ சேத்தாங்க. பூனாவிலேயோ பரோடாவிலேயோ…ஒருநாளு ராஜம் வந்தா அவ இல்லேண்ணு தெரிஞ்சுது. வேட்டிய தூக்கி கட்டிகிட்டு கிறுக்கன் மாதிரி மைதானத்தில ஓடி பின்னால போயி மரதடியிலே முட்டி விழுந்து அங்கேயே கெடந்திருக்காரு. அதுக்கு பிறகு அவரு அவளப் பாக்கல்லை. அவளும் பத்திருபது வருசம் கழிச்சுத்தான் திருவனந்தபுரத்துக்கு வேலையா வந்தா’
’அண்ணைக்குத்தான் ராஜத்த நாலு பயக்க கூட்டிட்டு போயி சாராயத்த வாங்கி ஊத்தினது.அதுக்கப்றம் ராஜம் படுகுழி நோக்கி சறுக்கி போய்ட்டே இருந்தாரு. குடிகாரர் ஆகறதுக்கு அதிகமொண்ணும் நாளாகல்லை. ஒரு பதினஞ்சுநாளு. முழுக்க முங்கியாச்சு. ஆரும் ஒண்ணும் செய்யமுடியாது. சொல்லியாச்சு, காலைப்பிடிச்சு அழுதாச்சு. அவருக்க அப்பா ஒருதடவை முத்தாலம்மன் கோயிலிலே கைய வெட்டி ரெத்தத்தை கோயில் படியிலே ஊத்தி ‘இந்தாடீ குடி ..குடி..என் பிள்ளைய எனக்கு திருப்பிக்குடுடீ மூதி’ன்னு சொல்லி சத்தம் போட்டு அழுதிருக்காரு… இனிமே அதைப்பத்தி ஒண்ணும் சொல்லுகதுக்கில்லை…’
பேராசிரியர் குளித்துவிட்டு வந்தார். தலையை நன்றாகத் துவட்டாமல் ஈரம் ஜிப்பாமேல் சொட்டி அதில் சொட்டுநீலத்தின் புள்ளிகள் துலங்கின. ‘தலைய தொடைக்கப்பிடாதா?’ என்று குமார் எழுந்து சென்று அருகே இருந்த துண்டால் அவர் தலையை துடைத்தார். ’குமாரு எனக்க பர்ஸை காணல்ல கேட்டியா?’. ‘அது எதுக்கு இப்ப? கண்ணாடி இருக்குல்ல?’ ‘இருக்குடே’ ‘போரும் வாங்க..’ பேராசிரியர் மெல்ல படி இறங்கி ‘ஏசுவே கர்த்தாவே’ என்று கண்மூடி ஜெபித்து வேனில் ஏறிக்கொண்டார். குமார் ஓட்டினார். நான் பேராசிரியர் அருகே அமர்ந்துகொண்டேன். பேராசிரியர் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பது போல் கம்பராமயணப்பாடலைச் சொல்ல ஆரம்பித்தார்
’ஆவி உண்டு என்னும் ஈது உண்டு, உன் ஆருயிர்
சேவகன் திருவுரு தீண்ட தீய்ந்திலா
பூ இலை தளிர் இலை. பொரிந்து வெந்திலா
கா இலை, கொடி இலை, நெடிய கான் எலாம்’
முதுமையில் தளர்ந்த குரலில் அந்த பாடல் ஏதோ புராதன மந்திரம் போல ஒலித்தது. அதன் அர்த்தம் நெஞ்சுக்கு வருவதற்குள்ளேயே என் மனம் சிலிர்த்தது. ‘ அப்ப நீங்க சொன்ன பாட்டுக்கு ரெண்டுபாட்டு முன்னால உள்ளதாக்கும். ராமன் சீதைய பிரிஞ்சு இருக்கான். அப்ப அவன் படுற துக்கத்த அனுமன் சீதைக்கிட்ட வந்து சொல்லுகான். உயிர் இருக்குன்னு சொல்லப்படுற அந்த உடல் மட்டும் இருக்கு. அவ்ளவுதான். உயிரு இருக்கு, உடலும் இருக்கு. அதுக்கும் மேலே மனுஷன் இருக்கான்னு சொல்ல ஒண்ணு வேணுமே, அது இல்லை. என்னா ஒரு துக்கம்! அந்த நெடியகாட்டிலே உன் கணவனோட திருவுருவத்தை தீண்டினதால காயாத பூவும் இலையும் இல்லை. அவன் துக்கத்தோட சூடு பட்டு பொரிந்து வேகாத காயோ கொடியோ இல்லை..காடே வாடிப்போச்சு… காடே வாடிப்போற துக்கம். நினைச்சுப்பாருடே குமாரு’
குமார் ஓட்டும்போது சாலையில் இருந்து பிரக்ஞையை விலக்குவதில்லை. நான் ‘அவ்ளவு பெரிய துக்கத்தை இயற்கையே தாங்காதுதான்’ என்றேன். பேராசிரியர் பெருமூச்சு விட்டு ‘என்னமா எழுதியிருக்கான். இன்னைக்கு கம்பனை படிக்க ஆளில்லாம ஆயிட்டிருக்கு. ஒரு கல்ச்சருக்கு உச்சம்னா அது மகாகாவியம்தான். கம்பன் நம்ம சமூகத்தோட கோபுரகலசம். ஆனா நம்மாளுக்கு புரிய மாட்டேங்குது. என்ன கருத்துன்னு கேக்கான். அர்த்ததைச் சொல்லுங்கிறான்… அர்த்தம்னா என்னது? துக்கத்துக்கு ஏது அர்த்தம்? துக்கத்தைப் புரிஞ்சவனுக்கு கவிதையிலே மேக்கொண்டு என்னத்தை புரிஞ்சுகிடதுக்கு இருக்கு?’
நான் அண்ணாச்சியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர் ‘கம்பராமாயணத்தை புஸ்தகம் வச்சு வாசிக்கப்படாது. ஒண்ணும் கெடைக்காது, சும்மா போட்டு வர்ணிக்கிறான்னுகூட தோணிடும். குரு வேணும். காவியத்தையும் வாழ்க்கையையும் ஒண்ணாச்சேத்து அவரு சொல்லிக்கொடுக்கணும்…எல்லாருக்கும் வாய்ச்சுக்கிடாது‘ என்றார். அவர் நினைவுகளில் ஆழ்வது போலிருந்தது. ‘பூர்வசென்மமோ என்னமோ, குரு அமைஞ்சார் கவிதை அமைஞ்சுது. மனம் அமைஞ்சுது…எளுதி கொண்டுட்டு வரணும்..வேறென்னத்தச் சொல்ல?’
பேராசிரியர் சட்டென்று கைகூப்பினார் ‘எங்க இருக்காரோ…ஒரு நாளு நாலுதடவயாவது கோட்டாறு குமாரபிள்ளை பேரைச் சொல்லாம இருக்கறதில்லை…மகாரஜன் கண்ணுபாக்கலேண்ணா எங்க இருந்திருப்பேன், என்ன செஞ்சிருப்பேன் ஏசுவே’ கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சுருக்கம் விழுந்த கன்னங்களின் விரிசல்களில் பரவி தாடையில் உருண்டு மடியில் சொட்டியது. கூப்பிய கையுடன் அப்படியே அமர்ந்திருந்தார். நான் குமார் காரை கொஞ்சம் வேகம் குறைக்கலாமே என்று நினைத்தேன். ஆனால் அவர் பின்னால் நிகழ்வதை கவனிக்கவே இல்லை என்று தோன்றியது.
கண்ணீரை துடைத்துக்கொண்டு பேராசிரியர் மெல்ல விசும்பினார். நான் அவரை சந்தித்தபோதெல்லாம் எதற்காகவோ அவர் அழுவதைக் கண்டிருக்கிறேன். கம்பனை நினைத்து , ஏசுவை நினைத்து. முதுமை கனியும்தோறும் மனம் இளகி நெகிழ்ந்து விட்டது போல. இளநுங்குக்குள் குளிர்ந்த பாகு போல ஆன்மா உள்ளே நிறைந்திருக்கிறது. பேராசிரியர் கண்களை துடைத்துக்கொண்டு ‘ஏசுவே, எம்பெருமானே’ என்றார். பின் என்னைப்பார்த்து புன்னகை செய்தார். மிட்டாய்க்கு அழுத குழந்தை அது கிடைத்ததும் கண்ணீருடன் சிரிப்பது போல் இருந்தது. நானும் புன்னகைசெய்தேன்.
‘கோட்டாறு குமாரபிள்ளைய பத்தி சொல்லியிருக்கேனா?’ என்றார். ‘ஆம்’ என்றேன். அது அவருக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. அவர் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டிருந்தார்.’அண்ணைக்கெல்லாம் டிவிடி ஸ்கூலிலே ஒரு அட்மிஷன்னாக்க சாதாரணப்பட்ட விசயம் இல்லை. பலபேரு ஃபீஸு குடுக்கமாட்டாங்கன்னு ஆரம்பத்திலேயே ஃபீஸ வாங்கிடுவாங்க. எனக்க அப்பா ஒரு மேஸன். கொத்தவேலைண்ணா இன்னைக்குள்ள மாதிரி இல்லை. ஆறணா சம்பளமும் உச்சைக்கஞ்சியும். நான் ஸ்கூளிலே இருந்து அப்பன் வேலைசெய்ற எடத்துக்கு போவேன். அந்தக் கஞ்சியிலே பாதிய எனக்கு குடுப்பாரு. எப்பமும் சோலி கிடைக்காது. அப்ப நெய்யூர் ஆஸ்பத்திரிக்குப் போயி ஒரு நேரம் அங்க குடுக்கிற கஞ்சிய வேங்கிட்டு வந்து குடிப்போம். ஆனா நான் படிச்சாகணும்னு அப்பன் நெனைச்சுப்போட்டாரு. அவர மாதிரி ஆளுக ஒரு முடிவெடுத்தா அதை எப்டியும் செய்வாங்க. ஜீவிதத்துக்க ஆழம் வரைக்கும் கண்டவங்களாக்கும்… ’
‘நான் மெட்ரிக் பாஸானதே ஊரிலே ஒரு பெரிய ஆச்சரியம். கொத்தனுக்க மவன் மெட்ரிக் ஜெயிச்சுப்போட்டானே. இனி வெள்ளையும் சட்டையுமா வந்து நிப்பானே? மேல்சாதிக்காரங்க மட்டுமில்ல எங்க சாதியிலேயே பணக்காரனுகளுக்கு எரிஞ்சுது… ‘என்னடே ஞானம், பய எங்க சர்க்காரு வேலைக்கா’ன்னு கேக்காங்க. எனக்க அம்மைக்க நடையே மாறிப்போச்சு. ஆனா அப்பன் அடுத்த தீருமானத்தை எடுத்தாரு. ‘லே, படிக்கியாலே’ன்னாரு. ‘படிக்கேன்’னு சொன்னேன். கூட்டிக்கிட்டு நாகருகோயிலுக்கு போனாரு. எங்க வேதக்கார பள்ளிக்கூடம் நாலு இருக்கு. ஒரிடத்திலயும் முன்பணம் குடுக்காம சீட்டு இல்லேன்னு சொல்லிட்டாங்க. செரி பாப்பமேண்ணு நேரா டிவிடிக்கு போனோம். அங்கயும் அதே கதைதான்.’
பேராசிரியரின் முகத்தின் மாற்றங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ’அப்ப நேரா எதிரிலே பிள்ளைவாள் வாறாரு… வெயிலும் நெழலுமா மாறிமாறி அடிக்க அவரு நடந்துவாறத இப்பமும் நான் பாக்கேன். நல்ல கறுப்பு நெறம். வழுக்கை. காலர் இலலாத வெள்ளை ஜிப்பாதான் போடுவாரு.ரெட்டை மல்லு வேட்டி. ஈரிழை துண்டு ஒண்ணு தோளிலே போட்டிருப்பாரு. சட்டையிலே பேனாவும் ஒரு சின்ன புக்கும். நெத்தி நெறைய விபூதி. தோல்செருப்பு றக்கு றக்குன்னு கேக்கும். அவரு வேட்டி நுனிய இடது கையால புடிச்சுட்டு நிமுந்து நடந்து வாறத பாத்து அப்டியே நின்னுட்டேன். இப்ப, கோடி ரூவா சொத்திருக்கவனுக்கு ஒரு இது இருக்கும். ஆனா ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு பாருங்க, அதை இவன் ஜென்மம் முழுக்க பாத்தாலும் அடைஞ்சுகிட முடியாது
‘நேராட்டு போயி கும்பிட்டுட்டு நின்னேன். அதுக்குள்ள காலிலே நூறு தடவ மானசீகமா விளுந்தாச்சு. ’என்னலே’ன்னாரு. ’அட்மிஷன் வேணும்’னேன். ’அதுக்கு எனக்க கிட்ட எதுக்கு சொல்லுதே. போயி ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லு’ன்னாரு. ’நீங்கதான் எனக்கு குரு’ன்னேன். எப்டி அப்டி சொன்னேன்னு இண்ணைக்கும் தெரியாது. ஒரு குட்டிய பாத்ததுமே இவ போனசென்மத்துல சொந்தம்னு தோணுதும்பாக இல்ல. அதை மாதிரித்தான். நின்னு அப்டியே பாக்காரு.. ஒரு நிமிசம். பிறவு வான்னு கூட்டிட்டுபோயி ‘இந்தா எனக்க பையன்’ன்னு சொல்லி சேத்து விட்டாரு. பீசுக்கும் பைசாவுக்கும் அவரு கேரண்டி, அவருதான் கார்டியன்’.
‘அப்டி அவருகிட்ட சேந்துகிட்டேன். குருவுண்ணா அது வேற மாதிரி உறவாக்கும். இப்ப அறுபத்துநாலு வருசம் தாண்டியாச்சு. பிள்ளைவாள் போயிச்சேந்து நாப்பது வருசம் ஆயாச்சு. இத்தனை காலம் ஒருநாளாவது அவர நெனைக்காம இருந்ததில்லை. இன்னைக்கு அவ மக இருக்கா. என்னைவிட பத்து வயசு குறவு அவளுக்கு. அவமுன்னாடி நான் இருந்து பேசமாட்டேன். அவளுக்க மகன் இருக்கான். இருபது வயசாகேல்ல. பாத்தா குமாரபிள்ளைக்க அதே மொகம். அவன் நிக்க நான் இருந்து பேசுகதில்லை. அப்பம்லாம் காலம்பற கண்ணு முழுச்சா உடனே பிள்ளை ஞாபகம்தான். நேரா போயி நிப்பேன். மனசுவிட்டு அவரு பேச கொஞ்ச நாள் ஆச்சு. பேச ஆரம்பிச்சபின்னே பேச்சோட பேச்சுதான். .காலம்ப்ற ஏழரைக்கு நான் போயி வாசலிலே நிப்பேன். சிவபூசே உண்டு. எட்டுமணிக்கு குளிக்கப்போவாரு .துண்டுதுணி சோப்போட பின்னாலே போவேன். கம்பராமாயணத்த சொல்லிட்டே போவாரு… நல்ல கொரலு. பாடினா மதுரை சோமு மாதிரி இருக்கும். ஆனா சங்கீதத்திலே இஷ்டம் இல்ல. செய்யுளைப்பாடுறதுக்கு மட்டும்தான் ராகஞானம்…’
அந்த வகுப்புகள் வழியாக அவர் மனம் கடந்து செல்வதை உணர முடிந்தது. ‘எல்லாம் சொல்லுவாரு. எலக்கணம், காப்பியம், சாஸ்திரம். கூடவே அவருக்க அனுபவங்கள சொல்லிக்குடுப்பாரு. கருணை இல்லாம கவிதை புரியாதுடான்னு சொல்லுவாரு. சொல்லிச்சொல்லி மனச நெறைய வைச்சிருவாரு…’ சட்டென்று குரல் கிரீச்சிட்டு வழுக்கியது. ‘இருக்கதெல்லாம், அடைஞ்சதெல்லாம் என் தெய்வம் போட்ட பிச்சையல்லோ…வாங்குறதுக்கெல்லாம் என்னமாம் திருப்பிக் குடுக்கோம். குருவுக்கு என்ன குடுக்கோம்? வேறெ என்ன, இந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாரு? இந்த ஏழை சங்கு உருகி அவரை நெனைக்குதேன்னு அய்யனுக்கு தெரியாமலா போயிரும்…’ பேராசிரியர் மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.
சுங்கான்கடை தாண்டியிருந்தது. ‘குமாரு, சுங்கான்கடையாடே? ‘ குமார் ஒன்றும் சொல்லவில்லை. ‘சுங்கான்கடையாடே வந்திருக்கு?’ குமார் ‘ம்க்ம்’ என்று ஒரு ஒலி எழுப்பினார். அவர் தொண்டை அடைத்திருக்கலாமென நினைத்தேன் ‘ஒண்ணுக்கு வருதுடே குமாரு’ குமார் வண்டியை நிறுத்தினார். பேராசிரியர் இறங்கி சாலையோரமாக அமர்ந்து சிறுநீர் கழித்தார். அவருக்கு முப்பத்தைந்து வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு.
மீண்டும் கிளம்பும்போது பேராசிரியர் சொன்னார். ’ஒருமாசம் கழிஞ்சு ஒருநாளு அடுக்களையிலே போயி காப்பி கொண்டுவரச்சொன்னாரு. நானும் அவரு சொன்னதனால போனேன். அவரு ரொம்ப ஆசாரமான ஆளாக்கும். நாஞ்சிநாட்டு பிள்ளமாரு இண்ணைக்குள்ளது மாதிரி இல்ல அப்ப. அவ வீட்டு ஆச்சி அதுக்கும் மேலே. அது எனக்கும் தெரியும். ஆனா நான் சொன்ன சொல்ல அப்டியே செய்யுறவன். ஆச்சி கோவமா முன்வாசலுக்கு வந்து ‘என்ன சொல்லி அனுப்பினியோ? நாடாப்பய அடுக்களையிலே கேறுதானே’ன்னு கேட்டா. அவரு நிதானமா ‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ன்னு சொன்னாரு. ஆச்சி அப்டியே நின்னா. என்னன்னு புரிஞ்சுதோ என்னை ஒரு பார்வை பாத்தா. சட்டுண்ணு உள்ள போயிட்டா. அதுக்கு மறுநாள் முதல் நான் அவளுக்க மகனாக்கும். கறிக்கு அரைச்சு குடுப்பேன். பாத்திரம் களுவிக்குடுப்பேன். அவளுக்கு சேலை துவைச்சு போட்டிருக்கேன். அவளுக்க சகல மனக்குறைகளையும் நிண்ணு கேப்பேன். பிள்ளைவாள் போனபிறவு பதினாறு வருஷம் இருந்தா. அனேகமா வாரம் ஒருக்க போயி பாத்து கையையும் காலையும் பிடிச்சு தடவிவிட்டு சொல்லுகது எல்லாத்தையும் கேட்டுட்டு வருவேன்.. ’ பேராசிரியர் சிரித்தார். ‘அவளுக்கு நான் செவத்த பெண்ண கெட்டேல்லன்னு பயங்கர வருத்தம்…எனக்கு நாலுபிள்ளை பிறந்து மூத்தவ பத்தாம்கிளாஸ் போனதுக்கு பிறவும் வருத்தம் போகல்ல’
‘இங்க படிப்பு முடிஞ்சப்ப கா.சு.பிள்ளைக்கு ஒரு லெட்டரும் குடுத்து என்னைய அண்ணாமலைக்கு அனுப்பினாரு. அங்க பீஏ படிச்சேன். பின்னே எம்.ஏ. பாதி ஃபீசு பிள்ளைவாள் கட்டினதாக்கும். படிப்பு முடிஞ்சப்ப மதுரையிலே எங்க மதத்து காலேஜிலே வேலை கிடைச்சது. ஆனா மூணுமாசம் இருக்க முடியல்லை. நான் சாதாரண நாடான். மூப்புகூடிய குலநாடாருங்க அங்க மதுரைய ஆண்டுகிட்டிருந்தாங்க. மனசுடைஞ்சுபோயி ஒரு லெட்டர் பிள்ளைக்கு எளுதினேன். ‘கெளம்பி வந்திடு, நான் இருக்கேன்’ன்னு எனக்கு ஒரு லெட்டர் போட்டாரு. அந்த லெட்டர் கையில் கிடைச்ச அன்னைக்கு நான் அழுதேன். பெட்டியோட கெளம்பி வந்து வருக்க வீட்டுக்காக்கும் பொயி நிண்ணேன். அவரே திருவனந்தபுரத்துக்கு கூட்டிக்கிட்டு போயி வையாபுரிப்பிள்ளைகிட்ட சேத்து விட்டாரு. ‘வேலை இல்லேன்னூ சொல்லாதே, இவன் எனக்க பையனாக்கும்’னு சொன்னாரு.அப்படி ஆரம்பிச்ச தொளிலு…இது எனக்க தர்மமாக்கும் கேட்டியளா? அவரு சொல்லிக்குடுத்தத முழுக்க நான் இன்னும் எனக்க ஸ்டூடன்ஸுக்கு சொல்லி முடிக்கல்லை..’
நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சம்பந்தமில்லாமல் மீண்டும் மீண்டும் ‘மத்துறு தயிர்’ என்ற சொல்லாட்சி நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. ‘அந்த கம்ப ராமாயணப்பாட்டிலே காடே எரியற துக்கம் பத்தி வருதே…அப்டிப்பட்ட துக்கம் உண்டா என்ன? எல்லா துக்கமும் காலப்போக்கிலே கரைஞ்சிரும்தானே?’ என்றேன். பேராசிரியர் ‘காயம்பட்டா ஆறும். அது உடம்புக்க இயல்பு. ஆனா என்ன மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது. ஆளையும் கொண்டுட்டுதான் போகும்’ என்றார். எனக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. ‘அப்டி ஒரு துக்கம் எப்டி வருது?’ பேராசிரியர் என்னை ஏறிட்டு பார்த்து ‘அது எனக்கும் தெரியல்லை. எதை நம்பி வாழ்க்கைய வச்சுருக்கோமோ அது உடைஞ்சா அந்த துக்கம் வரும்னு குமாரபிள்ளை ஒரு தடவை சொன்னாரு…’
நகருக்குள் நுழைந்ததும் பேராசிரியர் அவரது மனநிலை மாறி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். சின்னக்குழந்தைகள் பார்ப்பது போல ஒவ்வொரு தாண்டிச்செல்லும் வண்டியையும் அது மறைவது வரை தலை திருப்பி பார்த்தார். உயரமான கட்டிடங்களை நிமிர்ந்து பார்த்தார். அஸிசி தேவாலயத்துக்குள் வண்டி நுழைந்ததும் பச்சைமால் கைகூப்பி வந்து கதவை திறந்தார். பேராசிரியர் இறங்கி ‘என்ன பச்சைமாலு…நல்லா இருக்கியா? வாயிலே பல்லு ஒண்ணையும் காணமே’ என்றார். ‘சொல்லு இருக்கு அய்யா’ என்றார் பச்சைமால். பேராசிரியர் சிரித்தார்.
உள்ளே கலைசலான கூட்டம். சற்று அப்பால் வேறு ஏதோ கூட்டம் நடந்துகொண்டிருந்தது போல தோன்றியது. அவர்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக இலக்கியக்கூட்டம் போல் அல்லாமல் பச்சைமால் வாழைமரமெல்லம் நட்டு கொடிகள் கட்டி அலங்காரம் செய்திருந்தார். பெருமாள் வந்து கைகூப்பி ஓரமாக நின்றார். கார்லோஸ் வந்து கைகூப்பி விலகி நின்றார். ‘பெருமாளு’ என்று அவர் கையைத் தொட்டபின் கார்லோஸின் தோளில் கை வைத்து ‘பெங்களூரிலேயாலே இருக்கே?’ என்றார். ’இல்ல, ஆந்திராவிலே.. குப்பம்’
பேராசிரியர் மனைவி டெய்சிபாய் நீளமான குடையும் கைப்பையுமாக வந்து ‘எங்க போனிய? மருந்து எடுத்தியளா?’ என்றார் . குமார் ‘இருக்கு…எல்லா மருந்தும் இருக்கு’ என்றார். ‘பிஸ்கட்டு இருக்கா? சுகர் இறங்கிரும்லா?’ ‘அதுவும் இருக்கு.’ ‘வாங்க நேரமாயாச்சு… இது என்ன சட்டை? வேற நான் எடுத்து வச்சிருந்தேனே? ’ டெய்சிபாய் அவரை இடைவேளையில்லாமல் செல்லமாகத் திட்டிக்கொண்டே இருப்பார். பெருமாள் ‘போலாமே சார்’ என்று பேராசிரியரின் கையைப் பற்றினார்.அவரை அவர்கள் சேர்ந்து மேடைக்கு கொண்டு சென்றார்கள்.
குமார் மெல்ல என்னருகே வந்து ‘ஜெயன், ஒரு சின்ன பிரச்சினை’ என்றார். ‘என்ன?’ என்றேன். ‘ராஜம் சறுவிட்டாரு. சஜின் ஒரு டெஸ்கை தூக்கிப் போடப்போயிருக்கான். அந்த நேரம் பாத்து போயிட்டாரு…’ நான் ‘எங்க போகப்போறாரு? பக்கத்திலே எங்காவது கடையிலே நிப்பாரு’ என்றேன். ‘அப்டி இல்லை…இவரோட எடங்களே வேற…இவரு பட்டை தேடிப் போறவரு. அது எங்க கெடைக்கும்னு யாருக்கு தெரியும்…’ நான் ‘அது தெரிஞ்ச யாரையாவது அனுப்பித் தேடினா என்ன?’ என்றேன். ‘ஏன் அவனுக்கும் நான் குடிக்க காசு குடுக்கணுமா?’ என்றார்
மேடையில் விழா ஆரம்பித்தது. நானும் மேடைக்குச் சென்றேன். ஓரமாக என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். குமரிமாவட்டத்தில் அத்தனை எழுத்தாளர்கள் இருப்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பேராசிரியர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். குமாரைத் தேடுகிறார் என்று தெரிந்தது. குமார் தலைமறைவாகி விட்டார். பச்சைமால் என்னிடம் வந்து குனிந்து ‘பேராசிரியர் ராஜத்தை கேக்கிறார். எங்க இருக்கார்னு தெரியுமா?’ நான் குரூரதிருப்தியுடன் ‘குமாருக்குத்தான் தெரியும்…அவர்கிட்ட கேளுங்க’ என்றேன். ‘முதல்ல குமார் எங்க? ‘. ‘அதை சஜின் கிட்ட கேளுங்க’ பச்சைமால் முகத்தில் பரிதவிப்பு தெரிந்தது.
மேடைக்குப்பின்புறம் உலவி விட்டு பச்சைமால் தொய்ந்து திரும்பி வந்தார். ராஜம் பற்றிய தகவலே இல்லை என்று தோன்றியது. நடுவே பேராசிரியர் கழிப்பறை சென்றார். கூடவே சென்ற பச்சைமால் குமாரை அழைத்து வந்து விட்டுவிட்டார். அவர்கள் பேசிக்கொள்வதை தூரத்தில் இருந்தே பார்த்தேன். பேராசிரியர் குமாரை கடிந்துகொண்டு திரும்பி வந்து அமர்ந்தார். மேடையில் பேச்சுக்கள் நீண்டுகொண்டே சென்றன. பாராட்டுக்கள் மேலும் பாராட்டுக்கள். சம்பிரதாயங்கள் மேலும் சம்பிரதாயங்கள்.
நான் சிறுநீர் கழிக்கச் சென்று செல்பேசியை எடுத்து பார்த்தபோது இரண்டு தவறியஅழைப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றை அழைத்து பேசிக்கொண்டே விலகிச்சென்றேன். பக்கவாட்டில் ஓர் அறைக்குள் அனிச்சையாக கண் திரும்பியபோது அங்கே ஒருவர் இருப்பது போல தோன்றியது. பேசியபடியே பின்னால் நகர்ந்து மீண்டும் உள்ளே பார்த்தேன். கொஞ்சம் அதிர்ந்து பேச்சை விட்டுவிட்டேன். அது அண்ணாச்சிதான். தரையில் சுவரோடு சேர்ந்து குந்தி அமர்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.
பழைய உடைசல்களை வைக்கும் அறை அது. கொடிகளும் அட்டைப்பெட்டிகளும் நிறைந்த அடைசல் நடுவே ஒரு மேஜைநாற்காலி. மறுபக்கம் திறக்கும் சன்னல். நான் அறைக்குள் நுழைந்தேன். அண்ணாச்சி போதை போட்டிருப்பார் என்று நினைத்தேன். அவரை மெல்ல அழைத்துச் சென்று உடைமாற்றிக் கூட்டிவரலாம் என்று எண்ணினேன். அவர் நிமிர்ந்து என்னைப்பார்த்தார். கண்கள் மினுமினுவென்றிருந்தன. தாளமுடியாதபடி வலிக்கும்போது மிருகங்களின் கண்கள் அப்படி இருக்கும். ‘அண்ணாச்சி’ என்றேன்
அவர் ‘..ம்’ என்றார். ‘என்ன இங்க இருந்திட்டீங்க..’ அவர் குடிக்கவில்லை என்று உடனே எனக்கு தெரிந்தது. சட்டை வேட்டி எல்லாமே சுத்தமாக மடிப்பு கலையாமல் இருந்தன. தாடியும் தலைமயிரும் நன்றாகச் சீவப்பட்டிருந்தன. ’என்ன ஆச்சு?’ என்றேன். ‘நல்ல சொகமில்லை…’ என்றார். ’ஏன்? என்ன செய்யுது?’ ‘ஒத்தைத்தலைவலி…அதாக்கும் இருட்டுலே இருந்தேன்…நீங்க போங்க.  ஸ்டேஜிலே விளிப்பாவ’
நான் வெளியே வந்தேன். குமாரை செல்லில் அழைத்து வரச்சொன்னேன். நான் நகர்ந்தால் அண்ணாச்சி சென்றுவிடுவார் என எனக்கு தெரியும். குமார் பாய்ந்து வந்தார். ‘என்ன செய்யுதாரு?’ ‘சும்மா இருக்காரு. தலைவலியாம்’ ‘தண்ணியா?’. ‘இல்ல. வாடை இல்ல’ .‘கஞ்சாவா இருக்குமோ?’. ‘அப்டி தெரியலை…பாருங்க’ என்றபின் நான் மேடைக்குச் சென்றேன். வயதில் நான் தான் இளையவன். கடைசி மரியாதைக்காக என்னை அழைக்க பச்சைமால் பதறிக்கொண்டிருந்தார்.
மேடையில் இருந்து இறங்கி பெருமாளின் கைகளைப்பிடித்து நடக்கும்போது பேராசிரியர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். குமார் என்னிடம் வந்து ‘ராஜத்தை கூப்பிட்டேன். வரமாட்டேன்னு சொல்லுதார். ஒரு நிமிஷம் வந்து தலையக் காட்டிட்டு போங்கன்னா கேக்க மாட்டேங்குதார். ஒரு வார்த்தை பேசி பாக்குதீங்களா?’ என்றார். நான் அறைக்குச் சென்றேன். அதே இடத்தில் அப்படியே ராஜம் அமர்ந்திருந்தார்
‘அண்ணாச்சி, நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம். ஒரு நிமிஷம் முன்னாடி வந்து நில்லுங்க. அவரு என்னடே ராஜம்னு கேப்பாரு. கெளம்பிருவாங்க…அவரால இனி அதிக நேரம் நிக்கமுடியாது…’ என்றேன். ‘இல்ல, வேண்டாம். கட்டாயப்படுத்தாதீங்க’ என்றார். நான் அந்த நாற்காலியில் அமர்ந்தேன். ‘’நாலஞ்சு மாசமா உங்களைப்பத்தி கேட்டுட்டே இருக்காராம். இப்பகூட கேட்டார்’ ராஜம் ஒன்றும் சொல்லவில்லை.
நான் மேலும் முன்னகர்ந்தேன். ‘ஒருவேளை இதாக்கும் கடைசி சந்திப்புன்னு சொன்னாரு. அவரை மாதிரி ஒருத்தர் ஒண்ணும் காணாம அப்டி சொல்ல மாட்டார்… நீங்க இப்ப வந்து பாக்காம போனா ஒருவேளை உங்க வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவீங்க’ அண்ணாச்சியிடம் அசைவே இல்லை. தலையை கொஞ்சம் சரித்து தரையையே பார்த்துக்கொண்டிருந்தார். ‘வாங்க வந்து பாத்துட்டு போங்க…இப்ப நீங்க பாக்கிறதுதான் கடைசி பார்வை…சொன்னா கேளுங்க’
அண்ணாச்சி நிமிர்ந்து ‘அது எனக்கும் தெரியும்’ என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த வார்த்தைகளை அவரை அதிரச்செய்வதற்காகவே சொல்லியிருந்தேன். அண்ணாச்சி ‘வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை விட்டிருங்க’ என்றார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை அசைக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. பெருமூச்சுடன் எழுந்து வெளியே வந்தேன். குமார் ஓடிவந்தார். ‘என்ன சொல்லுகாரு?’ என்றார் ‘அவரு வரமாட்டாரு. அவர கட்டாயப்படுத்துறதில அர்த்தமில்லை’ என்றேன்.
சஜின் ஓடிவந்து ‘பேராசிரியர் கெளம்பறாரு’ என்று குமாரிடம் சொன்னார். குமார் ஓட நான் பின்னால் சென்றேன். டெய்சிபாய் காரில் ஏறி அமர்ந்து சன்னல் வழியாகத் தலை நீட்டி ‘அங்க என்ன செய்யுதாரு? நேரமாகுதுல்லா?’ என்றார். பேராசிரியர் வாசலில் நிற்க அவரது முன்னாள் மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து நின்றார்க்ள். ‘எல்லாருக்கும் நல்லது வரட்டும். கர்த்தாவு அனுக்ரகிப்பாரு. இனி ஆரைத் திரும்பப் பாப்பேனோ தெரியல்லை… அக்கரை கண்ணுல பட்டாச்சு… பாப்பம்’ அவர் தொண்டை இடறியது. திரும்பிக் குமாரைப் பார்த்தார்
குமார் அவருடன் காரை நோக்கி நடந்தார். ‘ராஜம் வரேல்லியா?’ என்றார் பேராசிரியர். குமார் ‘வந்தாரு… இப்பம் எங்க போனாருண்ணு தெரியல்ல’ என்றார். ‘குடிக்கப்போயிருப்பான்…அவனுக்க விதி இப்படி ஆச்சே? இருந்ததிலேயே நல்ல வித்துண்ணு நெனைச்சேனே. கர்த்தருக்க கணக்க அறியாம எனக்க கணக்க வச்சேனே…’ பேராசிரியர் மெல்ல விசும்பினார். பின் கழுத்தின் தொங்குசதைகளும் தொங்கிய கன்னங்களும் இழுபட்டு அதிர தேம்பி அழ ஆரம்பித்தார்.
‘உள்ள கேறுங்க…நேரம் ஆச்சு…’ என்றார் டெய்சிபாய். குமார் கதவைத் திறக்க பேராசிரியர் குமாரின் தோளைப்பற்றிக்கொண்டு நின்று ‘நான் சங்கு பொட்டி சொன்ன ஜெபத்தையெல்லாம் கர்த்தாவு கேக்கல்ல. ஆனாலும் எனக்க சீவனுள்ள வரை நான் ஜெபிப்பேன் குமாரு…எனக்க பயலுக்கு ஒரு கொறையும் வரப்பிடாது…அவன் கர்த்தாவுக்க பிள்ளையாக்கும். அவனுக்க வலியெல்லாம் கர்த்தாவு எடுக்கணும்..’ குமார் அவரை கிட்டத்தட்ட தூக்கிக் காரில் ஏற்றினார். கதவை சாத்தியதும் கார் உறுமி முன்னால் சென்றது.
கார் சென்றபின் குமார் என்னிடம் திரும்பி ‘இது திமிரு. இளுத்துப்போட்டு செவிளுலே நாலு அப்பு அப்பினா செரியாயிரும்…’ என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. குமார் சஜினிடம் ‘நீ எனக்க வண்டிய எடுத்திட்டு வாடே.. நான் எல்லாரையும் விளிச்சிட்டு வாறேன். எல்லாத்தயும் சொன்னாத்தான் செய்வியா? ’ என்று அதே கோபத்துடன் சொல்லி ‘நீங்க எப்டி போறிய?’ என்றார் கோபமாக. ‘நான் பஸ்சிலே போயிருவேன். நேரமாகலைல்லா?’ என்றேன்.
குமார் சென்றதும் நான் அங்கேயே நின்றேன். மெல்ல கூட்டம் கலைந்தது. பின்பக்கம் சிலர் உரக்க இலக்கிய விவாதம் செய்யும் ஓசை. அவர்களில் சிலர் போதையில் இருந்தார்கள் என்று தோன்றியது. உள்ளே போய் அருணாவை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என நான் திரும்பிய போது போர்ட்டிகோவின் இடதுபக்கம்தூணின் நிழலில் இருளுக்குள் ஒண்டியவராக அண்ணாச்சியைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. விளக்குகள் ஒளிவிட வண்டிகள் சென்றுகொண்டிருந்த சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார்
அந்த காட்சியின் ஈர்ப்பினால் நான் அசையாமல் நின்றுகொண்டிருந்தேன். இருள் பரவிய முற்றத்தில் சாலையில் திரும்பும் கார்களின் ஒளிகள் வருடி வருடிக்கடந்து சென்றுகொண்டிருந்தன. அண்ணாச்சியின் முகத்தில் செவ்வொளி பரவிச்சென்றபோது அவர் கழுத்தில் தசைகள் இறுகி இருக்க ,தாடியை சற்றே மேலே தூக்கி, உடல் நடுங்க நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பின்னர் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னால் சென்று பேராசிரியர் மிதித்துச் சென்ற மண்ணை குனிந்து நடுநடுங்கும் கரங்களால் மெல்லத்தொட்டார். குனிந்த தலையுடன் இருட்டுக்குள் சென்று மறைந்தார்.

          பேராசிரியரை அழைத்துவரக் குமார் கிளம்பியபோது என்னையும் அழைத்தார். ‘வாங்க, சும்மா ஒருநடை போய்ட்டு வந்திருவோம்… இங்க இருந்தென்ன செய்ய போறிய? ’. நான், ’அருணா வர்ரதா சொல்லியிருக்கா. வர்ரப்ப இங்க இருக்கலாமேன்னு…’ என இழுத்தேன். ‘ஆமா நீங்க இருந்து ஆரத்தி எடுக்கணும்லா…சும்மா வாங்க’ என்று அவரே காரின் கதவைத் திறந்து வைத்தார். நான் ஏறிக்கொண்டதும் ‘ பெண்டாட்டி மேலே பக்தி வேணும். அதுக்காக கூடிப்போயிரப்பிடாது…’ என்றார்காரைக்கிளப்பியபடி ‘எதுக்கு சொல்றேன்னா இந்தமாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு வாறப்ப பேராசிரியர் ஒருமாதிரி நல்ல மூடிலே இருப்பாரு…அப்ப பேசுத பேச்சு ரொம்ப நல்லா இருக்கும். நீங்க அதைக் கேக்கணும்’ என்றார் குமார். ‘அந்தம்மா கூடவே வருமே அல்லேலூயான்னுட்டு…’ குமார், ‘இல்ல வரேல்ல. அவங்கள ஸ்டீபன் சார் வண்டியிலே வரச்சொல்லியாச்சு. இந்த வண்டி அவங்களுக்கு தலை சுத்துதுண்ணு அவங்களே சொன்னாங்க. செரி, அம்பாசிடர்லே வாங்க அது தலைசுத்தாதுல்லான்னு நானும் சொன்னேன்…நீங்க பதமாட்டுப் பேச்சைக் கம்பராமாயணம் பக்கம் கொண்டு வந்திருங்க. ஏசு,பைபிள்னு ஒரு வார்த்தை வாயிலே வந்திரப்பிடாது.

 

           ஓடை வழிமாறி ஒழுகிரும்..’ குமார் நிதானமாக வண்டியை ஒட்டினார்‘இப்ப மூணு மணிதானே ஆவுது. நிகழ்ச்சி ஆறுக்குல்ல?’ என்றேன்.’இப்பமே லேட்டுன்னாக்கும் எனக்க கணக்கு. இப்ப பேராசிரியர் காலக்கணக்குகெல்லாம் அந்தால போயாச்சு. காலையா சாயங்காலமா ஒண்ணும் நெனைப்பில்ல. அதுக்கு ஏத்தாமாதிரி வல்லவனும் கேறி வந்து இருந்து பேச ஆரம்பிப்பான். எளவு, யாரு என்ன பேசினாலும் சின்னப்புள்ள மாதிரி உக்காந்து கேட்டுட்டு இருப்பாரு. நாம போயி குளிக்க வச்சு, ஜிப்பா வேட்டி போடவச்சு கூட்டிட்டு வரணும்…’ நான் சிரித்து ‘குளிப்பாட்டணுமா?’ என்றேன். ‘போறபோக்கப்பாத்தா அதும் தேவைப்படும்ணாக்கும் நினைக்கேன்’வண்டி புன்னைவனம் முக்கு திரும்பும்போது ‘சஜின்கிட்ட ஒரு காரியம் சொல்லியிருந்தேன். ’லே, உனக்கு காரியங்கள் பாத்து நடத்துத துப்புண்டா இல்லியாண்ணு இதவச்சுத்தான் பாப்பேன்’னு சொன்னேன்… ‘ என்றார் குமார். நான் ‘அவருக்கு இண்ணைக்கு காலேஜ் உண்டுல்ல?’ என்றேன். ‘உண்டு. நேத்து ராத்திரி தான் இந்தக் காரியம் ஞாபகம் வந்தது. இது நாம சமாளிக்கக்கூடிய காரியமில்லை. லே கெளம்பிவாலேன்னு சொன்னேன். காலம்பற எட்டரைக்கே வந்து நிக்கான். செரின்னு அக்காவீடு வரை ஒரு சோலியா அனுப்பிட்டு இப்பம் ஹாலிலே பிடிச்சு நிறுத்தியிருக்கேன்… தமிழ்வாத்தியாராட்டு இருந்தாலும் நல்ல பயதான்.

 

        பாப்பம்’நினைத்ததுபோலவேதான், திண்னையில் பேராசிரியார் வேட்டி மட்டும் கட்டி, பல்லியின் அடிப்பக்கம் போன்ற வெளிறிச்சுருங்கிய சின்ன உடலுடன் உட்கார்ந்து ’கெக் கெக்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார். எதிரே ஒருவன் சட்டை போடாத மயிரடர்ந்த கரிய உடலுடன் மரத்தூணை தழுவிக்கொண்டு உட்கார்ந்து உரத்த குரலில் பேசினான். ‘இஞ்சேருங்க, இந்நா கெடக்கு. லே, இது நீக்கோலிலேண்ணு நான் சொல்லுதேன். பெய என்னண்ணாக்க தெங்கிலே கேறி இருக்கான்…அண்ணா அண்ணான்னு ஒரு நெலவிளி…லே பாம்பு தெங்குமேலே நல்லா கேறும் பாத்துக்கோண்ணேன். ஏசுவே ஏசுவேண்ணு கரையுதான்…’ எங்களை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான்பேராசிரியர் ‘குமாரு, என்னடே விசேசங்க? பிள்ளையள்லாம் சொவமா இருக்கா?’ என்றார் ‘இவன் சொல்லுகத கேட்டியா? பாம்பு பனைகேறுமாம். அக்கானி எடுக்குமாண்ணு தெரியேல்ல ஹஹஹ’ என்றார். குமார் என்னிடம் மெல்ல ‘சுத்தமா ஞாபகம் இல்ல, பாத்துக்கிடுங்க’ என்றபின் ‘கெளம்பல்லியா?’ என்றார். பேராசிரியர் பதற்றம் அடைந்து ‘அய்யோ மறந்துபோட்டேன் கேட்டியாடே.. இண்ணைக்கு ஞாயித்துக்கெழமைண்ணே தெரியல்லை.

 

        கோயிலுக்கு போறத மறக்குத காலம் வந்தாச்சு பாத்துக்கோ’ குமார் கொஞ்சம் எரிச்சலுடன் ‘இண்ணைக்கு ஞாயித்துக்கெழம இல்ல‘ என்றார். ‘இல்லியா?’ என்றார் பேராசிரியர் சந்தேகமாக. ’ஆமா’ .அவர் யோசித்து பலவீனமாக, ‘ஞானராஜுக்க மெவளுக்கு கல்யாணமாக்கும் இல்லியா?’. ‘அது சித்திரையிலே. இப்ப மாசியாக்கும்…’ என்று குமார் அமர்ந்துகொண்டார்நான் அருகே இருந்த திண்ணையில் அமர்ந்தேன். பேராசிரியர் என்னைப்பார்த்து பிரியமாக புன்னகை செய்ததும் அவர் என்னை வேறு யாரோவாக எண்ணுகிறார் என்று தோன்றியது. அவர் ‘பாஸ்டர் எப்ப வந்திய?’ என்று கேட்டதும் நான் புன்னகை புரிந்தேன். குமார் ‘இன்னைக்கு குமரிமன்றம் நிகழ்ச்சியாக்கும். நீங்க வாறிய…’ என்றார். பேராசிரியர் வியந்து முகம் மலரச்சிரித்து ’அதாக்கும் சங்கதி இல்லியா? டெய்சி போறப்ப சொல்லிட்டு போனா. அவன் என்ன சொல்லிட்டு போனான்னு மறந்துட்டேம்டே குமாரு.. ‘ என்று என்னை பார்த்தார். ‘இது ஜெயமோகன். கதைகள் எளுதுகாருல்லா?’ பேராசிரியர் சட்டென்று என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘அய்யோ…நேத்தாக்கும் நான் மாடன் மோட்சம் படிச்சது. அதாக்கும் கதை. கிளாஸிக்கு. குமாரு நீ படிச்சிருக்கியா? ’ குமார் ‘படிச்சிருக்கேன். நீங்க குளிக்கல்லேல்லா? குளிச்சுட்டு கெளம்பத்தான் நேரம் செரியா இருக்கும்…’ என்றார்அவரது பேத்தி வந்து எட்டிப்பார்த்து புன்னகை செய்தார். ‘வெந்நி போடுதியா?’ எனக் குமார் கேட்டார். ‘சொல்லேல்லியே’ என்றாள் அவள்.

 

       ‘போட்டிரு…இப்பம் கெளம்பணும்’ அவள் உள்ளே சென்றதும் அந்த ஆள் ‘..பின்னயாக்கும் ரெசம், அது பாம்பில்லே கேட்டியளா?’ என்று ஆரம்பித்தார். ‘பின்னே?’ என்றார் பேராசிரியர் பேராவலுடன். ‘லே போலே..போ போ ‘என்று குமார் அவனை அதட்டி கிளம்பச்செய்தார். அவன் முகத்தால் கிளம்புகிறேன் என்று சைகை காட்டி எழுந்து சென்றான். ‘எங்கயாக்கும்டே குமாரு நிகழ்ச்சி?’ என்றார் பேராசிரியர் ‘அசிசி பள்ளிக்கூடத்திலே. நம்மா ஜில்லாவிலே உள்ள எல்லா ரைட்டர்ஸும் உண்டு.எல்லாரையும் பச்சைமால் கௌரவிக்கிறாரு’பேராசிரியர் சிரித்துக்கொண்டு ‘அதுக்கு நான் என்னத்துக்குடே? ’என்றார். நான் ‘நீங்க ஒரு ரைட்டருக்க ஓனருல்ல?’ என்றேன். பேராசிரியர் வெடித்துச்சிரித்து புரைக்கேறி தடுமாறினார். ‘கேட்டியாடே குமாரு, ரைட்டரை வளர்த்துதது கஷ்டமாக்கும் பாத்துக்கோ…’ என்று மீண்டும் சிரித்தார். நான் அவரை அப்போதே கம்பராமாயண மனநிலைக்குள் இட்டுச்செல்ல முடிவு செய்து, ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பாடலை எடுத்தேன். ’நேத்து கம்பராமாயணத்திலே ஒரு பாட்டு படிச்சப்ப உங்கள நினைச்சுகிட்டேன்’ என்றேன்.பேராசிரியர் முகம் நெகிழ்ந்தது. ‘கம்பனை படிச்சேளா? நேத்தா? அது ஒரு சுப முகூர்த்தம் பாருங்க. அப்டி சட்டுன்னு நம்ம கை அங்க போயிடாது. போக வைக்கிறது அவனாக்கும். இப்ப நாம கம்பராமாயணம் பேச ஆரம்பிச்சாச்சுல்லா, இந்த இங்கிண அவன் வந்து நிக்கான். என்னால அவன் நிக்கதை ஃபீல் பண்ண முடியுது…. அவன் சாகாப்பெருங்கவியில்லா? மானுடம் கண்ட மகாகவியில்லா…’ என்று பரவசம் கொண்டு , புருவங்கள் மேலே வளைய ‘என்ன பாட்டு?’ என்றார்நான் அந்தப்பாடலைச் சொன்னேன்.

 

       மத்துறு தயிர் என வந்து சென்று இடைதத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனைஎத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?’பாட்டை இப்டிச் சொல்லப்படாது, பாடணும். இதை ஆபேரியிலே மொள்ளமா பாடிப்பாருங்க…’ அவர் பாடலை உருக்கமாகப் பாடினார். முகத்தில் தளர்ந்த தசைகள் உணர்ச்சிகளால் கொடித்துணிகள் காற்றிலாடுவது போல நெளிந்தன. ‘என்னான்னு சொல்லிப்போட்டான் பாத்தேளா? நின் பிரிவினிற் பிறந்த வேதனை. பிரிவுக்கு இணையான வேதனை உண்டா? ஏன்னா மனுஷன் தனியாளு இல்ல கேட்டேளா? ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தர் கூட ஒட்டியிருக்கான். அவன் இன்னொருத்தர்கூட ஒட்டிக்கிட்டிருக்கான். கையும் காலும் வெரலும் உடம்பிலே ஒட்டிக்கிட்டிருக்கது மாதிரி மனுஷன் மானுடத்தோட ஒட்டிகிட்டிருக்கான். பிரிவுங்கிறது அந்த பெரிய கடலிலே இருந்து ஒரு துளி தனிச்சுப்போறதாக்கும். சாவும் பிரிவும் ஒண்ணு. எல்லா பிரிவும் சின்னச்சின்னச் சாவாக்குமே…’பேராசிரியர் குரலில் முதுமையின் நடுக்கம் மறைந்து உணர்ச்சியின் வேறுவகை நடுக்கம் குடியேறுவதை கவனித்தேன். குரல் ஓங்கி ஒலித்தது. கொஞ்சம் கிரீச்சிடக்கூடிய மென்குரல். ‘வேதனை எத்தனை உள, அவை எண்ணும் ஈட்டவோங்கிறான் பாருங்க.

 

        மானுடனுக்கு வேதனைன்னா ஒண்ணு ரெண்டு இல்ல. முடிவே கெடையாது. விதவிதமாட்டு. நிமிசத்துக்கு நிமிசம் ஒண்ணுன்னு…அவை எண்ணும் ஈட்டவோ.. அவற்றையெல்லாம் எண்ணிப்பாக்க முடியுமா? வேண்டியவங்கள பிரிஞ்சுட்டான்னு சொன்னா அம்பிடு வேதனையும் ஒருத்தனுக்கே வந்திரும் …கர்த்தரே…மனுஷனை இத்தனை வேதனைய வச்சு நீர் சுத்தப்படுத்தி உம் காலடிக்குக் கொண்டு செல்றீரே.. எல்லா துக்கமும் உமது கருணை தானே ஏசுவே..’நான் கவனமாகப் பேச்சை நகர்த்தினேன். ‘புலன்கள் தள்ளுறும் பித்து’ன்னு எதைச்சொல்றான்னு புரியுது. அந்த அளவுக்கு பிரிவோட துக்கம் இருந்தா ஐம்புலன்களும் சரிஞ்சிரும். ஆனா ’மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரோடு’ன்னு ஏன் சொல்றான்? மத்தாலே கடையற மாதிரி உயிர் அலைக்கழியுதுங்கிறான். சரி, அதை வந்துசென்றுன்னு ஏன் சொல்றான். இடை தத்துறும் உயிர்னா மத்திலே கடையறப்ப வந்தும்போயும் நடுவிலே கிடந்து தத்தளிக்கிற உயிர். அதான் புரியல்லை. மத்தால கடையறப்ப எது அப்டி வந்தும் போயும் இருக்கு?’’கம்பன் மகாகவி. மகாகவிகள்லாம் சின்னப்பிள்ளைங்க மாதிரி. சும்மா ஸெரிபெரலாட்டெல்லாம் யோசிக்க மாட்டாங்க. கண்ணால கண்டதைத்தான் சொல்லுவாங்க. செரி, அவன் எங்க சொல்றான், அவன் ஒரு கிறுக்கன்லா? அவன் நாக்கில இருக்கற சரஸ்வதில்லா சொல்லுகா…’ பேராசிரியர் சொன்னார்.

 

       எழுந்து நின்று தயிர்கடைவதுபோல கையால் நடித்தார். ‘மத்தால கலயத்திலே தயிர் கடையற காட்சிய நாம கற்பனையிலே பாக்கணும். கலயம்தான் உடல் .உயிர்ங்கிறது அதுக்குள்ள இருக்கிற தயிர். மத்து அந்தத் துன்பம். துன்பம் உயிரைப்போட்டு கடையுது. கடையற தயிர் எப்டி இருக்கும் பாத்திருக்கேளா? ஒருபக்கமாட்டு சுத்திச்சுழன்று நொரையோட மேலேறி இந்தா இப்ப தளும்பி வெளியே பாஞ்சிரும்னு வரும். உடனே மத்து அந்தப்பக்கமாட்டு சுத்தும். அந்தப் பக்கமாட்டும் அது வெளிய சாடீரும்னு போயி உடனே இந்தப்பக்கமாட்டு சுத்தும். ஒரு செக்கண்டு நிம்மதி கெடையாது. நுரைச்சு பதைஞ்சு …மனுஷனோட பெருந்துக்கமும் அதேமாதிரித்தான். அந்த அலைக்கழிப்பு இருக்கே அதாக்கும் கொடுமை. இதுவா அதுவா, இப்டியா அப்டியான்னு. வாழவும் விடாம சாகவும் விடாம… அதைச் சொல்லுதான் கம்பன்’நான் அந்தக்காட்சியை கண்டுகொண்டிருந்தேன். பேராசிரியர் ‘அது மட்டுமில்லை. அவன் சொல்லு ரெண்டுபக்கமும் முனையுள்ள வாளாக்கும். முந்தின பாட்டப் பாத்தியளா?’ நான் அதை நினைவுகூரவில்லை. ‘நீ சொல்லுடே குமாரு’ . குமார் வெட்கி சிரித்து ‘ஓர்மையில்லை’ என்றார். ’நீ வெளங்கினே.. அண்னைக்குமுதல் இண்ணைக்கு வரை அந்த லெச்சணம்தான்.. என்னத்தை படிச்சியோ என்னமோ’ . பேராசிரியர் அவரே சொன்னார் ‘சோகம் வந்து உறுவது தெளிவு’ ன்னு அந்த பாட்டு ஆரம்பிக்குது கேட்டேளா? அந்த பாட்டுக்க அடுத்ததுதான் இது. மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணை வரும்.

 

         துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. பால்கடலை கடைஞ்சுல்லா அமுதம் எடுத்தாங்க. அமுதம்னா சாகாமை. அதாக்கும் நான் சொன்னது துக்கம் ஏசுவுக்க காலடியிலே போய் சேருறதுக்குண்டான வழின்னு…டே, இப்பம் நீ சர்ச்சுக்கு போறதுண்டா?’குமார் ‘போவணும்’ என்றார். ‘நீ வாழ்ந்தே…அண்ணைக்கும் இண்ணைக்கும் ஒரே முகரையாக்குமே..’ . பேத்தி வந்து ‘தண்ணி சுட்டாச்சு’ என்றார். பேராசிரியர் எழுந்து ‘குளிச்சுட்டு வாறண்டே குமாரு..’ என்றார். குமார் பேத்தியிடம் ‘வேட்டி ஜிப்பா எடுத்து வையி. ஒரு நிகள்ச்சிக்காக்கும் போறது’ என்றார். பேராசிரியர் ‘நிகள்ச்சியிலே எல்லா பயகளும் வருவானுகளாடே?’ என்றார். ‘எல்லாரும் உண்டு. கார்லோஸ், பெருமாள் எல்லாரும் வாறாங்க’ என்றார் குமார். ‘ராஜம் வாறானா?’ என்றார் பேராசிரியர். குமார் கொஞ்சம் தயங்கி ‘வருவாரு’ என்றார். ‘அவனப் பாக்கணும்டே…போனவாரம் ஒரு சொப்பனம். அந்த பயலுக்கு ஒரு பிரைஸ் கிட்டுது. கவிதைக்கோ நாவலுக்கோ. தெரியேல்ல. பிரைஸ் குடுக்கியது நேருவாக்கும்…’நான் சிரித்து ‘நேருவா?’ என்றேன். பேராசிரியர் ’சொப்பனமாக்குமே…நேரு இப்பம் என்னை மாதிரிக் கதர் உடுக்கிறவங்களுக்க சொப்பனத்திலே இல்ல இருக்காரு? நேரு இவனுக்கு பிரைஸ் குடுக்காரு. இவன் நல்லா வெளுத்த ஜிப்பாவெல்லாம் போட்டு நல்ல ஸ்டைலாட்டு போயி வாங்கிட்டு மைக்கு முன்னால வந்து நின்னு நன்றி சொல்லுகான்…அவன் எனக்க பேரைச் சொல்லுகான்.

 

        லே குமாரபிள்ள பேரச் சொல்லுலே…குமாரபிள்ளைய விட்டுட்டேலேன்னு நான் கெடந்து சத்தம் போடுதேன். அவன் கேக்கேல்ல. சபையிலே ஆரும் கேக்கேல்ல.. அப்பம் முழிப்பு வந்து போட்டு’ என்றார். பெருமூச்சுடன் ‘அவன பாக்கணும்டே குமாரு. என்னமோ இனிமே அவனை பாத்துக்கிட முடியாதுன்னு ஒரு நெனைப்பு மனசிலே , கேட்டியா?’‘குளிச்சுட்டு வாங்க.நேரமாச்சு’ என்றார் குமார். பேராசிரியர் ‘இப்பம் வந்திருதேன்..’ என்று உள்ளே சென்றார். குமார் என்னிடம் ‘இப்பம் கொஞ்ச நாளா எப்ப பேசினாலும் ராஜத்தைப்பத்தியாக்கும் பேச்சு. அடிக்கடி கனவும் வருது’ என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘அதுபின்ன, வழிதவறின ஆடாக்குமே.. எடையன் அதைத்தானே நெனைப்பான்?’ நான் புன்னகை செய்தேன்.’போனவருசம் ராமசாமி மக கல்யாணவிருந்துக்கு போனப்ப ராஜத்த பாத்தாரு… நானும் கூட உண்டு அப்பம். ரோட்டிலே இவரு எறங்கிற நேரம் அவர் எதுக்கால வந்திட்டாரு. நான் ராஜத்தை பாக்கலை. இவராக்கும் முதலிலே பாத்தது. ‘அது நம்ம ராஜமாக்குமே’ன்னு கேட்டாரு. ராஜம் இவர எதிர்பாக்கல்லை.சட்டை முளுக்க அழுக்கு. தலையில மண்ணு. கட்டயன்வெளை கோபாலனும் அவருமாச் சேந்து எங்கியோ போயி நல்லா குடிச்சு கீழ விளுந்து அப்டியே எந்திரிச்சு வாறாங்க… ‘ராஜம் நீயாலே மக்கா?’ன்னு இவரு கேட்டதும் ராஜம் அப்டியே தரையிலே உக்காந்து தலையிலே கைய ரெண்டையும் வச்சுகிட்டார். கோபாலன் ஆடிகிட்டே ‘ஸ்மால் டிரிங்கு.

 

       ஒன்லி விஸ்கி’ன்னு என்னமோ சொல்லுதாரு. ராஜம் தேம்பிதேம்பி அழுவுதார். நான் ‘வாங்கன்னு’ கூட்டிட்டு வண்டியிலே ஏத்திட்டேன். ‘அவன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போடே, அவனுக்கு உடம்பு செரியில்லே’ன்னு வண்டியிலே கிடந்து அனத்துதாரு. குடிக்கிற ஆளுகளைப் பேராசிரியர் அதிகம் பாத்ததில்லே…இந்த மாதிரி குடி நெனைச்சே பாத்திருக்க மாட்டாருல்லா…’ குமார் சொன்னார்.‘ராஜம் இப்டீன்னு ஊருக்கே தெரியுமே’ என்றேன் ‘அது பேராசிரியருக்கு இருபத்தஞ்சு வருசமா தெரியுமே… ஆனா இது இந்த ஓவியமா இருக்கும்னு தெரியாது… அதைச் சொன்னேன். ராஜம் இப்பிடி ஆனது பேராசிரியர்ருக்க கண்ணுக்கு முன்னாலயில்லா? அவரு ராஜத்தை வெளியே கொண்டுவர என்னெனமோ செஞ்சிருக்காரு… அந்த குட்டிக்க காலிலே விழப்போனாருல்லா?’ . ‘எந்தக்குட்டி?’ என்றேன். குமார் ‘அது போட்டு , இப்பம் அதைப்பற்றி என்னவாக்கும் பேச்சு?’ என்றார். ‘இல்ல, சொல்லுங்க’ என்றேன்.குமார் ‘நான் சஜினை வரச்சொன்னதே ராஜத்தை கொண்டுவந்து ஒருமாதிரி நிதானமா பேராசிரியர் முன்னால நிறுத்துறதுக்காக்கும். ஒரு மூணுமணிக்கு கூட்டிட்டுபோயி நல்ல லார்ஜ் ஒண்ணு வாங்கி குடுக்கச்சொன்னேன்’‘அய்யோ’ என்றேன். ‘காரியம் இருக்கு. காலையிலே இருந்தே குடிக்கல்லேண்ணா நிக்க மாட்டார். மூணுமணிக்கு குடிச்சா அஞ்சுக்குள்ள எறங்கிரும்.

 

         நேரா கொண்டுபோயி ராமசாமி வீட்டுக்குள்ள கேற்றி முகம்கழுவி நல்ல சட்டை வேட்டி மாத்தி அப்டியே கூட்டிட்டு வந்து முன்னால நிப்பாட்டிட்டு விட்டுட்டோம்னா சோலி தீந்துது. ஒரு நல்ல வேட்டியும் சட்டையும் கொண்டு போயி வச்சிருக்கு…’ என்றார். ‘சஜின், உங்க சிஷ்யனாக்குமே… செய்வான்’ என்றேன். ’நல்ல பையன். ஆனா சொன்ன புக்கிலே பாதிதான் படிப்பான்…சொல்லிட்டே இருக்கணும்’ என்றார் குமார்.‘ராஜம் உங்க பேச்மேட்டா??’ என்றேன். ‘எனக்கு ஒருவருசம் சீனியர். நான் சேர்ந்தப்ப அவருதான் பேராசிரியர்ருக்கு ஆல் இன் ஆல். அப்ப எப்டி இருப்பாரு தெரியுமா? இங்கல்லாம் சில கோயிலிலே பனந்தடியிலே தூணு போட்டிருப்பான். முத்தின பனந்தடிய நல்லா தேச்சு எடுத்தா கருங்கல்லு தேச்சது மாதிரி மின்னும்….அதுமாதிரி இருப்பாரு.. ஊரிலே அடிமுறை படிச்சிருக்காரு. மகாராஜா காலகட்டத்திலே கரமொழிவு நெலம் குடுக்கப்ப்பட்ட கரைநாடார் குடும்பமாக்கும். கையும்காலும் சும்மா இறுகிக் கனத்து இருக்கும். தலைமுடிய நீட்டி வளத்து பின்னாலே போட்டிருப்பாரு.. மீசைய நல்லா கூர்மையா முறுக்கி சுருட்டி வச்சிருப்பாரு… ஆளைப்பாத்தாச் சரித்திர நாவலிலே வாற கதாபாத்திரம் மாதிரி இருக்கும். நான் முதலிலே பாத்தப்ப கொஞ்சம் பயந்துட்டேன். அட்மிஷன் போட்டு டிபார்ட்மெண்டிலே போயி கிளாஸிலே ஜாயின் பண்ணினதும் பேராசிரியர் ‘ராஜம் இவனை என்னண்ணு கேளுடே’ன்னாரு. பேராசிரியரப் பாத்தா பாவமா இருந்தது.

 

       சின்ன உருவம் பாத்தியளா. இவரு ஒருமாதிரி இடும்பன் மாதிரி நிக்கிறாரு. இடைக்கிடைக்கு மீசைய முறுக்கிறதும் உண்டு’‘பிறகு?’ என்றேன் ‘நான் பயந்துட்டு வெளியேவே நின்னேன். ராஜம் வெளியே வேந்து ‘வே வாருமே சாயா குடிப்போம்’னு விளிச்சாரு. சாய குடிக்கப்போறப்ப ‘எங்கயாக்கும் வீடு?’ன்னு கேட்டாரு. தெரியுமே. ராஜம் எப்பவுமே மெள்ள, நமக்கு மட்டும் கேக்கிறமாதிரித்தான் பேசுவாரு. அந்த குரலை கேட்டப்பம் தெரிஞ்சுபோச்சு இந்தாளு மனசிலே மனுஷங்களுக்க அழுக்குகள் ஒண்ணுக்குமே இடமில்லைன்னு. அப்டியே கெட்டிப்பிடிக்கணும்னுட்டு பொங்கிட்டு வந்தது…’நான் புன்னகைசெய்து ‘ஆமா…எனக்கும் அண்ணாச்சியை பாக்கிறப்ப எல்லாம் தொட்டு பேசணும்னு தோணியிருக்கு’ என்றேன். ’ராஜம் அன்னைக்கும் இன்னைக்கும் கள்ளமில்லாத்த ஆளாக்கும். ஒருத்தர் மேலேயும் வெறுப்போ கோபமோ பொறாமையோ ஒண்ணும் கெடையாது. எப்பவும் பேராசிரியர் மனசிலே ராஜம்தான் நம்பர் ஒண். ஆரம்பத்திலே ஒரு இது எனக்கும் இருந்தது. என்ன இப்டி இருக்கேன்னு. பிறவு அது அப்டித்தான்னு தெரிஞ்சுகிட்டேன். ராஜம் பேராசிரியர் மனசிலே இருக்கிற எடத்திலே இனி ஒரு மனுஷனும் ஏறி இருக்க முடியாது. அங்க அவருக்கச் சொந்த பிள்ளைக கூட இல்ல. ஏசு இப்பம் பூமிக்கு வந்தாருன்னு வைங்க, சட்டுன்னு ’இந்தாலே ராஜம் இங்க வா’ன்னு அவரைத்தான் முதல்ல கூப்பிட்டு அறிமுகம் செஞ்சு வைப்பாரு..’’அண்ணாச்சி பிஎச்டி முடிக்கல்ல இல்லியா?’ என்றேன்.

 

       ‘எங்க? அதுக்குள்ள தீ பற்றி பிடிச்சுப்போட்டுதே..’என்றார் குமார். ‘என்ன தீ?’ குமார் கொஞ்சம் தயங்கியபின் ‘…ராஜம் எப்பவுமே ரொம்ப இளகின ஆளாக்கும். சிவாஜிகணேசனுக்க பிராப்தம்னு ஒரு படத்தை பாத்துட்டு தியேட்டரிலேயே கதறிகூப்பாடு போட்டு அழுது தியேட்டர்காரனுக லைட்டப்போட்டு என்னன்னு பாத்திருக்கதா கேள்விப்பட்டிருக்கேன். அப்டிப்பட்டவரு திடீர்னு லவ்வுலே விழுந்துட்டாரு..’ நான் அதை ஊகித்துவிட்டிருந்தேன். ‘அப்டியா? ஆளு யாரு?’ ‘அதெல்லாம் இப்ப எதுக்கு? அவ ஒரு நாயருபொண்ணு. பெரிய ஃபேமிலி. இங்க்லீஷ் படிச்சிட்டிருந்தா. ஆளைச்சொன்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அவ அண்ணன் இப்பம் மலையாளத்தில ஒரு ரைட்டராக்கும். எக்ஸ்பிரஸிலே வேல பாத்தான்…’‘ஓ’ என்றேன். ‘அந்தால அத விடுங்க…’ என்றார் குமார். ‘அந்த வயசிலே லவ்வுன்னா என்ன, சின்னப்புள்ளைக பொம்மை எடுக்கிறது மாதிரித்தானே? பாக்கதுக்கு வித்தியாசமா இருந்தா அதுதான் வேணும்னு தோணிடும். வேற எங்கயும் இல்லாததுன்னா பின்ன அது இல்லாம இருக்கமுடியாதுன்னு தோணிடும்…’’‘அண்ணாச்சியோட கண்ணு ரொம்ப அழகா இருக்கும். அவரு கனிஞ்ச மனுஷர்னு அந்த கண்ணிலேயே தெரியும். மனசிலே ஒரு நல்லதன்மை உள்ள எந்த பொண்ணும் அந்த கண்ணைப் பாத்தா ஆசைப்பட்டிருவா’ என்றேன். குமார் ‘சொல்லப்போனா, கன்னி வயசிலே எல்லா பொண்ணுகளுக்கும் மனசு முழுக்க நல்லதன்மைதான் இருக்கும்… இது பிஞ்சிலே இனிச்சு பழுக்கிறப்ப புளிக்க ஆரம்பிக்கிற கனின்னு பேராசிரியர் ஒருவாட்டி சொன்னாரு… அவ இவர அந்த ஈர்ப்பிலேதான் காதலிக்க ஆரம்பிச்சிருப்பா. ராஜம் பாக்க இரும்பா இருந்தாலும் உள்ள ஐஸ்கிரீமாக்கும்.

 

          சட்டுன்னு விழுந்துட்டார். இவருக்கு ஒண்ணுக்கும் ஒரு கணக்கும் கெடையாது. பிரியத்துக்கா கணக்கு வச்சுகிட போறாரு? அப்பல்லாம் ராஜத்தைப் பாத்தா எப்டி இருப்பாரு தெரியுமா? சர்ச்சிலே ஆராதனை நடக்குறப்ப பின்வரிசையிலே சில பாவப்பட்ட முகங்கள் அப்டியே மெழுகுதிரி மாதிரி உருகி வழிஞ்சிட்டிருக்கும். அதே மாதிரி.. அந்தக்குட்டி அந்த பிரியத்திலே விழுந்துபோட்டா. காலுதவறி ஆத்துவெள்ளத்திலே விழுற மாதிரி. அவ்ளவுதூரம் போகணும்னு அவளும் நினைச்சிருக்க மாட்டா…ஒண்ணும் செய்ய முடியாம ஆயிட்டா’‘பிறவு?’ என்றேன். ‘பிறவு என்ன? அது ஒரு சொப்பனம். அதிலே இருந்து வெளியே வந்துதானே ஆகணும்? அவ அம்மைக்கும் அப்பாவுக்கும் விஷயம் தெரிஞ்சப்ப கூப்பிட்டு நாலு சாத்து சாத்தினாங்க. அவ சட்டுன்னு கண்ணத் தெறந்து வெளியே சாடிட்டா. இவரால முடியல்லை. அவ கிட்ட பேசக்கூடாதுன்னு அவளே சொல்லிட்டா. ராஜம் பண்பானவரு. அவ அப்டி சொன்னதுக்குமேலே ஒருநாள் அவகிட்ட ஒரு சொல்லு பேசினதில்லை. அவ போற வாற பாதையிலே நின்னுட்டு பாத்துட்டே இருப்பார். ராத்திரி முழுக்க அவ ஹாஸ்டலுக்கு வாசலிலே அவ ஜன்னலைப்பாத்துட்டு நிப்பார். தூக்கமில்லை. சாப்பாடு இல்லை. கேட்டா பேசறதில்லை. அவருக்க துக்கத்தப் பாத்து தாங்கமுடியாம பேராசிரியர் அவரே போயி அந்த குட்டிகிட்டே பேசினாரு. என் பிள்ளைய கொன்னுடாதேன்னு கையெடுத்து கும்பிட்டிடுருக்காரு.

 

           அவ அழ ஆரம்பிச்சிட்டா. அவ அப்பா வந்து பேராசிரியர ரூமுலே போயி பாத்து இனி ஒரு வார்த்தை மிச்சமில்லாம பேசிட்டாரு. நீ வாத்தியாரா இல்ல கல்யாணபுரோக்கரான்னு கேட்டத நானே கேட்டேன்.’‘பேராசிரியர் ரூமிலே தலை குனிஞ்சு உக்காந்திருந்தாரு… கண்ணுலே இருந்து கண்ணீரா சொட்டுது. அப்ப்டி அழுறமாதிரி என்ன பேசினான்னு எனக்கு ஒரே கொதிப்பு. தாயளிய போயி வெட்டிப்போட்டிரணும்னு நினைச்சேன். ‘எனக்க பிள்ளைக்கு இனி கெதி இல்லியா’ன்னு பேராசிரியர் சொன்னப்பதான் அவரு ராஜத்த நெனைச்சு அழுறாருன்னு தெரிஞ்சுது…எனக்கும் கண்கலங்கிபோட்டுது.’ குமார் சொன்னார். ’அந்தாலெ அந்த குட்டிய டிசி வேங்கி கொண்டுபோயி வேற எங்கயோ சேத்தாங்க. பூனாவிலேயோ பரோடாவிலேயோ…ஒருநாளு ராஜம் வந்தா அவ இல்லேண்ணு தெரிஞ்சுது. வேட்டிய தூக்கி கட்டிகிட்டு கிறுக்கன் மாதிரி மைதானத்தில ஓடி பின்னால போயி மரதடியிலே முட்டி விழுந்து அங்கேயே கெடந்திருக்காரு. அதுக்கு பிறகு அவரு அவளப் பாக்கல்லை. அவளும் பத்திருபது வருசம் கழிச்சுத்தான் திருவனந்தபுரத்துக்கு வேலையா வந்தா’’அண்ணைக்குத்தான் ராஜத்த நாலு பயக்க கூட்டிட்டு போயி சாராயத்த வாங்கி ஊத்தினது.அதுக்கப்றம் ராஜம் படுகுழி நோக்கி சறுக்கி போய்ட்டே இருந்தாரு. குடிகாரர் ஆகறதுக்கு அதிகமொண்ணும் நாளாகல்லை. ஒரு பதினஞ்சுநாளு. முழுக்க முங்கியாச்சு.

 

         ஆரும் ஒண்ணும் செய்யமுடியாது. சொல்லியாச்சு, காலைப்பிடிச்சு அழுதாச்சு. அவருக்க அப்பா ஒருதடவை முத்தாலம்மன் கோயிலிலே கைய வெட்டி ரெத்தத்தை கோயில் படியிலே ஊத்தி ‘இந்தாடீ குடி ..குடி..என் பிள்ளைய எனக்கு திருப்பிக்குடுடீ மூதி’ன்னு சொல்லி சத்தம் போட்டு அழுதிருக்காரு… இனிமே அதைப்பத்தி ஒண்ணும் சொல்லுகதுக்கில்லை…’பேராசிரியர் குளித்துவிட்டு வந்தார். தலையை நன்றாகத் துவட்டாமல் ஈரம் ஜிப்பாமேல் சொட்டி அதில் சொட்டுநீலத்தின் புள்ளிகள் துலங்கின. ‘தலைய தொடைக்கப்பிடாதா?’ என்று குமார் எழுந்து சென்று அருகே இருந்த துண்டால் அவர் தலையை துடைத்தார். ’குமாரு எனக்க பர்ஸை காணல்ல கேட்டியா?’. ‘அது எதுக்கு இப்ப? கண்ணாடி இருக்குல்ல?’ ‘இருக்குடே’ ‘போரும் வாங்க..’ பேராசிரியர் மெல்ல படி இறங்கி ‘ஏசுவே கர்த்தாவே’ என்று கண்மூடி ஜெபித்து வேனில் ஏறிக்கொண்டார். குமார் ஓட்டினார். நான் பேராசிரியர் அருகே அமர்ந்துகொண்டேன். பேராசிரியர் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பது போல் கம்பராமயணப்பாடலைச் சொல்ல ஆரம்பித்தார்’ஆவி உண்டு என்னும் ஈது உண்டு, உன் ஆருயிர்சேவகன் திருவுரு தீண்ட தீய்ந்திலாபூ இலை தளிர் இலை. பொரிந்து வெந்திலாகா இலை, கொடி இலை, நெடிய கான் எலாம்’முதுமையில் தளர்ந்த குரலில் அந்த பாடல் ஏதோ புராதன மந்திரம் போல ஒலித்தது. அதன் அர்த்தம் நெஞ்சுக்கு வருவதற்குள்ளேயே என் மனம் சிலிர்த்தது. ‘ அப்ப நீங்க சொன்ன பாட்டுக்கு ரெண்டுபாட்டு முன்னால உள்ளதாக்கும். ராமன் சீதைய பிரிஞ்சு இருக்கான். அப்ப அவன் படுற துக்கத்த அனுமன் சீதைக்கிட்ட வந்து சொல்லுகான்.

 

        உயிர் இருக்குன்னு சொல்லப்படுற அந்த உடல் மட்டும் இருக்கு. அவ்ளவுதான். உயிரு இருக்கு, உடலும் இருக்கு. அதுக்கும் மேலே மனுஷன் இருக்கான்னு சொல்ல ஒண்ணு வேணுமே, அது இல்லை. என்னா ஒரு துக்கம்! அந்த நெடியகாட்டிலே உன் கணவனோட திருவுருவத்தை தீண்டினதால காயாத பூவும் இலையும் இல்லை. அவன் துக்கத்தோட சூடு பட்டு பொரிந்து வேகாத காயோ கொடியோ இல்லை..காடே வாடிப்போச்சு… காடே வாடிப்போற துக்கம். நினைச்சுப்பாருடே குமாரு’குமார் ஓட்டும்போது சாலையில் இருந்து பிரக்ஞையை விலக்குவதில்லை. நான் ‘அவ்ளவு பெரிய துக்கத்தை இயற்கையே தாங்காதுதான்’ என்றேன். பேராசிரியர் பெருமூச்சு விட்டு ‘என்னமா எழுதியிருக்கான். இன்னைக்கு கம்பனை படிக்க ஆளில்லாம ஆயிட்டிருக்கு. ஒரு கல்ச்சருக்கு உச்சம்னா அது மகாகாவியம்தான். கம்பன் நம்ம சமூகத்தோட கோபுரகலசம். ஆனா நம்மாளுக்கு புரிய மாட்டேங்குது. என்ன கருத்துன்னு கேக்கான். அர்த்ததைச் சொல்லுங்கிறான்… அர்த்தம்னா என்னது? துக்கத்துக்கு ஏது அர்த்தம்? துக்கத்தைப் புரிஞ்சவனுக்கு கவிதையிலே மேக்கொண்டு என்னத்தை புரிஞ்சுகிடதுக்கு இருக்கு?’நான் அண்ணாச்சியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர் ‘கம்பராமாயணத்தை புஸ்தகம் வச்சு வாசிக்கப்படாது.

 

        ஒண்ணும் கெடைக்காது, சும்மா போட்டு வர்ணிக்கிறான்னுகூட தோணிடும். குரு வேணும். காவியத்தையும் வாழ்க்கையையும் ஒண்ணாச்சேத்து அவரு சொல்லிக்கொடுக்கணும்…எல்லாருக்கும் வாய்ச்சுக்கிடாது‘ என்றார். அவர் நினைவுகளில் ஆழ்வது போலிருந்தது. ‘பூர்வசென்மமோ என்னமோ, குரு அமைஞ்சார் கவிதை அமைஞ்சுது. மனம் அமைஞ்சுது…எளுதி கொண்டுட்டு வரணும்..வேறென்னத்தச் சொல்ல?’பேராசிரியர் சட்டென்று கைகூப்பினார் ‘எங்க இருக்காரோ…ஒரு நாளு நாலுதடவயாவது கோட்டாறு குமாரபிள்ளை பேரைச் சொல்லாம இருக்கறதில்லை…மகாரஜன் கண்ணுபாக்கலேண்ணா எங்க இருந்திருப்பேன், என்ன செஞ்சிருப்பேன் ஏசுவே’ கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சுருக்கம் விழுந்த கன்னங்களின் விரிசல்களில் பரவி தாடையில் உருண்டு மடியில் சொட்டியது. கூப்பிய கையுடன் அப்படியே அமர்ந்திருந்தார். நான் குமார் காரை கொஞ்சம் வேகம் குறைக்கலாமே என்று நினைத்தேன். ஆனால் அவர் பின்னால் நிகழ்வதை கவனிக்கவே இல்லை என்று தோன்றியது.கண்ணீரை துடைத்துக்கொண்டு பேராசிரியர் மெல்ல விசும்பினார். நான் அவரை சந்தித்தபோதெல்லாம் எதற்காகவோ அவர் அழுவதைக் கண்டிருக்கிறேன். கம்பனை நினைத்து , ஏசுவை நினைத்து. முதுமை கனியும்தோறும் மனம் இளகி நெகிழ்ந்து விட்டது போல. இளநுங்குக்குள் குளிர்ந்த பாகு போல ஆன்மா உள்ளே நிறைந்திருக்கிறது. பேராசிரியர் கண்களை துடைத்துக்கொண்டு ‘ஏசுவே, எம்பெருமானே’ என்றார். பின் என்னைப்பார்த்து புன்னகை செய்தார்.

 

          மிட்டாய்க்கு அழுத குழந்தை அது கிடைத்ததும் கண்ணீருடன் சிரிப்பது போல் இருந்தது. நானும் புன்னகைசெய்தேன்.‘கோட்டாறு குமாரபிள்ளைய பத்தி சொல்லியிருக்கேனா?’ என்றார். ‘ஆம்’ என்றேன். அது அவருக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. அவர் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டிருந்தார்.’அண்ணைக்கெல்லாம் டிவிடி ஸ்கூலிலே ஒரு அட்மிஷன்னாக்க சாதாரணப்பட்ட விசயம் இல்லை. பலபேரு ஃபீஸு குடுக்கமாட்டாங்கன்னு ஆரம்பத்திலேயே ஃபீஸ வாங்கிடுவாங்க. எனக்க அப்பா ஒரு மேஸன். கொத்தவேலைண்ணா இன்னைக்குள்ள மாதிரி இல்லை. ஆறணா சம்பளமும் உச்சைக்கஞ்சியும். நான் ஸ்கூளிலே இருந்து அப்பன் வேலைசெய்ற எடத்துக்கு போவேன். அந்தக் கஞ்சியிலே பாதிய எனக்கு குடுப்பாரு. எப்பமும் சோலி கிடைக்காது. அப்ப நெய்யூர் ஆஸ்பத்திரிக்குப் போயி ஒரு நேரம் அங்க குடுக்கிற கஞ்சிய வேங்கிட்டு வந்து குடிப்போம். ஆனா நான் படிச்சாகணும்னு அப்பன் நெனைச்சுப்போட்டாரு. அவர மாதிரி ஆளுக ஒரு முடிவெடுத்தா அதை எப்டியும் செய்வாங்க. ஜீவிதத்துக்க ஆழம் வரைக்கும் கண்டவங்களாக்கும்… ’‘நான் மெட்ரிக் பாஸானதே ஊரிலே ஒரு பெரிய ஆச்சரியம். கொத்தனுக்க மவன் மெட்ரிக் ஜெயிச்சுப்போட்டானே. இனி வெள்ளையும் சட்டையுமா வந்து நிப்பானே? மேல்சாதிக்காரங்க மட்டுமில்ல எங்க சாதியிலேயே பணக்காரனுகளுக்கு எரிஞ்சுது… ‘என்னடே ஞானம், பய எங்க சர்க்காரு வேலைக்கா’ன்னு கேக்காங்க. எனக்க அம்மைக்க நடையே மாறிப்போச்சு. ஆனா அப்பன் அடுத்த தீருமானத்தை எடுத்தாரு ‘லே, படிக்கியாலே’ன்னாரு. ‘படிக்கேன்’னு சொன்னேன். கூட்டிக்கிட்டு நாகருகோயிலுக்கு போனாரு. எங்க வேதக்கார பள்ளிக்கூடம் நாலு இருக்கு. ஒரிடத்திலயும் முன்பணம் குடுக்காம சீட்டு இல்லேன்னு சொல்லிட்டாங்க.

 

         செரி பாப்பமேண்ணு நேரா டிவிடிக்கு போனோம். அங்கயும் அதே கதைதான்.’பேராசிரியரின் முகத்தின் மாற்றங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ’அப்ப நேரா எதிரிலே பிள்ளைவாள் வாறாரு… வெயிலும் நெழலுமா மாறிமாறி அடிக்க அவரு நடந்துவாறத இப்பமும் நான் பாக்கேன். நல்ல கறுப்பு நெறம். வழுக்கை. காலர் இலலாத வெள்ளை ஜிப்பாதான் போடுவாரு.ரெட்டை மல்லு வேட்டி. ஈரிழை துண்டு ஒண்ணு தோளிலே போட்டிருப்பாரு. சட்டையிலே பேனாவும் ஒரு சின்ன புக்கும். நெத்தி நெறைய விபூதி. தோல்செருப்பு றக்கு றக்குன்னு கேக்கும். அவரு வேட்டி நுனிய இடது கையால புடிச்சுட்டு நிமுந்து நடந்து வாறத பாத்து அப்டியே நின்னுட்டேன். இப்ப, கோடி ரூவா சொத்திருக்கவனுக்கு ஒரு இது இருக்கும். ஆனா ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு பாருங்க, அதை இவன் ஜென்மம் முழுக்க பாத்தாலும் அடைஞ்சுகிட முடியாது‘நேராட்டு போயி கும்பிட்டுட்டு நின்னேன். அதுக்குள்ள காலிலே நூறு தடவ மானசீகமா விளுந்தாச்சு. ’என்னலே’ன்னாரு. ’அட்மிஷன் வேணும்’னேன். ’அதுக்கு எனக்க கிட்ட எதுக்கு சொல்லுதே. போயி ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லு’ன்னாரு. ’நீங்கதான் எனக்கு குரு’ன்னேன். எப்டி அப்டி சொன்னேன்னு இண்ணைக்கும் தெரியாது. ஒரு குட்டிய பாத்ததுமே இவ போனசென்மத்துல சொந்தம்னு தோணுதும்பாக இல்ல. அதை மாதிரித்தான். நின்னு அப்டியே பாக்காரு.. ஒரு நிமிசம்.

 

        பிறவு வான்னு கூட்டிட்டுபோயி ‘இந்தா எனக்க பையன்’ன்னு சொல்லி சேத்து விட்டாரு. பீசுக்கும் பைசாவுக்கும் அவரு கேரண்டி, அவருதான் கார்டியன்’.‘அப்டி அவருகிட்ட சேந்துகிட்டேன். குருவுண்ணா அது வேற மாதிரி உறவாக்கும். இப்ப அறுபத்துநாலு வருசம் தாண்டியாச்சு. பிள்ளைவாள் போயிச்சேந்து நாப்பது வருசம் ஆயாச்சு. இத்தனை காலம் ஒருநாளாவது அவர நெனைக்காம இருந்ததில்லை. இன்னைக்கு அவ மக இருக்கா. என்னைவிட பத்து வயசு குறவு அவளுக்கு. அவமுன்னாடி நான் இருந்து பேசமாட்டேன். அவளுக்க மகன் இருக்கான். இருபது வயசாகேல்ல. பாத்தா குமாரபிள்ளைக்க அதே மொகம். அவன் நிக்க நான் இருந்து பேசுகதில்லை. அப்பம்லாம் காலம்பற கண்ணு முழுச்சா உடனே பிள்ளை ஞாபகம்தான். நேரா போயி நிப்பேன். மனசுவிட்டு அவரு பேச கொஞ்ச நாள் ஆச்சு. பேச ஆரம்பிச்சபின்னே பேச்சோட பேச்சுதான். .காலம்ப்ற ஏழரைக்கு நான் போயி வாசலிலே நிப்பேன். சிவபூசே உண்டு. எட்டுமணிக்கு குளிக்கப்போவாரு .துண்டுதுணி சோப்போட பின்னாலே போவேன். கம்பராமாயணத்த சொல்லிட்டே போவாரு… நல்ல கொரலு. பாடினா மதுரை சோமு மாதிரி இருக்கும். ஆனா சங்கீதத்திலே இஷ்டம் இல்ல. செய்யுளைப்பாடுறதுக்கு மட்டும்தான் ராகஞானம்…’அந்த வகுப்புகள் வழியாக அவர் மனம் கடந்து செல்வதை உணர முடிந்தது. ‘எல்லாம் சொல்லுவாரு. எலக்கணம், காப்பியம், சாஸ்திரம். கூடவே அவருக்க அனுபவங்கள சொல்லிக்குடுப்பாரு. கருணை இல்லாம கவிதை புரியாதுடான்னு சொல்லுவாரு.

 

         சொல்லிச்சொல்லி மனச நெறைய வைச்சிருவாரு…’ சட்டென்று குரல் கிரீச்சிட்டு வழுக்கியது. ‘இருக்கதெல்லாம், அடைஞ்சதெல்லாம் என் தெய்வம் போட்ட பிச்சையல்லோ…வாங்குறதுக்கெல்லாம் என்னமாம் திருப்பிக் குடுக்கோம். குருவுக்கு என்ன குடுக்கோம்? வேறெ என்ன, இந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாரு? இந்த ஏழை சங்கு உருகி அவரை நெனைக்குதேன்னு அய்யனுக்கு தெரியாமலா போயிரும்…’ பேராசிரியர் மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.சுங்கான்கடை தாண்டியிருந்தது. ‘குமாரு, சுங்கான்கடையாடே? ‘ குமார் ஒன்றும் சொல்லவில்லை. ‘சுங்கான்கடையாடே வந்திருக்கு?’ குமார் ‘ம்க்ம்’ என்று ஒரு ஒலி எழுப்பினார். அவர் தொண்டை அடைத்திருக்கலாமென நினைத்தேன் ‘ஒண்ணுக்கு வருதுடே குமாரு’ குமார் வண்டியை நிறுத்தினார். பேராசிரியர் இறங்கி சாலையோரமாக அமர்ந்து சிறுநீர் கழித்தார். அவருக்கு முப்பத்தைந்து வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு.மீண்டும் கிளம்பும்போது பேராசிரியர் சொன்னார். ’ஒருமாசம் கழிஞ்சு ஒருநாளு அடுக்களையிலே போயி காப்பி கொண்டுவரச்சொன்னாரு. நானும் அவரு சொன்னதனால போனேன். அவரு ரொம்ப ஆசாரமான ஆளாக்கும். நாஞ்சிநாட்டு பிள்ளமாரு இண்ணைக்குள்ளது மாதிரி இல்ல அப்ப. அவ வீட்டு ஆச்சி அதுக்கும் மேலே. அது எனக்கும் தெரியும். ஆனா நான் சொன்ன சொல்ல அப்டியே செய்யுறவன். ஆச்சி கோவமா முன்வாசலுக்கு வந்து ‘என்ன சொல்லி அனுப்பினியோ? நாடாப்பய அடுக்களையிலே கேறுதானே’ன்னு கேட்டா. அவரு நிதானமா ‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ன்னு சொன்னாரு. ஆச்சி அப்டியே நின்னா. என்னன்னு புரிஞ்சுதோ என்னை ஒரு பார்வை பாத்தா.

 

         சட்டுண்ணு உள்ள போயிட்டா. அதுக்கு மறுநாள் முதல் நான் அவளுக்க மகனாக்கும். கறிக்கு அரைச்சு குடுப்பேன். பாத்திரம் களுவிக்குடுப்பேன். அவளுக்கு சேலை துவைச்சு போட்டிருக்கேன். அவளுக்க சகல மனக்குறைகளையும் நிண்ணு கேப்பேன். பிள்ளைவாள் போனபிறவு பதினாறு வருஷம் இருந்தா. அனேகமா வாரம் ஒருக்க போயி பாத்து கையையும் காலையும் பிடிச்சு தடவிவிட்டு சொல்லுகது எல்லாத்தையும் கேட்டுட்டு வருவேன்.. ’ பேராசிரியர் சிரித்தார். ‘அவளுக்கு நான் செவத்த பெண்ண கெட்டேல்லன்னு பயங்கர வருத்தம்…எனக்கு நாலுபிள்ளை பிறந்து மூத்தவ பத்தாம்கிளாஸ் போனதுக்கு பிறவும் வருத்தம் போகல்ல’‘இங்க படிப்பு முடிஞ்சப்ப கா.சு.பிள்ளைக்கு ஒரு லெட்டரும் குடுத்து என்னைய அண்ணாமலைக்கு அனுப்பினாரு. அங்க பீஏ படிச்சேன். பின்னே எம்.ஏ. பாதி ஃபீசு பிள்ளைவாள் கட்டினதாக்கும். படிப்பு முடிஞ்சப்ப மதுரையிலே எங்க மதத்து காலேஜிலே வேலை கிடைச்சது. ஆனா மூணுமாசம் இருக்க முடியல்லை. நான் சாதாரண நாடான். மூப்புகூடிய குலநாடாருங்க அங்க மதுரைய ஆண்டுகிட்டிருந்தாங்க. மனசுடைஞ்சுபோயி ஒரு லெட்டர் பிள்ளைக்கு எளுதினேன். ‘கெளம்பி வந்திடு, நான் இருக்கேன்’ன்னு எனக்கு ஒரு லெட்டர் போட்டாரு. அந்த லெட்டர் கையில் கிடைச்ச அன்னைக்கு நான் அழுதேன். பெட்டியோட கெளம்பி வந்து வருக்க வீட்டுக்காக்கும் பொயி நிண்ணேன். அவரே திருவனந்தபுரத்துக்கு கூட்டிக்கிட்டு போயி வையாபுரிப்பிள்ளைகிட்ட சேத்து விட்டாரு.

 

         ‘வேலை இல்லேன்னூ சொல்லாதே, இவன் எனக்க பையனாக்கும்’னு சொன்னாரு.அப்படி ஆரம்பிச்ச தொளிலு…இது எனக்க தர்மமாக்கும் கேட்டியளா? அவரு சொல்லிக்குடுத்தத முழுக்க நான் இன்னும் எனக்க ஸ்டூடன்ஸுக்கு சொல்லி முடிக்கல்லை..’நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சம்பந்தமில்லாமல் மீண்டும் மீண்டும் ‘மத்துறு தயிர்’ என்ற சொல்லாட்சி நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. ‘அந்த கம்ப ராமாயணப்பாட்டிலே காடே எரியற துக்கம் பத்தி வருதே…அப்டிப்பட்ட துக்கம் உண்டா என்ன? எல்லா துக்கமும் காலப்போக்கிலே கரைஞ்சிரும்தானே?’ என்றேன். பேராசிரியர் ‘காயம்பட்டா ஆறும். அது உடம்புக்க இயல்பு. ஆனா என்ன மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது. ஆளையும் கொண்டுட்டுதான் போகும்’ என்றார். எனக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. ‘அப்டி ஒரு துக்கம் எப்டி வருது?’ பேராசிரியர் என்னை ஏறிட்டு பார்த்து ‘அது எனக்கும் தெரியல்லை. எதை நம்பி வாழ்க்கைய வச்சுருக்கோமோ அது உடைஞ்சா அந்த துக்கம் வரும்னு குமாரபிள்ளை ஒரு தடவை சொன்னாரு…’நகருக்குள் நுழைந்ததும் பேராசிரியர் அவரது மனநிலை மாறி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். சின்னக்குழந்தைகள் பார்ப்பது போல ஒவ்வொரு தாண்டிச்செல்லும் வண்டியையும் அது மறைவது வரை தலை திருப்பி பார்த்தார். உயரமான கட்டிடங்களை நிமிர்ந்து பார்த்தார். அஸிசி தேவாலயத்துக்குள் வண்டி நுழைந்ததும் பச்சைமால் கைகூப்பி வந்து கதவை திறந்தார். பேராசிரியர் இறங்கி ‘என்ன பச்சைமாலு…நல்லா இருக்கியா? வாயிலே பல்லு ஒண்ணையும் காணமே’ என்றார். ‘சொல்லு இருக்கு அய்யா’ என்றார் பச்சைமால்.

 

 

        பேராசிரியர் சிரித்தார்.உள்ளே கலைசலான கூட்டம். சற்று அப்பால் வேறு ஏதோ கூட்டம் நடந்துகொண்டிருந்தது போல தோன்றியது. அவர்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக இலக்கியக்கூட்டம் போல் அல்லாமல் பச்சைமால் வாழைமரமெல்லம் நட்டு கொடிகள் கட்டி அலங்காரம் செய்திருந்தார். பெருமாள் வந்து கைகூப்பி ஓரமாக நின்றார். கார்லோஸ் வந்து கைகூப்பி விலகி நின்றார். ‘பெருமாளு’ என்று அவர் கையைத் தொட்டபின் கார்லோஸின் தோளில் கை வைத்து ‘பெங்களூரிலேயாலே இருக்கே?’ என்றார். ’இல்ல, ஆந்திராவிலே.. குப்பம்’பேராசிரியர் மனைவி டெய்சிபாய் நீளமான குடையும் கைப்பையுமாக வந்து ‘எங்க போனிய? மருந்து எடுத்தியளா?’ என்றார் . குமார் ‘இருக்கு…எல்லா மருந்தும் இருக்கு’ என்றார். ‘பிஸ்கட்டு இருக்கா? சுகர் இறங்கிரும்லா?’ ‘அதுவும் இருக்கு.’ ‘வாங்க நேரமாயாச்சு… இது என்ன சட்டை? வேற நான் எடுத்து வச்சிருந்தேனே? ’ டெய்சிபாய் அவரை இடைவேளையில்லாமல் செல்லமாகத் திட்டிக்கொண்டே இருப்பார். பெருமாள் ‘போலாமே சார்’ என்று பேராசிரியரின் கையைப் பற்றினார்.அவரை அவர்கள் சேர்ந்து மேடைக்கு கொண்டு சென்றார்கள்.குமார் மெல்ல என்னருகே வந்து ‘ஜெயன், ஒரு சின்ன பிரச்சினை’ என்றார். ‘என்ன?’ என்றேன். ‘ராஜம் சறுவிட்டாரு. சஜின் ஒரு டெஸ்கை தூக்கிப் போடப்போயிருக்கான். அந்த நேரம் பாத்து போயிட்டாரு…’ நான் ‘எங்க போகப்போறாரு? பக்கத்திலே எங்காவது கடையிலே நிப்பாரு’ என்றேன். ‘அப்டி இல்லை…இவரோட எடங்களே வேற…இவரு பட்டை தேடிப் போறவரு. அது எங்க கெடைக்கும்னு யாருக்கு தெரியும்…’ நான் ‘அது தெரிஞ்ச யாரையாவது அனுப்பித் தேடினா என்ன?’ என்றேன். ‘ஏன் அவனுக்கும் நான் குடிக்க காசு குடுக்கணுமா?’ என்றார்மேடையில் விழா ஆரம்பித்தது.

 

           நானும் மேடைக்குச் சென்றேன். ஓரமாக என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். குமரிமாவட்டத்தில் அத்தனை எழுத்தாளர்கள் இருப்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பேராசிரியர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். குமாரைத் தேடுகிறார் என்று தெரிந்தது. குமார் தலைமறைவாகி விட்டார். பச்சைமால் என்னிடம் வந்து குனிந்து ‘பேராசிரியர் ராஜத்தை கேக்கிறார். எங்க இருக்கார்னு தெரியுமா?’ நான் குரூரதிருப்தியுடன் ‘குமாருக்குத்தான் தெரியும்…அவர்கிட்ட கேளுங்க’ என்றேன். ‘முதல்ல குமார் எங்க? ‘. ‘அதை சஜின் கிட்ட கேளுங்க’ பச்சைமால் முகத்தில் பரிதவிப்பு தெரிந்தது.மேடைக்குப்பின்புறம் உலவி விட்டு பச்சைமால் தொய்ந்து திரும்பி வந்தார். ராஜம் பற்றிய தகவலே இல்லை என்று தோன்றியது. நடுவே பேராசிரியர் கழிப்பறை சென்றார். கூடவே சென்ற பச்சைமால் குமாரை அழைத்து வந்து விட்டுவிட்டார். அவர்கள் பேசிக்கொள்வதை தூரத்தில் இருந்தே பார்த்தேன். பேராசிரியர் குமாரை கடிந்துகொண்டு திரும்பி வந்து அமர்ந்தார். மேடையில் பேச்சுக்கள் நீண்டுகொண்டே சென்றன. பாராட்டுக்கள் மேலும் பாராட்டுக்கள். சம்பிரதாயங்கள் மேலும் சம்பிரதாயங்கள்.நான் சிறுநீர் கழிக்கச் சென்று செல்பேசியை எடுத்து பார்த்தபோது இரண்டு தவறியஅழைப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றை அழைத்து பேசிக்கொண்டே விலகிச்சென்றேன். பக்கவாட்டில் ஓர் அறைக்குள் அனிச்சையாக கண் திரும்பியபோது அங்கே ஒருவர் இருப்பது போல தோன்றியது. பேசியபடியே பின்னால் நகர்ந்து மீண்டும் உள்ளே பார்த்தேன். கொஞ்சம் அதிர்ந்து பேச்சை விட்டுவிட்டேன். அது அண்ணாச்சிதான்.

 

        தரையில் சுவரோடு சேர்ந்து குந்தி அமர்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.பழைய உடைசல்களை வைக்கும் அறை அது. கொடிகளும் அட்டைப்பெட்டிகளும் நிறைந்த அடைசல் நடுவே ஒரு மேஜைநாற்காலி. மறுபக்கம் திறக்கும் சன்னல். நான் அறைக்குள் நுழைந்தேன். அண்ணாச்சி போதை போட்டிருப்பார் என்று நினைத்தேன். அவரை மெல்ல அழைத்துச் சென்று உடைமாற்றிக் கூட்டிவரலாம் என்று எண்ணினேன். அவர் நிமிர்ந்து என்னைப்பார்த்தார். கண்கள் மினுமினுவென்றிருந்தன. தாளமுடியாதபடி வலிக்கும்போது மிருகங்களின் கண்கள் அப்படி இருக்கும். ‘அண்ணாச்சி’ என்றேன்அவர் ‘..ம்’ என்றார். ‘என்ன இங்க இருந்திட்டீங்க..’ அவர் குடிக்கவில்லை என்று உடனே எனக்கு தெரிந்தது. சட்டை வேட்டி எல்லாமே சுத்தமாக மடிப்பு கலையாமல் இருந்தன. தாடியும் தலைமயிரும் நன்றாகச் சீவப்பட்டிருந்தன. ’என்ன ஆச்சு?’ என்றேன். ‘நல்ல சொகமில்லை…’ என்றார். ’ஏன்? என்ன செய்யுது?’ ‘ஒத்தைத்தலைவலி…அதாக்கும் இருட்டுலே இருந்தேன்…நீங்க போங்க.  ஸ்டேஜிலே விளிப்பாவ’நான் வெளியே வந்தேன். குமாரை செல்லில் அழைத்து வரச்சொன்னேன். நான் நகர்ந்தால் அண்ணாச்சி சென்றுவிடுவார் என எனக்கு தெரியும். குமார் பாய்ந்து வந்தார். ‘என்ன செய்யுதாரு?’ ‘சும்மா இருக்காரு. தலைவலியாம்’ ‘தண்ணியா?’. ‘இல்ல. வாடை இல்ல’ .‘கஞ்சாவா இருக்குமோ?’. ‘அப்டி தெரியலை…பாருங்க’ என்றபின் நான் மேடைக்குச் சென்றேன். வயதில் நான் தான் இளையவன்.

 

         கடைசி மரியாதைக்காக என்னை அழைக்க பச்சைமால் பதறிக்கொண்டிருந்தார்.மேடையில் இருந்து இறங்கி பெருமாளின் கைகளைப்பிடித்து நடக்கும்போது பேராசிரியர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். குமார் என்னிடம் வந்து ‘ராஜத்தை கூப்பிட்டேன். வரமாட்டேன்னு சொல்லுதார். ஒரு நிமிஷம் வந்து தலையக் காட்டிட்டு போங்கன்னா கேக்க மாட்டேங்குதார். ஒரு வார்த்தை பேசி பாக்குதீங்களா?’ என்றார். நான் அறைக்குச் சென்றேன். அதே இடத்தில் அப்படியே ராஜம் அமர்ந்திருந்தார்‘அண்ணாச்சி, நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம். ஒரு நிமிஷம் முன்னாடி வந்து நில்லுங்க. அவரு என்னடே ராஜம்னு கேப்பாரு. கெளம்பிருவாங்க…அவரால இனி அதிக நேரம் நிக்கமுடியாது…’ என்றேன். ‘இல்ல, வேண்டாம். கட்டாயப்படுத்தாதீங்க’ என்றார். நான் அந்த நாற்காலியில் அமர்ந்தேன். ‘’நாலஞ்சு மாசமா உங்களைப்பத்தி கேட்டுட்டே இருக்காராம். இப்பகூட கேட்டார்’ ராஜம் ஒன்றும் சொல்லவில்லை.நான் மேலும் முன்னகர்ந்தேன். ‘ஒருவேளை இதாக்கும் கடைசி சந்திப்புன்னு சொன்னாரு. அவரை மாதிரி ஒருத்தர் ஒண்ணும் காணாம அப்டி சொல்ல மாட்டார்… நீங்க இப்ப வந்து பாக்காம போனா ஒருவேளை உங்க வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவீங்க’ அண்ணாச்சியிடம் அசைவே இல்லை. தலையை கொஞ்சம் சரித்து தரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

 

       ‘வாங்க வந்து பாத்துட்டு போங்க…இப்ப நீங்க பாக்கிறதுதான் கடைசி பார்வை…சொன்னா கேளுங்க’அண்ணாச்சி நிமிர்ந்து ‘அது எனக்கும் தெரியும்’ என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த வார்த்தைகளை அவரை அதிரச்செய்வதற்காகவே சொல்லியிருந்தேன். அண்ணாச்சி ‘வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை விட்டிருங்க’ என்றார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை அசைக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. பெருமூச்சுடன் எழுந்து வெளியே வந்தேன். குமார் ஓடிவந்தார். ‘என்ன சொல்லுகாரு?’ என்றார் ‘அவரு வரமாட்டாரு. அவர கட்டாயப்படுத்துறதில அர்த்தமில்லை’ என்றேன்.சஜின் ஓடிவந்து ‘பேராசிரியர் கெளம்பறாரு’ என்று குமாரிடம் சொன்னார். குமார் ஓட நான் பின்னால் சென்றேன். டெய்சிபாய் காரில் ஏறி அமர்ந்து சன்னல் வழியாகத் தலை நீட்டி ‘அங்க என்ன செய்யுதாரு? நேரமாகுதுல்லா?’ என்றார். பேராசிரியர் வாசலில் நிற்க அவரது முன்னாள் மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து நின்றார்க்ள். ‘எல்லாருக்கும் நல்லது வரட்டும். கர்த்தாவு அனுக்ரகிப்பாரு. இனி ஆரைத் திரும்பப் பாப்பேனோ தெரியல்லை… அக்கரை கண்ணுல பட்டாச்சு… பாப்பம்’ அவர் தொண்டை இடறியது. திரும்பிக் குமாரைப் பார்த்தார்குமார் அவருடன் காரை நோக்கி நடந்தார்.

 

          ‘ராஜம் வரேல்லியா?’ என்றார் பேராசிரியர். குமார் ‘வந்தாரு… இப்பம் எங்க போனாருண்ணு தெரியல்ல’ என்றார். ‘குடிக்கப்போயிருப்பான்…அவனுக்க விதி இப்படி ஆச்சே? இருந்ததிலேயே நல்ல வித்துண்ணு நெனைச்சேனே. கர்த்தருக்க கணக்க அறியாம எனக்க கணக்க வச்சேனே…’ பேராசிரியர் மெல்ல விசும்பினார். பின் கழுத்தின் தொங்குசதைகளும் தொங்கிய கன்னங்களும் இழுபட்டு அதிர தேம்பி அழ ஆரம்பித்தார்.‘உள்ள கேறுங்க…நேரம் ஆச்சு…’ என்றார் டெய்சிபாய். குமார் கதவைத் திறக்க பேராசிரியர் குமாரின் தோளைப்பற்றிக்கொண்டு நின்று ‘நான் சங்கு பொட்டி சொன்ன ஜெபத்தையெல்லாம் கர்த்தாவு கேக்கல்ல. ஆனாலும் எனக்க சீவனுள்ள வரை நான் ஜெபிப்பேன் குமாரு…எனக்க பயலுக்கு ஒரு கொறையும் வரப்பிடாது…அவன் கர்த்தாவுக்க பிள்ளையாக்கும். அவனுக்க வலியெல்லாம் கர்த்தாவு எடுக்கணும்..’ குமார் அவரை கிட்டத்தட்ட தூக்கிக் காரில் ஏற்றினார். கதவை சாத்தியதும் கார் உறுமி முன்னால் சென்றது.கார் சென்றபின் குமார் என்னிடம் திரும்பி ‘இது திமிரு. இளுத்துப்போட்டு செவிளுலே நாலு அப்பு அப்பினா செரியாயிரும்…’ என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. குமார் சஜினிடம் ‘நீ எனக்க வண்டிய எடுத்திட்டு வாடே.. நான் எல்லாரையும் விளிச்சிட்டு வாறேன். எல்லாத்தயும் சொன்னாத்தான் செய்வியா? ’ என்று அதே கோபத்துடன் சொல்லி ‘நீங்க எப்டி போறிய?’ என்றார் கோபமாக.

 

           ‘நான் பஸ்சிலே போயிருவேன். நேரமாகலைல்லா?’ என்றேன்.குமார் சென்றதும் நான் அங்கேயே நின்றேன். மெல்ல கூட்டம் கலைந்தது. பின்பக்கம் சிலர் உரக்க இலக்கிய விவாதம் செய்யும் ஓசை. அவர்களில் சிலர் போதையில் இருந்தார்கள் என்று தோன்றியது. உள்ளே போய் அருணாவை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என நான் திரும்பிய போது போர்ட்டிகோவின் இடதுபக்கம்தூணின் நிழலில் இருளுக்குள் ஒண்டியவராக அண்ணாச்சியைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. விளக்குகள் ஒளிவிட வண்டிகள் சென்றுகொண்டிருந்த சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார்அந்த காட்சியின் ஈர்ப்பினால் நான் அசையாமல் நின்றுகொண்டிருந்தேன். இருள் பரவிய முற்றத்தில் சாலையில் திரும்பும் கார்களின் ஒளிகள் வருடி வருடிக்கடந்து சென்றுகொண்டிருந்தன. அண்ணாச்சியின் முகத்தில் செவ்வொளி பரவிச்சென்றபோது அவர் கழுத்தில் தசைகள் இறுகி இருக்க ,தாடியை சற்றே மேலே தூக்கி, உடல் நடுங்க நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பின்னர் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னால் சென்று பேராசிரியர் மிதித்துச் சென்ற மண்ணை குனிந்து நடுநடுங்கும் கரங்களால் மெல்லத்தொட்டார். குனிந்த தலையுடன் இருட்டுக்குள் சென்று மறைந்தார்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.