LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

மயன் எனும் மாமுனி - ம.செந்தமிழன்

(சித்திரை மாதத்திற்கான ‘வனம்’ இதழில் வெளியாகவுள்ள கட்டுரையிலிருந்து சில பத்திகள்…)

மயன் தோன்றிய காலம் குமரிக் கண்டம் எனும் மாபெரும் நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்த காலம். குமரிக் கண்டம் என தமிழ் ஆய்வாளர்கள் அழைக்கும் நிலம், ஊழியில் கடல் கொண்ட பெரும் பரப்பு. இப்போதைய தமிழகத்தின் தென் பகுதியில் பரந்து விரிந்திருந்த நிலம் குமரிக் கண்டம். இதுதான் மனித குலத்தின் நாகரிகம் தோற்றம் பெற்ற நிலம். தமிழ்ச் சங்கம் முதன் முதலில் அமைக்கப்பட்டதும் குமரிக் கண்டத்தில்தான்.

ஓங்கி உயர்ந்த நாகரிகச் செழுமையில் அக்கால மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று. சங்க இலக்கியங்களில் கலித்தொகையும் தொல்காப்பியமும் காலத்தில் மிகவும் பழமையானவை. தொல்காப்பியம் எண்ணற்ற மெய்யறிவுச் செய்திகளைத் தாங்கிக்கொண்டுள்ளது.

’ஓரறிவதுவே உற்றறிவதுவே’ (மரபியல் - 27) எனத் துவங்கும் பாடல் அவற்றுள் சிறப்பானது. புவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் ‘உற்று உணருதல் (தொட்டால் அறிந்துகொள்ளுதல்) எனும் ஒரே ஒரு அறிவைக் கொண்டிருந்தது என்பதை இப்பாடலின் முதல் வரி மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது.

இப்போது நாம் அமீபா என அழைக்கும் ஒரு செல் உயிரினம், உற்று உணரும் அறிவை மட்டுமே கொண்டுள்ளது. இது ஓரறிவு உயிர் ஆகும். ’இவ்வகை உயிரினங்கள்தான் முதன் முதலில் தோன்றின. பின்னர்தான் நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய பிற நான்கு அறிவுகளும் கொண்ட உயிரினங்கள் தோன்றின’ என்கிறார் தொல்காப்பியர்.

’இந்த ஐந்து அறிவு உயிரினங்களும் தோன்றிய பின்னர் ஆறாவது அறிவான மனம் தோன்றியது. அந்த மனதைக் கொண்டவர்கள்தான் மனிதர்கள்’ என்கிறது இப்பாடல். ஏழு வரிகளில் பரிணாமக் கொள்கையைக் கூறுகிறது தொல்காப்பியரின் இப்பாடல்.

நவீன அறிவியல் கொள்கையின்படி, ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தோன்றிய உயிரினங்களையும் அவற்றின் அறிவு வளர்ச்சியையும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது தொல்காப்பியம்.
இவ்வாறான அரும்பெரும் செய்தியைப் பதிவு செய்துள்ள தொல்காப்பியர் பாடலின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,
‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
- இதன் பொருள் என்னவென்றால், ‘இந்தச் செய்திகளையெல்லாம் நேரடியாக உணர்ந்தறிந்த முன்னோர் நெறிப்படுத்திக் கூறிச் சென்றுள்ளனர்’ என்பதாகும்.

தொல்காப்பியத்தின் காலமே பழமையானது. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பரிணாமக்கொள்கையை ‘நேரடியாக உணர்ந்து நெறிப்படுத்திய முன்னோர்’ வாழ்ந்த காலம் எவ்வளவு பழமையானது எனச் சிந்தித்துப் பாருங்கள்.

450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் என்ன வகை உயிரினம் இருந்தது என்று உரைப்பதற்கு வெற்று மனித அறிவு போதாது. இப்போதைய ஆய்வுகள் யாவும் கருவிகளின் துணையுடனும் ஆய்வகச் சார்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. கருவிகள் இல்லாமல் இவற்றை உரைத்தவர்கள் நம் முன்னோர்.

அவர்களுக்கு எவ்வாறு இது சாத்தியமானது என்றால், ‘நேரிதின் உணர்தல்’ எனும் இறைக்கொடையால் சாத்தியமானது. ‘உணர்வு’ எனும் அருங்கொடை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுதான் படைப்பாற்றலுக்கும் உயிர்களுக்குமான உறவு.

நமது முன்னோர் இதனை நன்கறிந்தவர்கள். உணர்தலுக்கான செயல்வடிவங்களில் ஒன்றுதான் தவம். ஐம்புலன்களையும் ஒடுக்கி, உணர்தலில் நிலைபெறும்போது இறைக் காட்சி கிடைக்கிறது. உணர்தலில் இறை மொழி கேட்கிறது. ஆசான் திருமூலர் இக்கருத்தை திருமந்திரம் எங்கும் வலியுறுத்தியுள்ளார். திருமந்திரத்தின் மந்திரங்கள் யாவும், இறை உணர்தலுக்கான செயல்வழிகள்தான்.

தொல்காப்பியம் உலகின் முதற் பொருள் எதுவெனப் பதிவு செய்துள்ளது.
’முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்த் தோரே’
(பொருளதிகாரம் – 4)

உலகம் யாவற்றிற்கும் ஆதிப் பொருள் எதுவென்றால், ’நிலமும் பொழுதும்’ ஆகும் என்கிறார் தொல்காப்பியர். நிலம் என்பது, இடத்தைக் குறிக்கும், பொழுது என்பது, காலத்தைக் குறிக்கும். ’இடம், காலம் ஆகியவைதான் முதன்மையான பொருட்கள். இவ்விரண்டின் அடிப்படையில்தான் மற்ற அனைத்தும் அமையும்’ என்கிறார் தொல்காப்பியர். நவீன இயற்பியல் கொள்கைகளின் அடிப்படை, காலம், வெளி (Time, space) ஆகிய இரண்டுதான்.

இது நவீன அறிவியல் உலகில் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாகத்தான் தெளிவான பாடமாக உள்ளது. இக்கொள்கையைத் தெளிவாக வரையறுத்தவர்களில் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தகுந்தவர். நவீன இயற்பியலின் ‘பகுதிக் கொள்கை (Quantum theory), சார்புக் கொள்கை (Relativity Theory) ஆகியவை மேற்கண்ட காலம், வெளி ஆகிய முதற் பொருட்களிலிருந்துதான் உருவாகியுள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், இக்கருத்தை அழுத்தந்திருத்தமாக உரைத்தார் தொல்காப்பியர். அதே பாடலில் அவர் கூறும் சேதி,
‘இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’ என்பதாகும். அதாவது, இந்தக் கண்டறிதலை, ‘இயல்பு உணர்ந்தோர்’ ஏற்கெனவே உரைத்துச் சென்றுள்ளார்கள் என்கிறார் அவர். ‘உணர்தல்’ எனும் மாமந்திரம்தான் இந்த இடத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

தொல்காப்பியத்தின் சிறப்புகளைப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதினாலும் போதாது.

இவ்வளவு மெய்யறிவு மிகுந்த கருத்துகளைத் தாங்கிய தொல்காப்பியம் எனும் நூலை எழுதிய தொல்காப்பியர், ‘ஐந்திறம்’ எனும் மெய்யியலைப் படித்த மாணவர். அப்படியானால், அந்த ’ஐந்திறம்’ எவ்வளவு மேன்மையான மெய்யியலாக இருந்திருக்கும்! அந்த ‘ஐந்திறத்தை’ இயற்றிய மயன் இறையருள் பெற்றவர் என்பதை உங்களால் இப்போது உணர முடிகிறதா?

குமரிக் கண்டம் கடல் கோளால் அழிக்கப்பட்டபோது தப்பிப் பிழைத்த மனித சமூகங்களுக்கென வேதங்கள் (மறை நூல்கள்) தேவைப்பட்டன. மெய்யறிவுச் செய்திகளை அடுத்தடுத்த மனித நிலைக்குக் கடத்துவது எக்காலத்திலும் நிகழும் இறைச் செயல். விவிலியம் எனும் ஆதி ஆகமம் கிடைத்ததும் இவ்வாறான இறைச் செயல்தான். விவிலியம் ஊழிக்குப் பிந்தைய சமூகங்களைப் பற்றி விளக்கான தகவல்களைப் பதிவு செய்துள்ளது.

ஊழி நிகழ்ந்து குமரிக் கண்டம் மூழ்கும்போது மனிதர்களுக்குத் தேவையான மெய்யறிவையும், தொழில்நுட்பங்களையும் இறையருள் மிகச் சிலரிடம் ஒப்படைக்கிறது. நானறிந்த வகையில் அவர்களின் மூத்தவர் மயன். மயன் எனும் மாமுனிவரிடம்தான் இறைமையின் ஆண் வடிவமான சிவன், மறைகளை (வேதங்களை) ஒப்படைத்தார்.

தமிழகத்தின் தென்பகுதியான குமரிக் கண்டம் கடல் கோளால் அழிந்ததைச் சங்க இலக்கியங்கள் பலவகையில் பதிவு செய்துள்ளன. ’தென்புலத்தார்’ என திருவள்ளுவர் குறிப்பிடுவது, கடலில் மூழ்கிய தென்னாட்டு மக்களைத்தான். ’தென்புலத்தார்’ என்றால் இறந்து போன முன்னோர் என்றுதான் பொருள். இப்போதும் ’தெற்கு காரியம்’ என்று மரணத்தைக் குறிப்பிடும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.

’பஃறுளியாறு எனும் பேராறு தென்னாட்டில் ஓடியது. அங்கே பல அடுக்குகளாக மலைத் தொடர்கள் இருந்தன. இவை எல்லாம் கடலில் மூழ்கிப் போயின’ என்று வெளிப்படையாகவே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.

’மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்’ என்கிறார் மாணிக்கவாசகர்.

திருவாசகத்தில் பல இடங்களில் ‘மகேந்திர மலையில் ஆகமம் அருளிய சிவபெருமானை’ப் பற்றி மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். மகேந்திர மலை என அவர் அழைப்பது குமரிக் கண்டத்தில் மூழ்கிய மலைத் தொடர்களில் ஒன்றைத்தான். ’சிவபெருமான் மயனுக்கு அருளிய மறைநூல்களைத்தான்’ மாணிக்கவாசகர் ஆகமங்கள் என்கிறார்.

‘சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளுதல்’ என்றால் ‘ஏற்கெனவே உரைத்த மறைகள் யாவும் அழிந்துபோயின. நீயோ, அவற்றை மீண்டும் தோன்றச் செய்து அருள் புரிந்தாய்’ என்று பொருள்.

மயன் எனும் மாமுனிவர் கல்லால மரத்தின் அடியில் சிவபெருமானிடம் மறை நூல்களைக் கற்று அவற்றைப் பதிவு செய்து உலகிற்கு வழங்கினார் என்பதை மயனைத் தெய்வமாக வணங்கும் சமூகத்தவர் காலங்காலமாக உரைத்து வருகின்றனர்.

சிவக் கோயில்களில் தென்மேற்கு மூலையில் உள்ள தென்மூர்த்தி (தட்சிணா மூர்த்தி) வடிவம் கல்லால மரத்தின் கீழ் மறைகளை உரைக்கும் இறைவடிவம்தான். தென்குமரியில் இந்நிகழ்வு நிகழ்ந்ததால், தென்மேற்கு மூலையில் தென்மூர்த்தி வடிவம் பொறிக்கப்படும் வழக்கம் உள்ளது.

மய மாமுனிவர் வழியாக அருளப்பட்ட மறைகள் அளப்பரியவை. இப்போதும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமெனில், மயன் அருளிய நிலவியல் கொள்கைதான் ஒரே சிறந்த வழிகாட்டியாக உள்ளது. அண்டத்தைப் புரிந்துகொள்ளவும், உடலியலைத் தெரிந்துகொள்ளவும் மயமாமுனி அருளிய கொள்கைகளின் அடிப்படைதான் இப்போதும் மூலமாக உள்ளது.

கரு உரு மெய்யியலின் தந்தை மய மாமுனிதான்.
‘பொருளும் ஆற்றலும் தனித்தனியாக இருப்பதில்லை. எக்காலமும் இவையிரண்டும் இணைந்துதான் இருக்கும்’ என்பது ‘ஐந்திரத்தின்’ அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதுதான் கரு உரு மெய்யியல்.

எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துகளை மயன் மொழிந்து சென்றுள்ளார். ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது, அவர் கருத்துகள் உணரப்படுகின்றன.

மயன் பெயரால் ஏராளமான வணிகக் குப்பைகளைக் கடந்த காலச் சமூகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. ’மயமதம்’ எனும் பெயரில் சில நூல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டன. அவை யாவும் ஆதிக்கச் சிந்தனை கொண்ட சுயநலமிகளால் உருவாக்கப்பட்ட பாடல் தொகுப்புகள். அவை எல்லாம் காலத்தில் அழிந்து ஒழியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. எந்தக் கருத்துகள் மனிதகுலத்தின் அமைதியான வாழ்விற்குத் தேவையோ அவை மட்டுமே இறைமையால் காக்கப்படும்.

மனித குலத்தின் அமைதிக்கு எதிரான எந்தக் கருத்தும் அழிக்கப்படும். பல மொழிகள் அவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டன.

தமிழ் இன்னும் தழைக்கிறதென்றால், இம்மொழியில் இறைமை வாழ்ந்துகொண்டுள்ளது என்பதால்தான். . மய மாமுனியின் பாடல்களை மீட்டெடுத்துக் கொணர்ந்த புலவர் வீரபத்தின், அப்பாடல்களின் பொருள் உணர்ந்து உரைத்த கணபதி ஸ்தபதி ஆகியோர் இறைச் செயலின் ஈடுபட்டோர்தான் என்பது என் நம்பிக்கை.

இதோ இந்தச் சமூகம் ஊழிக் காலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த வேளையில் மயன் நினைவு கூறப்படுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன்.

மனித அறிவின் மேன்மைகள் யாவும் இருந்த தடம் தெரியாமல் புதைந்து சிதைந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இறையருள் பெற்றவர்களின் கருத்துகள் மட்டும் நமக்குக் கிடைக்கின்றன.

 

- ம.செந்தமிழன்

by Swathi   on 21 Apr 2016  1 Comments
Tags: Mayan   Muni   Maamuni   Senthamilan   மயன்   மாமுனி   ம.செந்தமிழன்  
 தொடர்புடையவை-Related Articles
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா? ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
மயன் எனும் மாமுனி - ம.செந்தமிழன் மயன் எனும் மாமுனி - ம.செந்தமிழன்
தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் !! தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் !!
கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !! கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !!
டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !! டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !!
ரிலீசுக்கு தயாராகும் முனி - 3 !! ரிலீசுக்கு தயாராகும் முனி - 3 !!
பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய  சிவகார்த்திகேயன் !! பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய சிவகார்த்திகேயன் !!
கருத்துகள்
15-Jul-2018 18:49:55 கிட்டான் said : Report Abuse
ஐயா, மாமுனி மயனை பற்றிய உங்களின் புரிதல் கண்டு வியக்கிறேன். மயன் பற்றிய தவறான கருத்துக்களை விக்கிபீடியாவில் பலர் ஏற்றி வரும் வேளையில் உங்கள் உண்மை கருத்து தமிழருக்கு சென்று சேர வேண்டும். நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.