LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயமோகன்

மயில்கழுத்து

 

’நீலமா? நீலம்னா சொல்றேள்?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஆமா, ஏன் கேக்கறேள்?’ என்று சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி பஸ்சுக்கு வெளியெ ஓடும் வெளிக்காட்சிகளின் ஒளிநிழலாட்டத்தால் காலவெளியில் விரைவதுபோல தோற்றமளித்த முகத்துடன் ராமன் கேட்டார். ‘ஒண்ணுமில்லே. சும்மாதான்’. ராமன் கூர்ந்து பார்த்து ‘பரவால்ல சொல்லுங்கோ, நான் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கப்போறதில்லே’ என்றபின் புன்னகை செய்தார். அவரது அழகிய சிறிய பற்களின் வரிசை, சிரிப்புக்கு எப்போதும் ஒரு பெண்மையை அளிக்கும். அத்துடன் அவரிடம் எப்போதுமே ஒரு நாணம் உண்டு. ’காலாலே தரையிலே கோலம்போடாத கொறை’ என்று ஒருமுறை கிருஷ்ணன் பாலசுப்ரமணியத்திடம் சொல்லிச் சிரித்திருக்கிறார்.
’நீங்க ஒண்ணையுமே தப்பா நெனைக்கமாட்டேள்னு தெரியாதா என்ன?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டியா சொல்றேள்? எங்காத்துலே என்னை சரியான சூனிப்பயல்ன்னுல்ல சொல்வா’ என்று ராமன் சிரித்தார்.’காபி ஸ்டிராங்கா இல்லேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்குவேள்… மத்தபடி மனுஷனோட இருட்டைப்பத்தியும் தீமையப்பத்தியும் உங்களுக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது…’
ராமன் புருவத்தை தூக்கி ‘அப்டியா?’ என்றார். ‘உங்க கதைகளை வாசித்த வரை பெரிய தீமையோட சித்திரம்னு ஒண்ணு வரவே இல்லை…’ . ராமன் ‘ஓகோ’ என்றபின் யோசித்து ‘கெட்டவா சிலர் இருக்காளே’ என்றார். ‘இருக்காங்க. ஆனா அவங்களும் வாழ்க்கையிலே மாட்டிண்டிருக்கிற சாதாரண மனுஷங்கதான்… பொறாமைப்படுறாங்க, பொருமறாங்க. முடிஞ்சவரைக்கும் மத்தவா கையிலே இருக்கிறத பிடுங்கிண்டுட முயற்சி பண்றாங்க… அதெல்லாம் பண்ணல்லேன்னா அப்றம் எப்டி மனுஷங்க?’
ராமன் மனக்குழப்பமடைந்தவர் போல கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு உள்ளங்கை எப்போதுமே வேர்க்கும். பெண்களைப்போல மூக்குநுனியும் புருவமும் வேர்க்கும். கையில் வெள்ளை நிறமான கைக்குட்டையை எப்போதுமே வைத்திருப்பார். அதைக்கொண்டு முகத்தை துடைத்துவிட்டு ‘இல்லே, அதுக்குமேலேயும் மனுஷன்கிட்ட தீமை இருக்குன்னா நெனைக்கிறேள்’ என்றார்.
பாலசுப்ரமணியன் ’மனுஷனோட தீமைக்கு அளவே கெடையாது. அது மனுஷனை விட பலமடங்கு பெரிசு. வாழ்க்கைக்காக மனுஷன் தீமையப் பண்றதில்லை, தீமைக்காகத்தான் மனுஷன் வாழறான். அவன் மனசுக்குள்ளே இருந்து ஆர்ட்டீசியன் ஊத்து மாதிரி தீமை பொங்கி வெளியே வர்ர சொகமிருக்கே அதுதான் மனுஷ வாழ்க்கையிலே மத்த எல்லாத்தையும் விட பெரிய இன்பம். அதுக்காகத்தான் அவன் யுத்தங்கள செஞ்சான். கோடிகோடியா கொன்னு குவிச்சான். சித்திரவதைகள கண்டு பிடிச்சான். அடிமை முறைகள உண்டுபண்ணினான்…அதுக்காகத்தான் அவன் கான்சண்டிரேஷன் காம்புகளிலே சகமனுஷனைப் போட்டுப் பொசுக்கி எடுத்தான்…’
‘எங்கியோ வெளிநாட்டுலே–’ என்று ராமன் ஆரம்பித்ததும் பாலசுப்ரமணியன் வேகமாக இடைமறித்து ‘இங்க நம்மூர்லே என்னென்ன பண்ணியிருக்காங்க. பத்மநாபபுரத்திலே அரண்மனையிலே இருக்கிற சித்திரவதைக்கருவிகளை பாத்திருக்கேளா?’ என்றார். அவரது முகம் சிவந்து கணகணவென்றிருப்பதைப் பார்த்து கொஞ்சம் மிரண்டது போல ராமன் பார்வையை விலக்கிக் கொண்டார். பிறகு ‘அங்கங்க நடக்கலாம். இல்லேங்கலே’ என்றார்.’கும்பகோணத்திலயும் பாபனாசத்திலேயும் உங்க கண்ணு முன்னாடி நடந்தாத்தான் உங்களுக்கு பிரச்சினை. இல்லாட்டி ஒண்ணுமில்லை இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டி இல்லே..’ என்று தஞ்சாவூர்த்தனமாக ராமன் இழுக்க ‘அதான்’ என்று பாலசுப்ரமணியன் அழுத்தினார். ராமன் மீண்டும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கைக்குட்டையை கைக்குள் வைத்து பிசைந்துகொண்டார்.
பிறகு கொஞ்சநேரம் இருவரும் அமைதியாகவே பயணம் செய்தார்கள். பஸ் கோயில்பட்டி நிலையத்தில் நின்று ஆளிறக்கி ஏற்றி மேலே சென்றது. ‘கி.ரா இங்கல்ல இருக்காரு?’ என்றார் ராமன். ‘ஆமா..’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் ‘அவருகூட போயி ஒருவாட்டி விளாத்திக்குளம் சுவாமிகள பாக்கணும்’ என்றார். ‘எங்கிட்டயும் சொல்லியிருக்காரு’ ‘ஒரு கார்டு போட்டா நம்மகூட வந்திருப்பாரா? அவருக்கும் மியூசிக்னா பைத்தியம் இல்ல?’ ‘இப்ப பருத்திநடவு மாசம். ஊரவிட்டே கெளம்ப மாட்டாரு. இந்த மாசம் முடிஞ்சா மூணுமாசம் வேலையே கெடையாது. உலகத்திலே ஜனங்கள்லாம் எதுக்கு வேலை பாக்கிறாங்கன்னு ஆச்சரியப்பட்டுட்டே இருப்பாரு..’ . ராமன் சிரித்தார். இறுக்கம் மெல்லக் குறைந்தது.
பாலசுப்ரமணியன் ‘பொதுவா நீலம், ஊதால்லாம் மன இறுக்கம் உள்ளவங்களுக்கு புடிச்ச நெறம். மனுஷனோட தீமைய கவனிக்கிறவங்களுக்குண்டான நெறம். நீங்க சொன்னது வித்தியாசமா இருந்தது’ என்றார். ‘தீமை இல்லாம இலக்கியம் இல்லியா பாலு?’ என்றார் ராமன் மெல்லிய பெண்குரலில். ‘ இருக்கு…ஆனா கிளாசிக் இருக்குமான்னு நேக்கு டவுட்டா இருக்கு… எல்லா எபிக்சிலேயும் தீமைதானே அளவிலே ஓங்கி இருக்கு. உன்னதத்திலே நன்மை மேலே இருக்குன்னாலும்..’ ராமன் மூச்சு திணறுபவர் போல ’நான் எழுதறேன்…தீமையே இல்லாம நல்லதை வச்சு நான் கிளாசிக்கு எழுதறேன்’ என்றார். பெரிய எடையை தூக்கி வைத்தவர் போல திணறி உள்ளங்கைக்குள் இருந்த கைக்குட்டையை விரித்து முகத்தை துடைத்துக்கொண்டார். முகத்தை அதில் ஒளித்துக்கொள்ள ஆசைப்படுபவர் போலிருந்தார்.
பாலசுப்ரமணியன் புன்னகையுடன் ‘எழுதுங்கோ’ என்று சொல்லி பேசாமலிருந்தார். அதன்பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பாலசுப்ரமணியன் தப்பாக ஏதாவது ஆயிற்றா என்று யோசனைசெய்தார். அப்படி ஒன்றும் சொல்லிவிட்டதாகத் தெரியவில்லை. ராமன் சட்டென்று முகத்தை உம்மென்று ஆக்கிக்கொண்டு பேசாமலிருப்பார். ஆனால் அதிகபட்சம் இருபது நிமிடங்கள்தான். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அவரது உலகம் முழுமையாக மாறிவிடுகிறது. பழைய விஷயங்கள் எதையும் அவர் கையோடு எடுத்துக்கொள்வதில்லை.
கழுகுமலையில் பஸ்ஸில் இருந்து இறங்கும்போதுகூட ராமன் பேச்சுக்கு வரவில்லை என்பதை பாலசுப்ரமணியன் கவனித்தார். அது தன்னுடைய பேச்சினால் வந்த மௌனம் அல்ல என்று தெரிந்தது. பொறுமையாகக் காத்திருக்க முடிவெடுத்தார். மனிதர்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு பேசாமலிருப்பது அவருக்கும் மிகவும் பிடிக்கும். பஸ்நிலையத்திற்கு சாமிநாதன் வந்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அவர் அவ்வளவுதூரம் வந்தது பால சுப்ரமணியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘வாங்கோண்ணா…நல்லா இருக்கேளா? மூத்தவ இப்ப சரியாயிட்டாளா?’ என்றார் சாமிநாதன்.
‘சுப்பு அண்ணா வந்துட்டாராடா?’ என்றார் ராமன். ‘அவரு அப்பவே வந்து தீர்த்தம் எடுத்துக்க ஆரம்பிச்சாச்சு. ஊர்ல உள்ள வெட்டிப்பயக்க ஒரு பய விடாம சுத்தி உக்காந்துண்டிருக்கானுங்க. ஒரே பொகை வேற’ என்றார் சாமிநாதன். ‘எங்க இருக்காரு?’ ‘இங்க சேத்துப்பட்டி மிராசுதார் வீட்டிலே’ என்றார் சாமிநாதன். ‘வீட்டிலேயா?’ ராமன். சாமிநாதன் கொஞ்சம் சங்கடப்பட்டு ‘வீடுன்னா, அவருக்கு இங்கியும் ஒரு வீடு இருக்கு’ என்றார்.
‘ஓகோ…’ என்று ராமன் முகம்மலர்ந்தார். ’அதுக்கு ஏண்டா சங்கடப்படுறே? என்னமோ இவன் தப்பு பண்ணினமாதிரி…’ பாலசுப்ரமணியனிடம் திரும்பி ‘சாமிநாதன் சரியான ஆச்சாரம். ரொம்ப சங்கடப்படுவான்’ என்றார். ‘கீழத்த்தஞ்சை மண்ணு ஒட்டலைன்னு நெனைக்கிறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் உரக்கச்சிரித்தார்
ஒரு குதிரைவண்டிதான் வந்திருந்தது. அதில் ராமன் உற்சாகத்துடன் ஏறி வண்டிக்காரன் பின்னால் அமர்ந்துகொண்டார். ‘நான் எப்பவுமே இங்கதான் உக்காந்துக்கறது பாலு. சின்ன வயசிலே இருந்து இதிலே ஒரு பிடிவாதம். இங்க ஏதாவது வாண்டு ஏறி ஒக்காந்துட்டுதுன்னு வைங்கோ வண்டியே வேணாம்னு நடக்க ஆரமிச்சிருவேன். இதில என்ன இருக்குன்னு நினைக்கிறேள் என்ன?’
பாலசுப்ரமணியன் ‘இல்லை’ என்றார் ‘நினைக்கிறேள், அது தெரியும்…சின்னவயசு பழக்கம்னு வைங்கோ’ வண்டி கிளம்பியது. சாமிநாதன் பின்னால் தொத்திக்கொண்டு ‘அவாளுக்கு நஸ்டால்ஜியா ஜாஸ்தி. போனவாரம் கும்மோணம் வந்திருந்தா. என்னடாது அந்தக்காலத்திலே தெருவொரமெல்லாம் நாத்தமா அடிக்குமேன்னு ஏக்கமா சொல்றா’ என்றார் . பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார்
தெருவோரங்களில் கீற்றுச்சாய்ப்பு இறக்கி கள்ளிப்பெட்டி மேஜைகள் செய்து நெல்லைப்பகுதி திருவிழாக்களுக்கே உரிய கடலைமிட்டாய் , தேங்காய் மிட்டாய் அடுக்குகள். பைசாநகரத்து கோபுரம் போல இனிப்புச்சேவு பரப்பி வைத்திருந்தார்கள். பளீரிடும் சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களில் சீனிக்குச்சி மிட்டாய்கள். பெரிய இரும்பு வாணலியை தரையில் குழி எடுத்து செங்கல் அடுக்கி கட்டப்பட்ட அடுப்புகள் மேல் வைத்து எண்ணை தளபுளக்க இனிப்புச்சேவு காரச்சேவு பொரித்து சல்லரிகளில் அள்ளி புனல்வடிவ துளைப்பாத்திரங்களில் போட்டார்கள்.
ராமன் குதூகலமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு திரும்பி, ‘திருவிழான்னாலே கிராமத்துக்கு ஒரு இது வந்திடுது, மணைக்கு வர்ர புதுப்பொண்ணு மாதிரி, இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘இந்த ஊரு திருவிழாலே மிட்டாய் ஜாஸ்தி..’ என்றார். ’எங்கூரிலே விதவிதமா தாம்பூலத்துக்கான சமாச்சாரங்கள்தான் நெறைஞ்ருக்கும்..பாக்கிலேயே பத்துப்பண்ணிரண்டு வகை’
அக்ரஹாரம் முழுக்க தெரு நிறைத்து கோலம்போட்டிருந்தார்கள். நிறைய பிராமணப் பையன்கள் சட்டை போடாத உடம்பில் பட்டைபட்டையாக விபூதி குழைத்து பூசி பெரிய பலாச்சுளைக் காதுகளுடனும் எண்ணை ஒட்டிய தலைமயிருடனும் உரக்க சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வாழைமட்டையை கொண்டுபோய் யார் பின்னாலாவது மடேரென்று அடித்து திடுக்கிடச் செய்வதுதான் விளையாட்டு. காவிப்பட்டை போடப்பட்ட வீடுகளின் சிமிண்ட் திண்ணைகளில் ஆங்காங்கே வயதான மாமிகள் அமர்ந்து கண்களைச் சுருக்கி தெருவைப் பார்த்தார்கள். வீடுகள் முழுக்க மாவிலை தோரணமும் மலர்ச்சரங்களும் தொங்கின. ஒரு கூடைக்காரி காலிக்கூடையுடன் எதிரே வந்தாள்.
அக்ரஹாரத்தைத் தாண்டி இடதுபக்கம் சென்ற தெருவின் எல்லையில் பெரிய பழைய வீட்டுக்கு முன்னால் நாலைந்து வண்டிகள் அவிழ்த்து போடப்பட்டிருந்தன. ஒரு கருப்பு பியூக் கார் வேப்பமரத்து இலைகளைப் பிரதிபலித்துக்கொண்டு நின்றது. ‘நல்லா தேச்ச திருவோடு மாதிரி இருக்குல்ல?’ என்றார் ராமன். பாலசுப்ரமணியன் புன்னகை செய்து ‘இதுக்கும் ஏதாவது பொம்புளை உவமை சொல்லுவீங்கன்னு நினைச்சேன்’ என்றார். சாமிநாதன் உரக்க சிரித்தார்.
அவிழ்த்துக்கட்டப்பட்டு வைக்கோல் மென்று கொண்டு நின்ற வண்டிமாடுகள் நிமிர்ந்து பார்த்து புதிய காளைகளை புஸ் என்று மூச்சு விட்டு வரவேற்றன. ராமன் வண்டியில் இருந்து குதித்து உற்சாகமாக ‘சாமிநாது, பெட்டியக் கொண்டாந்து உள்ள வைடா…நான் மேலே போறன்…நாயக்கர் மேலேதானே இருக்காரு?’ என்றபடி கட்டிடத்தின் பக்கவாட்டு படிகளில் ஓடி ஏறிச் சென்றார். பாலசுப்ரமணியன் இறங்கி தன் பெட்டியையும் ராமன் பெட்டியையும் கொண்டு சென்று வைக்கச் சொல்லிவிட்டு முகம் கழுவி துடைத்து மேலே சென்றார்
மேலே நடுக்கூடத்தில் பாய் விரித்து தலையணைகள் போட்டு ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தார்கள். நடுவே மதுரை சுப்பு அய்யர் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அருகே கிட்டத்தட்ட அவரை உரிமைகொண்டாடி வைத்திருப்பது போல நாயக்கர் அமர்ந்து மீசையை கோதிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார். ராமன் சுப்பு அய்யரின் எதிரே சென்று அமர்ந்து செல்லம்கொஞ்சி பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.
பாலசுப்ரமணியன் வாசலில் தயங்கி நின்றார்.அறைக்குள் விஸ்கி வாசனை நிறைந்திருந்தது. பாயில் பெரிய தாம்பாளம் நிறைய பலாக்காய் வற்றலும், நேந்திரன் வற்றலும், முந்திரிப்பருப்பும் குவிக்கப்பட்டிருந்தன. முதல் பார்வைக்கு ராமன் சுப்பு அய்யரின் தம்பி போல இருந்தார். அதேபோல முன்நெற்றியில் விழும் முடி. கொழுத்த கன்னங்கள் கொண்ட மீசையில்லாத முகம். ஆனால் ராமனிடமிருந்த பெண்மை அவரிடம் இல்லை. அவரது முகத்தில் ஒரு வினோதமான பளபளப்பு இருந்தது. காதுமடல்கள் தடித்து தொங்கியவை போலிருந்தன. எந்நேரமும் எவரையாவது நக்கல் செய்பவர் போல இருந்தார். வெற்றிலைபோட்டு புண் மாதிரி தெரிந்தது வாய். மாந்தளிர் நிற ஜிப்பா அணிந்து பட்டுவேட்டி கட்டியிருந்தார். மார்பில் இரு பித்தான்களை திறந்து போட்டு புலிநகம் பதித்த பதக்கச்சங்கிலி பாதி வெளியே தெரியச்செய்திருந்தார்.
‘இவருதாண்ணா நம்மாளு… பாலுன்னு சொல்வேனே.. நல்லா பேசுவார். பேசுறதே சங்கீதம் மாதிரி இருக்கும். பாக்கத்தான் இப்டி இருக்காரு. பிளேடு மாதிரி ஆளு. நேக்கெல்லாம் இவர பாக்கறச்சயே வயத்துக்குள்ள சில்லுன்னு இருக்கும்…கிழிச்சிருவார்’ என்றார் ராமன். சுப்பு அய்யர் ’வாங்கோ உக்காருங்கோ’ என்றார் . கை காட்டி ‘சாப்பிடுவேளா?’ என்றார். பாலசுப்ரமணியன் ’இதுவரை இல்லை’ என்றார். ‘அப்ப இப்ப ஆரம்பிக்கிறேளா?’ ‘இல்ல. அதுக்காக நான் வரலை’ சுப்பு அய்யர் அரைக்கணம் பார்த்துவிட்டு ‘அப்பசரி…டேய் ராமு, உங்காள எவனுமே கட்டாயப்படுத்த முடியாதுடா’ என்றார். பாலசுப்ரமணியன் அவரது கைவிரல்களைப் பார்த்ததும் கண்களை விலக்கிக் கொண்டார். விரல்கள் ஒன்றுக்குமேல் ஒன்று ஏறியவை போல குறுகி வளைந்திருந்தன.
‘சொன்னேனே…அண்ணா இப்ப இவன்கிட்ட இந்தியாவக்குடுங்கோ. நேருவ அமெரிக்காவுக்கு அனுப்பிடலாம்’ என்றார் ராமன். ‘அவர எதுக்குடா அங்க அனுப்பணும்? அங்க ஏற்கனவே பிரசங்கம் பண்ண ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க.பேசாம ரஷ்யாவுக்கெ அனுப்பறது. குருஷேவை பேசியே கொன்னுடுவார். உலகத்துக்கு விடிமோட்சம்’ ராமன் கிச்சுகிச்சுமூட்டப்பட்ட சின்னப்பையன்கள் போலச் சிரித்தார்.
பாலசுப்ரமணியன் சுப்பு அய்யரிடம் நெருக்கமாக உணர்ந்தவராக வந்து பாயில் அமர்ந்தார். சுப்பு அய்யர் ‘நீங்க கம்யூனிஸ்டு இல்லியே?’ என்றார். ‘இப்ப இல்லை’ என்றார் பாலசுப்ரமணியன். ‘டேய் ராமு உங்காளு ராஜாஜிக்கு தம்பி மாதிரின்னா இருக்கான். கணக்கா பேசறானே’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். சுப்பு அய்யரின் குரலில் வெற்றிலை போட்டுத்தடித்த நாக்கின் குழறல் இருந்தது.
’காபி சாப்பிடறேளா?’ என்றார் சுப்பு அய்யர். சாமிநாதன் ‘சொல்லிட்டேண்ணா…’ என்று வாசலில் நிற்க ‘அதாருது, டேய் சாமிநாது வாடா வாடா , தாயோளி குளூக்க ஒருகொடம் காவேரி தண்ணிய கொண்டாந்து தலையிலே கொட்டறது மாதிரி இருக்குடா உன்னை பாக்கறது. வாடா ஒக்காரு… ’ ‘இருக்கட்டும்ணா’ ‘என்னடா இருக்கட்டும்…ஒக்காருடா…நாயி, மெலிஞ்சு போய்ட்டியேடா..ஏண்டா? ‘வேலைண்ணா’ ‘என்னடா வேலை? நீ எப்படா ஸ்கூலுக்கு போனே?’ ராமன் ‘அந்தவேலைய சொல்லலை. அவன் இப்ப எம்.டி. ராமநாதன் பிளேட்டு நாலு வாங்கி வச்சு கேக்கறான்… கடும் உழைப்புன்னா’ என்றார் . சுப்பு அய்யர் வெடித்துச் சிரித்தார்.
‘நீங்க ராமநாதன் ரசிகர் இல்லியே?’ என்றார் சுப்பு அய்யர். ‘ஆமா’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஓ அப்டியா? நாங்க அவரைக் கொஞ்சம் கிண்டல் பண்ணுவோம். உங்களுக்கு வருத்தம் இருந்தா தாம்பூலம் போட்டுக்குங்கோ..கேக்கும்’ என்றார். காபி வந்தது. சுப்பு அய்யர் ‘இவரு ரங்கநாத நாயக்கர். கோயில்பட்டியிலே மில்லு வச்சிருக்காரு. மிராசுதார்.நம்ம ஆப்தர். சங்கீதத்தை தண்ணி ஊத்தி வளக்கிறார்…’ என்று சிரிக்க நாயக்கர் ‘போங்கண்ணா…’ என்று சிணுங்கினார்.
காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சுப்பு அய்யர் ’டேய் சாமிநாது, பாடுரா’ என்றார். ‘அண்ணா பாட்டாண்ணா…கொல்லாதீங்கோ’ ‘டேய் பாடுராண்ணா…’என்றவர் பாலசுப்ரமணியனிடம் ’நன்னா பாடுவான். பாவம் கச்சிதமா இருக்கும். சொல்லப்போனா நான் தமிழ் தெலுங்கு சாகித்தியத்துக்கு இவன் பாடித்தான் பாவம் என்னான்னு கத்துக்கறேன்…’
சாமிநாதன் ’என்ன பாட்டு பாடுறதுண்ணா?’ என்றார். ‘இது கழுகுமலைடா. தாயளி, ரெட்டிய விட்டுட்டு எவனை பாடினாலும் ஜோட்டாலேயே அடிப்பேன்…’ சாமிநாதன் தலைகுனிந்து பாயின் கோரையை லேசாக பிய்த்துவிட்டு மெல்ல ம்ம்ம் என்று ஆரம்பித்து கணீர் குரலில் பாட ஆரம்பித்தார்
வன்னத் தினை மாவைத் தெள்ளியே – உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே – உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே
சுப்பு அய்யர் உரக்க ‘பேஷ்’ என்று சொல்லி எம்பி அமர்ந்தார். அறைக்குள் அது வரை இருந்த ஏதோ ஒன்று வெளியேறியது. முற்றிலும் புதிய ஒன்று உள்ளே வந்து சூழ்ந்தது. தூயது, தானிருக்கும் இடத்தை முழுக்க தன்னுடையது மட்டுமே ஆக்குவது.
கன்னத் தினிக்குயில் சத்தமே – கேட்கக்
கன்றுது பார் என்றன் சித்தமே – மயக்
கம்செய்யுதே காமப் பித்தமே
ஓரக்கண்ணில் அசைவு தெரிய பாலசுப்ரமணியன் திரும்பிப்பார்த்தார். பக்கவாட்டு அறைக்குள் இருந்து ஒரு பெண் ஒரு கண்ணாடிப்பிம்பம் வருவது போல அத்தனை அலுங்காமல் தோன்றி வந்தாள். நீலப்பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டிகையிலும் காதுகளில் தோடுகளிலும் மூக்கில் பேசரியிலும் ப்ளூஜாகர் வைரங்கள் மின்னுவது தெரிந்தது. அவள் வந்ததும் ஓரமாக சுவர் சாய்ந்து அமர்ந்ததும் எல்லாம் அழகிய நடனம் போலிருந்தது. ’தேடக் கிடையாத சொர்னமே – உயிர்ச் சித்திரமே மடவன்னமே’ என்ற வரியே காட்சியாக நிகழ்ந்தது போல.
பாடல் முடிந்ததும் சுப்பு அய்யர் திரும்பி பாலசுப்ரமணியனிடம் ‘என்ன அப்டியே வாய தெறந்து வச்சுண்டிருக்கே…பாத்திருக்கேல்ல?’ என்றார். அந்தப்பெண் முறுவலித்தாள். சுப்பு அய்யர் ‘இவதான் சந்திரா. பரதநாட்டியம் ஆடறா…’ பாலசுப்ரமணியன் மூச்சுத்திணறுவதைப்போல உணர்ந்தார். அவரால் அவளைத் திரும்பிப் பார்க்கமுடியவில்லை. ஒருகணம் அவளுடைய முகமும் மறுகணம் தன்னுடைய தோற்றமும் அவர் மனதில் மாறி மாறி எழுந்தன. இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாமோ. தலையைச் சீவிக்கொண்டிருக்கலாமோ?
சுப்பு அய்யர் சிரித்தபடி ‘நானும் கவனிச்சிருக்கேன், சந்திராவ முதல்ல பாத்தப்ப பேஸ்தடிக்காத ஒருத்தனைக்கூடப் பாத்ததில்லை…’ என்றார். சந்திரா பாலசுப்ரமணியனிடம் ‘உங்க பேரென்ன?’ என்றாள். அவள் குரல் கனமாக, சற்றுகரகரப்பாக இருந்தது. அந்த அழகுடன் கொஞ்சம்கூட இணையாதபடி. அந்த முரண்பாடு அவளை ஒரேகணத்தில் மானுடப்பெண்ணாக்கியது. பாலசுப்ரமணியன் அவளைப் பார்த்து ’பாலு, பாலசுப்ரமணியன்’ என்றார்
‘சந்திரா, இவரு இன்னைக்குத் தமிழிலே பெரிய ஆளு. ஒரு அசுர சக்தி. மூளைக்குள்ள பெருமாளோட சக்கரமே இருக்கறதா ராமன் சொல்றான்’ என்றார் சுப்பு அய்யர். அவள் ‘ஓ’ என்று சொல்லிச் சிரித்தாள். ‘இவளைப்பத்திக் கேள்விப்பட்டிருக்கேல்ல?’ பாலசுப்ரமணியன் ’ஆமா..ஆனா டான்ஸ் பார்த்ததில்லை. படங்களிலே பாத்ததோட சரி…’. பொன்மூங்கில் போல இறுக்கமான உடம்பு. நீளமான மெல்லிய கழுத்தில் பச்சைநரம்புகள் ஓடின. அழுத்தமான உதடுகள், பெரிய கண்கள். தலைமுடியை இரு நெற்றியோரங்களையும் மறைப்பது போல சீவி தளர்வாக பின்பக்கம் கட்டி விட்டிருந்தாள். அஸ்தமன சூரியன்போல பெரிய குங்குமப் பொட்டு.
’எங்கூடத்தான் வந்தா..’ என்றார் சுப்பு அய்யர். அந்த வரி ஓர் அறைபோல பாலசுப்ரமணியனை தாக்கியது. அவர் அரண்டதுபோல அவரது கைவிரல்களை அனிச்சையாக பார்த்துவிட்டு ராமனை பார்த்தார். ராமன் அசாதாரணமான ஒரு மௌனத்தில் இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது. பாலசுப்ரமணியன் தன் எண்ணங்களை மறைப்பதற்காக வழக்கமாகச் செய்வது போல தீவிரமாக ஒரு கேள்வியைக் கேட்டார் ‘நீங்க ஆந்திராப்பக்கம் தானே?’ ‘பூர்வீகம் குஜராத். பிறந்து வளர்ந்ததெல்லாம் பூனா…. பரதம் படிக்கணும்னு காஞ்சீபுரம் வந்தேன்’. சுப்பு அய்யர் ‘காஞ்சீபுரம் நல்லுச்சாமிப்பிள்ளைதான் குரு…’ என்றார். பாலசுப்ரமணியன் மையமாக ‘ஓகோ’ என்றார். ராமன் தரையையே பார்த்துக்கொண்டிருப்பதை பாலசுப்ரமணியன் ஓரக்கண்ணால் கவனித்தார்.
சந்திரா ‘இப்ப காபி சாப்பிட்டா எப்டி அப்றம் சாப்பிடறது?’ என்றாள். ‘காபிய எப்பவும் சாப்பிடலாம்…காலம்பற எழுந்துண்டதுமே காபியாலே வாய் கொப்பளிக்கிறது எங்கப்பாவோட பழக்கம்’ என்றார் சுப்பு அய்யர். ‘நீங்க மத்ததிலேன்னா கொப்பளிக்கிறேள்…’ என்றார் சாமிநாதன். ‘சந்திரா எண்ணி எண்ணி சாப்பிடுவாள். கால்ம்பற ரெண்டு இட்லி. மதியம் ஒரு சப்பாத்தில் கொஞ்சம் கீரை காய்கறிகள். ராத்திரி மறுபடி ரெண்டு இடியாப்பம் இல்லாட்டி இட்லி. ஒரு டம்ப்ளர் ஜூஸ்…அவ்ளவுதான்’ சுப்பு அய்யர் சொல்லியபடி பால சுப்ரமணியனைப்பார்த்து கண்ணடித்து ‘சும்மா சிக்குன்னு இருக்கா இல்ல?’ என்றார்
பாலசுப்ரமணியன் அதிர்ச்சியுடன் ஒருகணம் அவளைப்பார்த்துவிட்டு பார்வையை விலக்கிக்கொண்டார். அவள் சிரிப்பதை உணர்ந்தபின் மீண்டும் பார்த்தார். சுப்பு அய்யர் ‘அவ வயசு இப்ப என்னாங்கிறீர்?’ பாலசுப்ரமணியன் ‘தெரியலை’ என்றார். ’சொல்லுடீ இவளே’ என்று ஒரு தாளைச்சுருட்டி அவள் மேல் எறிந்தார். சந்திரா ‘என்ன சொல்றது?’ என்றபின் ‘ஐ யம் டைம்லெஸ் யூ நோ’ என்றாள். ‘வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா?’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் புன்னகையுடன் அவளைப்பார்த்தார். முகத்தின் ஆழமான சிலகோடுகள் வயதைக் காட்டத்தான் செய்கின்றன என்று தோன்றியது.
‘உயர்தர ஒயினைப்போல நான் காலத்தை உண்டு இனிமையாகிறேன்’ என்று சந்திரா உயர்தர உச்சரிப்புள்ள ஆங்கிலத்தில் சொன்னாள். சுப்பு அய்யர் ஆங்கிலத்தில் ‘நம்முடைய ஐதீகத்தில் கால என்றால் கரியது என்று பொருள். மரணம் என்று பொருள். காலத்தை உண்டு சுருண்டு கிடப்பது நாகம். அதன் விஷத்துக்கு ஒரு துளியில் ஒரு உலகை அழிக்கும் வல்லமை உண்டு. ஆலகாலம் என்று அதற்கு பெயர்’ என்றார். அவர் அப்படி சட்டென்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தது பால சுப்ரமணியனுக்கு அதிர்ச்சி அளித்தது. சுப்பு அய்யரின் உச்சரிப்பு இந்திய அழுத்தங்களுடன் இருந்தாலும் சொற்றொடர் அமைப்பு துல்லியமாக இருந்தது.
சந்திரா ‘எல்லா அமுதங்களும் மனிதனை கட்டிப்போடுபவை. விலக்க முடியாத ஈர்ப்புள்ளவை. ஆகவே அவையெல்லாமே விஷங்களும்கூட’ என்றாள். பாலசுப்ரமணியன் அவர்கள் இருவருக்குள் ஏதோ ஓடுவதை புரிந்துகொண்டார். இரு ஊசிமுனைகள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்கின்றன. சுப்பு அய்யர் சட்டென்று திரும்பி ராமனிடம் ‘என்னடா பண்றாய்? தூங்கிட்டியா?’ என்றார். ‘இல்லேண்ணா…நான் வந்து’ ‘நீ வந்தா என்ன வராட்டி என்ன? நாசமா போக…வந்ததிலே இருந்தே நானும் பாக்கறேன், செத்த சவம் மாதிரின்னா இருக்கே..’
பாலசுப்ரமணியன் அதிர்ந்து மீண்டும் அனிச்சையாக சந்திராவைப் பார்த்தார். அவள் சாதாரணமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். நாயக்கர்கூட கொஞ்சம் அசௌகரியமாக ஆனது போல பட்டது. ராமன் ‘இல்லேண்ணா…நீங்க பேசிட்டிருந்தேள்…’ என்றார். ‘கேட்டையா பாலு, பாலுதானே உம்பேரு? சந்திராவோட ஆட்டம் என்னன்னு இவன்கிட்ட கேக்கணும்…என்னடா’ ராமன் ‘ஆமாண்ணா…’ என்று சொல்லி பலவீனமாக புன்னகை புரிந்தார். ‘அவரை தெரியுமா?’ என்றார் பாலசுப்ரமணியன் . சந்திரா ‘நல்லாவே தெரியுமே…கலாஷேத்ராவிலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். நெறைய பேசுவோம். சங்கீதம் பத்தி…’ புன்னகை புரிந்து ‘பாடணும்னுதான் ஆசை…முடியல்லை. முடிஞ்சது எழுதறதுதான். அதானெ எழுதறேன்னு சொல்லுவார்’ என்றாள்
ராமன் ‘கலாஷேத்ராவிலே மாயான்னு ஒரு பெல்ஜியம்பொண்ணு இருந்தா. அவ எங்க வீட்டுக்கு மேலேதான் குடியிருந்தா. அப்ப அவகூட போறச்ச இவளை அறிமுகம்…’ என்றார். பாலசுப்ரமணியன் சிக்கலான ஒரு கோலம் விரிவதை உணர்ந்தார். தாமரைக்குளத்தில் மலர்களுக்கும் மலர்நிழல்களுக்கும் அடியில் கொடிகள் தழுவிப்பின்னி உருவாக்கும் அடர்சிக்கல். ’டேய் சாமிநாது, போயி ஒரு வைன் பாட்டில் எடுத்தாடா’ என்றார் சுப்பு அய்யர்.
சாமிநாதன் நாயக்கரை பார்த்தார் ‘என்னடா?’ சுப்பு அய்யர் அதட்டினார். ‘இல்லேண்ணா…விஸ்கிக்குமேலே…அப்றம் இடியாப்பம் ரெடியா இருக்கு…’ ‘அது இருக்கட்டும்டா..’ ‘கச்சேரிக்கு நேரமாச்சுண்ணா’ ‘டேய்…என்ன அட்வைஸா? படவா’ ’சரிண்ணா’ என்று அவர் கீழே சென்றார். சுப்பு அய்யர் உரத்தகுரலில் ஓர் ஆங்கிலக்கவிதையை சொன்னார்
’உதட்டருகே ஒயின் வருகிறது
கண்ணிலே காதல் எழுகிறது
உண்மை என நாமறிவது அவ்வளவுதானே?
இதோ முதுமையும் மரணமும் வருவதற்குள்
கோப்பையை எடுத்துக்கொள்கிறேன்.
அதைப் பார்க்கிறேன்
மெல்ல பெருமூச்சு விடுகிறேன்1
பாலசுப்ரமணியனை நோக்கிக் கண்ணடித்து ‘என்ன பாட்டு தெரியறதா?’ என்றார் சுப்பு அய்யர். ‘இல்லே’ என்றார் பாலசுப்ரமணியன். ‘டபிள்யூ பி ஏட்ஸ்’ என்றார் சுப்பு அய்யர் ’எனக்கென்னமோ அவனைத்தான் புடிச்சிருக்கு. சும்மா தத்துவம் பித்துவம்னு பிராணனை வாங்கறதில்லை. நீட்டா மனசை மட்டும் எழுதிடறான். நல்ல சுகபாவம் உள்ள கவிதை…பழைய வயின் மாதிரி நாக்கிலேயே நிக்கும்’
ஒயின் வந்தது. ’பலே..சாமிநாது வெவரமானவன். என்ன இருந்தாலும் கும்மோணம்னா…’ என்றார் சுப்பு அய்யர் .’வயின் மட்டும் அதுக்கான கிண்ணத்திலேதான் குடிக்கணும்… வயின் நிறைஞ்ச கிண்ணம் ஒரு கன்னிகையோட சிவந்த ஒதடுமாதரி…’ அவர் அதைத் திறமையாக உடைத்து ரத்தம் வழிவதுபோலகோப்பைகளில் ஊற்றி உதட்டருகே எடுத்து மெல்ல முகர்ந்தபின்னர் புன்னகைசெய்தார். ‘நல்ல வயின்… என்ன சந்திரா, ஒரு கிளாஸ் எடுக்கறியா? ‘அவள் ஆங்கிலத்தில் ’வேண்டாம்’ என்றாள். ‘நல்ல ஒயின் மண்ணின் மாதவிடாய்குருதி போன்றது’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் அந்தச்சொற்களை தன்முன் நெளியும் வினோதமான புழுவைப்போல உணர்ந்தார். சுப்பு அய்யர் மெல்ல குடித்து ரசனையுடன் தலைசாய்த்தார். நாயக்கரும் எடுத்துக்கொண்டார்.
சட்டென்று ராமன் எழுந்து ‘அண்ணா நான் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக்கறேன். கச்சேரிக்கு ஒக்காரணும். அவ்வளவு தூரம் பஸ்சிலே வந்தது’ என்றார். ‘சரிடா’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் எழுந்து ‘நானும் வர்ரேன்…’ என்று கூடவே வெளியே சென்றார். மாடிப்படி இறங்கும் போது இருமுறை ராமன் தயங்குவது போல இருந்தது. பாலசுப்ரமணியன் அலையும் எண்ணங்களில் இருந்து அந்த நுண் அசைவுகளால் கலைக்கப்பட்டார். ராமன் உடலுக்குள் என்னென்னவோ நிகழ்வது போல. கடைசிப்படியில் சட்டென்று நின்று திரும்பி ‘நீங்க வேணா அங்க ஒக்காந்து கொஞ்சம் பேசிண்டு வாங்கோ’ என்றார்
‘இல்ல, நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தேவலை’ என்றார் பாலசுப்ரமணியன். ராமனின் வேகம் அவரை ஆச்சரியப்பட செய்தது. மூச்சு திணறுபவர் போலிருந்தார். ராமன் ஒரு அடி எடுத்துவைத்துவிட்டு திரும்பி ‘இல்ல…போயி அவ இளிப்ப இன்னும் கொஞ்ச நேரம் பாக்கறது? மூஞ்சியிலேதான் வழியறதே’ என்றார். பாலசுப்ரமணியன் இப்போது அவரது வழக்கமான நிதானத்துக்கு திரும்பிவிட்டிருந்தார். உள்ளுக்குள் புன்னகை செய்தபடி ‘கொஞ்சம் வழிஞ்சாலும் தப்பில்லேன்னு தோணித்து. பரவால்ல.’ என்றார்
ராமன் வேகமாக உள்ளே சென்று திகைத்து நின்று, ‘எந்த ரூம்னு சொன்னான்?’ என்றார். ‘லெஃப்டுலே..அந்த சின்ன ரூம்’ ராமன் உள்ளே சென்று அப்படியே தரையில் படுத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் உள்ளே சென்று நின்று தன் ஜிப்பாவை கழட்டியபின் ஒரமாக சுருட்டிவைக்கப்பட்டிருந்த மெத்தையை பிரித்து போட்டு அமர்ந்துகொண்டார். ராமன் கண்ணைமூடிக்கொண்டிருந்தார். மாலை சரிந்துவிட்டதன் ஒலி மாற்றம் வெளியே கேட்க ஆரம்பித்தது. எல்லா குரல்களும் கொஞ்சம் உரக்க ஒலித்தன. சன்னலுக்கு வெளியே நின்ற மாமரம் சிலுசிலுத்துக்கொண்டிருந்தது.
ராமன் பெருமூச்சு விட்டார். பாலசுப்ரமணியன் ஏதும் பேசவில்லை. ராமனால் பேசாமலிருக்க முடியாதென்று அவருக்கு தெரியும். எதையும் தக்கவைத்துக்கொள்பவரோ திட்டமிடுபவரோ அல்ல. அவர் பேச ஆரம்பிக்கும் வரை பேசாமலிருக்க வேண்டும் என பாலசுப்ரமணியன் முடிவுசெய்தார். ஒரு சின்ன உலுக்கல் போதும் ராமன் கொட்டித்தீர்ப்பார். ஆனால் அதுவரை கனத்து கனத்து நிற்கட்டுமே. அந்த வதையை அவருக்கு அளிப்பதைப்பற்றி பாலசுப்ரமணியன் மெல்லிய புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். ஆனால் சில கணங்களிலேயே பாவம் என்றும் பட்டது. எளிமையான அகம் கொண்ட பிறவிக்கலைஞன். எழுத்தையும் சங்கீதமாக்கியவன். அவரைச் சற்றும் சீண்டாமல் அவரது அந்த மனநிலையை சென்று தொடும் சொற்றொடரை பாலசுப்ரமணியன் உடனே கண்டுகொண்டார்.
‘என்ன உங்காளு இவ்ளவு நல்லா இங்கிலீஷ் பேசறார்?’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் புரண்டு படுத்து நம்பமுடியாத உற்சாகத்துடன் ‘பாத்தேளா, என்ன மாதிரி பேசறார்னு? எப்பவோ சட்டுனு இங்கிலீஷ்லே ஒரு ருசி வந்திட்டுது. வாசிக்க ஆரம்பிச்சார். இண்டு நியூஸ் வாசிச்சவர் ரெயினால்ட்ஸ் நாவல் வாசிச்சு அப்டியே எல்லாத்தையும் வாசிக்க ஆரம்பிச்சார். பிரிட்டிஷ் ரொமாண்டிக் கவிதைகள் மேலே அப்டி ஒரு ஈர்ப்பு. பேச ஆரம்பிச்சா பேசிண்டே இருப்பார்….தமிழிலே கூட நெறைய படிச்சிருக்கார். மௌனிய நன்னா தெரியும்….புதுமைப்பித்தந்தான் அவரோட ஃபேவரைட். மௌனி சும்மா கமகத்த வச்சு வெளையாடறாண்டா, பிள்ளைவாள்தான் அடிவயத்து தீய சங்கீதமாக்கினவன்னு சொல்லுவாரு. குபரா துக்கடாவுக்குத்தான் லாயக்கும்பார்’
‘நீங்க?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நான் என்னமோ நல்லா எழுதறதா சொல்றார். நான் சங்கீதம் பத்தி எழுதறதெல்லாம் சும்மா வேஷம்னு நெனைக்கிறர். என்னோட எடம் செக்ஸுதானாம். அதை எங்கிட்டே இருந்தே மறைக்கிறதுக்கு நான் சங்கீதத்த வச்சுண்டிருக்கேனாம். எல்லாம் தாசிகள் சாமி கும்புடறத மாதிரியாம்..’ ராமன் உரக்கச்சிரித்தார்.
’அப்டி இல்லே…அப்ஸ்டிராக்கை எழுதறது எல்லா நல்ல ரைட்டருக்கும் ஒரு சவாலா இருந்துண்டிருக்கும். அதுக்கு ஒவ்வொருத்தரும் ஒண்ணை வச்சுண்டிருப்பா. சிலபேர் இயற்கைய வர்ணிப்பா. சிலபேரு சமையலை வர்ணிப்பா. நீங்க இசைய சொல்றேள்…’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டீங்கறீங்களோ?’ என்றார் ராமன் . அவருக்கு அது புரியவில்லை என்று பாலசுப்ரமணியன் நினைத்துக்கொண்டார்.
பேசுவதற்கான மனநிலையை ராமன் உருவாக்கிக்கொண்டார் என்று அவரது முகம் காட்டியது. எவ்வளவு எளிமையான மனிதர் என்று பாலசுப்ரமணியன் வியந்துக்கொண்டார். ‘சந்திரா என்ன பொடவ கட்டிண்டிருந்தா பாத்தேளா?’ என்றார் ராமன். பாலசுப்ரமணியன் ‘ம்ம்’ என்றார். ’மயில்கழுத்து நீலம். அதான் அவளுக்கு புடிச்ச நெறம். அவ கலருக்கு அது எடுப்பா இருக்குல்ல? டைமண்ட்னாகூட நீலம்தான். நீலத்திலே என்னமோ ஒரு மர்மம் இருந்துண்டே இருக்குன்னு சொல்லுவா. நீலத்த கொஞ்ச நேரம் பாத்துண்டே இருந்தா மனசு மயக்கம் அடைஞ்சிரும்னு ஒருவாட்டி சொன்னா. சரியான்னு பாக்கறதுக்காக ஒருநாளைக்கு நீலப்பட்டுப்பொடவைய எடுத்து வச்சு ராத்திரி லைட்டு போட்டு பாத்துண்டே இருந்தேன். என்னன்னே தெரியலை, திடீர்னு ரொம்ப பயந்துட்டேன்’
பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘நீங்க அவளப்பாத்து மயங்கிட்டீங்க தானே?’ என்றார் ராமன். ‘இல்லே’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நீங்க இதிலே மட்டும் ஒருமாதிரி பம்மறேள். உங்ககிட்ட இருக்கிற கம்பீரமே போய்டுது’ என்று ராமன் சிரித்தார். பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘நீங்க இல்லே, யார் அவளைப்பாத்தாலும் ஒருமாதிரி ஆயிடறாங்க. நான் எத்தனை பேரை பாத்திருக்கேன். அது அவளுக்கும் நல்லா தெரியும். நானே அவள பாத்த அன்னிக்கு கிறுக்கன் மாதிரி அவபின்னாடியே போய்ட்டிருந்தேன். இப்ப கூட அந்த நாள் நல்லா நெனைவிருக்கு. என்ன ஆச்சரியம்னா அந்த நாளிலே என்ன பாத்தேன் எங்க போனேன் ஒண்ணுமே நினைவில்லை. அவளோட முகமும் உடம்பும் மட்டும் தான் ஞாபகம் இருக்கு. அந்த நாளே அவளா ஆயிட்டுது….ஆச்சரியமா இல்ல?’
‘இதிலே எல்லாம் ஆச்சரியப்பட்டா முடியுமா?’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்சட்டென்று எழுந்தமர்ந்து ‘ஒண்ணு சொல்றேனே பாலு. அவ சாதாரண மனுஷி இல்லை. அவளுக்குள்ள ஒண்ணு இருக்கு. அது விஸ்வாமித்திரரை வசியம் பண்ணின மேனகையோட அம்சம்னு நேக்கு தோணியிருக்கு. எப்டி சொல்றது… வார்த்தையே நிக்க மாட்டேங்குதே. ஒரு விஷயத்திலே இருந்து ஆரம்பிக்கிறேனே. இப்ப, அவ உங்க கிட்ட கட்டைக்கொரலிலே பேசினாளே. அது அவ நெஜக்கொரல் இல்லை’ அது பாலசுப்ரமணியனை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.’அவ கொரல் ஒண்ணும் நல்லா இருக்காது. ஆனால் கட்டைக்கொரல் இல்லே. சாதாரணமான பொம்புளைக்குரல். வேணும்னேதான் முதல்ல பேசுறப்ப அப்டி பேசறா’
‘எதுக்கு?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நானே அதை ஆயிரம் வாட்டி யோசனை பண்ணியிருக்கேன். அவளை பாத்தேல்ல. அழகு. கைகால்முகம் கழுத்து கன்னம்னு ஒரு கொறை இல்ல. பஞ்சலோகத்திலே அந்தக்காலத்திலே வடிச்சு வச்சிருப்பாங்களே…தஞ்சாவூர் அரண்மனையிலே அழகான சிவகாமி செலை சிலது இருக்கு. சின்னப்பொண்ணு மாதிரியும் இருக்கும், கொப்பும்கொலையுமாகவும் இருக்கும். அதேமாதிரி… அதைத்தான் ஆம்புள பாக்கறான் . அவன் மனசு பிரமிச்சுப்போயிடுது. அந்த மயக்கத்திலே இருக்கறச்ச அவ கட்டைக்குரலிலே சாதாரணமா பேச ஆரம்பிச்சிடறா. அவன் மனசிலே இருக்கற சொப்பனம் கலைஞ்சிடுது. அவன் சாதாரணமா பேச ஆரம்பிக்கிறான். அப்ப அவ ஒரு சகஜமான பிரியத்த உண்டு பண்ணிக்குவா.’
ராமன் அதே வேகத்துடன் தொடர்ந்தார் ‘ஆனா அது மட்டும் இல்ல பாலு. அந்த கொரல் அப்டி இருக்கிறது நம்மள படுத்திண்டே இருக்கு. இப்ப மச்சம்லாம் அப்டித்தான், பாருங்க, ஒரு நல்ல சருமத்திலே மச்சத்தை பாத்த முதல் கணம் நமக்கு ஒரு சுளிப்புதான் வருது. அது ஒரு கறைதானே. ஆனா அதில நம்ம மனசு பதிஞ்சிடுது. முத்துச்சிப்பிக்குள்ள மணலு மாட்டிண்டா முத்து அதை நெரடி நெரடிபபத்து ஒண்ணும்பண்ண முடியாம முத்தா ஆக்கிருதுல்ல? அதே மாதிரித்தான் மச்சத்தையும் பாத்துப் பாத்து அழகா ஆக்கிண்டுடுவோம். அதே மாதிரித்தான் இவ கொரலும்…நீங்க இப்ப அவ கொரலை மட்டும்தானே நினைச்சுண்டிருகறேள்?’
பாலசுப்ரமணியன் பிரமித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆமான்னு சொல்லேன். என்ன இப்ப’ என்று ரகசியமான குதூகலத்துடன் கேட்டார் ராமன். ‘சரீன்னு வச்சுக்குங்க’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் சட்டென்று அந்தரங்கமாக ஆகி ‘ டேய், ஒனக்கும் குஞ்சுன்னு ஒண்ணு இருக்கு. ஒத்துண்டா ஒண்ணும் கொறைஞ்சிர மாட்டே ’ என்றார் . சிரித்துக்கொண்டு. ’அவ எதுக்கு என்னை கவர நெனைக்கணும்?’ என்றார் பாலசுப்ரமணியன். ’உன்னை மட்டுமில்லே. உலகத்திலே இருக்கிற எல்லா ஆண்களையும் அப்டித்தான் கவரணும்னு நெனைப்பா. அவளோட மனசு அப்டி. எதுக்குன்னா காந்தம் ஏன் இழுக்குதுன்னு கேக்கிறாப்ல. அதோட நேச்சர் அதானே…’
‘அது எல்லா பொண்ணுகளிட்டேயும் உண்டு. சின்னப் பொண்கொழந்தைங்க கூட அட்ராக்ட் பண்ண முயற்சிபண்ணும். என்னன்னு தெரியாமலே அப்டி செஞ்சிட்டிருக்கும்’ பாலசுப்ரமணியன் சொன்னார். ‘இது அப்டி இல்லே. இவளுக்கு ஜெயிச்சாகணும். ஒலகத்து ஆம்பிளைகளை முழுக்க ஜெயிச்சாகனும். ஆனாபணமும் அதிகாரமும் வச்சிண்டிருக்கவன்லாம் அவளுக்கு ஒருபொருட்டே கெடையாது. அவளுக்கு வேண்டியது கலைய மனசிலே வச்சிண்டிருக்கவன். அவ எத்தனை தாவினாலும் தொட முடியாத ஒண்ணை எங்கியோ நின்னு வச்சு வெளையாடிண்டிருக்கிறவன்…’
‘ஏன் அவளும் கலையிலேதானே இருக்கா?’. ‘இந்தாபாரு பாலு, அவ பெரிய இவ. எங்கயும் போவா. எவர்கிட்டயும் பேசுவா. இங்கிலீஷ் பயங்கரமா பேசறா. கன்னாபின்னான்னு வாசிக்கறா. அதனால அவ போறதூரம் அதிகம். ருக்மிணு தேவி அருண்டேல விட மேலே போயிடுவா…ஆனா அவளால ஒருநாளைக்கும் உண்மையான கலைய நெருங்க முடியாது. வெளக்கு போட்டு பளபளன்னு துடைச்சு எடுத்து வெல்வெட்டில வச்சா கண்ணாடிக்கல்லு வைரம் மாதரித்தான் இருக்கும். ஆனா வைரம்னா அது நீரோட்டம் இல்லியா. நல்ல நீரோட்டம் காட்டுக்குள்ள ரகசியமா ஓடிண்டிருக்கிற ஓடை மாதிரின்னா…அவளுக்கு தெரியும் அவளால கலைய தொட முடியாதுன்னு…’
‘ஏன்?’ என்றார் பாலசுப்ரமணியம். ‘மடையா, அவமனசிலே ஈரம் இல்ல. அவ மனசுங்கிறது ஒரு தீட்டினகத்தி. அவ்ளவு கூர்மை, அவ்ளவு பளபளப்பு. ஆனா கலையிலே அந்த கத்திய வச்சுண்டிருக்கற அவளை வாழத்தண்ட வச்சுண்டிருக்கிற கோந்தை ஜெயிச்சுட்டு போய்டுது.நீ அலர்மேல்வள்ளி ஆட்டத்தை பாத்திருக்கேல்ல?’ ‘பாத்திருக்கேன்’ ‘அவளப்பாரு. அவளுக்கு ஒரு எழவும் தெரியாது. சுத்த மண்டு. பாக்கவும் டொங்கிடின்னு இருக்கா…மேடையிலே நின்னான்னா அந்த மாதவிதான் கண்ணுக்கு வாறா…’
பாலசுப்ரமணியம் பார்த்துக்கொண்டே இருந்தார் ‘என்ன நெனைப்பு? கலைன்னா என்ன சும்மாவா? டேய் எல்லா காலத்திலயும் பத்துபேரு கலைகலைம்பான். பத்துபேர ஆகா ஆகாம்ன்னு சொல்லும் கூட்டம். ஆனா கலை வேற எங்கியோ அதுபாட்டுக்கு இருந்துண்டிருக்கும்…வேற யாருக்கும் தெரியாட்டியும் அவளுக்கு தெரியும் அவ என்னன்னு. அதான்.’ ராமன் சட்டென்று சிரித்து கைக்குட்டையால் மோவாயை துடைத்தார். ‘பாடகர்கள புடிச்சு முழுங்கினா பாட்டு வரும்னு ஏதோ பூதம் டிரை பண்ணுச்சாமே…என்ன’ என்றார். பின் முகம் இறுகி ’இவளுக்கு எல்லாரையும் ஜெயிச்சாகணும். ஜெயிச்சு நம்ம மேலே ஒக்காரணும். சிவன் மார்பிலே கால வச்சுண்டு காளி நின்னுண்டிருப்பாளே அதே மாதிரி…’
‘இப்ப சுப்பு அய்யர் மேலே காலை வச்சுண்டிருக்காளா?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘வைக்க ஆசப்படறா. ஆனா அண்ணா வேற மாதிரி. அவருக்குள்ள வேற ஒரு கடல் இருக்கு. அந்தக்கடலிலே அடிக்கற அலையோட ஒண்ணு ரெண்டு துளியத்தான் கச்சேரிலே நீயும் நானும் கேக்கறோம். அதைப்பாத்துட்டு அவர நெருங்கமுடியாது. அவரு குடிச்சு கெட்டவார்த்த சொல்லி ஆட்டம்போட்டு ஒக்காந்திட்டிருக்கார். இவளுக்கும் குடிய பழக்கி விடுவார்…அதுக்குமேலே அவர யாராலயும் நெருங்க முடியாது. எவ்ளவு ஒட்டினாலும் அவருகிட்ட யாருமெ ஒட்ட முடியாது. அவருக்கு அன்பு,காதல் ஒரு இழவும் கெடையாது. அவரு இருக்கறது அந்தகடலுக்குள்ள ஒரு தீவிலே. அங்க எவனாலயும் போய்க்கிட முடியாது’
’ஆனா ஒண்ணும் சொல்லவும் முடியாது’ என்றார் ராமன் சற்று கழித்து. ‘அம்மணி அப்டிப்பட்டவ. அவளோட வேகமும் அப்டி. அவ யாரு எதுவரைன்னு சொல்லமுடியாது’ ‘அம்மணி யாரு?’ ‘அவதான்…நான் அப்டித்தான் அவள சொல்றது…’ ஓகோ’ என்றார் பாலசுப்ரமணியன். அவர் மனதில் இயல்பாக எழுந்த கேள்வியை யோசிக்காமல் கேட்டுவிட்டார். ’அப்ப உங்க மனசிலேயும் காலை வச்சாளா?’ என்றார்.
ராமன் சட்டென்று அமைதியானார். ஆழமான தத்தளிப்புகளுக்குள் அவர் செல்வது போல் இருந்தது. கேட்டிருக்கக் கூடாதோ என்று பாலசுப்ரமணியன் நினைத்துக்கொண்டார். அவரே தொடங்கட்டும் என்று காத்திருந்தார். ஆனால் ராமன்அப்படியே கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார். இமைகளுக்குள் கருவிழிகள் ஓடுவது தெரிந்தது. வெளியே விளக்குகள் போட்டு விட்டார்கள். ஒலிப்பெருக்கி சத்தம் கேட்க ஆரம்பித்தது. விளக்கொளி வேப்பமரத்தின் இலைகளை நிழல்வலையாக ஆக்கி அறைக்குள் அசையச்செய்தது
சாமிநாதன் வந்து நின்று ‘அண்ணா கெளம்பறேளா…நேரமாச்சு’ என்றார். ‘சுப்பு அண்ணா கெளம்பியாச்சாடா?’ என்றபடி ராமன்எழுந்தார். ‘நல்ல கதை. அவரு இந்நேரம் கோயிலிலேன்னா இருப்பாரு’. ராமன் எழுந்து சட்டையை கழற்றியபடி கவனமில்லாமல் கேட்பதுபோல ‘அவளும் உண்டோ?’ என்றார். அரைச்சிரிப்புடன் சாமிநாதன் பார்வை வந்து பாலசுப்ரமணியனை தொட்டுச்சென்றது. பாலசுப்ரமணியன் புன்னகைசெய்ய சாமிநாதனும் புன்னகை செய்தார். ‘என்னடா ஒரு இளிப்பு, பீயப்பாத்த பண்ணி மாதரி?’ என்று ராமன் எதிர்பாராமல் சீறினார். ‘என்னண்ணா நீங்க? எங்கியோ சீறவேண்டியத எங்கிட்ட சீறுறீங்க? பேசாம வாங்க. பாட்டுகேக்க வந்திருக்கேள். கேட்டுண்டு போங்கோ. அண்ணா இன்னைக்கு நல்ல ஃபாமிலே இருக்கார்’
ராமன் ‘அந்த தேவ்டியா மிண்டை கூட இருக்காளோல்லியோ, ஃபாமிலேதான் இருப்பாரு..’என்றவர் சட்டென்று தன் பையை எடுத்து ‘டேய் எனக்கொரு குதிரவண்டிய புடிரா. நான் கெளம்பறேன்’ என்றார். ‘என்ன இப்ப? இவளவுதூரம் வந்துட்டு போனா அண்ணா என்ன நெனைபபார்?’. ‘அவரப் போயி எருமயப் பண்ணச்சொல்லு…நான் போறேன்’ பாலசுப்ரமணியன் அதென்ன புதியவசவாக இருக்கிறதே என்று பாலசுப்ரமணியன் புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். சாமிநாதன் உரக்க ‘அண்ணா பைய வைங்கோ…வைங்கோ சொல்றேன்’ ‘டேய் தள்ளுரா’ ‘இப்ப வைக்கல்லே… புடிச்சு இழுத்துண்டு போயிடுவேன்…நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கே தெரியும்..வைங்கோ அத’
ராமன் பையை வைத்தார். ‘பேசாம சட்டைய மாத்துங்கோ. குளிக்கறதுக்கு நேரமில்லை. கச்சேரி இப்ப ஆரம்பிச்சிரும்..’ என்ற சாமிநாதன் ‘கோயில் போறேளா?’ என்று பாலசுப்ரமனியனிடம் கேட்டார்.பாலசுப்ரமணியன் ‘அப்றமா போறமே..இப்ப ஒரே கூட்டமா இருக்குமே’ ராமன் பரிதாபமாக ‘டேய் நேக்கு தவிக்கறதுடா…நான் வரல்லை’ ‘நீங்க வரீங்க’ என்று உறுதியாகச் சொன்னார் சாமிநாதன். ‘அப்டிச்சொல்றயா?’ என்று தஞ்சாவூர்த்தனமாக இழுத்தார் பாலசுப்ரமணியன் . எழுந்து சட்டையைஎடுத்து ‘உச், சட்டையிலே ஒரே கரப்புருண்ட வாசம். சொன்னா கேக்க மாட்டா’ என்றார். சட்டையை மாட்டிக்கொண்டு ’மூஞ்சிய மட்டும் அலம்பிண்டு வரேன்’ என்று போனார்
‘அது மன்னார்குடிப்பக்கம் ஃபேமஸான வசவு. குடியானவங்க சொல்றது. அக்ரகாரத்திலே ரொம்ப லோக்ரேடு வசவே இதவிட சிக்கிரிஸ்டிராங்கா இருக்கும்’ என்றார் சாமிநாதன் ‘நீங்க சட்டை மாத்தலையா?’ ‘நான் அப்பவே மாத்திண்டேனே .சந்திரா இங்க இருக்கறது உங்களுக்கு தெரியாதோ?’ என்றார் பாலசுப்ரமனியன்.
‘இல்லண்ணா …தெரிஞ்சா இவர வரச்சொல்லியிருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டப்படுறார். ஆனால் நல்லா நாலஞ்சு அடிகிடைச்சு முறிஞ்சுபோனாக்கூட நல்லதுதான்…’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அப்டி போய்டாது. அவளப்பத்தி ஒரு நாவலாவது எழுதாம ஆறாது’ என்றார்
’நாய் மாதிரின்னா வாலச்சுழட்டிண்டு பின்னால அலைஞ்சர். அன்னைக்கு தலையிலே அடிச்சுக்காத ரைட்டர்ஸே இல்ல. கரிச்சான்குஞ்சு என்னைக்கூப்பிட்டு டேய் அவன் பிறவிரைட்டர்டா. அவனுக்கு வெக்கமும் பயமுமா ஆத்தாம கெடக்கு. துணிஞ்சு ஒரு நாலஞ்சு தாசிகளண்ட கூட்டிண்டு போ. தெளிஞ்சுட்டுதுன்னா இடுப்புக்குமேலே யோசிக்க ஆரம்பிப்பான்னார். என்ன சொல்றேள்?’ . பாலசுப்ரமணியன் உரக்கச்சிரித்தார். ‘என்னண்ணா சிரிக்கறேள்?’
‘இல்ல சாமிநாதன், இதயெல்லாம் சொல்றது கஷ்டம். இப்ப இது இடுப்புக்குக்கீழெ ஒரு தொளைக்கும் குச்சிக்குமான விஷயம்தான் அப்டீனா எதுக்கு இவ்ளவு சங்கீதம், இவ்ளவு கவிதை, இவ்ளவு கலை? மனுஷனுக்கு இது ஒரு மீடியம் மாதரி. இது வழியா அவன் எங்கியோ போறதுக்கு டிரை பண்றான். இது ராவணன் கோட்டையா மாறி சுத்திச்சுத்தி அடிக்குதே ஒழிய வழிகாட்டற மாதிரியும் தெரியல்லை. இவருக்கு செக்ஸ் பிரச்சினையே இல்லை. இது வரை இவரு எங்கிட்ட செக்ஸ் பத்தி ஒரு வார்த்தை பேசினதில்லை. பொம்பிளைங்களப்பத்திக்கூட ஒரு வார்த்தை பேசினதில்லை’
‘ஆச்சரியமா இருக்கே…அதைப்பத்தி மட்டும்னா பேசுவர்?’ ‘பேசுவார்…ஆனா பொம்பிளைங்களப்பத்தி இல்ல, அவங்களோட அழகப்பத்தி. திரும்பத்திரும்ப அழகுதான். அவரு செக்ஸுக்கு அடிமை கெடையாது. அழகுக்கு அடிமை. அவரு என்னதேடுறாருன்னு அவருக்கே தெரியாது. ஆனா தேடிண்டே இருக்காரு’ என்றார் பாலசுப்ரமணியன் . ‘ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா நீங்க சொன்னது சரிதான்…பித்துபிடிச்சு அலைவர். ஆனா அத்து மீறவும் மாட்டார். வரார்னு நெனைக்கறேன்’
ராமன் வந்து உற்சாகமாக ’கெளம்பலாமா பாலு?’ என்றார். அவர் அடுத்த இருபதுநிமிடப்பிறவி அடைந்துவிட்டார் என்று நினைத்து பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ’அண்ணா பாட்ட கேட்டு மூணு மாசம் ஆறது. ஒருகாலத்திலே அண்ணா கூடவே காரிலே போயி ஒவ்வொருகச்சேரியா ஒக்காந்து கேக்கறது…அவருக்குன்னு ஒரு கூட்டம் இருந்துண்டே இருக்கு. அவரு மதுரை ஸ்கூல்னா. தெக்க ஒரு கூட்டமே இருக்கு அவருக்கு’
அக்ரஹாரத்துக்கு அப்பால்தான் கோயிலின் மைதானம். அங்கே நாதஸ்வரம் கேட்டது. ‘பிள்ளைவாள்’ என்றார் ராமன் பரவசமாக. ‘படுபாவி, அவன் கையிலே இருக்கறது நாகஸ்வரமா வேற எதுவுமா?நாசமா போக..கொல்றானே…மனுஷன மெழுகா ஆக்கிடறானே’ பாலசுப்ரமணியன் மெதுவாக தலையாட்டிக்கொண்டே நடந்தார். ‘தாயோளி, சாகமாட்டானா…’ என்று ராமன் அரற்றினார். ’இந்த பிளேட்டு தேயறமாதிரி அண்ணா கேட்டிருப்பார்’ என்றார் சாமிநாதன் ‘பாலு இதிலே மூணாம் சரணத்திலே மெதுவா எறங்குவான் பாருங்க…அம்பாள்முன்னாடி நம்ம தலைய தாழ்த்துவோமே அதே மாதிரி…தாயளி பிரம்மராட்சதன். என்ன சொல்றீங்க?’ அவர் எப்போது ஒருமையில் கூப்பிடுவார் என்று பாலசுப்ரமணியன் யோசித்தார். அவருக்குள் ஒரு கணக்கு இருக்கும் போல.
அக்ரஹாரம் காலியாகக் கிடந்தது. வீட்டுத்திண்ணைகளில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்குகளும் பிறைவிளக்குகளும் வரிசையாக ஒளிவிட்டு அக்ரஹாரத்தை மெல்லிய சிவப்பு வண்ணத்தால்இரவின் கரிய திரையில் தீற்றியிருந்தன. ஒருபூனை மட்டும் திண்ணையில் அமர்ந்து மய்யாவ் என்று சொல்லிக்கொண்டிருந்தது. தெருவில் வாழைமட்டைகள் சிதறிக்கிடந்தன. ஒரு திண்ணையில் வயோதிகர் ஒருவர் ‘ஆரு?’ என்றார்.
அக்ரஹாரத்தைக் கடந்து கோயில் முகப்பை அடைந்ததும் அத்தனை கூட்டத்தை கண்டு பாலசுப்ரமணியன் ஆச்சரியம் கொண்டார். எப்படியும் இரண்டாயிரம் பேர் இருக்கும். அவர்கள் அனைவரும் வெறும் மண்ணில் அமர்ந்து ஒலிப்பெருக்கியில் ஒலித்த நாதஸ்வர இசையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரமை பிடித்த முகங்கள் இருளில் கொத்துக்கொத்தாகத் தூரத்து கத்தரிக்காய்விளக்குகளின் ஒளியில் தெரிந்தன.
சாமிநாதனைப்பார்த்ததும் நாயக்கரின் ஆட்கள் ஓடிவந்தார்கள். ஒரு குடுமிக்கார ஆசாமி ‘நாக்காலி போட்டிருக்குதுங்கய்யா’ என்றார். ‘நாக்காலி வேணாமே..இப்டியே தரையிலே ஒக்காந்துக்கலாமே’ என்றார் ராமன். ‘அவருக்கு தேவைப்படும்ணா …நீங்க ஒண்ணு’ என்றார் சாமிநாதன் . பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ‘வேட்டி அழுக்காகாமெ சங்கீதம் கேக்கறதனாலத்தான் நீங்க ராமநாதன்லே நிக்கிறீங்க’ என்றுசொல்லி ராமன் சிரித்தபின் ‘சரி…உங்க இஷ்டம்.சொகுசாத்தான் கேப்போமே’ என்றார்
மரநாற்காலிகளை பக்கவாட்டில் ஓரமாக போட்டார்கள். பாலசுப்ரமணியன் அமர்ந்துகொண்டார். ராமன் ‘கச்சேரிக்கு முன்னாடி ஒரு பரபரப்பு வருதே அது சாதாரணம் கெடையாது. குடிக்கிறவாளுக்கு சாராய வாசனை வந்தா வருமே அத மாதிரி…ஏன் பாலு’ என்றார். ‘நேக்கு அப்டி தோண்றதில்லை’ ‘எதைப்பத்தியாவது தோணியிருக்கா? அட்லீஸ்ட் மொத ராத்திரிக்காவது…’ பாலசுப்ரமணியன் சிரித்தார்.
எதிர்ப்பக்கமிருந்து சுப்பு அய்யர் அவரது குழுவினருடன் வேகமாக வருவது தெரிந்தது. ‘அண்ணாவுக்கு எறங்கிடுத்து. கிரீன் ரூமிலே ஏத்திக்கறதுக்கு பாய்ஞ்சு வர்ரார்’ என்றார் சாமிநாதன் . ‘சும்மார்ரா…இந்தப்பக்கம்லாம் நாயக்கர் தேவர்னு பிராமணபக்தி உள்ள ஆட்கள். தப்பா நெனைச்சுண்டுரப்போறா’ என்றார் ராமன்.
வாத்தியக்காரர்கள் கூட்டமாக பின்பக்கம் வழியாக மேடைக்கு ஏறினார்கள். மேடையில் இருவர் மைக்குகளை பொருத்தி பூபூ என ஊதிப்பார்த்தார்கள். இருளில் இருந்து இருவர் நாற்காலியை நோக்கி வந்தார்கள். நாயக்கரும் சந்திராவும். பாலசுப்ரமணியன் திரும்பி ராமனைப் பார்த்தார். அவர் அபப்டியே உறைந்தது போலிருந்தார்.
சந்திரா புடவை சரசரக்க வந்து பாலசுப்ரமணியன் அருகே அமர்ந்தாள். ‘என்ன ஒக்காந்தாச்சா?’ என்றபடி அமர்ந்துகொண்டாள். அவள் இன்னொரு புடவை மாற்றியிருந்தாள். அதுவும் நீலம்தான். ஆகாய நீலம். அதன் சரிகைப்பகுதியின் வேலைப்பாடு பிரமிப்பூட்டும்படி இருந்தது. அவள் அதை சுருட்டிக்கொண்டு அமர்வது மயில் தோகையைக் சுழற்றி அடங்குவதுபோல தோன்றியது. புடவையின் நுனியா அல்லது அதன் காற்றா தன்னை தொட்டது என்று பாலசுப்ரமணியன் வியந்துகொண்டார். இதமான தாழம்பூ மணம். முகப்பவுடரின் மணம். இன்னும் என்னென்னவோ மணம்.
சந்திரா கழுத்தை திருப்பியபோது பாலசுப்ரமணியன் தன் நெஞ்சில் ஒரு கன்றுக்குட்டி உதையை உணர்ந்தார். அத்தனை நளினமாக ஒரு பெண் கழுத்தை திருப்பமுடியுமா என்ன? ஓர் அசைவு ஒரு மாபெரும் கலைநிகழ்வாக ஆகமுடியுமா என்ன? எப்படி அதை வார்த்தையாக்குவது? மயில்திரும்புவதுபோல. மயில் கழுத்தை திருப்புவதை மட்டும் வார்த்தையாக்கிவிட முடியுமா? எத்தனை பொருளற்ற வார்த்தைகள். ஒரு சொல்லமுடியாமையை இன்னொரு சொல்லமுடியாமையால் ஈடுகட்டுகிறோம்.
மேடையில் வாத்தியக்கலைஞர்கள் அமர்ந்துவிட்டார்கள். மிருதங்கமும் வயலினும் மெல்ல முனகியும் சன்னமாக அதிர்ந்தும் கச்சேரிக்கு தயாராகிக்கொண்டிருந்தன. பெரிய சமுக்காளத்தை கொண்டு வந்து மடித்துப் போட்டு அதன்மேல் ஒரு பட்டுத்துண்டை ஒரு பையன் விரித்தான். ஒரு பெரிய வெள்ளி கூஜா கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதற்குள் தேன்மணமுள்ள கான்யாக் பிராந்தியில் கொஞ்சமாக சோடா சேர்த்து வைத்திருப்பார்கள் என்று ராமன் சொல்லியிருக்கிறார். பிரான்ஸில் இருந்து மாதம்தோறும் கொண்டுவந்து கொடுப்பதற்கு அவருக்கு ரசிகர்கள் உண்டு.
சந்திரா திரும்பி பாலசுப்ரமணியன் கையை தொட்டு ‘சாப்பிட்டுட்டேளா?’ என்றார். அவளுடைய தொடுகை பாலசுப்ரமணியன் உடலை அதிரச்செய்தது. அரைக்கணம் அவர் ராமனை பார்த்து திரும்பி ‘ஆச்சு’ என்றார். தொட்ட கையை எடுக்காமலேயே ‘ராத்திருக்கு அடை செஞ்சிருக்கா…கச்சேரி முடிஞ்சதுக்கு பிறகு சாப்பிடலாம்னு…நான் ராத்திரி சாப்பிடறதில்லை’ என்றாள். ‘நேக்கும் ராத்திரி அடை புடிக்காது’ ‘ஹெவி’ என்று சந்திரா சொன்னாள். அவள் தன் கையின் தொடுகையை எடுக்கவேண்டும் என பாலசுப்ரமணியன் தவித்தார். மெல்ல தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றார். ஆனால் கையை அசைக்கவே முடியவில்லை.
மேடையில் சுப்பு அய்யர் வந்து அமர்ந்தார். அவர் வரும்போதே கூட்டத்தில் பெரும் கைத்தட்டல் ஒலி எழுந்தது. அமர்ந்ததும் அது இன்னும் மேலே சென்றது. அவர் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கைத்தட்டல் ஓய்வதற்காக காத்து நின்றார். பின் புன்முறுவலுடன் கூஜாவை திறந்து வெள்ளிடம்ளரில் திரவத்தை ஊற்றினார். சட்டென்று முன்வரிசையில் இருந்து பலமான கைத்தட்டல்கள் எழுந்தன. டம்ளரை கூட்டத்தை நோக்கி தூக்கி ’சியர்ஸ்’ மாதிரி உதடசைத்துவிட்டு இருவாய் குடித்தார். அதை ஓரமாக வைத்துவிட்டு வயலின்காரரைப் பார்த்தார். சட்டென்று ஒரு பார்வை வந்து சந்திராவை நீவிசென்றது என பாலசுப்ரமணியன் உணர்ந்தார்
’ம்ம்ம்’ என மெல்லிய குரலில் முனகினார். விழாக்கச்சேரிகளில் அவருக்கு சம்பிரதாயம் என ஏதும் கிடையாது. எந்த வரிசையுயிலும் எப்படியும் பாடுவார். என்ன பாடுவார் என்பது அவருக்கே அங்கே அமரும்வரை தெரியாது. அந்த திகிலில் வயலின்காரரும் மிருதங்கக்காரரும் அமர்ந்திருக்க தம்புராபோடும் ஆசாமி உல்லாசமாக கூட்டத்தைப்பார்த்து பல்லைக்காட்டி சிரித்துக்கொண்டிருந்தார். கச்சேரி என்பது அவருக்கு ஒரு அரசன் தன் பிரஜைகளிடம் ஆடும் விளையாட்டு போல. ‘நாநாநா’ என்றார் சுப்பு அய்யர் மீண்டும்.
சாமிநாதன் ’அண்ணா இப்ப அஷ்டபதியிலே ஆரம்பிக்க போறார்..’ என்றார். ’டேய் இது முருகன் கோயில்டா…’ என்றார் ராமன். ’அவருதான் கிறுக்கனாச்சே’ என்றார் சாமிநாதன். ‘எப்டி தெரியும்?’ என்றார் பாலசுப்ரமணியன். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துதான் பாடுவார் என்றுஅவர் நினைத்திருந்தார். ‘தெரியும்…அவ்ளவுதான்…ரொம்ப நாளா கேக்கிறோமே..கொஞ்சம் அவர்கூட ஓடமாட்டோமா?’ என்று சொல்லி சாமிநாதன் புன்னகைசெய்தார்
‘யா ரமிதா வனமாலினா சகி யா ரமிதா…’ என்று சுப்பு அய்யர் ஆரம்பித்தார். கூட்டமெங்கும் ஒரு சிறிய ஆச்சரிய அலை சென்றது. பிரிவாற்றாமையின் தாபமும், கொந்தளிப்பும், தவிப்பும், அவ்வப்போது கசப்பும், அனைத்துமே ஒரு பெரும்பரவசமாக ஆகும் உச்சமுமாக அந்தப்பாடல் கூட்டத்துக்கு மேல் விரிந்திருந்த இருட்டுக்குள் பரவி மெல்லிய கண்காணா மழையாக பெய்தது.
சம்பந்தமே இல்லாமல் சட்டென்று ’கிருஷ்ணா நீ பேகனே பாரோ’. உடனே ஏன் என்றே தெரியாமல் ’தூண்டில்புழுவினைப்போல் வெளியே சுடர்விளக்கினைப்போல்’ அப்படியே ’நகுமோ மோ கனலே’. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென பாட்டின் போதையிலிருந்து வெளியே வந்தபோது ஒரு நிமிடம் பாலசுப்ரமணியன் உணர்ந்தார். வயலின் முனகிக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை சுத்தியால் தட்டிக்கொண்டிருந்தார். தாபம்தான். அத்தனை பாடல்களும் தாபம். வரமாட்டாயா, கைவிட்டுவிட்டாயா, எங்கிருக்கிறாய், ஏன் என்னை நினைப்பதில்லை… ஆம் என தண்ணென்று ஒலித்தது மிருதங்கம்
பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்தபாட்டு அடுத்து வந்தது ’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதிதிருநாள் பாட்டு. பழமையான சுருட்டி. ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார். இரவின் பிரம்மாண்டமான கரிய கூரையை ஏறிட்டுப்பார்த்தார். முடிவில்லாத ஒளித்துளைகள். மின்னும் அழியா விழிகள். ஏன் இங்கு இப்படி இருக்கிறேன்? எந்த மகத்தான புரியாமைகளால் விளையாடப்படுகிறேன்?
விசும்பல் ஒலி கேட்டு பாலசுப்ரமணியன் திரும்பிப் பார்த்தார். ராமன் மார்பில் இரு கரங்களையும் கூப்பி கண்களிலிருந்து கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது.
சட்டென்று நாற்காலி அசையக்கேட்டு பாலசுப்ரமணியன் அறுபட்டு திரும்பிப்பார்த்தார். கைப்பிடிமீதாகச் சரிந்து விழுந்துக்கிடந்தார் ராமன். சாமிநாதன் ‘சத்தம்போடாதீங்கோ’ என்று பாலசுப்ரமணியனிடம் கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு ’…அண்ணா அண்ணா’ என்றார். ராமன் மூர்ச்சையாகியிருந்தார். ‘டேய் தூக்குடா’ என்றபோது பின்னால் அமர்ந்திருந்த நாயக்கரின் வேலைக்காரன் ராமனை அப்படியே தூக்கி விட்டான். ‘யாரும் கவனிக்காமே அப்டியே ஸ்டேஜ்பின்னடி இருட்டுக்குள்ள கொண்டு போயி நேரா பங்களாவுக்கு கொண்டு போயிரு’ அவன் அவரை குழந்தையை போல தூக்கிக் கொண்டு சென்றான்
தரையில் ராமனின் மூக்குக் கண்ணாடி விழுந்து கிடந்ததை பாலசுப்ரமணியன் எடுத்துக்கொண்டார். அவரும் பின்னால் சென்றார். திரும்பி பார்க்கையில் சந்திரா நாயக்கரிடம் ஏதோ சாதாரணமாக பேசுவது கேட்டது. இருட்டுக்குள் விரைந்து ஓடவேண்டியிருந்தது. முன்னால் சென்றவன் அத்தனை வேகமாக அவரைக்கொண்டு சென்று திண்ணையில் படுக்கவைத்தான். ‘என்னாச்சு?’ என்றார் பாலசுப்ரமணியன் . ஒண்ணுமில்லே…சங்கீதம் கேக்கறச்ச அபூர்வமா இப்டி ஆயிடுவர்…’ என்றார் சாமிநாதன்
முகத்தில் நீர் தெளிக்கப்பட்டு விசிறப்பட்டதும் ராமன் விழித்துக்கொண்டார். அர்த்தமற்ற வெறித்த பார்வையுடன் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தார். ’காபி சாப்பிடுங்கோண்ணா’ என்றார் சாமிநாதன். ‘வேணாண்டா’ ‘சாப்பிடுங்கோன்னுல்ல சொல்றேன்?’ என்ற அதட்டலுக்குப் பணிந்து இருகைகளாலும் வாங்கி குடித்தார். அவருக்கு அப்போது அது மிகமிக வேண்டியிருந்தது என்று தெரிந்தது.
ராமன் எழுந்து அமர்ந்தார். ’சட்டைய கழட்டிடறேனே.. ரொம்ப நனைஞ்சுடுத்து…’ என்றார் ‘டேய் நான் பயமுறுத்திட்டேனாடா?’ ‘அதெல்லாம் இல்ல…யாரும் பாக்கலை’ ‘அண்ணா கவனிச்சிருப்பர். அவரு கண்ணு அப்டி’ என்றார் ராமன். நாயக்கர் வந்து ‘சரியாயிட்டாரா? என்னாச்சு?’ என்றார். ’ஒண்ணுமில்லே… ஒரு களைப்பு…எந்திரிச்சிட்டார்’ என்றார் சாமிநாதன். பின்பு ‘அண்ணா நான் நாயக்கர்வாளோட போறேன்… பேசிண்டிருங்கோ’ என்று சொல்லி ‘வாங்கோ நாயக்கர்வாள்…கச்சேரி எப்டி. தெய்வகானம் என்ன?’ என்று இருளுக்குள் சென்றார்
‘என்ன மாதிரி மனுஷன்…’ என்றார் ராமன் ‘இப்ப நான் ஆசைப்படறது உங்க கிட்ட தனியா பேசத்தான்னு சூட்சுமமா தெரிஞ்சுகிட்டான் பாத்தேளா’ என்றார். பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘அண்ணா எனக்கு விடைய சொல்லிட்டார்…எனக்கு வழிகாட்டிட்டார்…அவரு கந்தர்வன். வானத்திலே இருந்து அவர் வழியா தெய்வஞானம் எறங்கி வருது…அவரோட சீக்கு புடிச்ச ஒடம்பும் மனசும் அதைத்தாங்கலே…அதான் குடிக்கறார்…’. பாலசுப்ரமணியன் மேலே கேட்கும் மனநிலையில் கன்னத்தில் கைவைத்து காத்திருந்தார்.
‘நீங்க கேட்டேளே, நான் தோத்துட்டேனான்னு. தோத்து கேவலப்பட்டு சீரழிஞ்சுட்டேன்.மண்ணுல கால வைக்கவே முடியாதவனா ஆயிட்டேன். எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்…அந்தமாதிரி எனக்குள்ள ஏறிட்டுது வெஷம்… மூணு வருஷமா எரிஞ்சு கரிஞ்சுட்டிருக்கேன் பாலு…’
‘ம்’ என்றார் பாலசுப்ரமணியன். ‘இப்ப அண்ணா சொல்லிட்டார். என்ன சொன்னார்னு என்னால சொல்ல முடியலை. ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? இந்த வெஷம் ஏறி எரியறதனாலேதானே என் வெரல்நுனியெல்லாம் சங்கீதமா அதிருது… என் மனசிலே இந்த வேதனையெல்லாம் சங்கீதம்தானே? ஒளறிண்டிருக்கேனா? சொல்ல முடியல பாலு. நான் இதுநாள் வரை சொல்லமுடியலேன்னுதான் சொல்லிண்டே இருக்கேன். அதான் என்னோட எழுத்து.முடியல பாலு…நெஞ்சு முட்டுது. வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க ’ சட்டென்று முஷ்டியால் தன் மார்பை அறைந்தார் ராமன். ‘எரியறது…எரியறது’ என்றார்.
பின்பு தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்தார் ‘நான் எரிஞ்சு எரிஞ்சு கரிக்கட்டயா போறதுக்குன்னு பொறந்தவனாக்கும்…முடியல பாலு…என்னால முடியல…இன்னிக்கே செத்துப்போய்டுவேன் போல இருக்கு…என்பக்கத்திலே இருந்துக்கோ…நீ என் தம்பி மாதிரி…நான் விட்டுட்டு வந்த எல்லாமே உங்கிட்ட இருக்கு. நான் போகாத எடமெல்லாம் உங்கிட்ட இருக்கு…நீ வேற ஆளு… செதுக்கி எடுத்தது மாதிரி இருக்கே…உன்னைப்பாக்கறச்ச நெறைவா இருக்க்கு. நான் அன்னன்னைக்கு வாழறவன். அப்பப்ப செத்து பொழைக்கிறவன் . என்னை கொல்றதுக்குன்னே சங்கீதம் இருக்கு…முடியலை பாலு…பத்து பிறவிக்கு வேண்டியத இந்த பித்த உடம்ப வச்சுண்டு அள்ளியாறது…முடியலை ‘
சொற்கள் காலியானவர் மாதிரி ராமன் அமைதியானார். தூரத்தில் அலர்ஸார பரிதாபம் என்று வயலின் கொஞ்ச ஆரம்பித்தது. ஒலி காற்றில் பறக்கும் சரிகை போல அலைபாய்ந்தது. ‘மயில்கழுத்து நெறம் என்னை ஏன் இழுக்குதுன்னு கேட்டியே. அதிலே வெஷமிருக்கு பாலு. ரகசியமா மின்னிண்டிருக்கற மயில்கழுத்துநெறம் மாதிரி ஆலகாலத்துக்கு பொருத்தமான நெறமென்ன சொல்லு. என்னா ஒரு நெறம்! எங்கியோ காட்டுக்குள்ள ஒரு ராஜநாகம் மயில்கழுத்து நெறத்திலே இருக்கு. கண்டிப்பா இருக்கு. நான் அதை சொப்பனத்திலே பாத்திருக்கேன்.நிலா வெளிச்சத்திலே நீலமா அது வழியறது. அலர்ஸர பரிதாபம்னு சுருட்டியிலே நெளியறது…இப்ப அங்க அந்த மலைக்கு மேலே குளிரிலே தனிமையிலே நெளிஞ்சுண்டிருக்கு…நான் பாக்கறேன் அதை. ஒளறிண்டிருக்கேன் மறுபடியும்…ஆனா எப்டி சொல்றது சொல்லு. எனக்கு ஞானமும் மோட்சமும் ஒண்ணும் வேணாம். அழகு போரும். அழகோட வெஷம் என்னை எரிய வச்சாலும் சரி.. எனக்கு இன்னமும் அழகு வேணும். கால்வெரல் நுனி முதல் தலைமயிர் எழை வரை நெறைஞ்சிருக்கிற ஜீவனோட பேரழகு இருக்கே அது வேணும்… அழகுன்னா என்னதுன்னு இப்ப அண்ணா பாடிக்காட்டிட்டார். அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. எனக்குள்ள தீயா எரியற இந்த தாபத்தில இருந்துதான் நான் பாக்கற எல்லா அழகும் பொறந்து வருது…அந்தா தாபத்தையே புழிஞ்சு புழிஞ்சு வைக்கறாரே மனுஷன்…அந்த தாபம் என்ன மனுஷ தாபமா? இன்னது வேணுங்கிறதுக்கான தாபமா? கெடையாது. அது தாபம், அவ்ளவுதான். பிரபஞ்சம் முழுக்க நிறைஞ்சிருக்கிற பிரம்ம தாபம்… அதுக்கு வேற ஒரு காரணமும் வேணாம்…பாடிக்காட்டிட்டாரே மனுஷன்…’
’நான் ஜாஸ்தி பேசறேன்னுதானே நெனைக்கறே? நேக்கு காவேரி ஓடினா போராதுடா…கரைய ஒடைக்கணும். ஊருக்குள்ள பூந்து வீடு தெரு கோயில் கொளமெல்லாம் ஒண்ணாயிடணும்…குப்பையும் செத்தையும் கோயில்மாலையும் எல்லாம் சேர்ந்து அதிலே மெதந்து சுழிச்சாகணும்… அதுக்குத்தானே நான் பொறந்திருக்கேன். இந்த பிறப்ப குடுத்தாச்சு… இந்த வேதன இன்னும் எனக்கு வேணும் பாலு. இன்னமும் வெஷம் வேணும். கடிச்சுண்டு போற பாம்பெல்லாம் என் குருதியிலே ஒரு சொட்டத்தான் கொண்டு போயிருக்கு. அதுலே ஒவ்வொரு துளியும் சங்கீதம்னா? சுத்த சங்கீதம். காதாலே கேக்கிற சங்கீதம் இல்லே… இப்ப இந்தா அண்ணா இன்னமும் அதேதான் பாடிண்டிருக்கார். அலர்ஸர பரிதாபம்…என்ன மாதிரி நெளிஞ்சு வழியறது! பாலு இந்த தாபத்த வச்சுண்டு சுவாதி எப்டி ராஜாவா இருந்தார்? எங்க ராஜாவா இருந்தாங்கிறே? சரிதான் உருகி உருகி முப்பத்திமூணு வயசிலே பொருங்கிச் செத்தான்…நான் இருந்துண்டிருக்கேன்… ஆனா இருக்கிற வரைக்கும் எரிஞ்சுண்டுதான் இருப்பேன்…அண்ணா பாடுறாரே, இப்ப அவரு மட்டுமே கேக்கற ஒரு சங்கீதம் அங்க மேடைக்குமேலே நிறைஞ்சிருக்கு பாலு. அதான் என் ரத்ததிலே ஓடுது…அதான் என்னை எரிய வைச்சிட்டிருக்கு…போரும்…இதான் நம்ம பிறவி…இது போரும்’
கண்களை மூடிப் படுத்திருக்கும் ராமன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் பாலசுப்ரமணியன். முகம் முழுக்க ஒரு பரவசம் நிறைந்திருப்பதாகப் பட்டது. பின்பு மெல்ல முகத்தசைகள் விடுபட்டு தளர அமைதி நிறைந்தது. பெருமூச்சுடன் நிமிர்ந்து ‘ஏன் பாலு போறப்ப நாம திருச்செந்தூர் வழியா போலாமே’ என்றார். ‘நாகர்கோயில் வந்துட்டா போறேள்? இப்டியே சுப்பு அய்யர் கூட போறதா சொன்னேளே’ ’இல்லே…திருச்செந்தூர் போகணும்னு தோணறது. ஒண்ணுமில்லே, திருச்செந்தூரிலே ஒரு மயில்கழுத்து பட்டு வாங்கி சாத்தணும்… நூத்தம்பது ரூபாயிலே கெடைக்கும்ல?’ ‘அது பாத்துக்கலாம்…யாருக்கு?’ ‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல? தெய்வானைக்குன்னா மாம்பழ நெறம்னு சொல்லுவாங்க’ ‘பண்ணிடலாம்’ என்றார் பாலசுப்ரமணியன்.
இருவரும் சற்று நேரம் அபப்டியே அமர்ந்து தொலைவில் சுப்பு அய்யரின் ஆலாபனையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் விழுந்து கிடந்த வேப்பமர இலைகளின் நிழல்விளையாடலும் தூரத்து கட்டிடங்களின் மங்கிய சுவர்வெண்மையும் அப்பால் அக்ரஹாரத்தின் விளக்குகளின் செவ்விதழ்களும் சுருட்டியாக இருந்தன. காற்று சுருட்டியை மெல்ல அசைத்து நடமிடச்செய்தது. சுப்பு அய்யர் ஓய்ந்து வயலின் மட்டும் ரீங்கரித்து அடங்கி சிறு கனைப்புகளும் கலைசல் ஒலிகளும் அரங்கினரின் கூட்டொலியின் முழக்கமும் எழுந்தபோது பாலசுப்ரமணியன் அவரது குரலைப்பற்றிய பிரக்ஞையை அடைந்தார். அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும்முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?
ராமன் மெல்லிய குரட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். திண்ணை அகலமில்லை, விழுந்துவிடுவாரா என பாலசுப்ரமணியன் நினைத்தார். ஆனால் சிறிய திண்ணைகளில் சமன்செய்து தூங்குவது தஞ்சாவூரில் வழக்கம்தான். சுப்பு அய்யர் அடுத்த பாடலுக்குச் சென்றார். ’ப்ரோவ பாரமா?’ பாலசுப்ரமணியன் எழுந்து கழிப்பறைக்குச் சென்றார். பெரிய வீட்டின் கடைசிக்கோடியில் தனியாக ஒரு பாதை இணைத்து அதன் மறு எல்லையில் கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. விளக்கு குமிழ் எங்கே என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தபின் இருட்டிலேயே உள்ளே சென்றார்.
கால்கழுவிக்கொண்டிருக்கும்போது ‘அலர்ஸர பரிதாபம்’ என்று அவர் முணுமுணுத்ததை அவர் கேட்டார். சரேலென கடற்பாறையை அறைந்து, தழுவி, பூச்சொரிந்து, மூடி, வழியும் அலை போல சுப்பு அய்யர் பாடிய அந்த ஒட்டுமொத்த ஆலாபனையையும் அவர் கேட்டார். மனம்பொங்கி விசும்பிவிட்டார். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதன்மேல் குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி விட்டு கழுவினார். தொண்டையை இறுக்கியதை, நெஞ்சை அடைத்ததை அழுத்தி உள்ளே செலுத்தி அதன் மேல் மூச்சு விட்டு மூச்சு விட்டு ஆற்றி அடங்கியபின் கைக்குட்டையால் முகத்தை அழுத்தி துடைத்து பெருமூச்சுடன் முன்வராந்தா நோக்கி நடந்தார்.

               ’நீலமா? நீலம்னா சொல்றேள்?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஆமா, ஏன் கேக்கறேள்?’ என்று சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி பஸ்சுக்கு வெளியெ ஓடும் வெளிக்காட்சிகளின் ஒளிநிழலாட்டத்தால் காலவெளியில் விரைவதுபோல தோற்றமளித்த முகத்துடன் ராமன் கேட்டார். ‘ஒண்ணுமில்லே. சும்மாதான்’. ராமன் கூர்ந்து பார்த்து ‘பரவால்ல சொல்லுங்கோ, நான் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கப்போறதில்லே’ என்றபின் புன்னகை செய்தார். அவரது அழகிய சிறிய பற்களின் வரிசை, சிரிப்புக்கு எப்போதும் ஒரு பெண்மையை அளிக்கும். அத்துடன் அவரிடம் எப்போதுமே ஒரு நாணம் உண்டு. ’காலாலே தரையிலே கோலம்போடாத கொறை’ என்று ஒருமுறை கிருஷ்ணன் பாலசுப்ரமணியத்திடம் சொல்லிச் சிரித்திருக்கிறார்.’நீங்க ஒண்ணையுமே தப்பா நெனைக்கமாட்டேள்னு தெரியாதா என்ன?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டியா சொல்றேள்? எங்காத்துலே என்னை சரியான சூனிப்பயல்ன்னுல்ல சொல்வா’ என்று ராமன் சிரித்தார்.’காபி ஸ்டிராங்கா இல்லேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்குவேள்… மத்தபடி மனுஷனோட இருட்டைப்பத்தியும் தீமையப்பத்தியும் உங்களுக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது…’ராமன் புருவத்தை தூக்கி ‘அப்டியா?’ என்றார்.

 

          ‘உங்க கதைகளை வாசித்த வரை பெரிய தீமையோட சித்திரம்னு ஒண்ணு வரவே இல்லை…’ . ராமன் ‘ஓகோ’ என்றபின் யோசித்து ‘கெட்டவா சிலர் இருக்காளே’ என்றார். ‘இருக்காங்க. ஆனா அவங்களும் வாழ்க்கையிலே மாட்டிண்டிருக்கிற சாதாரண மனுஷங்கதான்… பொறாமைப்படுறாங்க, பொருமறாங்க. முடிஞ்சவரைக்கும் மத்தவா கையிலே இருக்கிறத பிடுங்கிண்டுட முயற்சி பண்றாங்க… அதெல்லாம் பண்ணல்லேன்னா அப்றம் எப்டி மனுஷங்க?’ராமன் மனக்குழப்பமடைந்தவர் போல கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு உள்ளங்கை எப்போதுமே வேர்க்கும். பெண்களைப்போல மூக்குநுனியும் புருவமும் வேர்க்கும். கையில் வெள்ளை நிறமான கைக்குட்டையை எப்போதுமே வைத்திருப்பார். அதைக்கொண்டு முகத்தை துடைத்துவிட்டு ‘இல்லே, அதுக்குமேலேயும் மனுஷன்கிட்ட தீமை இருக்குன்னா நெனைக்கிறேள்’ என்றார்.பாலசுப்ரமணியன் ’மனுஷனோட தீமைக்கு அளவே கெடையாது. அது மனுஷனை விட பலமடங்கு பெரிசு.

 

          வாழ்க்கைக்காக மனுஷன் தீமையப் பண்றதில்லை, தீமைக்காகத்தான் மனுஷன் வாழறான். அவன் மனசுக்குள்ளே இருந்து ஆர்ட்டீசியன் ஊத்து மாதிரி தீமை பொங்கி வெளியே வர்ர சொகமிருக்கே அதுதான் மனுஷ வாழ்க்கையிலே மத்த எல்லாத்தையும் விட பெரிய இன்பம். அதுக்காகத்தான் அவன் யுத்தங்கள செஞ்சான். கோடிகோடியா கொன்னு குவிச்சான். சித்திரவதைகள கண்டு பிடிச்சான். அடிமை முறைகள உண்டுபண்ணினான்…அதுக்காகத்தான் அவன் கான்சண்டிரேஷன் காம்புகளிலே சகமனுஷனைப் போட்டுப் பொசுக்கி எடுத்தான்…’‘எங்கியோ வெளிநாட்டுலே–’ என்று ராமன் ஆரம்பித்ததும் பாலசுப்ரமணியன் வேகமாக இடைமறித்து ‘இங்க நம்மூர்லே என்னென்ன பண்ணியிருக்காங்க. பத்மநாபபுரத்திலே அரண்மனையிலே இருக்கிற சித்திரவதைக்கருவிகளை பாத்திருக்கேளா?’ என்றார். அவரது முகம் சிவந்து கணகணவென்றிருப்பதைப் பார்த்து கொஞ்சம் மிரண்டது போல ராமன் பார்வையை விலக்கிக் கொண்டார். பிறகு ‘அங்கங்க நடக்கலாம். இல்லேங்கலே’ என்றார்.’கும்பகோணத்திலயும் பாபனாசத்திலேயும் உங்க கண்ணு முன்னாடி நடந்தாத்தான் உங்களுக்கு பிரச்சினை. இல்லாட்டி ஒண்ணுமில்லை இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டி இல்லே..’ என்று தஞ்சாவூர்த்தனமாக ராமன் இழுக்க ‘அதான்’ என்று பாலசுப்ரமணியன் அழுத்தினார். ராமன் மீண்டும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கைக்குட்டையை கைக்குள் வைத்து பிசைந்துகொண்டார்.பிறகு கொஞ்சநேரம் இருவரும் அமைதியாகவே பயணம் செய்தார்கள். பஸ் கோயில்பட்டி நிலையத்தில் நின்று ஆளிறக்கி ஏற்றி மேலே சென்றது.

 

      ‘கி.ரா இங்கல்ல இருக்காரு?’ என்றார் ராமன். ‘ஆமா..’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் ‘அவருகூட போயி ஒருவாட்டி விளாத்திக்குளம் சுவாமிகள பாக்கணும்’ என்றார். ‘எங்கிட்டயும் சொல்லியிருக்காரு’ ‘ஒரு கார்டு போட்டா நம்மகூட வந்திருப்பாரா? அவருக்கும் மியூசிக்னா பைத்தியம் இல்ல?’ ‘இப்ப பருத்திநடவு மாசம். ஊரவிட்டே கெளம்ப மாட்டாரு. இந்த மாசம் முடிஞ்சா மூணுமாசம் வேலையே கெடையாது. உலகத்திலே ஜனங்கள்லாம் எதுக்கு வேலை பாக்கிறாங்கன்னு ஆச்சரியப்பட்டுட்டே இருப்பாரு..’ . ராமன் சிரித்தார். இறுக்கம் மெல்லக் குறைந்தது.பாலசுப்ரமணியன் ‘பொதுவா நீலம், ஊதால்லாம் மன இறுக்கம் உள்ளவங்களுக்கு புடிச்ச நெறம். மனுஷனோட தீமைய கவனிக்கிறவங்களுக்குண்டான நெறம். நீங்க சொன்னது வித்தியாசமா இருந்தது’ என்றார். ‘தீமை இல்லாம இலக்கியம் இல்லியா பாலு?’ என்றார் ராமன் மெல்லிய பெண்குரலில். ‘ இருக்கு…ஆனா கிளாசிக் இருக்குமான்னு நேக்கு டவுட்டா இருக்கு… எல்லா எபிக்சிலேயும் தீமைதானே அளவிலே ஓங்கி இருக்கு. உன்னதத்திலே நன்மை மேலே இருக்குன்னாலும்..’ ராமன் மூச்சு திணறுபவர் போல ’நான் எழுதறேன்…தீமையே இல்லாம நல்லதை வச்சு நான் கிளாசிக்கு எழுதறேன்’ என்றார். பெரிய எடையை தூக்கி வைத்தவர் போல திணறி உள்ளங்கைக்குள் இருந்த கைக்குட்டையை விரித்து முகத்தை துடைத்துக்கொண்டார்.

 

     முகத்தை அதில் ஒளித்துக்கொள்ள ஆசைப்படுபவர் போலிருந்தார்.பாலசுப்ரமணியன் புன்னகையுடன் ‘எழுதுங்கோ’ என்று சொல்லி பேசாமலிருந்தார். அதன்பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பாலசுப்ரமணியன் தப்பாக ஏதாவது ஆயிற்றா என்று யோசனைசெய்தார். அப்படி ஒன்றும் சொல்லிவிட்டதாகத் தெரியவில்லை. ராமன் சட்டென்று முகத்தை உம்மென்று ஆக்கிக்கொண்டு பேசாமலிருப்பார். ஆனால் அதிகபட்சம் இருபது நிமிடங்கள்தான். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அவரது உலகம் முழுமையாக மாறிவிடுகிறது. பழைய விஷயங்கள் எதையும் அவர் கையோடு எடுத்துக்கொள்வதில்லை.கழுகுமலையில் பஸ்ஸில் இருந்து இறங்கும்போதுகூட ராமன் பேச்சுக்கு வரவில்லை என்பதை பாலசுப்ரமணியன் கவனித்தார். அது தன்னுடைய பேச்சினால் வந்த மௌனம் அல்ல என்று தெரிந்தது. பொறுமையாகக் காத்திருக்க முடிவெடுத்தார். மனிதர்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு பேசாமலிருப்பது அவருக்கும் மிகவும் பிடிக்கும். பஸ்நிலையத்திற்கு சாமிநாதன் வந்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அவர் அவ்வளவுதூரம் வந்தது பால சுப்ரமணியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘வாங்கோண்ணா…நல்லா இருக்கேளா? மூத்தவ இப்ப சரியாயிட்டாளா?’ என்றார் சாமிநாதன்.‘சுப்பு அண்ணா வந்துட்டாராடா?’ என்றார் ராமன். ‘அவரு அப்பவே வந்து தீர்த்தம் எடுத்துக்க ஆரம்பிச்சாச்சு. ஊர்ல உள்ள வெட்டிப்பயக்க ஒரு பய விடாம சுத்தி உக்காந்துண்டிருக்கானுங்க. ஒரே பொகை வேற’ என்றார் சாமிநாதன். ‘எங்க இருக்காரு?’ ‘இங்க சேத்துப்பட்டி மிராசுதார் வீட்டிலே’ என்றார் சாமிநாதன்.

 

       ‘வீட்டிலேயா?’ ராமன். சாமிநாதன் கொஞ்சம் சங்கடப்பட்டு ‘வீடுன்னா, அவருக்கு இங்கியும் ஒரு வீடு இருக்கு’ என்றார்.‘ஓகோ…’ என்று ராமன் முகம்மலர்ந்தார். ’அதுக்கு ஏண்டா சங்கடப்படுறே? என்னமோ இவன் தப்பு பண்ணினமாதிரி…’ பாலசுப்ரமணியனிடம் திரும்பி ‘சாமிநாதன் சரியான ஆச்சாரம். ரொம்ப சங்கடப்படுவான்’ என்றார். ‘கீழத்த்தஞ்சை மண்ணு ஒட்டலைன்னு நெனைக்கிறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் உரக்கச்சிரித்தார்ஒரு குதிரைவண்டிதான் வந்திருந்தது. அதில் ராமன் உற்சாகத்துடன் ஏறி வண்டிக்காரன் பின்னால் அமர்ந்துகொண்டார். ‘நான் எப்பவுமே இங்கதான் உக்காந்துக்கறது பாலு. சின்ன வயசிலே இருந்து இதிலே ஒரு பிடிவாதம். இங்க ஏதாவது வாண்டு ஏறி ஒக்காந்துட்டுதுன்னு வைங்கோ வண்டியே வேணாம்னு நடக்க ஆரமிச்சிருவேன். இதில என்ன இருக்குன்னு நினைக்கிறேள் என்ன?’பாலசுப்ரமணியன் ‘இல்லை’ என்றார் ‘நினைக்கிறேள், அது தெரியும்…சின்னவயசு பழக்கம்னு வைங்கோ’ வண்டி கிளம்பியது. சாமிநாதன் பின்னால் தொத்திக்கொண்டு ‘அவாளுக்கு நஸ்டால்ஜியா ஜாஸ்தி. போனவாரம் கும்மோணம் வந்திருந்தா. என்னடாது அந்தக்காலத்திலே தெருவொரமெல்லாம் நாத்தமா அடிக்குமேன்னு ஏக்கமா சொல்றா’ என்றார் . பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார்தெருவோரங்களில் கீற்றுச்சாய்ப்பு இறக்கி கள்ளிப்பெட்டி மேஜைகள் செய்து நெல்லைப்பகுதி திருவிழாக்களுக்கே உரிய கடலைமிட்டாய் , தேங்காய் மிட்டாய் அடுக்குகள்.

 

       பைசாநகரத்து கோபுரம் போல இனிப்புச்சேவு பரப்பி வைத்திருந்தார்கள். பளீரிடும் சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களில் சீனிக்குச்சி மிட்டாய்கள். பெரிய இரும்பு வாணலியை தரையில் குழி எடுத்து செங்கல் அடுக்கி கட்டப்பட்ட அடுப்புகள் மேல் வைத்து எண்ணை தளபுளக்க இனிப்புச்சேவு காரச்சேவு பொரித்து சல்லரிகளில் அள்ளி புனல்வடிவ துளைப்பாத்திரங்களில் போட்டார்கள்.ராமன் குதூகலமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு திரும்பி, ‘திருவிழான்னாலே கிராமத்துக்கு ஒரு இது வந்திடுது, மணைக்கு வர்ர புதுப்பொண்ணு மாதிரி, இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘இந்த ஊரு திருவிழாலே மிட்டாய் ஜாஸ்தி..’ என்றார். ’எங்கூரிலே விதவிதமா தாம்பூலத்துக்கான சமாச்சாரங்கள்தான் நெறைஞ்ருக்கும்..பாக்கிலேயே பத்துப்பண்ணிரண்டு வகை’அக்ரஹாரம் முழுக்க தெரு நிறைத்து கோலம்போட்டிருந்தார்கள். நிறைய பிராமணப் பையன்கள் சட்டை போடாத உடம்பில் பட்டைபட்டையாக விபூதி குழைத்து பூசி பெரிய பலாச்சுளைக் காதுகளுடனும் எண்ணை ஒட்டிய தலைமயிருடனும் உரக்க சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வாழைமட்டையை கொண்டுபோய் யார் பின்னாலாவது மடேரென்று அடித்து திடுக்கிடச் செய்வதுதான் விளையாட்டு. காவிப்பட்டை போடப்பட்ட வீடுகளின் சிமிண்ட் திண்ணைகளில் ஆங்காங்கே வயதான மாமிகள் அமர்ந்து கண்களைச் சுருக்கி தெருவைப் பார்த்தார்கள். வீடுகள் முழுக்க மாவிலை தோரணமும் மலர்ச்சரங்களும் தொங்கின.

 

         ஒரு கூடைக்காரி காலிக்கூடையுடன் எதிரே வந்தாள்.அக்ரஹாரத்தைத் தாண்டி இடதுபக்கம் சென்ற தெருவின் எல்லையில் பெரிய பழைய வீட்டுக்கு முன்னால் நாலைந்து வண்டிகள் அவிழ்த்து போடப்பட்டிருந்தன. ஒரு கருப்பு பியூக் கார் வேப்பமரத்து இலைகளைப் பிரதிபலித்துக்கொண்டு நின்றது. ‘நல்லா தேச்ச திருவோடு மாதிரி இருக்குல்ல?’ என்றார் ராமன். பாலசுப்ரமணியன் புன்னகை செய்து ‘இதுக்கும் ஏதாவது பொம்புளை உவமை சொல்லுவீங்கன்னு நினைச்சேன்’ என்றார். சாமிநாதன் உரக்க சிரித்தார்.அவிழ்த்துக்கட்டப்பட்டு வைக்கோல் மென்று கொண்டு நின்ற வண்டிமாடுகள் நிமிர்ந்து பார்த்து புதிய காளைகளை புஸ் என்று மூச்சு விட்டு வரவேற்றன. ராமன் வண்டியில் இருந்து குதித்து உற்சாகமாக ‘சாமிநாது, பெட்டியக் கொண்டாந்து உள்ள வைடா…நான் மேலே போறன்…நாயக்கர் மேலேதானே இருக்காரு?’ என்றபடி கட்டிடத்தின் பக்கவாட்டு படிகளில் ஓடி ஏறிச் சென்றார். பாலசுப்ரமணியன் இறங்கி தன் பெட்டியையும் ராமன் பெட்டியையும் கொண்டு சென்று வைக்கச் சொல்லிவிட்டு முகம் கழுவி துடைத்து மேலே சென்றார்மேலே நடுக்கூடத்தில் பாய் விரித்து தலையணைகள் போட்டு ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தார்கள். நடுவே மதுரை சுப்பு அய்யர் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அருகே கிட்டத்தட்ட அவரை உரிமைகொண்டாடி வைத்திருப்பது போல நாயக்கர் அமர்ந்து மீசையை கோதிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார். ராமன் சுப்பு அய்யரின் எதிரே சென்று அமர்ந்து செல்லம்கொஞ்சி பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.பாலசுப்ரமணியன் வாசலில் தயங்கி நின்றார்.அறைக்குள் விஸ்கி வாசனை நிறைந்திருந்தது.

 

       பாயில் பெரிய தாம்பாளம் நிறைய பலாக்காய் வற்றலும், நேந்திரன் வற்றலும், முந்திரிப்பருப்பும் குவிக்கப்பட்டிருந்தன. முதல் பார்வைக்கு ராமன் சுப்பு அய்யரின் தம்பி போல இருந்தார். அதேபோல முன்நெற்றியில் விழும் முடி. கொழுத்த கன்னங்கள் கொண்ட மீசையில்லாத முகம். ஆனால் ராமனிடமிருந்த பெண்மை அவரிடம் இல்லை. அவரது முகத்தில் ஒரு வினோதமான பளபளப்பு இருந்தது. காதுமடல்கள் தடித்து தொங்கியவை போலிருந்தன. எந்நேரமும் எவரையாவது நக்கல் செய்பவர் போல இருந்தார். வெற்றிலைபோட்டு புண் மாதிரி தெரிந்தது வாய். மாந்தளிர் நிற ஜிப்பா அணிந்து பட்டுவேட்டி கட்டியிருந்தார். மார்பில் இரு பித்தான்களை திறந்து போட்டு புலிநகம் பதித்த பதக்கச்சங்கிலி பாதி வெளியே தெரியச்செய்திருந்தார்.‘இவருதாண்ணா நம்மாளு… பாலுன்னு சொல்வேனே.. நல்லா பேசுவார். பேசுறதே சங்கீதம் மாதிரி இருக்கும். பாக்கத்தான் இப்டி இருக்காரு. பிளேடு மாதிரி ஆளு. நேக்கெல்லாம் இவர பாக்கறச்சயே வயத்துக்குள்ள சில்லுன்னு இருக்கும்…கிழிச்சிருவார்’ என்றார் ராமன். சுப்பு அய்யர் ’வாங்கோ உக்காருங்கோ’ என்றார் . கை காட்டி ‘சாப்பிடுவேளா?’ என்றார். பாலசுப்ரமணியன் ’இதுவரை இல்லை’ என்றார். ‘அப்ப இப்ப ஆரம்பிக்கிறேளா?’ ‘இல்ல. அதுக்காக நான் வரலை’ சுப்பு அய்யர் அரைக்கணம் பார்த்துவிட்டு ‘அப்பசரி…டேய் ராமு, உங்காள எவனுமே கட்டாயப்படுத்த முடியாதுடா’ என்றார். பாலசுப்ரமணியன் அவரது கைவிரல்களைப் பார்த்ததும் கண்களை விலக்கிக் கொண்டார்.

 

        விரல்கள் ஒன்றுக்குமேல் ஒன்று ஏறியவை போல குறுகி வளைந்திருந்தன.‘சொன்னேனே…அண்ணா இப்ப இவன்கிட்ட இந்தியாவக்குடுங்கோ. நேருவ அமெரிக்காவுக்கு அனுப்பிடலாம்’ என்றார் ராமன். ‘அவர எதுக்குடா அங்க அனுப்பணும்? அங்க ஏற்கனவே பிரசங்கம் பண்ண ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க.பேசாம ரஷ்யாவுக்கெ அனுப்பறது. குருஷேவை பேசியே கொன்னுடுவார். உலகத்துக்கு விடிமோட்சம்’ ராமன் கிச்சுகிச்சுமூட்டப்பட்ட சின்னப்பையன்கள் போலச் சிரித்தார்.பாலசுப்ரமணியன் சுப்பு அய்யரிடம் நெருக்கமாக உணர்ந்தவராக வந்து பாயில் அமர்ந்தார். சுப்பு அய்யர் ‘நீங்க கம்யூனிஸ்டு இல்லியே?’ என்றார். ‘இப்ப இல்லை’ என்றார் பாலசுப்ரமணியன். ‘டேய் ராமு உங்காளு ராஜாஜிக்கு தம்பி மாதிரின்னா இருக்கான். கணக்கா பேசறானே’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். சுப்பு அய்யரின் குரலில் வெற்றிலை போட்டுத்தடித்த நாக்கின் குழறல் இருந்தது.’காபி சாப்பிடறேளா?’ என்றார் சுப்பு அய்யர். சாமிநாதன் ‘சொல்லிட்டேண்ணா…’ என்று வாசலில் நிற்க ‘அதாருது, டேய் சாமிநாது வாடா வாடா , தாயோளி குளூக்க ஒருகொடம் காவேரி தண்ணிய கொண்டாந்து தலையிலே கொட்டறது மாதிரி இருக்குடா உன்னை பாக்கறது. வாடா ஒக்காரு… ’ ‘இருக்கட்டும்ணா’ ‘என்னடா இருக்கட்டும்…ஒக்காருடா…நாயி, மெலிஞ்சு போய்ட்டியேடா..ஏண்டா? ‘வேலைண்ணா’ ‘என்னடா வேலை? நீ எப்படா ஸ்கூலுக்கு போனே?’ ராமன் ‘அந்தவேலைய சொல்லலை. அவன் இப்ப எம்.டி. ராமநாதன் பிளேட்டு நாலு வாங்கி வச்சு கேக்கறான்… கடும் உழைப்புன்னா’ என்றார் . சுப்பு அய்யர் வெடித்துச் சிரித்தார்.‘நீங்க ராமநாதன் ரசிகர் இல்லியே?’ என்றார் சுப்பு அய்யர். ‘ஆமா’ என்றார் பாலசுப்ரமணியன்.

 

         ‘ஓ அப்டியா? நாங்க அவரைக் கொஞ்சம் கிண்டல் பண்ணுவோம். உங்களுக்கு வருத்தம் இருந்தா தாம்பூலம் போட்டுக்குங்கோ..கேக்கும்’ என்றார். காபி வந்தது. சுப்பு அய்யர் ‘இவரு ரங்கநாத நாயக்கர். கோயில்பட்டியிலே மில்லு வச்சிருக்காரு. மிராசுதார்.நம்ம ஆப்தர். சங்கீதத்தை தண்ணி ஊத்தி வளக்கிறார்…’ என்று சிரிக்க நாயக்கர் ‘போங்கண்ணா…’ என்று சிணுங்கினார்.காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சுப்பு அய்யர் ’டேய் சாமிநாது, பாடுரா’ என்றார். ‘அண்ணா பாட்டாண்ணா…கொல்லாதீங்கோ’ ‘டேய் பாடுராண்ணா…’என்றவர் பாலசுப்ரமணியனிடம் ’நன்னா பாடுவான். பாவம் கச்சிதமா இருக்கும். சொல்லப்போனா நான் தமிழ் தெலுங்கு சாகித்தியத்துக்கு இவன் பாடித்தான் பாவம் என்னான்னு கத்துக்கறேன்…’சாமிநாதன் ’என்ன பாட்டு பாடுறதுண்ணா?’ என்றார். ‘இது கழுகுமலைடா. தாயளி, ரெட்டிய விட்டுட்டு எவனை பாடினாலும் ஜோட்டாலேயே அடிப்பேன்…’ சாமிநாதன் தலைகுனிந்து பாயின் கோரையை லேசாக பிய்த்துவிட்டு மெல்ல ம்ம்ம் என்று ஆரம்பித்து கணீர் குரலில் பாட ஆரம்பித்தார்வன்னத் தினை மாவைத் தெள்ளியே – உண்ணும்வாழ்க்கைக் குறக்குல வள்ளியே – உயிர்வாங்கப் பிறந்திட்ட கள்ளியேசுப்பு அய்யர் உரக்க ‘பேஷ்’ என்று சொல்லி எம்பி அமர்ந்தார். அறைக்குள் அது வரை இருந்த ஏதோ ஒன்று வெளியேறியது. முற்றிலும் புதிய ஒன்று உள்ளே வந்து சூழ்ந்தது. தூயது, தானிருக்கும் இடத்தை முழுக்க தன்னுடையது மட்டுமே ஆக்குவது.

 

         கன்னத் தினிக்குயில் சத்தமே – கேட்கக்கன்றுது பார் என்றன் சித்தமே – மயக்கம்செய்யுதே காமப் பித்தமேஓரக்கண்ணில் அசைவு தெரிய பாலசுப்ரமணியன் திரும்பிப்பார்த்தார். பக்கவாட்டு அறைக்குள் இருந்து ஒரு பெண் ஒரு கண்ணாடிப்பிம்பம் வருவது போல அத்தனை அலுங்காமல் தோன்றி வந்தாள். நீலப்பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டிகையிலும் காதுகளில் தோடுகளிலும் மூக்கில் பேசரியிலும் ப்ளூஜாகர் வைரங்கள் மின்னுவது தெரிந்தது. அவள் வந்ததும் ஓரமாக சுவர் சாய்ந்து அமர்ந்ததும் எல்லாம் அழகிய நடனம் போலிருந்தது. ’தேடக் கிடையாத சொர்னமே – உயிர்ச் சித்திரமே மடவன்னமே’ என்ற வரியே காட்சியாக நிகழ்ந்தது போல.பாடல் முடிந்ததும் சுப்பு அய்யர் திரும்பி பாலசுப்ரமணியனிடம் ‘என்ன அப்டியே வாய தெறந்து வச்சுண்டிருக்கே…பாத்திருக்கேல்ல?’ என்றார். அந்தப்பெண் முறுவலித்தாள். சுப்பு அய்யர் ‘இவதான் சந்திரா. பரதநாட்டியம் ஆடறா…’ பாலசுப்ரமணியன் மூச்சுத்திணறுவதைப்போல உணர்ந்தார். அவரால் அவளைத் திரும்பிப் பார்க்கமுடியவில்லை. ஒருகணம் அவளுடைய முகமும் மறுகணம் தன்னுடைய தோற்றமும் அவர் மனதில் மாறி மாறி எழுந்தன. இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாமோ.

 

       தலையைச் சீவிக்கொண்டிருக்கலாமோ?சுப்பு அய்யர் சிரித்தபடி ‘நானும் கவனிச்சிருக்கேன், சந்திராவ முதல்ல பாத்தப்ப பேஸ்தடிக்காத ஒருத்தனைக்கூடப் பாத்ததில்லை…’ என்றார். சந்திரா பாலசுப்ரமணியனிடம் ‘உங்க பேரென்ன?’ என்றாள். அவள் குரல் கனமாக, சற்றுகரகரப்பாக இருந்தது. அந்த அழகுடன் கொஞ்சம்கூட இணையாதபடி. அந்த முரண்பாடு அவளை ஒரேகணத்தில் மானுடப்பெண்ணாக்கியது. பாலசுப்ரமணியன் அவளைப் பார்த்து ’பாலு, பாலசுப்ரமணியன்’ என்றார்‘சந்திரா, இவரு இன்னைக்குத் தமிழிலே பெரிய ஆளு. ஒரு அசுர சக்தி. மூளைக்குள்ள பெருமாளோட சக்கரமே இருக்கறதா ராமன் சொல்றான்’ என்றார் சுப்பு அய்யர். அவள் ‘ஓ’ என்று சொல்லிச் சிரித்தாள். ‘இவளைப்பத்திக் கேள்விப்பட்டிருக்கேல்ல?’ பாலசுப்ரமணியன் ’ஆமா..ஆனா டான்ஸ் பார்த்ததில்லை. படங்களிலே பாத்ததோட சரி…’. பொன்மூங்கில் போல இறுக்கமான உடம்பு. நீளமான மெல்லிய கழுத்தில் பச்சைநரம்புகள் ஓடின. அழுத்தமான உதடுகள், பெரிய கண்கள். தலைமுடியை இரு நெற்றியோரங்களையும் மறைப்பது போல சீவி தளர்வாக பின்பக்கம் கட்டி விட்டிருந்தாள். அஸ்தமன சூரியன்போல பெரிய குங்குமப் பொட்டு.’எங்கூடத்தான் வந்தா..’ என்றார் சுப்பு அய்யர். அந்த வரி ஓர் அறைபோல பாலசுப்ரமணியனை தாக்கியது. அவர் அரண்டதுபோல அவரது கைவிரல்களை அனிச்சையாக பார்த்துவிட்டு ராமனை பார்த்தார்.

 

        ராமன் அசாதாரணமான ஒரு மௌனத்தில் இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது. பாலசுப்ரமணியன் தன் எண்ணங்களை மறைப்பதற்காக வழக்கமாகச் செய்வது போல தீவிரமாக ஒரு கேள்வியைக் கேட்டார் ‘நீங்க ஆந்திராப்பக்கம் தானே?’ ‘பூர்வீகம் குஜராத். பிறந்து வளர்ந்ததெல்லாம் பூனா…. பரதம் படிக்கணும்னு காஞ்சீபுரம் வந்தேன்’. சுப்பு அய்யர் ‘காஞ்சீபுரம் நல்லுச்சாமிப்பிள்ளைதான் குரு…’ என்றார். பாலசுப்ரமணியன் மையமாக ‘ஓகோ’ என்றார். ராமன் தரையையே பார்த்துக்கொண்டிருப்பதை பாலசுப்ரமணியன் ஓரக்கண்ணால் கவனித்தார்.சந்திரா ‘இப்ப காபி சாப்பிட்டா எப்டி அப்றம் சாப்பிடறது?’ என்றாள். ‘காபிய எப்பவும் சாப்பிடலாம்…காலம்பற எழுந்துண்டதுமே காபியாலே வாய் கொப்பளிக்கிறது எங்கப்பாவோட பழக்கம்’ என்றார் சுப்பு அய்யர். ‘நீங்க மத்ததிலேன்னா கொப்பளிக்கிறேள்…’ என்றார் சாமிநாதன். ‘சந்திரா எண்ணி எண்ணி சாப்பிடுவாள். கால்ம்பற ரெண்டு இட்லி. மதியம் ஒரு சப்பாத்தில் கொஞ்சம் கீரை காய்கறிகள். ராத்திரி மறுபடி ரெண்டு இடியாப்பம் இல்லாட்டி இட்லி. ஒரு டம்ப்ளர் ஜூஸ்…அவ்ளவுதான்’ சுப்பு அய்யர் சொல்லியபடி பால சுப்ரமணியனைப்பார்த்து கண்ணடித்து ‘சும்மா சிக்குன்னு இருக்கா இல்ல?’ என்றார்பாலசுப்ரமணியன் அதிர்ச்சியுடன் ஒருகணம் அவளைப்பார்த்துவிட்டு பார்வையை விலக்கிக்கொண்டார். அவள் சிரிப்பதை உணர்ந்தபின் மீண்டும் பார்த்தார்.

 

        சுப்பு அய்யர் ‘அவ வயசு இப்ப என்னாங்கிறீர்?’ பாலசுப்ரமணியன் ‘தெரியலை’ என்றார். ’சொல்லுடீ இவளே’ என்று ஒரு தாளைச்சுருட்டி அவள் மேல் எறிந்தார். சந்திரா ‘என்ன சொல்றது?’ என்றபின் ‘ஐ யம் டைம்லெஸ் யூ நோ’ என்றாள். ‘வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா?’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் புன்னகையுடன் அவளைப்பார்த்தார். முகத்தின் ஆழமான சிலகோடுகள் வயதைக் காட்டத்தான் செய்கின்றன என்று தோன்றியது.‘உயர்தர ஒயினைப்போல நான் காலத்தை உண்டு இனிமையாகிறேன்’ என்று சந்திரா உயர்தர உச்சரிப்புள்ள ஆங்கிலத்தில் சொன்னாள். சுப்பு அய்யர் ஆங்கிலத்தில் ‘நம்முடைய ஐதீகத்தில் கால என்றால் கரியது என்று பொருள். மரணம் என்று பொருள். காலத்தை உண்டு சுருண்டு கிடப்பது நாகம். அதன் விஷத்துக்கு ஒரு துளியில் ஒரு உலகை அழிக்கும் வல்லமை உண்டு. ஆலகாலம் என்று அதற்கு பெயர்’ என்றார். அவர் அப்படி சட்டென்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தது பால சுப்ரமணியனுக்கு அதிர்ச்சி அளித்தது. சுப்பு அய்யரின் உச்சரிப்பு இந்திய அழுத்தங்களுடன் இருந்தாலும் சொற்றொடர் அமைப்பு துல்லியமாக இருந்தது.சந்திரா ‘எல்லா அமுதங்களும் மனிதனை கட்டிப்போடுபவை. விலக்க முடியாத ஈர்ப்புள்ளவை. ஆகவே அவையெல்லாமே விஷங்களும்கூட’ என்றாள். பாலசுப்ரமணியன் அவர்கள் இருவருக்குள் ஏதோ ஓடுவதை புரிந்துகொண்டார்.

 

         இரு ஊசிமுனைகள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்கின்றன. சுப்பு அய்யர் சட்டென்று திரும்பி ராமனிடம் ‘என்னடா பண்றாய்? தூங்கிட்டியா?’ என்றார். ‘இல்லேண்ணா…நான் வந்து’ ‘நீ வந்தா என்ன வராட்டி என்ன? நாசமா போக…வந்ததிலே இருந்தே நானும் பாக்கறேன், செத்த சவம் மாதிரின்னா இருக்கே..’பாலசுப்ரமணியன் அதிர்ந்து மீண்டும் அனிச்சையாக சந்திராவைப் பார்த்தார். அவள் சாதாரணமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். நாயக்கர்கூட கொஞ்சம் அசௌகரியமாக ஆனது போல பட்டது. ராமன் ‘இல்லேண்ணா…நீங்க பேசிட்டிருந்தேள்…’ என்றார். ‘கேட்டையா பாலு, பாலுதானே உம்பேரு? சந்திராவோட ஆட்டம் என்னன்னு இவன்கிட்ட கேக்கணும்…என்னடா’ ராமன் ‘ஆமாண்ணா…’ என்று சொல்லி பலவீனமாக புன்னகை புரிந்தார். ‘அவரை தெரியுமா?’ என்றார் பாலசுப்ரமணியன் . சந்திரா ‘நல்லாவே தெரியுமே…கலாஷேத்ராவிலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். நெறைய பேசுவோம். சங்கீதம் பத்தி…’ புன்னகை புரிந்து ‘பாடணும்னுதான் ஆசை…முடியல்லை. முடிஞ்சது எழுதறதுதான். அதானெ எழுதறேன்னு சொல்லுவார்’ என்றாள்ராமன் ‘கலாஷேத்ராவிலே மாயான்னு ஒரு பெல்ஜியம்பொண்ணு இருந்தா. அவ எங்க வீட்டுக்கு மேலேதான் குடியிருந்தா. அப்ப அவகூட போறச்ச இவளை அறிமுகம்…’ என்றார். பாலசுப்ரமணியன் சிக்கலான ஒரு கோலம் விரிவதை உணர்ந்தார். தாமரைக்குளத்தில் மலர்களுக்கும் மலர்நிழல்களுக்கும் அடியில் கொடிகள் தழுவிப்பின்னி உருவாக்கும் அடர்சிக்கல். ’டேய் சாமிநாது, போயி ஒரு வைன் பாட்டில் எடுத்தாடா’ என்றார் சுப்பு அய்யர்.

 

        சாமிநாதன் நாயக்கரை பார்த்தார் ‘என்னடா?’ சுப்பு அய்யர் அதட்டினார். ‘இல்லேண்ணா…விஸ்கிக்குமேலே…அப்றம் இடியாப்பம் ரெடியா இருக்கு…’ ‘அது இருக்கட்டும்டா..’ ‘கச்சேரிக்கு நேரமாச்சுண்ணா’ ‘டேய்…என்ன அட்வைஸா? படவா’ ’சரிண்ணா’ என்று அவர் கீழே சென்றார். சுப்பு அய்யர் உரத்தகுரலில் ஓர் ஆங்கிலக்கவிதையை சொன்னார்’உதட்டருகே ஒயின் வருகிறதுகண்ணிலே காதல் எழுகிறதுஉண்மை என நாமறிவது அவ்வளவுதானே?இதோ முதுமையும் மரணமும் வருவதற்குள்கோப்பையை எடுத்துக்கொள்கிறேன்.அதைப் பார்க்கிறேன்மெல்ல பெருமூச்சு விடுகிறேன்1பாலசுப்ரமணியனை நோக்கிக் கண்ணடித்து ‘என்ன பாட்டு தெரியறதா?’ என்றார் சுப்பு அய்யர். ‘இல்லே’ என்றார் பாலசுப்ரமணியன். ‘டபிள்யூ பி ஏட்ஸ்’ என்றார் சுப்பு அய்யர் ’எனக்கென்னமோ அவனைத்தான் புடிச்சிருக்கு. சும்மா தத்துவம் பித்துவம்னு பிராணனை வாங்கறதில்லை. நீட்டா மனசை மட்டும் எழுதிடறான். நல்ல சுகபாவம் உள்ள கவிதை…பழைய வயின் மாதிரி நாக்கிலேயே நிக்கும்’ஒயின் வந்தது. ’பலே..சாமிநாது வெவரமானவன். என்ன இருந்தாலும் கும்மோணம்னா…’ என்றார் சுப்பு அய்யர் .

 

     ’வயின் மட்டும் அதுக்கான கிண்ணத்திலேதான் குடிக்கணும்… வயின் நிறைஞ்ச கிண்ணம் ஒரு கன்னிகையோட சிவந்த ஒதடுமாதரி…’ அவர் அதைத் திறமையாக உடைத்து ரத்தம் வழிவதுபோலகோப்பைகளில் ஊற்றி உதட்டருகே எடுத்து மெல்ல முகர்ந்தபின்னர் புன்னகைசெய்தார். ‘நல்ல வயின்… என்ன சந்திரா, ஒரு கிளாஸ் எடுக்கறியா? ‘அவள் ஆங்கிலத்தில் ’வேண்டாம்’ என்றாள். ‘நல்ல ஒயின் மண்ணின் மாதவிடாய்குருதி போன்றது’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் அந்தச்சொற்களை தன்முன் நெளியும் வினோதமான புழுவைப்போல உணர்ந்தார். சுப்பு அய்யர் மெல்ல குடித்து ரசனையுடன் தலைசாய்த்தார். நாயக்கரும் எடுத்துக்கொண்டார்.சட்டென்று ராமன் எழுந்து ‘அண்ணா நான் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக்கறேன். கச்சேரிக்கு ஒக்காரணும். அவ்வளவு தூரம் பஸ்சிலே வந்தது’ என்றார். ‘சரிடா’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் எழுந்து ‘நானும் வர்ரேன்…’ என்று கூடவே வெளியே சென்றார். மாடிப்படி இறங்கும் போது இருமுறை ராமன் தயங்குவது போல இருந்தது. பாலசுப்ரமணியன் அலையும் எண்ணங்களில் இருந்து அந்த நுண் அசைவுகளால் கலைக்கப்பட்டார். ராமன் உடலுக்குள் என்னென்னவோ நிகழ்வது போல. கடைசிப்படியில் சட்டென்று நின்று திரும்பி ‘நீங்க வேணா அங்க ஒக்காந்து கொஞ்சம் பேசிண்டு வாங்கோ’ என்றார்‘இல்ல, நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தேவலை’ என்றார் பாலசுப்ரமணியன்.

 

        ராமனின் வேகம் அவரை ஆச்சரியப்பட செய்தது. மூச்சு திணறுபவர் போலிருந்தார். ராமன் ஒரு அடி எடுத்துவைத்துவிட்டு திரும்பி ‘இல்ல…போயி அவ இளிப்ப இன்னும் கொஞ்ச நேரம் பாக்கறது? மூஞ்சியிலேதான் வழியறதே’ என்றார். பாலசுப்ரமணியன் இப்போது அவரது வழக்கமான நிதானத்துக்கு திரும்பிவிட்டிருந்தார். உள்ளுக்குள் புன்னகை செய்தபடி ‘கொஞ்சம் வழிஞ்சாலும் தப்பில்லேன்னு தோணித்து. பரவால்ல.’ என்றார்ராமன் வேகமாக உள்ளே சென்று திகைத்து நின்று, ‘எந்த ரூம்னு சொன்னான்?’ என்றார். ‘லெஃப்டுலே..அந்த சின்ன ரூம்’ ராமன் உள்ளே சென்று அப்படியே தரையில் படுத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் உள்ளே சென்று நின்று தன் ஜிப்பாவை கழட்டியபின் ஒரமாக சுருட்டிவைக்கப்பட்டிருந்த மெத்தையை பிரித்து போட்டு அமர்ந்துகொண்டார். ராமன் கண்ணைமூடிக்கொண்டிருந்தார். மாலை சரிந்துவிட்டதன் ஒலி மாற்றம் வெளியே கேட்க ஆரம்பித்தது. எல்லா குரல்களும் கொஞ்சம் உரக்க ஒலித்தன. சன்னலுக்கு வெளியே நின்ற மாமரம் சிலுசிலுத்துக்கொண்டிருந்தது.ராமன் பெருமூச்சு விட்டார். பாலசுப்ரமணியன் ஏதும் பேசவில்லை. ராமனால் பேசாமலிருக்க முடியாதென்று அவருக்கு தெரியும். எதையும் தக்கவைத்துக்கொள்பவரோ திட்டமிடுபவரோ அல்ல. அவர் பேச ஆரம்பிக்கும் வரை பேசாமலிருக்க வேண்டும் என பாலசுப்ரமணியன் முடிவுசெய்தார். ஒரு சின்ன உலுக்கல் போதும் ராமன் கொட்டித்தீர்ப்பார். ஆனால் அதுவரை கனத்து கனத்து நிற்கட்டுமே. அந்த வதையை அவருக்கு அளிப்பதைப்பற்றி பாலசுப்ரமணியன் மெல்லிய புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். ஆனால் சில கணங்களிலேயே பாவம் என்றும் பட்டது.

 

        எளிமையான அகம் கொண்ட பிறவிக்கலைஞன். எழுத்தையும் சங்கீதமாக்கியவன். அவரைச் சற்றும் சீண்டாமல் அவரது அந்த மனநிலையை சென்று தொடும் சொற்றொடரை பாலசுப்ரமணியன் உடனே கண்டுகொண்டார்.‘என்ன உங்காளு இவ்ளவு நல்லா இங்கிலீஷ் பேசறார்?’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் புரண்டு படுத்து நம்பமுடியாத உற்சாகத்துடன் ‘பாத்தேளா, என்ன மாதிரி பேசறார்னு? எப்பவோ சட்டுனு இங்கிலீஷ்லே ஒரு ருசி வந்திட்டுது. வாசிக்க ஆரம்பிச்சார். இண்டு நியூஸ் வாசிச்சவர் ரெயினால்ட்ஸ் நாவல் வாசிச்சு அப்டியே எல்லாத்தையும் வாசிக்க ஆரம்பிச்சார். பிரிட்டிஷ் ரொமாண்டிக் கவிதைகள் மேலே அப்டி ஒரு ஈர்ப்பு. பேச ஆரம்பிச்சா பேசிண்டே இருப்பார்….தமிழிலே கூட நெறைய படிச்சிருக்கார். மௌனிய நன்னா தெரியும்….புதுமைப்பித்தந்தான் அவரோட ஃபேவரைட். மௌனி சும்மா கமகத்த வச்சு வெளையாடறாண்டா, பிள்ளைவாள்தான் அடிவயத்து தீய சங்கீதமாக்கினவன்னு சொல்லுவாரு. குபரா துக்கடாவுக்குத்தான் லாயக்கும்பார்’‘நீங்க?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நான் என்னமோ நல்லா எழுதறதா சொல்றார். நான் சங்கீதம் பத்தி எழுதறதெல்லாம் சும்மா வேஷம்னு நெனைக்கிறர். என்னோட எடம் செக்ஸுதானாம். அதை எங்கிட்டே இருந்தே மறைக்கிறதுக்கு நான் சங்கீதத்த வச்சுண்டிருக்கேனாம். எல்லாம் தாசிகள் சாமி கும்புடறத மாதிரியாம்..’ ராமன் உரக்கச்சிரித்தார்.’அப்டி இல்லே…அப்ஸ்டிராக்கை எழுதறது எல்லா நல்ல ரைட்டருக்கும் ஒரு சவாலா இருந்துண்டிருக்கும். அதுக்கு ஒவ்வொருத்தரும் ஒண்ணை வச்சுண்டிருப்பா. சிலபேர் இயற்கைய வர்ணிப்பா. சிலபேரு சமையலை வர்ணிப்பா. நீங்க இசைய சொல்றேள்…’ என்றார் பாலசுப்ரமணியன்.

 

        ‘அப்டீங்கறீங்களோ?’ என்றார் ராமன் . அவருக்கு அது புரியவில்லை என்று பாலசுப்ரமணியன் நினைத்துக்கொண்டார்.பேசுவதற்கான மனநிலையை ராமன் உருவாக்கிக்கொண்டார் என்று அவரது முகம் காட்டியது. எவ்வளவு எளிமையான மனிதர் என்று பாலசுப்ரமணியன் வியந்துக்கொண்டார். ‘சந்திரா என்ன பொடவ கட்டிண்டிருந்தா பாத்தேளா?’ என்றார் ராமன். பாலசுப்ரமணியன் ‘ம்ம்’ என்றார். ’மயில்கழுத்து நீலம். அதான் அவளுக்கு புடிச்ச நெறம். அவ கலருக்கு அது எடுப்பா இருக்குல்ல? டைமண்ட்னாகூட நீலம்தான். நீலத்திலே என்னமோ ஒரு மர்மம் இருந்துண்டே இருக்குன்னு சொல்லுவா. நீலத்த கொஞ்ச நேரம் பாத்துண்டே இருந்தா மனசு மயக்கம் அடைஞ்சிரும்னு ஒருவாட்டி சொன்னா. சரியான்னு பாக்கறதுக்காக ஒருநாளைக்கு நீலப்பட்டுப்பொடவைய எடுத்து வச்சு ராத்திரி லைட்டு போட்டு பாத்துண்டே இருந்தேன். என்னன்னே தெரியலை, திடீர்னு ரொம்ப பயந்துட்டேன்’பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘நீங்க அவளப்பாத்து மயங்கிட்டீங்க தானே?’ என்றார் ராமன். ‘இல்லே’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நீங்க இதிலே மட்டும் ஒருமாதிரி பம்மறேள். உங்ககிட்ட இருக்கிற கம்பீரமே போய்டுது’ என்று ராமன் சிரித்தார். பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘நீங்க இல்லே, யார் அவளைப்பாத்தாலும் ஒருமாதிரி ஆயிடறாங்க. நான் எத்தனை பேரை பாத்திருக்கேன். அது அவளுக்கும் நல்லா தெரியும். நானே அவள பாத்த அன்னிக்கு கிறுக்கன் மாதிரி அவபின்னாடியே போய்ட்டிருந்தேன். இப்ப கூட அந்த நாள் நல்லா நெனைவிருக்கு. என்ன ஆச்சரியம்னா அந்த நாளிலே என்ன பாத்தேன் எங்க போனேன் ஒண்ணுமே நினைவில்லை. அவளோட முகமும் உடம்பும் மட்டும் தான் ஞாபகம் இருக்கு. அந்த நாளே அவளா ஆயிட்டுது….ஆச்சரியமா இல்ல?’‘இதிலே எல்லாம் ஆச்சரியப்பட்டா முடியுமா?’ என்றார் பாலசுப்ரமணியன்.

 

      ராமன்சட்டென்று எழுந்தமர்ந்து ‘ஒண்ணு சொல்றேனே பாலு. அவ சாதாரண மனுஷி இல்லை. அவளுக்குள்ள ஒண்ணு இருக்கு. அது விஸ்வாமித்திரரை வசியம் பண்ணின மேனகையோட அம்சம்னு நேக்கு தோணியிருக்கு. எப்டி சொல்றது… வார்த்தையே நிக்க மாட்டேங்குதே. ஒரு விஷயத்திலே இருந்து ஆரம்பிக்கிறேனே. இப்ப, அவ உங்க கிட்ட கட்டைக்கொரலிலே பேசினாளே. அது அவ நெஜக்கொரல் இல்லை’ அது பாலசுப்ரமணியனை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.’அவ கொரல் ஒண்ணும் நல்லா இருக்காது. ஆனால் கட்டைக்கொரல் இல்லே. சாதாரணமான பொம்புளைக்குரல். வேணும்னேதான் முதல்ல பேசுறப்ப அப்டி பேசறா’‘எதுக்கு?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நானே அதை ஆயிரம் வாட்டி யோசனை பண்ணியிருக்கேன். அவளை பாத்தேல்ல. அழகு. கைகால்முகம் கழுத்து கன்னம்னு ஒரு கொறை இல்ல. பஞ்சலோகத்திலே அந்தக்காலத்திலே வடிச்சு வச்சிருப்பாங்களே…தஞ்சாவூர் அரண்மனையிலே அழகான சிவகாமி செலை சிலது இருக்கு. சின்னப்பொண்ணு மாதிரியும் இருக்கும், கொப்பும்கொலையுமாகவும் இருக்கும். அதேமாதிரி… அதைத்தான் ஆம்புள பாக்கறான் . அவன் மனசு பிரமிச்சுப்போயிடுது. அந்த மயக்கத்திலே இருக்கறச்ச அவ கட்டைக்குரலிலே சாதாரணமா பேச ஆரம்பிச்சிடறா. அவன் மனசிலே இருக்கற சொப்பனம் கலைஞ்சிடுது. அவன் சாதாரணமா பேச ஆரம்பிக்கிறான். அப்ப அவ ஒரு சகஜமான பிரியத்த உண்டு பண்ணிக்குவா.’ராமன் அதே வேகத்துடன் தொடர்ந்தார் ‘ஆனா அது மட்டும் இல்ல பாலு. அந்த கொரல் அப்டி இருக்கிறது நம்மள படுத்திண்டே இருக்கு. இப்ப மச்சம்லாம் அப்டித்தான், பாருங்க, ஒரு நல்ல சருமத்திலே மச்சத்தை பாத்த முதல் கணம் நமக்கு ஒரு சுளிப்புதான் வருது. அது ஒரு கறைதானே. ஆனா அதில நம்ம மனசு பதிஞ்சிடுது. முத்துச்சிப்பிக்குள்ள மணலு மாட்டிண்டா முத்து அதை நெரடி நெரடிபபத்து ஒண்ணும்பண்ண முடியாம முத்தா ஆக்கிருதுல்ல? அதே மாதிரித்தான் மச்சத்தையும் பாத்துப் பாத்து அழகா ஆக்கிண்டுடுவோம்.

 

        அதே மாதிரித்தான் இவ கொரலும்…நீங்க இப்ப அவ கொரலை மட்டும்தானே நினைச்சுண்டிருகறேள்?’பாலசுப்ரமணியன் பிரமித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆமான்னு சொல்லேன். என்ன இப்ப’ என்று ரகசியமான குதூகலத்துடன் கேட்டார் ராமன். ‘சரீன்னு வச்சுக்குங்க’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் சட்டென்று அந்தரங்கமாக ஆகி ‘ டேய், ஒனக்கும் குஞ்சுன்னு ஒண்ணு இருக்கு. ஒத்துண்டா ஒண்ணும் கொறைஞ்சிர மாட்டே ’ என்றார் . சிரித்துக்கொண்டு. ’அவ எதுக்கு என்னை கவர நெனைக்கணும்?’ என்றார் பாலசுப்ரமணியன். ’உன்னை மட்டுமில்லே. உலகத்திலே இருக்கிற எல்லா ஆண்களையும் அப்டித்தான் கவரணும்னு நெனைப்பா. அவளோட மனசு அப்டி. எதுக்குன்னா காந்தம் ஏன் இழுக்குதுன்னு கேக்கிறாப்ல. அதோட நேச்சர் அதானே…’‘அது எல்லா பொண்ணுகளிட்டேயும் உண்டு. சின்னப் பொண்கொழந்தைங்க கூட அட்ராக்ட் பண்ண முயற்சிபண்ணும். என்னன்னு தெரியாமலே அப்டி செஞ்சிட்டிருக்கும்’ பாலசுப்ரமணியன் சொன்னார். ‘இது அப்டி இல்லே. இவளுக்கு ஜெயிச்சாகணும். ஒலகத்து ஆம்பிளைகளை முழுக்க ஜெயிச்சாகனும். ஆனாபணமும் அதிகாரமும் வச்சிண்டிருக்கவன்லாம் அவளுக்கு ஒருபொருட்டே கெடையாது. அவளுக்கு வேண்டியது கலைய மனசிலே வச்சிண்டிருக்கவன். அவ எத்தனை தாவினாலும் தொட முடியாத ஒண்ணை எங்கியோ நின்னு வச்சு வெளையாடிண்டிருக்கிறவன்…’‘ஏன் அவளும் கலையிலேதானே இருக்கா?’. ‘இந்தாபாரு பாலு, அவ பெரிய இவ. எங்கயும் போவா. எவர்கிட்டயும் பேசுவா. இங்கிலீஷ் பயங்கரமா பேசறா. கன்னாபின்னான்னு வாசிக்கறா. அதனால அவ போறதூரம் அதிகம். ருக்மிணு தேவி அருண்டேல விட மேலே போயிடுவா…ஆனா அவளால ஒருநாளைக்கும் உண்மையான கலைய நெருங்க முடியாது.

 

            வெளக்கு போட்டு பளபளன்னு துடைச்சு எடுத்து வெல்வெட்டில வச்சா கண்ணாடிக்கல்லு வைரம் மாதரித்தான் இருக்கும். ஆனா வைரம்னா அது நீரோட்டம் இல்லியா. நல்ல நீரோட்டம் காட்டுக்குள்ள ரகசியமா ஓடிண்டிருக்கிற ஓடை மாதிரின்னா…அவளுக்கு தெரியும் அவளால கலைய தொட முடியாதுன்னு…’‘ஏன்?’ என்றார் பாலசுப்ரமணியம். ‘மடையா, அவமனசிலே ஈரம் இல்ல. அவ மனசுங்கிறது ஒரு தீட்டினகத்தி. அவ்ளவு கூர்மை, அவ்ளவு பளபளப்பு. ஆனா கலையிலே அந்த கத்திய வச்சுண்டிருக்கற அவளை வாழத்தண்ட வச்சுண்டிருக்கிற கோந்தை ஜெயிச்சுட்டு போய்டுது.நீ அலர்மேல்வள்ளி ஆட்டத்தை பாத்திருக்கேல்ல?’ ‘பாத்திருக்கேன்’ ‘அவளப்பாரு. அவளுக்கு ஒரு எழவும் தெரியாது. சுத்த மண்டு. பாக்கவும் டொங்கிடின்னு இருக்கா…மேடையிலே நின்னான்னா அந்த மாதவிதான் கண்ணுக்கு வாறா…’பாலசுப்ரமணியம் பார்த்துக்கொண்டே இருந்தார் ‘என்ன நெனைப்பு? கலைன்னா என்ன சும்மாவா? டேய் எல்லா காலத்திலயும் பத்துபேரு கலைகலைம்பான். பத்துபேர ஆகா ஆகாம்ன்னு சொல்லும் கூட்டம். ஆனா கலை வேற எங்கியோ அதுபாட்டுக்கு இருந்துண்டிருக்கும்…வேற யாருக்கும் தெரியாட்டியும் அவளுக்கு தெரியும் அவ என்னன்னு. அதான்.’ ராமன் சட்டென்று சிரித்து கைக்குட்டையால் மோவாயை துடைத்தார். ‘பாடகர்கள புடிச்சு முழுங்கினா பாட்டு வரும்னு ஏதோ பூதம் டிரை பண்ணுச்சாமே…என்ன’ என்றார். பின் முகம் இறுகி ’இவளுக்கு எல்லாரையும் ஜெயிச்சாகணும். ஜெயிச்சு நம்ம மேலே ஒக்காரணும். சிவன் மார்பிலே கால வச்சுண்டு காளி நின்னுண்டிருப்பாளே அதே மாதிரி…’‘இப்ப சுப்பு அய்யர் மேலே காலை வச்சுண்டிருக்காளா?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘வைக்க ஆசப்படறா. ஆனா அண்ணா வேற மாதிரி. அவருக்குள்ள வேற ஒரு கடல் இருக்கு. அந்தக்கடலிலே அடிக்கற அலையோட ஒண்ணு ரெண்டு துளியத்தான் கச்சேரிலே நீயும் நானும் கேக்கறோம். அதைப்பாத்துட்டு அவர நெருங்கமுடியாது. அவரு குடிச்சு கெட்டவார்த்த சொல்லி ஆட்டம்போட்டு ஒக்காந்திட்டிருக்கார். இவளுக்கும் குடிய பழக்கி விடுவார்…அதுக்குமேலே அவர யாராலயும் நெருங்க முடியாது. எவ்ளவு ஒட்டினாலும் அவருகிட்ட யாருமெ ஒட்ட முடியாது. அவருக்கு அன்பு,காதல் ஒரு இழவும் கெடையாது. அவரு இருக்கறது அந்தகடலுக்குள்ள ஒரு தீவிலே. அங்க எவனாலயும் போய்க்கிட முடியாது’’ஆனா ஒண்ணும் சொல்லவும் முடியாது’ என்றார் ராமன் சற்று கழித்து. ‘அம்மணி அப்டிப்பட்டவ. அவளோட வேகமும் அப்டி. அவ யாரு எதுவரைன்னு சொல்லமுடியாது’ ‘அம்மணி யாரு?’ ‘அவதான்…நான் அப்டித்தான் அவள சொல்றது…’ ஓகோ’ என்றார் பாலசுப்ரமணியன்.

 

         அவர் மனதில் இயல்பாக எழுந்த கேள்வியை யோசிக்காமல் கேட்டுவிட்டார். ’அப்ப உங்க மனசிலேயும் காலை வச்சாளா?’ என்றார்.ராமன் சட்டென்று அமைதியானார். ஆழமான தத்தளிப்புகளுக்குள் அவர் செல்வது போல் இருந்தது. கேட்டிருக்கக் கூடாதோ என்று பாலசுப்ரமணியன் நினைத்துக்கொண்டார். அவரே தொடங்கட்டும் என்று காத்திருந்தார். ஆனால் ராமன்அப்படியே கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார். இமைகளுக்குள் கருவிழிகள் ஓடுவது தெரிந்தது. வெளியே விளக்குகள் போட்டு விட்டார்கள். ஒலிப்பெருக்கி சத்தம் கேட்க ஆரம்பித்தது. விளக்கொளி வேப்பமரத்தின் இலைகளை நிழல்வலையாக ஆக்கி அறைக்குள் அசையச்செய்ததுசாமிநாதன் வந்து நின்று ‘அண்ணா கெளம்பறேளா…நேரமாச்சு’ என்றார். ‘சுப்பு அண்ணா கெளம்பியாச்சாடா?’ என்றபடி ராமன்எழுந்தார். ‘நல்ல கதை. அவரு இந்நேரம் கோயிலிலேன்னா இருப்பாரு’. ராமன் எழுந்து சட்டையை கழற்றியபடி கவனமில்லாமல் கேட்பதுபோல ‘அவளும் உண்டோ?’ என்றார். அரைச்சிரிப்புடன் சாமிநாதன் பார்வை வந்து பாலசுப்ரமணியனை தொட்டுச்சென்றது. பாலசுப்ரமணியன் புன்னகைசெய்ய சாமிநாதனும் புன்னகை செய்தார். ‘என்னடா ஒரு இளிப்பு, பீயப்பாத்த பண்ணி மாதரி?’ என்று ராமன் எதிர்பாராமல் சீறினார். ‘என்னண்ணா நீங்க? எங்கியோ சீறவேண்டியத எங்கிட்ட சீறுறீங்க? பேசாம வாங்க. பாட்டுகேக்க வந்திருக்கேள். கேட்டுண்டு போங்கோ.

 

          அண்ணா இன்னைக்கு நல்ல ஃபாமிலே இருக்கார்’ராமன் ‘அந்த தேவ்டியா மிண்டை கூட இருக்காளோல்லியோ, ஃபாமிலேதான் இருப்பாரு..’என்றவர் சட்டென்று தன் பையை எடுத்து ‘டேய் எனக்கொரு குதிரவண்டிய புடிரா. நான் கெளம்பறேன்’ என்றார். ‘என்ன இப்ப? இவளவுதூரம் வந்துட்டு போனா அண்ணா என்ன நெனைபபார்?’. ‘அவரப் போயி எருமயப் பண்ணச்சொல்லு…நான் போறேன்’ பாலசுப்ரமணியன் அதென்ன புதியவசவாக இருக்கிறதே என்று பாலசுப்ரமணியன் புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். சாமிநாதன் உரக்க ‘அண்ணா பைய வைங்கோ…வைங்கோ சொல்றேன்’ ‘டேய் தள்ளுரா’ ‘இப்ப வைக்கல்லே… புடிச்சு இழுத்துண்டு போயிடுவேன்…நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கே தெரியும்..வைங்கோ அத’ராமன் பையை வைத்தார். ‘பேசாம சட்டைய மாத்துங்கோ. குளிக்கறதுக்கு நேரமில்லை. கச்சேரி இப்ப ஆரம்பிச்சிரும்..’ என்ற சாமிநாதன் ‘கோயில் போறேளா?’ என்று பாலசுப்ரமனியனிடம் கேட்டார்.பாலசுப்ரமணியன் ‘அப்றமா போறமே..இப்ப ஒரே கூட்டமா இருக்குமே’ ராமன் பரிதாபமாக ‘டேய் நேக்கு தவிக்கறதுடா…நான் வரல்லை’ ‘நீங்க வரீங்க’ என்று உறுதியாகச் சொன்னார் சாமிநாதன். ‘அப்டிச்சொல்றயா?’ என்று தஞ்சாவூர்த்தனமாக இழுத்தார் பாலசுப்ரமணியன் . எழுந்து சட்டையைஎடுத்து ‘உச், சட்டையிலே ஒரே கரப்புருண்ட வாசம். சொன்னா கேக்க மாட்டா’ என்றார். சட்டையை மாட்டிக்கொண்டு ’மூஞ்சிய மட்டும் அலம்பிண்டு வரேன்’ என்று போனார்‘அது மன்னார்குடிப்பக்கம் ஃபேமஸான வசவு. குடியானவங்க சொல்றது.

 

        அக்ரகாரத்திலே ரொம்ப லோக்ரேடு வசவே இதவிட சிக்கிரிஸ்டிராங்கா இருக்கும்’ என்றார் சாமிநாதன் ‘நீங்க சட்டை மாத்தலையா?’ ‘நான் அப்பவே மாத்திண்டேனே .சந்திரா இங்க இருக்கறது உங்களுக்கு தெரியாதோ?’ என்றார் பாலசுப்ரமனியன்.‘இல்லண்ணா …தெரிஞ்சா இவர வரச்சொல்லியிருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டப்படுறார். ஆனால் நல்லா நாலஞ்சு அடிகிடைச்சு முறிஞ்சுபோனாக்கூட நல்லதுதான்…’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அப்டி போய்டாது. அவளப்பத்தி ஒரு நாவலாவது எழுதாம ஆறாது’ என்றார்’நாய் மாதிரின்னா வாலச்சுழட்டிண்டு பின்னால அலைஞ்சர். அன்னைக்கு தலையிலே அடிச்சுக்காத ரைட்டர்ஸே இல்ல. கரிச்சான்குஞ்சு என்னைக்கூப்பிட்டு டேய் அவன் பிறவிரைட்டர்டா. அவனுக்கு வெக்கமும் பயமுமா ஆத்தாம கெடக்கு. துணிஞ்சு ஒரு நாலஞ்சு தாசிகளண்ட கூட்டிண்டு போ. தெளிஞ்சுட்டுதுன்னா இடுப்புக்குமேலே யோசிக்க ஆரம்பிப்பான்னார். என்ன சொல்றேள்?’ . பாலசுப்ரமணியன் உரக்கச்சிரித்தார். ‘என்னண்ணா சிரிக்கறேள்?’‘இல்ல சாமிநாதன், இதயெல்லாம் சொல்றது கஷ்டம். இப்ப இது இடுப்புக்குக்கீழெ ஒரு தொளைக்கும் குச்சிக்குமான விஷயம்தான் அப்டீனா எதுக்கு இவ்ளவு சங்கீதம், இவ்ளவு கவிதை, இவ்ளவு கலை? மனுஷனுக்கு இது ஒரு மீடியம் மாதரி. இது வழியா அவன் எங்கியோ போறதுக்கு டிரை பண்றான். இது ராவணன் கோட்டையா மாறி சுத்திச்சுத்தி அடிக்குதே ஒழிய வழிகாட்டற மாதிரியும் தெரியல்லை. இவருக்கு செக்ஸ் பிரச்சினையே இல்லை. இது வரை இவரு எங்கிட்ட செக்ஸ் பத்தி ஒரு வார்த்தை பேசினதில்லை.

 

         பொம்பிளைங்களப்பத்திக்கூட ஒரு வார்த்தை பேசினதில்லை’‘ஆச்சரியமா இருக்கே…அதைப்பத்தி மட்டும்னா பேசுவர்?’ ‘பேசுவார்…ஆனா பொம்பிளைங்களப்பத்தி இல்ல, அவங்களோட அழகப்பத்தி. திரும்பத்திரும்ப அழகுதான். அவரு செக்ஸுக்கு அடிமை கெடையாது. அழகுக்கு அடிமை. அவரு என்னதேடுறாருன்னு அவருக்கே தெரியாது. ஆனா தேடிண்டே இருக்காரு’ என்றார் பாலசுப்ரமணியன் . ‘ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா நீங்க சொன்னது சரிதான்…பித்துபிடிச்சு அலைவர். ஆனா அத்து மீறவும் மாட்டார். வரார்னு நெனைக்கறேன்’ராமன் வந்து உற்சாகமாக ’கெளம்பலாமா பாலு?’ என்றார். அவர் அடுத்த இருபதுநிமிடப்பிறவி அடைந்துவிட்டார் என்று நினைத்து பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ’அண்ணா பாட்ட கேட்டு மூணு மாசம் ஆறது. ஒருகாலத்திலே அண்ணா கூடவே காரிலே போயி ஒவ்வொருகச்சேரியா ஒக்காந்து கேக்கறது…அவருக்குன்னு ஒரு கூட்டம் இருந்துண்டே இருக்கு. அவரு மதுரை ஸ்கூல்னா. தெக்க ஒரு கூட்டமே இருக்கு அவருக்கு’அக்ரஹாரத்துக்கு அப்பால்தான் கோயிலின் மைதானம். அங்கே நாதஸ்வரம் கேட்டது. ‘பிள்ளைவாள்’ என்றார் ராமன் பரவசமாக. ‘படுபாவி, அவன் கையிலே இருக்கறது நாகஸ்வரமா வேற எதுவுமா?நாசமா போக..கொல்றானே…மனுஷன மெழுகா ஆக்கிடறானே’ பாலசுப்ரமணியன் மெதுவாக தலையாட்டிக்கொண்டே நடந்தார்.

 

          ‘தாயோளி, சாகமாட்டானா…’ என்று ராமன் அரற்றினார். ’இந்த பிளேட்டு தேயறமாதிரி அண்ணா கேட்டிருப்பார்’ என்றார் சாமிநாதன் ‘பாலு இதிலே மூணாம் சரணத்திலே மெதுவா எறங்குவான் பாருங்க…அம்பாள்முன்னாடி நம்ம தலைய தாழ்த்துவோமே அதே மாதிரி…தாயளி பிரம்மராட்சதன். என்ன சொல்றீங்க?’ அவர் எப்போது ஒருமையில் கூப்பிடுவார் என்று பாலசுப்ரமணியன் யோசித்தார். அவருக்குள் ஒரு கணக்கு இருக்கும் போல.அக்ரஹாரம் காலியாகக் கிடந்தது. வீட்டுத்திண்ணைகளில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்குகளும் பிறைவிளக்குகளும் வரிசையாக ஒளிவிட்டு அக்ரஹாரத்தை மெல்லிய சிவப்பு வண்ணத்தால்இரவின் கரிய திரையில் தீற்றியிருந்தன. ஒருபூனை மட்டும் திண்ணையில் அமர்ந்து மய்யாவ் என்று சொல்லிக்கொண்டிருந்தது. தெருவில் வாழைமட்டைகள் சிதறிக்கிடந்தன. ஒரு திண்ணையில் வயோதிகர் ஒருவர் ‘ஆரு?’ என்றார்.அக்ரஹாரத்தைக் கடந்து கோயில் முகப்பை அடைந்ததும் அத்தனை கூட்டத்தை கண்டு பாலசுப்ரமணியன் ஆச்சரியம் கொண்டார். எப்படியும் இரண்டாயிரம் பேர் இருக்கும். அவர்கள் அனைவரும் வெறும் மண்ணில் அமர்ந்து ஒலிப்பெருக்கியில் ஒலித்த நாதஸ்வர இசையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

         பிரமை பிடித்த முகங்கள் இருளில் கொத்துக்கொத்தாகத் தூரத்து கத்தரிக்காய்விளக்குகளின் ஒளியில் தெரிந்தன.சாமிநாதனைப்பார்த்ததும் நாயக்கரின் ஆட்கள் ஓடிவந்தார்கள். ஒரு குடுமிக்கார ஆசாமி ‘நாக்காலி போட்டிருக்குதுங்கய்யா’ என்றார். ‘நாக்காலி வேணாமே..இப்டியே தரையிலே ஒக்காந்துக்கலாமே’ என்றார் ராமன். ‘அவருக்கு தேவைப்படும்ணா …நீங்க ஒண்ணு’ என்றார் சாமிநாதன் . பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ‘வேட்டி அழுக்காகாமெ சங்கீதம் கேக்கறதனாலத்தான் நீங்க ராமநாதன்லே நிக்கிறீங்க’ என்றுசொல்லி ராமன் சிரித்தபின் ‘சரி…உங்க இஷ்டம்.சொகுசாத்தான் கேப்போமே’ என்றார்மரநாற்காலிகளை பக்கவாட்டில் ஓரமாக போட்டார்கள். பாலசுப்ரமணியன் அமர்ந்துகொண்டார். ராமன் ‘கச்சேரிக்கு முன்னாடி ஒரு பரபரப்பு வருதே அது சாதாரணம் கெடையாது. குடிக்கிறவாளுக்கு சாராய வாசனை வந்தா வருமே அத மாதிரி…ஏன் பாலு’ என்றார். ‘நேக்கு அப்டி தோண்றதில்லை’ ‘எதைப்பத்தியாவது தோணியிருக்கா? அட்லீஸ்ட் மொத ராத்திரிக்காவது…’ பாலசுப்ரமணியன் சிரித்தார்.எதிர்ப்பக்கமிருந்து சுப்பு அய்யர் அவரது குழுவினருடன் வேகமாக வருவது தெரிந்தது. ‘அண்ணாவுக்கு எறங்கிடுத்து. கிரீன் ரூமிலே ஏத்திக்கறதுக்கு பாய்ஞ்சு வர்ரார்’ என்றார் சாமிநாதன் .

 

          ‘சும்மார்ரா…இந்தப்பக்கம்லாம் நாயக்கர் தேவர்னு பிராமணபக்தி உள்ள ஆட்கள். தப்பா நெனைச்சுண்டுரப்போறா’ என்றார் ராமன்.வாத்தியக்காரர்கள் கூட்டமாக பின்பக்கம் வழியாக மேடைக்கு ஏறினார்கள். மேடையில் இருவர் மைக்குகளை பொருத்தி பூபூ என ஊதிப்பார்த்தார்கள். இருளில் இருந்து இருவர் நாற்காலியை நோக்கி வந்தார்கள். நாயக்கரும் சந்திராவும். பாலசுப்ரமணியன் திரும்பி ராமனைப் பார்த்தார். அவர் அபப்டியே உறைந்தது போலிருந்தார்.சந்திரா புடவை சரசரக்க வந்து பாலசுப்ரமணியன் அருகே அமர்ந்தாள். ‘என்ன ஒக்காந்தாச்சா?’ என்றபடி அமர்ந்துகொண்டாள். அவள் இன்னொரு புடவை மாற்றியிருந்தாள். அதுவும் நீலம்தான். ஆகாய நீலம். அதன் சரிகைப்பகுதியின் வேலைப்பாடு பிரமிப்பூட்டும்படி இருந்தது. அவள் அதை சுருட்டிக்கொண்டு அமர்வது மயில் தோகையைக் சுழற்றி அடங்குவதுபோல தோன்றியது. புடவையின் நுனியா அல்லது அதன் காற்றா தன்னை தொட்டது என்று பாலசுப்ரமணியன் வியந்துகொண்டார். இதமான தாழம்பூ மணம். முகப்பவுடரின் மணம். இன்னும் என்னென்னவோ மணம்.சந்திரா கழுத்தை திருப்பியபோது பாலசுப்ரமணியன் தன் நெஞ்சில் ஒரு கன்றுக்குட்டி உதையை உணர்ந்தார். அத்தனை நளினமாக ஒரு பெண் கழுத்தை திருப்பமுடியுமா என்ன? ஓர் அசைவு ஒரு மாபெரும் கலைநிகழ்வாக ஆகமுடியுமா என்ன? எப்படி அதை வார்த்தையாக்குவது? மயில்திரும்புவதுபோல. மயில் கழுத்தை திருப்புவதை மட்டும் வார்த்தையாக்கிவிட முடியுமா? எத்தனை பொருளற்ற வார்த்தைகள். ஒரு சொல்லமுடியாமையை இன்னொரு சொல்லமுடியாமையால் ஈடுகட்டுகிறோம்.

 

         மேடையில் வாத்தியக்கலைஞர்கள் அமர்ந்துவிட்டார்கள். மிருதங்கமும் வயலினும் மெல்ல முனகியும் சன்னமாக அதிர்ந்தும் கச்சேரிக்கு தயாராகிக்கொண்டிருந்தன. பெரிய சமுக்காளத்தை கொண்டு வந்து மடித்துப் போட்டு அதன்மேல் ஒரு பட்டுத்துண்டை ஒரு பையன் விரித்தான். ஒரு பெரிய வெள்ளி கூஜா கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதற்குள் தேன்மணமுள்ள கான்யாக் பிராந்தியில் கொஞ்சமாக சோடா சேர்த்து வைத்திருப்பார்கள் என்று ராமன் சொல்லியிருக்கிறார். பிரான்ஸில் இருந்து மாதம்தோறும் கொண்டுவந்து கொடுப்பதற்கு அவருக்கு ரசிகர்கள் உண்டு.சந்திரா திரும்பி பாலசுப்ரமணியன் கையை தொட்டு ‘சாப்பிட்டுட்டேளா?’ என்றார். அவளுடைய தொடுகை பாலசுப்ரமணியன் உடலை அதிரச்செய்தது. அரைக்கணம் அவர் ராமனை பார்த்து திரும்பி ‘ஆச்சு’ என்றார். தொட்ட கையை எடுக்காமலேயே ‘ராத்திருக்கு அடை செஞ்சிருக்கா…கச்சேரி முடிஞ்சதுக்கு பிறகு சாப்பிடலாம்னு…நான் ராத்திரி சாப்பிடறதில்லை’ என்றாள். ‘நேக்கும் ராத்திரி அடை புடிக்காது’ ‘ஹெவி’ என்று சந்திரா சொன்னாள். அவள் தன் கையின் தொடுகையை எடுக்கவேண்டும் என பாலசுப்ரமணியன் தவித்தார். மெல்ல தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றார். ஆனால் கையை அசைக்கவே முடியவில்லை.மேடையில் சுப்பு அய்யர் வந்து அமர்ந்தார். அவர் வரும்போதே கூட்டத்தில் பெரும் கைத்தட்டல் ஒலி எழுந்தது. அமர்ந்ததும் அது இன்னும் மேலே சென்றது. அவர் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கைத்தட்டல் ஓய்வதற்காக காத்து நின்றார். பின் புன்முறுவலுடன் கூஜாவை திறந்து வெள்ளிடம்ளரில் திரவத்தை ஊற்றினார். சட்டென்று முன்வரிசையில் இருந்து பலமான கைத்தட்டல்கள் எழுந்தன. டம்ளரை கூட்டத்தை நோக்கி தூக்கி ’சியர்ஸ்’ மாதிரி உதடசைத்துவிட்டு இருவாய் குடித்தார். அதை ஓரமாக வைத்துவிட்டு வயலின்காரரைப் பார்த்தார்.

 

           சட்டென்று ஒரு பார்வை வந்து சந்திராவை நீவிசென்றது என பாலசுப்ரமணியன் உணர்ந்தார்’ம்ம்ம்’ என மெல்லிய குரலில் முனகினார். விழாக்கச்சேரிகளில் அவருக்கு சம்பிரதாயம் என ஏதும் கிடையாது. எந்த வரிசையுயிலும் எப்படியும் பாடுவார். என்ன பாடுவார் என்பது அவருக்கே அங்கே அமரும்வரை தெரியாது. அந்த திகிலில் வயலின்காரரும் மிருதங்கக்காரரும் அமர்ந்திருக்க தம்புராபோடும் ஆசாமி உல்லாசமாக கூட்டத்தைப்பார்த்து பல்லைக்காட்டி சிரித்துக்கொண்டிருந்தார். கச்சேரி என்பது அவருக்கு ஒரு அரசன் தன் பிரஜைகளிடம் ஆடும் விளையாட்டு போல. ‘நாநாநா’ என்றார் சுப்பு அய்யர் மீண்டும்.சாமிநாதன் ’அண்ணா இப்ப அஷ்டபதியிலே ஆரம்பிக்க போறார்..’ என்றார். ’டேய் இது முருகன் கோயில்டா…’ என்றார் ராமன். ’அவருதான் கிறுக்கனாச்சே’ என்றார் சாமிநாதன். ‘எப்டி தெரியும்?’ என்றார் பாலசுப்ரமணியன். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துதான் பாடுவார் என்றுஅவர் நினைத்திருந்தார். ‘தெரியும்…அவ்ளவுதான்…ரொம்ப நாளா கேக்கிறோமே..கொஞ்சம் அவர்கூட ஓடமாட்டோமா?’ என்று சொல்லி சாமிநாதன் புன்னகைசெய்தார்‘யா ரமிதா வனமாலினா சகி யா ரமிதா…’ என்று சுப்பு அய்யர் ஆரம்பித்தார். கூட்டமெங்கும் ஒரு சிறிய ஆச்சரிய அலை சென்றது. பிரிவாற்றாமையின் தாபமும், கொந்தளிப்பும், தவிப்பும், அவ்வப்போது கசப்பும், அனைத்துமே ஒரு பெரும்பரவசமாக ஆகும் உச்சமுமாக அந்தப்பாடல் கூட்டத்துக்கு மேல் விரிந்திருந்த இருட்டுக்குள் பரவி மெல்லிய கண்காணா மழையாக பெய்தது.சம்பந்தமே இல்லாமல் சட்டென்று ’கிருஷ்ணா நீ பேகனே பாரோ’. உடனே ஏன் என்றே தெரியாமல் ’தூண்டில்புழுவினைப்போல் வெளியே சுடர்விளக்கினைப்போல்’ அப்படியே ’நகுமோ மோ கனலே’. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென பாட்டின் போதையிலிருந்து வெளியே வந்தபோது ஒரு நிமிடம் பாலசுப்ரமணியன் உணர்ந்தார்.

 

          வயலின் முனகிக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை சுத்தியால் தட்டிக்கொண்டிருந்தார். தாபம்தான். அத்தனை பாடல்களும் தாபம். வரமாட்டாயா, கைவிட்டுவிட்டாயா, எங்கிருக்கிறாய், ஏன் என்னை நினைப்பதில்லை… ஆம் என தண்ணென்று ஒலித்தது மிருதங்கம்பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்தபாட்டு அடுத்து வந்தது ’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதிதிருநாள் பாட்டு. பழமையான சுருட்டி. ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார். இரவின் பிரம்மாண்டமான கரிய கூரையை ஏறிட்டுப்பார்த்தார். முடிவில்லாத ஒளித்துளைகள். மின்னும் அழியா விழிகள். ஏன் இங்கு இப்படி இருக்கிறேன்? எந்த மகத்தான புரியாமைகளால் விளையாடப்படுகிறேன்?விசும்பல் ஒலி கேட்டு பாலசுப்ரமணியன் திரும்பிப் பார்த்தார். ராமன் மார்பில் இரு கரங்களையும் கூப்பி கண்களிலிருந்து கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது.சட்டென்று நாற்காலி அசையக்கேட்டு பாலசுப்ரமணியன் அறுபட்டு திரும்பிப்பார்த்தார். கைப்பிடிமீதாகச் சரிந்து விழுந்துக்கிடந்தார் ராமன்.

 

           சாமிநாதன் ‘சத்தம்போடாதீங்கோ’ என்று பாலசுப்ரமணியனிடம் கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு ’…அண்ணா அண்ணா’ என்றார். ராமன் மூர்ச்சையாகியிருந்தார். ‘டேய் தூக்குடா’ என்றபோது பின்னால் அமர்ந்திருந்த நாயக்கரின் வேலைக்காரன் ராமனை அப்படியே தூக்கி விட்டான். ‘யாரும் கவனிக்காமே அப்டியே ஸ்டேஜ்பின்னடி இருட்டுக்குள்ள கொண்டு போயி நேரா பங்களாவுக்கு கொண்டு போயிரு’ அவன் அவரை குழந்தையை போல தூக்கிக் கொண்டு சென்றான்தரையில் ராமனின் மூக்குக் கண்ணாடி விழுந்து கிடந்ததை பாலசுப்ரமணியன் எடுத்துக்கொண்டார். அவரும் பின்னால் சென்றார். திரும்பி பார்க்கையில் சந்திரா நாயக்கரிடம் ஏதோ சாதாரணமாக பேசுவது கேட்டது. இருட்டுக்குள் விரைந்து ஓடவேண்டியிருந்தது. முன்னால் சென்றவன் அத்தனை வேகமாக அவரைக்கொண்டு சென்று திண்ணையில் படுக்கவைத்தான். ‘என்னாச்சு?’ என்றார் பாலசுப்ரமணியன் . ஒண்ணுமில்லே…சங்கீதம் கேக்கறச்ச அபூர்வமா இப்டி ஆயிடுவர்…’ என்றார் சாமிநாதன்முகத்தில் நீர் தெளிக்கப்பட்டு விசிறப்பட்டதும் ராமன் விழித்துக்கொண்டார். அர்த்தமற்ற வெறித்த பார்வையுடன் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தார். ’காபி சாப்பிடுங்கோண்ணா’ என்றார் சாமிநாதன். ‘வேணாண்டா’ ‘சாப்பிடுங்கோன்னுல்ல சொல்றேன்?’ என்ற அதட்டலுக்குப் பணிந்து இருகைகளாலும் வாங்கி குடித்தார். அவருக்கு அப்போது அது மிகமிக வேண்டியிருந்தது என்று தெரிந்தது.ராமன் எழுந்து அமர்ந்தார். ’

 

            சட்டைய கழட்டிடறேனே.. ரொம்ப நனைஞ்சுடுத்து…’ என்றார் ‘டேய் நான் பயமுறுத்திட்டேனாடா?’ ‘அதெல்லாம் இல்ல…யாரும் பாக்கலை’ ‘அண்ணா கவனிச்சிருப்பர். அவரு கண்ணு அப்டி’ என்றார் ராமன். நாயக்கர் வந்து ‘சரியாயிட்டாரா? என்னாச்சு?’ என்றார். ’ஒண்ணுமில்லே… ஒரு களைப்பு…எந்திரிச்சிட்டார்’ என்றார் சாமிநாதன். பின்பு ‘அண்ணா நான் நாயக்கர்வாளோட போறேன்… பேசிண்டிருங்கோ’ என்று சொல்லி ‘வாங்கோ நாயக்கர்வாள்…கச்சேரி எப்டி. தெய்வகானம் என்ன?’ என்று இருளுக்குள் சென்றார்‘என்ன மாதிரி மனுஷன்…’ என்றார் ராமன் ‘இப்ப நான் ஆசைப்படறது உங்க கிட்ட தனியா பேசத்தான்னு சூட்சுமமா தெரிஞ்சுகிட்டான் பாத்தேளா’ என்றார். பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘அண்ணா எனக்கு விடைய சொல்லிட்டார்…எனக்கு வழிகாட்டிட்டார்…அவரு கந்தர்வன். வானத்திலே இருந்து அவர் வழியா தெய்வஞானம் எறங்கி வருது…அவரோட சீக்கு புடிச்ச ஒடம்பும் மனசும் அதைத்தாங்கலே…அதான் குடிக்கறார்…’. பாலசுப்ரமணியன் மேலே கேட்கும் மனநிலையில் கன்னத்தில் கைவைத்து காத்திருந்தார்.‘நீங்க கேட்டேளே, நான் தோத்துட்டேனான்னு. தோத்து கேவலப்பட்டு சீரழிஞ்சுட்டேன்.மண்ணுல கால வைக்கவே முடியாதவனா ஆயிட்டேன். எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்…அந்தமாதிரி எனக்குள்ள ஏறிட்டுது வெஷம்… மூணு வருஷமா எரிஞ்சு கரிஞ்சுட்டிருக்கேன் பாலு…’‘ம்’ என்றார் பாலசுப்ரமணியன்.

 

           ‘இப்ப அண்ணா சொல்லிட்டார். என்ன சொன்னார்னு என்னால சொல்ல முடியலை. ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? இந்த வெஷம் ஏறி எரியறதனாலேதானே என் வெரல்நுனியெல்லாம் சங்கீதமா அதிருது… என் மனசிலே இந்த வேதனையெல்லாம் சங்கீதம்தானே? ஒளறிண்டிருக்கேனா? சொல்ல முடியல பாலு. நான் இதுநாள் வரை சொல்லமுடியலேன்னுதான் சொல்லிண்டே இருக்கேன். அதான் என்னோட எழுத்து.முடியல பாலு…நெஞ்சு முட்டுது. வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க ’ சட்டென்று முஷ்டியால் தன் மார்பை அறைந்தார் ராமன். ‘எரியறது…எரியறது’ என்றார்.பின்பு தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்தார் ‘நான் எரிஞ்சு எரிஞ்சு கரிக்கட்டயா போறதுக்குன்னு பொறந்தவனாக்கும்…முடியல பாலு…என்னால முடியல…இன்னிக்கே செத்துப்போய்டுவேன் போல இருக்கு…என்பக்கத்திலே இருந்துக்கோ…நீ என் தம்பி மாதிரி…நான் விட்டுட்டு வந்த எல்லாமே உங்கிட்ட இருக்கு. நான் போகாத எடமெல்லாம் உங்கிட்ட இருக்கு…நீ வேற ஆளு… செதுக்கி எடுத்தது மாதிரி இருக்கே…உன்னைப்பாக்கறச்ச நெறைவா இருக்க்கு.

 

            நான் அன்னன்னைக்கு வாழறவன். அப்பப்ப செத்து பொழைக்கிறவன் . என்னை கொல்றதுக்குன்னே சங்கீதம் இருக்கு…முடியலை பாலு…பத்து பிறவிக்கு வேண்டியத இந்த பித்த உடம்ப வச்சுண்டு அள்ளியாறது…முடியலை ‘சொற்கள் காலியானவர் மாதிரி ராமன் அமைதியானார். தூரத்தில் அலர்ஸார பரிதாபம் என்று வயலின் கொஞ்ச ஆரம்பித்தது. ஒலி காற்றில் பறக்கும் சரிகை போல அலைபாய்ந்தது. ‘மயில்கழுத்து நெறம் என்னை ஏன் இழுக்குதுன்னு கேட்டியே. அதிலே வெஷமிருக்கு பாலு. ரகசியமா மின்னிண்டிருக்கற மயில்கழுத்துநெறம் மாதிரி ஆலகாலத்துக்கு பொருத்தமான நெறமென்ன சொல்லு. என்னா ஒரு நெறம்! எங்கியோ காட்டுக்குள்ள ஒரு ராஜநாகம் மயில்கழுத்து நெறத்திலே இருக்கு. கண்டிப்பா இருக்கு. நான் அதை சொப்பனத்திலே பாத்திருக்கேன்.நிலா வெளிச்சத்திலே நீலமா அது வழியறது. அலர்ஸர பரிதாபம்னு சுருட்டியிலே நெளியறது…இப்ப அங்க அந்த மலைக்கு மேலே குளிரிலே தனிமையிலே நெளிஞ்சுண்டிருக்கு…நான் பாக்கறேன் அதை. ஒளறிண்டிருக்கேன் மறுபடியும்…ஆனா எப்டி சொல்றது சொல்லு. எனக்கு ஞானமும் மோட்சமும் ஒண்ணும் வேணாம். அழகு போரும். அழகோட வெஷம் என்னை எரிய வச்சாலும் சரி.. எனக்கு இன்னமும் அழகு வேணும். கால்வெரல் நுனி முதல் தலைமயிர் எழை வரை நெறைஞ்சிருக்கிற ஜீவனோட பேரழகு இருக்கே அது வேணும்… அழகுன்னா என்னதுன்னு இப்ப அண்ணா பாடிக்காட்டிட்டார். அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. எனக்குள்ள தீயா எரியற இந்த தாபத்தில இருந்துதான் நான் பாக்கற எல்லா அழகும் பொறந்து வருது…அந்தா தாபத்தையே புழிஞ்சு புழிஞ்சு வைக்கறாரே மனுஷன்…அந்த தாபம் என்ன மனுஷ தாபமா? இன்னது வேணுங்கிறதுக்கான தாபமா? கெடையாது. அது தாபம், அவ்ளவுதான்.

 

            பிரபஞ்சம் முழுக்க நிறைஞ்சிருக்கிற பிரம்ம தாபம்… அதுக்கு வேற ஒரு காரணமும் வேணாம்…பாடிக்காட்டிட்டாரே மனுஷன்…’’நான் ஜாஸ்தி பேசறேன்னுதானே நெனைக்கறே? நேக்கு காவேரி ஓடினா போராதுடா…கரைய ஒடைக்கணும். ஊருக்குள்ள பூந்து வீடு தெரு கோயில் கொளமெல்லாம் ஒண்ணாயிடணும்…குப்பையும் செத்தையும் கோயில்மாலையும் எல்லாம் சேர்ந்து அதிலே மெதந்து சுழிச்சாகணும்… அதுக்குத்தானே நான் பொறந்திருக்கேன். இந்த பிறப்ப குடுத்தாச்சு… இந்த வேதன இன்னும் எனக்கு வேணும் பாலு. இன்னமும் வெஷம் வேணும். கடிச்சுண்டு போற பாம்பெல்லாம் என் குருதியிலே ஒரு சொட்டத்தான் கொண்டு போயிருக்கு. அதுலே ஒவ்வொரு துளியும் சங்கீதம்னா? சுத்த சங்கீதம். காதாலே கேக்கிற சங்கீதம் இல்லே… இப்ப இந்தா அண்ணா இன்னமும் அதேதான் பாடிண்டிருக்கார். அலர்ஸர பரிதாபம்…என்ன மாதிரி நெளிஞ்சு வழியறது! பாலு இந்த தாபத்த வச்சுண்டு சுவாதி எப்டி ராஜாவா இருந்தார்? எங்க ராஜாவா இருந்தாங்கிறே? சரிதான் உருகி உருகி முப்பத்திமூணு வயசிலே பொருங்கிச் செத்தான்…நான் இருந்துண்டிருக்கேன்… ஆனா இருக்கிற வரைக்கும் எரிஞ்சுண்டுதான் இருப்பேன்…அண்ணா பாடுறாரே, இப்ப அவரு மட்டுமே கேக்கற ஒரு சங்கீதம் அங்க மேடைக்குமேலே நிறைஞ்சிருக்கு பாலு. அதான் என் ரத்ததிலே ஓடுது…அதான் என்னை எரிய வைச்சிட்டிருக்கு…போரும்…இதான் நம்ம பிறவி…இது போரும்’கண்களை மூடிப் படுத்திருக்கும் ராமன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் பாலசுப்ரமணியன். முகம் முழுக்க ஒரு பரவசம் நிறைந்திருப்பதாகப் பட்டது. பின்பு மெல்ல முகத்தசைகள் விடுபட்டு தளர அமைதி நிறைந்தது.

 

           பெருமூச்சுடன் நிமிர்ந்து ‘ஏன் பாலு போறப்ப நாம திருச்செந்தூர் வழியா போலாமே’ என்றார். ‘நாகர்கோயில் வந்துட்டா போறேள்? இப்டியே சுப்பு அய்யர் கூட போறதா சொன்னேளே’ ’இல்லே…திருச்செந்தூர் போகணும்னு தோணறது. ஒண்ணுமில்லே, திருச்செந்தூரிலே ஒரு மயில்கழுத்து பட்டு வாங்கி சாத்தணும்… நூத்தம்பது ரூபாயிலே கெடைக்கும்ல?’ ‘அது பாத்துக்கலாம்…யாருக்கு?’ ‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல? தெய்வானைக்குன்னா மாம்பழ நெறம்னு சொல்லுவாங்க’ ‘பண்ணிடலாம்’ என்றார் பாலசுப்ரமணியன்.இருவரும் சற்று நேரம் அபப்டியே அமர்ந்து தொலைவில் சுப்பு அய்யரின் ஆலாபனையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் விழுந்து கிடந்த வேப்பமர இலைகளின் நிழல்விளையாடலும் தூரத்து கட்டிடங்களின் மங்கிய சுவர்வெண்மையும் அப்பால் அக்ரஹாரத்தின் விளக்குகளின் செவ்விதழ்களும் சுருட்டியாக இருந்தன. காற்று சுருட்டியை மெல்ல அசைத்து நடமிடச்செய்தது. சுப்பு அய்யர் ஓய்ந்து வயலின் மட்டும் ரீங்கரித்து அடங்கி சிறு கனைப்புகளும் கலைசல் ஒலிகளும் அரங்கினரின் கூட்டொலியின் முழக்கமும் எழுந்தபோது பாலசுப்ரமணியன் அவரது குரலைப்பற்றிய பிரக்ஞையை அடைந்தார். அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும்முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?ராமன் மெல்லிய குரட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

 

          திண்ணை அகலமில்லை, விழுந்துவிடுவாரா என பாலசுப்ரமணியன் நினைத்தார். ஆனால் சிறிய திண்ணைகளில் சமன்செய்து தூங்குவது தஞ்சாவூரில் வழக்கம்தான். சுப்பு அய்யர் அடுத்த பாடலுக்குச் சென்றார். ’ப்ரோவ பாரமா?’ பாலசுப்ரமணியன் எழுந்து கழிப்பறைக்குச் சென்றார். பெரிய வீட்டின் கடைசிக்கோடியில் தனியாக ஒரு பாதை இணைத்து அதன் மறு எல்லையில் கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. விளக்கு குமிழ் எங்கே என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தபின் இருட்டிலேயே உள்ளே சென்றார்.கால்கழுவிக்கொண்டிருக்கும்போது ‘அலர்ஸர பரிதாபம்’ என்று அவர் முணுமுணுத்ததை அவர் கேட்டார். சரேலென கடற்பாறையை அறைந்து, தழுவி, பூச்சொரிந்து, மூடி, வழியும் அலை போல சுப்பு அய்யர் பாடிய அந்த ஒட்டுமொத்த ஆலாபனையையும் அவர் கேட்டார். மனம்பொங்கி விசும்பிவிட்டார். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதன்மேல் குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி விட்டு கழுவினார். தொண்டையை இறுக்கியதை, நெஞ்சை அடைத்ததை அழுத்தி உள்ளே செலுத்தி அதன் மேல் மூச்சு விட்டு மூச்சு விட்டு ஆற்றி அடங்கியபின் கைக்குட்டையால் முகத்தை அழுத்தி துடைத்து பெருமூச்சுடன் முன்வராந்தா நோக்கி நடந்தார்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.