LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மாதவிக்குட்டி

மருந்துகள்

அவள் முதல் தடவையாக அந்தப் பருந்தைப் பார்த்தபோது அது ஆகாயத்தில், கடலுக்கு மிகவும் மேலே அந்த அடர்த்தியான நீலத்தில் மெதுவாக வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய மனதிற்குள் கடுமையான ஒரு வெறுப்பு திடீரென்று வந்து நிறைந்தது. அதற்கான காரணங்களை அவள் தேடவில்லை. காரணங்களைத் தேடக்கூடிய ஒரு குணம் அவளிடம் இல்லாமலிருந்தது. தன் உள்ளே தலைக்குள்ளோ, நெஞ்சிற்குள்ளோ, அல்லது சிவப்பு நிற நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கும் அந்த நரம்புகளுக்குள்ளோ- எங்கேயோ இருக்கும் மனம்- ஓய்வே இல்லாமல் முனகிக் கொண்டிருக்கும் அந்த மந்திரம்- அதைப் பின்பற்ற மட்டும் அவள் படித்திருந்தாள். இந்த முகத்தைக் காதலி- அது சொல்லி, அவள் காதலித்தாள். எண்ணங்களால் மட்டுமல்ல- தன்னுடைய உதடுகளாலும், விரல் நுனிகளாலும் காதலித்தாள். இந்த நிமிடத்தை வெறு; இந்தப் பாம்பை வெறு... அவள் எப்போதும் அது கூறியபடி கேட்டாள். அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, அவளுடைய உடல் அந்த சுதந்திரப் பிறவியின் அடிமையாக ஆனது. அதற்குப் பிறகும் அவளுடைய உள்ளுக்குள் இருந்து- எல்லையற்ற ஒரு ஆழத்திற்குள்ளிருந்து திருப்தியின்மையைக் காட்டும் முணுமுணுப்பு எழுந்து கொண்டிருந்தது. சுதந்திரம்- அது சொன்னது. எனக்கு மேலும் மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

தன்னுடைய மெலிந்த உடல் ஒரு கூடு என்பதையும், அதன் பலகைகளை, நன்கு வளர்ந்த சிறகுகளைக் கொண்டு மோதி ஒரு உயிரினம், அதை உடைத்துவிட்டு வெளியே போக முயற்சிக்கிறது என்பதையும் அவள் உணர்ந்தாள். தன்னுடைய கழுத்து எலும்புகளின்மீது விரல் முனைகளை வைத்து அழுத்தியவாறு அவள் களைப்படைந்த குரலில் சொன்னாள்: ""என்னால் முடியாது. என்னால் முடியவே முடியாது.''



அவளுடைய கணவர் வாசித்துக் கொண்டிருந்த பேப்பர்களைத் தரையில் போட்டுவிட்டு அவளையே பார்த்தார். அந்த வார்த்தைகள் தலை வேதனையைப்போல அவரைப் பாடாய்ப் படுத்தியது. "என்னால் முடியாது.' அவளுடைய மகள் சணலில் கட்டி இழுத்துக் கொண்டிருந்த சக்கரவண்டி திடீரென்று நின்றது. வேலைக்காரர்கள் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கு மத்தியில் திடுக்கிட்டு, தலையைத் திருப்பி, அந்த வார்த்தைகளை கவனமாகக் கேட்டார்கள். அவளுக்கு எதனால் முடியாமல் போனது? அவள் வீட்டு வேலை களைக்கூட செய்வதில்லையே! ஒரு விலை குறைவான ஆடையின் சுமையைக்கூட தாங்கக்கூடிய சூழ்நிலை அவளுக்கு இதுவரை உண்டானதில்லை. வெள்ளிப் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த பூந்தண்டுகளுக்கும் பட்டுத் தலையணைகளுக்கும் நடுவில் நின்று கொண்டு அவள் அந்த வார்த்தைகளை எதற்காகக் கூறினாள்? அன்று அவர்கள் யாருக்கும் அந்தக் கேள்விக்கு பதில் காண முடிய வில்லை. ஆனால் பிறகு கொஞ்சம் பணத்தைக் கொடுத்தவுடன், நகரத்தின் மிகச் சிறந்த இதய நிபுணர்களில் ஒருவர் அந்த பதிலை அவர்களுக்குப் பரிசாகத் தந்தார். வேறு என்ன? அவள் ஒரு இதய நோயாளி. அவ்வளவுதான். அவள் இனிமேல் படிகளில் ஏறக்கூடாது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு எந்தச் சமயத்தி லும் போகக் கூடாது. எப்போதும் ஓய்விலேயே இருக்க வேண்டும். எந்த அளவிற்கு சிறந்த ஒரு அறிவுரை! ஓய்வெடுக்க வேண்டும். பாத்திரத்தில் பறித்து வைத்த மலர்களைப்போல, நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாளை எதிர்பார்த்து, பொறுமையுடன், மன அமைதியுடன் ஓய்வெடுக்க வேண்டும்.

அந்த அழகான வீடு ஒரு வளர்ப்புத் தாயாக மாறியது. அது அவளிடம் முணுமுணுக்கக் கற்றுக்கொண்டது. தலையணைகள் இடப்பட்ட படுக்கைகள் அவளிடம் முணுமுணுத்தன: "உட்காரு.. ஓய்வெடு.' வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலி சொன்னது: "நிற்கக் கூடாது. இங்கு ஓய்வெடு.' அவள் ஓசை உண்டாக்காமல் அழுதாள். கண்ணீர் அவளுடைய மனதிற்குள் ஒரு மழையைப்போல விழுந்து கொண்டிருந்தது. பல நேரங்களில் அந்த விசாலமான வரவேற்பறையில் அங்குமிங்குமாக அவள் நடைபோட்டுக் கொண்டிருந்தாள். வேகமாக- எந்தவொரு காரணமும் இல்லாமல்- ஒரு அவசரத்துடன். தன்னுடைய வியர்த்துக் கொண்டிருந்த கால்களின் சலனத்தை இன்னொரு ஆளின் உதவி இல்லாமல் நிறுத்தத் தன்னால் முடியாது என்ற விஷயமும் அவளுக்குத் தெரிந்தி ருந்தது. அந்த பைத்தியம் பிடித்த சலனம் ஒரு இயந்திர பொம்மை யின் ஓட்டத்தைப்போல இருந்தது... வேறு சில நேரங்களில் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவள் தன்னுடைய தலைமுடியை கோபத்துடன் வாரிக்கொண்டிருந்தாள். வாருவது, வாருவது, பிறகும் கோபத்துடன் வாருவது. இறுதியில் அந்தத் தலைமுடிச் சுருள்கள் உயிருள்ள பாம்புகளைப்போல அவளுடைய தோள்களைத் தொட்டு, சீறி எழுந்துகொண்டு அந்த சிவந்த கன்னங்களில் மோதின.

""வேண்டாம்.''

அவளுடைய கணவர் சொன்னார்.

""என்ன?''

""இந்த சோர்வடையச் செய்தல்.''

""ஹா!''

அவளுடைய இந்தப் பழக்கம், சிரிப்பதற்கு பதிலாக "ஹ' என்று உச்சரிக்கும் குறும்புத்தனமான பழக்கம் புதிதாக அவளிடம் வந்து சேர்ந்திருந்தது. அது அவரை ஆழமாக வேதனை கொள்ளச் செய்தது. ஒரு காலத்தில் அதிகாலைப் பொழுதில் மெல்லிய வெளிச்சத்தைப் போல மென்மையாக இருந்த அவளுடைய சிரிப்பு இப்படி வடிவமெடுக்கும் அளவிற்கு என்ன நடந்தது? இந்தப் போலிச் சிரிப்பு, இந்த அவசரமான நடை, இந்த கோபத்துடன் தலை வாரும் செயல்- இவை அனைத்தும் அவனவனை அழிப்பதற்காக அவள் தயார் பண்ணும் ஆயுதங்கள்தானே? அவளை ஒரு தெய்வ விக்ரகத்தைப்போல தன்னுடைய எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டில் பிரதிஷ்டை செய்து, என்றென்றும் வழிபட அவர் தயாராக இருந்தார். ஆனால் அவளுக்கு ஒரு விக்ரகத்திடம் இருக்கும் அமைதியான குணம் இல்லை. அவள் அங்கும் இங்குமாக நடந்தாள். ஜன்னல் கதவுகளின் திரைச்சீலைகளை இழுத்து நகர்த்தினாள். ஆகாயத்தைப் பார்த்து நீண்ட பெருமூச்சை விட்டாள். வராந்தா வின் பலகைகளில் பலத்துடன் மிதித்தாள். கடலில் இருந்து காற்று வீசும்போதெல்லாம் வார்த்தைகளைப் பொறுக்கி எடுக்க முடியாத சில பாடல்களைப் பாடினாள்.

அப்படியே வருடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய மகள் நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு பதினாறு வயது பெண்ணாக இருந்தாள். மெலிந்து காணப்பட்ட அழகான தாய், சிறிய ரோமங்கள் உள்ள கன்னங்களையும் சதைப்பிடிப்பான கைகளையும் கால்களையும் கொண்டிருந்த மகளைப் பார்த்துப் பல விஷயங்களையும் சிந்திக்க ஆரம்பித்து விடுவாள். அவள் எப்படிப் பட்ட குணத்தைக் கொண்டவளாக இருக்கிறாள்? தன்னிடம் மட்டுமல்ல- அவளுடைய தந்தையிடம்கூட சிறிதும் நெருங்கிப் பழகுவதில்லை.

""நீ உஷாவின் வீட்டுக்குப் போயி குளிக்கலாம்ல?''

மகள் தலையை ஆட்டுவாள். தாய்க்கு மெல்லிய கோபம் வரும். அதற்குப் பிறகும் அவள் கேட்பாள்.

""உனக்கு தோழிகள் யாரும் இல்லையா? எப்போதும் இங்கே உட்கார்ந்து படிச்சிக்கிட்டே இருக்குறதா?''

மகள் எழுந்து தன்னுடைய படுக்கையறைக்குச் செல்வாள்.

சில நேரங்களில் வரவேற்பறையில் விருந்தாளிகளுடன் சேர்ந்து உட்கார்ந்து பல விஷயங்களையும் பற்றிப் பேசவும் சிரிக்கவும் செய்யும் தாய் திடீரென்று மகளை நினைப்பாள். பிறகு அவள் உள்ளே சென்று மகளின் அறைக் கதவைத் தட்டுவாள்.

கதவைத் திறக்கும்போது அந்தப் பெண்ணின் கன்னத்தில் மைக் கறைகள் இருக்கும். நகத்திலும் மை இருக்கும். தாய் கூறுவாள்:

""லீலா, நீ முன் அறையில் வந்து உட்கார்றியா? நான் அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.''

மகள் தலையை ஆட்டுவாள். ""வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்...''

""இந்தக் கூச்சம் உனக்கு நல்லது இல்லை. அதை மாற்றணும்.''

""எதற்கு?''

தாய் திரும்பிச் செல்வாள். இரவு நேரத்தில், மகள் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் ஒரு திருடியைப்போல ஓசை உண்டாக்காமல் சென்று, நிலவில் மூழ்கிய அந்த முகத்தையே அவள் பார்த்துக் கொண்டு நின்றிருப்பாள். ஒருமுறை அவள் பாய்ந்தோடிக் கொண்டிருந்த பாசத்தை அடக்கி நிறுத்த முடியாமல் அந்தப் பெண்ணின் பாதங்களை முத்தமிட்டாள். பாசம் மட்டுமா அது? அல்லது குற்ற உணர்வா? அவளாலேயே அந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் காண முடியவில்லை. தான் தன் மகள்மீது பாசம் வைத்திருக்கவில்லையா? தன் இதயம் எந்தச் சமயத்திலும் அந்தப் பெண்ணிடம் கீழ்ப்படிந்து நடந்ததில்லையா? பாசம்! உண்மை யிலேயே தான் பாசம் வைத்திருந்தது யார்மீது? தான் பிறந்தவுடன் மரணத்தைத் தழுவிய தாயிடமா? பதினைந்து வயதிலேயே ஒரு மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுத்து திருப்தியடைந்த தந்தையிடமா? இல்லை... ஒருவேளை தன் இதயம் அதன் தேவை களை மறந்துவிட்டு, தரிசாகக் கிடந்து கொண்டிருக்க வேண்டும்.

""என் செல்ல மகளே''- அவள் அந்தக் கால்களை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். ""என்னை மன்னிச்சிடு. எனக்கு எப்படி அன்பாக இருப்பது என்பதைச் சொல்லிக்கொடு.'' மகள் அசையவில்லை. கண்களைத் திறக்கவேயில்லை. ஆனால், மறு நாளிலிருந்து அவள் தன்னுடைய படுக்கையறையின் கதவைப் பூட்டத் தொடங்கினாள். அந்தப் பூட்டப்பட்ட கதவு தாயின் இதயத்தை ஒரேயடியாக நொறுங்கச் செய்தது. அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கும்போது கண்கள் ஒன்றோடொன்று சந்திப்பதில்லை. தேர்வு முடிவுகள் வெளியானபோது, மகள் மிகவும் தூரத்திலிருந்த இன்னொரு நகரத்தில் இருந்த கல்லூரியில் சேர்ந்தாள். ஹாஸ்டலுக்குப் பெட்டிகளுடன் செல்லும் மகளை வழியனுப்பியவாறு தாய் சொன்னாள்:

""எல்லா வாரமும் எனக்குக் கடிதம் எழுதணும்.''

""ம்...''

தொடர்ந்து தாயின் கையைப் பிடித்துக் குலுக்கிய அந்தப் பெண் கேட்டிற்கு அருகில் சிவந்த கண்களுடன் நின்று கொண்டிருந்த வயதான வேலைக்காரிக் கிழவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விடை பெற்றாள்.

தாயின் தொண்டையில் ஒரு பதைபதைப்பு உண்டானது. தான் தலை சாய்ந்து தரையில் விழப் போவதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவள் மெதுவாக சுவர்களைப் பிடித்து நடந்து கொண்டே படுக்கையறைக்குள் போய் விழுந்தாள். மங்கலான வெளிச்சத்தில் நீரைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்த நிலைக் கண்ணாடியிடமும், உயிரற்ற மலர்களிடமும், தன்னுடைய சில்க் தலையணையிடமும் அவள் கெஞ்சினாள்: ""என்மீது அன்பு செலுத்து... தயவு செய்து என்மீது அன்பு செலுத்து...''

இப்படியே நாட்கள் கடந்து சென்றன. மாதங்கள் கடந்தன. அவளுடைய உடலில் சற்று சதைப்பிடித்தது. ஆனால் அந்தக் கண்கள் மேலும் பெரிதாயின. உதடுகள் வெளிறிப்போய்க் காணப்பட்டன. அவள் முகத்தில் இளஞ்சிவப்புநிற சாயங்களைத் தேய்த்து அழகை அதிகப்படுத்தினாள். அந்தக் கண்ணாடிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு அவள் தன்னுடைய கணவரிடம் கேட்டாள்:

""நான் அழகிதானே?''

அவர் எதுவும் சொல்லவில்லை. அவளுடைய நடவடிக்கைகளில் மனக் குழப்பத்தின் அடையாளங்கள் இருப்பதை அவர் கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தார். அவள் கூறிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் முப்பது வயதைத் தாண்டிய ஒரு பெண் கூறக்கூடிய வார்த்தைகளா? "எனக்குப் பயமா இருக்கு... என்மீது யாருக்கும் அன்பு இல்லை... எனக்குத் துங்குறதுக்கு பயமா இருக்கு...'- இப்படி சிறிய குழந்தைகளைப்போல ஒவ்வொன்றையும் புலம்பிக் கொண்டு அவள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

விடுமுறையில் வீட்டிற்கு வந்த மகளுடன் சேர்ந்து தோட்டத்தில் இருந்துகொண்டு தந்தை தளர்ந்துபோன குரலில் சொன்னார்:

""உன்னுடைய தாய்க்கு சோர்வே இல்லாத காலம்... இடையில் அவ்வப்போது வெளியே போவது உண்டு. போன சனிக்கிழமை திரைப்படம் பார்க்கப் போனாள்...''

""அம்மாவா?''

""ம்...''

மகள் ஒரு செடியின் இலைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டே சிரித்தாள்.

""அப்பா, நீங்க வற்புறுத்தி அழைச்சிட்டுப் போயிருப்பீங்க. அப்படித்தானே?''

""நானா? நான் எங்கேயும் போகல. மூன்று மாதங்கள் இந்தியாவில் இருப்பதற்காக வந்திருக்கும் அந்த பிலிப்பினோவைப் பற்றி நான் சொன்னேன்ல? அவன்தான் அம்மாவைக் கட்டாயப்படுத்தி அழைச்சிட்டுப் போனான்.''

""அப்படியா?''

அதற்குப் பிறகு சில நிமிடங்களுக்கு அவர்கள் ஒருவரோ டொருவர் எதுவும் பேசவில்லை. தோட்டக்காரன் ஒரு மூலையில் நின்றுகொண்டு ஒரு கரையைப்போல வளர்ந்து விட்டிருந்த மருதாணிச் செடிகளின் மேற்பகுதிகளைப் பெரிய கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தான்.

""அப்பா, உங்களுடைய அசோகா மரம் வளர்ந்து வருகிறது. இல்லையா?''

மகள் கேட்டாள். தந்தை புன்னகைத்தார்.

""நான் நல்ல மழை பெய்த நாட்களில் அந்தச் செடியை ஒரு பந்தலுக்குக் கீழே நிற்கச் செய்து மேலே க்யான்வாஸ் இட்டேன்.''

அந்த வகையில் மாலை நேரத்து பொன்நிற வெயிலில் அவர் களுடைய தோட்டத்தில் அமர்ந்துகொண்டு மரங்களைப் பற்றியும் மலர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தபோதுதான், குல்ட்டியானோ என்ற மனிதனை லீலா முதல் முறையாகப் பார்த்தாள். அவன் கேட்டைக் கடந்து அவர்களைப் பார்த்தவாறு ஒரு நிமிடம் அசைவே இல்லாமல் நின்றிருந்தான். தொடர்ந்து தன்னைத்தானே சுய உணர்விற்குக் கொண்டு வருவதைப்போல தலையைத் தட்டியவாறு புன்னகைத்தான்.

""வாங்க குல்ட்டியானோ''- தந்தை சொன்னார்: ""வாங்க. என் மகளிடம் அறிமுகமாகிக் கொள்ளுங்கள்.'' அவன் புல்பரப்பின் வழியாக அகன்ற காலடிகளுடன் நடந்தான். பிலிப்பைன் தீவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அளவிற்கு உயரம் இருக்கும் என்று லீலா நினைத்திருக்கவில்லை. சிறிய கண்களையும் வட்ட முகத்தையும் சிறிய சதைப்பிடிப்பான கைகளையும் கால்களையும் கொண்ட ஒரு மஞ்சள் நிறத் தோலைக் கொண்ட மனிதனைத்தான் அவள் எதிர் பார்த்திருந்தாள். அவள் அவனுடைய முகத்திலிருந்து தன்னுடைய கண்களை பதைபதைப்புடன் பின்னோக்கி எடுத்து தன் வலது கையை நீட்டினாள். தன்னுடைய உள்ளங்கை காரணமே இல்லாமல் வியர்த்துக் கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள்.

உரையாடிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் பல தடவை குல்ட்டியானோ மேலே வராந்தாவை நோக்கிப் பார்ப்பதை லீலா பார்த்தாள். சற்று நேரம் தாண்டியதும், அவன் எழுந்து நின்று உரத்த குரலில் அழைத்தான்:

""இந்திரா... கீழே வாங்க''- தாயின் படுக்கையறைக்குள்ளிருந்து அந்த புகழ்பெற்ற உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்த அளவிற்கு இனிமையாக- அந்த அளவிற்கு லாவகத்துடன் சத்தம் போட்டுச் சிரிக்க முடிந்த தன் தாய்மீது லீலாவிற்குக் கடினமான பொறாமை தோன்றியது. தாயின் வசீகர சக்திகளுக்கு எந்தச் சமயத்திலும் குறைவு என்பதே இருக்காதா? எப்போதும் வரவேற்பறையில், பொன்னைப்போல மின்னிக் கொண்டிருக்கும் தன்னுடைய தாயின் அருகில் ஒரு போலி நகையைப்போல அவமானச் சுமையைச் சகித்துக்கொண்டு தான் வாழவேண்டியதிருக்குமோ? அவளுடைய கை நகங்கள் பிரம்பு நாற்காலியின் கைகளில் அழுத்தின.

அவளுடைய தாய் நீலநிறப் பட்டுப் புடவையின் ஒவ்வொரு மடிப்புகளுடனும் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது, குல்ட்டி யானோ ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் எழுந்து நின்றான். அவளுடைய அன்னைக்கு நாற்காலியை இழுத்துப் போடும்போதும், தாயின் தலைக்குப் பின்னால் பட்டுத் தலையணையை வைக்கும் போதும் அவனுடைய கைகள் சற்று நடுங்குவதை லீலா கண்டுபிடித்தாள். அதன் அர்த்தம் என்ன? அவனும் அவளுடைய தாயை வழிபட ஆரம்பித்துவிட்டானா? "ஓ... அப்பாவி மனிதர்களே' என்று கூறவேண்டும்போல அவளுக்கு இருந்தது. "கண்களை விழித்துப் பாருங்க... இந்த பவுடர் பூசிய, சாயம் தேய்த்திருக்கும் பெண் ஒரு தேவதை அல்ல. சுயநலம் கொண்ட ஒரு பெண்... அவ்வளவுதான். அவளுக்கு இதய நோயும் இல்லை. அவளுக்கு அழகும் இல்லை. அவளுடைய இதயத்தில் வேறு யாருக்கும் இடமில்லை.' ஆனால் லீலா பேசாமல் உட்கார்ந்துகொண்டு தன்னுடைய கைகளின் நகங்களைக் கடித்து, கீழே உதிர்த்தாள்- விரல் நுனிகளில் ஆழமாகப் பதிந்திருந்த, மை தோய்ந்த தன்னுடைய கை நகங்களை.

அன்றைய நாளின் நிறமே நீலமாக இருந்தது. ஆகாயத்தில் தனியாக நின்றிருந்த மேகத் துண்டை நீக்கினால், கண்கள் போய்ச் சேரும் எல்லா இடங்களிலும் நீலநிறம்தான் தெரிந்தது. நீல ஓரங்களைக் கொண்ட நீலக் கடல்... நீலநிறப் புடவை... நீலநிறச் சங்கு மலர்கள்...

""பாருங்க... என்னுடைய பருந்து...''

அவளுடைய தாய் சொன்னாள். எல்லாரும் மேலே பார்த்தார் கள். அந்தப் பறவை ஒரு நடனப் பெண் தன்னுடைய கைகளை விரித்திருப்பதைப்போல சிறகுகளை விரித்துக்கொண்டு ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. முதலில் சிறிய வட்டங்கள். பிறகு பெரிய வட்டங்களாக ஆயின. பிறகு, ஆகாயத்தை தன்னுடைய பலம் கொண்ட சிறகுகளால் கிழித்தவாறு அது தூர தூரமாக எங்கோ பறந்து சென்றது. அதன் அழுகைச் சத்தம் நீண்ட நேரம் லீலாவின் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது.

""ஒருநாள் நான் அதைப் பிடிப்பேன்''- அவளுடைய அன்னை சொன்னாள்.

""எதற்கு?''

குல்ட்டியானோ அவளுடைய தாய்க்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு மீண்டும் கேட்டான்:

""எதற்கு? அந்தப் பருந்தை எதற்காகப் பிடிக்க வேண்டும்?''

""அதை என்னுடைய வராந்தாவில் இருக்கும் கம்பிகளில் நான் கட்டிப் போடணும்- ஒரு கைதியைப்போல. நான் அதை வெறுக்கிறேன்.''

""ஹா... ஹா... வெறுக்கப்படுபவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து கைதிகளாக எதற்கு ஆக்க வேண்டும்? அன்பு கொண்டவர்களைக் கட்டிப் போட்டதில் திருப்தியடைய முடியவில்லையா?''

அவளுடைய தாய் எழுந்து நின்றாள். ""எனக்கு முடியல. நான் மேலே போய் படுக்கட்டுமா?''

யாரும் தடுக்கவில்லை. தடுத்தால் நிற்கக்கூடிய ஒருத்தியல்ல அவள் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும்.

"மிஸ்டர் குல்ட்டியானோவிற்கு,

என் பிரியமான பெப்பே, நான் உன்னை நம்புவதற்கு எந்த அளவிற்கு முயற்சிக்கிறேன் என்பதற்கான ஆதாரம்தான் இந்தக் கடிதம். இதோடு சேர்த்து நான் என்னுடைய வாழ்க்கையையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனினும் எனக்குள்ளிருந்து, விவேகத்தை விடாத ஏதோவொன்று என்னிடம் முணுமுணுக்கிறது- இப்போது செய்வது ஒரு தவறு என்று. ஆனால் தவறுகளைப் பற்றி நான் எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? உன்னைக் காதலிக்கத் தொடங்கியதுதானே எனக்கு உண்டான பைத்தியம் பிடிக்கச் செய்த தவறு? இனி என்னவெல்லாம் நடக்கும்? நீ என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி என் பெயர் கேலிக்கு உரியதாகத் தாழ்ந்து போய்விட்டாலும்கூட, எனக்கு அவமானங்களில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி தெரியும். நீ தந்த கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அந்த இடத்தில் இருக்கும் நரம்புகளைத் துண்டிப்பது... எவ்வளவு எளிதான ஒரு தப்பித்தல்!

என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக நான் காதலை உணர்கிறேன். நான் நினைத்திருந்ததைப்போல ஒன்றும் இது இல்லை. இதை எதிர்த்து நிற்பதற்கான பலம் எனக்கு இல்லாமல் போயிருக்கிறது. கால்கள் இறங்கிச் செல்லும் ஒரு சதுப்பு நிலத்தில் வந்து நான் சிக்கிக் கொண்டதைப்போல எனக்குத் தோன்றுகிறது. என்னால் இனிமேல் என்ன செய்ய முடியும்? நீ பிடித்து இழுத்துக் கொண்டு போகும் அந்த அடித்தட்டை நோக்கித் தாழ்ந்து தாழ்ந்து போவதைத் தவிர... நான் உன்னைக் காதலிக்கிறேன். கவலையின் ரேகைகள் தெரிந்து கொண்டிருக்கும் உன்னுடைய சிறிய கண்கள்... என் காதுகளில் நீ முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்த வார்த்தைகள்... என் உடம்பெங்கும் ஓடிக் கொண்டிருந்த அந்த மினுமினுப்பான விரல் நுனிகள்... எல்லாம் எல்லாம் என் செல்லமே, நீ என்ன ஒரு பாம்பா? மார்போடு சேர்ந்து சுருண்டு படுத்துக் கொண்டு நீ கொல்லப் புறப்பட்டிருக்கிறாயா? காடுகளில் பெரிய மரங்களுக்கு மத்தியில் ஓடித் திரிந்த ஒரு மிருகமா நீ? உனக்கு வேதனையைத் தர மட்டும்தான் தெரியுமா? நான் இந்த சக்தியை வேறு எங்கும் பார்த்ததில்லை. நீ என்னைத் தொடும்போது வெறும் புனிதமான வழிபாடாகவே நீ தெரிகிறாய். இவையனைத்தும் ஒரு நடிப்பு மட்டுமே என்றால், நான் அந்த நடிப்பிற்காக நன்றி கூறுகிறேன். நீ என்னைப் பார்த்தவாறு அசாதாரணமான ஒரு அழுகையுடன் என்னைக் கட்டிப்பிடித்து அணைக்கும்போது நான் என்னைப் பற்றிய நினைப்பையே மறந்துவிடுகிறேன். என்னுடைய அனைத்து வெட்கங்களையும் மறக்கிறேன். வெட்கத்தின் ஒரு எல்லைகூட என்னுடைய உடலில் எஞ்சி இருக்கவில்லை. மிகச் சிறந்த ஒரு பாடகனின் கையில் சிக்கிய ஒரு வீணைக்கு ஒருவேளை என்னுடைய அனுபவங்கள் புரிந்திருக்கலாம். பெப்பே, என் பிரியமான, பிரியமான பெப்பே, நீ என்னை வெறுமனே விட்டிருக்க லாமே? பூக்களுடனும் புத்தகங்களுடனும் நான் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு இருந்திருப்பேன்- வேதனை தெரியாமல். நீ என்னுடைய இதயத்தை ஒரு குழந்தையின் இரக்கமற்ற தன்மை யுடன் தட்டிப் பறித்துவிட்டாய். அதற்குப் பிறகு நீ என்னிடம் விடைபெற்றுப் போவதற்குத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாய். உனக்கு இது இன்னொரு லாபம் மட்டுமே. உன் இதயம் அணிந்து கொண்டிருக்கும் அந்த மண்டையோடுகளின் மாலையில் சேர்ப்பதற்கு இன்னொரு மரணம். ஆனால் என்னுடைய இதயம் சிறகற்ற பறவையைப்போல கிடந்து துடிக்கிறது. அது கடவுளிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களே இல்லை. சிறகுகளின் சத்தம் கேட்கவில்லையா? முடிவே இல்லாமல் நீண்டு நீண்டு போய்க் கொண்டிருக்கும் அந்த சிறகடிப்புகள்? வேதனையின் அர்த்த மில்லாத, தேவையற்ற அந்த சிறிய அழுகைச் சத்தங்கள்?

நீ ஒரு கடிதத்தை விருப்பப்பட்டாய். அது இதோ. இதனால் உனக்கு என்ன பயன்? ஒருவேளை நீ சிரிக்கும் உதடுகளைக் கொண்ட உன்னுடைய சம வயதுக்காரர்களிடம் காட்டலாம். உங்களுடைய வார்த்தைகள் என் பெயரைக் குத்திக் காயப்படுத்த லாம். நீ எப்போதும் வளர்ச்சி அடையாத ஒரு குழந்தையே. அதனால் என்னுடைய இந்த வேதனையும் உன்னுடைய இன்னொரு விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருக்கும்

காதலுடன்,
- சொந்தம்
இந்திரா.'

கடிதத்தை வாசித்து முடித்தபோது தன்னுடைய கண்கள் திடீரென்று ஈரமாகப் போகின்றன என்று அவனுக்குத் தோன்றியது. ச்சே.... தான் எந்த அளவிற்குக் கேவலமான ஒரு மனிதனாக இருக்கிறோம்! தான் எதற்கு இந்த அளவிற்குப் பேரழகு படைத்த ஒரு பெண்ணை இவ்வளவு வேதனைப்படச் செய்திருக்க வேண்டும்? உரலுக்குள் தலையிட்டதைப் போன்ற ஒரு தோணல். அவன் வேகமாகக் குளித்து முடித்து, ஆடைகளை மாற்றி, கோட்டில் ஒரு சிவப்புநிற மலரை அணிந்து வெளியேறினான்.

வால்காவில், அந்த இரவு வேளையில் ஆட்கள் அதிகமாக இல்லை. அவன் தூணுக்கு அருகிலிருந்த ஒரு மேஜைக்கு அருகில் அமர்ந்து உணவை வரவழைத்தான். அவனுடைய இடப் பக்கத்தில் பத்தடிகள் தாண்டி இரண்டு கைகளிலும் மைக்ரோஃபோனைப் பிடித்துக் கொண்டு ஒரு அழகான பெண் பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். பாடலுக்கேற்றபடி இடுப்பையும் தோள்களையும் குலுக்கும் போதெல்லாம் அவளுடைய பொன் நிறத்தில் இருந்த மேலாடை மினுமினுத்துக் கொண்டிருந்தது. ""ஓ... ஓ... ஓ... என்னை விட்டுப் போகாதே'' என்று அவள் ஆங்கிலத்தில் பாடிக் கொண்டி ருந்தாள். ""வரப் போகும் இரவிற்கு நான் பயப்படுகிறேன்''- அவளுடைய குரல் ஒரு சங்கைப்போல முழங்கிக் கொண்டிருந்தது. குல்ட்டியானோ சற்று வெறுப்புடன் அவளிடமிருந்து பார்வையை விலக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான். இடையில் அவள் அவ்வப்போது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக நடந்து கொண்டிருந்தாள். அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த இரண்டு ஆப்பிரிக்க மாணவர்கள் அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குல்ட்டியானோ உணவு சாப்பிடுவதற்கு மத்தியில் அவ்வப்போது தன்னுடைய பாக்கெட்டிற்குள் கையை விட்டு, அந்த கடிதத்தைத் தொட்டுக் கொண்டேயிருந்தான். பக்கத்து மேஜைக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்த இளைஞர்களுக்கிடையே இருந்த ஒரு சிவப்புநிறப் பாவாடை அணிந்த கோவாவைச் சேர்ந்த பெண் அவனைச் சுட்டிக் காட்டி, ஒரு உயிரற்ற வெறும் சிரிப்பை உதிர்த்தாள். அவன் அது எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அதைப் பற்றிக் கேட்கவும் இல்லை. "நான் உன்னைக் காதலிக்கிறேன்... நான் உன்னைக் காதலிக்கிறேன்'- அந்த வார்த்தைகள் ஒரு சோர்ந்துபோன இதயத்தின் துடிப்புகளைப்போல அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன.

""என் அறைக்குள் இருள் பரவத் தொடங்கிவிட்டது. ஓ... ஓ.... ஓ... என்னை விட்டுப் போகாதே''- பாடகி பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய மார்பகங்களின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே குல்ட்டியானோ நினைத்தான்: "எனக்கு என்னவோ நடந்திருக்கு. இது காதலாக இருக்குமோ?'

பாடகி பாடலை நிறுத்திவிட்டு அவனுடைய மேஜையின் வழியாக நீர் குடிப்பதற்காகவோ வேறு எதற்காகவோ உள்ளே சென்றாள். போகும்போது அவனைப் பார்த்து சிவந்த உதடுகளை நீட்டிச் சிரித்தாள். அவன் வெறுப்புடன் எழுந்து வால்காவின் கதவைத் தள்ளித் திறந்து தெருவின் மங்கலான இருட்டிற்குள் நடந்தான்.

""இல்லை... நான் முடிவு செய்தாகிவிட்டது''- அவன் தன் தோள்மீது தலையைச் சாய்த்துப் படுத்திருந்த பெண்ணிடம் சொன்னான்: ""ஒன்று- நீ என்னுடன் மணிலாவிற்கு வரணும். இல்லாவிட்டால்...''

""என் முட்டாளே! நீ என்ன சொல்றே? மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கும் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கை யாளனிடம் நான் வீட்டையும் குடும்பத்தையும் உதறிவிட்டு வருவதா?''

அவன் அவளுடைய உள்ளங்கையை விரல் நுனிகளால் செல்லமாக வருடினான்.

""ம்... சரிதான்... நான் ஒரு வழி கண்டுபிடிக்கிறேன். நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்கு இதை வேண்டாம் என்று கூற முடியவில்லை.''

""எதை?''

""இந்தக் காதலை...''

""என் பாவம்... அப்பிராணிக் குழந்தை!''- அவள் முணுமுணுத்தாள்.

அன்று இரவில், தன்னுடைய கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு தலைமுடியை வாரும்போது, இந்திரா அறையின் கதவுக்கு அருகில் தயங்கியவாறு நின்று கொண்டிருந்த தன் மகளின் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.

""என்ன லீலா?''- அவள் திரும்பிப் பார்க்காமல் கேட்டாள்.

""நான் ஒரு விஷயம் சொல்லணும்.''

""என்ன?''

""நான் இன்னைக்கு சாயங்காலம் கடற்கரைக்கு நடப்பதற்காகப் போயிருந்தபோது உங்களைப் பார்த்தேன். உங்களையும்...''

""குல்ட்டியானோவையும்... அப்படித்தானே?''

""ஆமாம்...''- லீலாவின் முகம் மிகவும் வெளிறிப் போய் இருந்தது. ""பார்த்துட்டேல்ல...! நாங்கள் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவேளை கேட்டிருக்கலாம். அதனால் இனிமேல் கூறுவதற்கு எதுவும் இல்லையே! நான் எதையும் மறைத்து வைக்கக் கற்றுக்கொள்ளவில்லை லீலா.''

""அம்மா, நீங்க எதற்காக அந்த ஆளை ஏமாத்துறீங்க?''

""ஏமாத்துகிறேனா?''

""ஆமாம்...''- அவளுடைய குரல் திடீரென்று கனமானது. ""அப்பாவை ஏமாற்றினது மாதிரியே ஏமாத்துறீங்க. காதலிக்கிறதா சொல்லி அடிமை ஆக்குறது...''

""நான் உன் அப்பாவை ஏமாற்றினேனா? இல்லை, மகளே. நான் எந்தவொரு சமயத்திலும் அவரிடம் காதலிக்கிறதா சொன்னதே இல்லை. நான் பொய் சொன்னது இல்லை. நீ நம்பல. அப்படித் தானே?''

""மோசமான பெண்!''

""அப்படிச் சொல்லாதே லீலா.''

""நீங்க மோசமான பெண்தான். உங்கக்கிட்ட மோசமான விஷயங்களைத் தவிர வேற எதுவும் இல்லை. இந்த உடல்நலக் குறைவும் இந்த அழகும் இந்த வாழ்க்கையும்... எல்லாமே பொய்யானவை. உங்களுடைய வாழ்க்கைக்கு பத்தாயிரம் முகங்கள் இருக்கின்றன. நீங்கள் இறக்கணும்னுகூட நான் வேண்டிக்கிறேன். ஆமாம்... இறக்கணும்னு... இறந்து போகணும்னு...''

அவள் தரையில் அமர்ந்து தன்னுடைய தலையை முழங்கால் களுக்கு மத்தியில் வைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

இந்திரா தன்னுடைய தலைமுடியை வேகமாகக் கட்டி முடித்து ஸ்டூலை விட்டு எழுந்தாள். அவள் தன் மகளின் தோள்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டே கேட்டாள்:

""உனக்கு என்ன ஆச்சு?''

""தொடாதீங்க... தொடாதீங்க''- லீலா அழுதாள். ""என்னைத் தொடக்கூடாது. இனிமேல் நான் உங்க முகத்தைப் பார்க்கவே விரும்பல. இதுவரை நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டேன். நீங்க தேர்ந்தெடுத்த ஆடைகளை மட்டும் அணிந்தேன். நீங்க தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினேன். நீங்க அழைக்கும்போது வருவேன். போகச் சொல்றப்போ போவேன். நீங்க என் தாய் இல்லை. எஜமானி... எனக்கு வாழ்றதுக்கு சுதந்திரம் வேணும். எனக்கு சு...தந்...திரம்...''- அவளுடைய அழுகைச் சத்தம் மேலும் அதிகமானது.

இந்திரா அவளை முத்தமிட்டவாறு கேட்டாள்: ""நீ அந்த ஆளைக் காதலிக்கிறே... அப்படித்தானே?''

லீலா தலையைக் குலுக்கினாள்.

""இனிமேல் நீ அந்த ஆளைப் பார்க்கக்கூடாது. அந்த ஆள் இங்கே வந்தால் நீ உன்னுடைய அறையை விட்டு வெளியே வரக்கூடாது.''

""என்னால பார்க்காமல் இருக்க முடியாது. நான் அவரைக் காதலிக் கிறேன். நான் எப்போதும்... எப்போதும்... அவரைப் பற்றி மட்டுமே நினைக்கிறேன்.''

""நீ இதையெல்லாம் மறந்திடுவே. நீ சின்னக் குழந்தை. இந்த வயதில் உனக்குக் காதல் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால் கொஞ்சம் பெரியவளா ஆனால்...''

""பெரியவளா ஆனால்?''

""பிறகு... காதலை மறக்க நமக்கு சக்தி இல்லாம ஆயிடும். வாழ்க்கையின் அர்த்தமே அதுதான் என்றாகிவிடும். ஒரு ஆணின் சிரிப்பு, ஒரு பார்வை...''

""அம்மா.''

""என்ன?''

""நான் அவரோட மனைவியாக ஆகணும்.''

""ச்சே... லீலா, நீ எப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்கே! அந்த ஆளுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்காங்க.''

""அவங்களை விட்டுட்டு வரக்கூடாதா?''

""முடியாது... அந்த ஆளின் இனத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விவாகரத்து என்ற ஒரு விஷயம் இல்லை.''

""அம்மா, நான் என்ன செய்யணும்?''

லீலா தன் தாயின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். திறந்திருந்த ஜன்னல் வழியாக ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை இந்திரா பார்த்தாள்.

""மகளே...''

""ம்...''

""அந்தப் பருந்தைப் பாரு. நாம் அதைப் பிடிக்கணும். பிறகு அதை வராந்தாவில் சங்கிலியில் கட்டிப் போடணும். பிறகு... அதை பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தி கொடுமைப்படுத்தி, இறுதியில் கொல்லணும்... சரியா?''

லீலா பயத்துடன் தன் தாயின் முகத்தையே பார்த்தாள். அவள் திடீரென்று பிடியை விட்டு, அறைக்கு வெளியே ஓடினாள். அன்னை அழகாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

இந்தியாவிலிருந்து திரும்பி வருவதற்கு முந்தைய நாள், குல்ட்டியானோ ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு அவர்களின் வீட்டிற்குச் சென்றான். அவனுடைய முகம் எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாமலிருந்தது. கேமராவை விட்டு கண்களை உயர்த்துவதற்கே அவன் தயங்கினான்.

தேநீருக்குப் பிறகு அவன் சொன்னான்: ""இனி தோட்டத்திற்குச் சென்று சில புகைப்படங்கள் எடுப்போம். லீலா நீயும் இருக்கணும்.''

தன்னுடைய தலை முடிச் சுருள்களுக்குள் கைவிரல்களைச் செலுத்தியவாறு கவலையுடன் நின்றிருந்த லீலா தலையை ஆட்டினாள்.

""லீலா, நீ இல்லாமல் சரியாக இருக்காது.''

""என் புகைப்படம் வேண்டாம்.''

""அது ஏன்? அம்மாவின் அருகில் அமர்ந்திருக்கிற ஒரு புகைப்படம்...''

""அப்படியொரு புகைப்படம் வேண்டாம்.''

""என்ன?''

""வேண்டாம்...''- அவள் தன் கை நகங்களைக் கடித்துக்கொண்டே அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாய், கணவனிடம் என்னவோ கூறிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அன்று தோட்டத்தில் அவள் தந்தை கண்களை மூடிக்கொண்டு தூங்கத் தொடங்கியவுடன், குல்ட்டியானோ தீவிரமான விஷயங் களை நோக்கிப் பேச்சைத் திருப்பினான். லீலா புல்லில் அமர்ந்தவாறு, கடலின் வெள்ளைநிறக் கரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

""நம்பிக்கை இல்லையென்றால் அங்கு உண்மையான காதல் இல்லை என்று நான் நினைக்கிறேன்.''

குல்ட்டியானோ சொன்னான்: ""அது உங்களால் காதலைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாததால் தோன்றுகிற விஷயம். வேறு எந்த உணர்ச்சியையும் தொட்டு உரசிக் கொண்டு அது நிற்கவில்லை. அது கலப்படமில்லாத, நட்பு இல்லாத தனிமையாக இருக்கும் ஒன்று. அது புனிதமானது. அது வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டியதே இல்லை...''

தன் தாயின் குரலில் கண்ணீரின் வெளிப்பாடு இருக்கிறதோ என்று லீலா சந்தேகப்பட்டாள். ஏய்... இல்லை... அவள் என்ன அழகாக சிரிக்கிறாள்! மலர்களின் இதழ்கள் காற்றில் பறந்து விழுவதைப்போல அவளுடைய புன்சிரிப்பு தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

""எனக்கு அது எதுவும் புரியவில்லை. எவ்வளவோ பழமையான, இயல்பான ஒரு விஷயம் அன்பு, காதல் என்பதுதான் என்னுடைய கருத்து. ஒருவனைக் காண வேண்டும் என்று தோன்றுவது... ஒருவனுக்காகத் தன்னையே சமர்ப்பிப்பது... அப்படிப்பட்ட அன்பை மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.''

அவனுடைய வார்த்தைகள் வெறுப்பு கலந்தவையாக இருந்தன. மாலை நேர வெளிச்சத்தில் அவனுடைய உடல் யானையின் தந்தத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு சிலையைப்போல அழகாக இருந்தது. லீலா கண்களை எடுக்காமலே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அவளுடைய மனம் அந்தக் கண்களின் வழியாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் எதையும் பார்க்கவில்லை. பார்த்தே இருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

""இல்லை... நான் காதலுடன் அழிந்துபோக விரும்பவில்லை. காதலைத் தந்த பிறகும் நான் எஞ்சி இருக்க வேண்டுமா?''- தொடர்ந்து மீண்டும் காரணமே இல்லாமல் அந்தத் தொடர் சிரிப்பு அந்த மாலை நேரத்தில் கேட்டுக் கொண்டேயிருந்தது.

சிறிது நேரம் தாண்டியவுடன், அவளுடைய தாய் சொன்னாள்:

""லீலா, இப்போ நீ எழுந்து போய் எதையாவது படி.''

""நான் படிப்பதற்கு எதுவும் இல்லை.''

""அப்படின்னா போய் முகத்தைக் கழுவி சுத்தமா இரு.''

""என்னுடைய முகம் கழுவுவதால் வெளுத்துப் போவதோ அழகாக ஆகப் போவதோ இல்லை. இந்த நிறம் சதிவலையைப் போன்றது. அதிலிருந்து தப்புவதற்கும் முடியவில்லை.''

""ஆ... லீலா! எவ்வளவு அழகாகப் பேசுகிறாள் இவள்!''

குல்ட்டியானோ எழுந்து அவளுக்கு அருகில் சென்றான். காரணமே இல்லாமல் வியர்ப்பதாக லீலா உணர்ந்தாள். அவளுக்கு திடீரென்று அழுகை வந்தது.

""லீலா, ஏன் அழுறே?''

""உங்களைப் பிரிந்திருக்க என்னால் முடியாது... இது உண்மை.''

குல்ட்டியானோ பதைபதைத்துப் போய்விட்டான்.

""லீலா....''- அவளுடைய தாய் உரத்த குரலில் அழைத்தாள்: ""இங்கே யிருந்து போ. வாய்க்கு வந்ததைப் பேசிக்கிட்டு இருக்காதே. இல்லா விட்டால் நான் அப்பாவை எழுப்பி இதையெல்லாம் சொல்லிடுவேன். குல்ட்டியானோ, இவள் ஒரு பைத்தியக்காரி. எதைச் சொல்லணும்னு தெரியல. பதினாறு வயது தாண்டியும் சின்னக் குழந்தையைப்போல ஒவ்வொண்ணையும் புலம்பிக்கிட்டு இருக்கிறா.''

லீலா எழுந்து தன்னுடைய புடவையின் தலைப்பால் முகத்தைத் துடைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றாள். கடலின் அலைகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்த பருந்து மீண்டும் மீண்டும் தேம்பி அழுதுகொண்டிருப்பதைப்போல அவள் உணர்ந்தாள்.

அவன் ஹோட்டலுக்குத் திரும்பி வந்தபோது மணி பன்னிரண்டை நெருங்கி விட்டிருந்தது. கடற்கரையில் நடந்த நீண்ட நடை அவனை மிகவும் களைப்படையச் செய்திருந்தது. அறையின் கதவைத் திறந்து விளக்கைப் போட்டவுடன், தன்னுடைய கட்டிலில் சாய்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டான்.

""என் தெய்வமே... லீலா!''

அவன் கோட்டைக் கழற்றி ஒரு நாற்காலியின்மீது எறிந்துவிட்டு ஓசை உண்டாக்காமல் கட்டிலை நோக்கி நடந்தான். அவள் மலர்ந்த உதடுகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய புருவங் களின் கறுப்பு நிறத்தையும் அந்தக் கன்னங்களின் அழகையும் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் அமைதியாக நிற்காமல் இருக்க அவனால் முடியவில்லை. என்ன காரணத்தாலோ- கடந்துபோன ஒரு காலத்தில், தான் மெலிந்துபோன கால்களைக் கொண்ட ஒரு சிறுவனாக இருந்தபோது ஒரு மரத்தின்மீது ஏறி, ஒரு பறவைக் கூட்டைப் பார்த்தது அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதில் இளம் நீலநிறத்தில் மூன்று முட்டைகள் இருந்தன. அவன் அவற்றைத் தொட்டான். ஆனால் எடுப்பதற்கு மனம் வரவில்லை.... அவன் கட்டிலில் உட்கார்ந்தான். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் கை விரல்களை முத்தமிட்டான். அவள் கண் விழிக்கவில்லை. "என்னை மன்னிச்சிடு.. என்னை மன்னிச்சிடு...'

- அவன் தனக்குள் மெதுவான குரலில் கூறினான்: "என் மனைவி

லில்லி, என் இந்திரா, என்னைக் காதலிக்கும் மனம் கொண்ட பெண்கள் எல்லாரும் என்னை மன்னிக்க முயற்சிக்கணும். எனக்கு இது ஒரு நோய் என்று தோன்றுகிறது. இந்தக் காதலிக்கும் வெறி...'

""லீலா...''- அவன் அழைத்தான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேசவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நான்கைந்து நிமிடங்களைக் கடத்தினார்கள். பிறகு அவள் எழுந்து உட்கார்ந்தாள். ""நான் மின்விசிறியைப் போடட்டுமா? தாங்க முடியாத அளவிற்கு வெப்பம்... நீ வியர்த்து ஓடிக்கிட்டு இருக்கே!''- அவன் சொன்னான்.

""என்னை மன்னிச்சிடுங்க.''

""உன்னையா?''

""ஆமாம்... இங்கே வந்ததற்கு... அழைக்காமலே வந்ததற்கு... நான் அம்மாவின் மேஜை ட்ராயருக்குள் இருந்து சாவியை எடுத்துக் கொண்டு இங்கே வந்துட்டேன். மீண்டும் ஒருமுறை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.''

""இது முட்டாள்தனம் லீலா... இனி திரும்பிப் போகும்போது அப்பாவோ அம்மாவோ பார்த்தால்...? நீ இதைச் செய்திருக்கக் கூடாது.''

""எனக்கு பதிலாக அம்மா வந்திருந்தால் நீங்கள் சந்தோஷப் பட்டிருப்பீங்க. அப்படித்தானே?''

அவன் எதுவும் பேசவில்லை. அவனுடைய முகத்தின் அழகு முழுவதும் திடீரென்று இல்லாமல் போய்விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவனுக்கு தைரியம் இல்லாமல் போய் விட்டதைப்போல அவள் உணர்ந்தாள். அந்தக் களைப்பு அவளை அவனுடைய அடிமையாக ஆக்கியது.

""என் குல்ட்டியானோ, நான் உங்களை எந்த அளவிற்கு அதிக மாகக் காதலிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாதா?''

நாற்காலியில் அமர்ந்து அவன் ஷூக்களைக் கழற்றிவிட்டு, காலணிகள் அணிந்திருந்த ஒவ்வொரு பாதத்தையும் மெதுவாகத் தடவினான்.

""நீங்கள் அம்மாவைக் காதலிக்கிறீங்க. ஆனால் எனக்கு என் அம்மாவைப் பற்றி நன்றாகத் தெரியும். இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு... அவ்வளவுதான். அவங்களால் ஒரு மனிதனை யும் காதலிக்க முடியாது. அப்பாமீது அன்பு இல்லை. இருக்கும் ஒரே மகளான என்மீதும் அவங்களுக்கு அன்பு இல்லை. அவங்க பல போலித்தனங்களுடன் இப்படி வாழ்ந்து கொண்டு இருக்காங்க. அந்தச் சிரிப்பும், அந்த சோர்வடைந்த முக வெளிப்பாடும்... எல்லா வற்றையும் மறந்திடுங்க. அதற்குப் பின்னால் பயங்கரமான ஒரு பெண் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவங்களுக்கு ஏராளமான காதலர்கள் இருக்காங்க.''

""இல்லை... இவை அனைத்தும் பொய்...''

""இல்லை... என் அப்பிராணி குல்ட்டியானோ, உண்மையை மட்டுமே நான் சொல்றேன். நீங்கள் புத்தகங்கள் எழுதிய ஒரு ஆளாக இருக்கலாம். அறிவாளியாக இருக்கலாம். ஆனால், மன அறிவியலில் உங்களுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் நீங்கள் நம்பினீர்கள். மற்றவர்களைப்போல நீங்களும் அந்த வலையில் வந்து விழுந்துவிட்டீர்கள். உங்களுடைய விவேகத் தன்மையும் இல்லாமல் போய்விட்டது. வழிபடுவது... அவ்வளவு தான். வேறு எதையும் செய்ய உங்களால் முடியவில்லை. அந்தக் கண்களை, சிவப்பு சாயம் தேய்க்கப்பட்ட அந்தக் கன்னங்களை, எலாஸ்டிக், கஞ்சிப்பசை ஆகியவற்றின் உதவியுடன் அழகாகத் தோன்றச் செய்த அந்த மார்பகங்களை... மொத்தத்தில் அவங்க போலி. பாருங்க... என் தொடையில் அவங்க இஸ்திரிப் பெட்டியைச் சூடாக்கி வைத்த தழும்பை நான் காட்டுறேன். அவங்க அந்த அளவுக்கு மோசமானவங்க. நம்புவதற்கு சிரமமாக இருக்கு. அப்படித்தானே?'' அவன் வெறுப்புடன் எழுந்து நின்றான்.

""நீ எதற்கு இங்கே வந்தே? அவளைப் பற்றி இந்தக் குறைகளைக் கூறுவதற்கா? இல்லாவிட்டால்... என்னிடம் விடை பெறுவதற்கா?''

""என் குல்ட்டியானோ!''- அவள் திடீரென்று குரலை மாற்றிக் கொண்டு அழுதாள்: ""எனக்கு உங்களைப் பார்க்கணும்போல இருந்தது. நான் எப்போதும் உங்களைப் பார்க்கணும்னு நினைக்கிறேன்.''

அவன் ஒரு துவாலையை எடுத்து தன்னுடைய தலை முடியையும் நெற்றியையும் அழுத்தித் துடைத்தான்.

லீலா கட்டிலில் எழுந்து உட்கார்ந்துகொண்டு தொடர்ந்து சொன்னாள்: “

""நீங்கள் இங்கேயிருந்து திரும்பிப் போகும்போது, எனக்குச் சொந்தமான எதுவும் எஞ்சி இருக்கக் கூடாது. எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை. எல்லாம் உங்களுக்குச் சொந்தமானவையாக ஆகவேண்டும். புரியுதா? புரியலையா?''

அவன் தலையைத் தாழ்த்தி அமர்ந்தவாறு தன்னுடைய கால் நகங்களையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

""என் அப்பிராணிப் பெண்ணே, நீ வீட்டிற்குத் திரும்பிப் போ. அவர்கள் உன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். கெட்ட பெயரை வாங்காமல் சீக்கிரமாகத் திரும்பிப் போ. இவ்வளவு இளம் வயதில் நீ எதற்கு கெட்ட பெயரைச் சம்பாதிக்கிறே?''

‘’’""’இல்லை.... அந்தக் கெட்டபெயர் வாங்குவதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அதை நெற்றியில் இருக்கும் ஒரு செந்தூரப் பொட்டைப் போல நான் எல்லாருக்கும் தெரியும்படி காட்டுவேன்.''

""திரும்பிப் போ, பெண்ணே. உன் காதல் எனக்கு கொஞ்சம்கூட தேவையில்லை. நான் முப்பத்தைந்து வயதான, தலை நரைக்கத் தொடங்கியிருக்கும் ஒரு குடும்ப மனிதன். நான் காதலிக்க - உன்னைக் காதலிக்க எந்தச் சமயத்திலும் முடியாது.''

அவள் கவிழ்ந்த கூந்தலைக் கோதிவிட்டவாறு, அவனுடைய கால்களுக்கு கீழே வந்து விழுந்தாள்.

""நான் தேவையில்லை என்றால், என்னை அழிச்சிடுங்க என்னைக் கொன்னுடுங்க...''

அவளுடைய கன்னத்தின் மீது கண்ணீர் வழிந்து அடையாளங் களை உண்டாக்கி விட்டிருந்தது. அவன் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் அந்த முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவளுடைய தேம்பி அழும் சத்தம் தன் நரம்புகளின் வழியாகப் பயணித்துக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. அவன் சொன்னான்:

""இந்த அழுகையை நிறுத்து. வா.... நான் என்ன செய்யனும்னு நீயே சொல்லு. நான் அதன்படி நடக்கிறேன்.''

துவாலையின் உரசலினால் அவனுடைய தலைமுடி கட்டுப் பாட்டை விட்டுக் காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஒன்றோ, இரண்டோ சுருண்ட முடிகள் அந்த நெற்றியின்மீது விழுந்திருந்த தைப் பார்த்ததும், லீலா அடக்கி நிறுத்த முடியாத அன்புடன் அவனைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ஒரு பருந்தை வசீகரித்து வழிக்குக் கொண்டுவர அவள் சற்று சிரமப்பட வேண்டியதிருந்தது. நீண்ட நாட்களாக அவள் வாசல் கம்பிகளில் சாய்ந்து கொண்டு, ஒரு சிலையைப் போல அசையாமல் நின்றவாறு அதன் பயத்தைப் போக்குவதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தாள். அது ஒன்றோ இரண்டோ முறை அவளுக்கு அருகில் மிகவும் நெருக்கமாகப் பறந்து சென்றது. அதன் கனமான சிறகுகளின் வாசனையை அப்போது அவள் உணர்ந்தாள். இறுதியில், அதன் பயம் குறைந்து கொண்டு வந்தது. ஒரு முட்டாள் தைரியத்துடன் அது அவளுக்கு மிகவும் நெருக்கமாக வந்து வட்டம் சுற்றியது. அதன் மஞ்சள் நிறக் கண்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவள் புன்னகைத்தாள்! ஹா! அறிவு இல்லாத பிறவி. அவள் முணுமுணுத்தாள்: ""நீ எனக்குச் சொந்தமானதாக ஆகப் போறே...''

ஆனால், ஆகாயத்தில் மட்டுமே பறக்கும் அந்த உயிரினங்கள் மண்ணைப் பார்த்து பயப்படுகின்றன. மண்ணில் ஆபத்துகள் இருக்கின்றன என்ற விஷயம் அவற்றுக்குத் தெரியும். அதனால் சிறகு களைத் தந்து யாரோ படைத்து விட்டு, இந்தப் பறவைகள் பூமியை விட்டு விலகி, உயரத்தில் பறக்கின்றன. ஆனால், ஆகாயத்தின் அமைதியான சூழ்நிலையும் தகர்க்கப்படும் அல்லவா? சில நேரங்க ளில் மழை மேகங்கள் வந்து கூடும்போது ஆகாயம் ஒரு போர்க் களத்தைப் போல ஆகிவிடும். அது குலுங்கும். அது அலறும். கர்ஜிக்கும். அது நெருப்பு மழையைப் பொழியும். வேறு சில வேளைகளில் கூர்மையான மழைத்துளிகளைப் பொழிந்து, அது குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும். அப்போது அந்த அப்பிராணிப் பறவைகள் நடுங்கிக் கொண்டிருக்கும் சிறகுகளுடன், மரங்களின் கொம்புகளில் போய் அபயம் தேடும். சில நேரங்களில் அவை பறப்ப தற்கு மத்தியில் தளர்ந்து போய், அலகுகளைப் பிளந்து கொண்டு தரையில் விழும். மண்ணில் விழுந்து அதுவும் மண்ணாகும். அதன் உடல்மீது மரங்கள் அவற்றின் தாகம் எடுத்த வேர்களை ஓடச் செய்யும்.

ஒரு நாள் அவள் அந்தப் பருந்தை ஒரு கூட்டிற்குள் அடைத்தாள். அதற்கு மாமிசத் துண்டுகள் இரையாகப் போடப்பட்டன. மிகவும் கவனமாக அவள் அதைக் கட்டிப்போட வேண்டிய கடமையை தன்னுடைய வேலைக்காரர்களிடம் ஒப்படைத்தாள்.

பிறகு, அவளுடைய வாழ்க்கை முழுவதுமே அந்தப் பருந்தாக ஆனது. காலையில் எழுந்தவுடன், அவள் வராந்தாவிற்குச் செல்வாள். அந்தப் பறவை முதலில் சிறகுகளால் மோதிக்கொண்டும் வராந்தாவின் கம்பிகளில் அலகுகளால் உரசிக் கொண்டும் இருந்தது. அதன் கூர்மையான நகங்கள் தரையில் எப்போதும் உரசியவண்ணம் இருந்தன. ஒருநாள் அதன்மீது இரத்தக் கறைகள் இருந்தன. தான் உண்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாமிசத் துண்டுகளை அது ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு அருகில் வந்து நின்று கொண்டு தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை அது பார்த்தது. பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

""நீ என்னுடைய அடிமை...'' - அவள் சொன்னாள்: ""உன்னுடைய பறக்கும் செயல் முடிவுக்கு வந்திடுச்சு.'' நாட்கள் செல்லச் செல்ல அந்தப் பறவை மெலிந்து கொண்டே வந்தது. இரவு நேரங்களில், அந்தச் சங்கிலியின் சத்தத்தை அவள் கேட்கவில்லை. அந்தப் பறவை சிறகுகளை அசைக்காமல் வராந்தாவின் ஒரு மூலையில், தான் அசிங்கமாக்கிய ஒரு மூலையில், செயல்பட முடியாத நிலையில் இருந்தது. அதன் கண்களில் ஒரு திரை வந்து விழுந்திருந்தது. அது ஆகாயத்தைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. மாலை நேரத்தில் காகங்கள் வாசல் பக்கம் வந்து சத்தம் உண்டாக்கியவாறு பறக்கும்போதுகூட, அது திரும்பிப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. அது ஒரு பறவையாக இல்லாமல் ஆனது. வெறும் ஒரு மிருகமாக ஆனது. அது ஆர்வத்துடன் மாமிசத் துண்டுகளைக் கொத்தியது. ஆர்வத்துடன் நீரைக் குடித்தது. அதன் மஞ்சள் நிறக் கண்களைப் பார்த்துக் கொண்டே அந்தப் பெண் சொன்னாள்:

""உனக்கு இப்போ பறக்கத் தெரியாது இல்லையா? இப்போ நீ என்னுடைய அடிமை....''

இரவு வேளைகளில் தூக்கத்தில் இருந்து தட்டுத்தடுமாறி எழுந்து அவள் வாசலுக்குச் செல்லும்போது, அடிமையாக்கப் பட்ட அந்தப் பறவை திறந்த கண்களுடன் சுருங்கிப்போய் உட்கார்ந்து கொண்டிருக்கும். அவள் ஒரு நெருப்புக் கொள்ளியை எடுத்து அதன் கண்களில் குத்துவாள். அது ஓசையே உண்டாக்காது.

""உனக்கு வேதனை உண்டாகவில்லையா?'' - அவள் கேட்பாள். அவள் டார்ச்சை எடுத்து அந்த மஞ்சள் நிறக் கண்களில் அடிப்பாள். ஒரு இரவு வேளையில், அது இறந்து விட்டது. அசைவே இல்லாமலிருந்த அந்த உடலைக் கண்டபோது, அவளுக்கு கடுமையான ஏமாற்றம் உண்டானது. ""நீ என்னை ஏமாத்திட்டே'' - அவள் சொன்னாள்.

""இந்திரா...'' - இரவில் தனக்கு அருகில் படுத்துத் தூங்கிக் கொண் டிருந்த மனைவியிடம் அவர் கேட்டார்: ""உனக்கு என்ன ஆச்சு?''

அவள் தலையைக் குலுக்கினாள். அவள் அவருடைய கை விரல்களை எடுத்துத் தன்னுடைய கன்னங்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டாள்.

""எனக்கு முடியல... கொஞ்சம்கூட முடியல....''

""இது வேண்டும் என்றே வரவழைத்துக் கொள்வது என்று எனக்குத் தோணுது. வாழ்க்கைக்கு சில கட்டுப்பாடுகள் தேவைப் படுகின்றன. அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டுக் கிடைக்கக் கூடிய சுதந்திரம், நமக்கு எந்தச் சமயத்திலும் ஆனந்தத்தைத் தராது!''

""உங்களுக்கு சுதந்திரத்தைப் பற்றி என்ன தெரியும்? மற்றவர்கள் உண்டாக்கிய ஒரு அறையில், எல்லா தனித்துவத்தையும் மறந்து விட்டு, ஒரு மூலையில் சுருண்டு போய் வாழும் ஒரு கேவலமான பிறவிதான் உங்களுடைய மனம்! அது எந்தச் சமயத்திலாவது சுதந்திரத்தை அறிந்திருக்கிறதா? என்னுடைய மனம்? அது பருந்தைப் போல வானத்தில் பறக்கிறது. நீர்நிலைகளுக்கு மேலே, மரங்கள் அடர்ந்த தோப்புகளுக்கு மேலே... வானத்தில் எல்லைகள் இல்லை.... சதி செய்து உண்டாக்கப்பட்ட குழிகள் இல்லை....''

""நீ மன அமைதியுடன் இருப்பதற்காக முயற்சித்திருக்கிறாயா? அது இந்த சுதந்திரத்தைவிட சிறந்தது. எதன் மீதாவது நம்பிக்கை வைக்க முயற்சி செய். கடவுள் மீது - முடியுமானால்...''

""கடவுள் மீதா? நான் இப்போதுகூட அவருடன் அறிமுக மானவளாக இல்லையே!''

""கடவுள் தன்னுடைய விசிட்டிங் கார்டுடன் உன் வரவேற்பு அறையைத் தேடி ஒருநாள் நடந்து வருவார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயா?''

""ஆமாம்....''

""எந்த வேடத்தில் வருவார் என்று நீ நினைத்துக் கொண்டி ருக்கிறாய்?''

""எந்த வேடத்தில் வந்தாலும் எனக்குப் புரியும். சிரிப்பாகவோ வேதனையாகவோ..... எப்படி வேணும்னாலும் வரட்டும்.''

""ஓ! நீ எப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனமா பேசிக்கிட்டு இருக்கே!''

வெளியே உச்சி வெயில் மரங்களின் இலைகளைச் சுட்டெரித் துக் கொண்டிருந்தது. இந்திரா தன் கூந்தலில் இருந்த ஊசிகளைக் கழற்றி மேஜை மீது வைத்தாள். அவளுடைய தலை முடிச் சுருள்கள் தோளில் கனமாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பிறகு அவள் அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள்.

"நீ தலைமுடியை அவிழ்த்த பிறகே இந்தக் கடிதத்தை வாசிக்க முடியும். அந்தத் தலை முடிச் சுருள்கள் உன்னுடைய தோள்களை யும் மார்பையும் முத்தமிட்டுக் கொண்டிருக்கட்டும். இனி தலையணைகளில் சாய்ந்து, வலது முழங்காலை மடக்கி வைத்துக் கொண்டு ஓய்வெடு. இப்போது நீ என் காதலியாகி விட்டாய். கண்களை மூடிக்கொண்டு, உன்னுடைய உருவத்தை மனதில் நினைத்தவாறு நான் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கி றேன். நினைவுகள் என்னை சதி செய்கின்றன. அந்த கறுப்பு மச்சம் உன்னுடைய வலது கன்னத்திலா இருக்கிறது? என்னால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை.

கடிதம் எழுதக்கூடாது என்று நீ சொன்னாய். நம்முடைய பிரிவு ஒரு உறுப்பு இழப்பைப் போல முழுமையானதாக இருக்கட்டுமே என்று நீ சொன்னாய். ஏனென்றால் சில நாட்களுக்குள் வேதனையை மறந்து விட முடியும். ஆனால் அறுபட்ட நரம்புகளில் இப்போதும் இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு ஆணுக்குத் தோன்றினால்....?

என்னால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை. இந்தியாவில் வாழ்ந்த மூன்று மாதங்களைப் பற்றிய கட்டுரையைக் குறித்து பத்திரிகை ஆசிரியர் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்கள் எனக்காக இருபதாயிரம் டாலர்கள் செலவழித்திருக்கிறார்களே! ஆனால், நான் என்ன எழுதுவது? எலிஃபெண்டா குகைகளுக்குள் நுழைந்து மூக்கு உடைபட்ட கடவுளைப் பார்த்தேன். முதுமையின் காரணமாக பாடலைக் கேட்டாலும், தலையை உயர்த்த முயற்சிக் காமல் மண்ணில் கிடந்து நெளிந்து கொண்டிருந்த அந்த நல்ல பாம்பைப் பார்த்தேன். ஏராளமான பணத்தைச் செலவழித்து இந்திய அரசாங்கம் குடியரசு தினத்தைக் கொண்டாடியபோது, தெருவின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த ஒரு பிச்சைக்காரி கிழவியை மக்கள் கால்களால் மிதித்துக் கொன்றதையும் நான் பார்த்தேன்... இவை எதுவும் நான் மறக்காத காட்சிகளே. ஈசல்களைப் போல வெளிச்சத்தைப் பார்க்கும் ஆர்வத்துடன் முன்னோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் மக்கள், ஒரு பிணத்தை மூடி வைப்பதற்காக மட்டும் அகம்பாவத்துடன் ஒரு மன்னன் கட்டிய பளிங்குக் கல் அரண்மனை, குழந்தைகளின் வழிபாட்டு நாயகன் என்று கூறப்படும் உங்களுடைய பிரதம அமைச்சர்... இப்படி நிறைந்த ஒரு கூடையுடன்தான் நான் மணிலாவிற்குத் திரும்பியிருக்கிறேன். எனினும், எழுத உட்காரும்போது என்னுடைய பேனா செயல் படவில்லை. அதனால் உன் பெயரை மட்டுமே எழுத முடிகிறது.

இந்திரா..... இந்திரா.... முதல் தடவையாக அம்மா என்று உச்சரிக்கக் கற்ற ஒரு குழந்தையைப் போல நான் எப்போதும் ஒரு பெயரை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன் - இந்திரா. நீ எப்படிப்பட்ட ஒரு பெண்! உன்னுடைய ஈர்ப்பு சக்திக்கான ரகசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உன்னுடன் சேர்ந்து அமர்ந்திருந்தபோது, நான் பேசியது எதுவும் முக்கியத்துவம் உள்ளதாக இல்லை. நீயும் எதுவும் கூறவில்லை. அப்படியே கூறியிருந்தாலும், மறக்க முடியாத அளவிற்கு அப்படி யெதுவும் அந்த வார்த்தைகளில் இல்லை. என்னவோ நடக்கப் போகிறது என்ற ஒரு பொய்யான நடிப்பு உன்னிடம் இருந்தது. நானும் அதை நம்ப ஆரம்பித்துவிட்டேன். எனினும், என்ன நடந்தது? எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் விடை பெற்றுக் கொண்டு திரும்பி வந்த பிறகு, என்னுடைய இதயம் காரணமே இல்லாமல் உனக்கு அருகில் திரும்பவும் வருவதற்கு ஏங்குகிறது. என் உலகம் உன்னுடையதாக இருக்க வேண்டும். என் உலகம் நீ இருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் ஒரு மரப்பொம்மையாக ஆகிவிடுவேன். எனக்கு விதி இல்லை. சொந்தமாக ஒரு சட்டம் இல்லை. உனக்குப் புரிகிறதா? எப்படிப் புரியும்? மொழிகளின் வரையறை என்னை ஒரு உடல் ஊனமுற்ற மனிதனாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. காதலர்களுக்காக இந்த உலகம் புதிய ஒரு மொழியையே உண்டாக்க வேண்டும். வெள்ளி ஆற்றைப்போல, தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும் ஒரு மொழி... அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் சொந்தமான ஒரு மதிப்பு இருக்க வேண்டும். தனித்து நிற்கக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். அப்படியென்றால், சக்தியே இல்லாத இந்த சாதாரண வார்த்தை களை நான் ஓரங்கள் கரிந்த வழிபாட்டு மலர்களைப் போல உன்னுடைய பாதங்களில் எந்தச் சமயத்திலும் சொரிய மாட்டேன்.

ஒரு நாள் நீ சொன்னாய் - இந்தக் காதல் என்பது ஒரு சதுரங்க விளையாட்டைப் போன்றது என்று. உண்மையான வார்த்தைகள் என் ஞாபகத்தில் இல்லை. அந்த நிமிடத்தின் சூழ்நிலையை மட்டும், நாடகத்தைப் பார்த்த ஒரு குழந்தையைப் போல நான் இப்போதும் மனதில் நினைத்துப் பார்க்கிறேன். பனி மூடிவிட்டிருக்கும் அந்த மிகவும் நீளமான கடற்கரை... மிகவும் தூரத்தில் எங்கோ இருக்கும் கவலை நிறைந்த உலகத்தை நோக்கிக் கண்களை அனுப்பிக் கொண்டிருக்கும் உன்னுடைய அந்த இருப்பு... அன்று நீ எதைப் பார்த்தாய்? பாலைவனத்தில், மஞ்சள் நிற மணலில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு நீருக்காக உரத்த குரலில் அழுதுகொண்டிருக்கும் என்னையா? ஓ - இந்திரா! என் செல்லமே! நாம் நம்முடைய சொந்த உலகத்திற்குள் இருந்து கொள்ளக்கூடாதா? யாரையும் கடுமையாக வேதனைப்படுத்தாமல், நாம் நம்முடைய சதுரங்க விளையாட்டை ஆரம்பிப்போம். அவர்களுடைய வேதனை நான் இப்போது அனுபவிக்கும் வேதனையைப் போல இருக்காது. அது மட்டும் உண்மை. லில்லி சொன்னாள் - நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டியின் அளவு போதாது. இந்த மாதம் புதிதாக ஒன்று வாங்க வேண்டும் என்று. மூத்தமகன் சொன்னான்- நான் பேஸ் பந்து குழுவில் சேரணும் என்று. அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும். ஆனால், என்னுடைய ஆசை?

உன்னுடன் சேர்ந்து அதிகாலை வேளைகளில் கண்விழிக்க வேண்டும்! ஆ.... அதைக் கூறுவதற்கு எனக்கு தைரியம் இல்லை. என்னுடைய உடலில் இருக்கும் ஒவ்வொரு உரோமக் குழியையும் இந்தக் காதல் இல்லாத மற்ற எல்லாரிடமிருந்தும் மறைத்து வாழ என்னால் முடிந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! முள்ளம் பன்றியைப் போல முட்கள் அளிக்கப்படுவது, ஒரு புலியைப் போல கூர்மையான, வளைந்த நகங்கள் தரப்படுவது- அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அந்தக் கொடுமைக்கும் ஒரு நியாயம் இருக்கிறதே! ஆனால், நாம் வாழும் இந்த உலகம் ஒரு பொம்மை விளையாட்டு உலகமாக இருக்கிறது. அதில் நிறம் கொண்ட பொருட்கள் அனைத்தும் மனிதர்களால் உண்டாக்கித் தொங்க விடப்பட்ட தோரணங்களாக இருக்கின்றன. பொய்கள், வெறும் பொய்கள், மதங்கள், சடங்குகள்... இவை அனைத்தும் பொய்கள். மனிதனின் பிறவியிலேயே இருக்கும் மதிப்பைக் கெடுத்து, அவனை பலவீனமானவனாக ஆக்கும் விஷக்கனிகள்... மனிதர்கள் தங்களு டைய சொந்த முகங்களில் இருந்தும், சொந்தமான சிந்தனைகளில் இருந்தும் அவமானத்துடன் பின்னோக்கிச் செல்லும்போது, வாழ்க்கைக்கான அர்த்தமும் அவர்களுக்கு நஷ்டமாகிறது. எல்லாம் ஒரு பொய்யாகி விடுகிறது. வளர்ந்து வரும் தலைமுறைகளுக்குக் கொடுப்பதற்கு அவர்களின் கையில், பொய்யான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றாகிறது. பல வண்ணங்களில் இருக்கும் அந்த தாள் தோரணங்கள், மரத்தால் உண்டாக்கப்பட்ட சைத்தான் முகங்கள், அந்தப் பொய்யான நீர்நிலைகள் - இவை அனைத்தும் நிறைந்த உலகத்தில் அவர்களும் வளர்கிறார்கள். அவற்றை நீக்கி, மனதிற்குள் இருக்கும் இருட்டைப் போக்கி, மனிதர் களிடம் மீண்டும் அவனுடைய மகத்துவத்தை உண்டாக்க யாரும் முயற்சிப்பதில்லை. அதனால்தான்... இந்திரா, நம்முடைய யுகத்தின் வரலாறு இந்த அளவிற்கு அவலட்சணமாகி விட்டிருக்கிறது.

ஒவ்வொரு நம்பிக்கைகளும் மெதுவாக அழிந்து கொண்டிருக் கின்றன. நான் சுதந்திரமானவனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை, இந்த வீடு, குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு, காதல் தரும் அந்த முட்டாள்தனமான தைரியத்துடன் நான் நம்முடைய சதுரங்க களத்திற்கு வந்து சேரலாம். என்னை திட்ட வேண்டாம். என்னைத் திருப்பி அனுப்பவும் வேண்டாம்.

காதலுடன்

பெப்பே.'

""ஹா! என்ன ஒரு ஏமாற்றுக்காரன்!'' - அந்த வார்த்தைகளைக் கேட்டு இந்திரா பின்னால் திரும்பிப் பார்த்தாள். நாற்காலிக்குப் பின்னால் நின்று கொண்டு வெளிறிய முகத்துடன் லீலா மீண்டும் சொன்னாள்:

""என்ன ஒரு ஏமாற்றுக்காரன்!''

""நீ எதற்காக எனக்குப் பின்னால் வந்து நின்று இதைப் படித்தாய்?''

""படிக்கக்கூடாதா? பொய்களை இந்த அளவிற்கு வெறுக்கக் கூடிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை மறைத்து வைக்கத் தோன்றுகிறதா?''

இந்திரா எந்த பதிலையும் கூறவில்லை. அவள் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடிக்கொண்டு எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருந்தாள்.

""நீங்கள் எல்லாரும் போலித்தனத்துடன் வாழ்கிறீர்கள்'' - லீலா சொன்னாள்: ""காதல், அன்பு, சுதந்திரம்.... ஹா! என்ன அழகான சொற்கள்! அவற்றைப் பயன்படுத்தக் கூடிய தகுதிதான் உங்களுக்கு இல்லை. உங்களுக்கும் இல்லை. அந்த ஆளுக்கும் இல்லை. அந்த ஆள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வசீகரிக்க...''

""லீலா, நீ எதற்கு அந்த ஆள் மீது குற்றம் சுமத்துறே?''

""உங்களுக்கு உண்மைதான் வேண்டுமென்றால் நான் உண்மையைத்தான் கூறுகிறேன். அந்த ஆள் என்னை ஹோட்ட லுக்கு அழைத்துக் கொண்டு போய், இதே மாதிரி உண்மை சொற்பொழிவு செய்தது எதற்கு என்று கேளுங்கள். என் சுதந்திரத்தை அழிப்பதற்கு... கூர்ந்து பாருங்கள்.... என் உடலில் எந்தவொரு மாறுதலும் உண்டாகியிருக்கவில்லையா?''

அவள் தன்னுடைய புடவையை உடலில் இருந்து இழுத்துக் கழற்றித் தரையில் எறிந்தாள்.

""அய்யோ....''

இந்திரா கண்களை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

""இது உண்மையா?''

""ஆமா.... எனக்கு முறை தவறி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அம்மா... நீங்க அழக்கூடாது. எனக்கு கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. எங்களுக்கிடையே ஒரு உறவை உண்டாக்க முடிந்ததே என்று நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். காதல் சிந்தனைகள் கொண்ட ஒரு உறவாக இல்லை என்றாலும்கூட ஆழமான ஒரு உறவு. ஆ.... அது சொர்க்கமாக இருந்தது. அந்த அடிமையாகும் செயல்.... அந்த ஆள் கெஞ்சினார். அழுது என்னுடைய கால்களில் வந்து விழுந்தார்... எந்த அளவிற்கு அவலட்சணம் பிடித்த குழந்தைகளாக இருக்கிறார்கள் ஆண்கள்! அம்மா, உண்மையைக் கூறட்டுமா? அது சொர்க்கமாக இருந்தது!''

""நான் ஒரு பருந்தாக இருந்தேன்'' - அவள் தடுமாறிய குரலில் சொன்னாள்: ""எல்லைகள் இல்லாத ஆகாயத்தில்கூட நான் எப்படியெல்லாம் பறந்தேன்! பிறகு... நான் விழுந்தேன்... விழுந்து விட்டேன்!''

""என்ன சொல்கிறாய்?'' - அவளுடைய கணவர் கட்டிலின் கால் பகுதியில் நின்று கொண்டு கேட்டார்: ""டாக்டர், எனக்கு அவள் கூறுவது எதுவும் புரியவில்லையே!''

""அவங்களுக்கு சுய உணர்வு இல்லை.''

டாக்டர் மீண்டும் ஒரு ஊசியைப் போட்டார். எப்படிப்பட்ட அன்றாடச் செயலும், அவருக்கு ஒரு போர்க்களமாகவே இருந்தது. தான் வெற்றி பெறுவதற்கு அவர் எல்லாவித முயற்சிகளையும் செய்தார். ஆனால், அந்த நோயாளிப் பெண் இப்போதுதான் தன்னுடைய எதிரியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. வாழ்வதற்கான ஆசை சிறிதுகூட மீதமிருக்கவில்லை என்று அர்த்தமா என்ன? அவர் சிவந்த கண் களுடன் நின்று கொண்டிருந்த அந்த நடுத்தர வயது மனிதனைப் பார்த்தார். கீழுதடைக் கடித்து அழுத்தியவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த இளம் பெண்ணைப் பார்த்தார். அவருக்கு அவள்மீது காரணமே இல்லாமல் ஒரு வெறுப்பு தோன்றியது.

அவர் நோயாளிப் பெண்ணின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். போர்வையை நீக்கினார். கால்விரல்களைச் சோதித்துப் பார்த்தார். சற்று நீர் கட்டியிருந்தது. அவர் மீண்டும் அந்தப் போர்வையை மிகுந்த கவனத்துடன் அந்தக் கால்கள் மீது போர்த்தினார். இவளை சாக விடக்கூடாது - அவர் மனதில் நினைத் தார். இந்தப் போரிலும் தான் வெற்றி பெற வேண்டும். எப்படி வெற்றி பெறுவோம் என்று அவருக்கே நிச்சயமில்லாமல் இருந்தது.

தான் வெறுத்த அந்தப் பெண் அனைத்து அழகுகளையும் இழந்து, பார்க்க சகிக்காத ஒரு உருவத்தை அடைவதை லீலா பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்லிய ஒரு வேதனை அவளுடைய மனதிற்குள் வளர்ந்தது. ஒரு முள் செடியைப் போல.... ஆனால், அவளுக்கு முட்களின் அந்தத் தொடுதலும் ருசியாகத் தெரிந்தது. அவள் பகல் முழுவதும், இரவில் பல தவணைகளாகவும், அந்த நோயாளிப் பெண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பயணத்தின் விடை பெறும் ஒவ்வொரு நிமிடமும் தன்னுடையதாக இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அந்த வகையில்...

தலையணையை நோக்கி குனிந்து அமர்ந்திருந்த - அந்த வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த உருவத்தைப் பார்ப்பதற்காக, திடீரென்று மருத்துவமனை அறைக்குள் குல்ட்டியானோ வந்தான். அவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான். தான் வீட்டையும் நாட்டையும் குடும்பத்தையும் உதறி எறிந்துவிட்டு, இந்திராவைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தது வீணாகிவிட்டதோ?

""இந்திரா, என்ன ஆச்சு?'' - ஆனால் இந்திரா என்று அழைத்து முடித்தவுடன் அவனுக்குத் தோன்றியது - இது இந்திராதானா?

நீர் வந்து, மஞ்சள் படர்ந்து, கன்னங்கள் வீங்கி, கண்கள் சுருங்கி, நீல நிறத்தில் கால் விரல்கள் என்று இருக்கும் இந்த உருவம்? இதைத் தான் காதலித்தோமா? மூக்கு துவாரங்களுக்குள் நுழைக்கப் பட்டிருக்கும் ஆக்சிஜன் குழாய்களைப் பிடுங்கி எறிய முயற்சிப் பதைப் போல கனமான ஒரு கை எப்போதும் அசைந்து கொண்டே இருந்தது. அவன் இதயம் நொறுங்க அழைத்தான்.

""இந்திரா.... என் இந்திரா... உனக்கு என்னைத் தெரியலையா?''

""நீங்க தயவுசெய்து வெளியே போங்க, மிஸ்டர் குல்ட்டியானோ. அவளை சிரமப்படுத்தாதீங்க.''

அவளுடைய கணவர் சொன்னார். டாக்டர் திடீரென்று குல்ட்டியானோவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்:

""போக வேண்டாம்... இருங்க...''

நாற்காலியில் எந்தவிதமான அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்த லீலாவின் கூர்மையான கை நகங்கள் நாற்காலியின் கையின் பழைய மரத்தின்மீது திடீரென்று இறங்கின.

“""என்னைத் தெரியலையா?'' - அவன் நோயாளிப் பெண்ணிடம் கேட்டான்: ""உன் பெப்பே....''

அவளுடைய சுருங்கிப் போன கண்களில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் உண்டாகவில்லை. அவளுடைய வாய் ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டு, ஓசை உண்டாக்காமல் அழுதான்.

இறுதியில் அவளுடைய உடலை ஒரு சிதிலமடைந்த தெய்வத் தின் சிலையைப்போல போர்த்தி மூடி, குங்குமப் பொடியைத் தூவி, மருத்துவமனையில் இருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு போனபோது, அவன் கட்டுப்பாட்டை இழந்து உரத்த குரலில் அழுதான். குண்டடி பட்ட ஒரு காட்டு மிருகத்தின் அழுகையைப் போல அவனுடைய அழுகைச் சத்தம் இருந்தது. லீலா திரும்பிப் பார்க்காமல் காரில் ஏறி உட்கார்ந்தாள்.

எதிர்பார்த்ததைப் போலவே அன்று லீலா அவனைப் பார்த்தாள். அவர்களுடைய வீட்டிற்கு முன்னால், கடற்கரையில், ஒரு கறுத்த பாறையின்மீது அவன் உட்கார்ந்திருந்தான். லீலா வேகமாக கேட்டைத் திறந்து அவனை நோக்கி ஓடிச் சென்றாள்.

""வாங்க... உள்ளே வாங்க...''

அவன் தலையை ஆட்டினான்.

""இங்கே இப்படித் தனியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?''

அவன் எதுவும் பேசவில்லை. பின்னால் சிவக்க ஆரம்பித்திருந்த சூரியனும் ஒரு கடலும். அவன் கடலில் இருந்து மேலே எழும்பி வந்த ஒரு கடவுளைப் போல லீலாவுக்குத் தோன்றினான்.

""என் செல்லமே.....'' - அவள் அழைத்தாள்: ""என்னைத் தொட விடுங்க. நான் உங்களுடைய கண்களைத் துடைத்துவிடுறேன். எனக்கு தைரியத்தைத் தாங்க!''

அவனுடைய கண்கள் எரிந்து கொண்டிருக்கும் சூரியனைப் போல இருந்தன. அந்த உடலுக்கு முத்துக்களின் வெண்மை நிறம் இருந்தது.

""நான் உங்களுக்காக- இந்தக் காதலுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன்....'' அவள் சொன்னாள்: ""அனைத்தும் மீத மிருக்கும் எல்லா உணர்ச்சிகளும்... இரக்கத்தையும் சேர்த்துத்தான்... என்னை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், இனி வாழ்க்கையில் எதுவும் இல்லை!''

""லீலா, நான் மொத்தத்தில் காதலித்தது அவளைத்தான். இனி நான் தருவதற்கு எதுவும் இல்லை!''

""எதுவும் இல்லையா?''

அவன் தலையை ஆட்டினான்.

""பாருங்க....'' - அவள் சொன்னாள்: ""பாருங்க.... என் உடலைப் பாருங்க. நீங்க அன்னைக்கு இரவு எனக்குப் பரிசாக என்ன தந்தீங்கன்னு பாருங்க....''

""என்ன?''

""ஆமாம்.....''

""இந்த விஷயம் அவளுக்குத் தெரியுமா?''

லீலா சிரித்தாள்.

""ம்.... சொல்லிட்டே... அப்படித்தானே? ஓ.... மோசமான பெண்ணே!. நீ அவளைக் கொன்று விட்டாய்... கொன்று விட்டாய்....''

அவன் கண்களை மூடிக்கொண்டு எழுந்தான்.

""எங்கே போறீங்க?'' - அவள் கேட்டாள்.

""எங்கே? எனக்குத் தெரியாது. இந்த உலகம் என்னுடையதாக இல்லாமல் ஆகி விட்டிருக்கிறது. இனி நான் எங்கு செல்வேன்?''

""வாங்க....'' - லீலா அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சொன்னாள்: ""எல்லாம் சரியாகிவிடும். நான் சொல்ற தைக் கேளுங்க. நாம கணவனும் மனைவியுமாக ஆகலாம். உங்களுக்கு இந்தியாவில் ஒரு வேலை ஏற்பாடு செய்வோம். இல்லாவிட்டால் புத்தகம் எழுதுங்க... நான் உங்களை நல்ல முறையில் சந்தோஷமாக இருக்கும்படிச் செய்வேன். பாருங்க.....''

அவன் அடுத்த நிமிடம் கையை விடுவித்துக் கொண்டு சொன்னான்: ""இல்ல.... அவள் எனக்கு சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கற்றுத் தந்தாள். இனி நான் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. நான் நீ சொன்னபடி கேட்க மாட்டேன். உன்னை எந்தச் சமயத்திலும் காதலிக்கவும் மாட்டேன்!''

அவன் நடந்து அங்கிருந்து சென்ற பிறகு, அவள் மீண்டும் ஆகாயத்தையே பார்த்தாள். சூரியன் மறைந்த பிறகும் வானத்தில் ஒரு கறுத்த வெற்றுக்குழி எஞ்சி இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு எல்லாவற்றின்மீதும் திடீரென்று ஒரு வெறுப்பு தோன்றியது. பாவாடைக்கு உள்ளே துணியை மடித்து வயிறுடன் சேர்த்துக் கட்டி நடக்கவும், வெறுக்கவும், பொய் கூறவும் செய்த காதல் என்ற அந்த உணர்வையும் அவள் வெறுத்தாள். அந்த அளவிற்கு இனிமையானது என்று கேள்விப்பட்ட அந்த உணர்வும் அவளின் கையில் வந்து சேர்ந்தபோது, சாதாரண ஒரு போலி நகையாக மாறிவிட்டது....

திடீரென்று மழை ஆரம்பித்தது. கடற்கரையில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்களும் இளநீர் விற்றவர்களும் குல்ஃபி விற்பனை செய்தவர்களும் தங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு தெருவின் இன்னொரு பகுதிக்கு ஓடினார்கள். மழைத்துளிகள் ஒரு மூடுபனியைப் போல அந்தக் கடற்கரையை மூடியது. சிறுவர்களில் சிலர் எங்கிருந்தோ உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டி ருந்தார்கள். லீலா எழுந்து, தெருவைக் கடந்து, தன்னுடைய படிகளைத் தாண்டாமல், கனமான மழைத்துளிகள் ஓசை உண்டாக்கியவாறு விழுந்து தெறித்துக் கொண்டிருந்த, மூடப்பட்ட ஜன்னல்களையும், அடைக்கப்பட்டிருந்த கடைகளையும், மோட்டார் வாகனங்கள் கண்ணாடி வழியாகக் காட்டிய கம்பெனி கட்டிடங்களையும் கடந்து, தனக்கு சிறிதும் அறிமுகமில்லாத ஒரு இருண்ட தெருவை அடைந்தாள். எந்தவித நோக்கமும் இல்லாமல் அவள் அவ்வாறு நடந்தாள். நடந்து சென்றால், என்றைக்காவது தன்னுடைய சொந்தம் என்று கூறப்படும் ஒரு மூல உலகத்தைச் சென்று அடைந்து விட முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. அன்று... அவளும் ஓய்வு எடுக்கலாம்... கண்களை மூடி, அனைத்து பயங்களையும் மறந்து ஓய்வு எடுக்கலாம்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.