LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

மேகக் கணிமை - எஸ்.கண்ணன்

இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில் இருக்க முடியாது.  உலகின் மற்ற பிரபல கணினி நிறுவனங்கள் அவரை தன் பால் இழுக்க முயன்றாலும், டாக்டர் ஹர்ஷவர்த்தன் மிகப் பிடிவாதமாக இந்தியாவின் வளர்ச்சிக்காக மட்டும்தான் தன் பணி இருத்தல் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.  

 

அவர் தற்போது தரமான கிளவுட் கம்ப்யூட்டிங்  (மேகக் கணிமை)  முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திவிடும் தீவிரமான முனைப்பில் இருக்கிறார். மேகக் கணிமையின் திறத்தினை சிறப்பாக உபயோகப் படுத்தும் டெக்னாலாஜியை இந்தியப் பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்திவிட்டால் அது அரசுக்கு மிகப் பெரிய பொருளாதார வளத்தை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் மிக்க நன்மை பயக்கும் என்பதை விளக்கிச் சொல்லி  இறுதி ஒப்புதல் பெறுவதற்காக விரைவில் பாரதப் பிரதமருடன் அவருக்கு ஒரு சந்திப்பு இருக்கிறது.     

 

பிரதமர் ஒப்புக் கொண்டவுடன், அதை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிடும்.  அதைத் தொடர்ந்து மேகக் கணிமை முறையினால் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய கணினி புரட்சியே உண்டாகிவிடும். 

 

பாரதப் பிரதமருடனான சந்திப்பை எப்படியாவது முறியடித்து விட வேண்டும்.    டாக்டர் ஹர்ஷவர்த்தனை கொலை செய்து விட்டால் இன்னமும் உசிதம்... அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை என்பதில் ரமேஷ் கஷ்யப் உறுதியுடன் இருக்கிறான்.  அவனுக்கு பின்புலமாக சில அயல் நாட்டு கணினி நிறுவனங்களும் இயங்குகின்றன.  அவைகள் கஷ்யப்பிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காத்திருந்தன. 

 

அது என்ன மேகக் கணிமை?  அதுக்கு ஏன் டாக்டர் ஹர்ஷவர்த்தன் கொலை செய்யப்பட வேண்டும் ?  

 

சமீப காலங்களாக கணினிகளின் ஆற்றல் முழுவதும் மேகக் கணிமையை நோக்கிப் பயணப் படுகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் மேகக் கணிமை வழியாகத்தான் அனைத்து சேவைகளையும் பல நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும், மருத்துவ விடுதிகளும், தனியார்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அளவில் அது வேகமாக வளர்ந்து வருகிறது. 

 

தனித் தனியாக வீடுகளில் கணினிகள் வைத்துக்கொண்டு, வருடத்திற்கு ஒரு முறை மாறி வரும் மென் பொருள்களை வாங்கிப்போட்டு வைரஸ் தாக்குதல்களிலிருந்து தப்பித்து பொதுமக்கள் எல்லோரும் கணினிகளைப் பயன் படுத்துவது என்பது இந்தியாவில் இயலாத காரியம். பெரும் பணச் செலவு.  இதற்கு ஒரு தீர்வாக இணையத்தின் ஊடாகக் கணினிச் சேவைகளை வழங்கபோவது மேகக் கணிமைதான்.

 

நகராட்சி வீடுகளுக்குத் தண்ணீர் வழங்குவதும், மின்சாரத்தை கம்பெனிகள் வழங்குவதும் போன்று, கணினித் தேவைகளை வேண்டிய அளவில் பெற்றுக்கொண்டு அதற்கான விலையை ஒவ்வொரு மாதமும் கட்டி விடலாம். மேகக் கணிமைக்கு நம்மிடம் எந்த ஹார்ட்வேரும், சாப்ட்வேரும் இருக்கத் தேவையில்லை.  வெறும் கணித் திரையும் அதைத் தட்டுவதற்கு ஒரு விசைப்பலகையும் மட்டுமே போதுமானது.   நம் கணினிக் கணக்கில் நுழைந்தால் மேகக் கணிமையைப் பயன் படுத்தலாம்.  நாம் பயன் படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் வரும். 

 

தனித் தனியாக கம்ப்யூட்டர், அதன் சாப்ட்வேர், அதனை அடிக்கடி மேம்படுத்த மாற்றுதல், வைரஸ் தாக்குதல், பராமரிப்புச் செலவினங்கள் போன்றவைகள் இனிமேல் இருக்காது.  மேகத்தில் எல்லாக் கணிவளங்களும் இருப்பதால், எந்த இடத்திலிருந்தும் நம் கணக்கை உபயோகிக்கலாம்.  வேண்டியது ஒரு கணித்திரை மட்டுமே. 

 

அதனால்தான் டாலர் கணக்கில் பெரும் பணம் புழங்கும் சாப்ட்வேர், ஹார்டுவேர் கம்பெனிகள், வைரஸ் எடுக்கும் கம்பெனிகள் அனைத்தும் இனி தாங்கள் கல்லா கட்டமுடியாது என்பதால், மேகக் கணிமையையும், அதைப் பிரபலப் படுத்தப் பாடுபடும் டாக்டர் ஹர்ஷவர்த்தனையும் பார்த்து மிரளுகின்றன.

 

டாக்டர் ஹர்ஷவர்த்தனின் வாழ்வியல் ரொம்ப ஹைடெக் என்பதால் அவரை அத்தனை எளிதாகக் கொன்று விட முடியாது என்பது ரமேஷ் கஷ்யப்புக்கு நன்கு புரிந்திருந்தது.  ஏனெனில் சென்னை பாலவாக்கத்தில் அவர் குடியிருப்பது வீட்டில் அல்ல.  டெக்னாலஜியில்.  துப்பாக்கி ஏந்திய காவலர்களைத் தவிர, வீட்டு வாசலின் நுழைவில் ஆரம்பித்து எல்லா அறைகளிலும் தானியங்கி காமிரா, மெட்டல் டிடெக்டர், காரை எவராவது தொட்டால் ஸ்மார்ட் போனில் அலாரம் என்று மிகுந்த கவனத்துடன் தன்னைப்  பாதுகாத்துக் கொள்பவர்.

டாக்டர் ஹர்ஷவர்த்தனுக்கு வயது முப்பத்தைந்து.  இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.  யாராவது அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்டால் கணினிதான் தன் மனைவி என்பார்.  தன் தம்பி  குமாரசாமியுடன் வசித்து வருகிறார். குமாரசாமிக்கு  படிப்பு ஏறவில்லை என்பதால் நல்ல வேலையும் கிடைக்கவில்லை. எனவே டாக்டர் ஹர்ஷவர்த்தன் தனக்கு உதவியாக அவனைத் தன்னுடனேயே வீட்டில் வைத்துக் கொண்டார். ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று அவனிடமே சொல்லிச் சிரிப்பார்.

 

அன்று அவரது சிறந்த நண்பர் நரசிம்மன் டாக்டரைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு  வந்திருந்தார்.

 

அலுவலக அறையில் துப்பாக்கி ஏந்திய ரோபோ அமைப்பில் இருந்த இரண்டு  பொம்மைகளைப் பார்த்து, “ஏய் ஹர்ஷா இந்த பொம்மைகள்  ரொம்ப நல்லா இருக்குடா..” என்றார்.  

 

“அவைகள் பொம்மை இல்லை, என்னைப் பாதுகாக்கும் ப்ரோக்ராம்டு  ரோபோ வீரர்கள்.”  

 

சிறிது நேரம் செஸ் விளையாடிவிட்டு நரசிம்மன் கிளம்பிச் சென்றார். 

 

ரமேஷ் கஷ்யப் மிகவும் யோசித்து, டாக்டர் ஹர்ஷவர்த்தனை தீர்த்துக் கட்ட ஒரேவழி அவரது தம்பி குமாரசாமியை உபயோகப் படுத்துவதுதான் என்று முடிவு செய்தான்.

 

குமாரசாமியுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டான்.  அடிக்கடி அவனுடன் தொடர்பில் இருந்தான்.  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து நன்றாக குடிக்க வைத்தான்.  அழகிய பெண்களை அறிமுகம் செய்து அவர்களின் உடல் மென்மையைப் புரிய வைத்தான்.

 

குமாரசாமி ஒரு கட்டத்தில் ரமேஷ் கஷ்யப்பின் உபசரிப்பில் மயங்கி அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்குத் தள்ளப் பட்டான்.

 

“குமார் எனக்கு நீ ஒரு பெரிய உதவி செய்யணும், செய்வியா?”

 

“சொல்லு ரமேசு... உனக்காக என் உயிரையே கொடுப்பேன்.”

 

“நீ உயிர விட வேண்டாம்... உயிர எடுத்தாப் போதும்.”

 

“கொலையா...? எனக்கு பயமா இருக்கு ரமேஷ்...”

 

“இத பாரு குமார் உன்னால ஈஸியா செய்ய முடியும்.. இத நீ செஞ்சிட்டேன்னா மொத்தம் எட்டு கோடி உனக்கு கிடைக்கும்..முதல் தவணையா நாளைக்கு ரெண்டு கோடி அட்வான்ஸ் தரேன்..”

 

“.........”

 

“இத பாரு குமார் இந்தக் கொலைய செஞ்சிட்டு எட்டு கோடில நீ புரளலாம்... உலகம் சுற்றி வந்து ஆசைப்பட்ட பெண்களை தொட்டுப் பார்த்து ரசனையுடன் அனுபவிக்கலாம்.. நீ நம் நட்புக்காக இந்தக் கொலையை செய்யணும்.” 

 

‘யாரை?”

 

“உன்னோட அண்ணன் டாக்டர் ஹர்ஷவர்த்தனை...”

 

மறுநாள் ரமேஷ் அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த உயர் ரக சைலன்சர் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று விளக்கிச் சொல்லி  புரிய வைத்தான்.  அடுத்த நாள் டாக்டர் ஹர்ஷவர்த்தனை அதே துப்பாக்கியால் கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது.  .

 

குமாரசாமிக்கு அன்று மாலை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெரிய விருந்தும் அதைத் தொடர்ந்து அழகிய பெண்களின் அருகாமையும் கிடைத்தது.  முன் பணமாக இரண்டு கோடி கை மாறியது. 

 

அதே இரவு டாக்டர் ஹர்ஷவர்த்தன் தூங்கிக் கொண்டிருந்தபோது குமாரசாமி மெட்டல் டிடெக்டர்கள், தானியங்கி கேமிராக்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு அடுத்த தெருவில் காரினுள் காத்திருந்த ரமேஷ் கஷ்யப்பிடம் சென்று துபபாக்கியை வாங்கி வீட்டினுள் ஒளித்து வைத்துக் கொண்டான்.  

 

மறுநாள்... டாக்டர் ஹர்ஷவர்த்தன் கொலை செய்யப்பட வேண்டிய தினம்.

காலை பத்து மணிக்கு அவரது அலுவலக அறையில் அவரை சுட்டுக் கொல்வதாக ஏற்பாடு.  எட்டரை மணிக்கு குமாரசாமி அவருடன் காலை உணவு எடுத்துக் கொண்டான்.  நடக்கப்போகும் விபரீதங்கள் ஏதுமறியாமல் டாக்டர் தன் தம்பியிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

 

ஒன்பதரை மணிக்கு தன் அலுவலக அறைக்குச் சென்று லாப்டாப்புக்கு உயிரூட்டி தனக்கு வந்த மெயில்களை மேய்ந்து கொண்டிருந்தார்.

 

9.58...

 

குமாரசாமி அவரது அலுவலக அறைக்குள் வந்தான். டாக்டர் அவனைக் கவனிக்காது மெயிலில் மூழ்கியிருந்தார்.

 

“என்னை மன்னிச்சிடு ஹர்ஷா..”  குரல் கேட்டு டாக்டர் நிமிர, தன்னை நோக்கி கையில் பள பளக்கும் துப்பாக்கியை நீட்டியபடி குரூரப் புன்னகையுடன் நின்றிருந்த தம்பியைப் பார்த்து மிகுந்த பதட்டத்துடன், “குமார், துப்பாக்கிய உடனே உள்ள...” 

 

கிஷ்யோங் கிஷ்யோங் என்று புல்லட்கள் தொடர்ந்து பாய, உடல் சல்லடையாகி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தான் குமாரசாமி.

 

அங்கிருந்த ரோபோக்களின் துப்பாக்கிகளிலிருந்து வெண்மையாக புகை வெளியேறியது.  

 

தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தன் மேகக் கணிமை பற்றி பாரதப் பிரதமரிடம் நேரில் விளக்கினார்.


- எஸ்.கண்ணன்

by Swathi   on 26 Dec 2015  1 Comments
Tags: கணிமை   Megam   S.Kannan   எஸ்.கண்ணன்   த்ரில்லர் சிறுகதை        
 தொடர்புடையவை-Related Articles
ஜல்லிக்கட்டு - எஸ்.கண்ணன் ஜல்லிக்கட்டு - எஸ்.கண்ணன்
மேகக் கணிமை - எஸ்.கண்ணன் மேகக் கணிமை - எஸ்.கண்ணன்
மேகமே..!! மேகமே..!!
கருத்துகள்
29-Dec-2015 10:17:38 சப்ராஸ் முகம்மது said : Report Abuse
வித்தியாசமான விறுவிறுப்பான விஞ்ஞானக் கதை. மிக விரும்பிப் படித்த கதை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.