LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

மேழியின் மேன்மை - கோ.ஜெயபாலன்

திருக்குறள், ஒரு ஞானக்களஞ்சியம். அதில் இல்லாதது எதுவுமில்லை.
''அகர முதல எழுத்தெல்லாம்...'' எனத் தொடங்கி ''கூடி முயங்கப் பெறின்'' என்று, தமிழின் முதல் எழுத்தான, ''அ''வில் ஆரம்பித்து, ''ன்'' இல் முடித்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என இவ்வையகத்திற்குச் சொன்னதெல்லாம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும், ஏன் இனிவரும் யுகங்களுக்கும் பொருந்துகின்றவை.
திருக்குறளும் ஒரு வேதம்தான். அதனால்தான் நம் முன்னோர்கள் திருக்குறளை ''உலகப் பொதுமறை'' என்றார்கள்.
பைந்தமிழ்க் குறளைப் பாங்குடன் பயின்ற பன்மொழிப் பாவலன் பாரதி, ''யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை'' என்றும், ''வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு'' என்றும் பாடினான்.
ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அது பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவேண்டும்.
பொருளுக்கு ஆதாரம் விவசாயம், தாரம் தொழிற்சாலை. தற்போது நம் நாட்டில் தொழிற்சாலைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை.
பசியைப் புசிப்பவர்கள்
எத்தனையோ பேருக்கு ஏகாந்த உணவளித்து, பசியினையும் ஆசையோடு புசித்தவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள். இந்தப் பாருக்கே படியளந்து பசிப் பிணியைப் போக்குகின்றவர்கள் பாமர விவசாயிகள்.
பசியினைப் படைத்தவன் பரம்பொருள் என்றால் அதனைப் போக்கிடும் வித்தையறிந்தவன் விவசாயி. அந்தப் பசியால்,
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்
என்றாள் ஒளவை. அந்தப் பசிப்பிணியை நீக்குகின்ற பசிப்பிணி மருத்துவர்கள்தான் உழவர்கள். அவர்களின் சிறப்பை, ''தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது'' என்றும் ''உழவர்க்கு அழகு ஏர்உழுதூண் விரும்பல்'' என்றும் நீதி நூல்கள் நவிலும்.
விவசாயத்தைப் புறக்கணிக்கும் எந்த ஒரு நாடும் வளராது. வளரவும் முடியாது. அதனால்தான் மனிதனின் இன்றியமையாத் தேவையான ''உணவு, உடை, இருப்பிடம்'' ஆகியவற்றில் உணவிற்கு முதலிடத்தை நம் முன்னோர்கள் தந்தனர்.
பசி நீங்கினால்தான், உடல் உழைக்கும்; அறிவு வேலை செய்யும். அனைத்தும் நடக்கும். உழவர்கள் வாழ்ந்தால்தான் உலகம் வாழும்.
புராணங்களில் மேழி
அன்று மிதிலை மன்னனான சனகராசன் ''பொன் ஏர் பூட்டி, பூமியை உழுததாக'' இராமாயணம் சொல்லும்.
மகாவிட்ணுவின் தசாவதாரத்தில், ஓர் அவதாரமான பலராமன் தனக்கென ஓர் ஆயுதமாகக் கொண்டதும் மேழிதான்.
அதர்மமான போர்முறையால் துரியோதனனை வென்ற பீமனை, பலராமன் தன் மேழி ஆயுதத்தால் கொல்ல முயன்ற போது, கண்ணன் பீமனைக் காக்க பலராமனைச் சமாதானப்படுத்தியதாகப் பாரதம் பேசும்.
அதுபோல் மேன்மையுற்ற உழவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துத் தங்கள் மேழி ஆயுதத்தை ஏந்துவார்களேயானால் அல்லது துறப்பார்களேயானால் இந்த மேதினியே ஏது?
மேகங்கள்
''வானம் சுருங்கில் தானம் சுருங்கும்'' என்பர். மழையின் உதவியால்தான் மண்ணில் விவசாயம் நடைபெறுகிறது. அனைத்திற்கும் நீர் தேவையாகிறது. அதனால்தான் ''கடவுள் வாழ்த்திற்கு'' அடுத்து ''வான் சிறப்பை'' வள்ளுவன் வைத்தான். ''நீரின்றி அமையா துலகு'' என்றான்.
அதையேதான் இளங்கோவும் தனது பாயிரத்தில்,
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்
என்றான். தற்போது மழையும் விவசாயத்தைப் புறக்கணிக்கிறது.
''வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்'' என்ற வள்ளலாரின் வாசகத்திற்கு ஏற்ப மேகங்கள் எல்லாம் மழை பொழிந்தால் விவசாயம் செழிக்கும்.
வள்ளுவன் அறிவியல் முன்னோடி
உலகம் பல தொழில்களைச் செய்து கொண்டு சுழல்கிறது. இந்த உலகத்தின் சுழற்சி உழவர்களின் ஏர்வழியே செல்கிறது என்று மேழியின் மேன்மையை உலகச் சுழற்சி என்ற அறிவியல் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ''சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்'' என்று சொன்னவர் திருவள்ளுவத் தமிழன்.
சுழலுகின்ற பூமியின் உழலுகின்ற அனைவரது வாழ்க்கைக்கும் அச்சாணியாகத் திகழ்பவர்கள் உழவர்கள். சுழலுகின்ற பூமிக்கு ஓர் அச்சாணி தேவை. இந்தச் சுழலும் பூமியின் அச்சாணியே உழவர்கள் என்பதை அனுபவபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் அன்றே சிந்தித்ததால்தான் ''உழுவார் உலகத்தார்க்கு ஆணி'' என்றான்.
நாமார்க்கும் குடியல்லோம்
மன்னராட்சியில் வேளாண்மைத் தொழில் செய்தோர்க்கு ஒரு மகோன்னத மதிப்பிருந்தது. அதனால்தான்,
நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
என்று அப்பர் பெருமானால் பாட முடிந்தது. இன்று மக்களே மன்னர்களானதால் அவர்களுக்கு விவசாயத்தின் அருமை தெரியவில்லை.
உலகிற்கே உழவர்கள் உணவளிப்பதால், உலகமே அவர்களைத் தொழுதுதான் தொடர்ந்து பின் செல்ல வேண்டும் என்று உணர்ந்த வள்ளுவன்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்றான். உழவர்கள் என்றும் சுதந்திர வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்வதால்,
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பவர்கள்
என்றான். உழவர்கள் யாரிடமும் யாசிப்பதில்லை; யாசிப்பவர்களுக்கு யோசிக்காது யாசகம் தருபவர்கள். யாசிப்பவர்களை, நேசிப்பவர்கள். விருந்தோம்பலைப் பூசிப்பவர்கள். அவர்களுக்கு ஈடு இணை இப்புவியில் இல்லை. அதனால்தான்
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர்
என்றார் வள்ளுவர்.
உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலை விட்டுவிட்டால் பற்றிலாத் துறவியும் தங்களுடைய துறவுப் பற்றையும்விட்டு விட வேண்டியிருக்கும். துறவிகள் துறவைத் துறந்தால் ஞானமேது? மோனமேது? வேதமேது? நாதமேது?
உழவுத் தொழில் ஒரு புண்ணியமான தொழில். அதுவும் ஒரு தவமே. அவர்கள் வாழ்க்கை ஒரு விரதமே.
உழவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கோல் கூட மிஞ்சாது என்று தெரிந்தும் அவர்கள் செய்வது ஒரு தர்மயாகம்.
சீரைத் தேடின் ஏரைத்தேடு
நிலத்தைப் பன்முறை உழுது, பண்படுத்திப் பயிரிட்டால் பயிர்செழிக்கும், விளைச்சல் மிகும் என்பதை அறிந்த வள்ளுவர்,
ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
என்று ஏரோட்டி, எருவிட்டு, நீரிட்டு, களைநீக்கிக் காத்திட வேண்டுமென்கிறார்.
இப்படிச் செய்தால்தான்,
வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும், குடியுயரக் கோன் உயரும்
என்றார்கள் நம் முன்னோர்கள்.
''பூமியைத் திருத்தியுண்'' என்ற ஒளவையின் ''கொன்றை வேந்தன்'' கொள்கைப்படி காடுவெளிகளைத் திருத்தி, கழனியாக்கி, உணவுப் பஞ்சத்தைப் போக்க, ''சீரைத் தேடின் ஏரைத் தேடு'' என்று உழைத்தவர்களுக்கு இந்நாடு செய்த சீர்தான் என்ன?
நாடு காக்க
கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னார் காந்தி. அந்தக் கிராமத்தின் முதுகெலும்பே விவசாயிகள்தான்.
அவர்கள் செல்வங்களை நாட்டிற்கு அள்ளித்தரும் அற்புத வள்ளல்கள். அவர்களின் செல்வர்கள் கல்வியறிவு பெறுவதே இன்று கடினமான காரியமாகிறது.
அன்று விவசாயத்திற்கு இருந்த ஒரு கம்பீரமான கௌரவம் இன்று ஏனோ ஏளனமாகிவிட்டது. ''மேழிச் செல்வம் கோழைபடாது'' என்று ''கொன்றை வேந்தனில்'' ஒளவை கூறியது, குவலயத்தை விட்டே போகிறது.
இதைப் போக்கக் கல்வியில், வேலையில், சாதிகளுக்கு ஒதுக்கப்படும், இட ஒதுக்கீட்டைப் போலவே அரசு விவசாயிகளுக்கும் செய்து நீதி காத்திட வேண்டும்.
''பருவத்தே பயிர் செய்'' என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல அரசும் செய்யவேண்டிய பருவமிது. அரசு என்பதும் வேளாண்மைதான். அந்த விவசாயி சேற்றிலே கால் வைக்கவில்லை என்றால் நாடே சோற்றிலே கைவைக்க முடியாது. நட்டத்தில் நாடு நலிவுறும். விவசாயத்தை நாடு காக்க வேண்டும்.
நல்ல நன்செய் நிலங்களை அரசு காத்திட வேண்டும். அங்குப் பல அடுக்குமாடி வீடுகள் விளைவதைத் தடுத்திட வேண்டும். விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்திடல் வேண்டும். அப்போதுதான் நாடு சிறக்கும். இன்றேல் உலகம் தன் நிலையைத் துறக்கும்.
வயலும் வாழ்வும்
அன்று முதல் இன்று வரை வயலோடு ஒட்டியே வாழ்க்கை நடக்கிறது.
நமது நாட்டிலே திருமணம் ஆகும்வரை கன்னியர்கள் தங்கள் பெற்றோர் வீட்டில் இருப்பதை நாற்றங்காலுக்கும், மணமுடித்து மணாளன் இல்லம் செல்வதை நடவு நட்ட வயலுக்கும் ஒப்புமை கூறுவர்.
கணவன், மனைவியைப் பாதுகாப்பதுபோல், ஒவ்வொரு உழவனும் தனது நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறும் வள்ளுவரின்,
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
என்ற வாய்மொழி வாழ்வியல் நெறிமுறையாய் நோக்கத்தக்கது.
அதே உழவன் உழைக்காமல், வறுமையால் சோம்பி இருந்தால் நிலமகள் தன்னுள் சிரிப்பாள் என்பதை,
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்று கூறுவது உளவியல் ரீதியாக இல்லற வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க உகந்தது.
சிந்திக்கச் சிந்திக்கக் கவியரசு கண்ணதாசன் கூறியது போல் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியதுதான்.
உழவும் தொழிலும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
என்றான் கவிஞன்.
விவசாயமும், தொழிற்சாலையும் நாட்டின் இரு கண்கள். அதிலும் மேழியின் மேன்மையை உணர்ந்துதான் அன்றே ''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்'' என்றனர்.
அவரவர் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவரவர் விலை நிர்ணயம் செய்யும் உரிமை இருக்கிறது இவ்வுலகில். ஆனால் உணவுப் பொருளின் விலையை மட்டும் நிர்ணயம் செய்யும் உரிமை மட்டும் ஏனோ உழவனுக்கு மறுக்கப்படுகிறது.
நெற்பயிர் விளைத்து உலகுக்கு உணவிடும் உழவனை மட்டும் ஏனோ நித்தம், நித்தம் வறுமை வாட்டும். கடன் சுமையால் அவனது வாழ்க்கை பாலைவனமாகும்.
பெற்று வளர்த்த குழந்தைகள், பெற்றோரையே எதிர்த்துத் துன்புறுத்தி அழிக்கத் துணிவதுபோல் நாட்டு மக்களைக் காத்திடும் விவசாயிகளை நாடே நலிவுக்கு உள்ளாக்குகிறது.
இந்நிலைமாறி வள்ளுவன் காட்டிய வழியின்படி மேழியின் மேன்மை செழிக்க வேண்டும். மேதினியில் வளம் கொழிக்க வேண்டும்.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் ஆசிரியர்களுக்கு வலைத்தமிழ் வழங்கும் பயனுள்ள காணொலிகள். தமிழ் ஆசிரியர்களுக்கு வலைத்தமிழ் வழங்கும் பயனுள்ள காணொலிகள்.
தேவைப்படும் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல்கள். தேவைப்படும் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல்கள்.
. திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி. . திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி.
திருக்குறள் ஐம்பெரும் விழா - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி உரை திருக்குறள் ஐம்பெரும் விழா - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி உரை
ஐரோப்பியத் தமிழறிஞர் பிரான்சிஸ் ஒயிட் (எல்லீசன்) நினைவுநாள் பகிர்வோம்! ஐரோப்பியத் தமிழறிஞர் பிரான்சிஸ் ஒயிட் (எல்லீசன்) நினைவுநாள் பகிர்வோம்!
தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் 1953ல் திருக்குறளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள் எத்தனை என்று குறிப்பிடுகிறார்? தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் 1953ல் திருக்குறளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள் எத்தனை என்று குறிப்பிடுகிறார்?
Management Principles in Thirukkural Management Principles in Thirukkural
III – BBA MANAGEMENT CONCEPT IN THIRUKURAL - Bharathidasan University III – BBA MANAGEMENT CONCEPT IN THIRUKURAL - Bharathidasan University
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.