LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயகாந்தன்

தவறுகள், குற்றங்கள் அல்ல...!

தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை.
மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகளில் இன்னும் கூட மரியாதை கலந்திருந்தது. அவரைப் பற்றி அவளுக்கு வருத்தம்தான் மிகுந்திருந்ததே தவிர, அவரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமோ, விரோதமோ அவள் முகபாவத்தில் தெரியவில்லை.
'சீ' என்று அவள் காறித் துப்பியோ அல்லது 'யூ டாமிட்' என்று கத்தியோ தன்னை அவமதித்திருந்தால் கூடத் தேவலாம் போலிருந்தது நாகராஜனுக்கு. அவ்வித அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டதுண்டு.
அது மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று நாகராஜனுக்குத் தெரியும். அவருடைய அதிகாரம், செல்வாக்கு, தோரணை, வயது, சமூக அந்தஸ்து இவை எல்லாமோ, அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றோ அவருக்குத் துணை நிற்கும். 'என்ன நின்று என்ன? பட்ட அவமானம் பட்டதுதானே! எவ்வளவு பட்டும் எனக்குப் புத்தி வரவில்லையே!' என்று தன்னையே தன் மனத்துள் கடிந்துகொண்டபோது, அவரது கண்கள் வெட்கமற்றுக் கலங்கின. அவர் அவமானத்தாலும், தன் மீதே ஏற்பட்ட அருவருப் பாலும் தலைகுனிந்து உட்கார்ந்து, தன்னைப் பற்றிக் கசப்புடன் யோசித்தார்.
'சீ..! நான் என்ன மனுஷன்! வயது ஐம்பது ஆகப் போகிறது. தலைக்கு உயர்ந்த பிள்ளையும், கல்லூரியில் படிக்கும் பெண்ணும்... அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருந்தால் இந்நேரம் நான்கு பேரக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருப் பேன்! சீ..! நான் என்ன மனுஷன்?'என்று பல்லைக் கடித்துக்கொண்டார். இரண்டு கைகளையும் கோட்டுப் பாக்கெட்டுக் குள் நுழைத்து, விரல்களை நெரித்துக்கொண்டார். கண்களை இறுக மூடி, நாற்காலியில் அப்படியே சாய்ந்து, தன்னை அறி யாமல், 'வாட் எ ஷேம்!' என்று முனகியவாறே, தலையை இடமும் வல மும் உருட்டினார். அவ ருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
தெரஸாவின் அந்த முகமே அவர் நினைவில் வந்து வந்து நின்றது.
சற்று முன்...
ரத்தமாகச் சிவந்து, நெற்றியில் சிகை புரள, உதடுகள் தீப்பட்டவை போல் சிவப்புச் சாயம் கலைந்து துடிதுடிக்க, கண்களிலிருந்து கலங்கிச் சுரந்த கண்ணீருடன், ''ப்ளீஸ்... லீவ் மீ! ஐ ரிக்ரெட்... ஃபார் எவ்ரிதிங்...'' என்று அவரிடமிருந்து திமிறி விலகிச் சென்று, உடல் முழுவதும் நடுநடுங்க அவள் நின்ற தோற்றம்...
அவள் கண்களிலிருந்து பெருகிய நீர், அவள் தனது ஸ்கர்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்துத் துடைப்பதற்குள் 'பொட்'டென்று அவரது டேபிளின் மீது... இந்தக் கண் ணாடி விரிப்பின் மேல் விழுந்து, இதோ இன்னும் உலராமல்சிதறிக் கிடக்கிற இரண்டு நீர் முத்துக்கள்...
அவர் எதிரே நின்று தான் அழுதுவிட்ட நாகரிகமற்ற செயலுக்கு வருந்தி, ''...ஆம் ஸாரி'' என்று தனக்குள்ளேயே விக்கியவாறு, கர்ச்சீப்பில் முகம் புதைத்துக் கொண்டு அங்கிருந்து தனது அறைக்கு ஓடினாளே... அதோ, அவளது ஸ்லிப்பர் சப்தம் இப்போதுதான் ஓய்ந்து, 'பொத்'தென அவள் நாற்காலியில் விழுகிற ஓசை...
அவர் காதில் அவளது வார்த்தைகளும்... அவர் நினைவில், அவமானமும் துயரமும்கொண்டு ஓடினாளே அந்தக் காட்சியும்தான் இந்தச் சில நிமிஷங்களில் திரும் பத் திரும்ப வந்து நிற்கின்றன.
அவள் எவ்வளவு பெருந்தன்மையானவள்! எவ்வளவு உயர்ந்த, மென்மையான இயல்புகள் கொண்டவள் என்பதை உணர் கையில் அவருக்கு நெஞ்செல்லாம் வலிக்கிறது.
'நான் அவளிடம் இப்படி நடந்துகொள்வேன் என்று அவள் கனவுகூடக் கண்டிருக்க மாட் டாள்' என்பது புரிகையில், தன்னைத்தானே இரு கூறாகப் பிளந்துகொள்ளலாம் போலிருக்கிறது அவருக்கு. ஒரு நிமிஷத்தில் தான் அடைந்துவிட்ட வீழ்ச்சியை எண்ணி எண்ணி அவர் நெஞ்சைப் பிசைந்துகொள்கிறார்.
'தெரஸாவுக்கு எப்படிச் சமாதானம் கூறுவது? இந்த மாசை எப்படித் துடைப்பது? மறுபடியும் அவள் மனதில் தனது பழைய கௌரவத்தை எவ்விதம் நிலை நிறுத்துவது?'
'ம்..! அவ்வளவுதான். எல்லாம் போச்சு! கொட்டிக் கவிழ்த்தாகி விட்டது! எவ்வளவு பெரிய நஷ்டம்?' - நாகராஜன் நினைத்து நினைத்துப் பெருமூச்சு விடுகிறார். நெற்றி வியர்க்க வியர்க்கத் துடைத்துக்கொள்கிறார். எங்கா வது போய் அழலாம் போல் தோன்றுகிறது.
தான் சில நாட்களாகவே அவள்பால்கொண்ட சபலங்களுக்கு அவளது நடவடிக்கைகள், புன்சிரிப்பு, உபசரிப்பு... எல்லாவற் றுக்கும் மேலாகத் தனது வயதை யும், தான் அவளிடம் காட்டுகிற பரிவையும் உத்தேசித்து ஒரு தகப்பனிடம் தெரிவிப்பதுபோல் அவள் தனது வாழ்க்கையின் அவலங்களையும் ஏமாற்றங்களை யும் கூறி மனம் கலங்கியது முதலிய வற்றைச் சாதகமாகக்கொண்டு, அவளுக்குத் தன் மீது நாட்டம் என்று நம்பிய தனது கேவலத்தை எண்ண எண்ண, உள்ளமெல்லாம் குமட்டுகிறது அவருக்கு.
அப்படியரு அசட்டு நம்பிக்கையில்தான், அவள் தடுக்கமாட்டாள் என்ற தைரியத்தில் அவர் அவளிடம் அப்படி நடந்துகொண்டார்.
இந்தப் பத்து நாட்களாய், வழக்கமாகச் சாப்பாடு பரிமாற வருகிற அந்தக் கன்னையா சொல்லிக்கொள்ளாமல் ஓடிப் போனானே, அந்தத் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 'லஞ்ச்' டயத்தில் தெரஸாவும் நாகராஜனும் ஒன்றாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.
மத்தியானத்தில் ஆபீஸிலேயே சாப்பிடுகிற வழக்கத்தை உண்டாக்கியவன் கன்னையாதான். அவன் அவர் வீட்டோடு வந்து சேருவதற்கு முன்... இரண்டு வருஷத்துக்கு முன்னால் வரை, அவர் லஞ்ச்சுக்கு மத்தியானத்தில் வீட்டுக்குப் போய்த்தான் வரு வார். ஆனால், வீட்டுக்குப் போனால் 'சாப்பிட்டோம், வந் தோம்' என்று முடிகிறதா? கொஞ்சம் இளைப்பாற வேண்டும்; படுக்க வேண்டும்; சிறு தூக்கம் போட வேண்டும். திரும்ப ஆபீஸ§க்கு வர, நாலு மணி ஆகிவிடுகிறது.
நாகராஜன் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் ஆபீஸ§க்கு வரலாம்; போகலாம். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். அந்தக் கம்பெனியின் முதலாளிக்கு அடுத்தபடி அதிகாரம் உள்ளவர் அவர்தான். சில விஷயங்களில் முதலாளிக்கும் கொஞ்சம் மேலே என்று சொல்லுகிற அளவுக்குப் பொறுப்பும் உடையவர். இருபத்தைந்து வருஷ காலமாக இந்தத் தலைமை ஆபீஸில் இருந்துகொண்டே மாகாணம் முழுவதும் பல கிளைகளைத் தோற்றுவித்து, இன்றிருக்கும் நிலைக்கு இந்த ஸ்தாபனத்தை உயர்த்தியவர் நாகராஜன் என்றால், அவர் அந்த அளவுக்குப் பொறுப்பும், முதலாளிகளின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதனால்தானே முடிந் திருக்கிறது!
கன்னையா தன் வீட்டோடு வந்த பிறகு, ஆபீஸ§க்குச் சாப்பாடு கொண்டுவந்து, தானே அவருக் குப் பரிமாறிவிட்டுப் போக ஆரம்பித்தான். அவர் முக்கியமாக வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவதற் கான காரணம், தானே போட்டுக் கொண்டு சாப்பிடப் பழகாதது தான். அது அவருக்குப் பிடிப்பது இல்லை.
கன்னையா, நாகராஜன் வீட்டு வேலைக்காரனோ சமையற் காரனோ என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவன் அவரது சொந்த அத்தை மகன் என்பதும், சம வயதுடைய பால்ய கால நண்பன் என்பதும் ரொம்பப் பேருக்குத் தெரியாது. தெரியும்படி அவன் நடந்துகொள்ளவும் மாட்டான்.
அவனுக்குக் குடும்பம், கல்யாணம், வீடு, உறவு என்றெல்லாம் ஒன்றுமே ஏற்படவில்லை. சொந்தக்காரர்கள் வீடுகளில்... அவனைச் சொந்தக்காரன் என ஏற்றுக்கொள்கிற வீடுகளில் வந்து கொஞ்ச நாள் தங்குவான். தங்கி இருக்கிற காலத்தில், அந்த வீட்டுக்கு அவன் ஒரு பலமாக விளங்குவான். 
குழந்தைகளுக்குத் தாதி மாதிரியும், கூப்பிட்ட குர லுக்கு ஓடி வரும் சேவகனாகவும் இருப்பான். தோட்டங்கள் கொத் துவான்; துணி துவைப்பான்; கடைக்குப் போவான்; கட்டை பிளப்பான்; சுமை தூக்குவான்; சுவையாகப் பேசிக்கொண்டும் இருப்பான்.
'சொல்லிக்கொள்ளாமல்கூட ஓடிப் போனானே அந்த ராஸ்கல்!' என்று இப்போது பற்களைக் கடிக்கின்ற நாகராஜன், சற்று முன்னால், தான் செய்த காரியத்துக்குக்கூட அவன்தான் பொறுப்பு என்று சுற்றி வளைத்துப் பழியை அவன் தலையில் சுமத்த முயல்கிறார்.
'அந்தப் பயல் ஒழுங்காக வந்து மீல்ஸ் ஸெர்வ் பண்ணி இருந்தால், இவள் இவ்வளவு நெருக்கமாக வந்திருக்க மாட்டாளே!' என்று நினைத்தபோது, கன்னையாவைப் பற்றிய நினைவுகள் அவருக்கு மிகுந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய நாகராஜன், காரை ஷெட்டில் நிறுத்துவதற்காகத் திரும்பியபோது, ஷெட்டின் ஒரு மூலையில் தாடியும் மீசையுமாய் ஒரு பரட்டைத் தலையன் எழுந்து நிற்பதைப் பார்த்து, கார் விளக்கை அணைக்காமல் வெளியே தலை நீட்டி, ''யாரது, அங்கே?'' என்று மிரட்டுகிற தோரணையில் கேட்டார்.
அவன் அருகில் ஓடிவந்து, ''நான்தான் கன்னையா. என்னைத் தெரியலியா மாப்பிளே?'' என்று ரகசியம் போல் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, நாக ராஜனுக்கு மனசை என்னவோ செய்தது.
''என்னடா இது கோலம்? வா... வா!'' என்று அழைத்து வந்து, வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிச்சயம் செய்து வைத்து, அங்கேயே தங்கி இருக்கச் சொன்னார். கொஞ்ச நாட்களில் அவரது குடும்பத்துக்கு அவன் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக மாறி இருந்தான்.
ஆரம்பத்தில், அவனை வீட்டில் சேர்த்துக்கொண்டதற்காக மற்ற உறவினர்கள் எல்லாம் நாகராஜனையும் அவன் குடும்பத் தினரையும் மிகவும் எச்சரிக்கை செய்தவாறு இருந்தனர். ஆனால், நாகராஜன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவனைச் சேர்த் துக்கொள்வது தனது கடமை என்று அவர் நினைத்தார். எனினும், அந்தக் காரணங்களை அவர் யாரிடத்தும் இதுவரை பகிரங்கப்படுத்திக்கொண்டது இல்லை.
அந்தப் பழைய பால்ய அனுபவங்களின் நினைவுகளை, எப்போதாவது தனியாக இருக்கையில் அவனோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வார் நாகராஜன்.
அந்தக் காலத்தில் இந்தக் கன்னையா ரொம்ப நல்ல பிள்ளை யாக இருந்தான். ஒன்றுமே தெரி யாத அவனை புகை பிடிக்கப் பழக்கியதும், மதுவருந்தச் செய்த தும், அந்த மாதிரியான விளை யாட்டுகளில் ஈடுபடுத்தியதும் நாகராஜன்தான். அவற்றை அவர் மறக்கவில்லை. அதன் பிறகு, அவை யாவும் ஏதோ ஒரு பருவத் தின் கோளாறு என்று ஒதுக்கி - அல்லது, உண்மையிலே ஒரு பருவத்தின் கோளாறுகளாக அவை இவரிடமிருந்து நீங்கிய பின், இவரால் பழக்கப்படுத்தப் பட்ட அந்தக் கன்னையன் அவற்றிலேயே வீழ்ந்து அழுந்தி மூழ்கிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்ட காலங்களில், நாகராஜன் குற்ற உணர்வினால் உறுத்தப்பட்டிருக்கிறார்.
நாகராஜனைப் பொறுத்தவரை அந்தப் பழக்கங்கள் யாவும் மகா பாவங்கள் என்று கருதுகிற ஒழுக் கக் கண்ணோட்டம் எதனாலும் அவனுக்காக அவர் வருந்த வில்லை. இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஒருவன் வாழ்க்கை யின் சகல மரியாதைகளையும் இழப்பது பரிதாபகரமான வீழ்ச்சி என்பதனால், அவனிடம் அவர் அனுதாபம்கொண்டார்.
இப்போதும்கூட நாகராஜன் எப்போதாவது பார்ட்டிகளிலும், சில சமயங்களில் வீட்டிலேயேகூட மது அருந்துவது உண்டு. அது யாருக்கும் தெரியாது. நாகராஜ னும் புகை பிடிக்கிறார்; பெண்களை இச்சையோடு பார்க்கிறார். 
எல்லாவற்றுக்கும் ஒரு அத்தும் அளவும் இல்லாதபோதுதானே மனிதன் தலைகுப்புற வீழ்ந்து விடுகிறான்!
அப்படி வீழ்ந்துவிட்டவன் கன் னையா. அவன் அப்படி விழக் காரணம், ஏதோ ஒரு வகையில் தானே என்று நினைக்கையில், அவனைப் பார்த்துப் பெருமூச் செறிவார் நாகராஜன்.
பிறர் பார்வையிலும் சமூக அந்தஸ்திலும் அவன் வீழ்ந்து விட்டவன்தான் என்றாலும்கூட, அவனைத் தனது அந்தரங்கத்தில் சமமாகவே பாவித்தார் நாக ராஜன். அவனும் அதே மாதிரி அந்த எல்லை மீறாது அவரோடு சமத்துவம்கொண்டான்.
எப்போதாவது, தான் மது அருந்தும்போது அவனையும் அழைத்து, அவனுக்கும் கொடுப்பார். தனக்கு மகுடாபிஷேகம் நடந்த மாதிரி களி கொள்வான் அவன். அப்போதும்கூட மிகவும் வெட்கத்தோடு, கையில் தம்ளருடன் ஒரு மூலையில் போய்த் திரும்பி நின்றுகொண்டு, மறை வாகக் குடிப்பான். ''போதும்... போதும்'' என்று சொல்லித் தம்ளரை வைத்துவிட்டு ஓடி விடுவான். கேட்டால், ''நமக்கு இந்தச் சரக்கெல்லாம் சரிப்பட்டு வராது. ரெண்டு ரூபா பணம் குடு மாப்பிளே, எதுக்கு இதெ வேஸ்ட் பண்றே?'' என்று பணத்தை வாங்கிக்கொண்டு போனால், இரவில் எந்நேரம் வந்து அவன் ஷெட்டில் படுத்துக்கொள்கிறான் என்று யாருக்கும் தெரியாது.
யாருக்கும் தெரியாமல் அந்தச் செலவுக்காக வாரத்தில் இரண்டொரு தடவை அவர் அவனுக்குப் பணமும் கொடுப்பார்.
அவன் சாப்பாடு பரிமாறிச் சாப்பிடுவது, அவருக்கு எப்போ தும் ரொம்பத் திருப்தியாக இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூடச் சில சமயங்களில் அவன்தான் அவருக்குப் பரிமாறுவான். நாகராஜனின் மனைவி ஸ்தூல சரீரி. அவளுக்கு உடம்புக்கு நோய் வந்துவிடும். ஈஸிசேரிலிருந்து அவளை எழுந்து வரச் செய்வதைக் கூடியவரை தவிர்க்கவே விரும்புவார் அவர்.
சில சமயங்களில் டிரைவர் இல்லாதபோது, கன்னையாவோடு தனியே காரில் செல்கையில், அவனோடு தமாஷாகச் சமத்துவமாய் பழைய காலம் மாதிரி பேசி மகிழ்வார் நாகராஜன். அது மாதிரிச் சமயங்களில் அவனும் தன்னை மறந்து 'டா' போட்டுக் கூடப் பேசுவான். அது ரொம்ப இயல்பாக, சுருதி பிசகாமல் இருக்கும்.
''டேய், கன்னையா..! நம்ம செக்ரட்டரி அம்மா எப்படி இருக்கா?'' - புடவை கட்டாத அந்தச் சட்டைக்காரி எதிர்ப்படும்போது, அவன் நாணிக்கோணி நிற்பதை அவர் பல தடவை கண்டிருக்கிறார். அதனால்தான் கேட்டார். அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் முதலில் அவன் சிரிப்பான்.
''சொல்லு, உனக்கு என்ன தோணுது அவளைப் பார்த்தா?''
''எனக்கு என்ன தோணுது?'' - மார்பில் முகவாய் படிகிற மாதிரி தலை குனிந்துகொண்டான் கன்னையா. கொஞ்சம் நேரம் கழித்து ஒரு அசட்டுச் சிரிப்புடன், ''நீ விட்டு வெச்சிருப்பியா மாப்பிளே! எனக்குத் தெரியும்டா!'' என்று முழங்கையால் இடித்துக் கொண்டு, கிளுகிளுத்துச் சிரித்தான்.
''சீ... சீ! அதெல்லாம் இல்லை. நீ முன்ன மாதிரியே என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கியா? வயசாச்சே!'' என்பார் நாகராஜன்.
''அப்படின்னா அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது தெரியுது!'' என்று கண்களைச் சிமிட்டி, அவரைக் குஷிப்படுத்தினான் அவன்.
'அந்தப் பாவிதான் இந்த எண்ணத்துக்கு முதல் பொறி வைத்தவனோ?'
இவ்வளவும் அந்தரங்கமாய்ப் பேசுவானே தவிர, அவள் முன்னிலையில் இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்க்காமல், தலை நிமிர்ந்து பார்க்காமல், அவருக்குச் சாப்பாடு பரிமாறுவான். தட்டைப் பார்த்து, எது வாய்க்கு ருசிக்கிறது என்று அறிந்து, கேட்குமுன் பரிமாறுவான்.
அவன் பரிமாறுவதையும், அவருக்குப் பணிவிடை புரிவதையும் தெரஸா பார்த்திருக்கிறாள்.
அதனால்தான், அவன் வராமல் அன்று அந்த டிரைவரே அவருக்குப் பரிமாறத் தெரியாமல், இவர் போட்ட சத்தத்தில் பயந்து, கையில் உள்ளதைக் கீழே போட்டு, இவர் ஒன்றுமே சாப்பிடாமல் 'எடுத்துக்கொண்டு போ!' என்று கத்திவிட்டு, அன்று ஓட்டலில் இருந்து டிபன் வரவழைத்துச் சாப்பிட்டதை எல்லாம் கவனித்த தெரஸா, அடுத்த நாள் மத்தியானம் அவர் தானே பரிமாறிக்கொள்ள முனைகையில்...
''உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் பரிமாறலாமா?'' என்று விநயத்துடன் ஆங்கிலத்தில் கேட்டாள்.
அப்போது நாகராஜனுக்குக் கன்னையா நினைவு வந்தது. 'அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது எனக்குத் தெரியுது!'
நான்கு வருஷமாகத் தன்னிடம் ஸ்டெனோவாகப் பணியாற்றும் தெரஸாவை அன்றுதான் அவர் அப்படி ஒரு பார்வை பார்த்தார். ''யூ லுக் நைஸ் டுடே!'' என்று அவள் அழகைப் புகழ்ந்தார்.
''தாங்க் யூ'' என்று அவள் நன்றி கூறினாள்.
அன்று தெரஸாவையும் தன்னோடு அமர்ந்து சாப்பிடச் சொன்னார் நாகராஜன்.
முதலில், தான் டிபன்பாக்ஸில் கொண்டுவந்து இருக்கும் எளிய உணவை அவரோடு உட்கார்ந்துசாப் பிட, அவள் தயங்கினாள். ஆனால், அவர் மிகவும்வற் புறுத்தவே, அவளும் அவர் எதிரே அமர்ந்து, ஒரே மேஜையில்சாப்பிட்டாள்.
சாப்பிடும்போது கன்னையாவைப் பற்றிக் கேட்டாள். ''வேர் இஸ் தட் மேன்?''
''அந்த ராஸ்கல் ஐந்நூறு ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல்ஓடிப் போய்விட்டான்'' என்று ஆத்தி ரமாகக் கூறினார் நாகராஜன்.
“ஐந்நூறு ரூபாயா? பணத்தை அவ்வளவு அஜாக்கிரதையாக வேலைக்காரர்கள் கண்படவைக் கலாமா?”
''அவன் வேலைக்காரன் அல்ல; என்னுடைய கஸின்!''
''ஓ! ஐ ஆம் ஸாரி!''
''பரவாயில்லை. திருட்டுப் பயலுக்கு வேலைக்காரன் பட்டமே கொஞ்சம் அதிகம்தான்!''
''புவர் மேன்!'' என்று அவள் அவனுக்காக வருத்தப் படுவது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'ஹி வாஸ் வெரி நைஸ் அண்ட் ஹெல்ப்ஃபுல்!'' என்று முனகிக் கொண்டாள்.
நாகராஜனும் பெருமூச்செறிந்தார். தனக்கு வந்திருந்த உணவு வகைகளை அவளோடு பகிர்ந்து கொண்டார். அவள், அவர் அன்போடு தருவதை நன்றியோடு ஏற்றுக்கொண்டாள். அவளும் கன்னையா மாதிரி மிகவும் பரிவோடும், ருசி அறிந்தும் பரிமாறி னாள். மிகுந்த உரிமையோடு அவளது டிபன்பாக்ஸ் உணவையும் அவர் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்.
ஆபீஸ் விஷயம் தவிர வேறெதுவும் பேசாத அவர் கள், இந்த 'லஞ்ச் அவரில்' பொது விஷயங்களையும், சொந்த விஷயங்களையும் பரிமாற்றம் செய்துகொள்ள ஆரம்பித்தனர்.
முன்பெல்லாம் அந்த 'ஏர் கண்டிஷன்ட்' அறையில் அவருக்காக உள்ள ஈஸிசேரில், சாப்பிட்ட பிறகுசற்றுப் படுத்துக் கண்ணயர்வார். இந்தப் பத்து நாட்களாக, ஈஸிசேரில் சாய்ந்து, மேஜையருகே உட்கார்ந்திருக்கும் தெரஸாவுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தார் நாகராஜன்.
அவள் தன்னைப் பற்றி எதையுமே மறைக்காமல், நம்பிக்கைக்குரிய ஒரு பெரிய மனிதரின் பரிவுக்குக் காட்டுகிற நன்றியுணர்ச்சி போலும், இத்தகைய ஒரு கனவான் தன்பால் காட்டுகிற ஈடுபாட்டுக்குக்கொள்ளும் பெரு மிதம் போலும் மனம்விட்டுப்பேசி னாள். குழந்தை மாதிரி சிரித்தாள். தனது சிரிப்பாலும் பேச்சாலும் அவர் மிகவும் மகிழ்ச்சியுறுகிறார் என்பதால், இவரை மகிழ்ச்சி யூட்டவே அவள் சிரித்தும் கல கலப்பாகப் பேசியும் ஒரு நல்ல உடனிருப்பாய்த் திகழ்ந்தாள். அவர் அவளது பேச்சை மாத்திரம் அல்லாது, அவளையே முழுமை யாய் ரசித்தார். அவளது சிரிப்பை யும் பரிவையும் கலகலப்பையும் மோகனமான சாகஸமாகக் கருதி, தன்னை ஒவ்வொரு நாளும் முழுமையாய் இழக்க முனைந்தார்.
சில தினங்களுக்கு முன் அவள் அடுத்த வாரம் வரப்போகும்தனது பிறந்த தினத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும் என்று அவரை அழைத் தாள். இந்த நான்குஆண்டுகளாக அவருக்கு ஒரு ஸ்வீட் தந்து ஆசி பெறுவதைத் தவிர, அவரை விருந்துக்கு அவள்அழைத் ததில்லை. அதற்குக் காரணம், இந்த நான்கு ஆண்டுகளாய்அவர் அவளுக்கு எஜமான் ஸ்தானத்தில் இருக்கிற ஒருவராக இருந்துஇப் போதுதானே ஒரு நல்ல நண்ப ராகவும் மாறியிருக்கிறார் என்கிற இயல்பான காரணத்தை விடுத்து இல்லாத ஏதோ ஓன்றைக் கற்பித் துக்கொண்டார் நாகராஜன்.
''வில் இட் பி எ காக்டெயில் பார்ட்டி'' என்று கண்களைச் சிமிட்டியவாறு அவர் கேட்ட போது...
''அஃப்கோர்ஸ்! என் தந்தை- தாய் இருவருமே பர்மிட் ஹோல் டர்கள்'' என்று அவள் கூறினாள்.
''நீ ஏன் ஒரு பர்மிட் வாங்கிக் கொள்ளக் கூடாது?'' என்றார் நாகராஜன்.
''நோ! நான் குடிப்பதில்லை'' என்றாள் தெரஸா.
''உன் பிறந்த தினத்தன்று நான்உன்னைக் குடிக்க வைக்கப் போகிறேன் பார்!'' என்றார் நாகராஜன்.
அவள் சிரித்துக்கொண்டே, ''அது மாதிரியான விசேஷ சந்தர்ப்பங்களில் 'பார் கம்பெனி'ஸ் ஸேக்' கொஞ்சம் ருசி பார்க்கிறது உண்டு'' என்று சொல்லித் தொடர்ந்து அவள் ஆங்கிலத்தில் எப் படிக் கிறுஸ்துமஸ்ஸின்போது அவளது தந்தை வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் ஓயின் தருவார் என்று விளக்கினாள்.
தங்களது கலாசாரப்படி குடிப்பதும், ஆண்களும் பெண்களும் இணையாக நடனமாடுவதும் எவ்வளவு பரவசமிக்கது என்பதைத் தன்னை மறந்த லயத்துடன் அவள் அவருக்குச் சொன்னாள். அவ்வி தம் சொல்லிக்கொண்டு இருக்கையில் அவள் தனது போன வருஷப் பிறந்த தின வைபவத்தின் நிகழ்ச்சிகளை நினை வில்கொண்டாள். அந்த நினைவில், அப் போது அவளது நம்பிக்கைக்கும் காத லுக்கும் பாத்திரமாய் இருந்து, பின்னர் அவளிடமிருந்து விலகிப்போன ஒரு பாய்ஃப்ரெண்டைப் பற்றியும் அவரிடம் விவரித்தாள். அப்போது அவள் சற்று உணர்ச்சிவயமானாள். பிறகு தானே சமாளித்துக்கொண்டு புன்னகை செய்தாள்.
இவை எல்லாவாற்றையுமே நாகராஜன் வேறு ஒரு கோணத்திலிருந்து புரிந்து கொண்டார்.
அதன் விளைவுதான் சற்று நேரத்துக்கு முன் வழக்கம் போல் உல்லாசமாகச்சாப் பிட்டு முடிந்ததும் அவள் மேஜைஅருகே அமர்ந்து தனது கைப் பையிலிருந்து சிறு கண்ணாடியை எடுத்து உதட்டுச் சாயத்தை சரி செய்துகொண்டு இருக்கையில் டவலில் கைத் துடைத்துக்கொண்டே அவள் பின்னால் வந்து நின்ற நாகராஜன்...
சற்று முன்...
ரத்தமாய்ச் சிவந்த முகத்தில் சிகை புரள, உதடுகள்தீப்பட்டவை போல் சிவப்புச் சாயம் கலைந்து துடிதுடிக்க, கண்களி லிருந்து கலங்கிச் சுரந்த கண்ணீ ருடன் ''ப்ளீஸ் லீவ் மீ! ஐ ரிக்ரட் ஃபார் எவ்ரி திங்...'' என்று அவரி டமிருந்து திமிறி விலகி,உடல்முழு வதும் நடுநடுங்க அவள் நின்ற தோற்றம்...
தெரஸாவின் அந்த முகமே அவர் நினைவில் வந்து நிற்கிறது.
மணி இரண்டு.
மத்தியான இடைவேளைக்குக் கலைந்து போன ஆபீஸ் ஊழியர் களின் நடமாட்டமும் டைப் ரைட்டர்களின் இயக்கமும் மந்தமாக அந்த ஏர்- கண்டிஷன்ட் அறைக்குள் கேட்கிறது.
நாகராஜன் ஒரு மணி நேரத் துக்குள் ஏழு, எட்டு சிகரெட்டு களை ஊதித் தீர்த்திருந்தார்.
தெரஸாவை அழைக்கின்ற 'காலிங்' பெல்லின் பொத்தானை அழுத்தினார்.
அடுத்த விநாடி தெரஸாஅவர் எதிரே வந்து நின்றாள். நாகராஜ னால் தலை நிமிர்ந்து அவளைப் பார்க்க முடியவில்லை. அவர் தலை குனிந்தே இருந்தது.
''ஐ ஆம் ஸாரி... தெரஸா!''
அவள் என்ன பதில் கூறினாள் என்று அவருக்கு விளங்கவில்லை. அவள் இன்னும் அழுதுகொண்டு அதே கோலத்தில்தான் நிற்கி றாளோ? தனது ராஜிநாமாக் கடிதத்தை முகத்தில் விட்டெறியப் போகிறாளோ? என்ற குழப்பத் துடன் அவர் தலை நிமிர்ந்துஅவ ளைப் பார்த்தார்.
அவள் எப்போதும் போல எதுவுமே நடக்காதது போன்று சற்றுமுன் கர்ச்சிப்பில் முகம் புதைத்துக்கொண்டு ஓடியது, தானல்லாதது போல ஒரு புன்முறுவலும், கையில் ஷார்ட் ஹாண்ட் நோட்ஸ் எடுக்கும் ஒரு சிறு புத்தகமும் பென்சிலுமாய் வந்து நின்றிருந்தாள்.
இவள் ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று அவருக்குப் புரிந்தது. அவள் வந்துநின்ற கோலம் தனது டிக்டேஷனை எடுத்துக்கொள்ளக் காத்திருப்பது போல் தோன்றியது. அன்று பல வேலைகள்- பல கடிதங்கள்எழுத வேண்டிய வேலைகள் இருப்பது அவளுக்குத் தெரியும். எல்லா வற்றுக்கும் முன்னால் ஒரு கடிதம் டிக்டேட் செய்ய வேண்டும்என்ற எண்ணம் திடீரென இந்த நிமிஷம்தான் அவருக்குத் தோன்றியது.
சில நேரங்களில் கடிதங்களை இவர் எழுந்து நடந்துகொண்டே டிக்டேட் செய்வார். அது போல அவர் எழுந்து தனது நாற்காலிக் குப் பின்னால் தலையைக் குனிந்தவண்ணம் நடந்தார்.பிறகு அவளைப் பார்த்து ''ப்ளீஸ் ஸிட் டௌன்'' என்றதும் தெரஸாஅவரது மேஜைக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
''டியர் மிஸ் தெரஸா'' என்ற அவரது குரல் கேட்டு...''எஸ்ஸார்'' என்று நிமிர்ந்தாள் தெரஸா.
''புட் டவுன்! திஸ் இஸ் எ லெட்டர்'' 'இது கடிதம், எழுதிக் கொள்' என்று அவர் சொல்லவும் அவள் மௌனமாகத் தனது கடமையென எழுத ஆரம்பித்தாள். அவர் முகம் திரும்பித் தன் முதுகு மட்டுமே அவளுக்குத் தெரிய நின்றுகொண்டு ஆங்கிலத் தில் சொன்னார்.
''மிஸ் தெரஸா, ஒரு மகளைப் போல் கருதி அன்பு காட்டவேண் டிய உன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதற்காக, நான் வெட்கப்படுகிறேன். என்னைப் மன்னித்துவிடுவதும், அல்லது தண்டிப்பதும் உனது மனோ பாவத்தைப் பொறுத்தது. நான் உன் கணிப்பில் இருந்து, தரத்தி லிருந்து, உயரத்திலிருந்து ஒரு விநாடியில் வீழ்ச்சியுற்றுவிட் டேனே, இதுதான் எனக்குத் தண்டனை.
தெரஸா நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று எண்ணி எண் ணிப் பார்க்கிறேன்.
இது- இப்படி நான் நடந்து கொள்வது இதுவே முதல் தடவை அல்ல. உன்னிடம் என் பல வீனத்தை ஒளிவின்றி ஒப்புக் கொள்வதன் மூலம், அப்படி ஒப்புக்கொள்கிற பக்குவம் இந்த நிமிஷம் எனக்கு ஏற்படுவதன் மூலம், என்னைப் பிடித்திருந்த ஒரு வியாதி, ஒரு விகாரம் என்னிடமிருந்து விலகுகிறது என்ற நம்பிக்கையோடு இதனை உன்னிடம் சொல்கிறேன். நீ வயதில் எவ்வளவு இளைய வளாக இருப்பினும், பெருந் தன்மை மிகுந்தவள்; கண்ணியமா னவள் என்று நான் உணர்ந்தி ருக்கிறேன். எனவேதான் பாவ மன்னிப்பு போல் உன்னிடம்'கன் பெஷன்' செய்துகொள்கிறேன்.
உன்னிடம் நடந்துகொண்டது போல் முறைகேடாக நான் பல சந்தர்ப்பங்களில் நடந்துகொண் டிருக்கிறேன்.
'பிரயாணங்களிலும் தியேட் டரிலும் ஏற்படுகிற நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு நான் முறைகேடாக நடந்தது உண்டு. அப்போது, அவர்கள் ஏதோ ஒரு அச்சத்தாலும் அவமானத்துக்கு அஞ்சியும், நாகரிகம் கருதியும் அமைதியாய் இருப்பதை, நான் சம்மதம் எனக் கருதி ஏமாந்திருக் கிறேன். பின்னர் அதற்காக வருந் தியதும் உண்டு. நான் இப்போது தான் அறிகிறேன். இது ஒரு நோய். இதிலிருந்து உனது பெருந் தன்மையால் நான் குணமடை கிறேன். நீ இதை மறந்து ஒரு தந்தை உங்கள் மரபுப்படி ஒரு மகளை அன்பு காரணமாய் முத்தமிட்டதாகக்கொள்ள வேண்டுகிறேன். அல்லது இந்தக் குற்றத்துக்காக எனது இந்த வீழ்ச்சி மாத்திரம் போதாது எனின், நீ தருகிற எந்தத் தண்ட னையையும் ஏற்கச் சித்தமாயிருக் கிறேன்.'' என்று கூறிச் சுமை இறக்கிய வழிப்போக்கன் மாதிரி ஆச்வாசத்துடன் அவளைப் பார்த்தார் நாகராஜன்.
தெரஸா கண்களைக் கர்ச்சீப் பால் இரண்டு முறை ஒத்திக் கொண்டாள். அவளது முக்கும் கன்னங்களும் கன்றிச் சிவந்திருந் தன.
''அதைப் டைப் செய்து கொண்டு வா'' என்று அவளை அனுப்பிய பின்,ஒரு சிகரெட் டைப் பற்ற வைத்துக்கொண்டு தனது இருக்கையில் அமர்ந்தார் நாகராஜன். தெராஸாவின் அறை யில் டைப்ரைட்டரின் ஓசை படபடத்தது.
தெரஸா டைப் செய்த காகிதங்களை கொணர்ந்து, அவர் முன் மேஜை மீது வைத்துவிட்டு, அவர் முகத்தை பார்த்தவாறு நின்றாள். அவர் கண்ணாடியை எடுத்து அணிந்து கடிதத்தின் முதல் வரியைப் ''மரியாதைக்குரிய நண்பரே!'' என்னும் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தவாறே அவளைப் பார்த்தார்.
அவள் பணிவுடன் தலை கவிழ்ந்தாள்.
அவர் தொடர்ந்து அதைப் படிக்கலானார். ''நீங்க என்னிடம் டிக்டேட் செய்து, டைப் செய்து கொண்டுவரப் பணித்த உங்கள் கட்டளையை நிறைவேற்றாமல் வேறோரு கடிதத்தைக் கொண்டு வந்து உங்களிடம் தருகிற என் செயலை முதலில் மன்னிப் பீர்களாக. நீங்கள் மனம் திறந்து பேச ஒரு வாய்ப்பாகத்தான் அதை ஒரு கடிதமாக டிக்டேட் செய்திருக்கிறீர்கள். என்னிடம் மன்னிப்புக்குக் கோருகிற ஒரு கடிதத்தை என்னைக்கொண்டே எழுத வைத்தது உங்களுடைய வெள்ளை மனத்துக்கு மேலும் ஒரு சான்று. கடிதம் என்றுசொல் லப்படுகிற உங்கள் மனம் திறந்த பேச்சில் மிகவும் சத்தான என் எண்ணத்தை அப்படியே பிரதி பலித்த வாசகம், 'ஒரு தந்தை உங்கள் மரபுப்படி ஒரு மகளை அன்பு காரணமாய்' என்று கூறி னீர்களே அதுதான். நான் அப்படிக் கருதிச் சமாதானமுற்றப் பிறகு நீங்களும் அவ்விதம் சொன் னது எனக்கு அளவில்லா ஆனந் தம் தருகிறது. இது உங்கள்வீழ்ச்சி அல்ல. இது ஒரு சறுக்கல்...''
இந்த இடத்தில் அந்த ஆங்கிலச் சொற்களை அவளைப் பாராட்டுகிற தோரணையில் ''ஜஸ்ட் எ ஸ்லிப், நாட் ஏ ஃபால்'' என்று ஒரு முறை வாய்விட்டு உச்சரித்துக் கொண்டே அவளைப் பார்த்த பின் கடிதத்தைத் தெடர்ந்தார் நாகராஜன்.
''நீங்கள் கூறுகிற மாதிரி அது ஒரு வியாதியெனில் அதற்குத் தண்டனையல்ல, சிகிச்சையே தேவை. அப்படிப்பட்ட முறை கேடான நடத்தைகள் தவறுகள் தான். ஆனால், குற்றங்கள் அல்ல. குற்றங்கள்தான் தண்டிக்கப்படு வன. தவறுகள் திருத்தப்படுவன. மன்னிக்கப்படுவன. நான் உண் மையான கிறிஸ்துவப் பெண். மன்னிக்கிறவர்களே மன்னிக்கவும் படுவார்கள். நான் உங்களை மன் றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இதனை மறந்து, இதற்காக வருந் துவதை விடுங்கள்.
நமது ஒப்பந்தப்படி நீங்கள் என் பிறந்த தின விருந்துக்கு வரு கிறீர்கள். உங்கள் நலுனுக்காக நான் குடிப்பேன். உங்கள் உண்மையுள்ள....''
''தெரஸா! நீ எவ்வளவு உயர்வான ஆத்மா!''
இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிய நாகராஜன் காரை ஷெட்டில் விடுவதற்காகத் திரும் பியபோது ஷெட்டின் ஒருமூலை யில், தாடியும் மீசையுமாய்ப்பரட் டைத் தலையுடன் உட்கார்ந்திருந்த கன்னையா எழுந்து நின்றான். சிறிது நேரம் விளக்கை அணை காமல் அவனைக் கூர்ந்து பார்த் தார். வெளிச்சத்தாலோ வெட்கத் தாலோ கூசிக் குறுகி முகத்தை மூடிக்கொண்டான் கன்னையா.
வராந்தாவில் நாகராஜனின் மகளும் மனைவியும் கன்னை யாவை உள்ளே வரவிடாமல் தடுப்பதற்காகத் துவார பாலிகை களாக நின்றிருந்தனர்.
''அவன் வந்தால் உள்ளே நுழைய விடாதீங்க'' என்று நாக ராஜன் உத்தரவிட்டிருந்தார்.
நாகராஜன் காரிலிருந்து இறங் கியதும் கன்னையா அவரருகே வந்து அழுதான்.
''மாப்பிள்ளே, என்னமோ தெரியாம செஞ்சுட்டேன். ஏன் செஞ்சேன்னு தெரியல்லே. அதைச் செஞ்ச அடுத்த நிமிஷத் திலேருந்து ஒவ்வொரு நிமிஷமும் வருத்தப்பட்டேனே ஒழிய சந்தோ ஷமாகவே இல்லே, மாப்பிளே.. அறிவுகெட்டவன் நான்'' என்று நெற்றியில் அடித்துக்கொண்டு அவன் அழுதான்.
நாகராஜன் மௌனமாக 'டை' யைத் தளர்த்திக்கொண்டு வராந்தாவில் கிடந்த பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தார்.
அவர் மகளும், மனைவியும் உள்ளே போயினர். கன்னையா வெளிச்சத்தில் வந்து அவர் எதிரே நின்றான்.
அவன் மௌனமாகத் தலை குனிந்து நின்றதைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. அவர் நினைத்தார்.
'இவன் வெறும் திருடன் என் றால், இப்போது ஏன் திரும்பி வர வேண்டும்? இந்த வீட்டில் உழைக்கிற உழைப்பை எங்கே தந்தாலும் இவன் வயிற்றுக்குச் சோறு கிடைத்துவிடுமே. எனவே பிழைப்புக்காக இவன் திரும்பி வந்திருக்கிறான் என்று நினைப்பது பேதமை. இதோ எதிரே நேற்றி லிருந்து பூக்க ஆரம்பித்திருக்கிறதே இந்த மல்லிக்கைச் செடி, இதைக் கொண்டுவந்து நட்டு, நீர் வார்த்த பாசம் அவனைத் திரும்பி வர இழுத்திருக்கிறதா? ஒவ்வொரு வேளை சாப்பிடும்போதும், நான் அவளை நினைக்கிற மாதிரியே அவனும் என்னை நினைத்திருக்க மாட்டானா? பின் ஏன் அப்படி அந்தப் பணத்துக்குஆசைப் பட்டு அதை எடுத்துக்கொண்டு ஓடினான்..?
''ஏன்டா, என்னைக் கேட்டால், உனக்கு நான் பணம் தந்திருக்க மாட்டேனா? ஏன் திருடன் மாதிரி இப்படிச் செய்தே?'' வீட் டிலிருந்தும் மற்றவர்களின் திருப்திக்காகச் சற்று உரத்த குரலில் விசாரித்தார் அவர்.
''அதான் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கறேன். பணத்தை அந்த 'ஷெல்ப்'லே பார்த்தப்போ... வேற யாருமே இல்லே. 'யாருமே இல்லாத இடத்தில் பணத்தை பார்த்தா எடுத்துக்கணும்கிற திருட்டுப் புத்தியிலே எடுத்திட் டேன். இது முதல் தடவையா? எத்தனையோ தடவை இந்த மாதிரி, சீ!'' அவன் தன்னைத் தானே நொந்துகொண்டான்.
இன்று மத்தியானம் இதே நிலையில் தான் இருந்ததை நாக ராஜன் எண்ணிப் பார்த்தார்.
''அது ஒரு வியாதிடா'' என் றார்.
''அமாம். வியாதிதான்'' என்று தலையில் அடித்துக்கொண்டான் கன்னையா. ''நீ என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கறேன், மாப் பிளே..'' என்று கைகளைப்பிசைந்து கொண்டு கண்ணீர் உகுத்தான்.
நாகராஜன் நிர்மலமாய்ச் சிரித் தார்.
''வியாதிக்கு சிகிச்சைதான் தேவை, தண்டனை இல்லே'' என்று சொல்லும்போது அவ ருக்கே கண் கலங்கிற்று.
''உன் வியாதி நீங்கிப் போச்சு... மனப்பூர்வமா மன்னிக்கறது தான் இதுக்குச் சிகிச்சை. இந்தச் சிசிச்சையை உனக்கு யாருமே இது வரை செய்ததில்லே. இனிமே சரியாயிடும். போ, உள்ளே! நீ செய்தது தப்புத்தான்... தண்டனை தர வேண்டிய குற்றமில்லே'' என்ற அவர் சொல்வதைக்கேட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரது மகளும் மனைவியும் ''எவ்வளவு பெருந்தன்மை மிக்க மனிதர் இவர்! என்று நாக ராஜனைப் பற்றி எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.
அவர்களுக்கு என்னதெரியும்?
மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள் என்பது.

by Swathi   on 04 Apr 2013  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
21-Jul-2020 07:15:24 Gunasundari said : Report Abuse
superp story very nice
 
13-May-2018 17:46:38 Ganesh said : Report Abuse
அருமையான கதை என்பதை விட வாழ்வியலுக்கு தேவையான ஒன்றாக நான் கருதுகிறேன்
 
25-Oct-2016 12:00:18 கிருஷ்ணா said : Report Abuse
இதுவரை நான் வாசித்த சிறுகதைகளிலேயே மிகச் சிறந்த சிறுகதை என்றே கூறுவேன்.அனைவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.