LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ராஜேஷ் குமார்

கைப்பேசி எண்

டாக்டர் செல்வராஜ் - 9841108211

அந்த மொபைல் நம்பரையே ரொம்ப நேரமாக உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. ஒரு ஆறு, ஏழு நிமிடம் இருக்கலாம்.

என் நண்பர்கள் சிலர் எனக்கும் அவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் இனிமேல் என்னுடன் பேசப்போவதில்லை என்று முடிவு செய்து என் நம்பரை மொபைலிலிருந்து அழித்திருக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு அனுபவம் எனக்கு முதல் முறை.

என் வாழ்க்கையில் ஒரு சில முக்கிய மனிதர்களில் இந்த டாக்டரும் ஒருவர்.

இதைப் பார்க்கும்போது ஒரு வருடத்திற்கு முன்பு இந்த மொபைல் வாங்கிய அன்று நடந்த சம்பவம் மனதில் காட்சியாக விரிந்தது.

அவருடைய கிளினிக்கில் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு நோயாளி விரைவில் குணமடைவதற்குத் தேவை ஒரு டாக்டருடைய படிப்பும் அறிவும் மட்டுமல்ல, கனிவான, நம்பிக்கை தரும் பேச்சும்தான். இதை அவரிடம் நான் ஆதாரபூர்வமாக பலமுறை உணர்ந்ததுண்டு.

“நல்லா மூச்சை இழுத்து விடுங்க...”

என்று சொல்லிவிட்டு டாக்டர் கேட்டார்.

“உங்க வேலைக்கி நீங்க அவசியம் ஒரு மொபைல் வச்சிருக்கணுமே தம்பி... நானே ரெண்டு மூனு தடவ ஒங்க கூட பேசணும்னு நெனச்சு கூப்பிடலாம்னு பாத்தா, உங்ககிட்ட மொபைலே இல்லன்னாங்க... ஏன் வாங்கல?...”

சிரித்தேன்.

“ஃபைனான்ஸ் பிராப்ளம்?...”

புரிந்து கொண்டவராகக் கேட்டுவிட்டு சிரித்தார்.

அப்போது ஒரு சிறுவன் உள்ளே வந்தான். அவனை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அந்த கட்டுமானப்பணியில் இருக்கும் ஒரு கட்டிட வேலை செய்யும் ஒரு விதவைச் சிற்றாளின் மகன்.

பள்ளிச் சீருடையிலேயே வந்திருந்தான்

எனக்கு மருந்துச் சீட்டு எ’ழுதியபடியே திரும்பிப் பார்த்து,

“என்னப்பா?.. என்னாச்சு?...

“ஸ்கூல் பேக் அறுத்துக்கிச்சு சார்...”

“ஏன்பா?... பத்திரமா வச்சிக்கிறதில்லையா?...”

என்று கேட்ட டாக்டரைப் பார்த்து, சிறுவன் வழிந்தபடி சிரிக்க, டாக்டர்,

“இப்ப எத்தனாவது படிக்கிற?...”

“ஆறாவது சார்...”

அவனிடம் என்னைக் காண்பித்து இவரும் உங்க ஸ்கூல்லதான் படிச்சாராம்...என்று சொல்ல, என்னிடமும் சிறுவன் லேசாக வழிந்தான்.

“புது பேக் எவ்வளவுன்னு கேட்டியா?...”

“ஆங்... இருநூத்தி நாப்பது ரூவான்னு சொன்னாங்க... தோ... பழைய பேக்கு கூட இங்கதான் கிது...”

என்று சொன்னவன் வேகமாக வெளியே போகப் பார்க்க, அவனைத் தடுக்கும் விதமாக,

“டேய்... டேய்... எங்க போற?... பழைய பேக் எடுத்துட்டு வரப்போறியா?...”

“ஹும்...”

“நான் கேக்கவே இல்லியே?...”

என்று சொல்லி பாக்கெட்டிலிருந்து இருநூற்றி ஐம்பது ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

“டேங்க்ஸ் சார்...”

என்று சொல்லிவிட்டுச் சென்றான் சிறுவன்.

“கிரேட் சார் நீங்க...”

என்று சொல்லத் தோன்றியது. சொல்லி விட்டேன்.

சிரித்தார்.

மருந்துச்சீட்டைக் கொடுத்தார்.

வாங்கினேன்.

எழுந்தேன்.

“தேங்க்ஸ் சார்...”

என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்கப்போனேன்.

“ஒரு நிமிஷம் தம்பி...”

வழக்கமாக என்னைப் போல் ஆட்களிடம் அவர் பீஸ் வாங்குவதில்லை. ஒருவேளை அதற்காக எதுவும் கூப்பிடுகிறாரோ என்ற சந்தேகத்தோடு திரும்பினேன்.

ஒரு புதிய மொபைல் பாக்ஸைக் கொடுத்தார். எப்படியும் மூவாயிரம் ரூபாய் இருக்கும்.ஒரு கணம் திகைத்துப் போனேன். பதிலே வரவில்லை. தட்டுத்தடுமாறி,

“எனக்கா சார்?...”

“பிரிங்க தம்பி... சிம் போட்டுரலாம்...”

என்று சொல்லிக் கொண்டே ஒரு புதிய சிம் கார்டை எடுத்தார்.

வெறும் புன்னகையை மட்டும் பதிலாக்கி, அமைதியாகப் பிரித்தேன். மொபைலைக் கையில் எடுத்துப் பார்த்தேன்,

போனை வாங்கி ஒரு புதிய சிம் கார்டை அதில் போட்டார். மொபைலை ஆன் செய்தார். அவருடைய நம்பரை பதிவு செய்தார்.

இந்த மொபைலில் முதன் முதலாகப் பதிவு செய்த நம்பர் அவருடைய நம்பர்தான்.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்துவிட்டது.

இன்று காலை ஒரு குறுந்தகவல் வந்தது. டாக்டர் செல்வராஜ் இன்று அதிகாலை 4 மணிக்கு மரணம்”

பல மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருந்தார் என்று தெரியும். நானும்கூட ஒரு முறை பார்த்தேன்.

ஆனால் முகத்தில் எப்போதும்போல் அதே தெளிவு இருந்தது,

இன்றும்கூட.

இறுதிச்சடங்குகள் முடிந்தன.

இப்போதும் அந்த நம்பரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

Mobile no:
by Rajeshkumar Jayaraman   on 09 Aug 2014  0 Comments
Tags: Mobile Number   கைப்பேசி எண்                 
 தொடர்புடையவை-Related Articles
அழைபேசி எண்கள் அழைபேசி எண்கள்
கைப்பேசி எண் கைப்பேசி எண்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.