LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது

2018-ம் ஆண்டுக்கான ‘அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதை’  முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு முஹம்மது அன்சாரிக்கும் சமூக ஊழியர் அருணா ராய் அவர்களுக்கும் காந்தியடிகளின் பேரரும் முன்னாள் மே.வங்க ஆளுநரும் ஆன மாண்புமிகு கோபால கிருஷ்ண காந்தி சனிக்கிழமையன்று (பிப்ரவரி 24) காலையில் சென்னையின் தாம்பரம் அருகில் மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில்  நடைபெற்ற விழாவில் வழங்கினார்.   

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவை முன்னிட்டு உருவான விருது இது. நான்கு ஆண்டுகளாக ஒவ்வோராண்டும் அறிவிக்கப்பட்டுவருகிறது.

மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வருகை தந்தோர்களை கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. ரஃபி வரவேற்றார். கல்லூரியின் கட்டணங்கள் 20 வருடங்களுக்கு மேலாக உயர்த்தப்படாமல் இருப்பதையும் கல்லூரியின் மாணவர்களில் 57% பெண்கள் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார்.   

விழாவுக்கு இந்திய அரசின் முன்னாள் செயலாளரும் எஸ்ஐஇடி  கல்லூரியின் தலைவருமான மூஸா ரசா ஐஏஎஸ் (ஓய்வு) தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில் “ இந்தியாவின் இரண்டு மிகச்சிறந்த குழந்தைகளுக்கு இன்று விருதுகள் வழங்கி கவுரவிக்கிறோம். அவர்களை கவுரவிக்கிற கோபாலகிருஷ்ண காந்தி எனது மனங்கவர்ந்த தலைவர். நான் 28 வருடங்களுக்கு மேலாக குஜராத் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினேன். முஹம்மது அன்சாரி அவர்களை எனக்கு 45 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். அவர் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றபிறகு போய்ப் பார்த்தேன். எனது கார் அருகில் வந்து வரவேற்றார். ஒரு துணைக் குடியரசுத் தலைவர் இவ்வாறு இறங்கி வந்து வரவேற்கக் கூடாது என்று பதறினேன். அவர் “ என்னை நல்ல மனிதனாக இருக்கவிடுங்கள். தடுக்காதீர்கள்” என்று சொல்வார். அத்தகைய அற்புதமான மனிதர்.

அருணா ராய் அவர்களும் என்னைப் போல ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். அன்சாரி அவர்களும் ஒரு ஐஎப்எஸ் அதிகாரியாக தனது வாழ்வைத் தொடங்கியவர். நாங்கள் மூவரும் ஒரே வகையினராக இருந்தாலும்  அருணா ராய் தனக்கென தனி வழியை உருவாக்கிக்கொண்டவர். ஐஏஎஸ் பதவியை பாதியில் விட்டுவிட்டாலும் சமூகத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிற பணிகளை செய்து வருகிறார்.” என்றார்.

 

அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும் காயிதே மில்லத் அவர்களின் பேரருமான எம்.ஜி.தாவூத் மியாகான் பேசுகையில் “அயோக்கியர்களின் புகலிடமாக அரசியல் இருக்கிறது என்பார்கள். இன்றைய நிலை அப்படியிருக்கிறது. அதை மாற்ற வேண்டும். இன்றைய இளைஞர்களின் முன்னால் நேர்மையின் எடுத்துக்காட்டுகளாக உள்ள தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பெயரிலான விருதை கோட்ஸேக்களுக்கு வழங்குவது போல நாட்டில் பல ஆயிரக்கணக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இருந்தாலும் நேர்மையான அரசியல் / பொதுவாழ்வுக்கான விருது என்பது இது ஒன்றுதான். திரிபுராவின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், குஜராத்தின் சமூக போராளி டீஸ்டா செதல்வாட், தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு என இதுவரையிலும் மிகவும் நேர்மையான தலைவர்களுக்கு விருதுகள் வழங்கியிருக்கிறோம்.

2018 - ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் முஹம்மது அன்சாரிக்கும் சமூக ஊழியர் அருணா ராய்க்கும் அறிவித்துள்ளோம். தேர்வு கமிட்டியின் உறுப்பினராக இருந்த பத்திரிகையாளர் ஞாநி சில தினங்களுக்கு முன்னால் திடீரென காலமாகிவிட்டார். இந்த தேர்வுகமிட்டியில் மூத்த பத்திரிகையாளரும் ப்ரெண்ட்லைன் ஆசிரியருமான ஆர். விஜயசங்கர் அவர்கள் பங்கேற்றார்.

எந்த விதத்திலும் சட்டத்தை மீறாமல் வாழ்ந்தவர் காயிதே மில்லத் அவர்கள். அதே போல வாழ்கிறார் அன்சாரி அவர்கள். வேறு எந்த நிறுவனத்தின் விருதையும் பெற மறுத்தவர் அவர். காயிதே மில்லத் விருதை பெற சம்மதித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆர்டிஐ சட்டம் இன்று அனைவரும் பேசக்கூடிய சட்டம். அருணா ராய் அவர்களின் முன்முயற்சி அதில் இருக்கிறது. அவரால் இந்தியாவின் செயல்பாடே மாறியிருக்கிறது. ஆர்டிஐ சட்டத்தில் கேட்டுவிடுவார்களோ என்ற பயம் பல அரசு அமைப்புகளுக்கு வந்திருக்கிறது. அத்தகைய நல்ல மாற்றத்துக்கு காரணம் அருணா ராய். கிராம மக்களின் நலனுக்காக உழைத்துவருகிறார். அவரது பணிகள் மேலும் சிறக்க இந்த விருது உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.

மாண்புமிகு முன்னாள  மே.வங்க ஆளுநரும் காந்தியின் பேரனுமாகிய கோபாலகிருஷ்ண காந்தி  பேசுகையில்“  விருதுகள் பலருக்கு பெருமை தரும். சிலர் விருதுகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அதுபோல இந்த வருட காயிதே மில்லத் விருதைப் பெறுவோர்களும் விருதுகளுக்கு பெருமை சேர்ப்பவர்கள்.

அரசியலில் நேர்மையாக இருப்பவர்களுக்கு விருது கொடுக்கிற நிலைமை வந்துவிட்டது. நேர்மை என்பது எல்லோருக்கும் தேவையானது. இன்று எங்கே நேர்மை? எங்கே நம்பிக்கை? மக்கள் தங்களுக்கான வழிகாட்டிகளை தேடுகிறார்கள். லட்சியவாதிகளைத் தேடுகிறார்கள். அருணா ராயும் அன்சாரியும் நமது அதிர்ஷ்டங்கள்.

நமது நாட்டின் வரலாற்றில் தற்போதைய காலகட்டம் என்பது சங்கடமான காலக்கட்டம்.

ஆர்டிஐ சட்டம் என்பது இன்று கிராமங்களில் கூட பலருக்குத் தெரியும். அதே போல தேசிய வேலை உறுதிச்சட்டமும் தெரியும். அது எப்படி சட்டமாக மாறியது என்பதில் அருணா ராயின் பணிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இவர்களுக்கு விருதுகளை அளிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்.  

எனக்கு ‘ரோஜா’ படத்தில் வரும் “சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை ” எனும் பாடல் பிடிக்கும். மக்களின் அத்தகைய ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.”  என்றார்.
 
தென்னிந்திய திருச்சபையின் பிஷப் (ஓய்வு) தேவசகாயம் பேசுகையில்“ நாட்டில் தற்போதுள்ள நல்ல நிலைமைகளுக்கு அரசியல் சாசனமே காரணம்.அதை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர். இன்று அரசியல் சாசனத்துக்கு கூட ஆபத்து வரும் போலத் தெரிகிறது. சமத்துவத்துக்கான உரிமை, பேச்சுரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட முக்கியமான உரிமைகள் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் மிருகத்தன்மை அடைந்துவிடுவார்கள். ” என்று எச்சரித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி,கே,ரங்கராஜன் பேசுகையில்“ இந்த இருவரும் காயிதே மில்லத் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்கள். இந்தியாவை  மதச் சார்பற்ற நாடாகவே பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இன்றைய தலைவர்களின் கைகளில் உள்ள இந்த அரசியல் நேர்மையை இளந்தலைமுறையினர் தொடர் ஓட்ட ஜோதி போல கைகளில் ஏந்தி முன்னேற வேண்டும்” என்றார்.

காயிதே மில்லத் விருதுக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டு  அருணா ராய் ஏற்புரை வழங்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி  மொழிகளில் மாறி மாறி அவர் பேசினார்.  “ நான் சென்னையில் பிறந்தாலும் வாழ்வின் பெரும் பகுதியை வட மாநிலங்களில் கழித்துள்ளேன். காயிதே மில்லத் விருது என்பது எனக்கு கிடைத்துள்ள பெரிய பெருமை.

 எனது குடும்பத்தில் பல சாதிகள், மதங்கள் கலந்துள்ளன. எனக்கு எல்லாத் தரப்பிலும் உறவினர்கள் உண்டு. இதுவே இந்தியா. பல பண்பாடு, பல உணவுப் பழக்கங்கள், என்பதே இங்கே இயல்பு.

ஆனால், ஒரே இந்தியாதான் இருக்க வேண்டும் என்கிறார்கள். காயிதே மில்லத்தும் அம்பேத்கரும் இணைந்து உருவாக்கிய அரசியல் சாசனம் அரசுக்கு மதம் கிடையாது என்கிறது. நமக்கான மதம் நம்மிடம் இருக்கலாம். ஆனால், அரசுக்கு மதம் கிடையாது,

இதை நாம் எடுத்துச் சொன்னால், வன்முறையை ஏவுகிறார்கள். மும்பையில் தோழர் கோபால் பன்சாரே, பெங்களூரில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டது எதற்காக? நான் வசிக்கிற ராஜஸ்தானிலும் கொலைகள் நடக்கின்றன. நல்ல கருத்துகளைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஏன்?

ஏழை இந்தியர்களுக்கு வேலை இல்லை. உடை இல்லை. உணவு இல்லை. இந்தியாவின் செல்வத்தில் 71 % வெறும் ஒரு சதவீத பணக்கார்ர்களிடம் இருக்கிறது. இந்த சூழலில்தான் தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பிரச்சாரத்தை கையில் எடுத்தோம். தகவல் உரிமை என்பதும் ஒரு புரட்சிதான்.

மக்களிடம் வாக்குகளை வாங்கிக்கொண்டு சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கு போகிறார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகிறார்கள். அரசியல் வாதிகள் மட்டுமல்ல, ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என எல்லா மட்டத்திலும் ஊழல் பெருகிவருகிறது. அந்த சூழலில்தான் “நம்ப பணம், நம்ப கணக்கு” என்னும் முழக்கத்தை மக்களுக்குக் கொடுத்தோம்.    

இன்று 60 லட்சம் இந்தியர்கள் தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 29 கோடி பேர் பயன் அடைகிறார்கள். தகவல் என்பது ஒரு அதிகாரம். சமத்துவ உரிமை, கருத்துரிமை எல்லாம் நமக்கானவை. அதை விட்டுக்கொடுக்க முடியாது.

தமிழ்நாடு என்பது பெருமாள் முருகனின் நாடு. இங்கே கருத்துரிமையை பறிக்க முடியாது. நமக்கு பிடிக்காத ஒரு புத்தகம் இருக்கிறது என்றால் அதை படிக்காமல் புறக்கணித்துவிட வேண்டியதுதான். வட இந்தியாவில் தென்னிந்தியாவை விட நிலைமை மோசமாக இருக்கிறது. டெல்லியில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவதற்கு சந்தர் மந்தர் பகுதி இருக்கிறது. அதில் இனி போராட்டங்கள் நடத்த முடியாது என்கிறார்கள். ராமலீலா மைதானத்தில்தான் நடத்த வேண்டுமாம். அதற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வாடகையாம். அன்றாடங்காய்ச்சிகள் எப்படி தங்களின் குறைகளை மக்களிடம் முறையிடுவார்கள்?

அரசின் போக்கு இப்படி மாறுகிற பின்னணியில் தகவல் உரிமையும் கருத்துரிமையும் பாதுகாப்பதற்கான போராட்டம் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த விருது பயன்படும்” என்றார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் முஹம்மது அன்சாரி பேசுகையில்“  அரசியல் அல்லது பொதுவாழ்வில் நேர்மையாய் இருப்பதற்கு விருதுகள் கொடுத்துப் பாராட்ட வேண்டிய நிலைமை வந்துவிட்டது.

உங்கள் நம்பிக்கைகள் எதுவாக இருக்கலாம். நீங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு வேண்டுமானலும் வசிக்கலாம். உங்கள் உணவுப் பழக்கம் எதுவானதாக இருக்கலாம். ஆனால். நீங்கள் எது சரியானது என்பதில் தெளிவான புரிதல் உள்ளவராக இருக்கவேண்டும்.  நாம் அனைவரும் இந்தியர்கள். சமமானவர்கள்.  நமது முன்னோர்கள் உருவாக்கிய அரசியல் சாசனம் அவ்வாறு அமைந்துள்ளது. அது நமக்கு அருமையான உரிமைகளை வழங்கியிருக்கிறது. பலரும் உரிமைகளை பேசுவார்கள். ஆனால், அரசியல் சாசனம் நமக்கு பல கடமைகளையும் விதித்துள்ளது. அடிப்படையான கடமைகளை செய்யாமல் நம்மால் உரிமைகளை அடைய முடியாது.

 சட்டம் இயற்றும் பேரவைகள், நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் என்று நமது சாசனம் வகைப்படுத்தியிருக்கிறது. அவற்றின் எல்லைகளும் கவனமாக வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது சட்டம் இயற்றும் அமைப்புகளின் வேலைநாட்கள் குறைந்துவருகின்றன. ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் கூடுகிற நாட்கள் மிகவும் குறைந்து வருகின்றன. ஏன்?  மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு விவாதமும் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஏன்? அருணா ராய் சொன்னதைப்போல அரசுக்கு கடமைப் பொறுப்பு வேண்டும். ஏன் அரசாங்கங்கள் அவசர அவசரமாக சட்டங்களை இயற்றுகின்றன. அவற்றை விவாதித்தால்தானே அவற்றின் குறைபாடுகளை களைய முடியும்? நல்ல சட்டங்களை இயற்ற முடியும்?

நாட்டின் நீதிமன்றங்களுக்கு சாதாரண மக்கள் சென்றால் 10, 15 வருடங்கள் நீதி கிடைக்க காத்திருக்கும் நிலையும் இருக்கிறது. இந்த சூழலில்தான் நாம் அரசியல் நேர்மை பற்றி பேச வேண்டியிருக்கிறது. நேர்மையற்ற முறையில் இருப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

அரசியலும் பொதுவாழ்விலும் நேர்மையாக இருப்பது என்பது நமக்குப் பிடித்தால் இருந்துகொள்ளலாம் என்பது போன்று நமக்கு நாமே தேர்வு செய்துகொள்வது கிடையாது. எல்லாரும் கட்டாயம் நேர்மையானவர்களாகவே இருக்கவேண்டும் என்பதே இயல்பானது.

என்னைப் பொறுத்தவரை நான் எதுவும் பெரிதாக சாதித்துவிடவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்தேன். அதை நான் சரியாக செய்யவில்லை என்றால் கடவுள் என்னை மன்னிப்பாராக.” என்றார் அவர்.

விழாவில் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் முப்தி காஜி சலாவுதீன் முஹம்மது அயூப் உள்பட பலர் உரையாற்றினார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாதிக், ப்ரெண்ட்லைன் ஆசிரியர் ஆர். விஜயசங்கர், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா, மூத்த பத்திரிகையாளர் சன் டிவி வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அறக்கட்டளை உறுப்பினர் எம்.எச்.பி. தாஜூதீன் நன்றி கூறினார்.

by Swathi   on 10 Mar 2018  0 Comments
Tags: Mohammad Ansari   Aruna Rai   Social Activist Aruna Rai   RTI Aruna Rai   அருணா ராய்   முஹம்மது அன்சாரி   காயிதே மில்லத் விருது  
 தொடர்புடையவை-Related Articles
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.