LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நீல.பத்மநாபன்

மெளனம்

இன்று எனக்கு மெளன விரதம்.

இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ?

நடுக்கூடத்தில் வழவழப்பான தரையில் சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன், மனசின் உள் வெளியில் இன்னதென்று தெரியாது சொரு சொருவென்று நினைவுகள்...

நரம்பில்லாத நாக்கின் சுழற்சியில் வெளிப்படும் சப்தங்களுக்குத்தான் என்னவெல்லாம் தொனி விசேஷம். அவை பேசும், கேட்கும் உள்ளங்களில் எழுப்பும் நமைச்சல்கள் உம்...இப்போகூட வாயைத்தான் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடிகிறது....உள்ளம் ?



நேர் எதிர்ச்சுவரில் மேலே அவர் முகம் என்னையே கொட்டுக் கொட்டென்று பார்த்துக் கொண்டிருப்பது போல் சென்ற மாதம் நடந்த அவர் முதல் திவசத்தின் போது வரை, இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கையில் என் செவிப்புலனில் மெளன மொழியில் தேவீ.....தேவீ என்று அவ குசுகுசுக்கும் உணர்வு....(அவர் மட்டும்தான் என்னை இந்தப் பெயரில் அழைப்பார்.) இப்போ மட்டும் என்ன வந்துவிட்டது ? அந்தக் குரலை என்னால் உணர முடியாதது ஏன் ? சே....இதெல்லாம் என் பிரமைகள்......

பதினைந்து வருட கால தாம்பத்திய வாழ்வின் தடையமாய் ஒரே ஒரு குழந்தை... ?

ஹ்ஊம்....அந்தப் பாக்கியம்தான் நான் செய்யவில்லையே.....என் அண்ணாவுக்கும் தங்கைகளுக்கும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி யானாலும் என் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை போல் ஆகுமோ ?

எதிர்ச் சுவரோரத்தில் கீழே அவர் அம்மா--என் மாமியார் படுத்திருந்த கட்டில் வெறிச்சோடிக் கிடக்கிறது.....கொள்ளிவைக்க நிற்காமல் போய்விட்ட ஒரே மகனைத் தேடிக் கொண்டு அவுங்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

வெளியில் ரோடில் அடிக்கடி கார் 'ஹாரன் சத்தம் ' மற்றபடி நிசப்தம்.

சமையலறை வாசல்படியில் தலைவைத்துப் படுத்திருக்கும் அம்மா தலை உயர்த்தி 'ஏண்டி...தேவகீ...இப்படியேவா உட்கார்ந்திருப்பது, கொஞ்சம் படுத்துத் தூங்கினால் என்ன ? ' என்கிறாள்.

நான் பதில் சொல்லவில்லை. எனக்கு இன்று மெளன விரதம் என்பது அவளுக்குத் தெரியும். சற்று நேரத்தில் மறுபடியும் அம்மாவிடமிருந்து அமர்ந்த குரலில் குறட்டை வரத் தொடங்கி விட்டது. உம்..அவர் போன பின் இவளும் இந்த வீட்டுப் பிரஜையாகிவிட்டாள். அடுத்த தெருவில் என் அண்ணா அண்ணி கூட இருக்கும் அப்பா அடிக்கடி இங்கே வந்து பார்த்து விட்டுச் செல்வார்.

உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. மெல்ல எழுந்து வெளிவராந்தாவுக்கு வந்தபோது முற்றத்தில் பளிச்சென்று காயும் மத்தியான வெயில் மேலே வராந்தாவிலிருந்து கீழே முற்றத்துக்கு இறங்கிக் கொண்டிருக்கும் படிகள், அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மேலே ஏறி வந்ததும் 'அப்பாடா....பதினெட்டாம் படிதான்.... ' என்று சொல்வது ஞாபகம் வருகிறது.

கீழே முற்றத்தில் வெயிலில் துவண்டு நிற்கும் செடி கொடிகள், நிழல் விரித்து லேசாய் சரிந்து நிற்கும் மாமரம், பிறகு முற்றத்திலிருந்து கீழே ரோடுக்கு இறங்கும் படிகள் மறுபடியும்.

ரோடுக்கும் வீட்டு முற்றத்துக்கும் இடையில் உள்ள காம்பவுண்ட் சுவரின் இடது கோடியில் சுவரோரமாய் மூலையில் கிடந்த அந்த கான் கிரீட் பெஞ்சியும் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பெஞ்சும் என் கழுத்தைப் போல் --மூளியாகி விட்டதைப் போ....

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. கடை இல்லையாதலால் அவர் காப்பி சாப்பிட பத்து மணியாகி விட்டது. வழக்கம்போல் முற்றத்துக்கு வந்து இந்த பெஞ்சியின் மீது ஏறி நின்று ரோட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்தை பாத்ரூமில், நான் சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

வீ......

வீ......

--என்னமோ மாதிரி ஒரு சத்தம்...ஒரு மனித கண்டத்திலிருந்து இப்படியொரு குரல் வர முடியுமென்று தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் இந்த உளறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு இதோ நான் நிற்கும் இங்கே வந்து நின்று கொண்டு, இப்படிக் கீழே இடது கோடியில் காம்பவுண்ட் சுவரோர மூலையில் பார்த்தபோது--

கான்கிரீட் பெஞ்சியில் அலங்கோலமாய் விழுந்து கிடக்கும் அவர்.

என் இதயம் அப்படியே நின்று போய் விட்டதைப் போல்....

அருகில் ஓடிச்சென்றேன். அவர்நாக்கு--அக்ஷர சுத்தமாய் மணிக்கணக்கில் எத்தனை பேரிடமானாலும் களைத்துப் போகாமல் மாறி மாறி பேசும் அவர் நாக்கு, ஒரு வார்த்தையை ஒரு எழுத்தைக்கூட தெளிவாய் உச்சரிக்க முடியாமல் தத்தளிக்கிறது. விழிகளில் ஒரு அசக்த பாவம்.

நான் அலறுகிறேன். அப்பாவுக்கு ஆள் போனது. அடுத்த வீட்டிலிருந்து என் தங்கை புருஷன் ஓடி வருகிறான். எல்லோருமாய்ச் சேர்ந்து காரில் தூக்கிப் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகிறார்கள். ஸ்ட்ரோக்காம் மாலை நாலு மணிவாக்கில் ஆம்புலன்ஸிலிருந்து ஸ்டெரச்சரில் தூக்கிக் கொண்டு வந்து வடக்கில் தலை வைத்து கிடத்திவிட்டுப் போய்விடுகிறார்கள், அப்படி எல்லாம் முடிந்து போய்விட்டது.

வெயிலின் வெக்கையைச் சுமந்து கொண்டு காற்று வந்து படபடக்கிறது. நான் படியில் கால் வைத்தேன். வெயிலில் சுட்டுப் பழுத்துக் கிடக்கும் படிகள். மெல்ல இறங்கி கான்கிரீட் பெஞ்சின் முன் வந்து நிற்கிறேன்.

பெஞ்சின் மீது சுவரோரத்தில் காரை பெயர்ந்து தெரிகிறது. சிமண்ட் காரையும் இன்னும் விலகவில்லை. உம்...அவர் சிதை பஸ்மம் அடங்கிய சின்னச் செம்பும், அதன் மீது சிறுசாய் அழகாய் கட்டியிருந்த பீடமும் இப்போ இங்கில்லை. சென்ற மாதம், அவர் மறைந்து முதலாண்டு திகையும் நாள் அன்று இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. இப்போ இங்கே ஒரு சூனியம், என் அகத்தைப்போல்.

அவர் இறந்த அடுத்த நாள்....

அப்பாவும் மற்ற உறவினர்களும் மயானத்திற்குச் செல்ல இங்கிருந்து இறங்கும்போது...

'இது அவர் வாழ்ந்த கோயில், இங்கேதான் அவர் இனியும் குடியிருக்கணும். அவர் அஸ்தியை இங்கே கொண்டு வந்து விடுங்கள். அதை அவர் கடைசியாய் நின்று விழுந்த இந்த கான்கிரீட் பெஞ்சின் மீது ஸ்தாபித்து, ஒரு சின்னக் கோயில் கட்டி என் வாழ்நாள் பூராவும் வழிபடப் போகிறேன் ' என்று நான் சொன்னதைக் கேட்டு எல்லோரும் பரஸ்பரம் முகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் முகத்தில் ஒரு கலவரம்....அடக்கமான பேச்சு....

கடைசியில் அம்மா மூலையில் கிடக்கும் என் செவியில் வந்து ரகசியமான குரலில் சொன்னாள்.

தேவகீ....நீ என்ன சொல்றே... செத்துப் போன உயிருக்கு ஆத்ம சாந்தி அடைய அஸ்தியை கடலில் கொண்டு போய்த்தான் கரைக்கணும் வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது அது ஆபத்து.... '

பக்கத்தில் கிடந்து பிலாக்கணம் பாடி அழுது கொண்டிருந்த என் பெரியம்மாவும் ஒத்துப் பாடினாள். 'அது மட்டுமா...... ' அப்படி நீ சொல்வதைப் போல் அஸ்தியை இங்கே கொண்டு வந்து அடக்கினால், அந்த இடத்தில் தீட்டுப்படவே கூடாது.... நீ இப்போ கிழவி ஆயிட்டியா.... மாசத்தில் மூணு நாலு நாட்கள் உனக்கும் அதன் பக்கத்தில் போக முடியாது, பூஜை செய்ய முடியாது.... '

ஆனால் என் பிடிவாதத்தின் முன் அவர்கள் வாதங்கள் நிற்கவில்லை. கடலில் கொண்டு போய் கரைத்தது போக மீதியை ஒரு சின்னச் செம்பில் போட்டு, இந்த கான்கிரீட் பெஞ்சின் மீது வைத்து, சுற்றி செங்கல் அடுக்கி ஒரு சின்ன பீடமும், மழைநனையாதிருக்க சிறு கோயிலும்.

வெயில் சுள்ளென்று உறைத்தது.

திரும்பி நடந்தேன், படிகள் ஏறும்போது, சென்ற மாதம், அவர் மறைந்து முதலாண்டு திகைவதற்கு முந்தியநாள் நாள் வரையிலும் என்றும் இந்த பீடத்தில் விளக்கேற்றி வைத்ததும். அடுத்த நாள் திவசத்தின் அன்று அப்பா, அண்ணா உடன் நிற்க உறவினர்கள் பீடத்தை உடைத்து செம்பை வெளியில் எடுத்து கன்யாகுமரிக்கடலில் கொண்டு கரைத்து விட்டு வந்ததும் ஞாபகம் வருகிறது. அப்போது அதை எதிர்க்கவோ தடுக்கவோ எனக்குத் தோன்றவில்லை. இது ஏன் ?

வராந்தா படியில் நின்று கொண்டு மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.

கான்கிரீட் பெஞ்சி வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.... தொட்டு காம்பவுண்டு சுவர்....அதை மீறி தூரத்தில் நீண்டு செல்லும் கன்னங் கரிய தார் ரோடு, விரைந்து செல்லும் கார்கள்....பாதசாரிகள் என்றும் அவர் கடைக்குச் செல்ல இங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு இறங்கிய பின்னும், விரித்த குடையின் கீழ் சிறைப்பட்டுச் செல்லும் நிழலில் நனைந்தவாறு அவர் தூரத்தில் இந்த ரோடு முனையில் சென்று மறைவதுவரை, இங்கே இப்படி நின்று கொண்டு பார்த்துவிட்டுத்தான் கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போனேன். மத்தியானம் சாப்பிட வரும்போதும், சாப்பிட்டு விட்டுத் திரும்பிச் செல்லும் போதும், எல்லாம் இதே நாடகம் இதே லயத்தில் இங்கே ஆவர்த்தனமாகிக் கொண்டிருந்தன.

இப்போது....

அதே ரோடு.....

பாதசாரிகள்... கார்கள்....

நிற்கும் அதே நான்....

அவர் ?

மறுபடியும் உள்ளே வந்து சுவரில் சாய்ந்து உட்காருகிறேன்.

இந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைத்து நிகழ்ந்த சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மழைக்கால மேகங்களாய் என் சிரஸைத் தொட்டுக் கொண்டு ஓடி நடக்கின்றன.

மெளனமாய் பரிவுடன் உற்று நோக்கும் அவர்.... செவிப்புலன் மேலும் மேலும் கூர்மையாகியும் தேவீ..... என்று அந்த அடக்கமான அழைப்பு என் சித்தத்தில் கேட்கவில்லை.

கன்னியாய் இருக்கையில், பக்கத்தில் எனக்காகப் பிறந்திருந்த இவரை இனம் காண இயலாமல், ஊரெல்லாம் எனக்கு மாப்பிள்ளைத் தேடிக் களைத்து, இறுதியில் இவரைக் கைப்பிடித்தது......

ஒரு தடவை பெரியம்மை கண்டு, அக்கினி நட்சத்திரதின் ஆரத்தழுவலில் என்னை மறந்து கிடக்கையில், முகமில்லா நாலு பேர் தோள் தாங்கி என்னை தூக்கி, ஆதியந்தமில்லா காலப் பெருவெளியில் அமிழ்ந்து சென்று கொண்டிருந்த, கனவில்லை என்று உணரும் ஒரு நினைவு மிரட்சி.....

'தேவகீ.... மணி மூணு இருக்கும்.... காப்பி போடட்டுமா ? '

அம்மா கேட்கிறாள்.

நான் பதில் சொல்லவில்லை. அம்மா பதிலை எதிர் பார்த்திருக்க மாட்டாள். அவளுக்குத்தான் தெரியுமே இன்று எனக்கு மெளன விரதம் என்பது.

அம்மா எழுந்து சோம்பல் முறித்துவிட்டுக் கொட்டாவி விட்டவாறு சமயலறைக்குச் சென்றாள்.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.