LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நெகிழ வைத்தார் பாலசந்தர் !.. - எம்.எஸ்.உதயமூர்த்தி

என்னுள் நிகழ்ந்த மனவியல் மாற்றங்களையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் எண்ணிப் பார்க்கிறேன் எது என் கற்பனைத் திறனை வளர்த்தது? எந்த விஞ்ஞானப் படிப்பு எனக்கு எதிலும் ஒரு விஞ்ஞான அணுகுமுறையை அளித்தது? ஆழத்தில் இருந்த இந்த இரண்டு தீவிர எண்ணங்களும் ஆசைகளும் எப்படி என்னை ஒரு எழுத்தாளனாகவும் விஞ்ஞானத் துறையிலும் தொழில் துறையிலும் ஈர்த்தன? எப்படி வாழ்வில் அதற்கேற்ப சம்பவங்கள் தானாக நேர்ந்து கொண்டிருந்தன?

எண்ணங்கள் எப்படி ஆசைகளாகி "நம்மால் முடியும்" என்ற நம்பிக்கைகளாகி, நம் வாழ்வை நடத்துகின்றன என்பது திருப்பதியில் பல படிகளேறி, பல மயில்களைக் கடந்த ஏழுமலையானைத் தரிசிப்பது போலத்தான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போதே கதைகள் எழுதினேன். மனதில் அபரிமிதமான கற்பனை, எழுதப் போகும் ஒவ்வொரு வரியும், என் மனதில் ஓடிக் கொட்னிருக்கும் படிப்பை முடித்த முதல் ஆண்டே எனது சுயம்வரம் என்ற சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது. அதற்கு முன் பி.எஸ்.ஸி படித்த போதே தினமணி கதிரில் என் விஞ்ஞானக் கட்டுரைகளும், பொன்னி, சுதேசமித்திரன் ஞாயிறு மலர் இதழ்களில் என் கதைகளும் வெளி வந்தன.


தினமணியிலிருந்து 15 ரூபாய்க்கு செக் அனுப்பி இருந்தார்கள். எனது "அறிவுள்ள தாவரங்கள்" என்ற கட்டுரைக்கு "லாயிட்ஸ் பேங்க் ஆப் லண்டன்" என்ற அந்த செக் லாயிட்ஸ் வங்கியின் தலைமையகமான லண்டனில் இருந்து வருகிறது என்பதைப் பார்த்த எனக்கு ஒரு இன்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு இருந்த உற்சாகம் பெருமை, அளவு கடந்தது. எனது பேராசிரியர்கள் இதை அறிந்து பெருமைப் பட்டார்கள்.

ஆனால் இந்த கற்பனை உலகம் என்னை நடைமுறை உலகிலிருந்து அப்புறப்படுத்தி விட்டது என்பதைப் போகப் போக உணர்ந்தேன். நான் மனதில் கண்டு வாழ்ந்த கற்பனை உலகம் வேறு, நடைமுறை உலகம் வேறு, எனவே எனக்கு நடைமுறை உலகின் நெளிவு சளிவுகள் தெரியவில்லை. என்னால் அதை சமாளிக்க முடியவில்லை. ஒரு பூ விற்கின்ற பெண்மணி "வாங்குகிற ஆளைப்பாரு" என்று சொல்லிவிட்டால், தான் ஒன்றுக்குமே உதாவதவன் என்று சுற்று முற்றும் பார்ப்பேன்.

பூ வாங்கக் கூட நாம் லாயக்கில்லை. நம் மனைவி சொல்வதுதான் சரி என்று நிழலில் ஒதுங்கினேன்.

பி ஒரு நாள் நன்றாக உள்ளுக்குள்ளே விசாரணை நடத்தினேன். ஒரு காரியம் செய்தேன், அதாவது கதை எழுதுவதை குறைத்துக் கொண்டேன் ! அல்லது விட்டேன் என்றே சொல்லலாம். இது ஒரு கட்டம் ஒரு மாற்றம்.

நான் குடந்தையிலிருந்து, விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு வந்தபோது எனது கதைகள் - மாதம் ஒரு கதை என்கிற ரீதியில் -தினமணி கதை பத்திரிகையில் எனது கதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அப்போது "துமிலன்", அதன் ஆசிரியர், பெரிய சைசில் போட்டுக் கொண்டிருந்த தினமணி கதிரை விகடன் அளவில் மாற்றிய அந்த முதல் இதழிலும் எனது நட்சத்திரக் காதலி என்ற கதை வெளியாகி இருந்தது.

அப்போது குமுதம் ஓகோ என்று போய்க் கொண்டிருந்த காலம் எனக்கு ரா.கி ரங்கராஜன், கே.மாலதி என்கிற புனைப் பெயரில் எழுதுகின்ற நகைச்சுவைக் கதைகளும் ஜரா சுந்தரேசன் எழுதிய கதைகளும் மிகவும் பிடிக்கும். குமுதத்தில் என்னுடைய கதையும் எனது கல்லூரித் தோழர் கே.பாலசந்தர் அவர்களது. கதையும் ஒரே இதழில் வெளிவந்தது. ஒரு கதாசிரியன் கதை எழுத உட்கார்கிறான். அவனது கதாபாத்திரங்கள் அவனுடன் பேச ஆம்பிக்கின்றன. சுதா பாத்திரங்களின் கதையை நகர்த்த கதாசிரியனுக்கும், சுதா பாத்திரங்களுக்கும் நடக்கும் விவாதத்தைக் கற்பனையுடன் எழுதி இருந்தேன்.

பாலசந்தர் ஹாஸ்யமாக "ஆண்களுக்கு மட்டும்", பெண்களுக்கு மட்டும்" என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவைக் கட்டுரையை எழுதி இருந்தார். யோசித்துப் பார்க்கிறேன். இரண்டு இளைஞர்கள், பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்களை, தாங்களே சிருஷ்டித்துக் கொண்ட ஒரு எழுத்துத் துறை அவர்களை எப்படி ஆட்கொண்டது என்பதை எண்ணி வியக்கிறேன். நம் எண்ணங்கள் நம் ஆழ் மனதின் ஆசைகள் தான் நம் வாழ்வைச் செதுக்குகின்றன.

அடுத்த முறை நான் பாலசந்தரை சந்தித்தது ஆபட்ஸ்பரிக்கு எதிராக - இன்றைய அண்ணாசாலையில் - எதிரும் புதிருமாக சந்தித்தோம் சைக்கிளில் தான் அக்கெளண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், ராகினி கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவை நடத்தி வருவதாகவும் சொன்னார். நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பதைச் சொன்னேன்.

அடுத்த முறை நான் பாலசந்தரைச் சந்தித்தது அவர் சினிமா டைரக்டராகி அவர் எடுத்த சினிமா படங்களை எல்லாம் பார்த்த கால கட்டத்தில் - ஒன்பதாண்டுகள் கழித்து, வளர்ச்சி என்றால் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ! கதை அமைப்பு, நகைச்சுவை, கதையுடன் நம்மை ஒன்ற வைக்கும். அவரது பாணி, கதையின் கருத்து, கற்பனை என்று அவர் எங்கோ போய்விட்டார் ! நான் அசந்து போனேன். எல்லாவற்றிலுமே அவர் முத்திரை இருந்தது அதற்கு முன்பாக "இது சிவாஜி படம்", "இது எம்.ஜி.ஆர் படம்" என்று நடிப்பவர்களை முன்னிறுத்தியே படம் ஓடிக் கொண்டிருந்தது. முதன் முதலாக உள்ளே வேலை செய்யும் ஒரு கலைஞனை - ஒரு படைப்பாளனை - முன்னிறுத்தி அதாவது "டைரக்டர் பாலசந்தர் படம்" என்று அவர் பெயரைச் சொல்லி அதற்காக மக்கள் படம் பார்க்கப் போனதைப் பார்த்தேன். எப்படிப்பட்ட மற்றம்.

ஒரு விதையானது, செடியாகி வளர்ந்து பூக்கும் போதுதான் அதன் மணம் எல்லோரையும் கவர்கிறது. ஆனால் அந்த விதைக்குள் அதன் பூ, காய், கனி, இலை, மரம் என்ற எல்லா அம்சங்களும் இருக்கின்றன. அவை உள்ளுக்குள்ளே சதா வேலை செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அவர் அண்ணாமலையில் படித்த போது அவர் படித்த இரண்டாவது பாடம் தமிழல்ல. அவர் எடுத்துக் கொண்ட மொழி பிரெஞ்சு படித்து பி.எஸ்.ஸி பட்டம் பெற்றபோது அவர் ஒருவர் தான் மூன்று பாடங்களில் பிரெஞ்சு, விலங்கியல், தாவரவியல் என்ற மூன்று பாடங்களில் முதல் வகுப்பு பெற்றிருந்தார். இது சாதாரண விஷயமல்ல.

என திருமணத்தின்போது கலை அம்சத்துடன் ஓர் ஓவியம் வரைந்து தன் வாழ்த்துச் செய்தியினைத் தெரிவித்திருந்தார். நான் அவரைச் சந்திப்பதுண்டு அதாவது எப்போதாவது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேலை, விஷயம் இருக்கும் போது மட்டும் தான் கூப்பிடுவேன். ஏனெனில் அவரை நான் அவரது ஆக்க பூர்வமான கலைத் தொழில் சிந்தனையிலிருந்து அப்புறப் படுத்த விரும்புவதில்லை. இஸ்ரேலில் ஒரு தெருவின் முன் ஒரு வாசகம் வைக்கப்பட்டிருக்கிறதாம்.

"இங்கு நமது கவிஞர் எழுதிக் கொண்டிருக்கிறார் அவரது சிந்தனையைக் கலைக்காதீர்கள். அமைதியாகச் செல்லுங்கள்" என்று.

என்னை ஆச்சரியப்பட வைத்த மற்றொரு சம்பவம் பின்னால் நிகழ்ந்தது.

அதாவது மக்கள் சக்தி இயக்கத் துவக்க நாள், 1988, மே 59ம் தேதி, அன்று மாலை எனது நூல் ஒன்றை வெளியிடும் விழாவை எனது பதிப்பாளர் வானதி திருநாவுக்கரசு அவர்கள் பாரதீய வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவுக்கு முக்கியப் பிரமுகர்களை நண்பர் திருநாவுக்கரசு அழைத்திருந்தார். கல்கி  ராஜேந்திரன், பாலசந்தர், திருமதி சிவசங்கரி, அமுதசுரபி ஆசிரியர் விக்ரமன் முதலியோர் பாரதீய வித்யா பவனில் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். நல்ல கூட்டம், கல்கி ராஜேந்திரன் என்று நினைக்கிறேன்.பேசிய போது குறிப்பிட்டார். "உதயமூர்த்தியின் கருத்துக்கள் எல்லாம் பொதுமக்களிடையே பரவ வேண்டுமானால், நான் பாலசந்தரை ஒன்று கேட்டுக் கொள்வேன். அவரை சினிமாவில் நடிக்க வையுங்கள்!" என்றார். ஒரே சிரிப்பு, நான் என் வழுக்கைத் தலையின் முன்புரத்தைத் தடவிக் கொண்டேன் !

அடுத்து பேச, பாலசந்தர் எழுந்தார். "என் படத்தில் உதயமூர்த்தி நடிக்கிறார்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். சொல்லி விட்டு மேலும் கீழும் மேடையில் நடந்தார். கூட்டத்தைப் பார்த்து சட்டென்று திரும்பினார். ஒரே சஸ்பென்ஸ் ! "இதோ பாருங்கள்! உதயமூர்த்தியே நாற்காலியின் முனைக்கு வந்து விட்டார்!" என்றார் விவரம் புரியாத ஆர்வம் என்னுள்.. நான் பேசி. வருகிற பொதுக்கூட்டங்களின், சில காட்சிகளை எடுத்து அவரது சினிமாவில் உபயோகித்திருக்கக் கூடும். என்று எண்ணம் ஓடியது.

இதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன், பாலசந்தர் ஒரு கடிதம் எழுதி இருந்தார். "அன்புள்ள உதய், உங்கள் கட்டுரைத் தொடரின் தலைப்பை நான் களவாடிக் கொண்டிருக்கிறேன்" என்று. அப்போது தான் "நம்புதம்பி, நம்மால் முடியும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை ஆனந்தவிகடனில் எழுதி முடித்து இருந்தேன். எனவே. "உன்னால் முடியும் தம்பி" என்கிற தலைப்பில் படம் பிடிக்கிறார் என்பது மட்டும் ஒரளவு எனக்குத் தெரியும் என்ன சொல்லப் போகிறார் என்று நான் அவரை நோக்கினேன்.

"உன்னால் முடியும் தம்பி" படத்தின் கதாநாயகனின் பெயர் "உதயமூர்த்தி" என்று சொல்லி சற்று நேரம் நிறுத்தினார். என் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு முகத்தில் ஒரு புன்னகை - என்னை அறியாமல் அடுத்து ஓரிரு மாதங்களில் படத்தின் பிரிவியூக்காக என்னை அழைத்திருந்தார் நானும் என் மனைவியும் சென்றோம். படத்தில் கமலஹாசன் தான் கதாநாயகன் வேடம். படம் கொஞ்சதூரம் ஓடிய பின் ஜெமினி கணேசன் - கமலஹாசனின் அப்பா - தன் மகனைக் கூப்பிடுகிறார் உரத்த குரலில் "உதயமூர்த்தி" என்று.

நான் திரை அரங்கில் பார்வையாளனாக அமர்ந்திருக்கிறேன் திரையில் தோன்றுகின்ற மனிதர் என் பெயரைச் சொல்லி என்னை அழைக்கிறார் ! நான் எழுந்து மேடையை நோக்கி நடக்காத குறைதான்... இது சினிமா என்று உணர ஒரு கணம் ஆயிற்று...

"நாம் என்ன செய்து விட்டோம்? இப்படி ஒரு மனிதர் தானே முன்வந்து, ஆத்மார்த்தமாக தமக்காகச் செய்திருக்கிறாரே!" என்ற நன்றிப் பேருக்கு தான் என் உள்ளத்தில் மேவியது என்னால் அதை அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. படத்தைப் பாராட்டி விட்டு வெளியே வந்தேன்.

அவர் செய்த மிகப் பெரிய காரியத்தின் கனத்தை முழுமையாக விளக்க வேண்டுமானால் மற்றோர் விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். உன்னால் முடியும் தம்பி படத்தைத் திரையிடுவதற்கு முன் ஒரு பிரபல அரசியல் தலைவரைப் பிரிவியு(PREVIEW) படம் பார்ப்பதற்கு அழைத்திருக்கிறார். படம் முடிந்தவுடன் அவரை அணுகி படம் எப்படி இருக்கிறது என்று பாலசந்தர் கேட்டிருக்கிறார். "படத்தின் கதை அமைப்பையோ, இயக்கத்தையோ, நடிப்பையோ பற்றி விமர்சிப்பார்" என்று எதிர்பார்த்த பாலசந்தரிடம் "உதயமூர்த்திக்குப் பாராட்டு விழா எடுத்திருக்கிறீர்கள்" என்று சொன்னாராம் அந்தத் தலைவர்! அதுதான் அவர் கண்களை உறுத்தியது!

1997க்கான ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருதினையும், பண முடிப்பையும் அளிக்க என் நூல்களைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அறக்கட்டளையின் தலைவி திருமதி தேவகி முத்தையா அவர்கள் எண்ணி போனில் கூப்பிட்டார்கள். "உங்களுக்குப் பிடித்த, உங்கள் நண்பர் பலசந்தரைத் தான் உங்களைப் பாராட்டக் கூப்பிட்டிருக்கிறோம்.  அவரும் வருவதாக ஒத்துக் கொண்டார்" என்றார்கள். ராஜா அண்ணாமலை மன்றத்தில் அன்று - ஒரு பக்கத்திலே என்னுடைய இனிய மாணவர், 1958லிருந்து நான் பழகிய இனிய நண்பர் மிகப் பெரிய தொழிலதிபர் ஏ.சி முத்தையா, மறுபக்கத்தில் எனது பெருமதிப்புக்குரிய நண்பர், என் கல்லூரித்தோழர். இந்தியாவின் ஒரு தலை சிறந்த டைரக்டர் பாலசந்தர்.

இதைவிடப் பெருமை, மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு வேறு என்ன ஏற்பட முடியும்? வார்த்தைகளினால் வர்ணித்து விட முடியாத, ஒரு வாழ்நாள் அனுபவம் !

நாமும் உயர்த்து, அவர்களும் உயர்ந்து - ஆத்மாவின் சங்கமம் அங்கெ நிகழ்ந்து கொண்டிருந்தது. எங்கும் ஆண்டவன் நிறைந்திருப்பது போன்ற ஒரு உணர்வு. மனம் கை கூப்பியது. ஆண்டவனுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தேன். மனித உருவில் இருந்த என் நண்பர்களுக்கும் சேர்த்து - அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு...

by Swathi   on 26 Dec 2014  0 Comments
Tags: MS Udayamurthy   K. Balachander   பாலசந்தர்   எம்.எஸ்.உதயமூர்த்தி           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.