LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார் பதிப்பு வரலாறு - அ. தட்சிணாமூர்த்தி

தமிழறிஞர்கள் தம் கவனத்தைப் போதிய அளவு செலுத்தாத துறை தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு ஆகும். இலக்கிய வரலாற்றின் இன்றியமையாத கூறுகளுள் ஒன்றாகப் பதிப்பு வரலாறு கொள்ளப்படுவது மிகவும் விரும்பத்தக்கது. நாலடியார் பதிப்பு வரலாறு பற்றி ஓரளவு கவலைப்பட்டவர்களாக இருவர் தென்படுகின்றனர். ஒருவர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன், இன்னொருவர் சென்னையில் மாநகராட்சிப் பள்ளியொன்றில் பணியாற்றிவரும் இளைஞர் ப. சரவணன். அவர் கோமளபுரம் சி. இராசகோபாலப்பிள்ளை பதிப்பித்த நாலடியார்க்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செய்த மீள்பதிப்புக்கு (2000ஆம் ஆண்டு) ஆங்கிலத்தில் ஒரு சிறப்பான முன்னுரையை தி.ந. இராமச்சந்திரன் வழங்கியுள்ளார். தம்முடைய நூலகத்தில் சேமிக்கப்பட்ட நூல்களைக் கொண்டு ஒரு நல்ல பதிப்பு வரலாற்றைத் தந்துள்ளார்.1
ப. சரவணன், 1892ஆம் ஆண்டில் வெளிவந்த ஊ. புட்பரதச் செட்டியாரின் நாலடியார் பதிப்பை மீளவும் பதிப்பித்துள்ளார். அது சந்தியா பதிப்பகம் வாயிலாக 2004இல் வெளியாயிற்று. இந்நூலின் முன்னுரையில், நாலடியார் பதிப்பு வரலாறு பற்றிய நல்ல செய்திகளைத் தர முயன்றுள்ளார்.2 நாலடியார் பதிப்புப் பற்றிய ஆய்வுக்கு மிகவும் உதவும் செய்திகளை இவர் தந்துள்ளார்.
தி.ந. இராமச்சந்திரன், தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், 1855இல் களத்தூர் வேதகிரி முதலியார் வெளியிட்ட நாலடியார் உரையே முதன்முதல் வெளிவந்த நாலடியார் பதிப்பாக இருக்கலாம் என்ற ஊகத்தைப் பதிவுசெய்தார். புட்பரதச் செட்டியாரின் பதிப்பை மீள்பதிப்புச் செய்த சரவணன், 1851இல் வெளிவந்த வேதகிரியார் உரையோடு கூடிய நாலடியார் பதிப்பை உ.வே.சா. நூலகத்தில் கண்டு, அதன் முகப்புப் படத்தைத் தம் நூலில் வெளியிட்டார். அத்தோடு, மு.வை. அரவிந்தன் தம் நூலில் தெரிவித்த ஒரு கருத்தைக் கொண்டு, நாலடியார் பதிப்புகள் 1812இல் வெளிவந்தன என்று முடிவுசெய்து, 1812இல் சென்னையில் இருந்த சென்னைக் கல்விச் சங்கம், அதில் பயின்ற மாணவர் பொருட்டு மூலபாடத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்று தம் ஊகத்தைப் பதிவுசெய்தார். புதுவை அ. வேதகிரி முதலியாரும் புதுவை நயனப்ப முதலியாரும் தனித் தனியே உரையெழுதி வெளியிட்டதாக மு.வை. அரவிந்தன் குறித்திருந்தார். இது தவறான முடிவு என்பது வேறு சான்றுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது.
1924ஆம் ஆண்டில் சென்னை இராயப்பேட்டையில் இருந்த சாது அச்சுக்கூடத்தில் ஒரு நாலடியார் பதிப்பு வெளிவந்தது. அது ஏ. கிருஷ்ணசாமி ஐயங்காரும் துரைசாமி அய்யரும் வெளியிட்டதாகும். இந்நூலில் "அச்சாகி வெளிவந்தனவாக இப்பொழுது தெரிந்த நாலடியார்ப் பிரதிகளின் விவரம்" என்ற தலைப்போடு அட்டவணையொன்று காணப்படுகிறது. இது நாலடியார் பதிப்பு வரலாறு பற்றிய தெளிவினை நமக்கு அளிக்கிறது. இதில் 12 நூல்கள் காட்டப்பட்டுள்ளன. இப்பட்டியலின்படி, புதுவை அ. வேதகிரி முதலியார் வெளியிட்டது நாலடியார் மூலமே. வெளிவந்த ஆண்டு 1812 அன்று, 1837 ஆகும். புதுவை நயனப்ப முதலியார் பெயரில் இப்பட்டியலில் பதிவாகியது மூலமும் உரையுமாக அமைந்ததுதான். பதிப்பித்தவர் முத்துசாமி முதலியார். வெளிவந்த ஆண்டு சாலிவாகன சுகம் 1767 (1923). 1812ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாலடியார் பதிப்பு, உரையோடு கூடியதன்று. மூல நூல் மட்டுமே. அதனை அச்சிட்டு வெளியிட்ட பெருமை தஞ்சையைச் சார்ந்த கிறித்துவ சமயப் பெரியவரும் மாசத்தின சரிதை என்ற இதழின் ஆசிரியருமான ஞானப்பிரகாசன் என்பவரையே சாரும். தம் இதழ் அச்சடிக்கப்பட்ட தம் சொந்த அச்சகத்திலேயே இதனை அச்சிட்டார். 1831ஆம் ஆண்டில், சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைப் புலவராக விளங்கிய தாண்டவராய முதலியார் சர்ச்சுமிசியோன் அச்சகத்தின் வழியே நாலடியார் மூலத்தை வெளியிட்டுள்ளார். இச்செய்திகள், நாலடியார் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்ட தமிழ் நூல் என்னும் உண்மையை நிலைநாட்டுகின்றன.
மா.சு. சம்பந்தனும் அ.மா. சாமியும் எழுதியுள்ள ஆய்வு நூல்களில் காணும் ஒரு செய்தி, இந்தியாவிலேயே முதல் அச்சக உரிமையாளர் என்ற பெருமை படைத்தவர் தஞ்சை ஞானப்பிரகாசரே என்பதும், தமிழில் முதன் முதல் அச்சேற்றப்பட்ட நூல் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகியவை அடங்கிய தொகுதிதான் என்பதுமாகும். கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் இந்நூலின் படியொன்று காக்கப்பட்டுவருகிறது. இதன் முகப்புப் படத்தை மா.சு. சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.3 இந்தச் சான்றின் உதவியால், இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சு வாகனமேறிய பெருமை நாலடியாருக்கு உண்டு என்னும் உண்மை அறியப்படுகிறது.
நாலடியாரின் மூலபாடம் 1812இல் வெளிவந்தது. அதற்குரிய உரையோடு கூடிய முதற்பதிப்பை வெளியிட்ட பெருமை மேற்சுட்டிய தாண்டவராய முதலியாரையே சார்கின்றது. பெரும்புலவராகிய அவர் பல நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர். 1839 முடிய சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த இப்பெருமகன், பதவி உயர்வு பெற்றமையால், தாம் எழுதிவைத்திருந்த நாலடியார் உரையைத் தம் நண்பரான புதுவை நயனப்ப முதலியாரிடம் ஒப்பபடைத்து, தன் சார்பில் அதனை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். அதனை நயனப்ப முதலியார் 1844ஆம் ஆண்டு நிறைவேற்றினார் என மா.சு. சம்பந்தன் தெரிவிக்கின்றார்.4 இதனால் அறிவது யாதெனில், நாலடியார்க்குரிய முதல் உரையோடு கூடிய பதிப்புக்கு நயனப்பர் உதவியவரேயல்லாது உரையாளராகார். மேலே குறித்த எஸ்.கே. சுவாமி அண்டு கம்பெனியின் வெளியீட்டில் (1924) குறிக்கப்பட்ட பதிப்பு இரண்டாவது பதிப்பாகலாம் என்பதும் தெளிவாகிறது.5 1953இல் பழைய உரைகள் அடங்கிய அரிய பெரிய நாலடியார் உரைவளத்தை, சரசுவதி மகால் வெளியீடாகச் செய்த முத்துரத்தின முதலியார் இந்நூலைப் பதிப்பித்துள்ளார். நாலடியாரின் காமத்துப்பாலில் காமநுதலியல் என்னும் 40ஆம் அதிகாரத்தை மட்டும் வைத்துப் பதிப்பித்தவர்களும் 38, 39, 40 ஆகிய மூன்று அதிகாரங்களையும் காமத்துப்பாலாகக் கொண்டவரும் என இரு திறத்தர் ஆசிரியர். 40ஆம் அதிகாரத்தை மட்டுமே கொண்டவர் ஒரு பழைய உரையாசிரியராவார். இது பொருத்தமானது என்னும் கருத்துக் கொண்ட புதுவை நயனப்ப முதலியார், "தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் கற்புடை மகளிரை அறத்துப்பாலினும், பொது மகளிரைப் பொருட்பாலிலும் சேர்த்துள்ளது இங்கு(க்) கருதற்குரியது. காம நுதலியல்-தவிர்த்த மறையிரண்டதிகாரங்கட்கும் அகப்பொருட்கிளவியில்லாமையும் இவ்வதிகாரவடைவிற்குக் காரணமாம்; என்று சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ் புலவராக இருந்த தாண்டவராய முதலியாரவர்களும் தமது நாலடி உரையில் கூறியிருப்பது காண்க" என்கிறார்6. பதுமனார், தருமர், பெயர் அறியப்பெறாத மூன்றாமவர் ஆகியோரைத் தவிர்த்து, முதன்முதல் நாலடியாரை உரையோடு வெளியிட்டவர் தாண்டவராய முதலியாரே என்பது ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்படுகிறது. இவ்வுரை எவ்வளவு அருமுயற்சி செய்து தேடியும் கிடைக்கவில்லை என்பது வருத்திற்குரியதாகும். புதுவை நயனப்ப முதலியார், தம் நண்பர் சார்பாக நாலடியாரை வெளியிட்ட மறு ஆண்டிலேயே காலமானார் (1779 - 1845).7
நாலடியார்க்கு உரை வகுத்த பெரியோர் பலருள்ளும் பெருபுகழ்ச்சிக்குரியவராக அறிபடுபவர் களத்தூர் வேதகிரி முதலியாரேயாவார் (1795-1852). இவர் முகவை இராமாநுசக் கவிராயரிடம் கல்வி பெற்றவர். அவர் நிறுவிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக மதுரையிலும் புதுவையிலும் சென்னையிலும் பணி புரிந்தவர். சென்னையில் அச்சுக்கூடம் நிறுவியவர். இவர் நாலடியார்க்கு உரையெழுதி 1851இல் வெளியிட்டார். இந்நூலின் ஒரேயொரு படி உ.வே.சா. நூலகத்திலுள்ளது. அதன் முகப்பிலுள்ள விவரமே அதற்குரிய முன்னுரையாகும்.
கன்னிவாடிப் பேரரசரின் அமைச்சரான திண்டுக்கல் முத்துவீரப்பிள்ளை, மதுரை முத்துக்கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் உத்தரவுப்படி வேதகிரி முதலியாரால் வெளியிடப்பட்டது இந்நூல் என்னும் குறிப்பைக் காண்க.8 பதவுரையும் கருத்துரையும் இலக்கண மேற்கோளும் செய்து புலவர் தம் பணியினை முடித்த பின், அவர் மகன் ஆறுமுக முதலியார் தம் இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடத்தில் அதனை அச்சிட்டு வெளியாக்கினார் என்றும் இது கந்தசாமி முதலியாரால் நிறைவேறிற்று என்றும் அறிகிறோம். விரோதிகிருது ஆண்டு தை மாதம் (1851) இது வெளியிடப்பட்டது. 1851இல் இவர் வெளியிட்ட யாப்பருங்கலக் காரிகையைக் குறிப்பிட்ட மா.சு. சம்பந்தன், நாலடியாரைச் சுட்டாமை வியப்பாகவே உள்ளது.9 இந்நூல் வெளியான மறு ஆண்டில் முதலியார் காலமானார்.
இப்பதிப்பு பல அச்சுப் பிழைகளைக் கொண்டுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு 1855இல் வெளிவந்தது. இதனைத்தான் ஜான் மர்டாக் பதிவு செய்துள்ளார். இதன் படியும் இப்பொழுது அரிதாகிவிட்டது. முன்பகுதி சிதைந்துபோன ஒரு படியைப் பெரும்புலவர் தி.வே. கோபாலையர் எனக்குத் தந்து உதவினார். அது இவ்விரண்டாம் பதிப்பு என்று கூறுவதற்குச் சான்றுகள் உண்டு. 1863இல் வெளியிடப்பட்ட ஒரு படி தி.ந. இராமச்சந்திரனிடம் உண்டு. அது, முதலியாரின் இன்னொரு மகன் சுப்பராய முதலியாரால் வெளியிடப்பட்டது. பிழைகளை ஒருவாறு நீக்கி வெளியிட்டதாக அவர் குறித்துள்ளார். நீக்கப்பட்ட பிழைகள் என்னிடமுள்ள ஐயர்க்கு உரிமையான படியில் உள்ளது. அந்நூல் முதற்பதிப்பிலும் வேறானது என்பது நூலின் உயரம், அகலங்களால் அறியப்படுகிறது. இதன் இறுதியில் பல சாற்றுக்கவிகள் பதிவுபெற்றுள்ளன.
வேதகிரி முதலியாரின் உரை இருபது முறைகட்கு மேலாக மறுபதிப்புப் பெற்றுள்ளது. காலம் செல்லச் செல்லப் பதிப்பு நெறி வளர்ச்சியடைந்துள்ளது. 1951 வரையிலும் இந்நூல் மீண்டும் மீண்டும் அச்சிடப்பட்டது. பதிமூன்று அச்சகங்கள் இதனை வெளியிட்டுள்ளன. பதவுரை, கருத்துரை, இலக்கண விளக்கமும் மேற்கோளும் என்பன இதன் அமைப்பு. இது மேலும் விரிப்பிற் பெருகும்.
வேதகிரி முதலியாருக்குப் பிறகு 1869இல் கலா ரத்நாகர அச்சுக்கூடத்தில் நாலடியார் மூலம் மட்டும் அச்சாயிற்று. 1873இல் திருமயிலை முருகேச முதலியாரின் உரையுடன் ஒரு பதிப்பு வெளிவந்தது. செட்டியாரே இதை வெளியிட்டார். 1887இல் செட்டியாரின் மூலப் பதிப்பு இன்னொன்றும் வெளியாயிற்று. அது இப்பொழுது கிடைக்கவில்லை. 1885இல் புட்பரதச் செட்டியாரின் உரையோடு கூடிய பதிப்பு ஒன்று வெளிவந்தது. 1892இல் பதவுரை, கருத்துரை இலக்கணக் குறிப்போடு ஆங்கில மொழிபெயர்ப்பும் கொண்ட பதிப்பு வெளியாயிற்று. 1904, 1924 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புக்கள் வெளி வந்துள்ளன. மொழிபெயர்ப்பு யாருடையது என்று விளங்கவில்லை. 1883இல் பழனியைச் சேர்ந்த வி. மௌனகுரு ருத்திரமூர்த்தி என்பவரின் உரையுடன் ஒரு பதிப்பு வெளிவந்தது. வித்தியா விநோத அச்சகம் வெளியிட்ட இது வேதகிரி முதலியாரின் பதிப்பைப் பின்பற்றியதாகும்.
களத்தூர் வேதகிரி முதலியாரின் நூல் 1884ஆம் ஆண்டில் மீண்டும் பதிவுபெற்றது. அதன் பிறகு ஓர் இடைவெளிக்குப் பின்னர் 1908இல்தான் மீண்டும் பதிவுபெற்றது. இந்த இடைக்காலத்தில் புதிய பதிப்பொன்று வெளிவந்தது. திருச்சிராப்பள்ளி மட்டுவார் குழலாம்பாள் அச்சுக் கூடத்தில், புத்தக வணிகர் தி. சபாபதிப்பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தில்லைவிடங்கள் சேதி. துரைசாமிப் பிள்ளையால் பார்வையிடப்பட்டது. இப்பதிப்பு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கணப் பேரறிஞர் என்று பெயர் பெற்ற திருத்தணிகைத் தமிழ்ப் புலவர் விசாகப் பெருமாள் ஐயருடையது என்றும் அவர் முன்பு பதவுரையும் கருத்துரையும் செய்து பல இலக்கண மேற்கோளும் காட்டி அச்சில் பதிப்பித்த பிரதிக்கு இணங்க 1892இல் பதிப்பிக்கப்பட்டது என்றும் ரோஜா முத்தையா நூலகத்திலுள்ள, சில பக்கங்கள் சிதைந்து குறையாகவுள்ள பிரதியால் அறியலாகிறது. அவர் முன்பு அச்சில் பதிப்பித்த நூல் கிடைக்கவில்லை. ஆனால் 1892ஆம் ஆண்டு வெளியான நூலின் இன்னொரு பதிப்பு (1903) தஞ்சை சரசுவதி மகாலில் உள்ளது. இது பிடாரித்தாங்கல் நாராயணசாமி முதலியார் மகன் சிதம்பர முதலியாரின் வித்தியாரத்நாகர அச்சுக் கூடத்தில் பதிப்பாயிற்று. 'சென்னை பிரம்பூர் குயப்பேட்டை 65வது நெம்பர் வீடு' என்ற குறிப்பும் காணப்படுகிறது.
விசாகப் பெருமாளையர் உரை என்று சொல்லப்படும் இதில், களத்தூர் வேதகிரி முதலியாரின் 1863ஆம் ஆண்டுப் பதிப்பின் இறுதியில் அச்சிடப்பட்ட சாற்றுக் கவிகள் பலவும் வேறுபாடு இன்றிப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. வேதகிரி முதலியாரின் உரை 99% உள்ளவாறே அச்சாகியுள்ளது. அதில் உள்ள குறைகளும் திருத்தப்படாத நிலையில் இந்நூலில் அச்சாகியுள்ளன. நூல் முழுவதும் மிகப் பரவலாகப் பிழைகள் மலிந்த இதனை, விசாகப் பெருமாள் ஐயர் இயற்றினார் என்று கூறுவது சிறிதும் பொருத்தமாகாது. எங்கோ ஓரிடத்தில், கூர்ந்து காண்பார்க்கு மட்டுமே அரிதில் புலப்படத்தக்க சின்னஞ்சிறு மாற்றங்களே இது வேறொரு பதிப்பு என்று அடையாளம் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, வேதகிரி முதலியாரின் வெளியீட்டில் இல்லாதனவாக இந்நூலுள் கண்டனவற்றுக்குச் சான்றாக இரண்டனைக் காட்டுவோம்.
175ஆம் செய்யுள் உரையில் "மலைபோல் உயர்ந்து நிற்பர்" என்பது இப்பதிப்பில் "மலைபோல் நீண்டு உயர்ந்து நிற்பர்" என்றுள்ளது. 200ஆம் செய்யுள் உரையின் இறுதியில், "அமிர்தம் என்பதை அமிழ்தம் என்றது வடமொழித்திரிபு" என்ற தொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 84ஆம் செய்யுள் உரையில், "மாணின்மை செய்யுங்கால்" என்பதற்குரிய உரையில் வேதகிரி முதலியார், 'பெருமையில்லாமை செய்யுமிடத்து' என உரை கூற, இதில், "பெருமையில்லாமை செல்லுமிடத்து" என்றுள்ளது. ஒரு நீண்ட பட்டியலில் இதிலுள்ள பிழைகளைக் காட்ட முடியும். அவருடைய பெயரைப் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்று கருதப் பல காரணங்கள் உள.
எல்லாவற்றுக்கும் மேலாக, விசாகப் பெருமாள் ஐயரின் வாழ்க்கைக் குறிப்பும் இலக்கிய, இலக்கணத் தொண்டும் குறித்து எழுதப்பட்டவற்றில், இவர் நாலடியார்க்கு உரை வரைந்தார் என்னும் குறிப்பேதும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலோ மா.சு. சம்பந்தன் வெளியிட்ட நூலிலோ சான்றில்லை. மாறாக, இவருடைய இளவலான சரவணப் பெருமாள் ஐயர் நாலடியாரை வெளியிட்டதாகக் குறிப்புண்டு.10 சுருக்கமாகச் சொல்வதாயின் இது பெரிதும் ஐயத்திற்குரியது எனலாம். இது அறிஞர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
1886ஆம் ஆண்டு கோயிலூர் மடத்தைச் சேர்ந்த சிதம்பர சுவாமிகளின் மாணாக்கர் ஏ. இராமசாமிகள் நாலடியார் மூலத்தை மட்டும் வெளியிட்டார். அது கிடைக்கவில்லை.
நாலடியார் பதிப்பில் அடுத்துக் குறிக்கத்தக்கது வணக்கத்துக்குரிய ஜி.யு. போப்பையருடைய நாலடியார் மொழிபெயர்ப்பு நூலாகும். இது 1893ஆம் ஆண்டில் வெளியாயிற்று; ஆக்சுபோர்டு கிளாரண்டன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. போப்பையரின் மிகப் பெரும் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக அமைவது இந்நூல். மிக விரிவான ஆராய்ச்சி முன்னுரை கொண்ட இந்நூலில் மூலம், அதன் மொழிபெயர்ப்பு, சிறப்பு விளக்கங்கள், பிற நூல் மேற்கோள்கள் முதலியன உள்ளன. பாட்டு முதற் குறிப்பு அகராதியை அடுத்து Lexicon Concordance and General Index என்னும் பகுதி உள்ளது (273-435 பக்கம்).
இந்நூலில் காணும் ஒரு சிறந்த கூறு, இவர் ஆங்காங்கே மேற்கோளாகக் காட்டிச் செல்லும் வடமொழி நீதி சாத்திரங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒப்புவமைப் பகுதிகளாகும். ஙி.மி.ஷி. என்று அடையாளமிட்டு இவரால் காட்டப்பட்ட இத்தகு மேற்கோள்கள் (ஆங்கில மொழி பெயர்ப்புடன்) 59 ஆகும். ஐயரவர்கள் 108ஆம் பாட்டுக்குக் காட்டும் வடமொழி மேற்கோளில் வரும் மலையமாருதம் என்பதை மலையாளக் காற்று என்று பிழைபட மொழி பெயர்த்துள்ளார்.
இதனை மீள்பதிப்புச் செய்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இதன் மிகச் சிறந்த பகுதிகளை நீக்கிவிட்ட செயல் விரும்பத் தகாதது என்பதனை இங்குச் சுட்டிக்காட்டல் பொருத்தமாகும் (கழகம்: 1958 காண்க). எனினும், தி.கீ. எல்லிசு மொழி பெயர்த்த 64 செய்யுட்களை இதில் சேர்த்துப் பதிப்பித்த செயலைப் பாராட்டாதிருக்க முடியாது. போப்பின் நூல் 1984இல் தில்லியிலுள்ள ஏ.ஈ.எஸ். நிறுவனத்தால் மீண்டும் வெளியிடப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டு நாலடியார் பதிப்பைத் தொடங்கிவைத்தவர் கோமளபுரம் சி. இராசகோபாலப் பிள்ளையாவார். 1903ஆம் ஆண்டு இவர் எழுதிய உரை, அனவரத விநாயகம் பிள்ளை செய்த ஆங்கில மொழிபெயர்ப்போடு வெளிவந்தது. வேதாந்தி வடிவேலு செட்டியார் இதனைப் பார்வையிட்டார். கல்குளம் குப்புசாமி முதலியார் விரிவான ஆங்கில முன்னுரை வகுத்துள்ளார். பதவுரை, பொழிப்புரை, விசேடவுரை, மொழிபெயர்ப்பு என்னும் அமைப்பை இதில் காணலாம். செய்யுள் முதற்குறிப்பும் உண்டு. இந்நூல் 1909, 1926, 1955 முதலான ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2000ஆம் ஆண்டு மீள்பதிப்புச் செய்துள்ளது. இதற்கு உதவியவர் தி.ந. இராமச்சந்திரன். இராசகோபாலரின் உரை இந்நூலின் 37 அதிகாரங்கட்கு மட்டுமே உள்ளது. எஞ்சிய மூன்று அதிகாரங்கட்கும் அவர் மாணாக்கர் திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை உரை வகுத்து நிறைவாக்கினார்.
நாலடியார்க்கு எழுதப்பட்ட உரைகளில் அடுத்துச் சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியது, தமிழும் வடமொழியும் பழுதறக் கற்றுத் தேர்ந்த பேரறிஞரான வை.மு. சடகோப ராமாநுசாச்சாரியாரின் நாலடியார் தெளி பொருள் விளக்கமாகும். இது 1914, 1921, 1928 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பாயிற்று. 1956 வரை இது ஐந்து பதிப்புகளைப் பெற்றுள்ளது. நாலடியாருக்கு வரையப்பட்ட உரைகளில் இதற்குத் தனி மதிப்புண்டு. ஆசிரியர் தம் இலக்கணப் புலமை முழுவதும் வெளிப்பட உரை வகுத்துள்ளார். செய்யுட்களில் காணப்படும் அணிவகைகளைத் தவறாது சுட்டிக்காட்டி, அவற்றுக்குரிய வடமொழிப் பெயர்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். அணிகளோடு அமையாது, எதுகை, மோனை, முரண் முதலான தொடை வகைகளையும் விளக்கிச் செல்கின்றார். பாடல்களில் காணும் பொருள்கோள்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் காட்டியுள்ள வடமொழி மேற்கோள்கள் வேறு எந்த உரையாசிரியரும் செய்யாத ஒன்று. கிரந்த எழுத்துக்களில் அவர் காட்டியுள்ள வடமொழி மேற்கோள்கள் மொத்தம் 26. இவரைவிட மிகுதியாகப் போப்பையர் காட்டியுள்ளது வியப்புக்குரியது. சடகோபர் தம் உரையில் எடுத்துக் காட்டியுள்ள அணிகள் 39. இனவெதுகை, அளபுத் தொடை முற்று மோனை, ஆசிடையிட்ட எதுகை, வருக்க எதுகை, உயிர் எதுகை, முரண் தொடை முதலிய தொடைகளைச் சுட்டியுள்ளார். மிகச் சிறப்பான பாட வேறுபாடுகளையும் இவர் சுட்டத் தவறவில்லை. இவரைப் பின்பற்றி வேறு சிலரும் அணி முதலியவற்றை எடுத்துக்காட்டினர்.
1915இல் பு.க. சீனிவாச ஆச்சாரியார் நாலடியார் மூலபாடத்தை வித்தியாரத்நாகர அச்சுக் கூடத்தின் வாயிலாகப் பதிப்பித்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் வெளிவந்த பதிப்புக்களும் சென்னை மயிலாப்பூரில் இருந்த ஏ.கே. ஸ்வாமி அண்டு கம்பெனியார் இராயப்பேட்டையில் இருந்த சாது அச்சுக் கூடத்தில் அச்சிட்டு வெளியிட்ட நாலடியார் மூலம் (மேற்கோள் விளக்கம், அரும்பத அகராதி முதலியவற்றுடன்) மிகவும் குறிப்பிடத்தக்கது. இது 1924இல் வெளிவந்தது. புத்தகப் பதிவுத் துறையின் குறிப்பினால், இதனை வெளியிட்டோ ர் திரு. ஏ. கிருஷ்ணசாமி ஐயங்காரும் வி. துரைசாமி ஐயரும் என அறிகிறோம். இதில் 1 முதல் 200 பாடல்களின் மூலம் மட்டும் இடம்பெறுகின்றது.
இந்நூலில் 1924 வரையில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியல் இடம்பெற்றுள்ளமை முன்பே சுட்டப்பட்டது. இதற்கு நூல்கள் பன்னிரண்டாகும். மூலப் பதிப்பா, உரையுடன் கூடியதா என்னும் விவரம் முதலில் அமைகிறது. பதிப்பித்தவர் பெயர், உரையாசிரியர் பெயர், பதிப்பித்த ஆண்டு, அச்சகத்தின் பெயர், நூலின் விலை ஆகிய விவரங்கள் உள்ளன. இந்நூலுக்குத் திரு. வே. நாராயணய்யர் என்னும் பெரியார் மிகச் சிறந்த முகவுரையளித்துள்ளார். அவர் பெரும் ஆராய்ச்சியாளர் என்பது அவர் எழுத்தில் வெளிப்படுகிறது.
இப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள் அகர வரிசையில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் அடியில், அடியின் எண்ணைக் குறிப்பிட்டு, அவ் வடியையொத்த பிற நூல்களின் பகுதிகள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. பாடலின் அடியோ அடிகளோ பிற நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்தால் அவை பற்றிய விவரங்கள் காட்டப்பட்டுள்ளன.
இப்பகுதிகள் நாலடியார் பற்றிய பன்முக ஆய்வு செய்வார்க்குப் பெரும் பயன் நல்க வல்லது. பாட வேறுபாடுகள் இருப்பின் தவறாமல் காட்டியுள்ளனர். பாட்டு முதற்குறிப்பு அகர நிரல், அருஞ்சொல் முதலிய வற்றின் அகர நிரல் ஆகியவை 26 பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
இதே ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பொன்றும் வெளியாயிற்று. சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழாசிரியர் திரு. வா. மகாதேவ முதலியார் அவர்கள் எழுதிய அரும்பொருள் விளக்கத்துடன் இது வெளியிடப்பட்டது. முதல் 75 பக்கங்களில் மூலமும் அதனையடுத்து 124 பக்கங்களில் அரும்பொருள் விளக்கமும் அமைந்துள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகர நிரலும் அருஞ்சொற்கோவையும் அடுத்து அமைந்துள்ளன. அருஞ்சொற்களுக்கும் தொடர்களுக்கும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியர். இன்றியமையாத இலக்கணக் குறிப்புக்களும் பிற நூல்களிலிருந்து பொருத்தமான ஒப்புமைப் பகுதிகளும் பாடல்களில் உள்ள அணி வகைகள் பற்றிய செய்திகளும் பாட வேறுபாடுகளும் நிறைந்து இந்நூல் கற்பார் உள்ளத்தைக் கவர்கின்றது.
இதே காலத்தில் வெளியான நூல்களும் அகநானூற் றுரையாசிரியர் திரு. வே. இராசகோபாலையங்கார் அவர்களின் உரையோடு கூடிய பதிப்பு மற்றையோர்க்கு எடுத்துக்காட்டாகக் கருதத்தக்க விழுமியப் பதிப்பாகும். 1925இல் சென்னை மயிலாப்பூரிலிருந்த கம்பர் விலாசம் என்னும் அவர் இல்லத்தின் முத்திரையுடன் இது வெளியாயிற்று. காக்சுடன் அச்சகத்தில் இது நிறைவேறிற்று. முதற்கண் பிழைதிருத்தப் பட்டியல் அமைந்துள்ளது. ஆராய்ச்சித் திறன் வாய்ந்த ஐயங்காரின் முகவுரை மிகச் சிறப்பானது.
பதிப்பில் எடுத்துக்காட்டிய நூல்களின் பட்டியலும் நாலடியாரில் இடம்பெறும் ஊர்வன, பறப்பன, மரம் செடிகொடிகள், ஒலிக் கருவிகள், தொழிற்கருவிகள், சில விலங்குளின் இயற்கை, பண்டைத் தமிழர்தம் சில பழக்க வழக்கங்கள் ஆகியனவற்றை நூலின் தொடக்கத்திற்கு முன்பே அமைத்துள்ளார். முதல் 68 பக்கங்களில் மூலம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அறிவார்ந்த குறிப்புரை 221ஆம் பக்கம்வரை அமைந்துள்ளது. 223 முதல் 280 முடியக் குறிப்பகராதி இடம்பெறுகிறது. அடுத்துச் செய்யுள் முதற்குறிப்பு அகராதி அமைந்துள்ளது. 1927ஆம் ஆண்டில் இதன் அடுத்த பதிப்பு வெளியாயிற்று.
குறிப்புரையில் பிறநூல்களினின்றும் பொருத்தமான மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. உரை முழுவதிலும் இத்தகு பகுதிகளைக் காணக்கூடும். உரையாசிரியர்கள் நாலடியாரிலிருந்து மேற்கோளாகக் காட்டும் பகுதிகளைப் பரவலாகக் குறிப்பிடுகின்றார். ஆங்காங்கு எதுகை மோனை முதலான தொடைகளும் அணிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கணக் குறிப்புக்களையும் காட்டிச் செல்கின்றார். சிறப்பான பாட வேறுபாடுகளைச் சுட்டும் இவர் போக்கை 186ஆம் பாட்டுரையில் காணலாம். ஆசிரியரின் சங்க நூற்பயிற்சியைக் காட்டும் இடங்கள் பல. எ-டு. 180ஆம் பாட்டுரை.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை வெளிவந்த நாலடியார் உரைகளுள் மிக விரிவாக அமைந்தது செம்பூர் வித்துவான் ஆறுமுகம் சேர்வையின் பதிப்பே ஆகும். ஆசிரியர் விரிவுரையென்றே தம் உரையைக் குறித்தார். இது 1932இல் முதன்முறையாகப் பதிக்கப்பட்டது. ஆனந்தபோதினி இதழாசிரியர் நா. முனிசாமி முதலியார் இதனை வெளியிட்டுள்ளார். எண்ணூறு பக்கங்கட்கு மேல் கொண்ட இப்பதிப்பு ஆசிரியரின் ஆழ்ந்தகன்ற புலமைக்குச் சான்றாகவுள்ளது. பதவுரை, கருத்துரை, விசேடவுரை என்பன இதன் உறுப்புக்கள். மேற்கோட் செய்யுட்களும் மிக நுட்பமான இலக்கண விளக்கங்களும் கொண்ட இவ்வுரையை எழுதிய சேர்வை, சடகோப ராமாநுசருடைய உரையை முன்னோடியாகக் கொண்டுள்ளார்.
நாலடியாருக்கு இடைக்காலத்தில் எழுதப்பட்டனவாகத் தோன்றும் இரு உரைகள் பதுமனார் உரையும் தருமர் உரையுமாகும். பெயர் அறியப்படாத இன்னொரு சான்றோர் உரையொன்றும் கிடைத்துள்ளது. இம் மூன்றையும் உள்ளடக்கிய நாலடியார் உரை வளத்தை 1953ஆம் ஆண்டில் தஞ்சை சரசுவதி மகால் வெளியிட்டது. இவ்வுரை இரு தொகுதிகளாக அமைந்துள்ளது (1-200, 201-400). இப்பதிப்பை அரிதின் முயன்று முடித்தவர்கள் சரசுவதி மகால் நூலகத்துத் தமிழாசிரியரான எஸ். முத்து ரத்தின முதலியாரும் அம்பா சமுத்திரம் தமிழாசிரியர் எம்.ஆர். கந்தசாமிப்பிள்ளையும் ஆவர். ஏறத்தாழ 1050 பக்கங்கள் கொண்ட இப்பதிப்பு மிகவும் நம்பகமானது.
சென்னை அடையாறு கலாச்சேத்திரப் பிரதியொன்று, சென்னை அரசாங்கத்துக் கையெழுத்துப் பிரதி நூலகச் சாலைப் பொழிப்புரைப் பிரதியொன்று, அதே நூலகத்துக்குரிய பதவுரைப் பிரதியொன்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பிரதியொன்று, நண்பர் ஒருவர் தந்த பிரதியொன்று ஆகியவற்றையும் சரசுவதி மகாலில் காக்கப்பட்டிருக்கும் மூன்று சுவடிகளையும் ஆராய்ந்து இப்பதிப்பைச் செய்துள்ளனர் இவ்வறிஞர்கள். நூல் முழுவதிலும் பாட வேறுபாடுகளை முறையாகப் பதிவுசெய்துள்ளமை பாராட்டத்தக்கது. விரிவான முன்னுரையும் அதிகார அட்டவணையும் பதிப்புக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலும் நூலின் பிற்பகுதியிலுள்ள செய்யுள் முதற்குறிப்பகராதியும் விசேடக் குறிப்புகளும் ஆராய்ச்சியாளர்க்குப் பெரும் பயனளிப்பனவாகும். நூலில் பயன்படுத்தப்பட்ட உவமைகள் அனைத்தையும் பட்டியலிட்டுள்ளனர். நூலில் காணப்படும் பண்பாடு தொடர்பான அனைத்தும் தொகுக்கப்பட்டு உரிய தலைப்பின் கீழ்ப் பாடல் எண்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நூலை எடுத்தாண்டோ ரின் பட்டியல் ஒன்றும் உண்டு. மூலம், அதற்குக் கீழே தருமர் உரை, பதுமனார் உரை, விளக்க உரை ஆகியவை முறையே அச்சிடப்பட்டுள்ளன. பாட வேறுபாடுகள் பக்க இறுதியில் முறையாகப் பதிவுபெறுகின்றன.
உரைகளை அடுத்து மேற்கோட்பகுதியும் நாலடியார் கருத்தோடு பொருந்திவரும் பிற நூல்களின் பகுதிகளும் பதிவாகியுள்ளன. இதற்கு 1924இல் வெளிவந்த எஸ்.கே. அண்டு கம்பெனியாரின் நூல் நன்கு பயன்பட்டுள்ளது. கடினமான சொற்களுக்கு அடிக்குறிப்பில் விளக்கம் தந்துள்ளனர். குறிப்பிடத் தகுந்த பாட வேறுபாடுகட்கு, அடிக்குறிப்பில் விளக்கம் தரப்படும் நிலைக்குச் சான்றாக இரண்டாம் தொகுதி பக்கம் 275 காண்க (1990). சுருக்கமாகச் சொன்னால், இப்பதிப்பு ஓர் அரியதும் பெரியதுமான அறிவுச் சுரங்கம் எனலாம்.
ஔவைக் குறள் ஆசிரியர் டி. தீனதயாளு நாயுடு எழுதிய உரையொன்று 1943இல் வெளிவந்துள்ளது.
தமிழ் நூற்பதிப்பு வரலாற்றில் புகழ்பெற்று விளங்குவோருள் மர்ரே எஸ். ராஜம் அவர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அறிஞர் குழுவொன்றை அமைத்து, தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், கம்பராமாயணம், பாரதம் முதலான செவ்விலக்கியங்கட்கு நம்பகமான மூலபாடப் பதிப்புக்களை அச்சிட்டு உதவிய பெருமை அவருக்கு உண்டு. அவர் 1959இல் பதிப்பித்த பதினெண் கீழ்க்கணக்கு முதற் பகுதியில் நாலடியார் இடம் பெறுகிறது. பதம் பிரித்துப் பதிப்பிக்கப்பட்ட இதில் பாட வேறுபாடுகள் காட்டப்படவில்லை. சிறந்த முன்னுரையுடன் விளங்கும் இது அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது. நூலின் இறுதியில் அதிகார அடைவு கூறும் 'வளம்கொழு திருவொடு' எனத் தொடங்கும் அகவல் இடம் பெறுகிறது. அதிகாரங்களில் அமைந்த பாடல் அடைவினை இறுதியில் அமைத்துள்ளனர். "பின்வரும் அதிகாரங்களில் பாடல்களின் வரிசை முறை ஒரு சில பிரதிகளில் சிறிது மாறுபட்டுக் காண்கிறது" என்ற குறிப்புடன் 11, 24, 25, 29, 31, 36 ஆகிய அதிகாரங்களில் அத்தகு மாற்றங்கள் உள்ளனவாகக் காட்டியுள்ளனர்.
கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வேறு பல அறிஞர்கள் எளிய உரையுடன் பல பதிப்புக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களுள் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, மீ.பொன். இராமநாதன் செட்டியார், புலவர் இளங்குமரனார், சாமி சிதம்பரனார், சுந்தர சண்முகனார், சிலம்பொலி செல்லப்பன், புலியூர்க் கேசிகன், மதுரை முதலியார், ஸ்ரீசந்திரன், இறையரசன், முத்துக்குமாரசாமி முதலியோர் அடங்குவர். 1973இல் பேரறிஞரான வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மதுரைக் காஞ்சிக்கும் நாலடியாருக்கும் எழுதிய தெரிபொருள் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 1982இல் தமிழ்நாடு மாநிலத் தமிழ்ச் சங்கம் ஒரு தெளிவுரைப் பதிப்பை வெளியிட்டது. 1934இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினை நிறுவி, அதன் செயலராக விளங்கியவர் இ.மு. சுப்பிர மணியப்பிள்ளை. இப்பெரியாரும் வித்துவான் வே. மாணிக்கவாசகம் பிள்ளையும் பேராசிரியர் க. சுப்பிர மணியமும் இணைந்து இத்தெளிவுரையை அரிதின் முயன்று உருவாக்கியுள்ளனர். இதில் சொற்பிரிப்பு இல்லாத மூலமும் அதற்குரிய சொற்பிரிப்பு வடிவமும் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன. அதனை அடுத்து, செய்யுட் சொற்கள் சிறிதும் மாற்றப்படாது உரை நடையாக்கப்பட்டுள்ளன. அதனையடுத்துப் பொழிப்புரையும் விளக்கவுரையும் அமைந்துள்ளன. இவ்வமைப்பு வேறு எந்த நாலடியார்ப் பதிப்பிலும் காண முடியாததாகும். 330 பக்கங்களில் இந்நூல் அமையும். இந்நூலைச் செம்மையாக வெளியிட்டவர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள். 1990இல் ஸ்ரீராம தேசிகள் அவர்கள் கங்கைப் புத்தக நிலையத்தின் வழியே நாலடியார் மூலம், அதற்குரிய பொழிப்புரை, ஆங்கில மொழிபெயர்ப்பு அடங்கிய ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், நாலடியார் கல்வி நிலையங்களில் தவறாது பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. 1861இல் பொதுக் கல்வித் துறையின் அச்சகத்தில் நாலடியார் முழுமைக்கும் மூலப் பதிப்பு அச்சிடப்பட்டது. 1907, 1908 ஆண்டுகளில் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதிய உரை வெளிவந்தது. அது 1909ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்பிற்குப் பாட மாகவிருந்தது. 1899இல் சி.எம். சுவாமிநாதையர் எழுதிய பல்கலைக்கழகப் பாடநூலில் நாலடியார் விளக்கக் குறிப்புடன் இடம்பெற்றது. 1900ஆம் ஆண்டில் அதிகாரங்கள் இடம்பெற்றன. விளக்கத்தோடு ஆங்கில மொழிபெயர்ப்பும் இதில் இடம்பெற்றது. 1912ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்புப் பாடநூலில் 252 முதல் 300 வரையிலான பாடல்கள் சேர்க்கப்பட்டன. இதனைச் செய்தவர் புதுப்பட்டு, காடாம்பி கிருஷ்ணமாச்சாரியார், நாலடியார் யாதேனும் ஒரு வடிவில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணாக்கர்க்கும் பள்ளி மாணாக்கர்க்கும் பாடப் பகுதியாக அமைந்த நிலையைப் பற்றி வணக்கத்திற்குரிய ஜி.யு. போப்பையர் பெருமையோடு பின் வருமாறு கூறியுள்ளார்.
"Not only is it one of the textbooks prescribed for this university (OXFORD), but it is moreover a chief subject of examination in the Madras University; and is taught, in some shape, in every vernacular school in the Tamil Country."
பாட வேறுபாடுகள்
தமிழ், செம்மொழியென்னும் தகுதியினைச் சட்டத்தின் மூலம் பெற்றிருக்கும் இன்று, தமிழ் வளர்ச்சிக்கான பல ஆக்கப்பணிகளைத் தக்காரைக் கொண்டு நிறைவேற்ற அரசு முயன்றுவரும் இக்காலத்தில், பழைய பதிப்புக்கள் அருகிப்போன நிலை வருத்தத்திற்குரியதாகும். இவற்றைத் தேடித் தொகுப்பது மிக இன்றியமையாத பணியாகும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள புகழ்வாய்ந்த நூலகங்களில் இவற்றின் படிகள் இருக்கக்கூடும். இவற்றை ஆய்வாளர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து தரல் வேண்டும். ஜான் மெட்காப் தொகுத்தது போன்ற அச்சிட்ட தமிழ் நூல்களின் பட்டியல்களை அரசு உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. புத்தகப் பதிவுத் துறையில் பதிவுசெய்யாது எந்த நூலும் விற்பனை செய்யப்படுதலைச் சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். 10 ஆண்டுகட்கு ஒரு முறையாவது வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவதுபோல, அச்சான நூல்களின் பட்டியல்களை வெளியிட ஆவன செய்யவேண்டும். மா.சு. சம்பந்தன் எழுதிய நூலைப் போல, தமிழ் எழுத்தாளர்களின் வரலாற்றுக் குறிப்புடன் அவர்களின் சொந்தப் படைப்புக்கள், அவர்களால் பதிக்கப்பட்ட நூல்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய நூல்கள் உருவாக, தமிழ் அறிஞர்களும் பல்கலைக்கழகங்களும் அரசும் ஆவன செய்ய வேண்டும். கருவிநூல்கள் உருவாக்குவோர்க்கு அரசு பொருளுதவி செய்து ஊக்குவிக்க வேண்டும்.
இக்கட்டுரையைப் பயிலும் அறிஞர்கள், தம்பால் உள்ள பழைய நாலடியார் பதிப்புப் பற்றிய விவரத்தைக் காலச்சுவடு அலுவலகத்துக்கோ இக்கட்டுரையாளனுக்கோ தெரிவித்தால் தமிழுக்கு ஆக்கமாக அமையும்.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.