LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

நான் விளையாடிய கோல்ஃப் – சத்குரு

விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் உடையவர் சத்குரு. தன் பள்ளிக் காலம் தொட்டே வெவ்வேறு விளையாட்டுகளை விளையாடி ஆட்டத்தை தன்வசம் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய விளையாட்டு வீரராக அவர் இருந்திருக்கிறார். சமீபகாலம் வரை கிரிக்கெட், வாலிபால் என தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆசிரமவாசிகளுடன் விளையாட நேரம் செலவிட்ட சத்குருவிற்கு, தன்னுடைய முதல் கோல்ஃப் விளையாட்டு அனுபவம் எப்படியிருந்தது?


சத்குரு:


அமெரிக்கா போயிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட மாநாடு ரத்தாகிவிட்டது. கோல்ஃப் விளையாட அழைத்தார்கள். எப்படியும் சிறிது தொலைவு நடக்க வேண்டும் என்று நினைத்திருந்ததால், அதை கோல்ஃப் மைதானத்தில் நடக்கலாம் என்று முடிவு செய்து சென்றேன். விளையாட்டு பற்றிய சில குறிப்புகளை அவர்கள் சொன்னார்கள். “பந்து எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள். அடித்து அனுப்புகிறேன்” என்றேன்.


வாழ்க்கையே அப்படித்தான். எங்கே போக வேண்டும் என்று தெரியணும். அங்கே எப்படிப் போக வேண்டும் என்பது தெரியணும். அவ்வளவுதான். மற்றதைத் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?

முதல் நாளே சிறப்பாக ஆடினேன் என்று அவர்கள் சொன்னார்கள்.


மைதானத்தில் உங்களுடன் பலர் இருந்தாலும், கோல்ஃப் என்பது உங்களுடன் நீங்கள் விளையாடும் மிக எளிமையான விளையாட்டு. அதனாலேயே அதைப் பலர் ஆடிப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், அது மிக நுட்பமான விளையாட்டு என்பதால், வெகு சீக்கிரத்தில் எரிச்சலடையவும் வாய்ப்பிருக்கிறது.


கோல்ஃப் விளையாட, கால்பந்தாட்டம் போலவோ, கிரிக்கெட் போலவோ உடல்ரீதியாக நீங்கள் மிகவும் துடிப்பானவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடல்திறனைவிட மனத்திறன்தான் கோல்ஃப் இற்கு அதிகம் தேவைப்படுகிறது.


என்ன, கோல்ஃப் விளையாட வேண்டும் என்றால், நடப்பதற்கு சளைக்கக்கூடாது.


நகரத்துக்கு வந்திருந்த தாத்தா, காலையில் ஒரு வாக் போய்விட்டுத் திரும்பினார்.


“என்ன ஊரடா உங்கள் ஊர்? பணக்காரர்கள் எல்லாம் அல்பமாக நடந்து கொள்கிறார்களே?”


“ஏன் தாத்தா?”


“வழியில் புல் நிறைந்த ஒரு மைதாயம் வழியே வந்தேன். ஆங்காங்கே வெள்ளை நிறப் பந்துகள் உருண்டு கிடந்தன. கேட்பாரற்றுக் கிடக்கிறதே, பேரனுக்குக் கொடுக்கலாம் என்று அவற்றை எடுத்துப் பையில் போட்டேன். அதைப் பார்த்துவிட்டுச் சிலர் என்னைத் துரத்தினார்கள். இத்தனைக்கும் அத்தனை பேரும் வசதியானவர்கள். அவர்கள் கையில் சிக்காமல் வந்துவிட்டேன்” என்று தாத்தா மூச்சிரைத்தார்.


கோல்ஃப் பற்றி அறியாதவர்கள் கோல்ஃப் மைதானத்தில் நடந்தால், இப்படித்தான் இருக்கும். அங்கு யாரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட அவர்களால் உணர முடியாது. அந்த அளவிற்கு மற்ற விளையாட்டுக்களில் காணப்படும் ஆர்ப்பாட்டம் இல்லாத விளையாட்டு அது.


யாரும் பந்தை உங்களை நோக்கி வீச மாட்டார்கள். அதேபோல், நீங்கள் அடிக்கும் பந்தைத் தடுக்கவோ, குறுக்கிட்டுத் திசை மாற்றவோ எதிரணியினர் யாரும் கிடையாது. அது உங்கள் திறமையை வெளிப்படுத்த நீங்களாக விளையாடும் ஒரு விளையாட்டு.


நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், உங்கள் வெற்றியைப் பெரும்பாலும் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம் என்ன? உங்கள் உடலையும், மனதையும் எந்த அளவிற்கு உங்களால் ஆளுமையில் வைத்திருக்க முடிகிறது என்பதுதான்! விளையாட்டும் அப்படித்தான்!


ஒரு தலைவனுக்கு உரிய அம்சங்கள் என்னென்ன? செய்வதில் முழுமையாக ஈடுபட வேண்டும் குறையின்றித் தன் பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், தோல்வியால் துவண்டு போகாமல், மறு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்.

வாழ்க்கையின் மிக எளிதான அம்சம் அதுதான். உங்கள் அகம் முழுமையாக அமைதி அடைந்துவிட்டால், வெற்றியோ, தோல்வியோ… வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் எளிதாகத் தோன்றும். வாழ்க்கையே போராட்டமின்றி எளிமையாக நடக்கும். மனதில் அமைதி இல்லையென்றால், ஒவ்வொன்றும் கடினமாகத் தோன்றும். சிறு சிறு விஷயம் கூட சிக்கலாகத் தோன்றும். இவை எல்லாமே விளையாட்டிலும் காணப்படும் அம்சங்கள்தாம்.


ஈஷா நடத்திய கிராமோத்சவ விளையாட்டுக்களில் இதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. கிராமோத்சவத்தில் கிட்டத்தட்ட 300 குழுக்கள் விளையாட்டில் ஈடுபட்டன. மூன்று லட்சம் மக்களுக்கு மேல் பங்கு கொண்டனர்.


கிராமத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவே தயங்கிய பலர், விளையாட்டுக்களில் ஈடுபட்டபோது தங்கள் அணியை வழிநடத்தத் தாங்களாகவே முன் வந்தார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் புதைந்து கிடந்த திறமை வெளிப்பட்டது.


இன்னொரு விஷயம், விளையாட்டில் மற்றவரை உங்களுடன் சேர்த்துக் கொண்டு உள்ளடக்கிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. உங்கள் அணியினர் என்று அடுத்தவரை விருப்பு வெறுப்புகளைக் கடந்து சேர்த்துக் கொள்கிறீர்கள். அனைவரும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒரே நோக்கமாக, ஒரே இலக்கை மனதில் இருத்திச் செயல்படுகிறீர்கள். மற்றவரை உங்களுடன் சேர்த்துக் கொள்ளும் தன்மைதான் ஒரு நல்ல சமூகம் அமைவதற்கான அடிப்படை.


ஆயிரம் மணி நேரங்கள் ஆன்மீக போதனைகள் செய்வதைவிட, பல கடவுள்களின் பெயர்களைச் சொல்லி மதப் பிரசாரம் செய்வதைவிட, ஒரு மணி நேரம் விளையாட்டில் ஈடுபடுத்தினால், ஒரு சமூகம் இன்னும் தங்களை அழுத்தமாகப் பிணைத்துக் கொள்வதைப் பார்க்க முடியும்.


உடலையும், மனதையும் கூர்மையாக வைத்துக் கொள்வதற்கும், செய்வதில் முழுமையான ஈடுபாடு கொள்வதற்கும் ஆதாரமாக இருப்பதால்தான், பொதுவாகவே விளையாட்டு என்னை மிகவும் வசீகரிக்கிறது!

by Swathi   on 24 Mar 2014  0 Comments
Tags: Golf   Sadhguru Golf   Playing Golf   Sadhguru Playing Golf   கோல்ஃப்   கோல்ஃப் விளையாட்டு   சத்குரு  
 தொடர்புடையவை-Related Articles
நான் விளையாடிய கோல்ஃப் – சத்குரு நான் விளையாடிய கோல்ஃப் – சத்குரு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.