LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்தமருத்துவம் - பகுதி 1

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்                   - குறள் 429

 

நோய் வரும் காரணங்களைத் தெளிவாக அறிந்து அவற்றினை முழுமையாக நீக்கி உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவினைப் பெற்றவர்களுக்கு உள்ளம் அதிரும்படியான நோய் வருவதில்லை என வள்ளுவர் கூறுகின்றார்.

 

இந்தக் குறள் காட்டும் பொருளை மையக் கருத்தாகக் கொண்டதே நலம் காக்கும் சித்த மருத்துவம்.

 

நோயில்லா நலமான வாழ்வினை அடைய விரும்பாதவர் எவரும் இல்லை. நம் உடல் நலத்தோடு இயங்குகின்றது. இதே உடல்நலம் எப்போதும் நீடிக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணம் உயர்ந்த்துதான். அதற்கான அடிப்படை செயல்களை நம்மில் எத்தனைபேர் செய்து வருகின்றோம்? முறையான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிக்காதவர்கள் (சில மருத்துவர்கள் உட்பட) ஒவ்வொரு நாளும் நலத்தினை இழந்து வருகின்றோம். நோய் நிலைகள் மட்டுமே உடல் நலத்தினைக் கெடுக்கும் என்பதில்லை. இக்காலத்தில் உடலிற்கு நல்லது என்று நாம் எண்ணிக் கொண்டுள்ள சில உணவுகளும், செயல்களும் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளன என்பது பலருக்குத் தெரியாத உண்மை.

 

இது தவிர ஒவ்வொரு விதமான நோய்களும் வெவ்வேறு விதமான உடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. ஒரு நோய் உடலை விட்டு நீங்கிவிட்டதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும்போது அந்த நோயினுடைய பின் விளைவுகள் வெளியில் தெரியாத சில நலக்குறைவுகளை உடலில் ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்காக உடல் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டிருக்கும். அந்த முயற்சிகளுக்கு இடையூறு செய்யாமல் உதவி செய்தால் நலக்குறைவு நிலை விரைவில் சீராகிவிடும். அது போன்ற நிலைகளில் என்ன செய்ய வேண்டும் எதனைச் செய்யக்கூடாது என்பதனை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

’நோயில்லாப் பெருவாழ்வு’ என்பது மிக உயர்ந்த நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் நமக்குக் கிடைக்கும். நோயில்லா வாழ்வியல் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்தில் குறைந்து கொண்டே வருகின்றது. நோய்த்தடுப்பு முறைகளைப் பற்றி மக்களிடம் கேட்டால் நோய்த் தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொள்வதைத்தான் கூறுகிறார்கள். உலகின் பல இடங்களில் நோய்த் தடுப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்ற தோற்றம் இருக்கிறதே தவிர உடல்நலம் தொடர்பான முறையான அனுபவ அறிவு மக்களிடம் இல்லை.

 

பல நாடுகளில் உடல் நலத்திற்காகச் செலவிடப்படும் பணத்தில் மிகமிகக் குறைந்த அளவே நோய்த் தடுப்புத் திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன. அவைகளும் கூட நோயினை முன்னரே கண்டுபிடிக்கத்தான் செலவிடப்படுகின்றன. சர்க்கரை நோய் (நீரிழிவு), மார்பகப்புற்று, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதை முன்னரே கண்டுபிடிப்பது மட்டுமே நோய் தடுப்பு முறைகளாகாது. வருமுன் காத்தல், வரும்போது காத்தல், வந்தபின் காத்தல் என்கிற மூன்று வகையான காப்பு முறைகள் உண்டு. இவற்றில் வருமுன் காத்தல் என்பதே மிகச் சிறந்ததும் செயல்படுத்த வேண்டியதுமாகும். வள்ளுவர் கூறியபடி நோய்க்கான காரணிகள் எவை என்பதை அறிந்து நோய்கள் நம் பக்கமே நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டு அவற்றை நம் வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொள்வதே நோயில்லா நல வாழ்வு.

 

மருத்துவப் படிப்பு முறை நோய்களையும், மருந்துகளையும் மையமாகக் கொண்டது. அது நோயினை முழுமையாக விளக்குகின்றது. நோயினைத் தீர்ப்பதற்கான முறையான பயிற்சி அளிக்கப்படுகின்றது. மருந்தறிவியல் பயிற்சியில் மருந்துகளின் அடிப்படைக் கூறுகள், உடலில் உட்கிரகிக்கப்படும் முறைகள், அவற்றின் உயிர்வேதியியல் தடம், நோய் நீக்கும் செயல்திறன் போன்ற நுட்பமான அறிவியலும் அவற்றின் பக்க விளைவுகளும் கற்றுத் தரப்படுகின்றன. எனவே மிகக் கடினமான பயிற்சி மற்றும் ஆய்வறிவிற்குப்பின் பக்கவிளைவற்ற பாதுகாப்பான மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுப்பதில் மருத்துவர்கள் தேர்ந்தவர்களாக உள்ளனர். இது போன்று மருத்துவ நிறுவனங்களும், மருத்துவமனைகளும் சாதாரணமான நோய்கள் முதல் நாட்பட்ட தீவிரமான எல்லா நோய்களையும் கட்டுப்படுத்த மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்கின்றன. இந்த போக்கு மருந்து வணிகம் வளர்வதற்கே வழிவகுக்கும். நோயாளிகளுக்கு முழு நன்மையினை ஏற்படுத்தாது. இக்காலத்தில் மருத்துவர் பரிந்துரையின் மூலம் விற்பனையாகும் மருந்துகளின் அளவு மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அதாவது மக்கள்தொகை உயரும் வேகத்தை விட இதன் வேகம் பல மடங்குகள் அதிகம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளின் ஆதிக்கம் பெருகிவிட்டதைக் காட்டுகின்றது.

 

பல நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு நிலையையும் நோய்களுக்கு எதிரான ஆற்றலையும் உடல்தான் தோற்றுவிக்கின்றன. மருந்துகள் அல்ல. இது பல நாட்பட்ட தீவிர நோய்களுக்கும் பொருந்தும். தரமான உணவுகளும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளும் நோய்களுக்கு எதிரான உடல்பாதுகாப்பு அமைப்பிற்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன. இந்த உணவு பழக்கங்களையும் வாழ்வியலையும் பல அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்வதில்லை என்பது சற்று வருத்தமான உண்மை.

 

என்னிடம் மருத்துவத்திற்காக வரும் நீரிழிவு நோய்களுக்கு அதுவரை அவர்கள் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லையெனில் நான் எந்த மருந்தையும் பரிந்துரைப்பதில்லை (குருதிச் சர்க்கரை அளவுகளைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை). சித்தர்கள் கூறிய உணவு, செயல்மாற்றங்கள், யோகப்பயிற்சிகள் போன்றவற்றைக் கற்றுத் தருகிறேன். இவற்றின் மூலம் எவ்வளவ தூரம் அந்த நோய்நிலையினை அவர்களால் வெற்றி கொள்ள முடிகிறது என்பதை அளவிடுகிறேன். முழுவதும் வெற்றி கொள்ள முடியாவிட்டால் மட்டுமே மருந்துகள் கொடுக்கிறேன். புதிதாக நீரிழிவு நோய் ஏற்பட்ட நிலையில் மருந்துகள் இல்லாமல் அந்த நோயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது எளிது. பல சித்தர் நூல்கள் நோய் வராமல் தடுக்கும் முறைகளை விளக்குகின்றன. தனிமனித ஒழுக்கங்களான நாள் ஒழுக்கம் (நாள்தோறும் காலை எழுந்த்திலிருந்து இரவு உறங்கும் வரை செய்யும் கடமைகள்) கால ஒழுக்கம் (பருவ மாற்றங்களுக்கு எற்ற பழக்கவழக்கங்களை அமைத்துக் கொள்ளுதல்) போன்றவற்றை ஒருவர் கடைபிடிப்பதின் மூலம் தனிமனித நலம் பாதுகாக்கப்படுகின்றது. திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, பெயரிடுதல் போன்ற குடும்ப விழாக்களில் கடைபிடிக்கப்படும் ஒழுக்க முறைகளால் குடும்ப நலம் பாதுகாக்கப்படும். ஊரைத் தூய்மையாக்கும் பொருட்டு ஏற்பட்ட போக்கி (போகி) விழா, நோய் பரவும் காலங்களில் ஊரைச் சுற்றிக் கட்டப்படும் காப்பு வளைவு விழா போன்ற நிகழ்வுகளால் ஊர் விழாக்களில் நடப்படும் மரங்களாலும் முளைத் திருவிழாக்களாலும் ஊர்களில் பசுமை பாதுகாக்கப்பட்டு அவை சோலைகளாகக் காட்சியளித்தன. நம்மால் முடிந்தது என்பது நம் உடல் நலம், நம் குடும்ப நலத்தினைப் பேணத் தொடங்கினால் நம்மைப் பின்பற்றுபவர்கள் பெருகி அதுவே சமுதாய நலத்திற்கு வழி வகுக்கும்.

 

உலக நல நிறுவனம் (World Health Organization) நலம் என்பது நோயில்லா நலிவற்ற நிலை மட்டுமன்றி முழுமையான உடல் உள்ள, சமூக, ஆன்ம நன்னிலையாகம் என வரைவிலக்கணம் கொடுத்துள்ளது (WHO defines health as a state of complete physical, mental, social and spiritual well being and not mere absence of disease) - WHO 2006, Constitution of the WHO - Basic Documents, 45th Edition, Supplement, Oct.2006.

 

இந்தத் தொடர் சித்தர்கள் கூறியுள்ள வாழ்வியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது. இதனைப் படிப்பவர்கள் அவற்றைத் தம் வாழ்வில் கடைபிடித்து நலமான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதப்படுகின்றது. சித்தர் வாழ்வியல் முறையினைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் உடம்பினைப் பற்றி சித்தர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே உடல் கட்டமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய சித்தர்களின் கருத்துக்களை நாம் அடுத்த வாரம் பார்க்க உள்ளோம். சித்தர்கள் வகுத்த பாதையில் பயணிக்கத் தொடங்குவோம்…..

 

தொடரும்.....

by Swathi   on 15 Sep 2014  3 Comments
Tags: Siddha Maruthuvam   Nalam Kaakkum Siddha Maruthuvam   Selva Shunmugam   நலம் காக்கும் சித்தமருத்துவம்   செல்வ சண்முகம்   சித்தமருத்துவம்     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42
கருத்துகள்
17-Sep-2014 05:27:40 கார்த்திக் said : Report Abuse
நல்ல தொடர்..... வாழ்த்துக்கள் ஐயா.....
 
17-Sep-2014 01:17:26 ரவி முத்துசாமி said : Report Abuse
நல்ல செய்தி. நல்ல முயற்சி . மருத்துவர் செல்வ சண்முகத்தின் சித்த மருத்துவ முறை மிகவும் தேவையான ஒன்று. தாங்கள் தொடர்ந்து இந்த பயனுள்ள கட்டுரை எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
16-Sep-2014 10:24:53 ஜோதிஜி திருப்பூர் said : Report Abuse
இன்றைய சூழ்நிலையில் அவசியமான அவசரமான தேவைப்படுகின்ற தொடர் இது. ஆவலுடன் தொடர்கின்றேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.