LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

நற்றிணை-13

301. குறிஞ்சி
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5
பாவை அன்ன வனப்பினள் இவள்' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை- 
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.  
அகிலின் நெய்பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள்தான் பருவம் உடையள் ஆயினமையால்; நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற்போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒருதன்மையொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒருதன்மையொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடையவள்; இவளென்று விருப்பம் வரும் உள்ளத்துடனே பலபடியாகப் புகழ்ந்து கூறி; எம் தாய் சிறிதும் மறக்கப்படாத மடந்தையாயிராநின்றாள் ஆதலின் இவளது ஆற்றாமை தீரக் கூட்டுவிப்பதை அறியின் அவ்வன்னை எத்தன்மையள் ஆவளோ? இதற்கு யான் அஞ்சுகின்றேன்; 
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது. - பாண்டியன் மாறன் வழுதி
302. பாலை
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ 5
தாஅம் தேரலர்கொல்லோ- சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? 10
வேற்று நாட்டிலே களிறு காலால் உதைத்துப் போகட்டு ஒழிந்த மேல் கீழாகப் படிந்த மிக்க புழுதி; வெளிறு இன்றி வயிரமேறிய வேலமரங்கள் நெருங்கிய செல்லுவோருக்குத் துன்பஞ் செய்தலையுடைய முதிர்ந்த நெறியை மறையாநிற்கும்; மக்கள் நடத்தற்கரிய சுரநெறியின்கண்ணே சென்ற தலைவர்; பொன்னாலாகிய கலன்களை மிக அணிந்த மகளிர்போல யாவரும் விரும்பும் வண்ணம் மலர் விரிந்த நீண்ட சுரிந்த பூங்கொத்தில் உள்ள விளங்குகின்ற பூவையுடைய கொன்றைக்காடு அழகு மிக்கிருந்த அதனை அறிந்திலரேனும்; பெரிதும் வருகின்ற மழையை நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்களிலுள்ள; நல்ல பூங்கொத்தை உடைத்தாகிய எறுழ் மலர் மழைக்காலம் நீங்குதலாலே தன்னிறமாறி வெண்மை நிறம் பொருந்தியிருத்தலை அவர் தாம் அறியாரோ? அறிந்திருப்பாரேல் முன்பு தாம் கூறிய பருவம் கழிகின்றதே என்று வந்திருப்பரே; 
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
303. நெய்தல்
ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், 5
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது
உண்டுகொல்?- வாழி, தோழி!- தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, 10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.  
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தௌ¤ந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய், 
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம். - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
304. குறிஞ்சி
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின், 5
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. 10
கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து; தாம் கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்து தின்று; காற்றினால் ஒலியெழுப்பும் கொம்பு வாச்சியம் போல ஒன்றனையொன்று அழையா நிற்கும் நெருங்கிய பக்க மலைகளையுடைய நல்ல மலைநாடன் வந்து; என்னைப் புணர்ந்த காலமெல்லாம் எனக்கு நிரம்பிய நல்ல அழகு உண்டாகாநிற்கும்; அவன் என்னைப் பிரிந்தாலோ; நீலமணியிடைப்பட்ட பொன்போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட; என் அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும்; ஆதலினால் தண்ணிய தாய் மணங்கமழும் நறிய மாலையணிந்த வலிமையுடைய நம் காதலன் மார்பானது; இசையறிவிலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போலப் பெரிதும் இன்பமும் துன்பமும் உடையதா யிராநின்றது; 
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது. - மாறோக்கத்து நப்பசலையார்
305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
நோய் ஆகின்றே- மகளை!- நின் தோழி, 5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. 10
மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தௌ¤ந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; வெப்பமிக்க பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது; 
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம். - கயமனார்
306. குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- 
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் 5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?  
'கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக!' என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே! 
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம். - உரோடோகத்துக் கந்தரத்தனார்
307. நெய்தல்
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே- தோழி!- வார் மணற் சேர்ப்பன்: 5
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி- பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. 10
தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங்¢ கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக! 
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - அம்மூவனார்
308. பாலை
செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- 
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, 5
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் 10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.  
ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்? 
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
309. குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்
ஆழல்; வாழி!- தோழி!- 'வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், 5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று' என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.  
தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; 'என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது' என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்!; நெடுங்காலம் வாழ்வாயாக!; வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌ¤ந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்! 
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. - கபிலர்
310. மருதம்
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! 5
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே- வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல, 10
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?  
விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? 
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம். - பரணர்
311. நெய்தல்
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- 5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே- தோழி!- நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங் களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.  
தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்; 
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சனார்
312. பாலை
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- 
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
மாரி நின்ற, மையல் அற்சிரம்- 5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்- 
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே.  
பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று; 
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியார்
313. குறிஞ்சி
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு 5
யாங்கு ஆகுவம்கொல்?- தோழி!- காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும்- தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா, 10
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.  
தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைவினையைப் போல; மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்? 
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது. - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
314. பாலை
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் 5
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல்' என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- 
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் 10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!  
நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்¢ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்¢; ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; 'கங்குல் கழியக்கடவதாக' என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக; 
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - முப்பேர் நாகனார்
315. நெய்தல்
ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, 5
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், 10
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.  
நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்; 
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது. - அம்மூவனார்
316. முல்லை
மடவது அம்ம, மணி நிற எழிலி- 
'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என,
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் 5
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. 10
தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்!; இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு; 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - இடைக்காடனார்
317. குறிஞ்சி
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை 5
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல்தானே- எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? 10
நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ? 
தோழி, தலைமகனை வரைவு கடாயது. - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
318. பாலை
நினைத்தலும் நினைதிரோ- ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை 5
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?  
ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்; 
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
319. நெய்தல்
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், 5
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும், 10
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?  
கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் 'தௌ' என்றன்று ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்; 
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது. - வினைத்தொழில் சோகீரனார்
320. மருதம்
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- 
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், 5
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. 10
ஊரிலே செய்யப்படுந்¢ திருவிழாவுஞ் செய்து முடிந்தது; மத்தளமும் ஓசை யொழிந்தது; இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று; 
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது. - கபிலர்
321. முல்லை
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, 5
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. 10
திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தௌ¤ந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ?; பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்!; சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!; 
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
322. குறிஞ்சி
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி- தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், 5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன் 10
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.  
தோழீ! வாழ்வாயாக!; மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசி¬யைப் போக்க வேண்டி; மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பலவாய பூக்களைத் தூவித் துதித்து 'இவ் யாட்டினை ஏற்றுக்கொள்' ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்; 
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம். - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
323. நெய்தல்
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய- மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை 5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே; 10
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.  
நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறு குடியையுடைய பாக்கமானது; உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக! 
தோழி இரவுக்குறி நேர்ந்தது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
324. குறிஞ்சி
அந்தோ! தானே அளியள் தாயே;
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- 
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் 5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!  
பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; அகற்சியையுடைய இடத்தில்; விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே! 
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம். - கயமனார்
325. பாலை
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், 5
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே.  
பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி ; விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; கடந்து நீயிர் செல்லத்தகுமோ?; (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!; 
தோழி செலவு அழுங்குவித்தது. - மதுரைக் காருலவியங் கூத்தனார்

301. குறிஞ்சி
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சிநாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனைமலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5பாவை அன்ன வனப்பினள் இவள்' என,காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.  
அகிலின் நெய்பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள்தான் பருவம் உடையள் ஆயினமையால்; நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற்போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒருதன்மையொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒருதன்மையொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடையவள்; இவளென்று விருப்பம் வரும் உள்ளத்துடனே பலபடியாகப் புகழ்ந்து கூறி; எம் தாய் சிறிதும் மறக்கப்படாத மடந்தையாயிராநின்றாள் ஆதலின் இவளது ஆற்றாமை தீரக் கூட்டுவிப்பதை அறியின் அவ்வன்னை எத்தன்மையள் ஆவளோ? இதற்கு யான் அஞ்சுகின்றேன்; 
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது. - பாண்டியன் மாறன் வழுதி

302. பாலை
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்தநீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்காடு கவின் பூத்தஆயினும், நன்றும்வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ 5தாஅம் தேரலர்கொல்லோ- சேய் நாட்டு,களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறுவெளிறு இல் காழ வேலம் நீடியபழங்கண் முது நெறி மறைக்கும்,வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? 10
வேற்று நாட்டிலே களிறு காலால் உதைத்துப் போகட்டு ஒழிந்த மேல் கீழாகப் படிந்த மிக்க புழுதி; வெளிறு இன்றி வயிரமேறிய வேலமரங்கள் நெருங்கிய செல்லுவோருக்குத் துன்பஞ் செய்தலையுடைய முதிர்ந்த நெறியை மறையாநிற்கும்; மக்கள் நடத்தற்கரிய சுரநெறியின்கண்ணே சென்ற தலைவர்; பொன்னாலாகிய கலன்களை மிக அணிந்த மகளிர்போல யாவரும் விரும்பும் வண்ணம் மலர் விரிந்த நீண்ட சுரிந்த பூங்கொத்தில் உள்ள விளங்குகின்ற பூவையுடைய கொன்றைக்காடு அழகு மிக்கிருந்த அதனை அறிந்திலரேனும்; பெரிதும் வருகின்ற மழையை நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்களிலுள்ள; நல்ல பூங்கொத்தை உடைத்தாகிய எறுழ் மலர் மழைக்காலம் நீங்குதலாலே தன்னிறமாறி வெண்மை நிறம் பொருந்தியிருத்தலை அவர் தாம் அறியாரோ? அறிந்திருப்பாரேல் முன்பு தாம் கூறிய பருவம் கழிகின்றதே என்று வந்திருப்பரே; 
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

303. நெய்தல்
ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரைமன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், 5'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பதுஉண்டுகொல்?- வாழி, தோழி!- தெண் கடல்வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, 10கடு முரண் எறி சுறா வழங்கும்நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.  
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தௌ¤ந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய், 
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம். - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

304. குறிஞ்சி
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்புணரின், புணருமார் எழிலே; பிரியின், 5மணி மிடை பொன்னின் மாமை சாய, என்அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,இன்பமும் துன்பமும் உடைத்தே,தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. 10
கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து; தாம் கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்து தின்று; காற்றினால் ஒலியெழுப்பும் கொம்பு வாச்சியம் போல ஒன்றனையொன்று அழையா நிற்கும் நெருங்கிய பக்க மலைகளையுடைய நல்ல மலைநாடன் வந்து; என்னைப் புணர்ந்த காலமெல்லாம் எனக்கு நிரம்பிய நல்ல அழகு உண்டாகாநிற்கும்; அவன் என்னைப் பிரிந்தாலோ; நீலமணியிடைப்பட்ட பொன்போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட; என் அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும்; ஆதலினால் தண்ணிய தாய் மணங்கமழும் நறிய மாலையணிந்த வலிமையுடைய நம் காதலன் மார்பானது; இசையறிவிலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போலப் பெரிதும் இன்பமும் துன்பமும் உடையதா யிராநின்றது; 
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது. - மாறோக்கத்து நப்பசலையார்

305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே- மகளை!- நின் தோழி, 5எரி சினம் தணிந்த இலை இல் அம் சினைவரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி,உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,இலங்கு இலை வெள் வேல் விடலையைவிலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. 10
மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தௌ¤ந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; வெப்பமிக்க பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது; 
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம். - கயமனார்

306. குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபயச்சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- 'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என,நல்ல இனிய கூறி, மெல்லக்கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் 5சூற் பொறை இறுத்த கோல் தலை இருவிவிழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,பைதல் ஒரு நிலை காண வைகல்யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?  
'கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக!' என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே! 
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம். - உரோடோகத்துக் கந்தரத்தனார்

307. நெய்தல்
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்ததிதலை அல்குல் நலம் பாராட்டியவருமே- தோழி!- வார் மணற் சேர்ப்பன்: 5இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னைமா அரை மறைகம் வம்மதி- பானாள்,பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்மெல் இணர் நறும் பொழில் காணாஅல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. 10
தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங்¢ கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக! 
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - அம்மூவனார்

308. பாலை
செல விரைவுற்ற அரவம் போற்றி,மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,வேண்டாமையின் மென்மெல வந்து,வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, 5வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் 10பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.  
ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்? 
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

309. குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்ஆழல்; வாழி!- தோழி!- 'வாழைக்கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், 5பெரு மலை நாடன் கேண்மை நமக்கேவிழுமமாக அறியுநர் இன்று' என,கூறுவைமன்னோ, நீயே;தேறுவன்மன் யான், அவருடை நட்பே.  
தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; 'என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது' என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்!; நெடுங்காலம் வாழ்வாயாக!; வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌ¤ந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்! 
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. - கபிலர்

310. மருதம்
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்வாளை பிறழும் ஊரற்கு, நாளைமகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! 5தொலைந்த நாவின் உலைந்த குறு மொழிஉடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்சொல்லலைகொல்லோ நீயே- வல்லை,களிறு பெறு வல்சிப் பாணன் கையதைவள் உயிர்த் தண்ணுமை போல, 10உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?  
விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? 
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம். - பரணர்

311. நெய்தல்
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,அழியா மரபின் நம் மூதூர் நன்றே- 5கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;ஒன்றே- தோழி!- நம் கானலது பழியே:கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,இருங் களிப் பிரசம் ஊத, அவர் 10நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.  
தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்; 
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சனார்

312. பாலை
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- 'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,மாரி நின்ற, மையல் அற்சிரம்- 5யாம் தன் உழையம் ஆகவும், தானே,எதிர்த்த தித்தி முற்றா முலையள்,கோடைத் திங்களும் பனிப்போள்- வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே.  
பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று; 
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியார்

313. குறிஞ்சி
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு 5யாங்கு ஆகுவம்கொல்?- தோழி!- காந்தள்கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்மீள்குவம் போலத் தோன்றும்- தோடு புலர்ந்துஅருவியின் ஒலித்தல் ஆனா, 10கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.  
தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைவினையைப் போல; மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்? 
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது. - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

314. பாலை
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரிநறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் 5கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்கழிவதாக, கங்குல்' என்றுதாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- நொடி விடுவன்ன காய் விடு கள்ளிஅலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் 10புன் புறா வீழ் பெடைப் பயிரும்என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!  
நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்¢ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்¢; ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; 'கங்குல் கழியக்கடவதாக' என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக; 
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - முப்பேர் நாகனார்

315. நெய்தல்
ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, 5நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், 10ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.  
நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்; 
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது. - அம்மூவனார்

316. முல்லை
மடவது அம்ம, மணி நிற எழிலி- 'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என,கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் 5நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசைவாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,தளி தரு தண் கார் தலைஇ,விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. 10
தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்!; இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு; 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - இடைக்காடனார்

317. குறிஞ்சி
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்தபூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை 5அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்துஎன் ஆகுவகொல்தானே- எந்தைஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,ஆயமொடு குற்ற குவளைமா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? 10
நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ? 
தோழி, தலைமகனை வரைவு கடாயது. - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

318. பாலை
நினைத்தலும் நினைதிரோ- ஐய! அன்று நாம்பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்தபொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை 5பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,என்றூழ் விடர் அகம் சிலம்ப,புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?  
ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்; 
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

319. நெய்தல்
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்தாது உளர் கானல் தவ்வென்றன்றே;மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,கூகைச் சேவல் குராலோடு ஏறி,ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், 5அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,மீன் கண் துஞ்சும் பொழுதும், 10யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?  
கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் 'தௌ' என்றன்று ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்; 
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது. - வினைத்தொழில் சோகீரனார்

320. மருதம்
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், 5காரி புக்க நேரார் புலம்போல்,கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,காவல் செறிய மாட்டி, ஆய்தொடிஎழில் மா மேனி மகளிர்விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. 10
ஊரிலே செய்யப்படுந்¢ திருவிழாவுஞ் செய்து முடிந்தது; மத்தளமும் ஓசை யொழிந்தது; இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று; 
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது. - கபிலர்

321. முல்லை
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவைபாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,கான முல்லைக் கய வாய் அலரிபார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, 5புல்லென் வறு மனை நோக்கி, மெல்லவருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. 10
திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தௌ¤ந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ?; பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்!; சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!; 
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

322. குறிஞ்சி
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;வாய்கொல் வாழி- தோழி! வேய் உயர்ந்து,எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், 5ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்அணங்கு என உணரக் கூறி, வேலன் 10இன் இயம் கறங்கப் பாடி,பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.  
தோழீ! வாழ்வாயாக!; மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசி¬யைப் போக்க வேண்டி; மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பலவாய பூக்களைத் தூவித் துதித்து 'இவ் யாட்டினை ஏற்றுக்கொள்' ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்; 
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம். - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

323. நெய்தல்
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணைநடுவணதுவேதெய்ய- மடவரல்ஆயமும் யானும் அறியாது அவணம்ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை 5நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்தமலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்தெரி மணி கேட்டலும் அரிதே; 10வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.  
நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறு குடியையுடைய பாக்கமானது; உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக! 
தோழி இரவுக்குறி நேர்ந்தது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

324. குறிஞ்சி
அந்தோ! தானே அளியள் தாயே;நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- கோடு முற்று யானை காடுடன் நிறைதர,நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் 5செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,அம் சில் ஓதி இவள் உறும்பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!  
பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; அகற்சியையுடைய இடத்தில்; விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே! 
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம். - கயமனார்

325. பாலை
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைஇரை தேர் வேட்கையின் இரவில் போகி,நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்தஅர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யெனமுர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், 5ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள்பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,வீங்கு நீர் வாரக் கண்டும்,தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே.  
பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி ; விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; கடந்து நீயிர் செல்லத்தகுமோ?; (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!; 
தோழி செலவு அழுங்குவித்தது. - மதுரைக் காருலவியங் கூத்தனார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.