LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

நற்றிணை-14

326. குறிஞ்சி
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல்- இவட்கே 5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. 10
கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே!; பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக; 
தோழி, தலைமகனை வரைவுகடாயது. - மதுரை மருதன் இளநாகனார்
327. நெய்தல்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே- காதல்அம் தோழி!- 
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, 5
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே- போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.  
என்பால் அன்பு மிக்க தோழீ!; நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ? 
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது. - அம்மூவனார்
328. குறிஞ்சி
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து,
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,
அது இனி வாழி- தோழி!- ஒரு நாள், 5
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,
பெரும் பெயல் தலைக, புனனே!- இனியே,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,
விலங்கு மலை அடுக்கத்தானும், 10
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.  
தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும்நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்! 
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது. - தொல் கபிலர்
329. பாலை
வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி 5
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி- தோழி!- உதுக் காண்:
இரு விசும்பு அதிர மின்னி, 10
கருவி மா மழை கடல் முகந்தனவே!  
தோழீ! வாழ்வாயாக!; அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்; 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
330. மருதம்
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் 5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்பொடு 10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.  
வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே 'துடும்' என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; புது வருவாயினையுடைய ஊரனே!; நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்; 
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்
331. நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, 5
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் 10
பிறர் பிறர் அறிதல் யாவது- 
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.  
ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கி¢க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக! 
தோழி இரவுக்குறி நேர்ந்தது. - உலோச்சனார்
332. குறிஞ்சி
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- 
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, 5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? 10
இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ? 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம். - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
333. பாலை
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, 5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;
நீங்குகமாதோ நின் அவலம்- ஓங்குமிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி 10
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.  
தோழீ!; உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; இனிமையான குரலையுடைய பல்லி; ஒள்ளிய சுவரிலே பொருந்தி நின்றுநன்மையான சொற்களைக் குறிப்பாற் கூறாநின்றது; ஆதலின் மேகம் தான் செய்ய வேண்டிய பெய்தற் றொழிலை இன்மையாக்கிக் கரிய ஆகாயத்திலே சென்றொழிந்ததனால்; வெப்பமிக்கு மூங்கில் எல்லாம் வாடி அழகழிந்த மலை வழியின் சிறிய நெறியிலே; பருக்கைக் கற்கள் நிரம்பிய பள்ளத்தில் ஊறுகின்ற மிகக் குறைவுபட்ட சிறிய நீரிடத்தில்; பொலிவு பெற்ற நெற்றியையுடைய யானையொடு புலி போர் செய்து அந் நீரையுண்ணுகின்ற சுரநெறியிலே சென்று; ஈட்டப்படும் பொருள் நமக்கு அரியவாம் என்று நினையாமல் நல்லறிவிழந்து, உள்ளே மகிழ்ச்சியுற்ற வன்மைமிக்க நெஞ்சுடனே தாம் வண்மைமிக்குடையராயிருத்தலை விரும்பி; அரிய பொருள் காரணமாக அகன்ற நங் காதலர்; நின்னை முயங்குவதை எதிர் நோக்கித் திருத்தமாகிய கலன்களை அணிந்த நின் பருத்த தோளை இன்றுவந்து கூடுவார் போலத் தோன்றாநின்றது காண்!; இனி நின் அவலம் நீங்குவாயாக! 
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- 5
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ- தோழி!- நம் இன் உயிர் நிலையே?  
தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்; 
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
335. நெய்தல்
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, 5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று; 10
காமம் பெரிதே; களைஞரோ இலரே!  
திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை; ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்? 
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, 5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்- அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
இரை தேர் எண்கினம் அகழும் 10
வரை சேர் சிறு நெறி வாராதீமே!  
சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடிய மலை நாடனே!; மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின்¢ கூட்டம் பறித்து எடாநிற்கும்; மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!;
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது. - கபிலர்
337. பாலை
உலகம் படைத்த காலை- தலைவ!- 
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- 
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய 5
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. 10
தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ?; அங்ஙனம் மறந்த தகுதிப்பாட்டினையுடையோர் சிறந்தோரேயாவார்; 
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ
338. நெய்தல்
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப 5
யாங்ஙனம் விடுமோ மற்றே!- மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, 10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?  
கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; அகன்ற கா¤ய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, 'நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும்' என்று கூறாநின்றனை; இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ? 
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
339. குறிஞ்சி
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள்போலும், அன்னை- சிறந்த 5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் 10
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?  
தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து ("நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?" என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இ¢வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது; நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தௌ¤ந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்¢ச் சிலவற்றைக் கூறி; நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்; 
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
340. மருதம்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- 
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, 5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! 10
மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணனது காவிரியின் வடபாலுள்ள 'சிறுகுடி' என்னும் ஊர்போன்ற; என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லவுஞ்செய்யேன்; அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்! 
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. - நக்கீரர்
341. குறிஞ்சி
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் 5
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே. 10
இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தௌ¤வை (சாராயத்தை)ப் பருகி; அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தௌ¤வைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; 
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
342. நெய்தல்
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என, 5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:
யானே- எல்வளை!- யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே. 10
அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி 'என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின் குறை நீயே சென்றுரை' யென்றதனாலே மயங்கி நின்று, குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறிவந்தும், இது காவலையுடைய மதில் என மதித்து வெளிய பேய்த்தேரைச் சென்று நோக்கியும்; நீ இருக்கின்ற சேரியைச் சார வருபவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும் என்று; யான் கண்ணினால் இனியகுறிப்புத் தோன்றத் தலைசாய்த்துக் காட்டியும் ஒளிபொருந்திய வளையையுடைய தலைவி அவற்றை அறிந்துகொண்டனளல்லள்; ஆதலால் யானே வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில் வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலருதிர்ந்து நுண்ணியதாகக் கோலஞ் செய்த அவ்விடத்து; எனது தலை அவ்விறைமகளின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்; அத் தலைவர் செயல் இப்பொழுது எப்படியாயிருக்கின்றதோ? என்று என்னை வினாவலும் உண்டாகும்; அப்பொழுது நிகழ்ந்தவற்றைக் கூறுவேன்; 
குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது. 
343. பாலை
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை 5
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி- தோழி!- நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? 10
தோழீ! வாழ்வாயாக!; முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே; 
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது. - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
344. குறிஞ்சி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின்- ஆயிழை!- 
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை 5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே- உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, 10
செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?  
ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ? 
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
345. நெய்தல்
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,
வெளிய விரியும் துறைவ! என்றும், 5
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே! 10
மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தௌ¤யாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; நீ இங்கு நயந்து தௌ¤விக்கும் தௌ¤வு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக! 
தௌவிடை விலங்கியது. - நம்பி குட்டுவனார்
346. பாலை
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, 5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா- என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல் 10
மட மா அரிவை தட மென் தோளே?  
நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ? 
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
347. குறிஞ்சி
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் 5
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய, 10
காண வீடுமோ- தோழி!- என் நலனே?  
தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ?; அவை இரங்கத்தக்கன; 
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது. - பெருங்குன்றூர் கிழார்
348. நெய்தல்
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் 5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? 10
நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே? 
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. - வெள்ளி வீதியார்
349. நெய்தல்
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் 5
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,
பின்னிலை முனியா நம்வயின்,
என் என நினையும்கொல், பரதவர் மகளே? 10
விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?; 
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. - மிளை கிழான் நல்வேட்டனார்
350. மருதம்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார 5
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆசு இல் கலம் தழீஇயற்று;
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! 10
வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் 'இருப்பையூர்' போன்ற; எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக! 
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. - பரணர்

326. குறிஞ்சி
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,துய்த் தலை மந்தி தும்மும் நாட!நினக்கும் உரைத்தல் நாணுவல்- இவட்கே 5நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்பசலை ஊரும் அன்னோ; பல் நாள்அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,வண்டு எனும் உணராவாகி,மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. 10
கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே!; பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக; 
தோழி, தலைமகனை வரைவுகடாயது. - மதுரை மருதன் இளநாகனார்

327. நெய்தல்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்சாதலும் இனிதே- காதல்அம் தோழி!- அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, 5உலகம் கூறுவது உண்டு என, நிலைஇயதாயம் ஆகலும் உரித்தே- போது அவிழ்புன்னை ஓங்கிய கானற்தண்ணம் துறைவன் சாயல் மார்பே.  
என்பால் அன்பு மிக்க தோழீ!; நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ? 
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது. - அம்மூவனார்

328. குறிஞ்சி
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,சிற்சில வித்திப் பற்பல விளைந்து,தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,அது இனி வாழி- தோழி!- ஒரு நாள், 5சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,பெரும் பெயல் தலைக, புனனே!- இனியே,எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாதுசாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,விலங்கு மலை அடுக்கத்தானும், 10கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.  
தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும்நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்! 
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது. - தொல் கபிலர்

329. பாலை
வரையா நயவினர் நிரையம் பேணார்,கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறுஇறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி 5செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்துஅல்கலர் வாழி- தோழி!- உதுக் காண்:இரு விசும்பு அதிர மின்னி, 10கருவி மா மழை கடல் முகந்தனவே!  
தோழீ! வாழ்வாயாக!; அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்; 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

330. மருதம்
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும் 5யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரைஎம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,நன்றி சான்ற கற்பொடு 10எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.  
வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே 'துடும்' என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; புது வருவாயினையுடைய ஊரனே!; நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்; 
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்

331. நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,கானல் இட்ட காவற் குப்பை,புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, 5'எந்தை திமில், இது, நுந்தை திமில்' எனவளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் 10பிறர் பிறர் அறிதல் யாவது- தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.  
ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கி¢க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக! 
தோழி இரவுக்குறி நேர்ந்தது. - உலோச்சனார்

332. குறிஞ்சி
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- 'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,நாளும்நாள் உடன் கவவவும், தோளேதொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, 5ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலிஇரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,ஆர் இருள் வருதல் காண்பேற்கு,யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? 10
இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ? 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம். - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

333. பாலை
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, 5உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;நீங்குகமாதோ நின் அவலம்- ஓங்குமிசை,உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி 10நயவரு குரல பல்லி,நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.  
தோழீ!; உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; இனிமையான குரலையுடைய பல்லி; ஒள்ளிய சுவரிலே பொருந்தி நின்றுநன்மையான சொற்களைக் குறிப்பாற் கூறாநின்றது; ஆதலின் மேகம் தான் செய்ய வேண்டிய பெய்தற் றொழிலை இன்மையாக்கிக் கரிய ஆகாயத்திலே சென்றொழிந்ததனால்; வெப்பமிக்கு மூங்கில் எல்லாம் வாடி அழகழிந்த மலை வழியின் சிறிய நெறியிலே; பருக்கைக் கற்கள் நிரம்பிய பள்ளத்தில் ஊறுகின்ற மிகக் குறைவுபட்ட சிறிய நீரிடத்தில்; பொலிவு பெற்ற நெற்றியையுடைய யானையொடு புலி போர் செய்து அந் நீரையுண்ணுகின்ற சுரநெறியிலே சென்று; ஈட்டப்படும் பொருள் நமக்கு அரியவாம் என்று நினையாமல் நல்லறிவிழந்து, உள்ளே மகிழ்ச்சியுற்ற வன்மைமிக்க நெஞ்சுடனே தாம் வண்மைமிக்குடையராயிருத்தலை விரும்பி; அரிய பொருள் காரணமாக அகன்ற நங் காதலர்; நின்னை முயங்குவதை எதிர் நோக்கித் திருத்தமாகிய கலன்களை அணிந்த நின் பருத்த தோளை இன்றுவந்து கூடுவார் போலத் தோன்றாநின்றது காண்!; இனி நின் அவலம் நீங்குவாயாக! 
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளைபெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கைவெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- 5மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;மின்னு வசி விளக்கத்து வருமெனின்,என்னோ- தோழி!- நம் இன் உயிர் நிலையே?  
தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்; 
தோழி இரவுக்குறி முகம் புக்கது.

335. நெய்தல்
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்பல் பூங் கானல் முள் இலைத் தாழைசோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, 5வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடுமை இரும் பனைமிசைப் பைதல உயவும்அன்றிலும் என்புற நரலும்; அன்றி,விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்யாமம் உய்யாமை நின்றன்று; 10காமம் பெரிதே; களைஞரோ இலரே!  
திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை; ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்? 
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடுகணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, 5குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்- அரவின்ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,இரை தேர் எண்கினம் அகழும் 10வரை சேர் சிறு நெறி வாராதீமே!  
சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடிய மலை நாடனே!; மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின்¢ கூட்டம் பறித்து எடாநிற்கும்; மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!;
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது. - கபிலர்

337. பாலை
உலகம் படைத்த காலை- தலைவ!- மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- முதிரா வேனில் எதிரிய அதிரல்,பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய 5செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. 10
தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ?; அங்ஙனம் மறந்த தகுதிப்பாட்டினையுடையோர் சிறந்தோரேயாவார்; 
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ

338. நெய்தல்
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப 5யாங்ஙனம் விடுமோ மற்றே!- மால் கொளவியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கியஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, 10உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?  
கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; அகன்ற கா¤ய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, 'நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும்' என்று கூறாநின்றனை; இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ? 
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

339. குறிஞ்சி
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும்புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்அறிந்தனள்போலும், அன்னை- சிறந்த 5சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,மின் நேர் ஓதி இவளொடு, நாளை,பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் 10தெண் நீர் மணிச் சுனை ஆடின்,என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?  
தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து ("நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?" என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இ¢வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது; நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தௌ¤ந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்¢ச் சிலவற்றைக் கூறி; நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்; 
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்

340. மருதம்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளைஅள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, 5பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்வாணன் சிறுகுடி அன்ன, என்கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! 10
மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணனது காவிரியின் வடபாலுள்ள 'சிறுகுடி' என்னும் ஊர்போன்ற; என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லவுஞ்செய்யேன்; அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்! 
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. - நக்கீரர்

341. குறிஞ்சி
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் 5துணை நன்கு உடையள், மடந்தை: யாமேவெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடுவேறு புல வாடை அலைப்ப,துணை இலேம், தமியேம், பாசறையேமே. 10
இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தௌ¤வை (சாராயத்தை)ப் பருகி; அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தௌ¤வைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; 
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

342. நெய்தல்
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்குமதில் என மதித்து வெண் தேர் ஏறி,என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்சேரி சேரா வருவோர்க்கு, என்றும்அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என, 5கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:யானே- எல்வளை!- யாத்த கானல்வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்தசென்னிச் சேவடி சேர்த்தின்,'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே. 10
அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி 'என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின் குறை நீயே சென்றுரை' யென்றதனாலே மயங்கி நின்று, குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறிவந்தும், இது காவலையுடைய மதில் என மதித்து வெளிய பேய்த்தேரைச் சென்று நோக்கியும்; நீ இருக்கின்ற சேரியைச் சார வருபவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும் என்று; யான் கண்ணினால் இனியகுறிப்புத் தோன்றத் தலைசாய்த்துக் காட்டியும் ஒளிபொருந்திய வளையையுடைய தலைவி அவற்றை அறிந்துகொண்டனளல்லள்; ஆதலால் யானே வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில் வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலருதிர்ந்து நுண்ணியதாகக் கோலஞ் செய்த அவ்விடத்து; எனது தலை அவ்விறைமகளின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்; அத் தலைவர் செயல் இப்பொழுது எப்படியாயிருக்கின்றதோ? என்று என்னை வினாவலும் உண்டாகும்; அப்பொழுது நிகழ்ந்தவற்றைக் கூறுவேன்; 
குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது. 

343. பாலை
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறிஅடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை 5புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,படையொடு வந்த பையுள் மாலைஇல்லைகொல் வாழி- தோழி!- நத்துறந்துஅரும் பொருட் கூட்டம் வேண்டிப்பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? 10
தோழீ! வாழ்வாயாக!; முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே; 
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது. - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

344. குறிஞ்சி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்டமணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்காவல் கண்ணினம்ஆயின்- ஆயிழை!- நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை 5ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,செல்வன் செல்லும்கொல் தானே- உயர் வரைப்பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலிகளிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, 10செந் தினை உணங்கல் தொகுக்கும்,இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?  
ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ? 
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்

345. நெய்தல்
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும் துறைவ! என்றும், 5அளிய பெரிய கேண்மை நும் போல்,சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்தேறா நெஞ்சம் கையறுபு வாட,நீடின்று விரும்பார் ஆயின்,வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே! 10
மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தௌ¤யாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; நீ இங்கு நயந்து தௌ¤விக்கும் தௌ¤வு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக! 
தௌவிடை விலங்கியது. - நம்பி குட்டுவனார்

346. பாலை
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,தண் கார் தலைஇய நிலம் தணி காலை,அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,அழிந்த வேலி அம் குடிச் சீறூர்ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, 5தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,இன்று, நக்கனைமன் போலா- என்றும்நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்கடி பதம் கமழும் கூந்தல் 10மட மா அரிவை தட மென் தோளே?  
நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ? 
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

347. குறிஞ்சி
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைமாதிர நனந் தலை புதையப் பாஅய்,ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,வான் புகு தலைய குன்றம் முற்றி,அழி துளி தலைஇய பொழுதில், புலையன் 5பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,அருவி இழிதரும் பெரு வரை நாடன்,'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப்பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழிவேனில் தேரையின் அளிய, 10காண வீடுமோ- தோழி!- என் நலனே?  
தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ?; அவை இரங்கத்தக்கன; 
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது. - பெருங்குன்றூர் கிழார்

348. நெய்தல்
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் 5தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடுகனை இருங் கங்குலும் கண்படை இலெனே:அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? 10
நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே? 
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. - வெள்ளி வீதியார்

349. நெய்தல்
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடுவைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் 5பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருதபெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,பின்னிலை முனியா நம்வயின்,என் என நினையும்கொல், பரதவர் மகளே? 10
விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?; 
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. - மிளை கிழான் நல்வேட்டனார்

350. மருதம்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,பழனப் பல் புள் இரிய, கழனிவாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்தொல் கவின் தொலையினும் தொலைக! சார 5விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலைசாடிய சாந்தினை; வாடிய கோதையை;ஆசு இல் கலம் தழீஇயற்று;வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! 10
வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் 'இருப்பையூர்' போன்ற; எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக! 
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. - பரணர்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.