LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

நற்றிணை-9

201.குறிஞ்சி
'மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் 5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் 10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.  
மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்? 
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. - பரணர்
202. பாலை
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் 5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்- வாழியோ, குறுமகள்!- நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல, 10
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.  
இளமடந்தையே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; புலியொடு போர் செய்தலாலே இரத்தந் தோய்ந்து சிவந்த புலவு நாற்றத்தையுடைய செவ்விய மருப்பின் அடியிலே தழைத்த பலவாய முத்துகள் ஒலியாநிற்ப; வலிமிக்கு வலிய மேட்டு நிலத்தின்கணுள்ள வேங்கை மரத்தின் பருத்த அடியை முறித்து; தன் கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையையுடைய களிற்றியானை; தேனைத் தொகுக்கின்ற ஈக்களெல்லாம் ஓடுமாறு அவ் வேங்கையின் பொன் போன்ற பூங்கொத்தாலாகிய உணவைப் பாதுகாத்து நின்று ஊட்டா நிற்கும்; கரிய மலைப் பிளப்பிடங்களைச் சூழ்ந்து அழகுமிக; கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல பூக்கள் நிரம்பிய கோங்கங்கள் அழகு செய்யப்பட்ட நின் தந்தைக்குரிய இக் காட்டினை நீ காண்பாயாக! 
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, 5
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும், 10
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.  
ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும்¢ மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!; 
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது. - உலோச்சனார்
204. குறிஞ்சி
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் 5
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் 10
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?  
மடந்தாய்! தளிர் சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் "நீ பின்னர் என்னை முயங்குதி" என இனிய மொழிகளைக் கூறி; கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே! 
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மள்ளனார்
205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய், நீயே 5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே- படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய 10
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!  
நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக! 
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம். - இளநாகனார்
206. குறிஞ்சி
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என 5
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!- 
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்?
கல் கெழு நாடன் கேண்மை 10
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!  
தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து கூறினான்; அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்! 
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - ஐயூர் முடவனார்
207. நெய்தல்
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி 5
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் 10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.  
அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்¢காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம்¢ வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; இரவில் இளைஞரும் முதியோரும் தம்¢ உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்? 
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?- சுடர் நுதற் குறுமகள்!- 
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், 5
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, 10
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?  
விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்! 
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது. - நொச்சி நியமங் கிழார்
209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் 5
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும்காலைஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!  
மலைச்சார்பிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையாகிய மழை பெய்யும் பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர்; சிலவாய விதைகளைக் கலப்பாக விதைத்து ஒருசேரப் பலவாக விளைந்து சாய்ந்து கதிர் விளங்கிய தினைக்கொல்லையின்கண்; உள்ளாளாகிய மழலை மாறாத இளமடந்தை பேசுகின்ற இனிய குரலைக் கிளிகளும் அறிந்திருப்பனவே; அவ்வினியகுரல் என் அருகிருந்து மிழற்றின் அன்றே எனது காமநோய் தீரும்; அங்ஙனம் அருகிருந்து மிழற்றப்படாது என்னினின்று நீங்கி அகல்வதாயின்; என் அறிவு முதலாய குணங்களுடன் என் உயிரையும் சேர எல்லாவற்றையும் கைக்கொண்டு அகலா நிற்கும்; இப்படியாயின் அவள் இன்றி யான் எவ்வாறு உய்ய மாட்டுவேன்? 
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன். - நொச்சி நியமங்கிழார்
210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் 5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.  
நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; புதுவருவாயினையுடைய ஊரனே!; அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்; இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்; அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்? 
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது. - மிளைகிழான் நல்வேட்டனார்
211. நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, 5
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?  
ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; குத்துக்குத் தப்பிப்¢ பிழைத்தோடிய; வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்! 
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது. - கோட்டியூர் நல்லந்தையார்
212. பாலை
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் 5
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி- தோழி!- கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. 10
தோழீ! பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலையைக் கண்டு வெருவி நெடிய காலையுடைய "கணந்துள்" என்னும் பறவை தான் தனிமையினிருந்து கத்தாநின்ற தௌ¤ந்த ஓசை; அச்சுரத்தின் கண்ணே செல்லுகின்ற கூத்தாடிகள் தம் வழிவருத்தம் நீங்குமாறு தங்கி விரைவில் ஒலியெழுப்பி இசைபாடுகின்ற யாழோசையோடு சேர்ந்து ஒத்து ஒலியாநிற்கும் அரிய நெறியிலே; கடிய ஒலியையுடைய பம்பையையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருக்கின்ற நெடிய பெரிய குன்றங் கடந்து; நம்முடைய கையிலுள்ளதாகிய செம்பொன்னாற் செய்து பூட்டப்பட்டு இப்பொழுது கழன்று விழுகின்ற தொடியை நோக்கி; நம் (அரிய) சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுகின்ற இனிய குரலைக் கேட்குந் தோறும்; ஆசைகொள்ளுகின்ற மனத்தை யுடையேமாகிய நமக்கு மனமகிழச்சி உண்டாகும்படி; நம்மிடத்து வந்தெய்தினர் கண்டாய்! ஆதலின், இனி நீங்கள் இருவீரும் மனையறஞ் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்வீராக! 
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
'கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் 5
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ?- 10
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!  
பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்; 
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
214. பாலை
'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்' என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
'அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு' என, 5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ- தோழி!- தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி 10
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?  
தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; என்னை நோக்கி "நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்¢காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் 0சென்ற யாதொரு குற்றமும்¢ இல்லாத நங்காதலர்; என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?; 
உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கோசனார்
215. நெய்தல்
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் 5
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய 10
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.  
சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்; 
பகற் குறி வந்து மீள்வானை 'அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம். - மதுரைச் சுள்ளம் போதனார்
216. மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; 5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும், 10
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.  
புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும்¢ முன்பு அவர் மெய்யை நோக்கி மகிழ்ந்துளேனாதலின்; அங்ஙனமாகக் காணுந் தரத்தினரை நோக்கி யிருந்தாலும் உயிரோடு வாழ்வதினியதாகும், அவ்வண்ணம் காணப்பெறேனாதலின் யான் இனி உயிர்வைத்திருப்பதில் யாது பயன்?, கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறுதுயரம் களையார் ஆயினும் கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கை விலக்குமாறு போல நம்மையுற்ற துன்பத்தை நீக்காராயினும்; அவரில்லாத வூர் இன்னாதாகும், இன்னாதவூரில் யான் இருந்தும் யாது பயன்? ஆதலின் இன்னே துறந்தகலினும் அகலுவன்; குருகுகள் ஆரவாரிக்கும் வயற் கரையிலே கடவுள் ஏறிய எரிபோன்ற பூவையுடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரண் அருகிலே; அயலான் ஒருவன் செய்ததனாலாய கவலை வருத்துதலாலே; ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணியைக் கேட்டவர்கள் அத்தன்மையராயினும்; அவள்பால் அன்பு வைத்தவர் மாத்திரம் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்துபவரல்லர்; அவ்வாறே தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துவளாயினும் மிக்க வேட்கையையுடைய யான் வருந்துந்துணை அவள் வருந்துபவளல்லள்; அங்ஙனமே பிறரும் வருந்துபவரல்லர் 
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் 5
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன்- தோழி!- நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.  
தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய நம் காதலன்; பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்! 
தலைமகள் வாயில் மறுத்தது. - கபிலர்.
218. நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌத்தோர் 5
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ, 10
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?  
ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; இடங்கள் தோறும் வெளவாலும் பறந்து உலவாநிற்கும்; ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்? 
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில். - காவிதிக் கீரங்கண்ணனார்
219. நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி- தோழி!- சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் 5
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- 
தானே யானே புணர்ந்தமாறே. 10
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! ; என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்; 
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - தாயங்கண்ணனார்
220. குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர்மன்ற- விசிபிணி 5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! 10
பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; எம்மைச் சுட்டித் "தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்" என்று; எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்; 
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம். - குண்டுகட்பாலியாதனார்
221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், 5
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க- பாக!- நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் 10
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.  
பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; "எந்தாய்! வருக" என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக; 
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
222. குறிஞ்சி
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் 5
செலவுடன் விடுகோ- தோழி!- பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? 10
தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்! 
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - கபிலர்
223. நெய்தல்
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் 5
எல்லி வம்மோ!- மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.  
மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்; இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்!; ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக!; நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்; 
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - உலோச்சனார்
224. பாலை
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் 5
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
'பிரியலம்' என்று, தௌத்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே- கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய 10
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?  
நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குராமரம் அரும்பு கட்டின; மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; 'ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்!' என்று; தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற் பருவம் வந்திறுத்ததாதலின்; 'இனி நம் வயிற் பிரியகில்லோம்.' என்று என்னைத் தௌ¤வித்தனர், அங்ஙனம் தௌ¤வித்தவராய்ப் பின்பு; குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்? 
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல்- தோழி!- திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?  
தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின்கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை ; மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்! 
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

201.குறிஞ்சி
'மலை உறை குறவன் காதல் மட மகள்,பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் 5தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,அவ் வெள் அருவிக் குட வரையகத்து,கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் 10மாயா இயற்கைப் பாவையின்,போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.  
மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்? 
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. - பரணர்

202. பாலை
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டுஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடுமடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் 5பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்மா மலை விடரகம் கவைஇ, காண்வர,கண்டிசின்- வாழியோ, குறுமகள்!- நுந்தை,அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்செல் சுடர் நெடுங் கொடி போல, 10பல் பூங் கோங்கம் அணிந்த காடே.  
இளமடந்தையே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; புலியொடு போர் செய்தலாலே இரத்தந் தோய்ந்து சிவந்த புலவு நாற்றத்தையுடைய செவ்விய மருப்பின் அடியிலே தழைத்த பலவாய முத்துகள் ஒலியாநிற்ப; வலிமிக்கு வலிய மேட்டு நிலத்தின்கணுள்ள வேங்கை மரத்தின் பருத்த அடியை முறித்து; தன் கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையையுடைய களிற்றியானை; தேனைத் தொகுக்கின்ற ஈக்களெல்லாம் ஓடுமாறு அவ் வேங்கையின் பொன் போன்ற பூங்கொத்தாலாகிய உணவைப் பாதுகாத்து நின்று ஊட்டா நிற்கும்; கரிய மலைப் பிளப்பிடங்களைச் சூழ்ந்து அழகுமிக; கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல பூக்கள் நிரம்பிய கோங்கங்கள் அழகு செய்யப்பட்ட நின் தந்தைக்குரிய இக் காட்டினை நீ காண்பாயாக! 
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டுஅக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழைஎறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, 5சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மைஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்செய்த தன் தப்பல் அன்றியும், 10உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.  
ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும்¢ மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!; 
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது. - உலோச்சனார்

204. குறிஞ்சி
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் 5கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என,யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,தான் செய் குறி நிலை இனிய கூறி,ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் 10கொடிச்சி செல்புறம் நோக்கி,விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?  
மடந்தாய்! தளிர் சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் "நீ பின்னர் என்னை முயங்குதி" என இனிய மொழிகளைக் கூறி; கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே! 
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மள்ளனார்

205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதிஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்துன் அருங் கானம் என்னாய், நீயே 5குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடுபோயின்றுகொல்லோ தானே- படப்பைக்கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்நீர் மலி கதழ் பெயல் தலைஇய 10ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!  
நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக! 
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம். - இளநாகனார்

206. குறிஞ்சி
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த்தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என 5எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' எனஎன் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!- செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்?கல் கெழு நாடன் கேண்மை 10அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!  
தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து கூறினான்; அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்! 
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - ஐயூர் முடவனார்

207. நெய்தல்
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைமுண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி 5வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் 10திரை எழு பௌவம் முன்னியகொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.  
அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்¢காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம்¢ வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; இரவில் இளைஞரும் முதியோரும் தம்¢ உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்? 
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப,விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,எவன் இனைபு வாடுதி?- சுடர் நுதற் குறுமகள்!- செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், 5நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்கொன்னும் நம்புங் குரையர் தாமே;சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, 10இன் துணைப் பிரிந்தோர் நாடித்தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?  
விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்! 
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது. - நொச்சி நியமங் கிழார்

209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்தளி பதம் பெற்ற கான் உழு குறவர்சில வித்து அகல இட்டென, பல விளைந்து,இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் 5கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கேபடும்கால் பையுள் தீரும்; படாஅதுதவிரும்காலைஆயின், என்உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!  
மலைச்சார்பிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையாகிய மழை பெய்யும் பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர்; சிலவாய விதைகளைக் கலப்பாக விதைத்து ஒருசேரப் பலவாக விளைந்து சாய்ந்து கதிர் விளங்கிய தினைக்கொல்லையின்கண்; உள்ளாளாகிய மழலை மாறாத இளமடந்தை பேசுகின்ற இனிய குரலைக் கிளிகளும் அறிந்திருப்பனவே; அவ்வினியகுரல் என் அருகிருந்து மிழற்றின் அன்றே எனது காமநோய் தீரும்; அங்ஙனம் அருகிருந்து மிழற்றப்படாது என்னினின்று நீங்கி அகல்வதாயின்; என் அறிவு முதலாய குணங்களுடன் என் உயிரையும் சேர எல்லாவற்றையும் கைக்கொண்டு அகலா நிற்கும்; இப்படியாயின் அவள் இன்றி யான் எவ்வாறு உய்ய மாட்டுவேன்? 
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன். - நொச்சி நியமங்கிழார்

210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்மறு கால் உழுத ஈரச் செறுவின்,வித்தொடு சென்ற வட்டி பற்பலமீனொடு பெயரும் யாணர் ஊர!நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் 5செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்புன்கண் அஞ்சும் பண்பின்மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.  
நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; புதுவருவாயினையுடைய ஊரனே!; அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்; இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்; அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்? 
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது. - மிளைகிழான் நல்வேட்டனார்

211. நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல்ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்தகருங் கால் குருகின் கோள் உய்ந்து போகியமுடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, 5எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்துறு கடற் தலைய தோடு பொதி தாழைவண்டு படு வான் போது வெரூஉம்துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?  
ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; குத்துக்குத் தப்பிப்¢ பிழைத்தோடிய; வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்! 
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது. - கோட்டியூர் நல்லந்தையார்

212. பாலை
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளிசுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் 5நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்வந்தனர்; வாழி- தோழி!- கையதைசெம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. 10
தோழீ! பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலையைக் கண்டு வெருவி நெடிய காலையுடைய "கணந்துள்" என்னும் பறவை தான் தனிமையினிருந்து கத்தாநின்ற தௌ¤ந்த ஓசை; அச்சுரத்தின் கண்ணே செல்லுகின்ற கூத்தாடிகள் தம் வழிவருத்தம் நீங்குமாறு தங்கி விரைவில் ஒலியெழுப்பி இசைபாடுகின்ற யாழோசையோடு சேர்ந்து ஒத்து ஒலியாநிற்கும் அரிய நெறியிலே; கடிய ஒலியையுடைய பம்பையையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருக்கின்ற நெடிய பெரிய குன்றங் கடந்து; நம்முடைய கையிலுள்ளதாகிய செம்பொன்னாற் செய்து பூட்டப்பட்டு இப்பொழுது கழன்று விழுகின்ற தொடியை நோக்கி; நம் (அரிய) சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுகின்ற இனிய குரலைக் கேட்குந் தோறும்; ஆசைகொள்ளுகின்ற மனத்தை யுடையேமாகிய நமக்கு மனமகிழச்சி உண்டாகும்படி; நம்மிடத்து வந்தெய்தினர் கண்டாய்! ஆதலின், இனி நீங்கள் இருவீரும் மனையறஞ் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்வீராக! 
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,'கன்று கால்யாத்த மன்றப் பலவின்வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்குழவிச் சேதா மாந்தி, அயலதுவேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் 5பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனகருவி மா மழை வீழ்ந்தென, எழுந்தசெங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்கொய் புனம் காவலும் நுமதோ?- 10கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!  
பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்; 
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

214. பாலை
'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்' என,வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,'அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போதுஅணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு' என, 5எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்கேளார்கொல்லோ- தோழி!- தோளஇலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி 10நகுவது போல, மின்னிஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?  
தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; என்னை நோக்கி "நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்¢காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் 0சென்ற யாதொரு குற்றமும்¢ இல்லாத நங்காதலர்; என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?; 
உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கோசனார்

215. நெய்தல்
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,பகல் கெழு செல்வன் குடமலை மறைய,புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் 5நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,இன்று நீ இவணை ஆகி, எம்மொடுதங்கின் எவனோதெய்ய? செங்கால்கொடு முடி அவ் வலை பரியப் போகிய 10கோட் சுறாக் குறித்த முன்பொடுவேட்டம் வாயாது எமர் வாரலரே.  
சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்; 
பகற் குறி வந்து மீள்வானை 'அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம். - மதுரைச் சுள்ளம் போதனார்

216. மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;கண்ணுறு விழுமம் கை போல் உதவி,நம் உறு துயரம் களையார்ஆயினும்,இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; 5எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,ஏதிலாளன் கவலை கவற்ற,ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்கேட்டோர் அனையராயினும், 10வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.  
புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும்¢ முன்பு அவர் மெய்யை நோக்கி மகிழ்ந்துளேனாதலின்; அங்ஙனமாகக் காணுந் தரத்தினரை நோக்கி யிருந்தாலும் உயிரோடு வாழ்வதினியதாகும், அவ்வண்ணம் காணப்பெறேனாதலின் யான் இனி உயிர்வைத்திருப்பதில் யாது பயன்?, கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறுதுயரம் களையார் ஆயினும் கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கை விலக்குமாறு போல நம்மையுற்ற துன்பத்தை நீக்காராயினும்; அவரில்லாத வூர் இன்னாதாகும், இன்னாதவூரில் யான் இருந்தும் யாது பயன்? ஆதலின் இன்னே துறந்தகலினும் அகலுவன்; குருகுகள் ஆரவாரிக்கும் வயற் கரையிலே கடவுள் ஏறிய எரிபோன்ற பூவையுடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரண் அருகிலே; அயலான் ஒருவன் செய்ததனாலாய கவலை வருத்துதலாலே; ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணியைக் கேட்டவர்கள் அத்தன்மையராயினும்; அவள்பால் அன்பு வைத்தவர் மாத்திரம் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்துபவரல்லர்; அவ்வாறே தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துவளாயினும் மிக்க வேட்கையையுடைய யான் வருந்துந்துணை அவள் வருந்துபவளல்லள்; அங்ஙனமே பிறரும் வருந்துபவரல்லர் 
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலதுகருங் கால் வேங்கை ஊறுபட மறலி,பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் 5நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்துஊடல் உறுவேன்- தோழி!- நீடுபுலம்பு சேண் அகல நீக்கி,புலவி உணர்த்தல் வன்மையானே.  
தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய நம் காதலன்; பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்! 
தலைமகள் வாயில் மறுத்தது. - கபிலர்.

218. நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌத்தோர் 5கூறிய பருவம் கழிந்தன்று; பாரியபராரை வேம்பின் படு சினை இருந்தகுராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;ஆனா நோய் அட வருந்தி, இன்னும்தமியேன் கேட்குவென் கொல்லோ, 10பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?  
ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; இடங்கள் தோறும் வெளவாலும் பறந்து உலவாநிற்கும்; ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்? 
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில். - காவிதிக் கீரங்கண்ணனார்

219. நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி- தோழி!- சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் 5பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- தானே யானே புணர்ந்தமாறே. 10
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! ; என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்; 
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - தாயங்கண்ணனார்

220. குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,பெரிதும் சான்றோர்மன்ற- விசிபிணி 5முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர்தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்கயல் ஏர் உண்கண் குறுமகட்குஅயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! 10
பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; எம்மைச் சுட்டித் "தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்" என்று; எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்; 
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம். - குண்டுகட்பாலியாதனார்

221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளைஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், 5நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,செல்க- பாக!- நின் செய்வினை நெடுந் தேர்:விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் 10பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,'வந்தீக, எந்தை!' என்னும்அம் தீம் கிளவி கேட்கம் நாமே.  
பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; "எந்தாய்! வருக" என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக; 
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

222. குறிஞ்சி
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைவடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்கை புனை சிறு நெறி வாங்கி, பையென,விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் 5செலவுடன் விடுகோ- தோழி!- பலவுடன்வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,பெருங் களிறு பிளிறும் சோலை அவர்சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? 10
தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்! 
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - கபிலர்

223. நெய்தல்
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,பகலும் வருதி, பல் பூங் கானல்;இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் 5எல்லி வம்மோ!- மெல்லம் புலம்ப!சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்துறையினும் துஞ்சாக் கண்ணர்பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.  
மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்; இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்!; ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக!; நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்; 
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - உலோச்சனார்

224. பாலை
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச்செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் 5இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்'பிரியலம்' என்று, தௌத்தோர் தேஎத்து,இனி எவன் மொழிகோ, யானே- கயன் அறக்கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறிவில் மூசு கவலை விலங்கிய 10வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?  
நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குராமரம் அரும்பு கட்டின; மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; 'ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்!' என்று; தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற் பருவம் வந்திறுத்ததாதலின்; 'இனி நம் வயிற் பிரியகில்லோம்.' என்று என்னைத் தௌ¤வித்தனர், அங்ஙனம் தௌ¤வித்தவராய்ப் பின்பு; குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்? 
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்பொருத யானை வெண் கோடு கடுப்ப,வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,மெல் இயல் மகளிர் ஓதி அன்னபூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை 5இரந்தோர் உளர்கொல்- தோழி!- திருந்து இழைத்தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்பயந்து எழு பருவரல் தீர,நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?  
தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின்கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை ; மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்! 
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.