LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 679 - அமைச்சியல்

Next Kural >

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.)
மணக்குடவர் உரை:
தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒட்டாரை ஒட்டிக் கொளல்-வினைதொடங்குமுன் தன் பகைவரொடு பொருந்தாதவரைத் தனக்கு நட்பாக்கிக்கொள்ளுதல்; நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே-தன் நண்பருக்கு இனியன செய்தலினும் விரைந்து செய்யப்பட வேண்டியதே. உண்மையானவரும் பழகியவருமான நண்பர் தன்னை விட்டு நீங்காராதலானும், அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்பைச் சற்றுக்காலந்தாழ்த்துச் செய்யினும் பொறுத்திருப்ப ராதலானும், பகைவருடன் பொருந்தாதவரை உடனே தன்னொடு சேர்த்துத் கொள்ளாவிடின் பகைவர் அவர் விரும்பியதைக் கொடுத்துத் தம்வயப்படுத்திக் கொள்வ ராதலானும், 'நட்டார்க்கு நட்ட செயலின் விரைந்ததே' என்றார். இனி, இதுவரை தன்னொடு ஒட்டாரை ஒட்டிக்கொளல் எனினுமாம். ஏகாரம் தேற்றம். இக்குறளிரண்டும் மெலியன் செயல் கூறின.
கலைஞர் உரை:
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.
Translation
Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you.
Explanation
One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.
Transliteration
Nattaarkku Nalla Seyalin Viraindhadhe Ottaarai Ottik Kolal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >