LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)

நண்பரோ பகைவரோ யாரொருவரின் இக்கட்டிற்கு ஆளாவதைவிட அதர்மம் வேறில்லை. எவரிடத்தும் கருணைக் கொள்வதே மானுடநீதி நிலைப்பதற்கு வழிவகுக்கும். எதிரியிடம் கருணை காட்டுவதும் மானுட நீதியா? அது தன்னைத்தான் கொல்வதற்கு நிகரில்லையா? என எவரேனும் கேட்கலாம். ஆயின் எதிரியை களத்திற்கு அழைப்பதற்கு முன்பே மன்னிப்பதென்பது வீரத்திலும் உயர்ந்ததாகிறது. மன்னிக்க மன்னிக்க நாம் மனதால் அதிபலம் கொள்கிறோம், கம்பீரமடைகிறோம். விட்டுக்கொடுக்க கொடுக்கத்தான் ஒவ்வொருவரும் வளர்கிறோமென்பதொரு ஆழ்நிலை சூழ்ச்சுமம் அறிந்தோர் அறியக்கூடியதொரு உண்மையாகும்.

ஒரு சூழலை ஒரு வெற்றியை தோல்வியை நல்லதை கெட்டதை அனைத்தையுமே உருவாக்குவது நாம்தான். நம்முடைய ஒவ்வொரு செயலும் நகர்தலும்தான். அந்த மெல்லிய நகர்வில்’ நகர்வின் எண்ணத்தினுள் இருக்கவேண்டுமந்த மன்னிக்கும் குணமும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும். அப்போதுதான் அந்த மன்னிப்பு மானுடபலத்தைக் கடந்து ஆன்மபலத்தையும் கூட்டுவதாய் அமைகிறது.

பொதுவாக, விட்டுக்கொடுத்தல் என்பது பெரியதொரு வள்ளல்தன்மைப் போன்றதன்று, அதுவொரு இயல்பு, புரிதலில் வரும் இயல்பு. அந்த இயல்பு அறிவுசூழ்ந்து அமைகிறது. அறிவும் சூழலுமே இயல்பை அமைக்கும் காரணிகளாகின்றன. அறிவும் சூழலும் நமது உண்மைநிலையை ஒத்து மேம்படுகிறது அல்லது மாறுபடுகிறது எனலாம்.

உண்மைநிலைதான் முழுவீரதிற்கு முதற்புள்ளி. உண்மையாக இருத்தல், உண்மையோடு வாழ்தலைவிட பெரியதொரு தர்மமில்லை. பெரியதொரு மகிழ்ச்சியோ கம்பீரமோ இல்லை. உண்மைநிலை என்பது நிர்வாண நிலைக்கு சமம். உண்மையாக இருப்பதொரு வரம். உண்மையாக இருப்பவர்க்கு வாழ்க்கை தோற்பதோ பயத்தினுடையப் பள்ளத்தில் தள்ளுவதோயெல்லாம் நிகழ்வதில்லை. உண்மையாக இருப்பவரின் ஆன்மபலம் பன்மடங்கு பெருகுவதற்கான சாத்தியக்கூறுகளும் தானாக வாழ்வின் அடுத்தடுத்தப் படிகளோடு சேர்ந்துக்கொள்வதை நாமே தானாகப் பின்னாளில் உணரமுடியும்.

என்றாலும்; மானசீகமாய் உண்மை பிறழாமல் உள்ளது உள்ளபடியாக நடந்துக்கொள்வதென்பது அவரவர் பிறப்பிலிருந்தும் வருகிறது. வளர்கையில் தனது வாழ்பனுபவத்தின் மூலமும் உடன்வந்து ஒட்டி அது ஒருபக்கம் பெருத்த ஞானமாக வளர்கிறது. ஞானமெனில் எது? நடுநிலைத் தன்மை இனிக்குமிடம் ஞானம் சிறக்குமிடமாகும். உன்னை நானிழுத்துத் தள்ளுவதும் என்னை நீயிழுத்துத் தள்ளுவதும் நடைமுறையில் இருந்துக்கொண்டிருக்க, உன்னை நானும் என்னை நீயும் ஒருவர்மீது ஒருவர் பற்றில்லாவிட்டாலும் மன்னித்து மனிதத்தோடு ஒருவர் ஒருவரைக் காத்துக்கொள்வதே நடுநிலை தன்மையாகும்.

மனதின், எண்ணத்தின், அறிவின் நடுநிலைப் புரிதலிலிருந்துதான் சமச்சீர் நிலை வாழ்வாதாரத்தோடு ஒட்டிவருகிறது. அதன் சுவை தாயன்பில் இனிக்கும் மேன்மைக்குச் சமம். ஒரு தாயால் மட்டுமே தனது இருவேறு பிள்ளைகளையும் ஒன்றாகக் கருதி வளர்க்க இயலுமெனில், இருவேறு துருவங்களை சமபங்கில் மன்னித்து ஏற்று வளர்த்து வாஞ்சையோடு மனிதர் மனிதரை ஒட்டுமொத்தமாக அணைத்துக்கொள்ளவும் இந்த நடுநிலைத் தன்மையெனும் தெளிவு அதிமுக்கிய தாய்மை இடத்தைப் பெறுகிறது.

ஆக, நடுநிலை எனும் சமசீராகப் பார்த்தலும், கடைநிலை எனும் எதிலும் தொடர்பற்ற நிர்வாணத்தை மனதால் உணர்தலும் உண்மையாய் இருப்பதால் மட்டுமே நிகழ்கிறது. உண்மையாக இருத்தல் என்பது எதுவாக உள்ளோமோ அதுவாக வாழ்வது. உள்ளே இனிப்பாகத்தான் இருப்போம், தவறு செய்யக்கூடாது என்றுதான் எண்ணுவோம், அனைவரின் மீதும் கருணைக்கொண்டே நடப்போம், ஆனாலும் தக்க சூழலில் மாறிவிடுவோம். தன்னையே அறியாமல் கோபம் வரும். தனக்கே பிடிக்காமல் அழை வரும். பசியே இல்லாவிட்டாலும் சாப்பிட ஆசை யூறும். இப்படி நமக்கே பிடிக்காமல் நம்மை மாற்றுவது எது? அதுதான் நாம் நாமாக இல்லாத நிலை. அதாவது நமது உண்மையான உணர்விலிருந்துத் தள்ளி வேறு ஏதோ ஒரு போலி வேடத்தில் புரிதலில் ஆசையில் உண்மை புரியாத உணர்வுதனில் உழன்றுக் கிடக்கும் நிலை.

ஒரு சமயம் கிருஷ்ணனைப் பார்த்து, அர்ஜுனன் கேட்டானாம், “ஏன் கண்ணா எப்போதும் கர்ணனையே வள்ளல் என்கிறாயே, நம் யுதிச்றர் தானே தர்மத்தில் சிறந்தவர், அதாவது தர்மர் தானே தர்மத்தில் சிறந்தவர்? அவரைத்தானே வள்ளல் என்று நாம் அழைக்கவேண்டும்” என்று கேட்டானாம்

உடனே கிருஷ்ணன் ஒரு தங்க மலையைக் காட்டி தர்மா இது இப்போதிலிருந்து உன்னுடையது. யாருக்கேனும் தானம் செய்யவேண்டுமெனில் நீயே செய் என்றானாம். உடனே தர்மன்; மொத்த அந்த தேசத்து மக்கள் கணக்கையும் எடுத்து யார் நல்லவர் யார் கெட்டவர், யாரிடமிருந்தால் இந்தச் செல்வம் பெருகும், யார் தீது செய்யார் என்றெல்லாம் ஆராய்ந்து கணக்குப் பார்த்து, மிகச் சரியாக அளவுபிரித்து தங்கமலையை வெட்டி வெட்டி ஒவ்வொருவருக்காய் கொடுத்தாராம். மாலைவேளை நெருங்கி பொழுதுகூட இருட்டிப்போய்விட்டது. கிருஷ்ணர் வந்துப் பார்த்தால் கால்வாசி மலையைக் கூட தர்மர் தானம் கொடுத்திருக்கவில்லையாம்.

மறுநாள் கிருஷ்ணர் கர்ணனை அழைத்து, அதைவிட பெரியதொரு தங்கமலையைக் கைகாட்டி “இந்தா கர்ணா இந்த மலை இப்போதிலிருந்து உன்னுடையது. இதை நீ யாருக்கேனும் தானமாய் கொடுக்கவேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் அது உன் விருப்பம் என்றாராம்.

கர்ணன் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு தூரத்தில் பசியால் வாடி நொடிந்துப்போய் போகும் ஒரு ஏழை பெருமகனை அழைத்து என்ன ஏதென்றெல்லாம் கேட்டுக்கொள்ளவில்லை. பசி என்பதை அறிந்த கர்ணன் அந்த பெரியவரை அழைத்து அந்தத் தங்க மலையையே ‘இந்தா பிடி என்று’ ஒரு கணத்தில் தூக்கி கொடுத்தானாம்.

அப்போதங்கு வந்த கிருஷ்ணன் அர்ச்சுனனை அழைத்து பார்த்தாயா அர்ச்சுனா இப்போது நீயே சொல் யார் கொடுப்பதில் சிறந்தவர், கிள்ளிக் கொடுத்தவரா இல்லை அள்ளிக் கொடுத்தவரா என்றாராம்.

இதில் நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது. எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே வெளிப்படுவோம். வெளிப்படவேண்டும். தன்னை வேறாகக் காட்டிக் கொள்ளுமிடத்தில்தான் பிரச்சனைகள் தானாக நடந்துவிடுகிறது. ஒருமுறை இராவண மாமன்னன் சீதையின் பேரழகில் பிறர் மனையாள் என்றறிந்தும் மயங்கிப்போய், அவளை தனது ஆட்சியிடத்திற்கு கவர்ந்துச் செல்ல நேரிட, அதன்பால் பல தீயசெயல்களையும் தனையறியாது செய்ய முனைந்தாராம். அப்போது முதலில் தனது விடாமுயற்சியினால் கற்றறிந்திருந்த மாயாவித்தையைப் பயன்படுத்தி தன்னை ராமனைப்போன்றத் தோற்றத்திற்கு மாற்றிக்கொண்டாராம். அவ்ளவுதான் தாமதம் ராமனைப்போல மாறிய உடனேயே “ச்சீ இவளென்ன மாற்றானின் மனைவியாயிற்றே இவளை இங்ஙனம் கொண்டுச்செல்லல் தீதென்று உணர்ந்தாராம். உடனே ராமர் வேடத்தைக் களைந்து தனது ராவண தோற்றத்திற்கே மாறிவந்தாராம்.

இராவணன் முதலில் எப்பேர்ப்பட்ட மாமன்னனாக திகழ்ந்தும் தனது தீய செயலொன்றால் நாடிழந்து வீடிழந்து உயிரையும் விட்டு இப்படி வாழ்தல் தகாது என்பதற்கு உதரனமாகிப் போனான். காரணம் ராவணனைச் சூழ்ந்தது அவனுடைய ஈன அறிவினால் ஏற்பட்ட ஆசையின் கொடூர விளைவு. உணர்ச்சிக்கு அடிமையானதால், தன்னை ஒரு சிறிய ஆசைக்குள் அடக்கிக்கொண்டதால் நிகழ்ந்த பேரிடர் கடைசியில் எத்தகைய இலங்கா தேசத்து மாமன்னனையே கொன்றுவிட்டது பார்த்தீர்களா? ஒரு பெண்ணை தனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக பதிநான்கு வருங்களாக தனது நகக் கண் கூட சீதையின்மேல் படாமல் அத்தனைக் கண்ணியத்தோடு வைத்திருந்த மாமன்னன், தானொரு மணமுடிந்தவளைக் கொண்டுவந்திருக்கிறோமே எனபதைப் பற்றி சிந்திக்காமல் விட்ட இடத்தில்தான் வாழ்க்கை  தடம் புரண்டுவிட்டது.

ஆக, நாமும் இவ்வாறு நமது வாழ்வியலை சின்னஞ்சிறு ஆசைக்கிணங்கி பேருக்கிணங்கி ஒரு படாடோபத் தோற்றத்தை நமக்கென ஏற்படுத்திக்கொள்கையில்தான் சீரழிந்துப் போகிறோம் என்பதை உணரவேண்டும். நமது அடிமனதைவிட்டு வேறொரு ஆசை கிளர்த்தெழுகையில் அதை அங்கேயே அடையாளம்கண்டு உதறிவிடல் வேண்டும்.

ஏதோ ஒரு தனது வாழ்வியல் சூழலைப் பற்றி; தனது சுயபரிசோதனையாக எண்ணி நீங்களே சற்று அலசிப் பாருங்கள். உதாரணத்திற்கு மனதில் அவன் வந்தால் அவனை திட்டவே வேண்டாம், அவன் பாவம் அவனுக்கும் நடந்த அந்த சம்பவத்திற்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது என்று மிகநன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். ஆனால் அவன் வந்து நிற்கையில் ஏதோ ஒரு அசட்டுதனமாக ஏண்டா நீ பண்ணதே சரியில்லை உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது நீ அப்படி இப்படின்னு ஏதோ ஒன்றை சும்மா ஒரு பொழுதுபோக்காகச் சொல்லியிருப்பீர்கள். அவன் என்னடா இவர் இப்படிப் பேசுகிறாரே என்றெண்ணி கொஞ்சம் கோபமோ உதசீனமோ செய்துவிட்டால் போதும், உடனே கோபம் உங்களுக்கும் பொத்துக்கொண்டு வர, அவனுக்கும் வர, கைகலப்பு ஆக, இருவரும் நீயா நானா என்று இரண்டில் ஒன்றுப் பார்க்க, ஒருவரை ஒருவர் வெட்டி மாண்ட கதைகளெல்லாம் நிறைய நடந்ததுண்டு என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். இங்கே பிரச்சனை என்ன, நினைத்ததை நினைத்தவாறு செய்யாதல்தான். எதுவாக இருக்கிறோமோ அதுவாக மட்டுமே நாம் வாழ்தல் வேண்டும். மாற்றம் என்பது நன்மைக்கு வேண்டி மட்டுமே நிகழவேண்டும்.

தான் ஒரு கோபக்காரன். எனக்கு அதன்மீது கொள்ளையாசை, நான் இப்படி மட்டும் தான் வாழ்வேன், என்னால் அது இல்லாமல் வாழ இயலாது’ என்றெல்லாம் நாமே நம் மீது பல திணிப்புகளைப் போட்டு நமை ஒரு பொதிசுமக்கும் கழுதைக்கு ஈடாக ஆக்கிவைத்திருத்தலே நமது தோல்விக்கான காரணங்களாகி விடுகிறது.

நமை நாம் ஒரு தெளிந்த பாலின் வெண்மைக்கு நிகராக; எதுவாக இருக்கிறோமோ அதுவாக நம் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு சரியாக நமை திருப்பிக் கொண்டிருக்க வேண்டும். ஃபாவத்தை விட்டொழிதல் வேண்டும். நான் ரஜினி மாதிரி கமல் மாதிரி தல அப்படி தளபதி இப்படி எனும் நடிகர்களின் ஆசையிலான போலி முகத்திரையை மனதிற்குமேல் போட்டு மூடாமல் வாழ்க்கையை தனதாக அமைத்துக்கொள்ளும் முயற்சியில் மட்டுமே நமது பிறப்பினை நாம் வெல்ல இயலும்.

இதுபோல் நான், அதுபோல் நான் என்றெல்லாம் யாராலும் சொல்லத்தகாததொரு “பிரபஞ்சத்தின் மாற்றத்திற்கு மட்டுமே உட்பட்டதொரு சிறுபுள்ளி நாம். காற்று நகர்த்தினால் நாம் நகர்வோம், பூமி அசைந்தால் நாம் அசைவோம். இயற்கை எதுவாக திருப்புகிறதோ அதுவாக மட்டுமே நம்மால் திரும்ப இயலும். ஆனால், நமது ஒழுக்கத்தின் பொருட்டு உண்மையின் பொருட்டு நேர்மையின் பொருட்டு நம்மை நாம் இயற்கையின் மையத்துள் செலுத்திக்கொண்டால்; இயற்கையோடு இயற்கையாக நமை நாம் ஒன்றிவாழ சீர்செய்துக் கொண்டால் அந்த இயற்கை நாம் சொல்வதையும் கேட்கும். அந்த இயற்கையை நாம் அசைக்கவும் மாற்றவும் இயலும்.

ஒரு விதைக்கு மண்ணிட்டு நீரூற்றி, விதை முளைத்தப்பின் வளர வளர தொடர்ந்து நீரூற்றி வந்தால் வேர் மண்ணில் ஊன்றிப்போனதும் அடிநிலத்திலிருக்கும் நீரை நாள்பட நாள்பட அதுவே மண்ணிலிருந்து தானாக உறிஞ்சிக்கொள்ளும் பலத்தையும் அடைந்துவிடுகிறது. அதுபோல்தான் நாமும், ஆரம்பத்தில் உண்மை நேர்மை ஒழுக்கமெனும் நன்னடத்தைகளால் இப்பிரபஞ்சத்துள் வேரூன்றிக் கொண்டால் பிறகு இப்பிரபஞ்சமே நமது நன்மைக்கு வேண்டி உடனிருக்கும்.

எனவே, யார்போல் ஆவதையும், தனக்கு இது வேண்டாம் இப்படி வாழவேண்டாம் என்று நினைப்பதையும் விட்டு விடுங்கள். இது சரி இது தர்மம் இது பொது என்பதான யாருக்கும் வலிக்காத வாழ்க்கயை வாழப் பழகிக் கொள்ளுங்கள். மெல்ல மெல்ல விட்டுவிட்டால்; பொய்' திருட்டு' ஆசை' பசிகூட விட்டேப் போகும்.

மெல்ல மெல்ல வாழப் பழகினால் தனக்கென்றும் பிறருக்கென்றும் எல்லோராலுமே வாழ இயலும். சிரித்தால் சிரிக்கும் மனசும், பேசினால் பேசும் வாயும் நினைப்பதை நினைத்தவாறு செய்யும் பிறப்பையுமே நாம் எடுத்துள்ளோம். எனவே வாய்விட்டு சிரியுங்கள். எல்லோரிடமும் மனுதுவிட்டு உண்மையாகப் பேசுங்கள். சரி தவறை பொதுவாக அலசுங்கள். நாம் முழுதாகக் கண்டிராத இப்பேருலகம் ‘ஒரு வீட்டைப்போல எத்தனைப் பெரிதாக இருந்தாலும், அதனுள் நுழைய ஒரு சிறிய துவாரத்தின் சாவியே தேவைப்படுவதைப்போல’ இப்பிரபஞ்சதுள் நுழைய உண்மை நிறைந்ததொரு நன்னடத்தை இன்றியமையாதது என்பதை உணருங்கள். ஃபாவம் விட்டொழிந்து தாமாக தனது பிறப்பாக வாழுங்கள். அப்படி வாழப் பழகிக்கொண்டால் பிறகு மெல்ல அந்த 'தான்' என்பது யாரென்று அறியும் வாய்ப்பும் தானே உங்களைத்தேடி வரும். அப்போது அறிவீர்கள்; நீங்கள் வேறில்லை, நான் வேறில்லை, இந்த உலகு வேறில்லை எனும் உண்மையுள் நாம் பொதித்து வைத்துள்ள நம் பேருண்மையை.

அப்போது பரவுமந்த பேருண்மைக்கு வைக்கும் முதற்புள்ளியாய் இதோ இங்கு முற்றுப் புள்ளியை வைக்கிறேன். இங்கிருந்தும் நன்மையை நோக்கிப் பயணப் படுங்கள். ஒழுக்கத்தை உண்மையை நோக்கி நடைபோடுங்கள். உண்மையின் தீ, நன்னடத்தையின் பெருஞ்சக்தி எங்கும் பரவட்டும். பேரண்டம் பொதுவாய் எல்லோருக்குமாய் இயங்கட்டும். பிறப்பிலோ இறப்பிலோ பெரிது சிறிது நீங்கி எல்லாம் சமநிலையை பெறட்டும்.. சமநிலை குலையாத பொதுதர்மத்தில் இவ்வுலகும் சிறு துரும்பும் தூசும் நன்மையை நோக்கியே நிலைத்திருக்கட்டும்..

வாழ்க இப்பேருலகு.. வாழ்க இப்பேருலகின் நிலம்’ நீர்’ காற்று’ வான்’ நெருப்பு’ நீ’ நான்’ இன்னபிற எல்லா உயிர்களும்..

வித்யாசாகர்

by Swathi   on 20 Apr 2016  2 Comments
Tags: Nee Niyagave Iru   நீ நீயாகவே இரு   நிமிடம்   ஒரு நிமிடம்   வாழ்வு        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
20-Jul-2016 10:49:38 prakash said : Report Abuse
enakku ulla viyathi vithyasamanathu athu ennana nednga soltra advice ellathaiyum padippen antha vishayatha daily seinumnu mudivu eduppen but na nenaikkurathu onna irukkum nadakkurathu onna irukkum athukku enna karanam mm
 
22-Apr-2016 01:23:12 ஈஸ்வரன் said : Report Abuse
வாழ்க்கையின் உண்மையான வார்ர்தைகள். வாழ்க்கையில் உண்மையாக் வாழ்ந்தால் நாம் நினைக்காத ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.அனைவரும் நன்றாக வாழ என் வாழ்த்துகள்.இந்த பதிவை ஏற்றியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி...............
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.