LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 782 - நட்பியல்

Next Kural >

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். '('நீரவர்' என்றார், இனிமை பற்றி. கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.)
மணக்குடவர் உரை:
பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார்.
தேவநேயப் பாவாணர் உரை:
நீரவர் கேண்மை பிறை நீர-அறிவுடைய மேலோர் நட்புக்கள் வளர்பிறைத் தன்மையுடையனவாய் மேன்மேலும் வளர்ந்து வருவனவாம்; பேதையார் நட்பு மதிப்பின் நீர-அறிவில்லாத கீழோர் நட்புக்கள் தேய்பிறைத் தன்மையுடையனவாய் வரவரத் தேய்ந்து வருவனவாம். நீர்மையுடையான் நீரவர். நீர்மை சிறந்த தன்மை; "நீர்மையுடையார் சொலின்" (குறள் 165) என்பதிற்போல. நட்பைக் 'கேண்மை' யென்றதினால், அது இனவுறவுபோற் சிறந்ததென்பது பெறப்படும். மேலோர் நட்பு வரவர வளர்தற்கும் கீழோர் நட்பு வரவரத் தளர்தற்கும், அவரிடத்திற் பண்பாடு உண்மையும் இன்மையுமே கரணியம். 'நட்பு' ஈரிடத்தும் பால்பகா வஃறிணைப்பெயர். நட்டார் பன்மையால் நட்பும் பலவாயின.
கலைஞர் உரை:
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.
Translation
Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
Explanation
The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
Transliteration
Niraineera Neeravar Kenmai Piraimadhip Pinneera Pedhaiyaar Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >