LOGO

வரலாற்றில் இன்று-[ 25 ஏப்ரல் 2024]

தமிழ் சிறுகதையின் முன்னோடி எனப் போற்றப்படுகிற எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த தினம் இன்று.

மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் மறைந்த தினம் (1989)

தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கவே வாழ்ந்து,தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள்  பல செய்து தானே தமிழாகிவிட்ட மூதறிஞர் மாணிக்கனார்.

இவர் பிறந்தது புதுக்கோட்டை மாவட்டம் மேலை சிவபுரியில்,தாய்-தந்தையர் சுப்பையா --தெய்வானை என்போர்.இவரின் பிறந்த நாள் 17.04.1917.

தொடக்கத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று எழுத்தறிவு பெற்றார்.சிறு வயது முதற்கொண்டு இவரது தமிழ் ஆர்வம் மிகையாக இருந்தது.பண்டிதமணி கதிரேசன் செட்டியார்,மேலைசிவபுரியில் பழனியப்ப செட்டியார் ஆகியோரின் உறவு இவரது தமிழ் ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது.அண்ணாமலைப்  பல்கலைக் கழகப் புலவர் வகுப்பில் சேர்ந்து முதன் மாணவனாக இவர் தேர்ச்சி பெற்றார் என்றால் அதற்குக் காரணம் கடினமான உழைப்பு மட்டுமே.இந்தப் படிப்பு முடிந்ததால் அடுத்து ஆய்வு மாணவன்----இதைத் தொடர்ந்து அந்தப் பல்கலைக் கழகத்திலேயே தமிழ் விரிவுரையாளர் பதவி----அந்தப் பணியில் தொடர்ந்து  ஏழாண்டுகள் இருந்தார்.பணி செய்துகொண்டே தனது படிப்பையும் தொடர்ந்தார்.பி.ஒ.எல்.,எம்.ஏ., பட்டங்களைப்பெற்றார்.---ஆய்வுப்பணி தொடர்ந்தது.---பிஎச்.டி.,பட்டம் இவரை வந்தடைந்தது.

காரைக்குடி அழகப்பர் கல்லூரி இவரை அழைத்தது.அங்கு தமிழ்ப் பேராசிரியராக  இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.இந்தக் காலத்தில் பல அரிய தமிழ் நூல்களைப் படைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மீண்டும் இவரை அழைத்தது.1970-இல்  அங்கு சென்று  தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணி ஏற்றுத் தன துறை சார்பாகப் பல கருத்தரங்குகள் நடத்தினார் .சிலப்பதிகாரம், மணிமேகலை,தொல்காப்பியம் போன்ற நூல்கள் பற்றி கட்டுரைகள் எழுதவைத்து அறிஞர்கள் பலருக்கு ஊக்கம் அளித்தார்.முனைவர் பட்டம் பெற பலரை முயற்சி செய்யும்படித் தூண்டினார்.

இவரது குடும்பத்தினர் காரைக்குடியிலேயே   இருந்தனர்.இவர் மட்டும் தனியாக விருந்தினர் மாளிகையில் இருந்து கொண்டு கல்லூரிப்பணிகளைச் செய்து வந்தார்.இவர் கம்பன்,வள்ளுவன் ஆகியோரைப் பற்றியும் சிற்றிலக்கியங்கள் பற்றியும் செய்த சொற்பொழிவுகள் காலத்தை வென்ற கருத்துக் குவியல்களாக விளங்கின.இவருக்கு டி .லிட்.,பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கியது.குன்றக்குடி ஆதீனம் "முதுபெரும் புலவர்" என்ற பட்டத்தைக் கொடுத்தது.மேலைசிவபுரி சன்மார்க்க சபை "செம்மல்" என்கிற பட்டத்தை நல்கியது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியும் இவரைத் தேடி வந்தது.இவர் தன் புதிய பதவிகளைத் துணையாகக்கொண்டு தமிழ்த்துறையை வளர்த்தார்.பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும்,ஊழியர்களுக்கும் வீடு கட்டிக்கொள்ள நிதி உதவிகள் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார்.வீண் செலவுகளைக் குறைத்து,வருவாயைப் பெருக்கி,பல்கலைக் கழகத்தின் நிதி ஆதாரங்களைப் பலம் கொள்ளச் செய்தார்.

மாணிக்கனார் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.தனது அலுவலகத்தில் கையூட்டு பெற என்றும் அனுமதிக்காதவர்.தனது அன்றாட வேலைகளை இவர் தானே செய்துகொள்ளும்  பழக்கம் கொண்டவர். இவர் வாழ்க்கை கிட்டத்தட்ட காந்திய நெறி கொண்டதாக அமைந்துவிட்டது.

தமிழ் வழிபாடுதான் தெய்வ வழிபாடு என்பது இவரது கொள்கை.தன் வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் தமிழாகவே இருக்கவேண்டும் என்ற நிலையான ஆர்வம் கொண்டு இந்தப் பெரியவர் தன மகன்களுக்கு தொல்காப்பியன்,பூங்குன்றன்,பாரி என்றும் மகள்களுக்கு தென்றல்,மாதரி,பொற்றொடி எனவும் பெயரிட்டிருந்தார். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற கருத்துக்கு இவர் உடன்பாடு கொண்டவராக என்றும் இருந்ததில்லை.

பிறமொழிச் சொற்கலப்பு தமிழுக்கு நலன் தராது என்கிற எண்ணம் இவருக்கு இருந்தது. தமிழ் ஆசிரியர்களை இவர் மிகவும் நேசித்தார்.அவர்களைப்பற்றிக் குறை கூறுதல் இவருக்குப் பிடிக்காத ஒன்று.   தமிழ் இயக்கத்துக்கு வித்திட்டவர் மறைமலை அடிகள்;அதை வளர்த்தவர் பாவாணர்;தழையச் செய்தவர் மாணிக்கனார் என்று அந்தக் காலத்தில் இவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். இந்தத் தமிழ்ப் பேரறிஞர் தமிழ்ப் பணிக்காகப் புதுவை சென்றபோது 25.04.1989 அன்று இரவு 11 மணிக்கு தமது 72-ஆவது  அகவையில் பூத உடல் நீக்கிப் புகழ் உடல் மேற்கொண்டார்.

உலக மலேரியா தினம்

ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல், மலேரியா தினமாக ஏப்ரல் 25ஐ அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

  • Follows us on
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • youtube
Thirukkural Mobile App
ValaiTamil Academy
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத்  திருக்குறள் முற்றோதல் பயிற்சி - நாள்  1100  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி - நாள் 1100
133 பேர் 133 திருக்குறள் அதிகாரங்களை மனனமாக முற்றோதல் செய்தல்  133 பேர் 133 திருக்குறள் அதிகாரங்களை மனனமாக முற்றோதல் செய்தல்
  "இன்றைய சூழலில் மாணவச் செல்வங்களை உயர்த்தக் கூடியது திருக்குறளே" || திருக்குறள் முழக்கப் போட்டி
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்   இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் "19ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா" - நாள் 4
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்   இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் "19ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா" - நாள் 3