LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - என்னுரை

திருக்குறள் தமிழர் வாழ்விற்குப் பால், மருந்து, படைக்கலம், விளக்கு!  தமிழ்ப் பண்பாட்டின் பதிவு; தமிழர் அறிவியலின் விருந்து; தமிழ் அறத்தின் பிழிவு; ஒழுக்கத்தின் திறவுகோல்; நாகரிகத்தின் தொட்டில்; கல்வி;யின் கருவூலம்; தமிழர் தொன்மையின் நுண்ணோக்கி!

திருக்குறளைப் புகழாதார் யார்? திருவள்ளுவரிடம் மயங்காதார் யார் வுழிவழி வளரும் குறள் விரும்பிகளுள் நானும் ஒருவன்!

திருக்குறளுக்குப் பதின்பர் உரைகண்ட பிறகும் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலத்தில் பாவலர்,நாவலர், அறிஞர் ஆசிரியர், சிந்தனைச் சிற்பிகள், புரட்சியாளர், புதுமைப்பித்தர்கள், எழுத்தாளர், தமிழ்நாட்டார்,பிறநாட்டார் எனப் பலரும் புதிய புதிய உரைகளை வகுத்துள்ளனர் என்பதைத் உலகம் நன்கறியும்! உரைகளின் பெருக்கம் திகட்டு நிலையை எட்டிவிட்டது என்று சொல்லலாம்; இச் சூழ்நிலையில் எனது முயற்சி எல்லாக் குறளுக்கும் புது உரை எழுதுவதன்று; சில குறளுக்கு என்னால் புதிய விளக்கம் தர முடியும் என்னும் நம்பிக்கை தோன்றியது; அதன் விளைவே இந்த ஆக்கம்! ஓர் இருபத்தேழு குறளுக்கு மட்டுமே அவ்வண்ணம் எழுதமுடிந்தது; அவற்றுள் சில விளக்கமாக அமையாமல், திருவள்ளுவர் சிந்தித்தது சரியா என்னும் கேள்விக்கணையாக மாறியுள்ளன; தசையில் பாயும் இரும்புக்கணையாக அன்று; மேனியை வருடிச் சிலிர்க்க வைக்கும் பூங்கணையாக! இது விளக்கமா, விமரிசனமா, உரையா, உரைவீச்சா, இது வள்ளுவருக்குப் பாராட்டா, பழியா, இதன் நடை உரைநடையா, உணர்ச்சிநடையா, கவிதை நடையா என்பனவெல்லாம் எனக்குத் தெரியா. வள்ளுவர் வாய்மொழியால் புகல்வதென்றால் மெய்ப்;பொருள் காணும் சிறு முயற்சி; குறளுக்கு அதிகாரப் பிடியிலிருந்தும் (அரசியல் அதிகாரம், குறள் அதிகாரங்கள்) பாலின் பிரிவினைகளிலிருந்தும் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்) விடுதலை வழங்கியுள்ளேன். அது சரியா, முறையா, பொருத்தமா என்பதைப் படிப்போர் முடிவு செய்யலாம்.

பல நூல்களைக் கற்றுணர்ந்த அறிவுடனும், வாழ்க்கை அனுபவத்துடனும் திருக்குறளை அணுகினால், அது மேலும் மேலும் கருத்தாழம் காட்டும் என்பது,  கல்வி கேள்விகளில் உயர்ந்த சான்றோர்களின் கூற்று; குறள் நவில்தொறும் நயம் நவிலும்!

வள்ளுவர் பெரியவர்; நான் சிறியவன். வள்ளுவர் வழங்கிய ஆடியின் ஊடாகத்தான் என்னால் உலகைப் பார்க்க முடிந்தது; புரிந்துகொள்ள முடிந்தது; அந்த ஆடி இல்லையேல் உலகம் எனக்கு இருள்தான்!

இந்த முயற்சியால் புகழோ ஒளியோ பெறவேண்டும் என்னும் தேவை குறளுக்கு இல்லை! இது குறளுக்குப் பெருமை சேர்க்காவிடினும் சிறுமை கூட்டாது என நம்புகின்றேன்.

வள்ளுவத்தை நான் எப்படிப் புரிந்துகொண்டேன் என்பதன் பதிவே இது; வியந்துநின்றேன் என்பதன் வெளிப்பாடே இது! குறளை மட்டும் அன்று; குறளுக்கு உரைகண்ட பரிமேலழகரின் விளக்கத்தையும்தான் (சில குறளின் விளக்கங்களைத் தவிர)! பரிமேலழகர் எம் மண்ணில் வாழ்ந்த, எமது மொழியில் எழுதிய மற்றோர் அறிவாளி!

வானமண்டல அறிவும், பஞ்சபூதங்களின் அறிவும், மருத்துவ அறிவும், தத்துவ அறிவும், கலைகளின் அறிவும், கட்டட அறிவும், கப்பல் கட்டும் திறமும், இசைநாட்டிய அறிவும் நிரம்பப் பெற்றிருந்தான் தமிழன் ஒருகாலத்தில்! தமிழரின் இத்தகைய அறிவியலைத் தெரிந்திருந்த தமிழன் வள்ளுவன் தனது சிந்தனையை வடித்தெடுக்கத் தமிழைத் தேர்ந்தெடுத்தது, தமிழ் மக்கள் பெற்ற தீய பேறுகளுள் ஒரு நற்பேறு! திருக்குறளைக் கழித்துவிட்டுத் தமிழை எண்ணிப்பார்க்க முடியுமா? அது மின்சாரம் இல்லாத உலகம்!

எனது விளக்கம் படிப்போரைத் திசைதிருப்பினாலும், வழிவழியாக வரும் குறளின் மரபான பொருளைக் குழப்பமின்றி அறிந்துகொள்ள வசதியாகப் பரிமேலழகரின் உரை அச்சாக்கப்பட்டுள்ளது. மரபில், பரிமேலழகர் மீதில் மதிப்பும் மரியாதையும் கொண்டவன் நான். திருக்குறளின் மாண்பினை வளர்த்தவர் அவர். அவருக்கு மாறுகொள எழுதுவது எனது நோக்கமன்று. எனது விளக்கம் கூடுதல் விளக்கமாக அமைந்திருந்தால், அது நலம்; எனது விளக்கம் சரியற்றது எனக் கருதுவார்க்குக், குறளின் மரபான பொருள், பரிமேலழகர் வாயிலாகக் கிடைத்துவிடவேண்டும் என்பது எனது ஆவல். நம் காலம் அறிவியல் காலம் என்பதால் சில குறளுக்கு அறிவியலைச் சார்ந்து விளக்கம் தர முற்பட்டுள்ளேன். பலரும் திருவள்ளுவரின் தாள்களுக்குப் புகழ்ச்சிமலர் தூவி வணங்கிடும் வேளையில், எனது முயற்சி இகழ்ச்சிச்சேறு என்று ஆகிவிட்டால், அங்கே பரிமேலழகர் உரை மாசு நீக்கும் மணிநீராகப் பயன்படட்டும்!

இது வள்ளுவருக்கு நான் செய்யும் வணக்கம்!

முனைவர்.கி.செம்பியன்    (தொடர் தொடரும்.....)


by Swathi   on 10 Jan 2016  0 Comments
Tags: தமிழர்   உலகளந்த தமிழர்   திருக்குறள்   திருவள்ளுவர்   முனைவர்.கி.செம்பியன்   K.Sembian   Thiruvalluvar  
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!! பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!!
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்! ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்!
தமிழர்களின் 12 வகையான உணவுப் பழக்கங்கள்!! தமிழர்களின் 12 வகையான உணவுப் பழக்கங்கள்!!
ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது? ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.