LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வண்ணதாசன்

ஓர் உல்லாசப் பயணம்

எப்போது நினைத்தாலும் போகலாம்.
அவ்வளவு பக்கத்தில்தான் இருக்கிறது வாய்க்கால். குளிக்கிறதற்காகப் புறப்பட்டவர்தான் இங்கேயே நின்றுவிட்டார். நடையிறங்கக் கால் வைக்கும்போது, மேட்டுப்பள்ளிக்கூட வாத்தியார் எதிரே குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். பாலாய்த் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்ட பசுவும் கன்றுக்குட்டியும் தன்னடையாய் முன்னே போய்க்கொண்டிருந்தன. இவரைப் பார்த்ததும், ஒன்றே ஒன்றை மாத்திரந்தான் கேட்பதற்கு நேரம் இருந்தது போல் ‘என்ன பையனை விறகுக் கடையில பார்த்தேனே, குற்றாலம் எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்பலையா?’ என்று நடையில் நின்றவரைப் பார்த்துக் கேட்டார். பசு தந்திப் போஸ்ட் பக்கம் போய் நின்று கொண்டு ஒருமுறை இவரைத் திரும்பிப் பார்த்துக் கத்தியது. கன்றுக் குட்டி, எதிர்த்த வீட்டுக் சுவரோரத்தை மங்கலாய்த் தடவிக் கொண்டிருந்த ஊமை வெயிலில் நின்று சடசடவென்று உலுப்பிக் கொண்டது. தான் கேட்டதற்குத்தானே, என்ன பொல்லாத குத்தாலம்? இரண்டு மூணு நாளா இந்த ஊரே குத்தாலம் மாதிரித்தான் இருக்கு என்று பதிலும் சொல்லிக் கொண்டு போனார்.
ஆமாம், இரண்டு மூணு நாட்களாய் அடிக்கிற காற்றையும் சாரலையும் பார்த்தால், குற்றாலம் மாதிரித்தான் இருக்கிறது. இப்பொழுது கூட காலை பதினோரு மணி மாதிரியில்லை. கும்மென்று இருட்டிக் கிடக்கிறது. கிரகணம் பிடித்தது போல். எப்போதாவது பழுப்பு வெயில். அடிக்கிற காற்றில் பெருக்கிப் போட்டதுபோல் தெரு பளீரென்று கிடக்கிறது. நடமாட்டமே இல்லை. தெருக் கடைசியில் பார்த்தால், பைப்படியில் ஒரு வெள்ளாட்டுக் குட்டி மாத்திரம், காம்பவுண்டுச் சுவரொன்றில் நின்றபடி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. மறுபடியும் மறுபடியும் அதனுடைய சத்தம் ஒரு குழந்தையின் அழுகையைப் போலக் கேட்கிறது. பீடியிலை வாங்கிக் கொண்டு போன நீலப் புடவைக்காரி துப்பிவிட்டிருந்த வெற்றிலைச் சாறு சிவப்பாய்த்தரையில் குழம்பியிருக்கிறது. ‘வேப்பமுத்து இருக்கா, வேப்பமுத்து?’ என்ற ஒரு குரல் இந்தத் தெருவையும் அடுத்த தெருவையும் இணைக்கிற சந்திலிருந்து கேட்கிறது. ஒரே ஓர் அரச இலை காற்றில் பறந்து வந்து விழுந்து, தரையோடு தரையாய்ச் சருகிப் போகிறது. திடீரென்று பக்கத்து வீட்டு அடுக்களை அங்கணத்திலிருந்து கழிவு நீர் சிதறித்தெருவின் பாதிவரை, அந்த ஒற்றை அரசிலையைக் கவ்வுவது போல் கால்களாய் ஓடி விழுகிறது. முருங்கைக்காய் சக்கையும் கத்திரிக்காய்த் தோலுமாய்ச் சோற்றுப் பருக்கையோடு விசிறிக் கிடக்கிற அருவருப்பைப் பார்த்ததும் அவர் நின்றார். ‘இப்போ முருங்கைக்காய் சீஸனோ?’ என்று நினைத்துக் கொண்டார்.
தெருவின் வெறுமையைக் கலைத்துக் கொண்டு ஒரு சைக்கிள் அவசர அவசரமாகப் போயிற்று. ‘என்ன அவசரம் அப்படி?’ என்பது போல் சைக்கிள் போகிற திசையில் பார்த்தார். எதிரே விறகுச் சுள்ளிகளைக் கைக்குள் நெஞ்சோடு அணைத்துப் பிடித்தபடி வந்த அவருடைய மகனோடு மோதுவது போல், சடாரென்று சைக்கிளை வெட்டி, சரிந்துவிடுகிறாற் போல் ஒரு செருப்புக்காலைத் தரையில் தேய்த்து முக்கைத் திரும்பி மறைந்தது அது. சைக்கிளின் வேகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே வருகிற மகனைப் பார்த்ததும் இவருக்கு என்னவோ செய்தது. பனிரண்டு பதின்மூன்று வயதிருக்கும். எட்டுப் படிக்கிறான். அவனைத்தான் அவர் குற்றாலம் எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்ப முடியவில்லை.
மூன்று வாரங்களுக்கு முந்தி ஒருநாள் காலையில் எட்டரை மணியிருக்கும். சாப்பிடலாமா? என்று அடுக்களையைப் பார்த்துக் கேட்டதற்கு, இவளுக்குத் தலைபின்னி விடனும். சின்னதைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும். ஆத்துத்தண்ணி பிடிக்கணும், குடத்தைப் போட்டு வந்திருக்கேன். இவ்வளவு சோலிக்கும் மத்தியில் நீங்களும் ‘சாப்பிடலாமா சாப்பிடலாமா’ண்ணு சின்னப் பிள்ளையிலும் கேடாய்ப் பறந்தால் நான் என்ன பண்ண? எனக்கு என்ன ஏழு கையா இருக்கு?’’ என்ற படபடத்த பதில் கேட்டு அடங்கியிருந்த நேரம். அவருடைய பையன் தன்னுடைய புஸ்தகப்பையிலிருந்து ஒரு நோட் புத்தகத்தை எடுத்துக் கொண்டு இவர் பக்கம் வந்தான். கூப்பிட்டான். ஏறிட்டுப் பார்த்ததும் நோட்டைப் பிரித்து ஒரு சிவப்பு நிற நோட்டீஸை எடுத்துக் கொடுத்தான்.
‘’என்ன இது?’’
‘எக்ஸ்கர்ஸன் போறாங்க!’ இதற்குமேல் அவன் ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் காம்பஸ் பாக்ஸை எடுத்து நோட்டில் வட்டம் போட்டான்.அந்த வட்டத்திற்குள் ஒரு தாமரைப் பூவை வரைய ஆரம்பித்தான்.ஒரே ஒரு வளைகோடு மாத்திரம் விழுந்திருந்தது வட்டத்துக்குள்.
அவர் அந்த நோட்டீசைப் பார்த்தார். அது அவருக்கொன்றும் புதியதில்லை. கடந்த இரண்டு வருஷமாய் அவர் பார்த்ததுதான். அவன் படிக்கிற பள்ளிக்கூடத்தில், வருடந்தோறும் சுதந்திர தினத்தை ஒட்டி இப்படியொரு உல்லாசப் பிரயாணத்திற்கு ஏற்பாடு பண்ணுவதும், தொகைவாரியாய்ப் பெரிய ஊர்களில் ஆரம்பித்து ஒரு ரூபாய் என்ற கடைசியில் ‘லோக்கல் எக்ஸ்கர்ஷனில் முடிகிற பட்டியலை அவருக்குப் பாராமலே கூட சொல்ல முடியம்தான். போன வருடமே தான் அவனை, அடுத்த வருடம் கண்டிப்பாய்க் குற்றாலம் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். வைத்தியச் செலவு, கல்யாண வீட்டுச் செலவு, அது இது என்று இந்த வருடமும் வசதிப்படவில்லை. இதை நினைக்கையில் அவருக்கு வருத்தமாய் இருந்தது. ஒன்றும் ஓடவில்லை. கலங்கினாற் போல் அவனைப் பார்த்தார்.
என்ன தாமரைப்பூ வரையுதியா? என்று கேட்டார். ஆமா என்றபடியே பையன் அந்த எக்ஸ்கர்ஷன் அறிவிப்பு அச்சடித்திருந்த பேப்பரைப் பொன்னாய்ப் பூவாய்க் கசங்காமல் வாங்கி எதிலிருந்து எடுத்தானோ அந்த நோட்டிற்குள்ளேயே வைத்துவிட்டு மறுபடியும் வரைய ஆரம்பித்தான்.
ஒரு வார்த்தைக் கூடக் குற்றாலம் போகவேண்டும் என்று சொல்லவில்லை. எப்போ போகணும் என்று கேட்கவில்லை. இவருக்கு, அவன் அப்படியெல்லாம் கேட்கமாட்டானா, ‘குற்றாலத்திற்குத் தான் போவேன்’ என்று அழமாட்டானா, என்றிருந்தது. தேறுதலும் சமாதானமுமாய்த் தன்னுடைய நிலையை விளக்குவதற்குக் கூட வாய்ப்புத்தராத அவனுடைய மௌனம் ரொம்பக் கனத்தது. அவர் எதையோ சொல்லப்போகையில் ... அவன் தாமரைப் பூ நல்லாருக்காப்பா? என்று நோட்டை உயர்த்தி நீட்டினான்.
‘’ அங்கே என்ன ஊரலேயில்லாத கதை பேசி ஆகுதோ, தெரியலையே. என்னமோ ரயிலுக்குப் போகிற மாதிரி சாப்பிடணும் சாப்பிடணும்ணு அடிச்சுக் கிட்டேளே அப்பதை’’
‘’அம்மா, சாப்பிடக் கூப்பிடுதா’’ அவன் குனிந்தபடியே சொல்லிக்கொண்டு காம்பஸ் டப்பாவை மூடினான்.
‘’விறகைக் கொண்டுபோய் அடுப்படிக்குள்ளேயே போட்டிரு. மழை வரும்போலுருக்கு’’.. எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக அவனிடம் சொல்லியபடி, அவன் பின்னால் வீட்டிற்குள் போனார். 
இங்கேயிருந்து அடுப்படி வரை ஒரு நடை. வீட்டிற்குள் ஒரே இருட்டு. குழம்பு கொதிக்கிற காட்டமான வாடையும், காப்பிக்குக் கருப்பட்டி கொதிக்கிற வாடையும் ஒரே சமயத்தில் வந்து கொண்டிருந்தது. இப்போதுதான் விறகு வாங்கிப் போட்டவன் ஏதோ சில்லறையை எண்ணிப் பார்த்தபடி வெளியே மறுபடியும் போனான்.
தொட்டிலில் குழந்தை சிணுங்கியது. இவர் போனார். ‘’வார பாதையிலே அப்படியே லைட்டைப் போட்டுவிட்டு வாங்க. ஐப்பசி கார்த்திகை மழை இப்போதான் அடைச்சுப் பெய்யப் போற மாதிரி ஒரேயடியா இருட்டிக்கிடக்கு...அவனை எங்கே, பெரியவனை? சீயக்காய்ப் பொட்டலம் வாங்கிட்டு வாண்ணு அனுப்பினேன். போயேபோய் தொலைஞ்சுட்டான் போலுக்கு. சின்னது தொட்டில்ல கிடந்துக்கிட்டு ஈளு ஈளுண்ணு சிணங்கினால் இழுத்துவிடுகிறது யாருண்ணு தெரியலை...’’
இந்தச் சத்தத்தையெல்லாம் கவனிக்காமல், அவர் தொட்டிலை இழுத்துவிட்டார். அவர் இப்படி நிலையில்லாமல் வேலை செய்கிறதையும், அவனுக்கு சந்தோஷம் என்கிற விதத்தில் அவன் உள்ளூர விரும்புகிற குற்றாலத்திற்கு இந்தத் தடவையும் அனுப்ப முடியாமற் போனதையும் நினைத்து ரொம்ப வருந்தினார். இங்கேயே சாரலும் காற்றுமாய் இப்படி இருக்கையில், குற்றாலத்தில் அருவியல் தண்ணீர் என்னமாய் விழும் என்று நினைக்கையில், தானேகூட ஒரு தடவை குற்றாலம் போக வேண்டும் போலிருந்தது.
அது என்ன சத்தம்? மழையா விழுது? கொடியிலே ஈரத் துணியெல்லாம் காயப் போட்டிருந்தேனே. எல்லாத்தையும் வீட்டுக்குள்ளே அள்ளிக் கொண்ணாந்து போட்டா என்ன? இதையெல்லாம் சோற்றுப் பானைக்கு முன்னால நிற்கிற மனுஷி சொல்லிகிட்டா இருக்கணும்?’’
கொடியில் கிடந்த ஈரத்துணிகளையெல்லாம் கொண்டு வந்து வீட்டிற்குள்ளேயும், தார்சாவிலுமாய்ப் போடுகையில், சுவரோரமாய் ஒண்டி ஒண்டிக் கூடிய மட்டும் நனையாமல், கடையிலிருந்து அவருடைய பையன் வந்து கொண்டிருந்தான்.
மழை நன்றாக வலுத்துவிட்டது. வடக்கிற்கும் தெற்கிற்குமாய் சரிந்து சடசடவென்று கனத்துப் பெய்ய ஆரம்பித்த து. ஓட்டில் மழை விழுந்து இலேசான மணம் கிளம்பியது. நனைய நனைய ஓடு நீரை உறிஞ்சியது. பிறகு குளிர்ந்து துளிர்ந்தது. எப்போதோ வீசிய ஒரு பழைய, வட்ட பவுடர் டப்பாவின் மேல் தண்ணீர் விழுந்து இனிய சப்தங்களை உண்டாக்கியது. வாசலை ஒட்டிச் சொட்டுச் சொட்டாய் ஓட்டிலிருந்து நீர் குதித்து, அப்புறம் மழையின் வேகம் கூடக்கூடக் கம்பியாய்க் கொட்டியது.
‘’சதசதண்ணு ஈரத்தை மிதிச்சிட்டு வீட்டுக்கும் வாசலுக்கும் நடமாடி நாசம் பண்ணாதிய. ஒரு பழைய சாக்கை எடுத்துப் போடச் சொல்லுங்க அவனை. என்னமோ சுதந்திர தினம், கொடியேத்துண்ணு பெரியவளும், நடுவுள்ளதும் பள்ளிக்கூடத்துக்குப் போய் தொலைஞ்சுருக்கு. குடையை எடுத்துகிட்டுப் போய் அதைக் கூட்டிக்கிட்டு வாங்க நனைஞ்சுட்டு வந்து, அப்புறம் காய்ச்சல், மண்டை இடிண்ணு என் பாவம் பற்றப் போகுது.’’
பரண்மேல் ஏறிக் கிழிசல் சாக்கை எடுத்து, அவர் வாசலில் போடுவதற்குள், குடைகளை எடுத்துக்கொண்டு பையன் பள்ளிக்கூடம் போய்விட்டான். ‘இவன் ஏனிப்படி இந்த வயதில் எல்லாவற்றிற்கும் நான் நான் என்று நிற்கிறான்? மாட்டேன், முடியாது என்று ஏன் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை..’ இவருக்கு அவன் மேல் அன்பும் இரக்கமும் மிதந்தது. மனதே கப்பிப்போய், ஏதோ ஒரு துக்கம் நிகழ்ந்து போனது போல் தவித்தது. இருக்க முடியவில்லை.வாசலுக்கு வந்து மறுபடியும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தார்சா ஓரத்திலெல்லாம் ‘ஸ்ப்ரே’ பண்ணியது போல் சேலைக்கரையாய் மழைத்தண்ணீர் தெறித்திருந்தது. வெள்ளை வெளேரென்று ஒரு பல்லி அசையாமல் கீழ்ச்சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது. தரையில் தண்ணீர் கொப்புளமிட்டு ஓட ஆரம்பித்திருந்தது. ஒரு வாரியல் குச்சி, நேரே ஒரு படகைப் போல் மிதந்துபோய் அப்புறம் சற்றுத் திரும்பி அரை வட்டமடித்து அசையாமல் நின்றது. ஒரு காகம் எங்கிருந்தோ கரைந்தது. ஓட்டு மேலேயோ, எதிர் வீட்டு ஏரியல் கம்பியிலோ அல்லது திடுதிடுவென்று சத்தம் கேட்கும்படி விழுகிற அந்த வடிகால் குழாயிலோ உட்கார்ந்து, அது இறகைச் சிலுப்பிக் கொண்டிருக்கலாம்.
குழந்தைகள் வருகிற சத்தம் கேட்கிறது. வெளிறிப்போன சுத்தமான சின்னஞ்சிறு பாதங்களால் விளையாட்டாக, எதிர்த்து ஓடி வருகிற தண்ணீரைத் ‘திலாவி’ நடக்கையில் மழைத்தண்ணீர் ஒரு கண்ணாடிப் பாளமாய்ச் சுருண்டு விழுவது அழகாயிருந்தது. பெரிய பெண் குடைக்கம்பி முனைகளிலிருந்து உதிர்கிற சொட்டுக்களை ஒரு உள்ளங்கையில் ஏந்திச் சிரித்தபடி வருகிறது. குடையைப் பிடித்திருக்கிற கையால் தம்பூர் மீட்டுவது போல் குடையை மடக்கிப் பொருத்துவதற்கான கம்பி வளைவை டொக்டொக்கென்று அழுத்தி விடுத்தது. இப்போதும் சிரிப்புத்தான்.
வந்ததும், குடைகளை வாங்கி விரிந்த நிலையிலேயே கறுப்புக் காளான்களாகச் சுவரை ஒட்டிச் சாய்த்துவிட்டு...
‘’அண்ணன் தெருவாசல்லே நிற்காம்ப்பா, எதிர்த்த வீட்டுத் தட்டோடியிலேருந்து திடுதிடுண்ணு விழுதுல்லாப்பா, அதைப் பார்த்துக்கிட்டிருக்கான். இவ்ளோ உசரத்திலேருந்து ரொம்பத் தண்ணி விழுதுப்பா.’’ என்று கைகளைத் தூக்கியும் வாயைக் குவித்தும் அபிநய பூர்வமாய்ச் சொல்லியது.
‘’என்னது? மழைத்தண்ணி விழுகிறதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு நிற்கானா? வேடிக்கை என்ன வேண்டிக்கிடக்கு? நாலு குடம் தண்ணியைப் பிடித்து வைத்தாலவது, நாளையும் பின்னேயும் சோறு பொங்கிறதுக்கு ஆகும். ஆத்துத் தண்ணிக்குக் காத்துக்கிடக்கிற அலப்பரையாவது மிஞ்சும். அவனைக் கூப்பட்டு குடையைக் கையில் கொடுத்துத் தண்ணி பிடிக்கச் சொல்லக்கூடாதா?’’
உள்ளே போய் இரண்டு செப்புப் பானைகள் இரண்டை கைகளில் தூக்கிக் கொண்டு வந்தார். கைக்கு ஒன்றாய்த் தூக்கி கொண்டு தோளோடு கழுத்தைச் சாய்த்துக் குடையை அணைத்து முதுகில் ஏந்தி, வாசல் பக்கம் போனார். நடையில் பானைகளை இறக்கி வைத்தபடி, தண்ணீர் விழுகிற பக்கம் பார்த்தார்.
தண்ணீர் நிறையத்தான் விழுந்து கொண்டிருந்தது. எதிர்த்த வீட்டு மச்சுத் ‘தட்டோடி’ வடிகாலிலிருந்து தண்ணீர் இரண்டு உள்ளங்கை அகலத்திற்குப் பட்டையாய், பாதித் தெருவில் விழுகிற அளவுக்கு வேகமாய் வளைந்து விழுந்து கொண்டிருந்தது. அவருடைய பையன் அதில் கண்களை மூடி, இரண்டு கைகளையும் நெஞ்சோடு பின்னிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தான். வாய் மாத்திரம் அவ்வப்போது சிரித்துக் கொண்டும் தண்ணீரை வாங்கி வாங்கிக் கொப்பளித்துக் கொண்டுமிருந்து. அருவி விழது, அருவி விழுது என்ற வார்த்தைகளையே ஒரு ராகம் போல் பாடிக் கொண்டு, கால்களை மாற்றி மாற்றி உற்சாகமாய் அவன் ஆடிக்கொண்டிருந்தான். உச்சித் தலையில் தண்ணீர் விழுந்து, முடியெல்லாம் நெற்றியை மறைத்துக் கிடந்தது. சுவர்ப்பக்கமாய்த் திரும்பி முதுகைக் காட்டிக் குளித்தான். ‘ஹோய்’ என்று கைகளை உயர்த்திச் சத்தம் போட்டு, மேலே பார்த்துத் தண்ணீருக்கு எதிரே முகத்தைக் காட்டினான். மூடின கண்களைத் திறக்காமலேயே, குத்துக் காலிட்டு உட்கார்ந்து, தொண்டை நடுங்குவதுபோல் ‘பிள்ளை பிடிக்க வருகிறவன்’ மாதிரிச்சத்தம் கொடுத்துக் கூச்சல் போட்டான். கைகளைச் சேர்த்துத் தரையில் பதித்துக்கொண்டு, கையிலும் தலையிலும் மாறி மாறித் தண்ணீர் விழுகிற வகையில் முன்னும் பின்னும் சாய்த்து ஆடினான். கீழே இருந்து அங்குலம் அங்குலமாகக் கையை உயர்த்தித் தண்ணீரை மேல்நோக்கித் தள்ளுகிறபோது தரைச்சக்கரம்போல் உள்ளங்கைகளிலிருந்து பூப்பூவாய்ச் சிதறுகிற தண்ணீரை ரசித்தான்.
அவர் பார்த்துக்கொண்டே நின்றார். உள்ளுக்குள் மௌனமாய் மனதால் அழுதார். செப்புப் பானைகளையும் குடையையும் தூக்கிக்கொண்டு,நனைய நனைய வீட்டைப் பார்க்கப் போனார்.
‘’கையிலே செப்புப் பானையும் குடையுமா திரும்பி வந்தாச்சே என்ன விஷயம்? அவனைக் காணமா? அந்தக் கரிமுடிவான் இந்த மழையோட மழையாய் எங்கே போய்த் தொலைஞ்சான்?’’
இரண்டு வினாடி பதிலே சொல்லாமல் அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பின்பு தரையில் சாய்த்து வைத்திருந்த குடைக்கம்பி முனைகளின் வழியாய்க் கசிந்து. நூலாய்த் தண்ணீர் நெளிந்து பெருகுவதைப் பார்த்தபடியே கரகரத்துச் சொன்னார்.
‘’குற்றாலத்துக்கு’’

by Swathi   on 04 Apr 2013  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
18-May-2021 13:04:37 மீனாட்சி said : Report Abuse
பள்ளியில் பாடத்தில் படித்தேன் அருமை மிக அருமை
 
29-Nov-2018 18:26:40 Shyamala devi said : Report Abuse
Your short story very superb sir.my frnd recommended ur story sir so i will read it but very nice sir.good memorable story
 
19-Jun-2018 13:22:28 Sutha said : Report Abuse
Wow . Amazing . Plz . I want to audio vannadasan book plz. U have to any audio book. Plz send me . My email id . Suthakani801@gmail.com
 
13-May-2018 18:02:37 Ganesh said : Report Abuse
Really very superb story ..
 
22-Dec-2016 03:54:59 ayyasamy amuthan said : Report Abuse
solla vaarthaigale illai......... ennaal intha kathaiyai unara mattume mudigirathu......... fantastic
 
12-Jan-2016 04:09:00 PS SURESH said : Report Abuse
அருமை அருமை அருமை அருமை............
 
22-Aug-2014 05:30:53 பூபாலன் said : Report Abuse
நான் படித்து நெகிழ்ந்த கதைகளில் இதுவும் ஒன்று.நான் பனிரண்டாம் வகுப்பு பாடத்தில் படித்தேன்.என் பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.