LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்!

சிந்திக்கக்கூடிய ஒருவனை மன்னிப்பதைவிட பெரிதாக தண்டித்துவிடமுடியாது. சரி விடு நீதானே என்று ஏற்று அணைப்பதைவிட பெரிதாக வேறு வலியை தந்துவிட முடியாது. அப்படித்தான் சரோஜாவும் கனகனை முழு மனதோடு மன்னித்திருந்தால். அவன் எழுந்தால் எழுந்திருக்கவும், அவன் அமர்ந்தால் உடன் அமரவும், நிழலுக்குக் கூட பொறாமை ஏற்பட்டுவிடும்போல் அத்தனை அவனோடு உயிருக்கு உயிராகயிருந்து கனகனுடைய வாழ்வை மீண்டும் அவனுக்கே மீட்டுத்தந்தாள் சரோஜா.

கனகனுக்கு விழித்ததும்தான் அறுந்த கையும், வெடிக்குமென மருத்துவர் சொன்ன ஈரலும், எடுத்துவந்து வெளியேப் போட்ட துணியைப்போல வாசலில் இழுத்துவந்துவிட்ட மனைவியின் கண்ணீரும் தீயாய்ச் சுட்டது. தன்னைத்தான் நினைத்து நெக்குருகி போனானவன். பாழாப்போன இந்தக் குடியால் இந்த நிலைக்கு வந்துவிட்டோமே என்று மிகையாய் வருந்தினான். சிறு வயதில் கனகன் அவனைவிட குறைந்தவகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்பெடுத்து பாடம் நடத்துவதுண்டு. அப்போது எல்லோருக்கும் அவன் மிகஅழுத்தமாக ‘ஒரு செயலை வெல்வது என்றால் அதை எப்படி வெல்வது என்றுச் சொல்லித்தருவான். எதையும் முழுதாக நம்பவேண்டும் என்பான். எது சரியோ எது வேண்டுமோ எது முறையோ எது இச்சமூகத்திற்கு நன்மையைப் பயக்குமோ அதைக் கையிலெடுத்துக்கொண்டு வென்றுக்காட்டுகிறேன் பாரென்று, ‘மனதுள் சவாலை பிறப்பிக்கவேண்டும். பிறகு மெல்லமெல்ல அதை தான் வென்றுவிடுவதாய் நம்பவேண்டும். இரவும் பகலும் மனது அதை வெல்வதில் மட்டுமே ஆழ்ந்திருக்கவேண்டும் மென்பான்.

நூறு மெயில் தாண்டவும் ஒவ்வொரு அடியாகத்தானே போகவேண்டியுள்ளது, அப்படி ஒவ்வொரு அடியாக அறிவோடு நகர்கையில்; முயற்சிக்கையில்; எப்படிப்பட்ட சாதனையையும் மனிதனால் சாதித்துவிட முடியும் என்பான். இப்போது அவனுக்கு அத்தகைய உறுதி மீண்டும் மனதுள் வந்தது. சுயநினைவால் தான் செய்ததையெல்லாம் நினைத்து நினைத்து உருக இது தக்க நேரமாகயிருந்தது.

சரோஜாவிற்கு தெரியும். கனகன் அறிவாளி. வெறும் போதையின் போராட்டம்தானிது என்று அவளுக்குத் தெரியும். இந்த அடிமைபடுத்தக் கூடிய மதுவைத்தான் விடாது இந்த மனிதர்களும் இளைஞர் பெரியோரென பாராது சரிக்குசரியாக குடித்துமகிழ்கிறார்கள். ஏதேனும் மகிழ்ச்சிக்குரிய விழா என்றாலும் ஆறாத வலியென்றாலும் போதையை நாடுவதே நமது இளைய சமுதாயத்திற்கு கேடாக அமைந்துவிடுகிறது. இந்தப் பின்னோக்கித் தள்ளிவிடுகின்ற குடிப்பழக்கம் மட்டுமே அவனுடைய பிரச்னையுமென்று சரோஜாவிற்கும் தெரிந்திருந்தது. அதிலிருந்து அவன் வெளியே வந்துவிட்டால் அவனுடைய வாழக்கையையவன் வென்றுவிடுவானென்று அவள் நம்பினாள். அவனால் அது முடியுமென்றும் நம்பினாள். எங்கு அவன் கூடுதலாக நேற்று நடந்ததை நினைத்து வருந்திவிடுவானோ என்றெண்ணி அதைக்கூட அவனை எண்ணவிடாமல் வேறு ஏதேதோ புதிது புதிதாக பேசி அவனை வேறு சிந்தனைக்குத் திருப்பினாள்.

கனகனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்ப் பூத்தது. ஒவ்வொரு காலை விடிகையிலும் புது மனிதனாய் எழுந்தான். என்னால் முடியும், ஏன் ஒரு சாதாரண குடிப்பழக்கம்தானே அதை கைவிட என்னால் முடியாதா? அன்று அத்தனை நேர்த்தியாக வாழ்ந்த என் கண்ணியமான வாழ்க்கயை எத்தனை அலட்சியமாக விட்டெறிந்துவிட்டு இப்படி குடித்து சீரழிய துணிந்தேனே’ அதேபோல் இன்றிந்த குடிப்பழக்கையும் ஏன் என்னால் விட்டெறிய மூடியாது? முடியும். என்னால் முடியும், இனி வாழ்நாளின் எந்தச் சூழலிலும் மதுவையோ இல்லை எனை மயக்கும் எந்த போதையையோ தொட்டுவிடப் போவதில்லை என்று தனக்குள்ளேயே வைராக்கியதோடு சப்தம் பூண்டான் கனகன்.

ஆனால், காலமென்பது அப்படித்தான், சிலவேளை அது சரியாக இருக்கும். நாம் விளையாடுவோம். அது பொறுத்துக் கொள்ளும். சிலவேளை, நாம் சரியாக இருக்கவே எண்ணுவோம். அது விளையாடும், நம்மால் தாங்கமுடிவதில்லை.

இப்போதெல்லாம் காலம் கனகனை மிகையாய்த் தண்டிக்க ஆரம்பித்தது. தான் தன் கையை அறுத்துக் கொண்டதற்கு வேண்டுமெனில் அவன் அவனை மன்னித்து விடலாம். ஆனால் அவளைத் துன்பப் படுத்தியது ஒன்றோ இரண்டோ இல்லையே, பச்சை மண் குழந்தை அலற அலற குடித்துவந்தால் அடிப்பதும் பாத்திரங்களை போட்டு உடைப்பதும் வீட்டை ரெண்டாக்கி தெரு வரை தூக்கி வீசுவதும் தீரா பாவதிற்குள் அவனை தள்ளியப் பொழுதுகளல்லவா ?

அவையெல்லாம் இப்போது அவனுக்கு வலித்தது. பசித்தால் வலி. தின்றால் வலி. இனிப்பு சாப்பிட்டால் வலி. காரமென்றாலும் வலி. சூடாக தின்றால் வலி. கடினமாக கடித்தாலும் வலி வலியென ஈரல் புற்றுநோய் அவனை பாடாய் படுத்தியது. மருத்துவமணை போனாலே பயந்தான். ஒவ்வொரு மருத்துவமனை ஒவ்வொன்றைச் சொன்னது. நேற்று ஒரு மருத்துவசோதனை செய்திருந்தாலும் அடுத்தநாள் இன்னொரு மருத்துவரிடையே செல்கையில் மீண்டும் அவர் ஆதியிலிருந்து எல்லா சோதனையையும் செய்யவேண்டுமென்றார். இப்படியே ஒவ்வொருவரும் போகுமிடமெல்லாம் சொன்னார்கள். எல்லாவற்றிற்கும் பணத்தை கத்தைக் கத்தையாய்ப் பிடுங்கினார்கள். “லிவரில் புற்றுநோயில்லையா அதனாலிப்போ சுகரும் கூடிப் போச்சு, பிரசர் அப்நார்மலா இருக்கு, கொலஸ்ட்ரால் நிறைய ஏறிடுச்சி எந்த நேரம் வேண்டுமானாலும் ஆர்ட் அட்டாக் வரலாம். இப்படியா குடிப்ப ? செத்தியினா உன் குடும்பம் தெருவில் நிற்கும் தெரியாதா?” என்று ஏசினார்கள்.

மரணமா? மரணம் வரைக்குமா விளையாடி விட்டேன். ஒருவேளை நான் இறந்துவிட்டால் என் சரோஜா எங்கு போவாள்? என் ரத்னாவை எல்லோரும் அப்பா இல்லாதவள் என்பார்களே ச்ச என்ன முட்டாள்தனமிது(?) படித்துமிப்படி பாழுங்கினற்றில் விழுந்தேனே(?)

இதோ கொஞ்சம் கொஞ்சம் குடி, கசக்கும்தான் குடி சரியாகிடுமென்றுச் சொல்ல’ அதும் ஒரு நாளைக்கென தொட்டுப்பார்த்ததன் குற்றம்தான் இன்று என் வாழ்விற்கு முடிவுகால மணியடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பீர்தானே வா குடித்தால் சொர்க்கத்தில் மிதக்கலாம் என்றுச் சொன்ன நண்பர்களை அன்றே விட்டு ஒதுங்கியிருந்திருந்தால் இன்று எனக்கு மரணத்தைக் கண்டு பயப்படவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

யார் இறக்காமல் இருப்பர்? மரணம் ஒருநாள் எல்லோருடைய வீட்டின் கதவையும் தட்டவேச் செய்யும். அதை முழுமையாக உணர்ந்து அறிவோடு வாழ்ந்தால் பிறக்கையில் அழுதுபிறக்கும் மனிதன் இறக்கையில் சிரித்துக்கொண்டு சாகவும் துணிச்சல் வரும். ஆனால் பாவி நான்’ என் குழந்தைக்கும் காதலித்துக் கண்டிக்கொண்ட என் சரோஜாவிற்கும் வருத்தத்தையே கொடுத்திருக்கிறேன். என்றெல்லாம் கனகன் மனக் கண்ணீருள் மூழ்கியிருக்க தோள்மீது ஒரு கை ஆறுதலாக வந்து தொட்டது. கனகன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

“வணக்கம், நீங்க அந்தக் கனகன் தானே..?”

அவனுக்குப் புரிந்துவிட்டது அவர் முதலமைச்சரை வரவழைத்ததைக் கேட்கிறாரென்று. சற்று வெட்கத்தோடு ஆமாம் அந்த குடிகார கனகன் நான்தான் என்றான்.

“ஏன் ஏன் திடிரென இத்தனை விரக்தியா பேசுறீங்க? நீங்க பெரிய ஆளு இல்லையா? ஒரு முதலமைச்சரை நேரில் சென்றுப் பார்ப்பதே பெரிய விஷயம். ஆனா அவரையே உங்களை வந்துப் பார்க்கச் சொல்லி பாதி மதுக்கடைகளை மூடவெச்சீங்களே அது சாதனை இல்லையா?”  

கனகன் திடுக்கிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.

“நீங்க யாருன்னு தெரிந்துக் கொள்ளலாமா?”

“நான் ஒரு மருத்துவன். ஏழைகளுக்கு உதவுவதை லட்சியமாகக் கொண்டவர் எங்கள் அப்பா. படித்தால் மருத்துவம்தான் படிக்கணும். மருத்துவன்னா மருத்துவத்தை சேவையாதான் கருதனும்னு சொல்லி சொல்லி வளர்த்தார். அதன் விளைவுதான் ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டி இங்கதான் ஆமுல்லைவாயல் னு ஒரு கிராமம் அதுல சந்தோசமா வாழ்ந்துன்ருக்கோம்”

கனகன் அவரது கைகளை கால்போல எண்ணி கட்டிக்கொண்டான்.

“பெரிய ஆளு சார் நீங்க.. “

“ச்ச ச்ச.. மனிதம்னா என்ன மனிதர்களை புரிவது, மனிதர்களுக்காக வாழ்வது, வேறொன்றும் பெருசா செய்ய நம்மிடமில்லை..”

சரோஜா சட்டென அவனுடைய காலில் விழுந்தாள். அழுதாள். கதறினாள். ஐந்தாறு நிமிடத்துள், கனகன் பற்றி நோய் பற்றி மருத்துவர்கள் சொல்வது பற்றியெல்லாம் எடுத்துவாறிக் கொட்டிவிட்டாள்.

அவர் பிற மருத்துவர்கள் பரிசோதித்துகொடுத்த அத்தனை மருத்துவக்குறிப்பு மற்றும் சோதனைப் படிவங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தார். ஒரு தேநீர் கடையில் அமர்ந்து பேசினார்கள்.

“இது ஒன்றும் பெரிய தீராத நோயில்லை கனகன்”

“கேன்சர் என்கிறார்களே? செத்துருவேன்னு வேறு..”

“அதலாம் சும்மா. பழைய கதை. இது கேன்சர் தான். ஆனா கேன்சர்ன்னா என்ன? புண், அது வரக் கூடாத இடத்துல வந்து நாம கவனமில்லாம இருந்தோம்னா அது மெல்ல உடம்பெங்கும் பரவி இரத்தம் எலும்புன்னு மொத்ததிலும் கலந்துபோகும். அதற்குப் பின் அதை ஒன்றும் செய்யமுடியாது. அதே அதை ஆரம்பத்திலேயே கண்டு சரியான மருத்துவம் பார்த்து, ஏன் வெறும் இயற்கை மருத்துவம் பார்த்து உடற்பயிற்சி செய்து முறையாக சாப்பிட்டு நேரத்திற்குத் தூங்கி எழுந்தால் உடல் தானே தன்னை சரிசெய்துக்கொள்ளும்”

“அவர்களெல்லாம் செத்துடுவார்ன்னு சொல்றாங்க சார், அவர் இல்லைனா நாங்க இல்லை..” சரோஜா கண்ணீர்விட்டு பேசினாள்.

“இவர் கொஞ்சம் கூடித் தான் போய்ட்டார்மா. ஆனால் குணமாக்கி விடலாம். துளசி இலை தினமும் எடுத்துக்கோங்க. தண்ணி நிறைய குடிங்க. உப்பு காரம் புளிப்பு இனிப்பு எல்லாத்தையும் முடிந்தளவு குறைங்க. ஏன்னா கேன்சரை விட கொடுமையானது இந்த நீரிழிவு நோய். அதான் இந்த சுகர். அது இருக்கவரையும் உடம்புல எதையும் குணமாக்கவிடாது. குறிப்பா அதனால் புற்றுநோய் தீருவது கொஞ்சம் கூடுதல் கடினம். எனவே நீங்கதான் அதிக கவனமா இருக்கணும். ஆனா நம்பிக்கையோடு இருங்க..”

---------------------------X-----------------------------------X--------------------------

மனிதர்கள் இப்படித்தான் சிலவேளை தெய்வங்களாக தெரிவார்கள். தெய்வமாகும் சக்தியை அறிவை இயற்கை மனிதருக்குள்தான் அதிகம் வைத்திருக்கிறது. வேறென்ன தெய்வமென்பது? கேட்டதும் கொடுக்கவல்லதும் மேல் கீழ் பாராது தருவதும்தானில்லையா? வரத்தை தருகிறேன் என்று வந்து எந்த சாமியும் நேரில் தருவதில்லை. பெற்றுவிட்டதாய் நாம்தான் நம்பிக் கொள்கிறோம். உண்மையில் பெறமுடியும் என்று நம்புவதற்கே சாமி தேவைப்படுகிறது. நம்பிவிட்டால் அத்தனையும் கிடைத்துவிடுகிறது.  ஆனால் அதை உணராமல் நாம் ‘அவசரத்தில் சட்டெனவந்து உதவுமென்றுதானே சாமியை மாயத்துள் வைத்திருக்கிறோம்? ஆனால் மனிதர்களை மிஞ்சிய தெய்வமில்லை. தெய்வம் என்பது மனிதத்துள்லிருந்தே எழுகிறது. மனிதன் தன்னைப் பக்குவப்படுத்த படுத்த எரிய எரிய ஒளிரும் விளக்கைப்போல வெளிச்சம் பீறிடும் சோதியாகிறான்.

அதை உணர்ந்தவர்களால் உயிர்களின் மீதான கருணையை பாகுபாடின்றி பொழியவைக்கமுடிகிறது. இந்த மருத்துவர் ரகுநந்தன் அப்படித்தான் இருந்தார். கடவுளை வெகு சாதாரணமாக்கிவிட்டுச் சென்றார். மரணம் வந்தால் வரட்டும், உங்களால் வேறென்ன செய்திடமுடியும்? வராதே என்று நிறுத்த முடியுமா? பிறகு முடியாததை நினைத்து வருத்தமேன் படுவானேன்? நமது கடமை வாழ்வது. வாழுங்கள். நானிருக்கேன் என்று உறுதி தந்தார்.

கனகனால் அவரை நன்கு உணரமுடிந்தது. உள்ளேப் பாய்ச்சிய உத்வேகத்தோடு ஒவ்வொரு நாட்களையும் கடந்தான். தொடர்ந்து அவருடைய மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்த்துக்கொண்டார்கள். இருப்பது ஒருநாளோ இரண்டு நாளோ அந்த நாட்களை முழுமையாக வாழ்ந்திட முடிவுகொண்டான் கனகன்.

எப்படியோ அலைந்து யார்யாரையோ பிடித்து ஒரு பெரிய கன்சல்டன்சி கம்பனியில் சேல்ஸ் மேனாக வேலைக்கு அமர்ந்தான். நடந்து நடந்தே பாதி நோயைத் தீர்த்துக்கொள்ள அந்த வேலை அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. கொஞ்சநாளில் இருந்த பழையவீட்டை விற்றுவிட்டு ரகுநந்தனின் மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு புதிய வீடெடுத்துத் தங்கிக்கொண்டார்கள். காலையிலும் மாலையிலும் அங்கிருந்த நோயாளிளை வெளியே உலாவி நடக்கவைத்து கூடவே தானும் நடந்தான் கனகன். உதவிசெய்யும் மனப்பான்மையில் தன்னையும் தானே சரிசெய்து வந்தான் கனகன்.

வேலைபோக எஞ்சிய நேரம் முழுவதும் மருத்துவமனையில் தங்கி அங்கு வரும் போகும் வயதான பெரியவர்களுக்கு தமிழில் சீட்டு எழுதி தருவது, இடம் தெரியாது தவிப்பவர்களை கொண்டுபோய் அங்கே சரியாக விட்டுவருவது, நோயாளிகளிடம் சென்று இதலாம் ஒன்றுமில்லை எல்லாம் சரியாகும் தைரியம் வேண்டும், மனதில் உறுதி வேண்டும் என்று பேசி பேசி நம்பிக்கையை வரவழைத்துத் தருவதென முழுக்கமுழுக்க சேவை மனப்பான்மையோடு வாழ்க்கையை மருத்துவமனையிலேயே அமைத்துக்கொண்டான்.

கொஞ்ச நாளிள் சரோஜாவும் கனகனும் சேர்ந்து வீட்டிலேயே பகுதிநேர வகுப்பெடுக்க ஆரம்பித்தார்கள். நன்றாகச் சொல்லித்தருவதாகக் கேட்டு பிள்ளைகள் நாளுக்குநாள் அதிகமாக கூடியது. ஆட்கள் கூடகூட தனியே வேறு ஒரு பெரியவீட்டை வாடகைக்குப் பார்த்தார்கள். இதை நீ செய் இதை நான் செய்கிறேனென்று பிரித்துக்கொண்டு உதவிக்கு புதிய ஆசிரியர்களையும் உடன்சேர்த்துக்கொண்டு எல்லோருமாய் ஒட்டுமொத்தமாக வளர்ந்தார்கள். நாட்களின் நீளத்தில் அதுவே ரகுநந்தனின் தந்தையின் பெயரில் ஒரு நல்லப் பள்ளிக்கூடமாக மாறியது. மிகப் பெரிதாக அந்தப் பள்ளிக்கூடம் பேசப்பட்டது. கனகன் என்றாலே ஆம் அந்த “ராசையா” பள்ளிக்கூடத்தை உருவாக்கியவரென்று மிக மதிப்போடு பேசப்பட்டான் கனகன். கனகனை ஊர்ஊராய் பேச அழைத்தார்கள். எங்கு பேசினாலும் கனகன் தனது குடித்துஅழிந்த நாட்களைப் பற்றி முக்கிய உதாரணமாக வைத்துபேசினான். மருந்துக்குகூட மதுவை வாயில் வைக்காதீர்கள் என்றான். அதுதான் விசமாயிற்றே பிறகு அதை ஏன் தொட்டுப் பார்ப்பானேன் ? என்றோ ஒரு நாளைக்கு மட்டும் குடித்துப் பார்ப்பானேன்? என்று பேசிய அவனுடைய மேடைப் பேச்சு ஊரெல்லாம் எடுபட்டது.

சரோஜா அவனை ஒரு பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டாள். அவள் இணையத்தில் படித்து படித்து செய்துதரும் பச்சைக்காய்கறிகளின் வகைப்பற்றியும் உணவு மற்றுமதன் உற்சாகத்தைப் பற்றியெல்லாம் கோர்வையாக சேகரித்து ஒரு புத்தகம் எழுதினான் கனகன். இயன்றளவு மாத்திரைகளை குறைத்துக்கொண்டு இயற்க்கை உணவாலும் உடற்பயிற்சியாலும் எப்படி தன் நோயை குணப்படுத்திக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை தருவதாய் அந்தப் புத்தகம் அமைந்தது.

வெகுவேகமாக விற்பனையாகி அந்தப் புத்தகம் அவனை இலக்கிய உலகிற்கு பெரிதாய் அறிமுகப்படுத்த மெல்ல நகர்ந்து அடுத்தடுத்த புத்தகங்களால் தன்னை செதுக்குவதும் படிப்போரை செதுக்கி நல்வழி படுத்துவதுமாய் வாழ்ந்து வாழ்க்கையை நன்னடத்தையின்வழியே செலுத்திக்கொண்டான் கனகன். நம்பிக்கைக்கு அவனை நட்சத்திரம் என்றுப் போற்றினர் மக்கள். அந்த நட்சத்திரநாயகனின் உழைப்பாலும் சரோஜாவின் அறிவாலும் சாதாரணமாகக் கட்டியப் பள்ளிக்கூடம் வேகமாக வளர்ந்து பெரியக் கல்லூரியாக மாறியது. ரத்னா வளர்ந்து அங்கேயே ஆசிரியை ஆனாள். விடுமுறைதோறும் மருத்துமனையில் உள்ள நோயாளிகளுக்கு முழுதுமாக சேவைசெய்தாள். எஞ்சிய நேரத்தில் அன்புண்டு கிடந்தார்கள் மூவரும். அப்பா மடியில் மகளும் மகளின் மடியில் சரோஜாவுமென அவர்களின் வாழ்க்கையை அவர்கள் நிம்மதியோடு வாழ்ந்தனர்.

கடைசியில் கனகனை மரணத்தால் ஒன்றுமே செய்திட இயலவில்லை. உண்மையில் வெறும் உடலாக இறப்பவர்கள்தான் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். மனதாகவும் அறிவாகவும் வாழ்பவர்கள் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அறிவோடும் திறனோடும் அவர்களால்தான் தனது உயிர்ப்பை உலகெங்கும் நன்மைக்கான விதைகளாய் தூவி விளைவித்துக்கொள்ள முடிகிறது. மரணம் மீண்டும் அந்தந்த நன்னடத்தையின் விதைகளின் வழியே நன்றாக வாழ்ந்தவர்களின் நினைவுகளைச் சுமந்து பிறந்துகொண்டேயிருக்கிறது. ஆக, மரணம் மட்டுமே மீண்டும் மீண்டும் இப்படி செத்துக்கொண்டுள்ளது. கனகனைப் போன்ற சரோஜாவைப் போன்ற ரகுநந்தனைப் போன்ற நல்ல மனிதர்கள் இம்மண்ணிலிருந்து அழிவதேயில்லை..

இனி எந்தக் கோப்பைக்குள்ளும் மது வேண்டாம். கண்ணீரும் வேண்டாம். கோப்பைகளை நன்னறிவால் கழுவிவிட்டு இவ்வுலகை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொள்ளுங்கள். நாம் நிரப்பினால் அது நிறையும்..

by Swathi   on 14 Apr 2016  1 Comments
Tags: Alcohol Protest   Oru Koppai   Kanneer   Madhu   கண்ணீர்   மது   மது ஒழிப்பு  
 தொடர்புடையவை-Related Articles
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!
கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன் கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன்
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்! ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்!
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3) ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38
கருத்துகள்
05-May-2016 04:58:04 nandinisree said : Report Abuse
உங்கள் கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது .. டைரக்டர் ஆக வேண்டுமென்று கோனேரிப்பட்டியில் இருந்து கிளம்பி வந்த கோமல் குமார் கோடம்பாக்கத்துக்குள் நுழையும் முன் கோமா ஸ்டேஜுக்கே செல்லும் காமெடித் தொடர் கதை..manam.online/Koneripatti-to-Kodambakkam-5
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.