LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..

அத்தியாயம் – 1


​“அடியே சரோஜா............ இங்க வாடி உன் புருஷன் வந்துட்டான்”
“பாழாப்போனவன் இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துட்டானா இவன் ஒழியவேமாட்டான்”
“ஏமா சும்மா போவியா..”
“என்ன போவியா? நாடு குடில நாசமாப்போவுதே உன் கண்ணுல வெக்கலையா?”
“உனக்கு வெச்சா நீ மூடிக்கோ’ உன் கண்ணை, போ போயி வேற வேலையைப்பாரு”
“இவனையெல்லாம் கொள்ளனுண்டி.. கூடவே உன்னையும் சேர்த்து கொளுத்தனும்.. அவன் குடிக்க வக்காலத்து வாங்குற பாரு”
“கொளுத்திட்டா தீர்ந்திடுமா? அவன் போனா என் புள்ளைங்களுக்கு நீ சோறு போடுவியா?
ஏதோ என் தலையெழுத்துன்னு நான் போறேன் அதலாம்விடு என் புருஷன் குடிச்சா உனக்கின்னா?”
“நாறுதுடி ஊரு.. குடிகார கனகன் இருக்கானே அந்தத் தெருவுன்றாங்க என்னையும் சேர்த்து”
“அட போமா, அவனைப்போய் கேளு போ”
“சரோஜா வீட்டுவாசலின் ஓரத்தில் அமர்ந்திருந்த கிழவிக்கு விளக்கம் சொல்லிவிட்டு கனகன் வரும் தெருநோக்கி ஓடினாள்..”
“அந்த தெருமட்டுமல்ல அந்த ஊருக்கே கனகன் இருக்க ஊருன்னா எல்லோருக்கும் நல்லா தெரியவரும் அந்தளவிற்கு கனகனின் குடிகாரசாதனைகள் அங்கே பிரபலமாகயிருந்தது”
ஒருநாள் அப்படித்தான் கனகன் ஒரு மதுபுட்டியை எடுத்துக்கொண்டு ஒரு மின்கம்பத்தில் ஏறிக்கொண்டான். உள்ளே அணிந்திருக்கும் கால்சட்டை வெளியே தெரிவதைப்பற்றியெல்லாம் கனகனுக்கு கவலையில்லை.
அவன்பாட்டிற்கு எதையோ புலம்பத்துவங்கினான். என்னடா ஏதோ வில்லங்கமா இருக்கேன்னு கிட்டப் போய் பார்த்ததும்தான் அவனுடைய புலம்பலைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோனார்கள்.
“எனக்கு இப்போ இந்த ஊரோட கலெக்டர் இங்க வரணும்..”
“ஏய் என்னப்பா இது, மேலேறி என்ன பண்ற?”
“நீ பேசினியினா கரண்ட தொட்ருவேன், கலெக்டரை வரச்சொல்லு போ”
“கலெக்டரா அவரு எதுக்குய்யா இங்கே நீ கீழ இறங்கு முதல்ல”
“வரணும் இப்போ வரணும்”
“வரலயின்னா..?”
“தோ தோபார் இப்படியே இந்த கரண்டுக்கம்பியைப் புடிச்சி இங்கயே தொங்கிடுவேன். நான் செத்துட்டா சாவுக்கு நீதான் பொறுப்பு”
அவன் மலைத்துப்போய் நிற்க -
“என்ன பார்க்குற? தொடமாட்டன்னு பார்த்தியா’ தோபார்...” ஏகதேசத்தில் கனகன் மின்கம்பியை எட்டி சடாரெனத் தொட்டு இழுக்கமுயற்சிக்க கனகனை தூக்கிவாரி கீழே வீசியது மின்சாரம்.


எல்லோரும் பயந்து ஒதுங்க, சற்றுநேரத்தில் இங்கு அங்கென்று சேதி போக மளமளவென கூட்டம் வந்து தெருவெல்லாம் கூடியது. அடுத்த சில வினாடிக்குள் கனகன் திமுறி எழுந்தான், எல்லோரையும் தள்ளிவிட்டுவிட்டு விருட்டென ஓடி நகர்ந்து இன்னொரு மின்கம்பத்தில் ஏறினான்“ஏய் புடி புடி புடிங்கப்பா அவனை’ நாசமா போனவன்’ ரெண்டு போடுங்க இல்லைனா” “இவ(ன்)ல்லாம் இருந்தென்ன தம்பி போய்சாவட்டும் விடு, நாய்வண்டி வந்து அள்ளிட்டுப்போகும்”
சிலர் இவனை முறைக்க, சிலர் திட்ட; எப்போடியோ எல்லோரும் ஒருவிதத்தில் ஓடிவந்து கம்பத்தின் கீழேநின்று கத்தினார்கள். கனகன் இம்முறை கூடுதல் கவனமாகயிருந்தான். அதெப்படியோ போதையில்கூட சிலர் அதும் இதுபோன்ற ‘தனைக் காத்துக்கொள்வதில் மட்டும் தெளிவாகவே இருக்கிறார்கள்...
கனகன் மேலேறி இம்முறை கம்பியை தொடவில்லை ஆனால் தொடுவதுபோல் அருகில் கொண்டுபோய் கையை வைத்துக்கொண்டான்.
எல்லோருக்கும் எங்கு மீண்டும் அவன் மின்கம்பியைத் தொட்டு உயிருக்கு ஏதும் விபரீதம் நேருமோன்னு பதட்டமாகவே இருந்தது. ஒருபக்கம் வாயிலிருந்து எச்சிலோடு ரத்தமொழுக பாதிபோதையில் கனகன் தான் பேசியதையே பேசிக்கொண்டிருந்தான்
தகவல் மெல்லமெல்ல காவல் நிலையம் ஊர் தலைவர்கள் என எல்லோரையும் சென்றடைய கூட்டம் கூடி நேரம் கடக்க ஆரம்பித்தது. கனகன் விடுவதாயில்லை.
“எனக்கு இன்னைக்கு இங்க இப்போ கலெக்டர் வரணும் வரலியினா இந்த முறை புடிச்சி இப்படியே தொங்கிடுவேன்..”
“ஏ ஏய் இருய்யா வாராரு நீ கூப்பீட்டவுடனே வந்துநிற்க அவரென்ன உன்வீட்டு வேலைக்காரனா ?” மாங்கனி லைன கட் பண்ணு ஆள கீழ தூக்கியாந்துடுவோம்”
“இல்லண்ணே ஏரியா ஃபுல்லாப் போய்டும் பெரிய பிரச்னையாகும், மெயின் லைன்ண்ணே இது” மின்சாரவாரியம் பேசிக்கொண்டது.
“ஏன் லைன மாத்தி விட முடியாதா?”
“ம்ஹூம் சிக்கலாயிடும், விடுங்க இங்க பக்கத்துல இருக்க கலெக்டர்தானே வரட்டும் நாமளும் பார்த்தமாதிரி இருக்கும்ல”
“இவனையெல்லாம் கொல்லனும்ய்யா’ நாலு கல்லை பொருக்கி அடிங்க நாய் தன்னால கீழயிறங்கும்..”
“நீ வேறப்பா இப்போதான் அந்தக் கம்பத்துல கரண்டை தொட்டுட்டு கீழவிழுந்தான், திரும்ப இதை புடிச்சி செத்துகித்து போனான்னா ?”
அந்நேரம்பார்த்து சரியாக அங்கே ஊர் தலைவர் வருகிறார். வந்ததும் பொறுமலோடு “சாவட்டும் குடிகாரந்தானே இவன் செத்தா நமக்கென்ன’ இவனுங்கள மொத்தமா வெச்சி கொளுத்தனும், அதுசரி யாருய்யா இவன்” என்கிறார்.
“அந்த மூலச்சந்து கனகன்ண்ணே முன்னகூட வந்து ரேசன்கடையில..........”
“ஓ.. அவனா; ஏய்யா இவனக் கொல்லணும்யா, அதலாம் தெரியுது குடிக்கிறது மட்டும் தப்புன்னு தெரியலையா ?”
அதற்குள் மேலிருந்து கனகன் கத்தினான் அவனுடைய லுங்கி கழன்று கீழே விழுந்தது சட்டை ஒருபக்கம் ஏறி இறங்கி ரத்தம் ஒழுகி கால்சட்டையோடு நின்று கத்தினான்.
“தலைவரே வந்துட்டியா ? ஏன் நீ குடிக்கலை நேத்தந்த பார்ல உட்கார்ந்து? பிரியாணி வாங்கித் தந்து கூட்டத்தைக் கூட்ற இங்க மட்டும் சவுண்டு உட்றியா ?”
“ஏய் அடிங்கையா அவனை..” எச்சில் தின்னும் கூட்டமும் நன்றிக்கு விசுவாசக் கூட்டமுமாக நான்கைந்துப்பேர் இங்குமங்குமாய் நின்று
“இப்போ என்னப்பா வேணும்..?”
“எனக்கு கலெக்டர் வரணும்..”

 


“ஏன்....?
“நீ என்ன கலெக்டரா? நீ கலெக்டருன்னாச் சொல்லு சொல்றேன்.. நீயே ஊரு கொல்லையில வீடு கட்டுற”
“கனகா நீ இப்போ கீழ இறங்கலைன்னா நாங்க உன்னை சுட்டுடுவோம்” அதற்குள் காவலாளிகள் ஆவேசமாகி துப்பாக்கியைக் காட்டினார்கள்.
“தோ.. சுடு.. சுடு.. நானே புடிச்சி தொங்குறேன் அப்புறம் சுடு..” மீண்டும் பக்கத்தில் கையைக் கொண்டுப்போயேவிட்டான், ஒரு கால் கீழே தொங்க’ ஏறி எட்டி சற்று அவன் கம்பியைப் பிடிப்பதுபோல் திமிர, ஒருநொடி யாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை
தலைவர் கத்தினார். “யோ.. யோவ்..., ஏயா விடுங்கையா அவன்தான் குடிச்சிருக்கான்ல.. தொங்கிட்டானா என்ன பண்ணுவ?”
அதற்குள் மேலதிகாரி ஓடிவந்தார். தகவல் கலெக்டர் காதுக்கு போய்விட்டதாகவும் அவரே வந்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். கனகனுக்கு வாயிலிருந்து ரத்தம் ஒழுகி காற்றில் பறந்து கீழுள்ளோர்மேல் காற்றோடு காற்றாக சாரல்போல் பட்டது.
“யார் ரவி இவன் ?” காவல் அதிகாரி தலைவரின் கூடயிருந்த இன்னொருவரைப் பார்த்துக் கேட்டார்.
“அவன் ஒரு படிச்ச பட்டதாரி சார். செமையா இங்கிலீஷ் பேசுவான். குடிச்சா பெரிய பெரிய தர்ம கதைல்லாம் சொல்லுவான். வேலை கிடைக்கலை கிடைக்கலைன்னு குடிசின்ருப்பான் எப்படித்தான் இதுக்கு மட்டும் பணம் கிடைக்குதுன்னு தெரியலை”
“கல்யாணம் ஆயிடுச்சா ?”
“ம்ம் மூணு புள்ளைங்க. அதுங்களையும் அவன் பொண்டாட்டியையும் பார்த்தா இந்தக் குடும்பமா இவன்னு இருக்கும் பார்க்க. அப்படி அழகான குடும்பம் இவனுக்கு. இந்த குடியாலதான் இப்படி நாசமா போறான்”
“ஆமா சார் நடுவுல கூட சுனாமி வந்துதுள்ள அப்போ இவன்தான் முன்னாடி.. போறது வரதுன்னு எல்லாம் இவன்தான் பார்த்தான் செய்தான். அதாலாம் பார்ப்பான் செய்வான்.. வீடு வீடா போய் எத்தனையோ லட்சம் வசூல் பண்ணா சார் இவன். ஆளு கொஞ்சம் குடிகாரனே ஒழிய கெட்டிக்காரன். இதைக்கூட எதனா காரணமா தான் செய்வானா யிருக்கும்”
“ஆமாண்ணே, சுனாமின்னு இல்ல’ பொது காரியம்னு எல்லாம் இறங்கிட்டா தீயா இருப்பான், குடிச்சிட்டானாதான் போச்சு; அப்போ கூட சுனாமியப்போ குடிகாரன்னு நிறையப்பேர் இவனுக்கு பணம் தரலை ஆனாலும் அங்க இங்கன்னு ஓடி அலைஞ்சி கெஞ்சி பிடுங்கி அவ்வளவையும் அஞ்சுகாசு விடாம அனுப்பிவைச்சான் சார். அதலாம் செய்வான் சார்.. நல்லவன் சார்.. அவன் குடிச்சாதான் போதை தலைக்கு ஏறிடுது”
ஆளாளுக்கு மாறி மாறி பேசிக்கொண்டார்கள். அவரவருக்கு தெரிந்ததை அவரவர் மாறிமாறி தலைவரிடமும் காவலதிகாரிகளிடமும் எடுத்துவைத்தார்கள். நேரம் ஆகா ஆக கூட்டம் வெகுவாய் கூடி இருந்தது. கலெக்டர் ஊருக்குள்ள வரார் அதை செய் இதை செய்னு கட்சி ஆளுங்க வேற ஒரு புறம் அவனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். “அவனை ஒன்னும் பண்ணாதீங்க, அவனே போதையில் இருக்கான்.., செத்துட்டா உயிர்பாவம் பொல்லாதது என்றெல்லாம் கலெக்டர் வரும் நேரம்பார்த்து பேசிக்கொண்டார்கள்.
இன்னொரு தரப்பு குடியைப்பற்றி வாதம் செய்துக்கொண்டது. குடிப்பது இப்பல்லாம் சகஜமென்றது. ஆம் சாவதுகூட சகஜம் தான். குடியினால் இறக்கும் ஒருவருக்குப்பின் அழியும் குடும்பத்தையும், முன் அவதியுற்ற மனைவி பிள்ளைகளையும் எல்லோருக்கும் முழுஅளவில் புரியாது. அப்பனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது, சமூகம் வைத்த பெயர். குடிகாரன் என்று பெயர். அதைத் தாங்கிப்போகும் பிள்ளைகளுக்கு நேரும் அவமானங்கள் எண்ணற்றவை. வாழ்வின் சறுக்கல்களும்’ சாதனை’ சந்தோஷம்’ முன்னேற்றம் போன்ற எதுவுமே சம்மந்தமற்று குடிகாரனின் மகனாக மட்டுமிருப்பது அனுபவிக்கையில்தான் தெரியும் பெருந்துன்பமென்று.
கனகனின் பிள்ளைகளும் அப்படியொரு அவதியில் ஓடோடி வந்தன. வந்து மின்கம்பத்தின் கீழே நின்று அப்பா அப்பா என்றுக் கத்தின.
 

 


கனகன் தலை தூக்கிப் பார்த்தான். வாயை துடைத்து விட்டான். ஒரு கையில் கம்பம் பிடித்துக்கொண்டு காலைத் தொட்டு லுங்கி இல்லையே என்றுப் பார்த்துக்கொண்டான். மனைவி சரோஜா தலையிலடித்துக் கொண்டு அழுதாள். கட்சித் தலைவர் வந்து ஆறுதல் சொல்கிறார். கூட்டம் அலைபாய்கிறது, இங்குமங்கும் ஓடுகிறது, காவலாளிகள் ஓடுகிறார்கள், நகரு நகருன்னு ஒரே சத்தம்.. எல்லோரும் கடல் விலகியதுபோல் வழிவிட்டு நீங்கி நிற்கிறார்கள். கூட்டத்தில் ஒருவர் பின்னே ஒருவர் இழுக்கப்பட்டு வேறொருவர் முன்னே வருகிறார். கலெக்டரைப் பார்க்காத நிறையப் பேர் எப்படி இருப்பாரோ அவரென்று தலையை எட்டி எட்டி பார்கிறார்கள்.
நான்கைந்து கார் வேகமாக சீறி வருகிறது. கலெக்டர் வருகிறார். முன்னாள் இரண்டு பேர் இரண்டு காவலாளிகளின் இரண்டுச் சக்கர வாகனத்தில் ஜம்மென்று அமர்ந்து வருகிறார்கள். நமது தேசியக்கொடி அண்ணாந்து பறக்கிறது. கட்சிப் போராளிகள் வேறு ஓடி கூட்டம் விளக்கி கூட்டம் சேர்த்து கோசம்போட்டு சேவகம் செய்துக் கொண்டிருந்தார்கள்..
கலெக்டர் வந்திறங்கி, காவலதிகாரியிடம் பேசி தலைவரிடம் பேசி “நல்லவந்தான் ஆனா இப்படி குடிப்பது மட்டும் தான் பிரச்சனை என்றுத் தெரிந்துக்கொள்கிறார். ரத்தம் ஒழுகுவதைப் பார்த்து கல்லெறிந்தவர்களை காவலாளிகளை நீங்கள் ஏன் தடுக்கவில்லை என்று கடிந்துக் கொள்கிறார் கலெக்டர்.
கனகனின் மனைவி பிள்ளைகளைப் பார்த்து வணக்கம் சொல்லி விசாரிக்கிறார். என் கனவனை ஒன்னும் பண்ணிடாதீங்கன்னு சரோஜாவும், ‘அப்பா பாவம் நல்ல அப்பா பாவமென அவனுடைய சின்னச் சின்னப் பிள்ளைகளும் அழுதன. கலெக்டர் சென்று மின்கம்பத்தின் கீழ் நின்று கனகனைப் பார்க்கிறார். கனகன் கலெக்டருக்கு வணக்கமும் நன்றியும் சொல்கிறான். ஆங்காங்கே காமிராக்கள் கண்ணடிக்கின்றன. எல்லோரும் அவரவர் கைப்பேசி வைத்து காணொளிப் பதிவு செய்கிறார்கள். வாட்சப் பேஸ்புக் என போடுகிறார்கள். ஊடகங்கள் தகவலறிந்து வந்து குவிகிறது.. எல்லோரும் ஒட்டுமொத்தமாய் கனகனைப் பார்த்துக் கொண்டிருக்க கனகனின் முனகல் மாறியது..
“கலெக்டர் சார்.. நீங்க போதாது எனக்கொரு ஏணி போடச் சொல்லுங்க” என்றான்..
“ஏணியா ஏன் ?”
“போதை இறங்க இறங்க கை வலிக்குது கலெக்டர் சார்
“அப்போ கீழிறங்கு கலெக்டர்தான் வந்துட்டாருல்ல”
“இல்லை எனக்கு ஏணி வேணும்”
அதற்குள் தூரயிருந்து ஒரு கல்வந்து கனகனின்மேல் விழுந்தது. கனகன் ஆ..வெனக் கத்திவிட்டான். கூட்டம் ஏய் ஓய் என்று கத்தி அவனை யாரென்று தேட கனகன் கையை மீண்டும் எட்டி கம்பியிடம்கொண்டு போனான். காவலாளி ஒலியெழுப்பி கருவியான பெரிய மைக் வைத்து இம்முறை கத்திப் பேசினார். நீங்கள் யாரும் ஏதும் செய்தால் அது குற்றமாகும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார். ஊடகங்கள் எல்லாம் வேறு கூடி விட்டதால் ஏதும் பேசாதீங்க ஏணி கொடுங்க என்றார்கள். ஒரு ஏணி போடப்பட்டது. அதில் வசதியாக நின்றுக்கொண்டான் கனகன். முகத்தைத் துடைத்துக்கொண்டு சிரித்தான்..
எல்லோரும் ஆச்சர்யமாக அவனையே பார்த்துகொண்டிருந்தார்கள்.. காமிராக்கள் எல்லாம் அவனையே குறி வைத்துக்கொண்டிருந்தது. காவலதிகாரிகள் கலெக்டர் கட்சித் தலைவர்கள் எல்லாம் மக்கள்முன் தன்னை பெரிய இரக்கமுள்ளவன் என்று காட்டிக்கொள்ள அவனை ஏதோ பெரிய ஒரு தியாகிபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..
கனகன் சிரித்துக்கொண்டே சொன்னான்.. “எனக்கு இங்கே இப்போ முதலமைச்சர் இங்க வரணும்..!!!”
ஒரு நொடி எல்லாம் ஆடிப் போய்விட்டார்கள்.
“என்னய்யா கிண்டல் பண்றியா எங்களுக்கு அத்துமீறினா சுட அதிகாரமிருக்கு”
“சுட்டுடுவியா எங்க சுடு பார்க்கலாம். எங்களை மீறி எங்க மக்கள் ல ஒருத்தனா இருக்கவனை சுட விட்டுடுவோமா?” தன்னை இந்த சாதிக்கட்சியைச் சார்ந்தவன் என்று காட்டிக்கொள்ளும் புதியக் கட்சியொன்று முன்வந்து வக்காலத்து பேசியது அவனுக்கு. உடனே நீ நானென மாறி மாறி குரலெழுப்பி ‘தனி அவனை சுடாதே, காவலாளி அராஜகம்’ என்றெல்லாம்கூட சிலர் கோசமெழுப்பினார்கள். மீடியாக்கள் அவன் முதலமைச்சர் என்றுச் சொன்னதுதான் தாமதம் அலுவலுக்கு அழைத்து அலைவாங்கிக் குடைகளை மேலும் கீழுமாய் இந்தப்புறமும் அந்தப்புறமுமாய் திருப்பி நாலாப்புறமும் செய்தி பரப்ப நேரலையை துவங்கிக்கொண்டிருந்தது..
கனகன் முனகிக் கொண்டேயிருந்தான். எந்த நேரத்திலும் மின்கம்பியை பிடித்துத் தொங்கிவிடுவேன் என்பதுபோல் கையை மேலேயே தூக்கி வைத்துக்கொண்டிருந்தான்.. முதலமிச்சருக்கு செய்தி சென்றுச் சேர்ந்தது
முதலமைச்சர் வர தயாராகிக் கொண்டிருந்தார்..
_தொடரும்..

by Swathi   on 27 Feb 2016  0 Comments
Tags: Koppai   Mathu   Kanneer   கோப்பை   மது   கண்ணீர்     
 தொடர்புடையவை-Related Articles
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!
கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன் கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன்
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்! ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்!
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3) ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.