LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயகாந்தன்

ஒரு பிடி சோறு

 

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.
“ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’ – அவன்தான் ராசாத்தியின் ஏகபுத்திரனான மண்ணாங்கட்டிச் சிறுவன்.
தென்னாற்காடு ஜில்லாவாசிகளைத் தவிர மற்றவர்களுக்குப் பெயர் வேடிக்கையாகத்தானிருக்கும். ராசாத்தியின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட ஊமைப்பாசம் இப்பொழுது மகன்மீது சொரிகிறது…
இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி – ஏன் தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்த சோற்றைத் திருடித் தின்ற எக்களிப்புத்தான்!
பூட்டா, திறப்பா? – பிளாட்பார வாழ்க்கைதானே? நாய் வந்து வாய் வைத்தாலும் அடித்துத் துரத்துவாரில்லை. அதுவும் இந்தத் திருட்டுக் கொட்டுப் பயல் பிறர் காணும்படியா அந்தக் காரிய்த்தை நடத்தியிருப்பான்? – பானையோடு தூக்கிக் கொண்டு தெருக் கோடியிலிருக்கும் அந்தப் பாழ் மண்டபத்துக்குத்தான் ஓடியிருப்பான் – அது அவன் வாசஸ்தலம்.
“ஒன்னெ வெட்டி வெக்க… எங்கேடா போயிருந்தே, சோமாறி?” என்று வரவேற்றாள் அவன் தாய் ராசாத்தி.
“யம்மோவ்… துட்டும்மா, ஹீம் துட்டு குடும்மா…” என்று அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு குதித்தான் சிறுவன்.
ராசாத்தி நிறைமாசக் கர்ப்பிணி. அவன் இழுப்புக்கெல்லாம் அவள் ஈடுகொடுக்க முடியுமா? – அவன் இழுத்த இழுப்பில் கீழே விழத் தெரிந்தாள்; சமாளித்துக்கொண்டு நின்ற வேகத்தில் ஆத்திரத்துடன் மண்ணாங்கட்டியின் முதுகில் இரண்டு அறை வைத்தாள்.
“ஒன்னெ பாடையிலே வெக்க… என்னெ இஸ்துத் தள்ளப் பாத்தியே… எங்கனாச்சும் ஒழிஞ்சு தொலையறது தானே?… துட்டு வேணுமாம், துட்டு… இவன் அப்பன் இங்கே கொட்டி வச்சிருக்கான் பாரு!”
“ஏம்மா, எங்கப்பன் ஆரும்மா?”
- ராசாத்தி என்ன பதில் சொல்லுவாள்?… அவளுக்கே தெரியாது. இப்பொழுது வயிற்றிலிருப்பதற்குத் தகப்பன்?…
- ஒரு நிமிஷம் எங்கோ நினைவு கூர்ந்து, சடையம்மன் கோவில் திருவிழாவில் சந்தித்துச் சில நாட்கள் உறவாடியிருந்த அந்தத் தாடிக்கார வளையல் வியாபாரியை, அவன் முகத்தை, அவன் சிரிப்பை, அவனது சேஷ்டைகளையெல்லாம் மனசில் நினைத்து நிறுத்திப் பார்த்தாள்.
அவள் முகத்தில் சிரிப்புக் குழம்பியது… அந்த ரகஸியங்களெல்லாம் மண்ணாங்கட்டிக்குத் தெரியுமா?…
“இங்கே வாடா, வாந்தி பேதியிலே போறவனே!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எட்டிப் பிடிக்கக் கையை வீசினாள்.
ஒரே பாய்ச்சலில் அவள் பிடியிலிருந்து விலகி நின்ற சிறுவன், “ஹேய்ன்னானாம்!” என்று இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு குதித்தான்.
“வா வா, புண்டம் கொட்டிக்க வருவே இல்லே” என்று விரலை ஆட்டிப் பத்திரம் கூறினாள் ராசாத்தி.
“நான்தான் துன்னுட்டேனே!” என்று வயிற்றில் தாளம் தட்டியவாறே ‘ஏவ்’ என்று பெரிசாக ஒரு ஏப்பம் விட்டுக் காண்பித்தான்.
மண்ணாங்கட்டியின் முதுகில் பின்னாலிருந்து ‘பளீரெ’ன ஓர் அறை விழுந்தது.
“தேவடியா பெத்த பயலே… வெறவு தூக்கிக்கினு போயிருக்கிறவருக்கு சோறு எடுத்து வச்சா அதைத் திருடித் துன்னுட்டு வந்து குதிக்கறதைப் பாரு?” என்று உறுமியவாறே நின்றிருந்தாள் மாரியாயி.
“வாடி, உத்தம பத்தினி… பத்தினி படபடா, பானை சட்டி லொட புடா…” என்று பச்சையான ‘பழமொழி’யை நீட்டி முழக்கி, சேலைத் தலைப்பை வரிந்துகொண்டு வந்தாள் ராசாத்தி.
“ஐய, ஒண்ணுங் கெட்ட மூளிக்கி ரோசத்துக்குக் குறைச்சலில்லே… அப்படியே தொங்கத் தொங்கக் கட்டிக்கினு பெத்தவ மாதிரிதான்” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள் மாரி.
“ஆமா ஒன்னே மாதிரி, தொங்கத் தொங்கக் கட்டிக்கினு ஊர் மேஞ்சா நல்லாத்தானிருக்கும்!”என்று திருப்பியடித்தாள் ராசாத்தி.
“ஆமா… நான் போவும்போது இவதான் வந்து வெளக்குப் புடிச்சா!”
- மாரிக்குத் தன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது என்ற துணிச்சல்.
“ஏண்டி, ஒரேமுட்டா அலட்டிக்கிறே… ஒன் அட்ரஸீ பூரா எங்கிட்டே இருக்குடி… அன்னிக்கு சொதந்தரத்துக்கு மொத நாளு மோர்மார்க்கட்டுத் துலுக்கனோட போனியே, எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கினியா?”
- மாரிக்குச் ‘சுருக்’கெனப் பொத்துக் கொண்டு கோபம் வந்துவிட்டது. மேலே எதுவும் பேச முடியாமல், “இன்னாடி சொன்னே, அவிசாரி முண்டே!” என்று உறுமிக் கொண்டே ராசாத்தியின் கன்னத்தில் எட்டி அறைந்தாள்.
“அடி, எஞ் சக்காளத்தி” என்று மாரியாயியின் கூந்தலை எட்டிப் பிடித்துச் சிம்பினாள் ராசாத்தி.
வலி பொறுக்க மாட்டாமல் ராசாத்தியின் நெஞ்சில் குத்தினாள் மாரி. ராசாத்திக்கு வெறி அடங்கவில்லை. கூந்தலைப் பிடித்த பிடியை விடாமல் சிம்பினாள். மாரியின் கை வீச்சு காற்றைத் துழாவியது. இரண்டொரு குத்து ராசாத்தியின் நெஞ்சில் விழுந்தன. மூன்றாவது குத்து ராசாத்தியின் வயிற்றில் விழுந்தது.
“அடியே புள்ளத்தாச்சிடீ…” என்ற அலறலுடன் மாரியின் பிடரியில் அறைந்து அவளைப் பிடித்திழுத்தான் அப்பொழுதுதான் அங்கு வந்த மாரியின் புருஷன் மாணிக்கம்.
விலகி நின்ற இருவரின் முகத்திலும் கூந்தல் கலைந்து படிந்திருந்தது… ‘மூஸ்’ ‘மூஸ்’ என்று மூச்சு இளைத்தது. ராசாத்தியின் ரவிக்கை கிழிந்து தொங்க, அங்கமெல்லாம் வெளியே தெரிந்தன. தனது பெரிய வயிற்றை அசைக்க முடியாமல் பெருமூச்செறிந்தாள் ராசாத்தி.
“இன்னாம்மே, நீ என்னா பொம்பளையா, பிசாசா?… வாயும் வவுறுமா இருந்துக்கினு இப்பிடி பேயா அடிச்சிக்கிறியே… படாத எடத்துலே பட்டுதுனா இன்னா ஆவுறது…?”
“நா ஒண்ணுமே பண்ணலே, அண்ணே!” என்று அழ ஆரம்பித்தாள் ராசாத்தி.
கர்ப்பிணியான ராசாத்தி முகம் சிவந்து அழவும் மாணிக்கத்தின் மனசு என்னவோ போல் ஆகிவிட்டது.
“போம்மே, ராச்சஸி!” என்று தன் மனைவியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனான் மாணிக்கம்.
“நீயும் வேற என்னெ அடிக்கிறியா?… அடி அடி… அந்தத் தேவடியா பெத்தது ஒனக்கு வெச்சிருந்த சோத்தைத் துன்னுட்டுப் போயிடுச்சி. அத்தெக் கேக்க வந்தா… அவ, என்னெ அங்கே போனவளே இங்கே போனவளேன்னு பேசறா… நீ வேற என்னெ அடிக்கிறே… நா ஏன்தான் பொண்ணாப் பொறந்தேனோ…” என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள் மாரி.
“அதெ வாரிக்கிட்டுப் பூட… அதுதான் திருட்டுக் கொட்டா நிக்குதே. நா, எலும்பெ முறிச்சிப் பாடுபட்டுக் கஞ்சி ஊத்தறேன். இப்பிடித் திருடித் துன்னுட்டு வம்பு வலிச்சிக்கினு வருதே. இன்னிக்கு வரட்டும். கழுத்தெ முறிச்சிக் கூவ ஆத்திலே நுந்திடறேன்” என்று கருவினாள் ராசாத்தி.
ராசாத்தியின் அடி வயிற்றில் ‘சுருக்’கென வலித்தது. வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு தனது கூட்டினுள் போய்ப் படுத்துக் கொண்டாள்.
சட்டைப் பையிலிருந்த இரண்டனாவைத் தடவிப் பார்த்துக் கொண்டே, ‘நாஸ்டா’ பண்ணுவதற்காக டீக்கடையை நோக்கி நடந்தான் மாணிக்கம்.
இந்தச் சந்தடியில் மண்ணாங்கட்டிப் பயல் எங்கே போனான் என்று யாரும் கவனிக்கவில்லை.
2ராசாத்திக்கோ, மாரியாயிக்கோ விபசாரம் என்பது தொழிலல்ல; அவர்கள் வாழும் பிளாட்பாரத்தின் எதிர்ப்புறத்திலிருக்கும் விறகுக் கடையில் விறகு சுமந்து செல்வது, லாரியில் வரும் விறகுக் கட்டைகளை இறக்கிக் கடைக்குள் அடுக்குவது – இவைதான் பிரதான தொழில். அந்த வேலைகள் இல்லாத சமயத்தில், வேறு ஏதாவது கூலி வேலை. அதுவும் இல்லாத சமயத்தில், மிகவும் வறட்சி ஏற்பட்டு, நல்ல கிராக்கியும் ‘சான்ஸீ’ம் அடித்தால்… வேறு ‘ஏதாவது’…
கோணி + கந்தல் பாய் + மூங்கில் தட்டி + சினிமா போஸ்டர் = ஒரு கூரை! – அந்தக் ‘கோழிப்புறை’யில் நீட்டிப் படுத்திருந்த ராசாத்தியின் அடிவயிற்றுக்குள் என்னவோ ‘சுருக்’கென்று குத்திவாங்கியது. ராசாத்தி நௌ¤ந்து கொடுத்தாள். கீழுதடு பற்களுக்கிடையே மடிந்து கொடுத்தது. நெற்றி சுருங்கிற்று.
- வயிற்றில் வலியா, பசியா?…
கால்களைச் சற்று அகல விரித்து இடுப்புச் சீலையைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள். இடுப்பை வளைத்து, நெஞ்சை உயர்த்தி உடலை முறுக்கிக் கொடுத்தாள். பாதங்களைத் தரையில் உரசி உரசி எழுப்பிய ஒலி அவளுக்கு இதமாக இருந்தது. திரும்பவும் தேய்த்துத் தேய்த்துப் பார்த்துக் கொண்டாள்.
வலியைப் பற்றிய நினைவு இல்லை. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டால் தேவலாம் போன்ற எண்ணம்.
‘கொஞ்சமா? – ஹ்ம்… கஞ்சியெக் கண்டு ரெண்டு நாளாச்சு, ஒரு பானை கஞ்சி இருந்தாலும் நெட்டலாம்’ – அவள் கண்கள் மூலையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மூளிப் பானையை நோக்கின. பக்கத்தில் ஓட்டையான அரிசிப் பானை உருண்டு கிடந்தது.
பசி வயிற்றை மென்றது!
அவளுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒற்றைக் காலில் கிடந்த ஈயக் காப்பு ‘தரதர’வெனத் தரையில் தேய்ந்து கரையப் பாதங்களைத் தேய்த்துக் கொண்டாள்.
அடி வயிற்றின் ஒரு பக்கத்தில் சில நிமிஷங்களுக்கு ஒருமுறை ‘சுருக்’கென்ற குத்தல் வேறு…
“உஸ்… அம்மாடி!” என்ற பெருமூச்சு…
“ராசாத்தி, ராசாத்தி!” என்ற குரல் கேட்கிறது. மல்லாந்து கிடந்தவாறே தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் ராசாத்தி. மாரியாயி குனிந்து நின்றபடி தலையை மட்டும் குடிசைக்குள் நீட்டியவாறு, “என்ன ராசாத்தி, இடுப்பு வலியா?” என்று கேட்டாள்.
“ஊஹீம்… அதெல்லாம் ஒண்ணுமில்லே. பசிதான்… நேத்து ஒரு வாய்க் கஞ்சி குடிச்சதுதான்… இன்னிக்குப் பூரா பட்டினி. அதான் வயத்தை என்னமோ பண்ணுது!”
மாரியாயிக்கு மனசை என்னவோ செய்தது.
“பாவம், வாயும் வயிறுமா இருக்கிற பொம்பளே பட்டினி கெடக்கலாமா?”
ராசாத்தியின் குடிசைக்குள் நுழைந்து, குனிந்து நின்றபடி, ஒரு மருத்துவச்சியைப் போல் அவளுடைய உடலைப் பரிசோதித்தாள் மாரியாயி.
இடுப்புச் சீலையைத் தளர்த்தி, அவிழ்த்து, கருச் சிசுவின் சிரம் முட்டி நிற்கும் அவளுடைய அடி வயிற்றைத் தடவிப் பார்த்தாள். வயிறு கனத்து, உருண்டு திரண்டிருந்தது. மேல் வயிறு தளர்ந்து போய், சுருங்கி, விரிந்து மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
ராசாத்தியின் அடி வயிற்றைத் தடவிக்கொண்டே இருந்தாள் மாரியாயி. அந்த வயிற்றுக்குள் ஒரு புதிய உயிர், ஒரு பச்சைப் பசும் சிசு இருக்கிறது என்ற உணர்ச்சியால் மாரியாயிக்கு உடல் முழுவதும் புல்லரித்தது.
“இது இடுப்புவலி போலத்தானிருக்கு. ஆசுபத்திரிக்குப் போயிடேன்!” என்று கூறினாள் மாரியாயி.
“அட, நீ ஒண்ணு… எனக்குத் தெரியாதா? மாசம் எட்டுத்தானே ஆச்சி. சடையம்மா கொயிலு திருநா அப்பத் தானே தரிச்சிது… ஆவணி ஒண்ணு, புரட்டாசி ரெண்டு… என்று கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லே, பசிதான்!” என்றாள் ராசாத்தி.
“நா, என்ன பண்ண? சோறு கூட இல்லையே… அரிசி இருக்கு… அடுப்பைப் பத்தவச்சிக் கஞ்சிகூட காச்சிடலாம்… லாரி நெறைய வெறவு வந்து நிக்குதே… இப்போ விட்டா இன்னும் ரெண்டு நாளைக்குக் காசைக் கண்ணாலே காண முடியாது… உம்…” என்று முனகிக்கொண்டே நின்றாள் மாரியாயி.
“அரிசி இருக்கா?” என்று தலையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.
“இருக்கு ஒன்னாலே கஞ்சி காச்சிக்க முடியுமா?”
“ஓ! அதெல்லாம் முடியும்… சீக்கிரம் கொண்டா!”என்றவாறு சரிந்த கூந்தலை முடிந்து கொண்டாள். கணுக்காலில் ஏறியிருந்த ஈயக் காப்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். அவிழ்ந்து திறந்து கிடந்த ரவிக்கையை இழுத்து முடிந்து உட்கார்ந்தவாறே சேலையையும் இடுப்பில் சுற்றிக் கொண்டாள்.
- அந்தக் குடிசையில் நிற்க முடியாது. ராசாத்தி நல்ல உயரம் என்பது மட்டுமல்ல, குடிசையும் ரொம்ப தாழ்ந்தது தானே?
உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு மௌ¢ள நகர்ந்து குடிசைக்கு வெளியே வந்ததும் நிமிர்ந்து எழுந்து நின்றாள்.
‘அம்மாடி! வயிறுதான் என்னமாய்க் கனக்கிறது!’
மாரியாயி பழம்பானையில் இருந்த அரிசியை ஒரு தகரக் குவளையில் கொட்டி ராசாத்தியிடம் கொடுத்துவிட்டு மூலைக்கு ஒன்றாய்க் கிடந்த அடுப்புக் கற்களைக் குடிசைக்கு வெளியே சேர்த்து வைத்து, அடுப்புக்குப் பக்கத்தில் கிடந்த சுள்ளிக் கட்டிலிருந்து ஒரு பிடி சுள்ளியை இழுத்து எடுத்து ராசாத்தியிடம் கொடுத்தாள். “சீக்கிரம் காச்சிக் குடி… நா போயிட்டு வந்துடறேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே, விறகுக் கடையை நோக்கி ஓடினாள் மாரியாயி.
உருண்டு கிடந்த சோற்றுப் பானையை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்கப் போனாள் ராசாத்தி.
குழாயடியில் ஒரே கூட்டம்.
ராசாத்தியினால் நிற்க முடியவில்லை. ஒருகால் மட்டும் ‘வெட வெட’வென நடுங்கிற்று. அடி வயிற்றில் ‘சுருக்’கென்ற அந்த வலி…
“அம்மா!” என்று பெருமூச்சு விட்டபடி உட்கார்ந்து விட்டாள்.
“பாவம்! புள்ளைத்தாச்சிப் பொம்பளே, ஒரு பானை தண்ணி விடேன்” என்றாள் ஒருத்தி. தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண் ராசாத்தியைப் பார்த்தாள்.
“ஒரு பானை வேணாம்… பாதி நெறைஞ்சா போதும்!” என்றாள் ராசாத்தி.
- அவள் பசிக்கு அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; அவள் வலிக்கு ஒரு பானை தண்ணீரைச் சுமக்கவும் முடியாது அல்லவா?
“சரி இந்தா பாவம்! நீ ஏன் காத்துக் கெடக்கணும்?” என்று தன் பானையில் இருந்த தண்ணீரை ராசாத்தியின் பானையில் ஊற்றினாள் அவள்.
பானையைத் தூக்கி இடுப்பில் வைக்கும்போது, ராசாத்தியின் நெற்றி சுருங்கிற்று; பற்களைக் கடிக்கும்போது ‘நெறு நெறு’வென்று சப்தம் கேட்டது; ஒரு கால் மட்டும் ‘வெட வெட’வென நடுங்கிற்று…
அதோ, இன்னும் பத்தடி வைத்தால் அவளுடைய இடத்திற்குப் போய்விடலாம். ஒண்ணு… ரெண்டு… மூணு… ஊஹீம். இடுப்பில் பானை நிற்க மாட்டேன் என்கிறது; கை வலிக்கிறது; காலில் நடுக்கம் அதிகரிக்கிறது.
பானை நழுவிக் கீழே விழுந்துவிடாமல்…
…உம்… மௌ¢ள… மௌ¢ள ….
“அப்பா!” – பாதி வழியிலே பானையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டாள்.
தலையை அண்ணாந்து வானத்தை நோக்கி ஒரு பெருமூச்சு! – ஈயக் காப்பு ‘தர தர’வென உரசும்படி பாதங்களைத் தரையில் தேய்த்துக் கொள்கிறாள் – லேசாகத்தான்!
“அம்மா!” – வயிற்றில் என்ன பசியா, வலியா?
- இரண்டும் தான்… இல்லை, இல்லை… பசிதான்!
- ‘அதோ அடுப்பு இருக்கிறது; அரிசி இருக்கிறது; சுள்ளி இருக்கிறது; தீப்பெட்டி…?’
‘… அந்தத் தட்டியிலே சொருகி வச்சேனே… இருக்கும். போய்ப் பத்தவச்சி, அரிசியைப் போட்டுக் காச்சி, அந்தக் கஞ்சிக் கலயத்திலே ஊத்தி உப்பு…?’
‘… அதுவும் இருக்கும். அரிசிப் பானையிலே ஒரு பொட்டணம் போட்டு வச்சது எங்கே போயிடும்?… அது கூடவே, அந்தப் பாதி எலுமிச்ச ஊறுகாய்த் துண்டு – உம்… அதையும் கடிச்சிக்கினு சூடா ஒரு பல்லா கஞ்சி குடிச்சா…’ – அவள் வாயெல்லாம் நீர் சுரந்தது.
எழுந்தாள்; தண்ணீர்ப் பானையை விசுக்கெனத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தாள்.
அடுப்பின் மீது பானையை வைத்துச் சுள்ளிகளைப் பற்ற வைத்தாள். அடுப்பு புகைந்தது… கண்ணெல்லாம் எரிச்சல்…
‘…குனிஞ்சி ஊதினா தீப்புடிச்சிருக்கும் – ‘
ஊஹீம்… அவளால் குனிய முடியவில்லை!
அப்புறம் கஞ்சி…?
வயிறு பூமியில் படாமல் ஒரு காலை மண்டியிட்டு ஊன்றி ஒரு கையைத் தரையில் தாங்கிக்கொண்டு ஒரு மூச்சு இழுத்து ஊதினாள். ‘தபக்’கென்று அடுப்பில் தீ சுழன்று எரிந்தது; ஒரு கணம் அவள் தலையும் சுழன்றது.
- ‘அப்பாடா’. ஒரு வழியா தண்ணி கொதி வந்திடுச்சி. அரிசியைக் கழுவிக் கொட்டி ஒரு உடைந்த சட்டியினால் பானையை மூடினாள். எரிந்து வெளித்தள்ளிய நெருப்புத் துண்டுகளை மீண்டும் அடுப்பின் வாய்க்குள் தள்ளி மேலும் சில சுள்ளிகளையும் முறித்துச் செருகினாள்.
‘பட், பட்’டென்று தீப்பொறிகள் வெடித்துச் சிதறின. அவள் முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் துளிர்த்து வழிந்தன.
பரட்டைக் கூந்தல் கலைந்து நெற்றியிலும் முகத்திலும் வழிந்த வியர்வையில் ஒட்டிக் கொண்டது.
- அவளுக்கு இப்பொழுது அதெல்லாம் கவலை இல்லை. ஒரு வாய்க் கஞ்சி, ஒரு பிடி சோறு – ‘அப்பாடா’ என்று படுத்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான்!
‘சளபுள’ வென்ற சத்தம் பானைக்குள்ளிருந்து ஒலித்தது… மூடியிருந்த சோற்றுப் பானையின் வாயிலிருந்து பொங்கி வழிந்த நுரைத்த கஞ்சி அடுப்பிற்குள் வடிந்து ஒழுகியது.
‘சொர்’ என்ற சப்தம் கேட்டதும் ராசாத்தி அவசர அவசரமாய்ப் பானை மூடியை முந்தானையால் பிடித்து எடுத்துக் கீழே வைத்தாள்.
வெண்ணிறக் கஞ்சியில் சோற்றுப் பருக்கைகள் சுழன்று புரண்டு கொதித்துக் கொண்டிருந்தன.
… மட்டமான புழுங்கல் அரிசிக்கஞ்சி கொதிக்கும்போது கமழ்ந்து பரவும் மணம் இருக்கிறதே…
ஒருமுறை நெஞ்சு விரிய மூச்சை இழுத்து அந்த வாசனையை அனுபவித்தாள் ராசாத்தி.
கஞ்சியின் மணம் அவள் அடிவயிறுவரை சென்று ‘குபு குபு’வெனப் பசியைக் கிளறியது…
“கஞ்சி குடிச்சி மூணு நாளாச்சே…!”
பரபரவென்று உள்ளே சென்று அரிசிப் பானையில் கிடந்த உப்புப் பொட்டணத்தையும், ஊறுகாய்த் துண்டையும் எடுத்துக்கொண்டு வந்து அடுப்பின் முன்னே வைத்து விட்டு, மூலையில் உருண்டு கிடந்த கஞ்சிக் கலயத்தை எடுத்துப் பானையிலிருந்த தண்ணீரை ஊற்றிச் சுத்தமாகக் கழுவினாள்.
அடுப்பிலிருந்த சுள்ளியெல்லாம் எரிந்து தணிந்து விட்டது.
மூங்கில் தட்டி ஓரமாய்ச் சற்று நேரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். அங்கமெல்லாம் தளர்ந்து சுழன்று விடுவதுபோல் சலித்தது.
வரண்டு உலர்ந்து போன உதடுகளை நக்கிக் கொடுத்துக் கொண்டாள்.
மௌ¢ள நகர்ந்து பானையை இறக்கிக் கலயத்தில் கஞ்சியை ஊற்றினாள். சற்று ஆறட்டும் என்று கஞ்சிக் கலயத்தைக் கையிலெடுத்துக் குனிந்து ஊதினாள். ஊதும் போது அவள் வாயில் சுரந்த உமிழ்நீர் உதடுகளில் வழிந்தது. பக்கத்திலிருந்த ஊறுகாய்த் துண்டில் கொஞ்சம் தொட்டு நக்கிக் கொண்டாள்.
“த்டா” என்று சப்புக் கொட்டிக்கொண்டே அதே பொழுதில், கீழுதட்டை மடித்துக் கடித்து நெற்றியைச் சுருக்கி இடுப்பை வளைத்து நௌ¤ந்தாள்…
- அதென்ன பசியா, வலியா?
‘ஒரு வாய்க் கஞ்சியைக் குடிச்சி, ஒரு பிடி சோத்தையும் தின்னா எல்லாம் சரியாப் போயிடும் – ‘அப்பாடா’ன்னு நிம்மதியாத் தூங்கலாம்.’
ஊறுகாய்ப் பொட்டணத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, கஞ்சி நிறைந்த தகரக் குவளையில் வாய் வைத்து உறிஞ்சப்போகும் சமயம்…
“ஹேய்… ஹேய்ன்னானாம்!” என்ற குரல் அவளருகே ஒலித்து மென்னியைப் பிடித்து அழுத்தியது.
“எனக்கும்மா… எனக்கும்மா, கஞ்சி!”என்று அவள் எதிரே நின்று குதிக்க ஆரம்பித்தான் மண்ணாங்கட்டிச் சிறுவன். அவன் கையிலிருந்த கிழிந்த காற்றாடி காற்றில் அடித்து சென்றது கூட அவனுக்குத் தெரியவில்லை.
அவனைக் கண்டவுடன் ராசாத்திக்கு மத்தியானம் நடந்த சம்பவமும், அதன் விளைவாய் எழுந்த சச்சரவும் நினைவுக்கு வரவே ஆத்திரம் குமுறிப் பொங்கியது.
“முடியாது, என் கையாலே ஒனக்கு ஒரு பிடி சோறு போட மாட்டேன்… எங்கேயாவது ஒழிஞ்சு போ… மூஞ்சியிலே முழிக்காதே!” என்று ராக்ஷஸி போல் கத்தினாள்.
“உம் உம் பசிக்குதும்மா… கஞ்சி குடும்மா… ஐய, யம்மா…” என்று முரண்டினான் மண்ணாங்கட்டி.
“நீ என்ன பண்ணினாலும் சரி, ஒனக்கு ஒண்ணும் தர முடியாது. போ… திருட்டு மூதேவி… எங்கேயாவது போயித் திருடித் துன்னுடா, போ…”
“ஐய, யம்மா…”
“முடியாது… இன்னைக்கி என்ன ஆனாலும் சரி!”என்று கலயத்திலிருந்த கஞ்சியை ஒருபுறம் தள்ளிவைத்து மூடிவிட்டு, காவலுக்கு உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.
“ஐயையோ, பசிக்குதே… யம்மாடி, பசிக்குதே!” என்று தரையில் புரண்டு அழுது கல்லுளிமங்கத்தனம் பண்ணினான் சிறுவன்.
ராசாத்தியின் ஆத்திரமெல்லாம் பீறிக்கொண்டு வந்தது. பக்கத்திலிருந்த சுள்ளிக் குச்சியை எடுத்துத் தரையில் விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்த மண்ணாங்கட்டியின் முதுகில் விளாசினாள். சிறுவன் ‘குய்யோ, முய்யோ’ என்று கதறிக் கொண்டு ஓடினான்.
“திரும்பி வந்தா பலி வெச்சிடுவேன்… எங்கேயாவது ஒழிஞ்சி போ, பொணமே!” என்று கருவியவாறு குச்சியை விட்டெறிந்தாள்.
அடிவயிற்றில் ‘சுருக்’கென்றது; பற்களைக் கடித்துக் கொண்டாள்.
- பசியா, வலியா?
‘சனியன்… தின்றப்போ எமன் மாதிரி மென்னியெப் புடிக்க வந்திடுச்சி!” என்று முனகிக்கொண்டே குடிசையின் தட்டி ஓரமாகத் திரும்பி உட்கார்ந்து கஞ்சிக் கலயத்தை அருகில் இழுத்தாள்.
“யம்மா… ஹம்… ஹம்…” என்று சிணுங்கிக்கொண்டே மறுபடியும் அவள் பின்புறம் வந்து நின்றான் மண்ணாங்கட்டி.
“ஹீம், முடியாது!”
அவள் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
மண்ணாங்கட்டிக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் தாயையும் கஞ்சிக் கலயத்தையும் வெறித்து விழித்தன.
“அம்மா… தர்றியா மாட்டியா?” என்று அதட்டிக் கூவினான்.
“முடியாது, நீ என்னெக் கொன்னாலுஞ் சரி”- தன் மகனின் அதட்டலை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டே கஞ்சிக் கலயத்தில் கையை விட்டுத் துழாவி ஒரு கவளம் சோற்றை வாயருகே கொண்டு போனாள்…
“எனக்கும்மா, எனக்கு!” என்று அவள் கையிலிருந்த கலயத்தைப் பாய்ந்து பிடுங்கினான் மண்ணாங்கட்டி. அவள் தர மறுத்தாள். சோற்றுக் கையால் அவனைத் தள்ளிக் கொண்டே மறு கையால் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவன் ‘ஓ’ வென்று அலறியவாறே மண் கலயத்தை விடாப்பிடியாய்ப் பறிக்க முயன்றான்…
இந்த மல்லுக்கட்டில் கலயத்திலிருந்த கஞ்சியெல்லாம் கீழே கவிழ்ந்து விட்டது.
- ஒரு கணம் இருவரும் திகைத்தனர்.
அவனை எட்டிப் பிடிக்க வெறிகொண்டு பாய்ந்தாள் ராசாத்தி; அவன் தப்பி விட்டான்…
“அடே, நீ அழிஞ்சி போயிடுவே… ஒன்னெப் பாம்பு புடுங்கும்… நீ மண்ணாய்ப் போக!… சடையம்மாவுக்கு ஒன்னெ வெட்டிப் பலி குடுக்க!” என்று அழுதவாறே சபித்தாள் ராசாத்தி.
அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அழுது கொண்டே தரையில் சிந்திய கஞ்சிச் சோற்றைக் கை நிறைய அள்ளிக்கொண்டு எடுத்தான் ஓட்டம்.
“அடே பாவி, நீ அழிஞ்சி போவே!” என்று பற்களைக் கடித்துக் கூவிக் கொண்டே கையிலிருந்த கஞ்சிக் கலயத்தை அவன் ஓடிய திசையில் வீசியெறிந்து ‘ஓ’வென்று அலறி அழுதாள். தரையில் மோதிய கலயம் நொறுங்கியது.
“பெத்த வயத்திலே பெரண்டையே வெக்கோணும்…”என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு, ‘படார், படார்’ என்று முகத்திலும் மார்பிலும் அறைந்து கொண்டாள்.
ஒரு கணம் அவள் விழிகள் வெறித்துச் சுழன்றன…
- உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சிரமப்பட்டுக் காய்ச்சிய கஞ்சியெல்லாம் தரையில் சிதறிப் போய் விட்டதே!
‘அட தெய்வமே’ என்று அலறி ‘மடா’ரெனச் சாய்ந்தாள்; புரண்டு புரண்டு அழுதாள்…
திடீரென இடுப்புக்கு கீழே அலகு கொண்டு குத்தி வாங்கியது போன்ற வேதனை!
“ஐயோ!” வென்று அலறிய ராசாத்தி நிலைமையை உணர்ந்து கொண்டாள்.
- ‘இடுப்பு வலிதான்…’
அவளால் நகர முடியவில்லை.
மார்பில் என்னவோ அடைத்தது. மேல் வயிற்றில் யாரோ மிதிப்பது போல் மூச்சு முட்டியது. வயிற்றில் குடல் எல்லாம் கழன்று சரிவதுபோல் என்னமோ புரண்டது. காலும் கையும் விறைத்துக் கொண்டன. கால்களைத் தரையில் உதைத்து உதைத்துத் தேய்த்துக் கொண்டாள். கைகளால் தரையைப் பிறாண்டினாள். உதட்டைக் கடித்து வாயெல்லாம் ரத்தம்!
“ஐயோ… அம்மா… கடவுளே… சடையம்மா தாயே!” என்று என்னென்னவோ பிதற்றினாள்; பிரார்த்தித்துக் கொண்டாள்.
விறைத்த கால்கள் விலகி விலகிப் பின்னிக் கொண்டன.
- பாதங்களைத் தரையில் வெறி கொண்டு தேய்க்கும்போது காலில் கிடந்த ஈயக் காப்பும் இழுபட்டது; தேய்ந்தது.
‘இனி பிழைப்பதாவது, செத்துத்தான் போயிடுவோம்’ என்று தோன்றியது அவளுக்கு.
ஒரு வாய்க் கஞ்சிக்குத் தான் பெற்ற மகனை அடித்து விரட்டி விட்டா…?
தலையைப் பிய்த்துக் கொண்டு, “அடே, மண்ணாங்கட்டி! எங் கண்ணூ… நா செத்துப் போயிடுவேன்டா!” என்று உரத்த குரலில் ‘ஓ’ வெனக் கதறி அழுதாள்.
அந்த ஒரே அலறலில், பின்னிக் கிடந்த அவள் கால்கள் பிய்த்துக் கொண்டு விலகின…
அந்த வேகத்தில் ஒற்றைக் காலில் கிடந்த அந்த ஈயக் காப்பு, காலைவிட்டுக் கழன்று உருண்டு ஓடி எங்கோ விழுந்தது…
ராசாத்தியின் அலறல் லாரியில் விறகு இறக்கிக் கொண்டிருந்த மாரியாயியின் செவிகளுக்கு எட்டியது. அவ்வளவுதான்; கையில் இருந்த விறகைக் கீழே போட்டு விட்டு ஓட்டமாய் ஓடி வந்தாள் மாரியாயி; அவளைத் தொடர்ந்து ஒரு சிறு கும்பலே வந்தது.
“ராசாத்தி!” என்று கூவிக் கொண்டே குடிசைக்குள் நுழைந்தாள் மாரியாயி…
“ஆம்பளெப் பசங்கெல்லாம் போங்க. உம்… ஏ குட்டி! நீ ஏன் நிக்கிறே?… போ…!” என்று சிறுவர்களை எல்லாம் விரட்டினர் சில பெண்கள்.
“ராசாத்தி, ராசாத்தி” என்ற குரல்கள்!
- பதில் இல்லை.
“ஐயோ ராசாத்தி!” என்று அவள் முகத்தைப் பிடித்துக் கொண்டு அலறினாள் மாரியாயி.
ராசாத்தியின் கண்கள் சற்றே திறந்தன; உதடுகள் கோணிக் கோணி வலித்தன.
“எங் கண்ணூ மண்ணாங்கட்டி! எங் கண்ணூ… மண்ணாங்…”
‘கொளக்’கெனத் தலை சாய்ந்தது.
ராசாத்தியின் தலைமாட்டில் விளக்கொன்று ஏற்றி வைக்கப்பட்டது.
அவள் உடல் மீதும், அவள் உடலிலிருந்து பெருக்கெடுத்த உதிர வெள்ளத்தில் குழம்பிக் கிடந்த உயிரற்ற பிண்டத்தின் மீதும் அந்த அகல் விளக்கின் ஒளியும், அங்கே சூழ்ந்திருந்த மனிதர்களின் நிழலும் ஆடிச் சிதைந்து படிந்து படர்ந்தன.
திடீரென “அடி, எம் பொறவி ராசாத்தீ… ஈ… ஈ!” என்ற மாரியாயியின் ஒப்பாரிக் குரல் பயங்கரமாக ஓலமிட்டது.
3இரவெல்லாம் எங்கோ கிடந்து தூங்கிவிட்டு – பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்தபின் – மாலையில் தாயிடம் திரும்பிக் கொண்டிருந்தான் மண்ணாங்கட்டி.
தெருமுனையில் வரும்போதே குடிசைக்குப் பக்கத்தில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு தாயைப் பார்த்ததும், “யம்மாவ்!” என்று அலறி வீழ்ந்தான்.
“யம்மா… யம்மா… யம்மா!” இதே குரல் நாள் முழுதும் விம்மி விம்மி ஒலித்தது. மண்ணாங்கட்டி சிலையாய் அமர்ந்திருந்தான். கேவிக் கேவி மூச்சு இளைத்தது.
பிரமை தட்டிப் பொறி கலங்கி உட்கார்ந்திருந்த அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் மாரியாயி…
அவனைக் கதறக் கதற விட்டுவிட்டு அவன் தாய் போய்விட்டாள்…!
- இல்லை, தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்!
4இரவு…
மாரியாயியின் அடுப்பு புகைந்து அடங்கிவிட்டது. புருஷனுக்குச் சோறு போட்டாள்.
- அவள் மனசில் என்னவோ ‘திக்’கென்றது.
“பாவம், இனிமே எங்கே போயி ‘அம்மா, பசிக்குது – சோறு போடு!’ன்னு கேப்பான்?… மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கூட்டியா மச்சான். அவனைப் பார்க்காமெ என்னாலே ஒரு பிடி சோறு துன்ன முடியாது!” என்று அழுதாள் மாரி.
சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு மாணிக்கம் எழுந்து ஓடினான்.
- அதோ… அதோ!
“டேய், மண்ணாங்கட்டி” என்று கூவிக்கொண்டே ஓடுகிறான்.
ஆனால், அது வேறு யாரோ?
- “டேய், மண்ணாங்கட்டியெப் பார்த்தியாடா?”
“இல்லியே…”
- “அவனைப் பார்த்தியா?”
“ஊஹீம்…”
“நீ பாத்தியா?
“சுடுகாட்டுக்குப் போறேன்னு போனான்!”
“சுடுகாட்டுக்கா?”
-”மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி!”
மாணிக்கம் ஓட்டமும் நடையுமாகச் சுடுகாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.
- போகும் வழியில் – அதோ, சடையம்மன் கோயிலில் யாரது? அவனா? மண்ணாங்கட்டியா?…
“மண்ணாங்கட்டி!”
- ஆமாம், அவனேதான்.
ஓடிவந்த மாணிக்கம் அவனை வாரி அணைத்துக் கொண்டான்.
“வாடா, போவோம்!” என்று அவனை இழுத்தான் மாணிக்கம்.
“அம்…மா…வ்…” என்று உணர்ச்சிகள் வெடித்துச் சிதறிக் குழம்பிய குரலில் அலறியவாறே மாணிக்கத்தை இறுகத் தழுவிக்கொண்டான் மண்ணாங்கட்டி.
“எங் கண்ணில்லே, அழுவாதேடா!” என்று ஆறுதல் கூறிய மாணிக்கத்தின் கண்களிலிருந்து நீர் பெருகியது.
5″சாப்பிடுடா, என் கண்ணில்லே…”
சட்டியில் சோற்றைப் பிசைந்து கொண்டே கெஞ்சினாள் மாரி.
அவன் மௌனமாய் வானத்தை வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.
“உம், சாப்பிடும்மா!” என்று ஒரு பிடி சோற்றை அவன் வாயருகே கொண்டுபோனாள் மாரி. அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் – உணர்ச்சியற்ற, வெறித்த பார்வை.
அவன் கை அவள் கையிலிருந்த ஒரு பிடி சோற்றை வாங்கியது. விழிகள் அந்தக் கவளச் சோற்றை வெறித்தன. வெறித்த விழிகளில் நீர் சுரந்தது…
கையிலிருந்த சோற்றை அருகே இருந்த தகரக்குவளையில் போட்டுக் கந்தல் துணியால் மூடி ஒரு பக்கம் வைத்தான்.
“இன்னாடா இது, இது எடுத்துத் துன்னு!”
“ஊஹீ… அது… அது… எங்கம்மாவுக்கு!”
குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-
“என்னடா, அப்படிப் பார்க்கறே?” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.
“அம்மா…ஆ…ஆ!” – அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.
“மவனே!” என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.
“அம்மா…ஆ…!”
“மவனே…”

            “ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’ – அவன்தான் ராசாத்தியின் ஏகபுத்திரனான மண்ணாங்கட்டிச் சிறுவன்.தென்னாற்காடு ஜில்லாவாசிகளைத் தவிர மற்றவர்களுக்குப் பெயர் வேடிக்கையாகத்தானிருக்கும். ராசாத்தியின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட ஊமைப்பாசம் இப்பொழுது மகன்மீது சொரிகிறது…இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி – ஏன் தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்த சோற்றைத் திருடித் தின்ற எக்களிப்புத்தான்!பூட்டா, திறப்பா? – பிளாட்பார வாழ்க்கைதானே? நாய் வந்து வாய் வைத்தாலும் அடித்துத் துரத்துவாரில்லை. அதுவும் இந்தத் திருட்டுக் கொட்டுப் பயல் பிறர் காணும்படியா அந்தக் காரிய்த்தை நடத்தியிருப்பான்? – பானையோடு தூக்கிக் கொண்டு தெருக் கோடியிலிருக்கும் அந்தப் பாழ் மண்டபத்துக்குத்தான் ஓடியிருப்பான் – அது அவன் வாசஸ்தலம்.“ஒன்னெ வெட்டி வெக்க… எங்கேடா போயிருந்தே, சோமாறி?” என்று வரவேற்றாள் அவன் தாய் ராசாத்தி.

 

          “யம்மோவ்… துட்டும்மா, ஹீம் துட்டு குடும்மா…” என்று அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு குதித்தான் சிறுவன்.ராசாத்தி நிறைமாசக் கர்ப்பிணி. அவன் இழுப்புக்கெல்லாம் அவள் ஈடுகொடுக்க முடியுமா? – அவன் இழுத்த இழுப்பில் கீழே விழத் தெரிந்தாள்; சமாளித்துக்கொண்டு நின்ற வேகத்தில் ஆத்திரத்துடன் மண்ணாங்கட்டியின் முதுகில் இரண்டு அறை வைத்தாள்.“ஒன்னெ பாடையிலே வெக்க… என்னெ இஸ்துத் தள்ளப் பாத்தியே… எங்கனாச்சும் ஒழிஞ்சு தொலையறது தானே?… துட்டு வேணுமாம், துட்டு… இவன் அப்பன் இங்கே கொட்டி வச்சிருக்கான் பாரு!”“ஏம்மா, எங்கப்பன் ஆரும்மா?”- ராசாத்தி என்ன பதில் சொல்லுவாள்?… அவளுக்கே தெரியாது. இப்பொழுது வயிற்றிலிருப்பதற்குத் தகப்பன்?…- ஒரு நிமிஷம் எங்கோ நினைவு கூர்ந்து, சடையம்மன் கோவில் திருவிழாவில் சந்தித்துச் சில நாட்கள் உறவாடியிருந்த அந்தத் தாடிக்கார வளையல் வியாபாரியை, அவன் முகத்தை, அவன் சிரிப்பை, அவனது சேஷ்டைகளையெல்லாம் மனசில் நினைத்து நிறுத்திப் பார்த்தாள்.அவள் முகத்தில் சிரிப்புக் குழம்பியது… அந்த ரகஸியங்களெல்லாம் மண்ணாங்கட்டிக்குத் தெரியுமா?…“இங்கே வாடா, வாந்தி பேதியிலே போறவனே!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எட்டிப் பிடிக்கக் கையை வீசினாள்.

 

           ஒரே பாய்ச்சலில் அவள் பிடியிலிருந்து விலகி நின்ற சிறுவன், “ஹேய்ன்னானாம்!” என்று இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு குதித்தான்.“வா வா, புண்டம் கொட்டிக்க வருவே இல்லே” என்று விரலை ஆட்டிப் பத்திரம் கூறினாள் ராசாத்தி.“நான்தான் துன்னுட்டேனே!” என்று வயிற்றில் தாளம் தட்டியவாறே ‘ஏவ்’ என்று பெரிசாக ஒரு ஏப்பம் விட்டுக் காண்பித்தான்.மண்ணாங்கட்டியின் முதுகில் பின்னாலிருந்து ‘பளீரெ’ன ஓர் அறை விழுந்தது.“தேவடியா பெத்த பயலே… வெறவு தூக்கிக்கினு போயிருக்கிறவருக்கு சோறு எடுத்து வச்சா அதைத் திருடித் துன்னுட்டு வந்து குதிக்கறதைப் பாரு?” என்று உறுமியவாறே நின்றிருந்தாள் மாரியாயி.“வாடி, உத்தம பத்தினி… பத்தினி படபடா, பானை சட்டி லொட புடா…” என்று பச்சையான ‘பழமொழி’யை நீட்டி முழக்கி, சேலைத் தலைப்பை வரிந்துகொண்டு வந்தாள் ராசாத்தி.“ஐய, ஒண்ணுங் கெட்ட மூளிக்கி ரோசத்துக்குக் குறைச்சலில்லே… அப்படியே தொங்கத் தொங்கக் கட்டிக்கினு பெத்தவ மாதிரிதான்” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள் மாரி.“ஆமா ஒன்னே மாதிரி, தொங்கத் தொங்கக் கட்டிக்கினு ஊர் மேஞ்சா நல்லாத்தானிருக்கும்!”என்று திருப்பியடித்தாள் ராசாத்தி.“ஆமா… நான் போவும்போது இவதான் வந்து வெளக்குப் புடிச்சா!”- மாரிக்குத் தன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது என்ற துணிச்சல்.

 

           “ஏண்டி, ஒரேமுட்டா அலட்டிக்கிறே… ஒன் அட்ரஸீ பூரா எங்கிட்டே இருக்குடி… அன்னிக்கு சொதந்தரத்துக்கு மொத நாளு மோர்மார்க்கட்டுத் துலுக்கனோட போனியே, எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கினியா?”- மாரிக்குச் ‘சுருக்’கெனப் பொத்துக் கொண்டு கோபம் வந்துவிட்டது. மேலே எதுவும் பேச முடியாமல், “இன்னாடி சொன்னே, அவிசாரி முண்டே!” என்று உறுமிக் கொண்டே ராசாத்தியின் கன்னத்தில் எட்டி அறைந்தாள்.“அடி, எஞ் சக்காளத்தி” என்று மாரியாயியின் கூந்தலை எட்டிப் பிடித்துச் சிம்பினாள் ராசாத்தி.வலி பொறுக்க மாட்டாமல் ராசாத்தியின் நெஞ்சில் குத்தினாள் மாரி. ராசாத்திக்கு வெறி அடங்கவில்லை. கூந்தலைப் பிடித்த பிடியை விடாமல் சிம்பினாள். மாரியின் கை வீச்சு காற்றைத் துழாவியது. இரண்டொரு குத்து ராசாத்தியின் நெஞ்சில் விழுந்தன. மூன்றாவது குத்து ராசாத்தியின் வயிற்றில் விழுந்தது.“அடியே புள்ளத்தாச்சிடீ…” என்ற அலறலுடன் மாரியின் பிடரியில் அறைந்து அவளைப் பிடித்திழுத்தான் அப்பொழுதுதான் அங்கு வந்த மாரியின் புருஷன் மாணிக்கம்.விலகி நின்ற இருவரின் முகத்திலும் கூந்தல் கலைந்து படிந்திருந்தது… ‘மூஸ்’ ‘மூஸ்’ என்று மூச்சு இளைத்தது. ராசாத்தியின் ரவிக்கை கிழிந்து தொங்க, அங்கமெல்லாம் வெளியே தெரிந்தன.

 

             தனது பெரிய வயிற்றை அசைக்க முடியாமல் பெருமூச்செறிந்தாள் ராசாத்தி.“இன்னாம்மே, நீ என்னா பொம்பளையா, பிசாசா?… வாயும் வவுறுமா இருந்துக்கினு இப்பிடி பேயா அடிச்சிக்கிறியே… படாத எடத்துலே பட்டுதுனா இன்னா ஆவுறது…?”“நா ஒண்ணுமே பண்ணலே, அண்ணே!” என்று அழ ஆரம்பித்தாள் ராசாத்தி.கர்ப்பிணியான ராசாத்தி முகம் சிவந்து அழவும் மாணிக்கத்தின் மனசு என்னவோ போல் ஆகிவிட்டது.“போம்மே, ராச்சஸி!” என்று தன் மனைவியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனான் மாணிக்கம்.“நீயும் வேற என்னெ அடிக்கிறியா?… அடி அடி… அந்தத் தேவடியா பெத்தது ஒனக்கு வெச்சிருந்த சோத்தைத் துன்னுட்டுப் போயிடுச்சி. அத்தெக் கேக்க வந்தா… அவ, என்னெ அங்கே போனவளே இங்கே போனவளேன்னு பேசறா… நீ வேற என்னெ அடிக்கிறே… நா ஏன்தான் பொண்ணாப் பொறந்தேனோ…” என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள் மாரி.“அதெ வாரிக்கிட்டுப் பூட… அதுதான் திருட்டுக் கொட்டா நிக்குதே. நா, எலும்பெ முறிச்சிப் பாடுபட்டுக் கஞ்சி ஊத்தறேன். இப்பிடித் திருடித் துன்னுட்டு வம்பு வலிச்சிக்கினு வருதே. இன்னிக்கு வரட்டும்.

 

 

         கழுத்தெ முறிச்சிக் கூவ ஆத்திலே நுந்திடறேன்” என்று கருவினாள் ராசாத்தி.ராசாத்தியின் அடி வயிற்றில் ‘சுருக்’கென வலித்தது. வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு தனது கூட்டினுள் போய்ப் படுத்துக் கொண்டாள்.சட்டைப் பையிலிருந்த இரண்டனாவைத் தடவிப் பார்த்துக் கொண்டே, ‘நாஸ்டா’ பண்ணுவதற்காக டீக்கடையை நோக்கி நடந்தான் மாணிக்கம்.இந்தச் சந்தடியில் மண்ணாங்கட்டிப் பயல் எங்கே போனான் என்று யாரும் கவனிக்கவில்லை.2ராசாத்திக்கோ, மாரியாயிக்கோ விபசாரம் என்பது தொழிலல்ல; அவர்கள் வாழும் பிளாட்பாரத்தின் எதிர்ப்புறத்திலிருக்கும் விறகுக் கடையில் விறகு சுமந்து செல்வது, லாரியில் வரும் விறகுக் கட்டைகளை இறக்கிக் கடைக்குள் அடுக்குவது – இவைதான் பிரதான தொழில். அந்த வேலைகள் இல்லாத சமயத்தில், வேறு ஏதாவது கூலி வேலை. அதுவும் இல்லாத சமயத்தில், மிகவும் வறட்சி ஏற்பட்டு, நல்ல கிராக்கியும் ‘சான்ஸீ’ம் அடித்தால்… வேறு ‘ஏதாவது’…கோணி + கந்தல் பாய் + மூங்கில் தட்டி + சினிமா போஸ்டர் = ஒரு கூரை! – அந்தக் ‘கோழிப்புறை’யில் நீட்டிப் படுத்திருந்த ராசாத்தியின் அடிவயிற்றுக்குள் என்னவோ ‘சுருக்’கென்று குத்திவாங்கியது. ராசாத்தி நௌ¤ந்து கொடுத்தாள். கீழுதடு பற்களுக்கிடையே மடிந்து கொடுத்தது. நெற்றி சுருங்கிற்று.- வயிற்றில் வலியா, பசியா?…கால்களைச் சற்று அகல விரித்து இடுப்புச் சீலையைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள்.

 

          இடுப்பை வளைத்து, நெஞ்சை உயர்த்தி உடலை முறுக்கிக் கொடுத்தாள். பாதங்களைத் தரையில் உரசி உரசி எழுப்பிய ஒலி அவளுக்கு இதமாக இருந்தது. திரும்பவும் தேய்த்துத் தேய்த்துப் பார்த்துக் கொண்டாள்.வலியைப் பற்றிய நினைவு இல்லை. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டால் தேவலாம் போன்ற எண்ணம்.‘கொஞ்சமா? – ஹ்ம்… கஞ்சியெக் கண்டு ரெண்டு நாளாச்சு, ஒரு பானை கஞ்சி இருந்தாலும் நெட்டலாம்’ – அவள் கண்கள் மூலையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மூளிப் பானையை நோக்கின. பக்கத்தில் ஓட்டையான அரிசிப் பானை உருண்டு கிடந்தது.பசி வயிற்றை மென்றது!அவளுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒற்றைக் காலில் கிடந்த ஈயக் காப்பு ‘தரதர’வெனத் தரையில் தேய்ந்து கரையப் பாதங்களைத் தேய்த்துக் கொண்டாள்.அடி வயிற்றின் ஒரு பக்கத்தில் சில நிமிஷங்களுக்கு ஒருமுறை ‘சுருக்’கென்ற குத்தல் வேறு…“உஸ்… அம்மாடி!” என்ற பெருமூச்சு…“ராசாத்தி, ராசாத்தி!” என்ற குரல் கேட்கிறது. மல்லாந்து கிடந்தவாறே தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் ராசாத்தி. மாரியாயி குனிந்து நின்றபடி தலையை மட்டும் குடிசைக்குள் நீட்டியவாறு, “என்ன ராசாத்தி, இடுப்பு வலியா?” என்று கேட்டாள்.“ஊஹீம்… அதெல்லாம் ஒண்ணுமில்லே. பசிதான்… நேத்து ஒரு வாய்க் கஞ்சி குடிச்சதுதான்… இன்னிக்குப் பூரா பட்டினி. அதான் வயத்தை என்னமோ பண்ணுது!”மாரியாயிக்கு மனசை என்னவோ செய்தது.

 

          “பாவம், வாயும் வயிறுமா இருக்கிற பொம்பளே பட்டினி கெடக்கலாமா?”ராசாத்தியின் குடிசைக்குள் நுழைந்து, குனிந்து நின்றபடி, ஒரு மருத்துவச்சியைப் போல் அவளுடைய உடலைப் பரிசோதித்தாள் மாரியாயி.இடுப்புச் சீலையைத் தளர்த்தி, அவிழ்த்து, கருச் சிசுவின் சிரம் முட்டி நிற்கும் அவளுடைய அடி வயிற்றைத் தடவிப் பார்த்தாள். வயிறு கனத்து, உருண்டு திரண்டிருந்தது. மேல் வயிறு தளர்ந்து போய், சுருங்கி, விரிந்து மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.ராசாத்தியின் அடி வயிற்றைத் தடவிக்கொண்டே இருந்தாள் மாரியாயி. அந்த வயிற்றுக்குள் ஒரு புதிய உயிர், ஒரு பச்சைப் பசும் சிசு இருக்கிறது என்ற உணர்ச்சியால் மாரியாயிக்கு உடல் முழுவதும் புல்லரித்தது.“இது இடுப்புவலி போலத்தானிருக்கு. ஆசுபத்திரிக்குப் போயிடேன்!” என்று கூறினாள் மாரியாயி.“அட, நீ ஒண்ணு… எனக்குத் தெரியாதா? மாசம் எட்டுத்தானே ஆச்சி. சடையம்மா கொயிலு திருநா அப்பத் தானே தரிச்சிது… ஆவணி ஒண்ணு, புரட்டாசி ரெண்டு… என்று கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லே, பசிதான்!” என்றாள் ராசாத்தி.“நா, என்ன பண்ண? சோறு கூட இல்லையே… அரிசி இருக்கு… அடுப்பைப் பத்தவச்சிக் கஞ்சிகூட காச்சிடலாம்… லாரி நெறைய வெறவு வந்து நிக்குதே… இப்போ விட்டா இன்னும் ரெண்டு நாளைக்குக் காசைக் கண்ணாலே காண முடியாது… உம்…” என்று முனகிக்கொண்டே நின்றாள் மாரியாயி.

 

         “அரிசி இருக்கா?” என்று தலையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.“இருக்கு ஒன்னாலே கஞ்சி காச்சிக்க முடியுமா?”“ஓ! அதெல்லாம் முடியும்… சீக்கிரம் கொண்டா!”என்றவாறு சரிந்த கூந்தலை முடிந்து கொண்டாள். கணுக்காலில் ஏறியிருந்த ஈயக் காப்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். அவிழ்ந்து திறந்து கிடந்த ரவிக்கையை இழுத்து முடிந்து உட்கார்ந்தவாறே சேலையையும் இடுப்பில் சுற்றிக் கொண்டாள்.- அந்தக் குடிசையில் நிற்க முடியாது. ராசாத்தி நல்ல உயரம் என்பது மட்டுமல்ல, குடிசையும் ரொம்ப தாழ்ந்தது தானே?உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு மௌ¢ள நகர்ந்து குடிசைக்கு வெளியே வந்ததும் நிமிர்ந்து எழுந்து நின்றாள்.‘அம்மாடி! வயிறுதான் என்னமாய்க் கனக்கிறது!’மாரியாயி பழம்பானையில் இருந்த அரிசியை ஒரு தகரக் குவளையில் கொட்டி ராசாத்தியிடம் கொடுத்துவிட்டு மூலைக்கு ஒன்றாய்க் கிடந்த அடுப்புக் கற்களைக் குடிசைக்கு வெளியே சேர்த்து வைத்து, அடுப்புக்குப் பக்கத்தில் கிடந்த சுள்ளிக் கட்டிலிருந்து ஒரு பிடி சுள்ளியை இழுத்து எடுத்து ராசாத்தியிடம் கொடுத்தாள். “சீக்கிரம் காச்சிக் குடி… நா போயிட்டு வந்துடறேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே, விறகுக் கடையை நோக்கி ஓடினாள் மாரியாயி.உருண்டு கிடந்த சோற்றுப் பானையை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்கப் போனாள் ராசாத்தி.குழாயடியில் ஒரே கூட்டம்.ராசாத்தியினால் நிற்க முடியவில்லை. ஒருகால் மட்டும் ‘வெட வெட’வென நடுங்கிற்று. அடி வயிற்றில் ‘சுருக்’கென்ற அந்த வலி…“அம்மா!” என்று பெருமூச்சு விட்டபடி உட்கார்ந்து விட்டாள்.

 

          “பாவம்! புள்ளைத்தாச்சிப் பொம்பளே, ஒரு பானை தண்ணி விடேன்” என்றாள் ஒருத்தி. தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண் ராசாத்தியைப் பார்த்தாள்.“ஒரு பானை வேணாம்… பாதி நெறைஞ்சா போதும்!” என்றாள் ராசாத்தி.- அவள் பசிக்கு அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; அவள் வலிக்கு ஒரு பானை தண்ணீரைச் சுமக்கவும் முடியாது அல்லவா?“சரி இந்தா பாவம்! நீ ஏன் காத்துக் கெடக்கணும்?” என்று தன் பானையில் இருந்த தண்ணீரை ராசாத்தியின் பானையில் ஊற்றினாள் அவள்.பானையைத் தூக்கி இடுப்பில் வைக்கும்போது, ராசாத்தியின் நெற்றி சுருங்கிற்று; பற்களைக் கடிக்கும்போது ‘நெறு நெறு’வென்று சப்தம் கேட்டது; ஒரு கால் மட்டும் ‘வெட வெட’வென நடுங்கிற்று…அதோ, இன்னும் பத்தடி வைத்தால் அவளுடைய இடத்திற்குப் போய்விடலாம். ஒண்ணு… ரெண்டு… மூணு… ஊஹீம். இடுப்பில் பானை நிற்க மாட்டேன் என்கிறது; கை வலிக்கிறது; காலில் நடுக்கம் அதிகரிக்கிறது.பானை நழுவிக் கீழே விழுந்துவிடாமல்……உம்… மௌ¢ள… மௌ¢ள ….“அப்பா!” – பாதி வழியிலே பானையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டாள்.தலையை அண்ணாந்து வானத்தை நோக்கி ஒரு பெருமூச்சு! – ஈயக் காப்பு ‘தர தர’வென உரசும்படி பாதங்களைத் தரையில் தேய்த்துக் கொள்கிறாள் – லேசாகத்தான்!“அம்மா!” – வயிற்றில் என்ன பசியா, வலியா?- இரண்டும் தான்… இல்லை, இல்லை… பசிதான்!- ‘அதோ அடுப்பு இருக்கிறது; அரிசி இருக்கிறது; சுள்ளி இருக்கிறது; தீப்பெட்டி…?’‘… அந்தத் தட்டியிலே சொருகி வச்சேனே… இருக்கும். போய்ப் பத்தவச்சி, அரிசியைப் போட்டுக் காச்சி, அந்தக் கஞ்சிக் கலயத்திலே ஊத்தி உப்பு…?’‘… அதுவும் இருக்கும்.

 

            அரிசிப் பானையிலே ஒரு பொட்டணம் போட்டு வச்சது எங்கே போயிடும்?… அது கூடவே, அந்தப் பாதி எலுமிச்ச ஊறுகாய்த் துண்டு – உம்… அதையும் கடிச்சிக்கினு சூடா ஒரு பல்லா கஞ்சி குடிச்சா…’ – அவள் வாயெல்லாம் நீர் சுரந்தது.எழுந்தாள்; தண்ணீர்ப் பானையை விசுக்கெனத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தாள்.அடுப்பின் மீது பானையை வைத்துச் சுள்ளிகளைப் பற்ற வைத்தாள். அடுப்பு புகைந்தது… கண்ணெல்லாம் எரிச்சல்…‘…குனிஞ்சி ஊதினா தீப்புடிச்சிருக்கும் – ‘ஊஹீம்… அவளால் குனிய முடியவில்லை!அப்புறம் கஞ்சி…?வயிறு பூமியில் படாமல் ஒரு காலை மண்டியிட்டு ஊன்றி ஒரு கையைத் தரையில் தாங்கிக்கொண்டு ஒரு மூச்சு இழுத்து ஊதினாள். ‘தபக்’கென்று அடுப்பில் தீ சுழன்று எரிந்தது; ஒரு கணம் அவள் தலையும் சுழன்றது.- ‘அப்பாடா’. ஒரு வழியா தண்ணி கொதி வந்திடுச்சி. அரிசியைக் கழுவிக் கொட்டி ஒரு உடைந்த சட்டியினால் பானையை மூடினாள். எரிந்து வெளித்தள்ளிய நெருப்புத் துண்டுகளை மீண்டும் அடுப்பின் வாய்க்குள் தள்ளி மேலும் சில சுள்ளிகளையும் முறித்துச் செருகினாள்.‘பட், பட்’டென்று தீப்பொறிகள் வெடித்துச் சிதறின. அவள் முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் துளிர்த்து வழிந்தன.பரட்டைக் கூந்தல் கலைந்து நெற்றியிலும் முகத்திலும் வழிந்த வியர்வையில் ஒட்டிக் கொண்டது.

 

          அவளுக்கு இப்பொழுது அதெல்லாம் கவலை இல்லை. ஒரு வாய்க் கஞ்சி, ஒரு பிடி சோறு – ‘அப்பாடா’ என்று படுத்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான்!‘சளபுள’ வென்ற சத்தம் பானைக்குள்ளிருந்து ஒலித்தது… மூடியிருந்த சோற்றுப் பானையின் வாயிலிருந்து பொங்கி வழிந்த நுரைத்த கஞ்சி அடுப்பிற்குள் வடிந்து ஒழுகியது.‘சொர்’ என்ற சப்தம் கேட்டதும் ராசாத்தி அவசர அவசரமாய்ப் பானை மூடியை முந்தானையால் பிடித்து எடுத்துக் கீழே வைத்தாள்.வெண்ணிறக் கஞ்சியில் சோற்றுப் பருக்கைகள் சுழன்று புரண்டு கொதித்துக் கொண்டிருந்தன.… மட்டமான புழுங்கல் அரிசிக்கஞ்சி கொதிக்கும்போது கமழ்ந்து பரவும் மணம் இருக்கிறதே…ஒருமுறை நெஞ்சு விரிய மூச்சை இழுத்து அந்த வாசனையை அனுபவித்தாள் ராசாத்தி.கஞ்சியின் மணம் அவள் அடிவயிறுவரை சென்று ‘குபு குபு’வெனப் பசியைக் கிளறியது…“கஞ்சி குடிச்சி மூணு நாளாச்சே…!”பரபரவென்று உள்ளே சென்று அரிசிப் பானையில் கிடந்த உப்புப் பொட்டணத்தையும், ஊறுகாய்த் துண்டையும் எடுத்துக்கொண்டு வந்து அடுப்பின் முன்னே வைத்து விட்டு, மூலையில் உருண்டு கிடந்த கஞ்சிக் கலயத்தை எடுத்துப் பானையிலிருந்த தண்ணீரை ஊற்றிச் சுத்தமாகக் கழுவினாள்.அடுப்பிலிருந்த சுள்ளியெல்லாம் எரிந்து தணிந்து விட்டது.

 

           மூங்கில் தட்டி ஓரமாய்ச் சற்று நேரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். அங்கமெல்லாம் தளர்ந்து சுழன்று விடுவதுபோல் சலித்தது.வரண்டு உலர்ந்து போன உதடுகளை நக்கிக் கொடுத்துக் கொண்டாள்.மௌ¢ள நகர்ந்து பானையை இறக்கிக் கலயத்தில் கஞ்சியை ஊற்றினாள். சற்று ஆறட்டும் என்று கஞ்சிக் கலயத்தைக் கையிலெடுத்துக் குனிந்து ஊதினாள். ஊதும் போது அவள் வாயில் சுரந்த உமிழ்நீர் உதடுகளில் வழிந்தது. பக்கத்திலிருந்த ஊறுகாய்த் துண்டில் கொஞ்சம் தொட்டு நக்கிக் கொண்டாள்.“த்டா” என்று சப்புக் கொட்டிக்கொண்டே அதே பொழுதில், கீழுதட்டை மடித்துக் கடித்து நெற்றியைச் சுருக்கி இடுப்பை வளைத்து நௌ¤ந்தாள்…- அதென்ன பசியா, வலியா?‘ஒரு வாய்க் கஞ்சியைக் குடிச்சி, ஒரு பிடி சோத்தையும் தின்னா எல்லாம் சரியாப் போயிடும் – ‘அப்பாடா’ன்னு நிம்மதியாத் தூங்கலாம்.’ஊறுகாய்ப் பொட்டணத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, கஞ்சி நிறைந்த தகரக் குவளையில் வாய் வைத்து உறிஞ்சப்போகும் சமயம்…“ஹேய்… ஹேய்ன்னானாம்!” என்ற குரல் அவளருகே ஒலித்து மென்னியைப் பிடித்து அழுத்தியது.“எனக்கும்மா… எனக்கும்மா, கஞ்சி!”என்று அவள் எதிரே நின்று குதிக்க ஆரம்பித்தான் மண்ணாங்கட்டிச் சிறுவன். அவன் கையிலிருந்த கிழிந்த காற்றாடி காற்றில் அடித்து சென்றது கூட அவனுக்குத் தெரியவில்லை.அவனைக் கண்டவுடன் ராசாத்திக்கு மத்தியானம் நடந்த சம்பவமும், அதன் விளைவாய் எழுந்த சச்சரவும் நினைவுக்கு வரவே ஆத்திரம் குமுறிப் பொங்கியது.

 

           “முடியாது, என் கையாலே ஒனக்கு ஒரு பிடி சோறு போட மாட்டேன்… எங்கேயாவது ஒழிஞ்சு போ… மூஞ்சியிலே முழிக்காதே!” என்று ராக்ஷஸி போல் கத்தினாள்.“உம் உம் பசிக்குதும்மா… கஞ்சி குடும்மா… ஐய, யம்மா…” என்று முரண்டினான் மண்ணாங்கட்டி.“நீ என்ன பண்ணினாலும் சரி, ஒனக்கு ஒண்ணும் தர முடியாது. போ… திருட்டு மூதேவி… எங்கேயாவது போயித் திருடித் துன்னுடா, போ…”“ஐய, யம்மா…”“முடியாது… இன்னைக்கி என்ன ஆனாலும் சரி!”என்று கலயத்திலிருந்த கஞ்சியை ஒருபுறம் தள்ளிவைத்து மூடிவிட்டு, காவலுக்கு உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.“ஐயையோ, பசிக்குதே… யம்மாடி, பசிக்குதே!” என்று தரையில் புரண்டு அழுது கல்லுளிமங்கத்தனம் பண்ணினான் சிறுவன்.ராசாத்தியின் ஆத்திரமெல்லாம் பீறிக்கொண்டு வந்தது. பக்கத்திலிருந்த சுள்ளிக் குச்சியை எடுத்துத் தரையில் விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்த மண்ணாங்கட்டியின் முதுகில் விளாசினாள். சிறுவன் ‘குய்யோ, முய்யோ’ என்று கதறிக் கொண்டு ஓடினான்.“திரும்பி வந்தா பலி வெச்சிடுவேன்… எங்கேயாவது ஒழிஞ்சி போ, பொணமே!” என்று கருவியவாறு குச்சியை விட்டெறிந்தாள்.அடிவயிற்றில் ‘சுருக்’கென்றது; பற்களைக் கடித்துக் கொண்டாள்.- பசியா, வலியா?‘சனியன்… தின்றப்போ எமன் மாதிரி மென்னியெப் புடிக்க வந்திடுச்சி!” என்று முனகிக்கொண்டே குடிசையின் தட்டி ஓரமாகத் திரும்பி உட்கார்ந்து கஞ்சிக் கலயத்தை அருகில் இழுத்தாள்.“யம்மா… ஹம்… ஹம்…” என்று சிணுங்கிக்கொண்டே மறுபடியும் அவள் பின்புறம் வந்து நின்றான் மண்ணாங்கட்டி.“ஹீம், முடியாது!”அவள் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

 

           மண்ணாங்கட்டிக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் தாயையும் கஞ்சிக் கலயத்தையும் வெறித்து விழித்தன.“அம்மா… தர்றியா மாட்டியா?” என்று அதட்டிக் கூவினான்.“முடியாது, நீ என்னெக் கொன்னாலுஞ் சரி”- தன் மகனின் அதட்டலை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டே கஞ்சிக் கலயத்தில் கையை விட்டுத் துழாவி ஒரு கவளம் சோற்றை வாயருகே கொண்டு போனாள்…“எனக்கும்மா, எனக்கு!” என்று அவள் கையிலிருந்த கலயத்தைப் பாய்ந்து பிடுங்கினான் மண்ணாங்கட்டி. அவள் தர மறுத்தாள். சோற்றுக் கையால் அவனைத் தள்ளிக் கொண்டே மறு கையால் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவன் ‘ஓ’ வென்று அலறியவாறே மண் கலயத்தை விடாப்பிடியாய்ப் பறிக்க முயன்றான்…இந்த மல்லுக்கட்டில் கலயத்திலிருந்த கஞ்சியெல்லாம் கீழே கவிழ்ந்து விட்டது.- ஒரு கணம் இருவரும் திகைத்தனர்.அவனை எட்டிப் பிடிக்க வெறிகொண்டு பாய்ந்தாள் ராசாத்தி; அவன் தப்பி விட்டான்…“அடே, நீ அழிஞ்சி போயிடுவே… ஒன்னெப் பாம்பு புடுங்கும்… நீ மண்ணாய்ப் போக!… சடையம்மாவுக்கு ஒன்னெ வெட்டிப் பலி குடுக்க!” என்று அழுதவாறே சபித்தாள் ராசாத்தி.அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அழுது கொண்டே தரையில் சிந்திய கஞ்சிச் சோற்றைக் கை நிறைய அள்ளிக்கொண்டு எடுத்தான் ஓட்டம்.

 

          “அடே பாவி, நீ அழிஞ்சி போவே!” என்று பற்களைக் கடித்துக் கூவிக் கொண்டே கையிலிருந்த கஞ்சிக் கலயத்தை அவன் ஓடிய திசையில் வீசியெறிந்து ‘ஓ’வென்று அலறி அழுதாள். தரையில் மோதிய கலயம் நொறுங்கியது.“பெத்த வயத்திலே பெரண்டையே வெக்கோணும்…”என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு, ‘படார், படார்’ என்று முகத்திலும் மார்பிலும் அறைந்து கொண்டாள்.ஒரு கணம் அவள் விழிகள் வெறித்துச் சுழன்றன…- உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சிரமப்பட்டுக் காய்ச்சிய கஞ்சியெல்லாம் தரையில் சிதறிப் போய் விட்டதே!‘அட தெய்வமே’ என்று அலறி ‘மடா’ரெனச் சாய்ந்தாள்; புரண்டு புரண்டு அழுதாள்…திடீரென இடுப்புக்கு கீழே அலகு கொண்டு குத்தி வாங்கியது போன்ற வேதனை!“ஐயோ!” வென்று அலறிய ராசாத்தி நிலைமையை உணர்ந்து கொண்டாள்.- ‘இடுப்பு வலிதான்…’அவளால் நகர முடியவில்லை.மார்பில் என்னவோ அடைத்தது. மேல் வயிற்றில் யாரோ மிதிப்பது போல் மூச்சு முட்டியது. வயிற்றில் குடல் எல்லாம் கழன்று சரிவதுபோல் என்னமோ புரண்டது. காலும் கையும் விறைத்துக் கொண்டன. கால்களைத் தரையில் உதைத்து உதைத்துத் தேய்த்துக் கொண்டாள். கைகளால் தரையைப் பிறாண்டினாள். உதட்டைக் கடித்து வாயெல்லாம் ரத்தம்!“ஐயோ… அம்மா… கடவுளே… சடையம்மா தாயே!” என்று என்னென்னவோ பிதற்றினாள்; பிரார்த்தித்துக் கொண்டாள்.விறைத்த கால்கள் விலகி விலகிப் பின்னிக் கொண்டன.- பாதங்களைத் தரையில் வெறி கொண்டு தேய்க்கும்போது காலில் கிடந்த ஈயக் காப்பும் இழுபட்டது; தேய்ந்தது.

 

           ‘இனி பிழைப்பதாவது, செத்துத்தான் போயிடுவோம்’ என்று தோன்றியது அவளுக்கு.ஒரு வாய்க் கஞ்சிக்குத் தான் பெற்ற மகனை அடித்து விரட்டி விட்டா…?தலையைப் பிய்த்துக் கொண்டு, “அடே, மண்ணாங்கட்டி! எங் கண்ணூ… நா செத்துப் போயிடுவேன்டா!” என்று உரத்த குரலில் ‘ஓ’ வெனக் கதறி அழுதாள்.அந்த ஒரே அலறலில், பின்னிக் கிடந்த அவள் கால்கள் பிய்த்துக் கொண்டு விலகின…அந்த வேகத்தில் ஒற்றைக் காலில் கிடந்த அந்த ஈயக் காப்பு, காலைவிட்டுக் கழன்று உருண்டு ஓடி எங்கோ விழுந்தது…ராசாத்தியின் அலறல் லாரியில் விறகு இறக்கிக் கொண்டிருந்த மாரியாயியின் செவிகளுக்கு எட்டியது. அவ்வளவுதான்; கையில் இருந்த விறகைக் கீழே போட்டு விட்டு ஓட்டமாய் ஓடி வந்தாள் மாரியாயி; அவளைத் தொடர்ந்து ஒரு சிறு கும்பலே வந்தது.“ராசாத்தி!” என்று கூவிக் கொண்டே குடிசைக்குள் நுழைந்தாள் மாரியாயி…“ஆம்பளெப் பசங்கெல்லாம் போங்க. உம்… ஏ குட்டி! நீ ஏன் நிக்கிறே?… போ…!” என்று சிறுவர்களை எல்லாம் விரட்டினர் சில பெண்கள்.“ராசாத்தி, ராசாத்தி” என்ற குரல்கள்!- பதில் இல்லை.“ஐயோ ராசாத்தி!” என்று அவள் முகத்தைப் பிடித்துக் கொண்டு அலறினாள் மாரியாயி.ராசாத்தியின் கண்கள் சற்றே திறந்தன; உதடுகள் கோணிக் கோணி வலித்தன.“எங் கண்ணூ மண்ணாங்கட்டி! எங் கண்ணூ… மண்ணாங்…”‘கொளக்’கெனத் தலை சாய்ந்தது.ராசாத்தியின் தலைமாட்டில் விளக்கொன்று ஏற்றி வைக்கப்பட்டது.அவள் உடல் மீதும், அவள் உடலிலிருந்து பெருக்கெடுத்த உதிர வெள்ளத்தில் குழம்பிக் கிடந்த உயிரற்ற பிண்டத்தின் மீதும் அந்த அகல் விளக்கின் ஒளியும், அங்கே சூழ்ந்திருந்த மனிதர்களின் நிழலும் ஆடிச் சிதைந்து படிந்து படர்ந்தன.திடீரென “அடி, எம் பொறவி ராசாத்தீ… ஈ… ஈ!” என்ற மாரியாயியின் ஒப்பாரிக் குரல் பயங்கரமாக ஓலமிட்டது.

 

           இரவெல்லாம் எங்கோ கிடந்து தூங்கிவிட்டு – பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்தபின் – மாலையில் தாயிடம் திரும்பிக் கொண்டிருந்தான் மண்ணாங்கட்டி.தெருமுனையில் வரும்போதே குடிசைக்குப் பக்கத்தில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு தாயைப் பார்த்ததும், “யம்மாவ்!” என்று அலறி வீழ்ந்தான்.“யம்மா… யம்மா… யம்மா!” இதே குரல் நாள் முழுதும் விம்மி விம்மி ஒலித்தது. மண்ணாங்கட்டி சிலையாய் அமர்ந்திருந்தான். கேவிக் கேவி மூச்சு இளைத்தது.பிரமை தட்டிப் பொறி கலங்கி உட்கார்ந்திருந்த அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் மாரியாயி…அவனைக் கதறக் கதற விட்டுவிட்டு அவன் தாய் போய்விட்டாள்…!- இல்லை, தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்!4இரவு…மாரியாயியின் அடுப்பு புகைந்து அடங்கிவிட்டது. புருஷனுக்குச் சோறு போட்டாள்.- அவள் மனசில் என்னவோ ‘திக்’கென்றது.“பாவம், இனிமே எங்கே போயி ‘அம்மா, பசிக்குது – சோறு போடு!’ன்னு கேப்பான்?… மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கூட்டியா மச்சான். அவனைப் பார்க்காமெ என்னாலே ஒரு பிடி சோறு துன்ன முடியாது!” என்று அழுதாள் மாரி.சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு மாணிக்கம் எழுந்து ஓடினான்.- அதோ… அதோ!“டேய், மண்ணாங்கட்டி” என்று கூவிக்கொண்டே ஓடுகிறான்.ஆனால், அது வேறு யாரோ?- “டேய், மண்ணாங்கட்டியெப் பார்த்தியாடா?”“இல்லியே…”- “அவனைப் பார்த்தியா?”“ஊஹீம்…”“நீ பாத்தியா?“சுடுகாட்டுக்குப் போறேன்னு போனான்!”“சுடுகாட்டுக்கா?”-”மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி!”மாணிக்கம் ஓட்டமும் நடையுமாகச் சுடுகாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.- போகும் வழியில் – அதோ, சடையம்மன் கோயிலில் யாரது? அவனா? மண்ணாங்கட்டியா?…“மண்ணாங்கட்டி!”- ஆமாம், அவனேதான்.

 

             ஓடிவந்த மாணிக்கம் அவனை வாரி அணைத்துக் கொண்டான்.“வாடா, போவோம்!” என்று அவனை இழுத்தான் மாணிக்கம்.“அம்…மா…வ்…” என்று உணர்ச்சிகள் வெடித்துச் சிதறிக் குழம்பிய குரலில் அலறியவாறே மாணிக்கத்தை இறுகத் தழுவிக்கொண்டான் மண்ணாங்கட்டி.“எங் கண்ணில்லே, அழுவாதேடா!” என்று ஆறுதல் கூறிய மாணிக்கத்தின் கண்களிலிருந்து நீர் பெருகியது.5″சாப்பிடுடா, என் கண்ணில்லே…”சட்டியில் சோற்றைப் பிசைந்து கொண்டே கெஞ்சினாள் மாரி.அவன் மௌனமாய் வானத்தை வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.“உம், சாப்பிடும்மா!” என்று ஒரு பிடி சோற்றை அவன் வாயருகே கொண்டுபோனாள் மாரி. அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் – உணர்ச்சியற்ற, வெறித்த பார்வை.அவன் கை அவள் கையிலிருந்த ஒரு பிடி சோற்றை வாங்கியது. விழிகள் அந்தக் கவளச் சோற்றை வெறித்தன. வெறித்த விழிகளில் நீர் சுரந்தது…கையிலிருந்த சோற்றை அருகே இருந்த தகரக்குவளையில் போட்டுக் கந்தல் துணியால் மூடி ஒரு பக்கம் வைத்தான்.“இன்னாடா இது, இது எடுத்துத் துன்னு!”“ஊஹீ… அது… அது… எங்கம்மாவுக்கு!”குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-“என்னடா, அப்படிப் பார்க்கறே?” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.“அம்மா…ஆ…ஆ!” – அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.“மவனே!” என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.“அம்மா…ஆ…!”“மவனே…”

by parthi   on 13 Mar 2012  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
19-Nov-2018 07:36:40 எஸ்.சுவாமிநாதன். said : Report Abuse
ஈடு இணையில்லா கதை..ஜெயகாந்தனை என்ன சொன்னால் என்ன? அவருக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்ன.? ஒரு காலகட்டத்தில் ,அன்னாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை,இரத்தமும் சதையாய் சித்தரித்தமையை, தமிழ் இலக்கியம் நன்றியுடன் நினைவில் கொள்ளும்.
 
19-Nov-2018 07:36:31 எஸ்.சுவாமிநாதன். said : Report Abuse
ஈடு இணையில்லா கதை..ஜெயகாந்தனை என்ன சொன்னால் என்ன? அவருக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்ன.? ஒரு காலகட்டத்தில் ,அன்னாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை,இரத்தமும் சதையாய் சித்தரித்தமையை, தமிழ் இலக்கியம் நன்றியுடன் நினைவில் கொள்ளும்.
 
20-Nov-2015 02:46:50 சாந்தகுமார் said : Report Abuse
ஒரு பிடி சோறு இன்று படிக்கும் போது 2003-ல் என் கல்லுரி காலங்களை நினைவுக்கு வந்தது . கண்ணில் ஈரம் ,நெஞ்சில் பாரம்.........
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.