LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : காற்றில் பறக்கும் கௌரவம் - அத்தியாயம் 11

காற்றில் பறக்கும் கௌரவம்


"இன்றும் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்த முறை கட்டாயம் நீங்கள் நாளைக்கு அங்கே வர வேண்டும் என்று சொல்லிச் சென்றுள்ளார். போயிட்டு தான் வந்துடுங்களேன்"


மனைவி சொன்ன போது அதனைப் புறக்கணித்து விட்டு அப்போது நான் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டேன்.


எனக்கு மற்றொரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. என் வீட்டுக்கு வந்தவர் அந்த நிறுவனத்தின் ADMINISTRATIVE OFFICER என்று சொல்லப்படும் நிர்வாக அதிகாரி. கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் வீட்டுக்கு வந்து விட்டார். முதலாளியை பார்க்கச் சொல்லி அவர் அழைப்பு விடுத்தும் நான் செல்லவில்லை.


ஆனால் அன்று மதிய வேளையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளியே அலைபேசியில் அழைக்க என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.


"நீங்க அவசியம் வர வேண்டும். என் மகனும் இப்பொழுது தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். மொத்த நிர்வாகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன். அனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்கள் அவருடன் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்" என்றார்.


அவர்களின் எதிர்பார்ப்பு ஒரு ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட எடுத்து நடத்திச் செல்ல வேண்டும். அதுவும் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் முதன்மையாக இருக்க வேண்டும்.


யார் மூலமோ என்னைப் பற்றித் தெரிந்து வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு வந்து விட்டார்கள். ஒரு நிர்வாகத்தின் 'பொது மேலாளர்' என்றால் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியதாக இருக்கும். ஆனால் இங்கு இனிமேல் தான் ஒவ்வொன்றையும் உருவாக்க வேண்டும். அதாவது காய்ந்து போய் நிற்கும் மரத்தை நம் திறமையால் துளிர்க்கச் செய்ய வேண்டும்.


காலம் செய்யும் கோலத்தை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது.


'என்னை மிஞ்சியவர்கள் இந்த உலகில் யாருமில்லை' என்று கருதிய மாமன்னர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கைத் தடங்களின் அடையாளங்களில் எதுவும் மிஞ்சவில்லை. சம்மந்தப்பட்டவர்களின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்களா? எப்படி இறந்தார்கள்? என்பது கூட அறியாத அளவுக்குக் கொடுமையான காலம் அனைத்தையும் கரைத்து விட்டது.


பதவியைப் போதையைப் போல ரசித்து ருசித்தவர்களின் அந்திம வாழ்க்கை சொல்லும் கதை அனைத்தும் அந்தோ பரிதாபம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இனி மிச்சம் ஏதும் இருக்கக்கூடாது என்று உச்சமாய் அதிகாரத்தைச் சுவைத்து வாழ்ந்த அதிகாரவரக்கத்தினர் பலரின் வயோதிக வாழ்க்கை என்பது அனாதை விடுதியில் தான் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

 

Oru Tholitchalaiyin Kurippugal


சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட நிலைகளைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழில் நிறுவனங்களின் கதையும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாகச் சொல்கின்றது.


பெயர்ப் பொருத்தம் பார்த்து வைத்த நிறுவனங்கள், ஜாதகத்தில் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாஸ்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் போன்ற சிறப்பம்சம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை தலைமுறைகள் தொடர்கின்றது?


இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இங்கே உருவான தொழில் நிறுவனங்களில் இன்று எத்தனை தாக்குப் பிடித்து நிற்கின்றது? ஏனிந்த அவலம்? அரசியல் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு.


நாம் இந்தத் தலைமுறையில் தான் தொழில் குறித்து யோசிக்கவே தொடங்கியுள்ளோம். இந்தியர்கள் அனைவரும் அடிப்படையில் விவசாயச் சிந்தனைகள் கொண்டவர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகளில் தொடக்க நிலையில் தான் உள்ளோம். மிகக் குறைவான பணப்புழக்கத்தோடு வாழ்ந்த பழகிய மக்களிடம் அளவு கடந்து பணம் புழங்க அதை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமலேயே கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என்ற நிலையில் இருக்கின்றார்கள்.


பஞ்சம், பசி, பட்டினியில் உழன்ற பல கோடி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாகத் தான் வறுமை என்ற விசயத்தையே மறக்கத் தொடங்கியுள்ளனர். தங்களுக்குண்டான அடிப்படை விசயங்களையே தற்பொழுது தான் நம்மால் பெற முடிந்துள்ளது.


ஆனால் மேற்கத்திய நாடுகளோ கடந்த பல தலைமுறைகள் தொழில் சிந்தனைகளில் ஊறி தற்பொழுது நோகாமல் நோம்பி கொண்டாடும் கலையில் கில்லாடியாக மாறியுள்ளனர். இதன் காரணமாக எந்த நாட்டைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தினந்தோறும் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.


நாமும் நம் நாட்டைக் குப்பையாக மாற்றிக் கொள்ளச் சம்மதிக்கின்றோம். "நீ குனிய வைத்து குத்த வேண்டாம். நானே குனிந்து கொள்கிறேன்" என்று இடம் கொடுக்கின்றோம்.


வெளியே உள்ள உதாரணங்களை விடத் திருப்பூர் நிறுவனங்களைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?


தற்பொழுது திருப்பூரில் இரண்டாம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாதி நிறுவனங்கள் காணாமல் போய்விட்டது. மீதியுள்ள நிறுவனங்களும் இன்றோ நாளையோ என்று தள்ளாடிக் கொண்டுருக்கின்றது.

 

Oru Tholitchalaiyin Kurippugal


காரணம் இரவு பகல் பாராமல் ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பின் மூலம் வளர்க்கப்பட்ட நிறுவனங்களை உழைப்பது என்றால் எட்டிக்காய் போலப் பாவிக்கும் இளந்தலைமுறையினரிடம் கொடுத்தால் என்னவாகும்? பிறந்த சில வருடங்களில் விடுதிகளில் கொண்டு போய்த் தள்ளிவிட்டு வந்தவர்களை வளர்ந்து வாலிபனான பின்பு தான் வீட்டுக்கு அழைத்து வருகின்றார்கள். வெளியுலகமே தெரியாமல் வசதிகளுடன் மட்டுமே வாழ்ந்தவர்களைத் திடீரெனச் சமூகத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் அவர்களுக்கு என்ன தெரியும்? தலையும் புரியாது, வாலும் தெரியாது. அர்த்தமற்ற அதிகாரம் தூள் பறக்கும். நல்லது அனைத்தும் கெட்டதாகத் தெரியும். கெட்டவை அனைத்தும் நல்லதாகத் தெரியும். கடைசியில் நாறிப் போன நடிகைகள் காலடியில் கிடக்கத் தான் முடியும்.


அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.


ஒவ்வொரு மனிதனும் பார்த்துப் பார்த்து செய்த காரியங்கள் அனைத்தும் ஓரளவுக்கு மேல் உதவுவது இல்லை. 'நாம் இந்தத் தொழில் ராஜ்ஜியத்தை ஆண்டு விடுவோம்' என்று தொடங்கியவர்கள் கடைசியில் பூஜ்ஜியத்துக்கு வந்து விடுகின்றார்கள். இப்படித்தான் நான் கடந்து இருபது ஆண்டுகளாகத் திருப்பூருக்குள் வீழ்ந்த ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கதையைச் சொல்கின்றது.


நான் திருப்பூருக்குள் நுழைந்த முதல் இரண்டு வருடங்களில் மிகப் பெரிய அளவில் வளர்ந்த பல ஏற்றுமதி நிறுவனங்களின் கதையைக் கேட்டு அண்ணாந்து பார்த்துள்ளேன்.


வெளியுலகத்தைப் பற்றி ஏதும் தெரியாத எனக்கு ஒவ்வொன்றும் மந்திரக் கதையாகவே தெரிந்தது. மிகப் பெரிய அளவில் வளர்ந்த ஒவ்வொரு நிறுவனத்தின் வருடாந்திர வரவு செலவுகள், அங்குப் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன்.


அதுவரையிலும் வாழ்க்கையைப் புத்தகங்களின் வழியே பார்த்தவனுக்கு எல்லாமே வியப்பாகவே இருந்தது. நேரிடையாக ஒவ்வொன்றையும் பார்க்க நான் படித்த மாயஜாலகதைகள் போலவே தெரிந்தது. இவை அனைத்தும் யாரோ ஒருவரின் உழைப்பும் இடைவிடாத முயற்சியும் அல்லவா? என்று பெருமைப்பட்டும் இருக்கின்றேன்.


ஆனால் கடிகார முள் போலக் கஷ்டப்பட்டு ஏறியவர்கள் ஏறிய வேகத்தை விட மிக வேகமாக இறங்கியும் போய்விட்டார்கள். இறங்குமுகம் கண்ட நிறுவனங்களின் வீழ்ச்சி எனக்குப் பெரிதான ஆச்சரியத்தைத் தரவில்லை. அந்த வீழ்ச்சியை அந்த முதலாளி எப்படி எதிர் கொண்டார்? அதன் பிறகு அவரின் நடவடிக்கைகள், வாழ்க்கை முறை எப்படி மாறி விடுகின்றது? என்பதனை கவனித்தவன் என்ற முறையில் அதனைப் பற்றி இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.


பணம் சம்பாரிப்பது கடினம் என்பவரா நீங்கள்? என்னைப் பொருத்தவரையிலும் பணம் யார் வேண்டுமனாலும் சம்பாரிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் வந்தே தீரும். நாம் தான் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் போது வாய் பிளந்து கொண்டு வேறு பக்கம் பார்த்து நின்று கொண்டிருந்தால் வந்த சுவடு தெரியாமல் அந்த வாய்ப்புகளும் காணாமல் போய்விடும். காலம் முழுக்க விதியை நம்பி புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான்.


ஆனால் கிடைத்த வாய்ப்பின் மூலம் உருவான வெற்றியை அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கடைசி வரைக்கும் கட்டிக்காப்பது தான் மிகச் சவாலான விசயமாக நினைக்கிறேன். இங்கே பணம் குறித்த பழமொழிகளைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. பணம் என்பது அனைத்தையும் மாற்றிவிடக்கூடியது என்பதை மட்டும் எப்போதும் உங்கள் நினைவில் வைத்திருக்கவும்.


உங்களின் ஆசைக்கு எல்லையிருக்காது. அதனால் உருவாகும் ஆணவத்திற்கும் அளவேயிருக்காது.


சில மாதங்களுக்கு முன் திருப்பூரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்குச் சென்றிருந்த போது நடந்த சம்பவமிது. புத்தகக்கடை நண்பர் அப்போது அங்கு வந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் சாரம்சத்தை வைத்து நானே புரிந்து கொண்டேன். வந்திருந்தவர் இவரிடம் வட்டி வாங்க வந்துள்ளார். இவர் அடுத்த வாரம் தருகின்றேன் என்று சொல்ல வசூலிக்க வந்தவர் கேவலமாகத் திட்டிக் கொண்டிருந்தார். அவர் சென்றவுடன் அவரைப் பற்றி நண்பர் சொன்ன விசயங்கள் தான் பணத்தைப் பற்றி அதிகம் யோசிக்க வைத்தது.


திருப்பூருக்கு வரும் போது அடிப்படைச் செலவுக்கே வழியில்லாமல் ஏதோவொரு நிறுவனத்தில் எடுபிடியாக வேலையில் சேர்ந்துள்ளார். அங்கே பணியாற்றிய போது செய்த தவறுகளால் வெளியேற்றப்பட்டுள்ளார். காலம் கொடுத்த வாய்ப்பில் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பார் வசதியுள்ள இடத்தை எப்படியோ எவர் மூலமோ பெற்று விட்டார்.


இரண்டு வருடங்களில் ஒரு கடை என்பது ஆறு கடையாக மாறிவிட்டது. இன்று குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நிகர லாபமாக ஐம்பதாயிரம் ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார். கையில் வைத்துள்ள பணத்தைப் பெருக்க முக்கியமான நபர்களுக்கு வட்டிக்கு விட்டுத் தனியாகச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார். அன்று அந்த நபரின் மாத வருமானத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுப் பார்த்தேன். பல இடங்களில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டு வாடகை வருமானம் மற்றும் இதர அனைத்து வருமானத்தையும் கணக்கிடும் போது மாதத்திற்கு இருபது லட்சம் ரூபாய் வந்தது.


வருமான வரி கட்டத் தேவையில்லை. அடிமை வாழ்க்கை இல்லை. அறம் சார்ந்த கொள்கைகள் இல்லை. ஆனால் அவருக்கு வரக்கூடிய மாத வருமானம் என்பது திருப்பூரில் உள்ள சிறிய ஆய்த்த ஆடை நிறுவனம் பெற தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக மூன்று மாதங்கள் உயிரைக் கொடுத்துப் பாடுபட வேண்டும்.  அந்த நபர் முதலீடு எதுவும் இல்லாமல் சம்பாரிப்பவர். ஆனால் முதலாளிகளோ வங்கிக் கடனை தங்கள் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 


இது தவிர  எந்த வெளிநாட்டுக்காரன் எப்போது ஆப்பு அடிப்பான்? என்று கலங்கி தூக்கம் மறந்து கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்.


பணம் யாரிடம் தான் இல்லை?.


சென்னையில் ஒரு நபர் மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்காக இலவசமாகக் கட்டி விடப்பட்டுள்ள கழிப்பறையை அங்கங்கே உள்ள வார்டு கவுன்சிலர்களைத் துணை கொண்டு ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு கட்டண கழிப்பறையாக மாற்றித் தினந்தோறும் பல ஆயிரம் (கொடுக்க வேண்டிய கமிஷனுக்குப் பிறகும்) ரூபாயை சம்பாரித்துக் கொண்டிருப்பதாகச் செய்தித்தாளில் படித்த போது சிரிப்பு தான் வந்தது. சாதாரணமானவர்களுக்கு அது கழிப்பறை. ஆனால் அதுவே ஒரு தனிநபருக்கும் பணம் தரும் கற்பகத்தரு.


ஆனால் இங்குள்ள ஏற்றுமதி நிறுவன முதலாளிகள் கௌரவத்திற்காகக் கடனில் வாழ்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையையும் கடனே என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கு மற்றொரு விசயத்தைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.


ஒருவரின் தவறுகள் அடுத்தவருக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் அல்லவா? அவர் செய்த தவறுகளை நாமும் செய்து விடக்கூடாது என்று தானே படிப்பினையாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தானே நினைப்பார்?. ஆனால் நிஜ வாழ்வில் அப்படி நடப்பதில்லையே? ஏன்?


அங்குத் தான் விதிக்கும் மதிக்கும் உண்டான போராட்டமே தொடங்குகின்றது. ஆசை பெரிதா? அடக்கம் பெரிதா? என்றால் ஆசை தான் முன்னுக்கு வந்து முகம் காட்டி நிற்கின்றது.


பத்து லட்சம் ரூபாய் மூதலீடு போட்டு ஒருவர் சிறிய ஆயத்த ஆடைத் தொழிற்சாலையைத் தொடங்குகின்றார். அவரின் உழைப்பு ஒரு வருடத்திற்குள் உயர்த்தி விடுகின்றது. அவரிடம் இருக்கும் நேர்மை அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகின்றது. பல தொடர்புகள் உருவாகின்றது. ஒரு நாளின் மொத்த நேரத்தையும் தொழிற்சாலைக்காக அர்ப்பணித்து வளர்த்தவரின் எண்ணங்கள் மாறத் தொடங்குகின்றது.

 

Jothi Ganesan


அது வரையிலும் அவர் கொண்டிருந்த வாழ்க்கை குறித்த பார்வைக்கும் பணம் வந்தவுடன் தனது குடும்பம், விருப்பங்கள் சார்ந்த பார்வையும் மொத்தமாக மாறத் தொடங்க எல்லாமே தலை கீழாகப் போகத் தொடங்குகின்றது.


பணிபுரியும் பெண்கள் அனைவரும் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக் கடமை பட்டுள்ளவர்கள் என்று ஒரு முதலாளி நினைத்தால் அவரின் தொழில் சிந்தனைகள் எப்படியிருக்கும்?


இரவு என்பது மதுக் கொண்டாட்டத்திற்கு மட்டுமே என்று கருதிய முதலாளியால் மறு நாள் காலை எப்படி ஆரோக்கியத்தோடு பணிபுரிய முடியும்?


பலரைச் சார்ந்து தான் இந்தத் தொழிலில் இருக்கின்றோம்? எவரையும் நீண்ட காலம் ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றினால் நாமும் வீழ்ந்து விடுவோம்? என்று யோசிக்கத் தெரியாதவனை முதலாளி என்பீர்களா? முழு முட்டாள் என்று அழைப்பீர்களா?


இந்த மூன்று வட்டத்திற்குள் தான் இங்குள்ள நிர்வாக அமைப்புச் செயல்படுகின்றது. இதையும் தாண்டி அறம் சார்ந்து செயல்படுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் வருடந்தோறும் நிறைவாகவே தங்கள் தொழிலை செய்து கொண்டிருகின்றார்கள்.  


நானும் நிறைவாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் நேரம் ஒன்று இருக்கின்றதே? அது தான் இந்த நிறுவனத்தின் பக்கம் என்னை நகர்த்தியது. இந்த நிறுவனத்தை நான் திருப்பூருக்குள் நுழைவதற்கு முன்பே அறிந்தவன் என்றால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள்?


கல்லூரியில் நான் படிக்கும் போது திருப்பூர் என்ற ஊர் குறித்து எதுவும் தெரியாது. 1989 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்போது தமிழிலில் வந்து கொண்டிருந்த 'இந்தியா டுடே' பத்திரிக்கையில் திருப்பூர் குறித்து ஒரு சிறப்புக்கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த தொழில் அதிபர்கள் குறித்து அவர்களின் வெற்றிப் புராணத்தை விலாவாரியாக விவரித்து இருந்தார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருந்த முதலாளிகளின் பெயர்கள், அவர்களின் நிறுவனம் குறித்த வளர்ச்சியை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.


இப்போது எனக்கு அழைப்பு விடுத்தவர் அதில் வந்திருந்த முதலாளிகளில் ஒருவர். கட்டுரைப் படத்தில் பார்த்த அவர் முகம் கூட மறந்து விட்டது. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவரின் பெயரும் நிறுவனப் பெயரும் மட்டும் 25 ஆண்டுகள் கழித்து அவரை நேரிடையாகச் சந்தித்த போது நினைவுக்கு வந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அன்று நான் படித்த அந்தக் கட்டுரை வரிகள் தான் என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது.


ஆனால் கட்டுரை வெளி வந்த சமயத்தில் இநத முதலாளி உச்சாணிக் கொம்பின் உயரத்தில் இருந்தார். இன்று அதளபாதாளத்தில் இருந்தார். அதுவும் எனக்கு மற்றவர்கள் சொல்லித்தான் இந்த நிறுவனத்தின் வீழ்ச்சியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பல தனி மனிதர்களின் தொழில் சார்ந்த வீழ்ச்சி தான் ஒரு தொழில் நகரத்தின் முகத்தை மாற்றுகின்றது. இப்படித்தான் தொழில் நகரம் குறித்த பார்வையும் பலருக்கும் பலவிதமாகப் போய்ச் சேருகின்றது.


திருப்பூர் குறித்துப் பல பார்வைகள் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இந்த ஊரைப் பார்க்கின்றனர். என்ன காரணம்? ஏன் இப்படி? என்பதனை முதலில் பார்த்து விடுவோம். இதைத் தெரிந்தால் மட்டுமே இங்குள்ள வெற்றிக்கும் தோல்விக்கும் உண்டான காரண காரியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


திருப்பூர் என்றால் இங்கு வாழ்கின்ற அத்தனை பேர்களும் ஆயத்த ஆடைத் தொழிலோடு சம்மந்தப்பட்டவர்கள் என்று எண்ணம் இருந்தால் அதை உங்கள் எண்ணத்தில் இருந்து துடைத்து விடவும்.


ஆயத்த ஆடைத்துறைக்குச் சம்மந்தம் இல்லாத பலரும் இங்கே பலதரப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.


அவர்களைப் பொறுத்தவரையிலும் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனமும் பனியன் கம்பெனி. அவ்வளவு மட்டுமே. மற்றபடி இதன் நிர்வாக முறைகள். ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதுவும் தெரியாது. இதே போலத்தான் திருப்பூருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் திருப்பூர் ஏற்றுமதித் தொழிலை அவரவர் பார்வைக்குத் தகுந்தாற் போல உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.


கடந்த இருபது வருடத்தில் இங்குள்ள மண்ணின் மைந்தர்கள் பலருடனும் பேசியுளேன். இங்கேயே குறைந்த பட்சம் இரண்டு தலைமுறைகள் வாழ்ந்தவராக இருப்பார்கள். நம்மை விடத் திருப்பூரின் படிப்படியான வளர்ச்சியை மிக அருகில் இருந்து பார்த்தவர்களாக இருப்பார்கள்.

 

Oru Tholitchalaiyin Kurippugal


ஆனால் அவர்களால் கூட இந்தத் தொழிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அதே போல ஒருவரின் தொழில் ரீதியான வீழ்ச்சியையும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள்.


வீழ்ச்சி என்பதனை எப்படிச் சொல்வீர்கள்? பண இழப்பா? தொழில் சரிவா? குடும்பம் சீர்குலைதலா?


இந்த மூன்றுக்கும் அடிப்படைக் கட்டுமானம் ஒன்றே ஒன்று தான். உங்களுக்குண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறையில்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.


இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டு தான் அந்த நிறுவனத்தின் முதலாளியை சந்திக்கச் சென்றேன். பெரிய குளிர்சாதன அறையில் அவருடன் மகன் மற்றும் அவரின் இரண்டு ஆலோசகர்களும் இருந்தார்கள். அங்கிருந்த ஆலோசகர்கள் இருவரும் என்னைப் பரிசோதிக்க வந்தவர்கள்.


நான் இந்த நிறுவனத்திற்குச் செல்லப் போகின்றேன் என்று சொன்னதுமே நெருங்கிய நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள். 'ஐந்து மாதங்கள் கூட உன்னால் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது' என்றார்கள். இதைப் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி என்னைப் பயமுறுத்தினார்கள்.


'காரணத்தைச் சொல்லுங்களேன்' என்றால் வேண்டாம். 'வேறெங்கும் உருப்படியான நிறுவனத்தில் போய்ச் சேர்ந்து விடு' என்றார்கள். "கோடு போட்ட இடத்தில் நிரப்புக" என்று பள்ளிக்கூடப் பரிட்சையில் எழுதுவோமே? அப்படித்தான் ஒவ்வொருவரும் சொன்னார்கள். என் மனதிற்குள் இனம் புரியாத ஆவல் உருவானது.


பேய், பூச்சாண்டி போலப் பயம் காட்டுகின்றார்களே? அப்படியென்ன இந்த மனிதர் மோசமானவரா? என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் உருவாகி சந்திக்கச் சென்றேன். இனிய சந்திப்பு. இனிப்பான வார்த்தைகள். மகிழ்ச்சியான பிரியாவிடை.


நான் குறிப்பிட்டுச் சொன்ன தேதி வரைக்கும் முதலாளியால் காத்திருக்க முடியாமல் இடையில் இரண்டு முறை அழைத்து "சற்று முன்னதாக வந்து விடுங்களேன்" என்ற சிரித்துக் கொண்டே அழைத்தார்.


விதி வலியது அல்லவா? என் பயணத்தைத் தொடங்கினேன். அவர் சொன்ன தேதியில் அவர் விருப்பப்படியே போய்ச் சேர்ந்தேன். அலுவலகம் முதல் மாடியில் இருந்தது. அப்பாவும், மகனும் அழைத்துப் போய் என் இருக்கையைக் காட்டி அமர வைத்து என் முன்னே அமர்ந்து சற்று நேரம் பேசி விட்டு அவரவர் அறைக்குச் சென்று விட்டனர்.


கீழ் தளத்தில் இருந்த அலுவலக நிர்வாக அதிகாரி இன்டர்காம் வழியாக அழைத்து "உங்களைப் பார்க்க ஒருவர் சாயப்பட்டறையில் இருந்து வந்துள்ளார்?" என்றார்.


எனக்கு வியப்பாக இருந்தது. வந்தமர்ந்த பத்து நிமிடத்தில் என்னைப் பார்க்க ஒருவரா? நாம் இங்கே வந்து சேர்வது குறித்து முக்கியமான நபர்களைத் தவிர வேறு எவருக்குமே தெரியாதே? என்று யோசித்துக் கொண்டே அவரை மேலே வரவழைத்தேன்.


மேல் தளத்தில் அலுவலகம் என்ற பெயரில் இருந்ததே தவிர ஒரு காக்கை குருவி கூட இல்லை. 30 பேர்கள் பணிபுரியும் வசதிகள் இருந்த அந்த அலுவலகத்தில் நான் மட்டும் அப்போது தொடக்கப் புள்ளியாக இருந்தேன்.


இது குறித்து ஏற்கனவே முதலாளியுடன் பேசிய போது "நீங்களே உங்கள் விருப்பத்தின்படி ஒவ்வொரு துறைக்கும் ஆள் எடுத்துக் கொள்ளுங்களேன்" என்று சொல்லியிருந்தார். ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்வியை மனதிற்குள் வைத்துக் கொண்டே செய்ய வேண்டிய காரியங்களை ஒரு தாளில் பட்டியலிட்டுக் கொண்டிருந்த போது என் இருக்கைக்கு வந்தவர் என் அனுமதி இல்லாமலேயே என் முன் இருக்கையில் அமர்ந்தார்.


அவரை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னால் அவரிடம் இருந்து மிரட்டலாய் ஒரு கேள்வி வந்தது.


"எங்கள் அறுபது லட்ச ரூபாயை எப்போது தரப்போகின்றீர்கள்?" என்றார். 


குறிப்புகள் தொடரும்.......

by Swathi   on 09 Oct 2014  8 Comments
Tags: Tiruppur Jothiji   Tiruppur Jothiji Thodar   Tiruppur Jothiji Article   Tiruppur Jothiji Books   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   திருப்பூர் ஜோதிஜி   ஜோதிஜி  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
16-Oct-2014 13:26:55 பாண்டியன் said : Report Abuse
எதிர்பார்ப்புடன் முடித்து வைத்திருக்கிறீர்கள்... தொடர்வோம்.
 
15-Oct-2014 07:29:35 jayakumar said : Report Abuse
Arumaiya iruku sir. ..waiting for your next post...
 
11-Oct-2014 07:56:36 ரத்னவேல் நடராஜன் said : Report Abuse
திரு ஜோதிஜி அவர்களின் தொழில் பற்றிய அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
 
11-Oct-2014 03:08:58 தமாஷ் சிங்கம் said : Report Abuse
ஐயா, தங்கள் கட்டுரை அற்புதமாக இருக்கிறது , எங்களுக்கு எல்லாம் அற்புதமான பாடமாகவும் இருக்கிறது , தயவு செய்து இவற்றை தொகுத்து தனி நூலாகவோ , மின் நூலாகவோ வெளி இடவும் .
 
10-Oct-2014 23:00:24 drtv said : Report Abuse
தொழில் சார்ந்த சிந்தனைகளில் தொடக்க நிலையில் இருக்கிறோம் - நல்ல அவதானிப்பு
 
10-Oct-2014 22:58:34 drtv said : Report Abuse
இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் வெச்சு எங்கள சோதிக்கக்கூடாது!
 
10-Oct-2014 19:31:58 டி.என் முரளிதரன் said : Report Abuse
திறமைகளுக்கு வரவேற்பு எப்போதும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது. ஆரம்பத்தில் உழைப்பும் விடாமுயற்சியும் நேர்மையும் கொண்டு முன்னேறியவர்கள் காலப் போக்கில் தங்களை வெல்ல ஆளில்லை என்ற மனப்பாங்குடன் நேர்மை தவறுவது வீழ்ச்சிக்கு அழைத்து சென்று விடுகிறது . தங்கள் குறிப்புகள் இத்துறை சாராதவரும் ஒவ்வொருவரும் குறித்து வைத்துக் கொள்ளப் படவேண்டியவை
 
09-Oct-2014 23:52:22 Alagesan said : Report Abuse
அருமையான பதிவு.. முடிவில் என்றும் போல ஒரு த்ரில்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.